“பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு”
எனும் பழமொழி வீண் மொழி ஆகிவிட்டதோ எனும் ஐயம் சில சம்பவங்கள் நிகழும் போது நமக்குத்
தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அப்படி அல்ல. ஒவ்வொரு குழந்தையையும் கை வளர்கிறதா, கால்
வளர்கிறதா? என்று ஆசையுடனும், பாசத்துடனும்தான் எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை
வளர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை
நல்லவர்களாக வளர்க்க, அவர்கள் அவ்வப்போது செய்யும் தவறுகளுக்குத் தண்டிப்பதுண்டு. அதன்
பின் அதற்காகக் கலங்குவதும் உண்டு. அவர்களுக்கு நல்ல கல்வி நல்கக் கஷ்டப்படுவதில் ஆனந்தப்படுவதுண்டு.
வேலை கிடைக்க இருப்பதையெல்லாம் விற்பதுண்டு. நல்ல மணவாழ்க்கை அமைத்துக் கொடுக்க வாழ்நாள்
முழுவதும் கடனாளியாய் வாழ்வதுமுண்டு. அதனால்தான் நாம் “பெத்தமனம் பித்து” என்கிறோம்.
தன் பிள்ளை ஒரு கொலையே செய்து வந்தாலும்
‘என் பிள்ளை அப்படியெல்லாம் செய்ய மாட்டான். எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது’ என்று
சொல்லி தன் பிள்ளைக்காகக் கடைசிவரை உள்ளதை எல்லாம் விற்று நீதிமன்றத்தில் போராடி அவனது
தண்டனையைக் குறைக்க ஓடுபவர்கள்தான் பெற்றோர்கள்.
அப்படிப்பட்ட பெற்றோர்கள்தான் ராஜனும்,
சின்னசாமியும், சாக்கோ ஜானும். ஆனால், தன் 22 வயதான மகள் ஆதிரை, பிரிஜோஷை மணக்கப் போகிறாள்
என்பதை அறிந்ததும், மலப்புரம் அரிக்கோடைச் சேர்ந்த ராஜன் ஒரு கொலைகாரனாகவே மாறிவிடுகிறார்.
அதுவும், தான் ஆசையாய் பாலூட்டி, சோறூட்டி வளர்த்த தன் மகளையே கொன்று!
வடகரையைச் சேர்ந்த பிரிஜேஷ் ஒரு
இராணுவ வீரன். அழகும், ஆரோக்கியமும், வாழத் தேவையான வருமானமும், ஒரு வேலையும் உள்ளவன்.
ஆதிராவுடன் பேசிப் பழகி அவளுக்கு நல்ல ஒரு துணையாவேன் என்று நிரூபித்தவன். அதைத்தான்
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஆதிரையும்
அவனிடமிருந்து எதிர்பார்த்தாள். ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு இறைவன்தான் மனிதகுலத்திற்கு’
என்று போதித்த ‘ஸ்ரீ நாராயணகுருவைப் போற்றும் கேரளத்தில் அவள் அவளது சாதிக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வீட்டாருக்கு அது மட்டும் பெரும் பிரச்சனை ஆனதும், ஆதிரைக்கு
அவ்வளவு பெரும் பிரச்சினை அல்லாத சாதிக்காக பிரிஜேஷைப் பிரியவோ அது போலவே பிரிஜேஷும்
சாதிக்காக ஆதிரையை இழக்கவோ தயாராக இல்லை. எனவே வீட்டாரின் எதிர்ப்பைப் புறக்கணித்து
இருவரும் உத்திரப்பிரதேசம் சென்று ஒன்றாக வாழத் தொடங்கிவிட்டார்கள். போலீஸ், புகார்
இப்படி சில மாதங்கள் கடந்தன.
காவல்துறை அதிகாரி, ராஜனுடன் பேசி
எப்படியோ அவர்கள் திருமணத்திற்கு ராஜனை சம்மதிக்க வைத்தும்விட்டார். அவரே பிரிஜேஷையும்,
ஆதிரையையும் வரவழைத்து ஒரு நாள் திருமணத்திற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். கல்யாண நாளுக்கு
முதல் நாள் ஆதிரை அவளது வீட்டிலும் பிரிஜேஷ் அவனது வீட்டிலும். ஒரு நாள் தானே அடுத்த
நாள் ஒன்றாவோம் என்ற எண்ணம் இருவருக்கும்.
ராஜன் திருமணத்திற்குச் சம்மதித்தது
உதட்டளவில் மட்டுமே என்பது மீண்டும் அவர் ஆதிரையை வீட்டில் மிரட்டத் தொடங்கியதும் அவளுக்குப்
புரிந்தது. ஆத்திரத்தில் ஆதிரையை நோக்கி ‘உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்றதும்தான்
சாதிவெறி தன் தந்தையை கொலைகாரானாக்கவும் தயங்காது என்பது அவளுக்குப் புரிந்தது. தன்னுயிரைக்
காத்துக்கொள்ள பக்கத்து வீட்டிற்கு ஓடி அங்கு அடைக்கலம் புகுந்தாள். அப்போதும், கத்தியுடன்
தன்னைக் குத்த வரும் ராஜனைப் பார்த்து, “என்னைக் கொல்லாதீர்கள் அப்பா” என்றாளே ஒழிய
“நான் பிரிஜேஷை மறந்துவிடுகிறேன்” என்று மட்டும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நிச்சயமாக
அவள் மரணத்திலிருந்து தப்பியிருப்பாள்.
தன் உயிரின் உயிரான மகளைக் கொல்கிறேனே
எனும் எண்ணத்தை விட பட்டியல் சாதிக்காரனோடு வாழப்போகும் இவளைக் கொல்லத்தான் வேண்டும்
எனும் எண்ணம்தான் அத்தந்தையின் மனதைக் கல்லாக்கி
கத்தியால் ஆதிரையைக் குத்தச் செய்து கொலைகாரனாக்கிவிட்டது. பசி வர பத்தும் பறந்து போகும்
என்பது போல் சாதி வர, பெற்று வளர்த்த பிள்ளை மேலுள்ள பாசமே பறந்துவிட்டது. இது போலதான்
சின்னசாமிமியும், என் மகள் கௌசல்யா பட்டியல் சாதியைச் சேர்ந்த சங்கருடன் வாழ்வதா? முடியாது. கூடாது. அங்கு கொல்லப்பட்டது
கௌசல்யா அல்ல சங்கர். இதே போலதான் சாக்கோ ஜானும்.
கிறித்தவ மதத்திலும் சாதியுண்டு
என்பதை உணர்த்திய சம்பவம் இது. உயர் சாதியிலிருந்து கிறித்தவ மதம் தழுவிய தன் மகள்
நீனா, பட்டியல் சாதியிலிருந்து கிறித்துவ மதம் தழுவிய கெவின் ஜோஸஃபை மணப்பதா? கூடாது.
அங்குக் கொல்லப்பட்டது கெவின். கேரளத்தில், ராஜன் என்பவர் ‘தீயா’ எனும் பிற்பட்ட சமூகத்தைச்
சார்ந்தவர். சின்னசாமிமியும் பிற்பட்ட சமூகத்தைக் சார்ந்தவர். ஆனால் சங்கரும், பிரிஜேஷும்
பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்.
சின்னசாமிமி மற்றும் சாக்கோ ஜான்
போல ராஜனுக்கும் கொஞ்சம் ஆள் பலமும், பண பலமும்
இருந்திருந்தால் கண்டிப்பாக பிரிஹேஷ்தான் கொல்லப்பட்டிருப்பார். பெரியாரும், ஸ்ரீநராயணகுருவும்
சாதியை ஒழிக்கப் போராடியது தமிழகத்திலும் கேரளத்திலும் உயர்ந்த சாதிகளுக்கும் பிற்பட்ட
சாதிகளுக்கும் இடையிலிருந்த இடைவெளியைக் குறைத்ததென்னவொ உண்மைதான்.
ஆனால், பிற்பட்ட சாதிக்கும் பட்டியல்
சாதிக்கும் இடையே உள்ள இடைவெளி குறையவே இல்லை என்பதைத்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள்
நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஒரு காலிலிருந்து ஆனைக்கால் வியாதி மறுகாலுக்கு மாறியது
போல், முற்பட்டவர்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி இல்லாமற் போன
அதே நேரத்தில், பிற்பட்டவர்களுக்கும் பட்டியல் சமூகத்தினருக்கும் இடையே இருந்த இடைவெளி
இல்லாமற் போவதற்குப் பதிலாக இடைவெளி பெரிதாகிவிட்டது.
ஆனால் இச்சம்பவங்களிலிருந்து ஓர்
உண்மை தெளிவாகிறது. ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு உள்ள சாதி வெறி அந்த அளவுக்குப்
புதிய தலைமுறைகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் காலப் போக்கில் இவை எல்லாம்
மாறலாம். இவற்றையெல்லாம் மாற்ற விடக் கூடாது என்பவர்களது எண்ணிக்கை கூடாதிருந்தால்
மட்டுமே அதற்குச் சாத்தியப்படும். அதற்கு இடையிடையே இதை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். காலம் எல்லாவற்றிற்கும்
மருந்தாகும்தானே! Time and patience will cure everything. காத்திருப்போம்.
பின் குறிப்பு : இம்மூன்று கொலை
வழக்குகளிலும் சின்னசாமிமியும், ராஜனும், சாக்கோ ஜானும் தண்டனையிலிருந்து தப்பியிருக்கிறார்கள்.
குற்ற உணர்வுடன் இனி அவர்களுக்குச் சிறைக்கு வெளியே வாழக் கிடைத்திருப்பது விடுதலை
என்று சொல்ல முடியாது. அது உண்மையிலேயே அவர்களுக்குக் கிடைத்த ஆயுள் தண்டனைதான். இவர்களைப்
போல் அல்லாது பிள்ளைகளின் ஆசைப்படி சாதி பாராது மணமுடித்து வாழ அனுமதித்த எத்தனையோ
புரட்சிக்காரர்களான பெற்றோர்கள் நம்மிடையே பேரக்குழந்தைகளின் சிரிப்பில் சந்தோஷமாக
வாழ்கிறார்கள் என்பதை நாம் இங்கு பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தே ஆக வேண்டும்.
-----துளசிதரன்