ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஊருக்குத்தான் உபதேசம்......அதை உரைக்கும் அவர்களுக்கல்ல!





பாலக்காடு நகரம், தமிழ்நாட்டிற்குத் திருநெல்வேலி எப்படியோ, அப்படி ஓர் மூலையில், தானுண்டு தன் பழம் பெருமைகள் உண்டு, நடக்காத சில கனவுகளும் உண்டு என்று மற்ற நகரங்களுடன் போட்டி போடாமல் அமைதி காக்கும் ஒரு சிறிய நகரம்தான். 



 கடந்த சில வருடங்களாக, 'பாலக்காடு ஃபெஸ்ட்' என்ற பெயரில், 10 நாட்கள் தொடர்ந்து நடக்கும் ஒரு திருவிழா.  பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மலையாள மனோரமா நாளிதழும், நேரு குழுமம் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து நடத்தி வருகின்றார்கள்.  இவ்வருடமும், பிப்ரவரி 20 அன்று தொடங்கிய 'பாலக்காடு ஃபெஸ்ட்',  மார்ச் 2 வரை நடக்கவிருக்கிறது. நேற்று (21-02-2014) நானும், எங்கள் பள்ளியின் முதல்வர் திரு. ஜோஸ் மாத்யுவும், சம்பள பில்லை, கூரியரில், குற்றிப்புரத்திலுள்ள, உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிய பின், 'பாலக்காடு ஃபெஸ்ட்' க்கு போக முடிவு செய்தோம்.  முன்பெல்லாம் கோட்டை மைதானத்தில் நடந்துவந்த இது போன்ற நிகழ்சிகள், மைதானத்தின் பெரும்பகுதியை கிரிக்கெட் தளம் விழுங்கியதால், இப்போது ஸ்டேடியம் க்ரவுண்டில்தான் நடத்தப்படுகின்றன. 




ஆறு மணிக்கு முன்பே நாங்கள் க்ரவுண்டை அடைந்தோம். சுற்றிலும் அலுமினியம் ரூஃபிங்க் ஷீட்டால் மறைக்கப்பட்டு, உள்ளே நான்கைந்து அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட நவீன பந்தல்கள் போடப்பட்டிருந்தன.  அவற்றில் இரண்டு பந்தல்கள் முழுமையாக குளிரூட்டப்பட்டிருந்தன.  நுழைவுக் கட்டணம் ரூ.50.  தரையில் பலகைகள் இடப்பட்டு  அதில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.  எனவே கோடைகால வெப்பமும், தூசும் இல்லாமல் ஃபெஸ்ட் கண்டு களித்துத் திரும்பலாம். ஏராளமான கடைகள் உள்ளே போடப்பட்டிருந்தன.  'துருக்கி லெதரால்' செய்யப்பட்ட இருக்கைகள், பல வகை கணிணிகள், குளிரூட்டும் சாதனங்கள், குளிர் காற்றுப் பெட்டிகள், பாடி மாசாஜர்ஸ், கைரேகை ஸ்கான் செய்து உடனடியாக எதிர்காலத்தை ரூ.100 க்கு, அச்சடித்து தரும் நவீன சோதிடர், வெறும்  ரூ.1000 க்கு (!?) கனமில்லாத மூன்று மடிப்புள்ள கொக்கிகள் (மாங்காய், முருங்கைக்காய்.....பறிப்பதற்கு) இப்படி விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது போல், குண்டூசி முதல், ஹுண்டாய் கார் வரை, உள்ளே, பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.  

உணவுப் பிரிவான 'ஃபுட் கோர்ட்' டில்,  30 விதமான தோசைகள், 10 விதமான பிரியாணிகள், வட இந்திய, சைனீஸ், கான்டினென்டல் உணவு வகைகள், இப்படி, அங்கு செல்பவர்களது மனம் கொஞ்சம் தடுமாறினால், கையிலுள்ள பணம் காணாமல் போய் விடும் அளவிற்கு, காண்பவரது மனதைக் கவரும் வகையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் இருவரும்,  2 ரோஸ்ட் சாப்பிட்டபின், ஃபெஸ்டின் பாகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாஜிக் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியைக் காண அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்ட பந்தலில், மேடை அருகே போய் அமர்ந்தோம்.  டி.வி. நிகழ்சிகளில் பங்கெடுத்த பல திறமை மிக்க சகோதர, சகோதரிகள் மிகவும் நன்றாகப் பாடினார்கள்.  சிறிது நேரம் கேட்டதும்,  காதில் சிறிதாக வலியும், குடைச்சலும் ஏற்பட்டது.  காதுக்குள் சிறு விரலை விட்டு இடையிடையே குடைந்து பாடலைக் கேட்கவும்,  காட்சிகளைக் காணவும் தொடங்கினேன்.  மிகவும் அருமையாக ஒரு வட இந்திய இளஞர்  ஆடிய மாஜிக் நடனத்தைக் கண்டு களித்து இரவு 8.30க்கு அங்கிருந்து வெளியேறினோம். 

வெளியே சுற்றி மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குத் தொட்டடுத்தாற் போல் நிறுத்தியிருந்த என் இரு சக்கர வாகனத்தை எடுக்கப் போன போது,  மறைக்க உபயோகிக்கப்பட்டிருந்த அலுமினியம் ரூஃபிங்க் ஷீட்டுகள் இடையிடையே அதிர்ந்ததைக் கவனித்தேன்.  பயந்து பின் வாங்கிய எனக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை.  பின்புதான் தெரிந்தது, அப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இசைநிகழ்ச்சியின் இடையே வரும் இசைக்கருவிகளின் சப்தம்தான் அந்த அதிர்வுக்குக் காரணம் என்று.  அலுமினியம் ஷீட்டைத் தொட்டுப் பார்த்து, அதிர்வு இடையிடையே உச்சத்தில் கேட்கும் இசைக் கருவிகளின் சப்தத்தால் தான் உண்டாகிறது என்று உறுதி செய்தேன். அப்பகுதியில் சாலையின் இரு புறமும் ஏராளமான அக்கேஷியா மரங்கள் உள்ளன.  ஒவ்வொரு மரத்தின் கீழும் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு தெளித்தது போல் காணப்படும் பறவைகளின் எச்சங்கள் விழுந்திருந்தன. மரத்தின் கீழே ஏறத்தாழ 3 மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றில் கூட அந்த இரவு நேரத்தில், பறவைகளின் எச்சங்கள் விழந்திருக்கவில்லை.  பாவம் பறவைகள், இந்த சகிக்க முடியாத சத்தத்தைத் தாங்க முடியாமல் எங்கேனும் தூர இடங்களுக்குப் பறந்து சென்றிருக்கலாம்.  சத்தத்தை அளக்கும் ஃபோனோ மீட்டர் வைத்து அளந்தால் ஏறத்தாழ 110 db (டெசிபல்) முதல் 140 db வரையுள்ள சத்தம் அங்கு ஒலித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  60 db முதல் 70 db வரை மனிதனுக்கு பிரச்சினை ஏற்படுத்தாதாம்.  அதற்கு மேல் உள்ள சத்தங்கள் செவிப்பறையைச் சேதப்படுத்துவது மட்டுமல்ல, இதயத் துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் கூட்டி ஆரோக்கியத்திற்கு பாதிப்பும் ஏற்படுத்துமாம்.  மட்டுமல்ல, பெண்களுக்கு கரு கலைதலும், அதையும் மீறி பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியப் பிரச்சினையும் உண்டாக்குமாம்.  இத்தகையத் தீங்குகளைப் பற்றித் தெரிந்துதான் அரசும் பொது இடங்களில் இது போன்ற ஒலி பெருக்கிகளை உபயோகிக்கத் தடை விதித்திருக்கிறது.  

இதில் அதிசயம் என்னவென்றால், பொது மக்கள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கும் இது போன்ற சம்பவங்களைக் கேட்டறிந்து, அங்கு சென்று முழு விபரமும் அறிந்து, பொது மக்களுக்கும், காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்து, இத்தகையச் சட்ட விரோத மற்றும் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் செயல்களை நடக்கவிடாமல் தடுக்க வேண்டிய செய்தித்தாளான மலையாள மனோரமாவும், உயர்மட்ட அளவில் மனித குலத்திற்கு இது போன்ற ஆபத்துகளை ஆராய்ந்து அறிந்து, அதிலிருந்து மீள உதவும் வழிவகைகளையும் கற்பிப்பதைத் தன் கடமையாகக் கருதும் நேரு குழும கல்வி நிறுவனங்களும் சேர்ந்து நடத்தும் இந்தப் 'பாலக்காடு ஃபெஸ்ட்' ல் நடக்கும் இந்தக் கொடுமையை அவர்கள் கண்டும் காணாமல், அறிந்தும் அறியாமல் இருப்பதுதான். இதைத்தான் நம் முன்னோர்கள் சொல்வார்களே, "படிப்பது பெரியபுராணம், இடிப்பது பரமசிவன் கோயில்" என்று, அது போல் இருக்கிறது. ஊருக்குத்தான் உபதேசம்.. உபதேசிக்கும் அவர்களுக்கல்ல, போலும்!!

22 கருத்துகள்:

  1. இந்தியாவில் சட்டங்களும் உபதேசங்களும் எளியவர்களுக்கே மற்றவர்களுக்கு அல்ல அதனால் உபதேசிப்பவர்கள் அதிகம் நம் நாட்டில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலதானே நம்ம நாடு உருப்படாம போகுது! தங்கள்கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  2. 'பாலக்காடு ஃபெஸ்ட்'யை நன்றாக சுற்றிக் காட்டினீர்கள் ,கடைசியில் கூறிய ஒலி மாசுப்பாடு விஷயம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிடக் கூடாது விரும்புகிறேன் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. ///படிப்பது பெரியபுராணம், இடிப்பது பரமசிவன் கோயில்"///
    மிகச் சரியாக கூறியுள்ளீர்கள். நன்றி நண்பரே
    த.ம.3

    பதிலளிநீக்கு
  4. எல்லா இடத்திலும் பணம் வேலை செய்யும் போது, மக்களைப் பற்றி அவர்களுக்கு நினைப்பேது...?

    பதிலளிநீக்கு
  5. //ஏறத்தாழ 110 db (டெசிபல்) முதல் 140 db வரையுள்ள சத்தம் அங்கு ஒலித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.//

    நுண்ணிய அவதானிப்பு...

    வியாபாரிகள் - விசமிகள்...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாபாரிகள் - விசமிகள்...
      இவர்கள் தானே நாட்டையேக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கின்றனர்!

      மிக்க நன்றி நைனா!

      நீக்கு
  6. அதுதானே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது! இல்லையா நண்பரே! மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  7. அதைச் சொல்லுங்கள்! மிகச் சரியே! மிக்க நன்றி! DD! அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. ஜி! உங்கள் சங்கை எடுத்துப் பத்திரமாக வைத்துள்ளோம்! சமயம் வரும்போது "உபதேசத்தை " உபயோகிக்கலாம் என்று! அட்வான்ஸ் நன்றி! ஜி!

    பதிலளிநீக்கு
  9. ஒலி மாசு அதிகரித்துதான் வருகிறது! யாரும் இதை தட்டிக்கேட்பது இல்லை! திருமண விழாக்களில் கூட உச்சஸ்தாயியில் கச்சேரி வைத்து கலங்கடிக்கிறார்கள்! எப்போதுதான் திருந்துவார்களோ? அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. // கைரேகை ஸ்கான் செய்து உடனடியாக எதிர்காலத்தை ரூ.100 க்கு, அச்சடித்து தரும் நவீன சோதிடர், வெறும் ரூ.1000 க்கு (!?)//
    ரசனையான வர்கள் சகோ !
    கண்காட்சியை கண்டுகளித்த திருப்தியை கடைசி செய்தி மாற்றிவிட்டது.
    இனியாவது அவர்கள் கவனம் செலுத்தவேண்டும்:(

    பதிலளிநீக்கு
  11. மிக்க நன்றி! நண்பர் சுரேஷ்! ஆம் உண்மைதான்! கோயில் திருவிழாக்களிலும் கூட, அமைதியாக இறைவனை வழிபடுவதை விட்டு ஒலி பெருக்கியை அலறவிடுதலும் நடக்கத்தான் செய்கின்றது! எப்போது மாற்றம் வரும்?! தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  12. நன்றி சகோதரி! கவனம் செலுத்துவார்களா?! பார்ப்போம்! ரசித்ததிற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. சிட்டுக்குருவி இனம் பெரு நகரங்களில் அழிந்து போனதைப் போல் தான் இதுவும்.. "பாழ"க்காடு ஃபெஸ்ட்...!!

    //உடனடியாக எதிர்காலத்தை ரூ.100 க்கு, அச்சடித்து தரும் நவீன சோதிடர்//
    //கொஞ்சம் தடுமாறினால், கையிலுள்ள பணம் காணாமல் போய் விடும்//
    ரசனையை ரசித்தோம்...!!

    போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனயை ரசித்ததற்கு ரொம்ப நன்றிங்க! "பாழ"க்காடு ஃபெஸ்ட் அட இது கூட நல்லாத்தான் இருக்கு!!

      நீக்கு
  14. வணக்கம்
    துளசிதரன்(அண்ணா)

    என்னதான் செய்ய முடியும் ஒரு சக்தி பக்கபலம் இருக்கும் வரை... இப்படிப்பட்டவர்கள் தங்களின் பையை நிறப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்....
    குலைத்து வரும் நாய்களுக்கு... ஒரு துண்டு.. விஸ்கட...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. நன்றி! ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கும், ஓட்டிற்கும்!






    பதிலளிநீக்கு
  17. பல நிகழ்ச்சிகளில் இப்படி அதிகமாய் சத்தம் செய்வது வழக்கமாகி விட்டது. தில்லி திருமணங்களில் இரவு 12 மணி வரை ஒரே பாட்டும் கூத்தும் தான்!

    பதிலளிநீக்கு
  18. ஆமாம் சரிதான்ங்க! இங்கும் கல்யாண்ங்களி, கோயில் திருவிழாக்களில், அரசியல் விழாக்களில் என்று ஒரே கூத்துதாங்க.....தலைநகரே அப்படியென்றால் இங்கு கேட்கணுமா?!!!!

    மிக்க நன்றி கருத்திற்கு!

    பதிலளிநீக்கு