சென்ற பதிவின் தொடர்ச்சி...
ஒருவழியாய், ராமன் குட்டி எனும் அச்சோதனைச் சாவடி அதிகாரி என் கையிலிருந்த
என் கல்லூரி அடையாள அட்டையைப் பரிசோதித்த பின் அவர்களிடம், “நீங்கள் நினைப்பது போல்
திருடன் அல்ல இவர். நடந்தே கொல்லூர் மூகாம்பிகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்”. என்று
சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பினார். அப்பகுதியிலுள்ள
வீடுகளில் அரபு நாடுகளுக்குச் சென்றவர்களின்
குடும்பங்களிலுள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வாழும் வீடுகளை அறிந்து, இரவு நேரங்களில் அவர்களைத்
தாக்கிக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடையிடையே நடப்பதால், இளைஞர்கள் கூட்டணி அப்பகுதியில்
புதிய மனிதர்களைக் கண்டால் இப்படிக் கூட்டமாகக் கூடி, விசாரித்து அடி உதை கொடுத்து
போலீசாரிடம் ஒப்படைப்பார்களாம். எப்படியோ,
நான் அதிலிருந்துத் தப்பியதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும், அந்த ராமன் குட்டிக்கும்
நன்றி சொன்னேன்.
இடையிடையே, அன்றிரவு, அந்த நாட்களில்
பிரபலமான சித்ரா பாடிய “ஆயிரம் கண்ணுமாய் காத்திருந்னு நின்னே ஞான்” (ஆயிரம் கண்களால்
உன்னைக் காக்கிறேன் நான்) என்ற பாடலை திரு ராமன் குட்டி பாடிக் கொண்டே இருந்தார். இந்தப்
பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் நீர் நிரைவதுண்டு. அன்று அவர் பாடிய போது
என் உடல் சிலிர்த்தது. இறைவன் நேரடியாக நம்மைக் காக்க வரமாட்டார். ஆனால், அவரது உதவி
இது போல் ஏதாவது ஒருவரது உருவில் நமக்குத் தேவையான நேரத்தில் கிடைக்கும் என்பது எவ்வளவு
உண்மை!
“நாளையும், நீங்கள் இன்று கடந்த
தூரத்தைப் போல கடந்து மஞ்சேஸ்வரம் செக் போஸ்டை அடைய வேண்டும். அங்கு நீங்கள் தங்குவதற்கு
அனுமதிக்க அங்குள்ள அதிகாரிகளுக்கு நான் ஒரு கடிதம் தருகிறேன்” என்று சொல்லி ஒரு கடிதமும்
தந்தார். அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த போது, ஜாஃபரும், ஃபைசலும்
சின்ன குற்ற உணர்வுடன் வந்து என்னுடன் பேசினார்கள். நான் ஓடாமல் ஒரு நிமிடம் தாமதித்திருந்தால்
அவர்கள் என்னை அடித்திருக்கலாம். அதன் பின் இதை விட அதிகமான குற்ற உணர்வுடன் என்னிடம்
வந்து பேசியும் இருந்திருக்கலாம். இதுதான் மனித இயல்பு.
ராமன்குட்டி சாருக்கு நன்றி சொல்லி,
அதிகாலை 6 மணிக்கு அங்கிருந்துக் கிளம்பினேன். அவருக்காகவும் அதன் பின் பிரார்த்திக்கத்
தொடங்கினேன். வழியில் பலமுறை தடுத்து நிறுத்தப்பட்ட போது அவர் தந்த கடிதம் மிகவும்
உதவியாக இருந்தது. இரவு 7 மணிக்கு மஞ்சேஸ்வரம் சோதனைச் சாவடியை அடைந்து அக்கடிதத்தைக்
காட்டிய பின் அவர்கள் காட்டிய இடத்தில் நிம்மதியாகத் தூங்கினேன். மஞ்சேஸ்வரம் தாண்டிவிட்டால்
பிறகு கர்நாடகா. அங்கு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று ராமன் குட்டி சார் சொல்லியிருந்தார்.
மறுநாள், மஞ்சேஸ்வரத்திலிருந்து
புறப்பட்டேன். கர்நாடகா மங்கலாபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கணபதி
கோயிலை அன்று இரவு அடைந்து பூசாரியிடம் அங்கு தங்க முடியுமா என்று கேட்டேன். தங்க முடியாது
என்றார். கோயிலை வலம் வந்து கொண்டிருந்த இளங்கலை முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த
சந்தோஷ் எனும் இளைஞன் 13 வயது சிறுவன் ஒருவனை அழைத்து விவரம் சொல்ல, எனக்குத் தெரிந்த
கன்னடத்தில் (நான் பிறந்து வளர்ந்த ராசிங்கபுரத்தில் 85% கன்னடம் பேசுபவர்கள்) அச்சிறுவனிடம்
விவரம் சொல்லி, ஒரு சைவ உணவகத்திற்குச் சென்று உணவுண்டு, அவன் அழைத்துச் சென்று காட்டிய,
சாவடி போல் தோன்றிய அறையில் தூங்கினேன்.
10 ஆம் நாள், குந்தபுரா அருகே
பிரம்மவரா எனும் ஊரிலுள்ள மல்லிங்கேஸ்வரர் கோயிலில் இரவு தங்க அனுமதி கேட்டேன். அங்கே
வாமன சாமி என்றொருவர் தங்கியிருக்கிறார். அவர் 7 மணி அளவில் அங்கு வருவார். அவருடன்
தங்கிக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். கோயில் குளத்தில் குளித்து வந்த போது, வாமனசாமி
அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார். நான் அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டு வருகிறேன்
என்றதும், “உங்களுக்கும் சேர்த்துதான் உலை வைத்திருக்கிறேன். நான் சமைப்பதை என்னுடன்
உண்பதில் ஆட்சேபனை இல்லை என்றால் சாப்பிடலாம். கஞ்சிதான். கடையிலிருந்து வாங்கிய ஊறுகாய்
இருக்கிறது. அரிசியை நான் கடையிலிருந்துதான் வாங்குகிறேன்”, என்றார்.
பிச்சை
எடுத்துப் பிழைக்கும் அவருடன் நான் இருந்த அந்த இரவு என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தின்
விளைவுதான் இக்குறும்படங்கள். அவரதுக் குடும்பத்தைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.
10 வருடங்களுக்கு முன் மாவேலிக்கரைக்கு அருகே தன் பெயரிலிருந்த இடம் மற்றும் வீட்டை
மனைவியின் பெயரில் எழுதிக் கொடுக்கச் சென்ற போது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்ததாகவும்,
அதுவே கடைசி என்றும் சொன்னார். அச்சமயத்தில் அவர் திருச்சி தாயுமானவர் கோயிலில் தங்கியிருந்தாராம்.
மலையாளம், தமிழ், கன்னடம், துளு, இந்தி மொழிகளில் சரளமாகப் பேசினார். நானும் என் மனம்
திறந்து பலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். என் ஜென்ம நட்சத்திரம், பிறந்த இடம் பற்றிக்
கேட்ட அவர் இடையே என் கை ரேகைகளையும் பார்த்தார். “ஆன்மீக வாழ்க்கை அல்ல, இல்லற வாழ்க்கைதான்.
விதி ரேகை பலமாக இருப்பதால் இறையருள் உண்டு என்றார்”. பிறகு “கடந்த 15 வருடங்களாக ஆன்மீக
சுகம் தேடி அலையும் என்னிடம் பல இடங்களில் பலர் சொன்ன விஷயங்களையும், நான் அறிந்தவைகளையும்
உங்களிடம் சொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது”, என்றவர் கூறியவைகளை முதலில் அவரை மகிழ்விப்பதற்காகக்
கேட்க ஆரம்பித்தேன். ஆனால், அவை எல்லாம் என்னுள் பசுமரத்து ஆணி போல் பதிந்துவிட்டது.
அவை சரிதானா என்று என்னால் இயன்றமட்டும் நீண்டகாலம் பரிசோதித்துப் பார்த்து அவை எல்லாம்
உண்மைக்குப் புறம்பல்ல என்றும் உணர்ந்தேன்.
“எப்போதாவது சீர்காழி சட்டநாதன்
கோயிலுக்குப் போங்கள். அப்போது அக்கோயிலுக்கும், கேரளாவிற்கும் உள்ள தொடர்பு உங்களுக்கு
விளங்கும்”.
“மார்த்தாண்டவர்மா “படையோட்டம்”
நடத்தி பறிமுதல் செய்த, என்றென்றும் காக்கப்பட வேண்டிய, நம் முன்னோர்கள் சன்மானமாக
வழங்கிய ஓலைச் சுவடிகளை எல்லாம் எரித்துச் சாம்பலாக்கி, விலைமதிக்கவியலா ஆபரணங்களை
எல்லாம் பத்மநாபரின் காலில் புதைத்தும் விட்டார்.”
“கேரளத்தில் வைணவம், சைவத்தை முழுதுமாக
விழுங்கிவிட்டது. பிரணவ மந்திரத்தைத் தந்தைக்கு உபதேசித்து குருவான, குருவாயூரப்பன்,
உடுப்பியில் சிவ சுதனான சுப்ரமணியன் உடுப்பிக் கிருஷ்ணனாக மாறியது போல், முருகன் திருப்பதியில்
திருமாலாய் ஆனது போல், முருகன் உன்னிக் கிருஷ்ணனாக மாறியது ஓர் உதாரணம். அது போல் கர்நாடகத்தில்
வைணவம் வளராததற்குக் காரணம் பசவண்ணாதான்”.
“வட இந்தியாவில் உள்ள கோயில்களில்
சமஸ்க்ருதம் தெரியாதவர்களை அடித்து விரட்டுவார்கள். பலரும் நெற்றியில் நாமம் போட்டு
வாயே திறக்காமல் இருப்பார்கள். நாமம் போட்டவர்களை அங்குள்ளவர்கள் ஏனோ தொல்லை செய்வதில்லை.
நாமம் போடாதவர்களைப் போடச் சொல்லி வற்புறுத்துவதும் உண்டு. இதற்கெல்லாம் பின்னில்,
சைவத்தை வேறோடு பிடுங்கி எறிய முயலும் சிலர் இருக்கிறார்கள் என்பது உறுதி”. இது போன்ற
அவரது வார்த்தைகள் ஏனோ என் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.
கொல்லூர் மூகாம்பிகை கோயில் இணையத்திலிருந்து
அப்படி 12 ஆம் நாள் இரவு 7 மணி
அளவில் நான் கொல்லூரை அடைந்தேன். கால் பாதத்தில் பல இடங்களில் ரத்தம் கசிய மூகாம்பியைக்
கண் குளிரக் கண்டேன். என்ன வேண்டுவது என்று தெரியாமல் கண்களில் நீர் கசிய நின்றேன்.
அன்று 5 ரூபாய் அறையில் தங்கினேன். அடுத்த நாள் முழுவதையும் கோயிலில் செலவிட்டேன்.
மதிய உணவு அன்ன தானம். அடுத்த நாள், காலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்ததால், சிரமமின்றி
நடக்க முடிந்தது. வண்டி ஏறினேன். நான் ஒரு நாள் கடந்த தூரத்தை, பேருந்து ½ மணிநேரம்
¾ மணி நேரத்தில் கடந்தது. அடுத்த நாள் நவம்பர் 30 ஆம் தேதி, 10 மணிக்கு வீட்டை அடைந்தேன்.
மதியம் 12 மணிக்கு ஒரு தந்தி! தாத்தாவிற்கு சீரியஸ் என்று. மாலை 6 மணிக்குத் திருவல்லா
வண்டி ஏறினோம். மறுநாள் காலை 9 மணிக்கு வீட்டை அடைந்தோம். முந்தைய இரவு 11 மணி அளவில்
தாத்தா இறைவனடி சேர்ந்திருந்தார். அன்று மாலை
5 மணிக்கு இறுதிச் சடங்குகள் முடிந்தன.
3 நாள் கழித்து, அம்மாவுடன் நிலம்பூருக்குச்
செல்லும் வழியில் நாங்கள் எர்ணாகுளம் களமசேரியிலுள்ள அக்கா மற்றும் மாமாவின் வீட்டிற்குச்
சென்றோம். அக்கா என்னை வா என்றழைத்து பாலாடிவட்டம் சந்திப்பில் உள்ள எங்கள் உறவினர்
ஒருவர் நடத்தும் நிறுவனமான “லாபெல்லா ஃபினான்சியர்ஸ்”க்கு அழைத்துச் சென்றார்கள்..
அக்கா என் வேலை விஷயமாக வந்தேன் என்றதும் நான் அதிர்ந்தேன். சொல்லாமல் கொள்ளாமல் வேலையை
விட்டுப் போன ஸ்டாக் கீப்பரது வேலையில் நாளையே சேர வேண்டும் என்றார். ரூ 450 சம்பளம். அப்படி
அன்று முதல் இன்று வரை புகுந்த வீட்டில்(கேரளத்தில்) ஓரளவு தேவையான வருமானத்துடன்
மகிழ்வுடன் வாழ்கிறேன்.
திருவெறும்பூர் கோயில் இணையத்திலிருந்து
இனி குறும்பட விசயங்கள். அந்த
யாத்திரைக்குப் பின்னும் இடையிடையே பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். அப்படி 1996 ஆம் வருடம்
திருச்சி தாயுமானவர் கோயிலிருந்து, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு பாதயாத்திரை
போனபோது, திருவெறும்பூர் குன்றேறி பூட்டிக் கிடந்த கோயில் முன் களைப்பில் சர்வாங்கமாய்
விழுந்தவன் அப்படியே சிறிது நேரம் படுத்துக் கிடந்தேன். “இங்க வந்து படுங்க கொஞ்ச நேரம்”! குரல் வந்த திசையில் ஒரு பெரியவர். பலதும்
பேசினோம். இடையே “சட்டநாதரைப் போய் பாருங்க. கோயிலுக்கு உள்ளே படி இருக்கு ஏறணும்”.
என்றதும் வாமன சுவாமி நினைவுக்கு வந்தார். “இவ்வளவு
படிச்சுருக்கீங்க. உங்க அனுபவங்களையும் நீங்க சொல்லியே ஆக வேண்டியதையும் பயமில்லாம
எழுதுங்க. ஏன் முடிஞ்சா படமே பிடிச்சுக் காட்டுங்க”. என்றார். எனக்கு அது ஒரு நினைவுப்படுத்தல்
போல் தோன்றியது. இதுதான் என் குறும்படங்களின் பின்புலம்.
இவ்வுலகில் நம் வாழ்வில் நடக்கும்
ஒவ்வொரு சிறிய சம்பவங்களுக்குப் பின்னாலும் இறைவன் இருக்கிறான் அல்லது இப்பிரபஞ்சத்தை
இயக்கும் சக்தி இருக்கிறது என்பது என் நம்பிக்கை. அது எல்லோராலும் எல்லா நேரங்களிலும்
உணர முடிவதில்லை. அதை உணரவும், உணர்ந்த பின் அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும்
சிலரால்தான் முடிகிறது. வழக்குரைஞர் காந்தி, காந்திஜியாக மாறக் காரணமாக, தென்னாப்பிரிக்க
ரயில் பயணத்தில் அவர் வாசிக்க நேர்ந்த, ரஸ்கினின் முதல்…புத்தகமான “Unto
this Last” இருந்தது போல், இச்சம்பவங்கள் என் வாழ்விலும் சில தீர்மானங்களை
எடுக்க வைத்தது. நான் காந்தியல்ல. நான் ஆங்கில மொழி கற்பிக்கும் ஒரு சாதாரண ஆசிரியன்.
இடையில் மனதில் படுவதை எழுதியும், படமாக்கியும் (அவை எல்லாம் தண்ணீரில் வரைந்த கோலங்கள்
என்று அறிந்தும்) திருப்தி அடைபவன். அவ்வளவே.
மிகவும் சிரமப்படுத்திவிட்டேனோ?
இப்போதைக்கு இதுவே அதிகம். பிறிதொரு சமயத்தில் தொடர்கின்றேன். நேரம் வாய்க்கும் போது
(25 நிமிடம்)
“செயின்ட் த க்ரேட்” குறும்படத்தைப் பாருங்கள். கருத்துகளைப் பதியுங்கள். லிங்க் இதோ……
நேரடி அனுபவம் உள்ளவார்களின்
பதிலளிநீக்குபடைப்புகளில் இருக்கும் நேர்த்தி
,ஆழம்,அறிந்துத் தருபவர்களிடம்
இருப்பதில்லை
அனுபவம் பெறவும் ஒரு கொடுப்பினை
வேண்டி இருக்கிறது'
நீங்கள் பாக்கியசாலி
அதன் காரணமாக நாங்களும்...
அனுபவங்கள் சிலிர்க்க வைக்கின்றன. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. குறும்படம் பிறகுதான் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஇதோ காணொளியினைக் காணச் செல்கின்றேன் நண்பரே
பதிலளிநீக்குதங்களின் அனுபவங்கள் என்றென்றும் மறக்கக் கூடியன அல்லவே
தம+1
குறும்படத்தின் பின்புலம், தங்களது அனுபவங்கள் ஒவ்வொன்றும் மறக்கமுடியாதபடி உள்ளன. நிதானமாகப் படித்தேன். சில நிகழ்வுகள் எனது பௌத்த ஆய்வு தொடர்பான களப்பணியை நினைவூட்டின. ஒரு முறை ஒரு கிராமத்தில் சென்றுகொண்டிருக்கும்போது எங்குமே ஆள் நடமாட்டமில்லை. அபூர்வமாக எதிரில் வந்த அவர் என்னைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டுவிட்டு நீங்கள் வரும்போது மல்லிகைப்பூ வாடை வந்ததா?, ரயில் உங்களைக் கடந்து சென்றதைப்போன்ற உணர்வு ஏற்பட்டதா? யாரோ ஒருவர் குறுக்கே போவது போல் தெரிந்ததா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டார். ஒண்ணுமில்ல இங்க ஆவி, பேய் நடமாட்டம் இருக்கு, புதிதாக யாராவது வந்தா விடாது என்றார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை. ஓடவும் முடியாது. சத்தம் போட்டாலும் காப்பாற்ற யாருமில்லை. பின்னர் மன தைரியத்தை (வேறு வழியின்றி?)வரவழைத்துக்கொண்டு இறைவனை வேண்டிக்கொண்டு நான் சென்ற பணியை முடித்துத் திரும்பினேன். தங்களின் சீரிய முயற்சி சிறப்புற அமைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇறைவன் எந்த மனிதருக்குமே நேரடியாக உதவ மாட்டார் மற்றொரு மனிதன் வடிவில் வந்துதான் உதவுவார் அதேபோல நமக்கு கிடைக்கும் துன்பங்களும்கூட சில மனிதர்கள் மூலம் கிடைக்கும் இதன் செயல் பாட்டுக்குக்கும் இறைவனே காரணம்.
பதிலளிநீக்குதங்களது வாழ்வின் பல விடயங்களை எங்களுடசன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
காணொளி கண்டு பிறகு கருத்துரை எழுதுவேன்
த.ம. 4
படம் முழுமையாக பார்த்தேன் நண்பர் ஆவி சிறப்பாக நடித்து இருக்கின்றார்.
நீக்குநல்லதொரு பழங்கால விடயத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திட வேண்டிய தங்களது முயற்சிக்கு எமது வாழ்த்துகள்.
ஜியெம்பி ஐயா வீட்டில் அவர்கள் உங்களை வரவேற்றதும் அவர்கள்தான் முன்னே சென்று உங்களை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும் ஆனால் தாங்கள் முன்னதாக செல்வது செயற்கையாக எனக்கு தோன்றியது.
பல குறும்படங்கள் எடுத்த அனுபவத்தில் (ஹிஹிஹி கனவில்தான்) அறிந்து கொண்ட சிறிய தவறு.
குறும் படத்தின் பின்புலம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பதிலளிநீக்குதங்கள் பிக்வு அருமை
தொடருங்கள்
மதச் சண்டைகள் ,ஒரே மதத்தில் சைவம் ,வைணவம் என்று சண்டை !இவ்வளவு சண்டையும் கடவுளை நம்புபவர்களால் !இதுவா ஆன்மீகம்:)
பதிலளிநீக்குஅனுபவங்களை சொன்னவிதம் மனதை நிறைத்தது. குறும்படத்தை பார்த்து மீள்வேன். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் துளசி அண்ணா கீதா அக்கா ,ஆனந்த் .
பதிலளிநீக்குகுறும்படம் அருமையாக வந்திருக்கு ..துவக்கத்தில் வருவது கீதாக்காவின் ஹம்மிங் வாய்ஸ் என்று நினைக்கிறேன் தேன் இனிமை ..துளசி அண்ணா ஒரு மலையாள நடிகர் கொஞ்சம் வில்லன் டைப் பேர் நினைவில்லை அவர் மாதிரியே இருக்கார் :) முந்தின குறும்படத்துக்கும் இதற்கும் எவ்ளோ மாறுபட்ட நடிப்பு ..ஹீரோ ஆனந்த் மற்றும் அனைவரின் நடிப்பும் அருமை .சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிங்க உதாரணம் கதவை திறந்து மறக்காம மூடுவது .gmb சார் மாதிரி இருக்கேனு நினைச்சேன் படத்தை பார்த்து அப்புறம் ஸ்டேட்டஸ் பார்த்தே தெரிந்து கொண்டேன் அவர்தானென்று .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அனைவருக்கும்
அனுபவத்தின் ஊடே அருமையான குறும்படம் வலையுறவுகளில் சிலரின் நேரடிமுகத்தையும் காணும் வரம்கிடைத்தது.படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதிருச்சிசட்டநாதர் பற்றி தனிப்பதிவு எழுதுங்கள் நேரம்கிடைக்கும் போது அருமையான ஆலயவடிவமைப்பு அவசரத்தில் சிலதருசனம் செய்தேன் ஆனாலும் முழுமையான தலப்புராணம் அறிய ஆவலுடன்!
பதிலளிநீக்குஇணையம் மிகவும் மெதுவாக இருப்பதால் எல்லோருக்கும் சேர்த்து இங்கு பதில்...
பதிலளிநீக்குரமணி ஸார் மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
ஸ்ரீராம் கருத்திற்கு மிக்க நன்றி. படம் பற்றிய உங்கள் கருத்தும் பார்த்தாயிற்று மிக்க மிக்க நன்றி.
நண்பர் கரந்தையாருக்கு மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..
முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின்அ பதிவை நிதானமாக வாசித்துத் தங்கள் அனுபவத்தையும் விரிவாக இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
கில்லர்ஜி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
மகேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி
பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
மோகன்ஜி மிக்க நன்றி தாங்கள் எனது அனுபவத்தையும் வாசித்துப் புரிந்து கொண்டமைக்கும் கருத்திற்கும்.
ஏஞ்சல் சகோ தங்களின் கருத்தை எஃப் பி யிலேயே வாசித்துவிட்டேன். கீதாவிடமும் சொல்லிவிட்டேன். இங்கும் இருவரும் வாசித்துவிட்டோம். மிக்க மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கும் விமர்சனத்திற்கும்.
தனிமரம் நேசன் குறும்படத்தைப் பற்றிய தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. சட்டநாதர் குறித்து எங்களுக்குத் தெரிந்த தகவல்களை நிச்சயமாக நானோ, இல்லை கீதாவோ எழுதுவார் நிச்சயமாக....இல்லை இருவம்.....மிக்க நன்றி நேசன்
நேற்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல இணையம் இழுவை..
பதிலளிநீக்குஇன்று தான் நிதானமாக வாசிக்க முடிந்தது..
அத்தனையும் - பிரமிப்பு.. மௌனம் தான் என்னை ஆக்ரமித்துக் கொண்டது..
பாத யாத்திரை என்று சென்றதில்லை.. ஆயினும் ஆலய தரிசனங்களின் போது நானடைந்த அனுபவங்கள்.. பலவற்றைத் தங்கள் பதிவினில் கண்டேன்...
வாழ்க நலம்!..
அனுபவமேஆசான்...!
பதிலளிநீக்குஎத்தனை அனுபவங்கள்.....
பதிலளிநீக்குகுறும்படம் இனிமேல் தான் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்.
தங்கள் அனுபவ குறும்படம் அருமை....
பதிலளிநீக்கு\\\இறைவன் நேரடியாக நம்மைக் காக்க வரமாட்டார். ஆனால், அவரது உதவி இது போல் ஏதாவது ஒருவரது உருவில் நமக்குத் தேவையான நேரத்தில் கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை///
பதிலளிநீக்குஆம். அனுபவபூர்வமாய் உணர்ந்தவன் நான். தொடரின் இரண்டு பகுதிக்ளையும் படித்து மகிழ்ந்தேன். தங்கள் அனுபவங்கள் எமக்குப் பாடங்கள் . நன்றி
கபாலி என்ற குப்பையை குப்பை என்று சொன்ன உங்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான படத்தொகுப்பு
பதிலளிநீக்குசிறந்த கருப்பொருள்
தொடருங்கள்
தொடருகிறோம்
அருமையான படத்தொகுப்பு
பதிலளிநீக்குசிறந்த கருப்பொருள்
தொடருங்கள்
தொடருகிறோம்
துளசி ஐயா! கீதா அம்மணி! சகோக்கள் இருவருக்கும் என் அன்பான வணக்கம்!
பதிலளிநீக்குகுறும்படம் பார்த்து முடித்த கையோடு இதை எழுதுகிறேன். மிக நல்ல முயற்சி!
வெறுமே புகழ்ச்சிக்காகவோ நட்புக் கருதியோ சொல்லவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். படத்தின் பல இடங்களில் உரையாடல் வியக்க வைத்தது. பார்ப்பனக் குலத்தில் பிறந்தும் தங்கள் குலமாயிற்றே எனப் பார்க்காமல், பார்ப்பனர்களின் இறையியல் - சமூக முறைகேடுகளை வெளிப்படையாக நீங்கள் சாடியிருக்கும் விதம் என்னைத் திகைக்கச் செய்கிறது! நீங்கள் நினைத்திருந்தால் முற்பட்ட வகுப்பினர், உயர் சாதியினர் போன்ற சொல்லாடல்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம். மக்களுக்கும் அது புரியாமல் இராது. பார்ப்பவர்களும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் மனதைப் புண்படுத்த வேண்டாவே என்பதற்காக நீங்கள் இப்படி எடுத்திருப்பதாகக் கருதித் தங்களைத் தாங்களே சாமாதனம் செய்து கொள்வார்களே தவிர, யாரும் ஏன் குறிப்பாகச் சொல்லவில்லை என உங்களைக் கேள்வி எழுப்பப் போவதில்லை. இவ்வளவும் இருந்தும், நீங்கள் வெளிப்படையாக, சமூகத்தில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பார்ப்பனர்களின் சூழ்ச்சி என்று வெட்ட வெளிப்படையாகக் குட்டியிருப்பது உங்கள் நடுநிலைமையையும் பரந்துபட்ட உள்ளத்தையும் காட்டுகிறது. நீங்கள் இருவரும் உண்மையிலேயே அதிசயப் பிறவிகள்தாம்!
சகோ கீதா அவர்களைச் சந்தித்தபொழுது, இந்த சமூக ஊடக யுகத்திலும் கேரளாவில் சாதி ஏற்றத்தாழ்வுகளும் கோயில் கெடுபிடிகளும் எந்த அளவுக்கு உச்சத்திலிருக்கின்றன என்று சொன்னார். அவற்றுக்குச் சாட்டையடி கொடுக்கும் விதமாக நீங்கள் எடுத்திருக்கும் இந்தக் குறும்படம் சிறப்பான முயற்சி! இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட படம் தேவையா என யாரேனும் கேட்கக்கூடும். சமூகத்தில் பிரச்சினைகள் இருக்கும் வரை கலையுலகில் அதற்கான எதிர்வினைகளும் நிகழ்த்தப்பட்டே தீர வேண்டும்! அது கலையுலகினரின் கடமை!
இவை எல்லாம் போக, இந்தப் படம் தனிப்பட்ட முறையிலும் என் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றை நினைவூட்டுவதாக உள்ளது. ஆடி மாதத்தில் கோயிலுக்கு வெளியே கூழ் வார்த்துக் கொண்டிருந்தபொழுது, அதை வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் நுழைய முயன்றதால் என் அம்மாவைக் கோயிலுக்குள் விட அந்தக் கோயில் குருக்கள் அனுமதிக்கவில்லை என்று ஒரு பதிவு இட்டிருந்தேன், இரண்டாண்டுகள் முன்பு. உங்கள் படத்தில், பார்ப்பனர்களைத் தவிர யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கூறிய காட்சி எனக்கு அந்த நிகழ்வை நினைவூட்டியது.
மற்றபடி, சதானந்தர் என்ற, வரலாற்றில் மறைக்கப்பட்ட துறவியின் வாழ்வையும் அவர் நிகழ்த்திய புரட்சியையும் பதிவு செய்த உங்கள் முயற்சி அருமை!
நீங்கள் பதிவிட்ட அன்றே பார்த்தும், படித்தும் ரசித்தேன்...ஆனால் கருத்துக்கான நேரம் இன்றே அமைந்தது...
பதிலளிநீக்குகுறும்படம் நன்று...
உங்கள் அனுபவங்கள்...ஆஹா மிக மிக நன்று...பலரை சந்தித்து வாய் மொழியாக அனுபவங்களை கேட்டு பேறுவதற்க்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...அந்த பேறு உங்களுக்கு கிட்டியது...வாழ்த்துக்கள்
ஆஹா! அருமையான அனுபவங்கள் உங்களுக்கு..அதற்கு ஒரு தைரியம் வேண்டும் அண்ணா.
பதிலளிநீக்குகுறும்படம் பார்த்துவிட்டேன்..அருமை..உங்கள் நடிப்பு பிரமாதம்..வாழ்த்துகள் அண்ணா.
"முருகன் திருப்பதியில் திருமாலாய் ஆனது போல்" - இதைப் பற்றி முன்னர் படித்துள்ளேன். "வெங்கடசுப்பு' என்பது பொதுவாக தமிழ்னாட்டில் 18ம் நூற்றாண்டுகளில் இருந்த பெயர். இதன் நீட்சி, வேங்கட மலையில் இருக்கும் சுப்பிரமணியன் என்பது. (தமிழ்த்தாத்தா உ.வெ.சா அவர்கள், அவருடைய ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இதைச் சொன்னதாக எழுதியுள்ளார்)
பதிலளிநீக்குஇதுபோன்றே, பத்ரி நாராயணர் கோவில், முன் காலத்தில் போதிசயனராக (பௌத்த மதம்) தாமரை மலர்மீது அமர்ந்தவடிவாக இருந்த தெய்வத்தை, சங்கரர், தாமரை மலரில் அமர்ந்த நாராயணராக உருவகம் செய்தார் என்று படித்திருக்கிறேன். (நாராயணர், தாமரை மலர்மேல் உட்கார்ந்த உருவமாக எங்கேயும் இருக்காது. அதுபோன்றே, இப்போது இருக்கும் பத்ரினாத் கோவில், மக்கள் செல்லுவதற்குக் கடினமான இடத்தில் ஆதிகாலத்தில் இருந்தது என்றும் பிறகு இப்போதுள்ள இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது என்றும் சொல்வார்கள்) - பொதுவாக உங்கள் கருத்தான, வைணவம் சைவத்தை மீறி வளர்ந்தது (dominated) என்று சொல்வதில் எவ்வளவு அர்த்தம் உள்ளதோ அவ்வளவு, சைவம், பௌத்தத்தையும் மற்றும் சமணத்தையும் மீறி வளர்ந்தது என்று சொல்லலாம். கொஞ்சம் digest பண்ணக் கஷ்டமான விஷயம், வைணவக் கோவில்களில் (சில இடங்களில்) சைவசமய அந்தணர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. அதேபோல், வைணவத்திலும் உள்ள இரு பிரிவினருக்கிடையேயும் ஒத்திசைவு கிடையாது)
பதிலளிநீக்குஅனுபவங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. சீர்காழி சட்டைநாதரைத் தரிசித்துள்ளேன். பின்னணியைக் குறித்து இப்படி அறிந்ததில்லை. இப்போதே அறிந்தேன். இது குறித்து விசாரிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகுறும்படம் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பதில் நிறைய உண்மை இருக்கிறது. கோவிலில் பிறப்பினால் நுழையமுடியாது என்று சொல்வது ஏற்கக்கூடிய செயல் அல்ல. சைவமோ வைணவமோ, அதில் இருக்கும் 'நாயன்மார்களோ ஆழ்வார்களோ, ஒரு சாதியைச் சேர்ந்தவர்களல்லர். கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? இது தெரியாமல் இவர்கள்தான் இதைச் செய்யவேண்டும் என்று சொல்பவர்கள் செய்வது முற்றிலும் தவறு. தகுதியைக்கொண்டுதான் அளவிடவேண்டுமே தவிர பிறப்பை அல்ல. குறும்படம் இதைச் சரியாகச் சொல்கிறது. (டாகுமென்டரி நெடி அதிகமாக இருப்பினும்)
பதிலளிநீக்கு