ஞாயிறு, 5 ஜூலை, 2020

கல்லாகும் பெற்ற மனங்கள் நடத்தும் கௌரவ கொலைகள்


“பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு” எனும் பழமொழி வீண் மொழி ஆகிவிட்டதோ எனும் ஐயம் சில சம்பவங்கள் நிகழும் போது நமக்குத் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அப்படி அல்ல. ஒவ்வொரு குழந்தையையும் கை வளர்கிறதா, கால் வளர்கிறதா? என்று ஆசையுடனும், பாசத்துடனும்தான் எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை வளர்த்து  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நல்லவர்களாக வளர்க்க, அவர்கள் அவ்வப்போது செய்யும் தவறுகளுக்குத் தண்டிப்பதுண்டு. அதன் பின் அதற்காகக் கலங்குவதும் உண்டு. அவர்களுக்கு நல்ல கல்வி நல்கக் கஷ்டப்படுவதில் ஆனந்தப்படுவதுண்டு. வேலை கிடைக்க இருப்பதையெல்லாம் விற்பதுண்டு. நல்ல மணவாழ்க்கை அமைத்துக் கொடுக்க வாழ்நாள் முழுவதும் கடனாளியாய் வாழ்வதுமுண்டு. அதனால்தான் நாம் “பெத்தமனம் பித்து” என்கிறோம்.

தன் பிள்ளை ஒரு கொலையே செய்து வந்தாலும் ‘என் பிள்ளை அப்படியெல்லாம் செய்ய மாட்டான். எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது’ என்று சொல்லி தன் பிள்ளைக்காகக் கடைசிவரை உள்ளதை எல்லாம் விற்று நீதிமன்றத்தில் போராடி அவனது தண்டனையைக் குறைக்க ஓடுபவர்கள்தான் பெற்றோர்கள்.

அப்படிப்பட்ட பெற்றோர்கள்தான் ராஜனும், சின்னசாமியும், சாக்கோ ஜானும். ஆனால், தன் 22 வயதான மகள் ஆதிரை, பிரிஜோஷை மணக்கப் போகிறாள் என்பதை அறிந்ததும், மலப்புரம் அரிக்கோடைச் சேர்ந்த ராஜன் ஒரு கொலைகாரனாகவே மாறிவிடுகிறார். அதுவும், தான் ஆசையாய் பாலூட்டி, சோறூட்டி வளர்த்த தன் மகளையே கொன்று!

வடகரையைச் சேர்ந்த பிரிஜேஷ் ஒரு இராணுவ வீரன். அழகும், ஆரோக்கியமும், வாழத் தேவையான வருமானமும், ஒரு வேலையும் உள்ளவன். ஆதிராவுடன் பேசிப் பழகி அவளுக்கு நல்ல ஒரு துணையாவேன் என்று நிரூபித்தவன். அதைத்தான் அரசு  மருத்துவமனையில் பணிபுரியும் ஆதிரையும் அவனிடமிருந்து எதிர்பார்த்தாள். ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு இறைவன்தான் மனிதகுலத்திற்கு’ என்று போதித்த ‘ஸ்ரீ நாராயணகுருவைப் போற்றும் கேரளத்தில் அவள் அவளது சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வீட்டாருக்கு அது மட்டும் பெரும் பிரச்சனை ஆனதும், ஆதிரைக்கு அவ்வளவு பெரும் பிரச்சினை அல்லாத சாதிக்காக பிரிஜேஷைப் பிரியவோ அது போலவே பிரிஜேஷும் சாதிக்காக ஆதிரையை இழக்கவோ தயாராக இல்லை. எனவே வீட்டாரின் எதிர்ப்பைப் புறக்கணித்து இருவரும் உத்திரப்பிரதேசம் சென்று ஒன்றாக வாழத் தொடங்கிவிட்டார்கள். போலீஸ், புகார் இப்படி சில மாதங்கள் கடந்தன.

காவல்துறை அதிகாரி, ராஜனுடன் பேசி எப்படியோ அவர்கள் திருமணத்திற்கு ராஜனை சம்மதிக்க வைத்தும்விட்டார். அவரே பிரிஜேஷையும், ஆதிரையையும் வரவழைத்து ஒரு நாள் திருமணத்திற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். கல்யாண நாளுக்கு முதல் நாள் ஆதிரை அவளது வீட்டிலும் பிரிஜேஷ் அவனது வீட்டிலும். ஒரு நாள் தானே அடுத்த நாள் ஒன்றாவோம் என்ற எண்ணம் இருவருக்கும்.

ராஜன் திருமணத்திற்குச் சம்மதித்தது உதட்டளவில் மட்டுமே என்பது மீண்டும் அவர் ஆதிரையை வீட்டில் மிரட்டத் தொடங்கியதும் அவளுக்குப் புரிந்தது. ஆத்திரத்தில் ஆதிரையை நோக்கி ‘உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்றதும்தான் சாதிவெறி தன் தந்தையை கொலைகாரானாக்கவும் தயங்காது என்பது அவளுக்குப் புரிந்தது. தன்னுயிரைக் காத்துக்கொள்ள பக்கத்து வீட்டிற்கு ஓடி அங்கு அடைக்கலம் புகுந்தாள். அப்போதும், கத்தியுடன் தன்னைக் குத்த வரும் ராஜனைப் பார்த்து, “என்னைக் கொல்லாதீர்கள் அப்பா” என்றாளே ஒழிய “நான் பிரிஜேஷை மறந்துவிடுகிறேன்” என்று மட்டும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நிச்சயமாக அவள் மரணத்திலிருந்து தப்பியிருப்பாள்.

தன் உயிரின் உயிரான மகளைக் கொல்கிறேனே எனும் எண்ணத்தை விட பட்டியல் சாதிக்காரனோடு வாழப்போகும் இவளைக் கொல்லத்தான் வேண்டும் எனும் எண்ணம்தான்  அத்தந்தையின் மனதைக் கல்லாக்கி கத்தியால் ஆதிரையைக் குத்தச் செய்து கொலைகாரனாக்கிவிட்டது. பசி வர பத்தும் பறந்து போகும் என்பது போல் சாதி வர, பெற்று வளர்த்த பிள்ளை மேலுள்ள பாசமே பறந்துவிட்டது. இது போலதான் சின்னசாமிமியும், என் மகள் கௌசல்யா பட்டியல் சாதியைச் சேர்ந்த  சங்கருடன் வாழ்வதா? முடியாது. கூடாது. அங்கு கொல்லப்பட்டது கௌசல்யா அல்ல சங்கர். இதே போலதான் சாக்கோ ஜானும்.

கிறித்தவ மதத்திலும் சாதியுண்டு என்பதை உணர்த்திய சம்பவம் இது. உயர் சாதியிலிருந்து கிறித்தவ மதம் தழுவிய தன் மகள் நீனா, பட்டியல் சாதியிலிருந்து கிறித்துவ மதம் தழுவிய கெவின் ஜோஸஃபை மணப்பதா? கூடாது. அங்குக் கொல்லப்பட்டது கெவின். கேரளத்தில், ராஜன் என்பவர் ‘தீயா’ எனும் பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். சின்னசாமிமியும் பிற்பட்ட சமூகத்தைக் சார்ந்தவர். ஆனால் சங்கரும், பிரிஜேஷும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்.

சின்னசாமிமி மற்றும் சாக்கோ ஜான் போல ராஜனுக்கும் கொஞ்சம் ஆள் பலமும், பண  பலமும் இருந்திருந்தால் கண்டிப்பாக பிரிஹேஷ்தான் கொல்லப்பட்டிருப்பார். பெரியாரும், ஸ்ரீநராயணகுருவும் சாதியை ஒழிக்கப் போராடியது தமிழகத்திலும் கேரளத்திலும் உயர்ந்த சாதிகளுக்கும் பிற்பட்ட சாதிகளுக்கும் இடையிலிருந்த இடைவெளியைக் குறைத்ததென்னவொ உண்மைதான்.

ஆனால், பிற்பட்ட சாதிக்கும் பட்டியல் சாதிக்கும் இடையே உள்ள இடைவெளி குறையவே இல்லை என்பதைத்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஒரு காலிலிருந்து ஆனைக்கால் வியாதி மறுகாலுக்கு மாறியது போல், முற்பட்டவர்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி இல்லாமற் போன அதே நேரத்தில், பிற்பட்டவர்களுக்கும் பட்டியல் சமூகத்தினருக்கும் இடையே இருந்த இடைவெளி இல்லாமற் போவதற்குப் பதிலாக இடைவெளி பெரிதாகிவிட்டது.

ஆனால் இச்சம்பவங்களிலிருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு உள்ள சாதி வெறி அந்த அளவுக்குப் புதிய தலைமுறைகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் காலப் போக்கில் இவை எல்லாம் மாறலாம். இவற்றையெல்லாம் மாற்ற விடக் கூடாது என்பவர்களது எண்ணிக்கை கூடாதிருந்தால் மட்டுமே அதற்குச் சாத்தியப்படும். அதற்கு இடையிடையே இதை எதிர்த்துக் குரல் கொடுத்துக்  கொண்டே இருக்க வேண்டும். காலம் எல்லாவற்றிற்கும் மருந்தாகும்தானே! Time and patience will cure everything. காத்திருப்போம்.

பின் குறிப்பு : இம்மூன்று கொலை வழக்குகளிலும் சின்னசாமிமியும், ராஜனும், சாக்கோ ஜானும் தண்டனையிலிருந்து தப்பியிருக்கிறார்கள். குற்ற உணர்வுடன் இனி அவர்களுக்குச் சிறைக்கு வெளியே வாழக் கிடைத்திருப்பது விடுதலை என்று சொல்ல முடியாது. அது உண்மையிலேயே அவர்களுக்குக் கிடைத்த ஆயுள் தண்டனைதான். இவர்களைப் போல் அல்லாது பிள்ளைகளின் ஆசைப்படி சாதி பாராது மணமுடித்து வாழ அனுமதித்த எத்தனையோ புரட்சிக்காரர்களான பெற்றோர்கள் நம்மிடையே பேரக்குழந்தைகளின் சிரிப்பில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை நாம் இங்கு பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தே ஆக வேண்டும். 

-----துளசிதரன்


41 கருத்துகள்:

  1. பழைய நினைவுகள் பெற்றோர்களிடம் பாறையில் பதியும் சிப்பிபோல பதிந்துள்ளது.

    நிமிடத்தில் நடந்த, நடத்திய கொலையினால் இழப்பைத் தவிர ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு வருந்தத்தான் அவர்களுக்கு விடுதலை கிட்டியதோ என்னவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிமிடத்தில் நடந்த, நடத்திய கொலையினால் இழப்பைத் தவிர ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு வருந்தத்தான் அவர்களுக்கு விடுதலை கிட்டியதோ என்னவோ//

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள் நெல்லைதமிழன். செய்திகளை வாசித்த போது எனக்கும் இப்படித்தான் தோன்றியது.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  2. என்ன சொல்வது! இப்படியான வெறியர்கள் இருக்கும்வரை அரசால் கூட எதுவும் செய்ய முடியாது. கேரளத்திலும் இருப்பது தான் ஆச்சரியமான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம் இது போன்ற கொலைகள் வட இந்தியாவில் நடந்ததைப் பற்றி செய்தி படித்திருக்கிறோம். இப்போது தென்னகத்திலும் இடையிடையே நடக்கிறது. காணும் போது வேதனைதான். சிந்திக்கையில் மனதில் தோன்றுவதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஔவையாரின் காலம் தொட்டே சாதி ஒழிப்பு பற்றிய பேசசு இப்பொதும் பேச்சளவில்தான், சட்டங்களும் ஏட்டள்வில்தான். ஒற்றுமையான வாழ்விற்கு உதவும் சாதியும், மதமும் இத்தகைய வேற்றுமைகளைக் காரணமாக்கி பெற்ற பிள்ளைகளைக் கொல்லுமளவுக்குப் போகும் நிலைமை கண்டு ஆதங்கத்தால் வெளிவந்த வார்த்தைகள். தவிர்க்க முடியவில்லை.

      மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்

      துளசிதரன்

      நீக்கு
  3. சாதி மீது அதீதப் பற்று கொண்ட இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் சிலர் உயர் சாதிப் பெண்களைத் (சமூகெ் கட்டமைப்பின்படி) துரத்திக் காதலிப்பதையும் பார்த்திருக்கிறேன். அப்போ அவர்களுக்கு சாதிப்பற்று மறைந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அப்படியும் இருக்கிறதுதான், நெல்லைத்தமிழன்.

      மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  4. இந்த சாதி வெறி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்துவிட்டது ஆனால் இன்னும் கெளரவக் கொலைகள் மட்டும் இங்கு வந்து சேரவில்லை அதையும் கூடிய சீக்கிரம் இங்கு எதிரப்பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாதி வெறி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்துவிட்டது// - அது எப்படி வராமல் இருக்கும் மதுரைத்தமிழன்? இங்க உள்ள ADULTதானே அங்க போயிருக்காங்க. அவங்களோட மூணாவது ஜெனெரேஷன்ல நிச்சயமா சாதி வெறி இருக்க வாய்ப்பில்லை. மத்தபடி இந்த ADULT அப்பா, அம்மா, தன் பசங்கள்ட, 'இவங்ககிட்ட சேராதே..இவங்களை ஃப்ரண்ட்ஸா வச்சுக்காதே' என்று சொல்லித்தானே வளப்பாங்க. ஆனாலும் பசங்க ஜெனெரேஷன்ல 50% இந்த எண்ணம் இருக்காது. அவங்களுக்கு திருமணம் ஆனபிறகு வரும் ஜெனெரேஷன் அமெரிக்கனாக இருப்பாங்க. அப்போ இந்த மாதிரி எண்ணமே வராது என்றுதான் நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    2. மதுரைத்தமிழன் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      வெளிநாடுகளில் இது போன்ற கௌரவக் கொலைகள் நடக்க வாய்ப்பில்லைதான். ஆனால் இங்கிருந்து சென்றவர்கள் கொஞ்சம் சொல்லிக் கொண்டிருக்கலாம். அடுத்த தலைமுறை as they are more AmericanS than IndianS என்பதால் இங்கிருந்து போனவர்கள் ஒன்றும் சொல்ல முட்யாத வாய்ப்பு அதிகம். இதையெல்லாம் நாங்கள் ஊகிக்கத்தான் முடியும். உங்களைப் போன்ரவர்கள்தான் நேரில் கண்டும் கேட்டும் அவற்றைப் பற்றிச் சொல்ல முடியும்.

      துளசிதரன்

      நீக்கு
  5. ஆணவக்கொலைகள். தன் பேச்சை கேட்கவேண்டும் என்கிற ஆணவம் தான் கொலை செய்ய வைக்கிறது.உலகம் இயங்கும் வரை காதலும் இருக்கும் சாதிகளும் இருக்கும்.இந்தத் தலைமுறையினர் சாதி பார்க்காதவர்கள் என்றால் மிகக்குறைந்த சதவீதமே.கொலை செய்தவர்கள் தண்டனை பெற்றாலே பெருமை கொள்வர்.விடுதலையானால் இன்னும் ஆணவம் தான் கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க் நன்றி சகோதரி நஸ்ரத் சலீம். உங்கள் கருத்திற்கு

      சாதியும் மதமும் பார்க்கையில் காதலித்துக் கல்யாணம் செய்பவர்கள் மிகக் குறைந்த சதவீதமே. அதற்குக் காரணம் நம் சமூகக் குடும்பச் சூழல்கள்தான். பெற்றோர்களுக்கும் பிடித்த ஒரு வாழ்க்கைத்துணைதான் நல்லது எனும் எண்ணம் பெரும்பான்மையான ஆண்களும் பெண்களுக்கும். அதனாலேயே ஆண் பெண் உறவுகள் நட்பளவில்தான். இத்தலைமுறையில் இளையவர்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட்டுக் கொண்டிருக்கின்றன. அது வேறு ஒரு ரீதியில் கலக்கத்தைத் தருகிறது.

      துளசிதரன்

      நீக்கு
  6. அதுதான் உ.பி.யில் சேர்ந்து வாழ்ந்து விட்டார்களே.. இனி அவர்களை பிரித்து என்ன ஆகப்போகிறது ?

    ஜாதிவெறி ரத்தத்தில் ஊறி விட்டது இன்னும் இரண்டு தலைமுறை மறைந்தால் சற்று குறையலாம் ???

    ஆனால் காதல் என்றுமே அழிவதில்லை.

    மகள் இறந்து விட்டாள்
    தந்தை சிறையில்
    அவன் தனிமரம்

    சாதியை ஒழிப்பதற்கு நாம் வாழ்கிழிய பேசுகிறோம் ஆனால் அரசே சாதிச் சான்றிதழ் தருகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதிச் சான்றிதழ் இல்லாமல் ஒதுக்கீடு கொடுக்க முடியாது. நாளை இன்னொரு சாதியையும் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிராக்கெட்டுக்குள் கொண்டுவரவேண்டுமானால் வேறு எப்படி அரசு செய்யும்?

      சாதிவெறி குறைய, மறையவேண்டுமானால், மெட்ரோபாலிடன் சிட்டி ஆகவேண்டும். மும்பையில், எனக்குத் தெரிந்து, சாதி என்பது பெரிய அளவில் இல்லை. ஆனா பிரச்சனை என்னன்னா, சாதித் தலைவர்கள்/கட்சிகள் உருவாவதுதான்.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன், சாதிவெறி குறைய, மறையவேண்டுமானால், மெட்ரோபாலிடன் சிட்டி ஆகவேண்டும். மும்பையில், எனக்குத் தெரிந்து, சாதி என்பது பெரிய அளவில் இல்லை. ஆனா பிரச்சனை என்னன்னா, சாதித் தலைவர்கள்/கட்சிகள் உருவாவதுதான்.//

      மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் நெல்லைதமிழன். ஆம் குடிபெயர்ந்து நகரங்களில், பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாழும் சூழல்களில் கண்டிப்பாக சாதி மதம், இனம், மொழி இவைகளை மறந்து காதலும் கல்யாணமும் நடக்க வாய்ப்புண்டு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க நாடுகளிலெல்லாம் நூற்றாண்டுகளுக்கு மமுன்பு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறிய மக்கள் இனம், மொழி மறந்து ஒன்றானது அப்படித்தான். பின் நம் நாட்ட்டின் சாபம் என்பது சாதிக்கட்சிகல்தான். அதை ஒழிக்க சாதிகள் அப்பாற்பட்ட தலைவர்கள் வேண்டும். அது நடந்தால் நல்லது.

      துளசிதரன்

      நீக்கு
    3. கில்லர்ஜி மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு

      //சாதியை ஒழிப்பதற்கு நாம் வாழ்கிழிய பேசுகிறோம் ஆனால் அரசே சாதிச் சான்றிதழ் தருகிறதே...//

      அது தரும் சான்றிதழ் இந்தியக் குடியுரிமை சட்டத்தின் படி சமுதாய மற்றும் பொருளாதார ரீதியில்பின்தள்ளப்பட்டவர்களுக்கு. அவர்களை சமுதாய அம்ற்றும் பொருளாதார ரீதியில் மற்றவர்களுக்கும் இணையாக ஆக்கத் தேவயான கல்வி மற்றும் பொருளாதார உதவிக்காகத் தரப்படுவது. கடந்த 50 ஆண்டுகளில் முற்பட்டவர்களிலும் பொருளாதார ரீதியில் பின்னடைந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார உதவிக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதே போல் பிற்பட்டவர்களில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கலுக்கு கல்வி, வேலை மற்றும் பொருளாதார உதவி இப்போது அனுமதிக்கப்படுவதில்லை. நாளடைவில் சாதிகள் பொருளாதார அடிப்படையில் ஆக வாய்ப்புண்டு. அதுவரை பள்ளிச் சான்றிதழ்கள் சாதியை சார்ந்தே ஆக வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிச் சான்றிதழில் அப்பாவின் பெயர் தேவையில்லாத ஒன்று என்று தீர்மானித்தது போல், நம் நாட்டிலும் சாதி தேவையில்லாத எனும் நில்லை ஒரு காலத்தில் வரும் என்று நம்புவோம்.

      துளசிதரன்

      நீக்கு
  7. // சாதி வெறி அந்த அளவுக்குப் புதிய தலைமுறைகளுக்கு இல்லை //

    இல்லாமலே போகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் டிடி அடுத்த தலைமுறகளுக்கு இல்லாமல் போனால் நல்லதே.

      கொலை வெறி போன்றவை இல்லாமல் இருந்தாலே நல்லது.

      டிடி, மிக்க நன்றி கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  8. முன்பு ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் இன்னும் கோபமாக இருக்கும் பெற்றோர், சாந்தமான பெற்றோர் இவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் 70 வயதான ஒருவர் சொன்னார். என் பெண் காதல் திருமணம் செய்தபோது, அதற்கு நான் பயங்கரமா எதிர்ப்பு தெரிவித்தேன். பையனை ஆள்வைத்து அடிக்க என்றெல்லாம் நடந்தது. ஆனால் பிற்காலத்தில் நான் செய்ததெல்லாம் தவறு என்று உணர்ந்தேன். இப்போ அவங்க வீட்டுலதான் இருக்கேன். மருமகன் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கொள்கிறார் என்று நெகிழ்ந்தார்.

    ஒன்று காதல் திருமணத்தை ஒத்துக்கொள்ளணும், இல்லைனா, உறவை விலக்கிவிட்டுவிடவேண்டும். மற்றபடி, extremeக்குச் செல்வது தகாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கு.

      பொருத்தார் பூமி ஆள்வார் என்பது எவ்வளவு உண்மை! அந்த 70 வயதுப் பெரியவர் சொன்னது அவரது அனுபவம். கொஞ்சம் பொருத்திருந்தால், ராஜனும், சின்ன சாமியும் , சாக்கோஜானும் கண்டிப்பாக அதைச் சொல்லும் ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கும் கிடைத்திருக்கும். ஆனால் இனி அவர்கள் சொல்லப் பொவது 'நான் அந்தக் கொடும் பாவத்தைச் செய்து என் வாழ்வை பாலைவனமாக்கி விட்டேன்' என்பதாகத்தான் இருக்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  9. ஜாதிவெரி இத்தலைமுறையில் குறைந்தாலும், வேலையில் உருவாகும் லாபவெறி மற்றும் பணிச்சூழலில் நடக்கும் போட்டிகள், புது மாதிரியான குழு மணப்பாண்மையையும் குற்றங்களுக்கும் வித்திட்டுக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அரவிந்த உங்களின் கருத்திற்கு.

      உங்கள் கருத்தில் சொல்லியபடியும் தற்போது நடப்பதாக அறிகிறேன். புதுவிதமாகத் தெரிகிறது.

      துளசிதரன்

      நீக்கு
  10. சாதிகள் அழிவதில்லை! வெளியே எல்லாம் ஒன்று என்று மேடையில் பேசும் பலர் வீட்டில் சாதி பார்ப்பதை நிறையவே பார்க்க முடிகிறது.

    ஆணவக் கொலைகள் வடக்கே நிறையவே உண்டு. பல வெளியே தெரிவதே இல்லை. பஞ்சாயத்துகளிலே (காப் பஞ்சாயத் என்று இங்கே இதை அழைப்பார்கள்) இந்த வழக்குகள் முடிந்து விடுகின்றன. காவல்துறை வரை வருவதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட்ஜி. சாதியில்லை, சாதி வேண்டாம் என்றெல்லாம் பேசவோ எழுதவோ செய்யுமளவுக்கு நடைமுறையில் எளிதல்ல அதைக் கடைப்பிடிக்க. அதற்கு ஒரு அவசியம் ஏற்பட்டாலொழிய அதைப் பற்றி பேசப்படுவது கூட இல்லை. திருமணம் என்று வந்துவிட்டால் சாதியும் மதமும் அதனுடன் இணைந்தே நிற்கும். காதலும் வந்தால் பிரச்சனைதான். அத்தகைய சூழலில் முன்பெல்லாம் 'எனக்கு அப்படி ஒரு பிள்ளை இல்லை' என்று ஒதுக்கு விடுவார்கள். இப்போது இங்கும் வட இந்தியா போல் சாதி பஞ்சாயத்து போல் குடும்பத்தினர் கூடிப் பேசி பேசி கொலையே செய்து விடுகிறார்கள். இங்கும் நீதிமன்றத்தில் வழக்காடி சாட்சிகளை முன்பு அவர்கள் சொல்லியதை மற்றிச் சொல்ல வைத்து தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள். இதையெல்லாம் காணும் இளைஞர்கள் நாளடைவில் இது போல் காத்லுக்காக ஏன் உயிரை விட வேண்டும்? சாதி பார்த்துக் காதலித்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வோமே என்று நினைக்கவும் தவிர்க்கவும் வாய்ப்புண்டு!!

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  11. தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இது போன்ற கொலைகளை.
    சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி அப்படி சொன்னால் பாபம் என்றார்.

    பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி வைத்துவிட வேண்டியதுதானே, குழந்தைகளை இப்படி கொன்று என்ன சாதித்து விட்டார்கள்?

    எப்போது உணருவார்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      //சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி அப்படி சொன்னால் பாபம் என்றார்.//

      எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.

      //பிடிக்கவில்லை என்றால் ஒதுக்கி வைத்துவிட வேண்டியதுதானே, குழந்தைகளை இப்படி கொன்று என்ன சாதித்து விட்டார்கள்?//

      ஆம் முன்பெல்லாம் அப்படித்தானே நடந்திருந்தன. சமீபகாலங்களில்தான் இது போன்ற கொலைகள். வேற்றுமைகள் அதிகம் முளைத்துவிட்டன.

      துளசிதரன்

      நீக்கு
  12. இது போன்ற சாதி வெறி சம்பவங்கள் நிகழாமல் இருக்க நிறைய அடிப்படை மன மாற்றம் தேவை . அது ஒன்றே தான் தீர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அத்தகைய மனமாற்றம் வரும். பக்குவமடைந்த பெற்றோர்கள் உண்மையிலேயே முதலில் சிறிது மனம் வருந்தினாலும் பிற்காலத்தில் சந்தோசத்துடனும் சமாதானத்துடனும் வாழ்வார்கள்தான்.

      மிக்க நன்றி சகோதரி அபயா அருணா

      துளசிதரன்

      நீக்கு
  13. கண்டிப்பாக சரி என்று சொல்லவில்லை , பிள்ளைகளின் நிதானமின்னமையும் தெளிவில்லை சிந்தனை ஓட்டமும் சிக்கல்களை வரவேற்கின்றன. பக்குவமாக செயல்படுதல் , பெற்றோரின் மன நிலைமையில் இருந்து யோசித்துபார்த்து செயல்படுதல் மிக மிக அவசியம். பெற்றோரும் பழைய காலம்போல ஜாதி மதம் அந்தஸ்துகளை தங்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்தவேண்டியதும் அவசியம்.

    மனம் கனக்கிறது இதுபோன்ற செய்திகளை அறியும்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகளின் நிதானமின்னமையும் தெளிவில்லை சிந்தனை ஓட்டமும் //

      ஆம் மிக மிக அவசியம். ஒருவிதத்தில் இளங்கன்று பயமறியாது என்பது பொல் இளம் காதலர்கள் சமூகத்தின் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளைச் சட்டை செய்யாமல் எடுக்கும் முடிவுகள்தான் முக்கியமான காரணம். ஆனால் அவர்களை அத்தகையச் சூழல்களில் சிக்காதிருக்க பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவிட்ட்டால் அது தவிர்க்க முடியாத ஒன்றாகப் பிள்ளைகளுக்கு
      தோன்றிவிட்டால், பெற்றோர் பிற அந்தஸ்துகளை மறந்து தங்களது மற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக அவர்களைச் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை மனதில் கொண்டு அவர்களுக்குப் பெற்றோர் செய்யத் தேவையான கடமைகளைச் செய்யத் தவறவிடக் கூடாது. இல்லையே ஒதுங்கி இருக்கலாம். இப்படிக் கொலை செய்வதை விட இரு தரப்பினரும் நிம்மதியாகவேனும் வாழ இயலும்.

      மிக்க நன்றி கோயில்பிள்ளை உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  14. கேரளாவிலுமா?  சாதி வெறி இளைஞர்களிடம் கம்மியாகவும் அவர்களுக்கே வயதாகும்போது அவர்களிடமும் தோன்றக்கூடியது.  ஏனோ இந்நிலை.  வடநாட்டிலும் இது அதிகம் என்பது வெங்கட்டின் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம்ஜி! சமீபகாலத்தில் இரண்டு சம்பவங்கள். முன்பெல்லாம் இது போன்ற காதலர்கள் சில காலம் தூர தேசங்களில் வாழ்ந்த பின் பகை மாறி எப்போதாவது தொடர்பு கொண்டு வாழ்வதைப் பற்றிக் கேள்விப்பட்டுருக்கிறேன். நேரில் கண்டுமிருக்கிறேன். ஆனால் இப்போது அப்ப்டியில்லை. சாதிக்கும் மதத்திற்கும் இடையே இடைவெளி நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  15. மேடையில் சமத்துவம் பேசும் பலர் தங்களுக்கென்று வரும்போது என்ன செய்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.  இதை ஒழிப்பது மிகவும் கடினம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சமத்தும் சாதி மத பேதமின்மை போன்றவற்றைப் பேசுவது எளிது. நடைமுறையில் கொண்டுவருவது எல்லோருக்கும் எளிதல்ல. ஆனால் 'தென்னாட்டவரின் ஈசா போற்றி என்நாட்டவரின் இறையே போற்றி' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்வதோடு நின்றுவிடாமல் சாதி வேற்றுமை, மதசார்பின்மை போன்றவற்றை உறுதியாகக் கடைபிடிக்கும் குடியுரிமைச் சட்டமுள்ள இந்தியக் குடியரசில் இது சாத்தியமல்லாமல் போகும் நிலை பரிதாபத்திற்குரியது.

      மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  16. எழுத்து ரொம்பவே போல்டாக வந்திருக்கு! கொஞ்சம் ஒட்டியும் வந்திருக்கு. காலையிலேயே சொல்ல நினைச்சு முடியலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நான் தானே இனுக் பதிவுகள் துளசியின் பதிவுகளும் அவர் எழுதி அனுப்புவதை தட்டச்சு செய்கிறேன். அது வேறொரு எழுத்துரு முயற்சி செய்ததில் வந்த வினை! சரியா வரலை. ஹா ஹா ஹா ஹா. எங்கள் ப்ளாகில் மட்டுமே நான் தேர்வு செய்த எழுத்துரு தெரிகிறது. மற்றவர்களுக்கு அது வேறு வடிவில் பெரிதாகத்தெரிகிறது.

      நான் பழையபடியே டைப் பண்ண முடிவு செய்துவிட்டேன்.

      அது ஹெச்டிஎம்எல் ல போய் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும் கில்லர்ஜியிடம் தெரிந்து கொண்டேன். ஆனால் அது நிறைய டைம் எடுக்கிறது எனவே பழைய முறைப்படியே எழுத முடிவு செய்துவிட்டேன். நேரம் இருப்பதே கஷ்டமாக இருக்கு.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  17. வேதனைதான்
    எழுத்துரு மிகவும் பெரியதாக இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கரந்தையாருக்கு உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      சகோ பார்க்கிறேன். துளசியின் பதிவை தட்டச்சு செய்வதற்கு வேறு ஒரு எழுத்துரு முயற்சி செய்தேன். எழுத்துரு சைஸ் பார்க்கிறேன். மிக்க நன்றி இங்கு சொன்னமைக்கு.

      கீதா

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    சாதி வெறி சம்பவங்கள் மனதை உலுக்குகின்றன. ஈவு இரக்கமின்றி தாங்கள் பெற்ற குழந்தைகளை கொலைகள் செய்து விட்டு அதன் பின் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். இழந்ததை மீண்டும் பெற முடியுமா? காலம் முழுக்க அவர்களுக்குள் வருத்தங்களை மட்டும் சுமக்கும் போது சாதிகள் வந்து ஆறுதல் தருமா? என்னவோ.. இப்படியான செய்திகளை படிக்கும் நம்மையும் இவ்வருத்தங்கள் பின் தொடர்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்கள் கருத்திற்கு

      //இழந்ததை மீண்டும் பெற முடியுமா? காலம் முழுக்க அவர்களுக்குள் வருத்தங்களை மட்டும் சுமக்கும் போது சாதிகள் வந்து ஆறுதல் தருமா? //

      கண்டிப்பாகப் பெற்ற பிள்ளைகளையோ, பிள்ளையின் வாழ்க்கைத் துணையையோ கொன்றபின் எப்படி நிம்மதியாக வாழ்வது? அது நம்மையே கொல்வதற்குச் சமம் தானே?

      துளசிதரன்

      நீக்கு
  19. நீங்கள் சொல்வது போல் பிற்படுத்தவர்களுக்கும் பட்டியல் இனத்தவருக்கும் உள்ள இடைவெளியே மிக அதிகம்...அவர்களுக்குள் நேரும் இதுபோன்ற பிரச்சனைகளும் மிக மிக அதிகம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு ரமணி சார் கருத்திற்கு.

      என்ன செய்வது? சொல்லி ஆதங்கப்படத்தான் முடிகிறது. இது பொன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்கிறது.

      துளசிதரன்

      நீக்கு