சனி, 1 பிப்ரவரி, 2014

இறந்தவரை சுமந்தவரும் இறந்திட்டார்.......அதை, இருக்கும் நாம் எண்ணிப் பார்க்க மறக்கக் கூடாது!




பிரபாகரன் மாமாவின் உடல் எரிக்கப்பட்ட அவரது வீட்டிற்குத் தென்புறம் உள்ள இடத்தில் அவரது அஸ்தி (மீதமுள்ள எலும்புகள்) சேகரிக்கும் சடங்கு நடக்கிறது. துக்கத்துடன் அவர் இரண்டு மகள்களும், அவர்களது கணவன்மார்களும், மக்களும் அவர்களது குடும்பங்களும் இப்படி அங்கே ஏறத்தாழ 25 பேர்.  




மூத்த மகள் பார்வதியின் மகன் ராகுல், கால்களில் பாக்கு மரப்பாளையில் செய்த செருப்பணிந்து, கையில் இரண்டு சிறிய கம்புகளை இடுக்கி போல் உபயோகித்து, சாம்பலின் இடையே  உள்ள எஞ்சிய எலும்புகளின் துண்டுகளைத் தலை, நெஞ்சு, கால் இருந்த பகுதிகளிலிருந்து எடுத்துச், சடங்குகளை நடத்தும் ரமணன் தன் கையில் பிடித்திருக்கும் பாக்கு மரப் பாளையில் செய்யப்பட்ட முறம் போன்ற ஒன்றில், இட்டுக் கொண்டிருந்தான்.  படுத்த படுக்கையாகும் முன், பிரபாகரன் மாமாதான் இறந்த வீடுகளில் இது போன்ற சடங்குகளை முன் நின்று செய்து கொண்டிருந்தார்.  


எத்தனையோ முறை இது போல், பாக்கு மரப்பாளை முறத்தில் இறந்தவர்களின் அஸ்திகளை வாங்கி, ஒரு மண் குடத்திலிட்டு, 11 நாட்கள் பாதுகாத்தபின், "வர்க்கலா கடலில்", "நிமஞ்சனம்" (க்டலில் கலக்கும்/கரைக்கும் சடங்கு) செய்யும் வரை, மிகுந்த கவனத்துடன் செய்து வந்த அவரது அஸ்திகள் இன்று சேகரிக்கப்படுகின்றது, அதே "வர்கலா" கடலில் நிமஞ்சனம் செய்வதற்காக.

நோய்வாய்பட்ட அவருக்குக் கடந்த 5 வருடங்களாகத்தான், பொதுப் பணிகளிலும், சேவைகளிலும் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  அதற்கு முன்பு வரை, கோயில் திருவிழா, கல்யாணம், மரணம் போன்றவை நிகழும் இடங்களில் அவர் இன்றியமையாத ஒருவராக இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அவரும் அவரது மனைவியும், அவரது இளைய மகளுடன், இதே வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். திடீரென அவரது மனைவிக்குக் கால் மூட்டுத் தேய்மானத்திற்கான அறுவை சிகிச்சை செய்து  Knee Cap மாற்றி வைக்க வேண்டியக் கட்டாயம் வர, நோய்வாய்பட்ட இருவரையும் கவனிக்கத் தன்னால் முடியாது என்று இளையமகள்  சொல்ல, பிரபாகரன் மாமாவின் மனைவி எர்ணாகுளத்தில் உள்ள மூத்த மகளுடன் தங்க வேண்டியதானது. சொத்துக்களைச் சரிசமமாக பிரிப்பது போல் பெற்றோர்களையும் சரி சமமாகப் பிரித்துத் தங்கள் கடைமைகளை யாரும் குற்றம் சொல்ல முடியாத விதத்தில் அவரது மகள்கள் செய்யத் தொடங்கினார்கள்.  


இந்த முடிவெடுக்க வேண்டிய சூழல் வந்து, பேச்சு எழுந்த போது,

"நானும், அவளும் ஒரு வாடகை வீட்டுல, ஒரு ஹோம் நர்ஸ்  எங்களைப் பாத்துக்க போட்டுகிட்டு இருந்துக்கறோம்" என்றார் பிராபாகரன் மாமா.

இது மாமாவின் மகள்கள், மருமகன்களின் வெறுப்பைச் சம்பாதித்ததே ஒழிய அவர் விரும்பியது போல் மனவியுடன் ஒன்றாகத் தங்க முடியவில்லை.  

"தினமும் ஃபோனில் பேசலாம், மாசத்துக்கு ஒருமுறை அப்பா அங்கேயோ, அம்மா இங்கேயோ வந்து போகலாமே"  என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் சொல்லப்பட மட்டும் செய்தன. செயல் அளவில் ஒன்றும் நிகழவில்லை. 


4 மாதங்களுக்கு முன் பிரபாகரன் மாமாவைப் பார்க்கச் சென்ற போது, வீட்டில் வேலைக்காரி மட்டும் இருந்ததால், அவர் என்னிடம் தன் மனம் திறந்து பேசினார்.  அவரது மனைவியைப் பற்றி பேசிய போது அவர் கண்களில் நீர் நிறைந்தது. தொண்டை அடைத்து அழுதேவிட்டார்.  

"ஃபோன்ல கூடப் பேச அனுமதி இல்ல.  பேசினா, நாங்க ரெண்டு பேரும் ரொம்ப உணர்ச்சிவசப் படறதுனால, அடுத்த நாளே டாக்டர்கிட்ட போகணுமா இருக்கு.  அவளோடு பேசி 6 மாசத்துகு மேல ஆகிடுச்சு.  என்ன வாழ்க்கை இது"  என்று நொந்து கொண்டார்.

இதைக் கேட்ட எனக்கு, திடீரென, பிரபாகர் மாமாவின் அம்மா, நான் இளங்கலைப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்பு, என்னிடம் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது. 

"பிரபாகரன் அவங்க அப்பாகிட்ட பேசி 10 வருஷமாகுது.  அவர் ஏதோ கோபத்துல பிரபாகரனோட மனைவிய அடிச்சுட்டாருதான்.  அது தப்புதான்.  அவரே பலதடவை அதை நினைச்சு வருந்திகிட்டுருக்காரு. அவனோட மனைவி, அவரோட பேசாம இருக்கலாம்.  ஆனால், அவன் இவரோடு பேசாம இருந்தா எப்படி?  அவன் என்னோடு பேசினாலும், அவனுக்கு என் மேலயும் கோபம்தான்.  இவரை, ரமணிகிட்ட (பிரபாகரனின் சகோதரி) விட்டுட்டு நான் அவன் வீட்டுல தங்காததுக்கு.  அதெப்படி நான் ஒரு இடத்துலயும், இவரு ஒரு இடத்துலயும் தங்கறது?"

எனக்கு, இதுதான் "தன் வினைத் தன்னைச் சுடும்" என்பதோ?! என்று தோன்றியது.  சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மாமா தொடர்ந்தார்.

"நானும் வருடங்களுக்கு முன்னாடி என்னோட மகள்கள் வயசுல என் அப்பா, அம்மாகிட்ட, அவங்க ஆசைகளத், தேவைகள கவனிக்காம, பலதையும் பேசியும், செய்தும், அவங்க மனசு நோகும்படியா நடந்துருக்கேன்.  இப்ப என் நிலமை அதுக்கானத் தண்டனையா இருக்கலாம்" என்றார்.

இப்படித்தான்,  நம் வாழ்வில், நாம் ஒவ்வொருவரும் தவறுகள் செய்யும் போது, அதைத் தவறென்று உணராமல் வாழ்வின் இறுதிக்கட்டத்தில், அது போன்ற தவறுகள் நமக்கு மற்றவர்களால் ஏற்படும் போது, நாம் செய்த தவறை எண்ணி வருந்துவோம் போல.  தன் மகனின் மனைவியைக் கை நீட்டி அடித்தது தவறு என்பதை பிரபாகரன் மாமாவின் அப்பா, அவரது இறுதிக் காலத்தில் உணர்ந்தது போல், 10,15 வருடம் அப்பாவுடன் பேசாமலும், வயதான அம்மாவையும், அப்பாவையும், தன் தங்கையின் வீட்டில் தங்க வைத்தும், தான் இழைத்தத் தவறை, பிரபாகரன் மாமா, தன் இறுதிக் காலத்தில் உணர்ந்தது போல, பிரபாகரன் மாமாவின் மூத்த மகள் பார்வதியும், இளைய மகள் லக்ஷ்மியும் தங்களது இறுதிக் காலத்தில், தங்கள் பெற்றோர்களை அவர்களது இறுதிக்காலத்தில் பிரித்தும், பேசவும், பார்க்கவும் விடாமல், அவர்களுக்கு இழைத்தக் கொடுமையை எண்ணி வருந்தத்தான் செய்வார்கள். அப்படியானால், நானும் இது போல் என் பெற்றோரிடம் மனது புண்படும் விதம் நடந்திருக்கின்றேனோ?.........
சுசீந்தரம்


குமாரகோயில்


ஆம்!  அப்பாவும், அம்மாவும், ரொம்ப நாட்களாகச், சுசீந்தரம், குமார கோயில், கன்னியாகுமரி போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நானும் "பார்க்கலாம்" என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றேன், கடந்த இரண்டு வருடங்களாக.  என்ன ஆனாலும் சரி, இரண்டு நாள் லீவு போட்டு, மனைவி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அவர்களைக் கூட்டிக் கொண்டு, அடுத்த வாரமே சுசீந்தரம் போயே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். எப்படியோ, இப்போது  மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது!

19 கருத்துகள்:

  1. ///இறந்தவரை சுமந்தவரும் இறந்திட்டார்.......அதை, இருக்கும் நாம் எண்ணிப் பார்க்க மறக்கக் கூடாது! ///


    நல்ல பாடல் வ்ரிகள் தலைப்பாக வந்திருப்பது அருமை. இப்போதைய வாழ்வில் நடப்பதென்னவோ சொந்தங்கள் இருக்கும் வரை அவர்களை விலக்கி வைத்துவிட்டு அவர்கள் மறைந்த பின் நாம் இப்படி செய்து இருக்கலமோ அல்லது அப்படி செய்து இருக்கலாமோ என்று எண்ணி இறந்த பின் அவர்களை மனதில் சுமந்து கொண்டு இருக்கிறார்கள் இந்த கால மக்கள்

    பதிலளிநீக்கு
  2. //////பிரபாகரன் அவங்க அப்பாகிட்ட பேசி 10 வருஷமாகுது. அவர் ஏதோ கோபத்துல பிரபாகரனோட மனைவிய அடிச்சுட்டாருதான். அது தப்புதான். அவரே பலதடவை அதை நினைச்சு வருந்திகிட்டுருக்காரு..///

    பிரபாகரன் செய்தது மிக சரியே சரியே நானாக இருந்தால் தூக்கி போட்டு நல்லா மிதிச்சு இருப்பேன் அல்லது இனிமேல் யாரையும் அடிக்க கை இருக்கா வண்ணம் செய்து இருப்பேன். பிராபகரன் நல்ல மனிதன் அதனால்தான் அவன் பேசாமல் ஒதுங்கி விட்டான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இந்தக் கருத்து நியாயமான ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கருத்தே!

      நீக்கு

  3. இப்படித்தான், நம் வாழ்வில், நாம் ஒவ்வொருவரும் தவறுகள் செய்யும் போது, அதைத் தவறென்று உணராமல் வாழ்வின் இறுதிக்கட்டத்தில், அது போன்ற தவறுகள் நமக்கு மற்றவர்களால் ஏற்படும் போது, நாம் செய்த தவறை எண்ணி வருந்துவோம் போல. //

    இது பலரின் வாழ்வில்
    தவிர்க்க முடியாத விஷயம் போல்
    ஆகிவிட்டதைப் போலப் படுகிறது
    படிப்பவர் அனைவரையும் நிச்சயமிந்தப் பதிவு
    நிதானப்படுத்திப் போகும்
    மனம் தொட்டப் பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல குடும்பங்களில் நிகழும் ஒன்றாக, உறவுகளுக்கு அப்பாற்பட்டு மனித நேயம் பார்க்கும் நிலை இல்லாமல் போவதால்...தாங்கள் சொல்லுவது போல நிதானப்படுத்திப் போகும் போக்கு இல்லாமல் போவதாலும்...இப்படி ஆகின்றது!

      கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. தவறு செய்வதை தவறு என்று உணராமல் இருப்பதே மிகப்பெரிய தவறு... ஆனால் காலம் அனைத்தையும் கற்றுக் கொடுத்து விடும்... கற்றுக் கொண்டே உடனே கற்றுக் கொடுப்பதும் மிகவும் முக்கியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்! நல்ல அருமையான கருத்து டி.டி அவர்களே! மிக்க நன்றி!

      நீக்கு
  5. முன்னர் செய்த தவறுகளுக்கு அந்திம காலத்தில் வருந்தி என்ன பயன்? பரிகாரம் தேட வாய்ப்பில்லாமல் போகிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் நன்பரே! வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. வணக்கம்
    நண்பரே..

    மனித வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கதாபாத்திரங்கள் மூலம் விளக்கிய விதம் நன்றாக உள்ளது.... வாழ்த்துக்கள் நண்பரே...
    (ஒரு வாரம் வெளியிடம் சென்றதால் வலையுலகம் வரவில்லை.... )இந்த வாரம் தொடர் வருகை இருக்கும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ந்ன்றி! நண்பரே!! தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும்!

      அறிந்து கொண்டோம்! தங்கள் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. வணக்கம்
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு