சனி, 9 நவம்பர், 2013

சட்டம் சுடுகிறதே! கைவிட்டு விடும்போல் தெரிகிறதே!!





“லல்லு ப்ரசாத் யாதவ் ஜெயிலில்.  அவருக்கு என்ன வேலை தரலாம் என்று அதிகாரிகள் யோசித்து, லாலு, சட்டம் படித்தவர் என்பதால் மற்ற கைதிகளுக்கு பாடம் சொல்லித் தரும் பணியை அவருக்குத் தரலாம் என தொடக்கத்தில் நினைத்தனராம். ஆனால், கைதிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பால், லாலுவுக்கு பாதுகாப்பு பிரச்சனை வரலாம். மேலும், லாலு அவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறார் எனப் புகார்கள் வரவும் வாய்ப்புண்டு. எனவே, செடிகளுக்கு நீர் ஊற்றும் பணியை அவருக்குத் தந்ததாகச் செய்தி.

சட்டம் படித்தவரே இப்போது ஜெயிலில்.!!  அப்படி இருக்க அவர் எப்படி கைதிகளுக்குப் பாடம் கற்பிக்க முடியும்?!  ஒருவேளை சட்டம் படித்திருப்பதால் அதில் உள்ள ஓட்டைகளைப் புரிந்து கொண்டு தப்பித்துவிடலாம் என்பதால் ஊழல்கள்?  ஆனால் அதே சட்டம்தானே அவரை இன்று ஜெயிலில் போட்டிருக்கிறது என்று நீங்க கேக்கலாம்....அடேயப்பா என்ன ஒரு புத்திசாலித்தனமான கேள்வி!....Good Question… அப்படி எல்லாம் நடந்திருச்சுனா நம்ம நாடு எங்கேயோ போயிருக்கும்ல... அவர் இன்று உள்ளே இருப்பது சட்டம் தன் கடமையை செய்ததால் அல்ல......அரசியல் காரணங்களினால், விரோதங்களினால் தான்.......அரசியலப்பா...அரசியல்! அது சரி, இவரு பாடம் கற்பித்தால் அந்தச் சட்டத்தினால் எப்படித் தப்பிக்கலாம்னு சொல்லிக் கொடுப்பாரோ?!!!


அது போகட்டும், லல்லு மட்டுமா என்ன? எத்தனையோ அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்கி ஜெயிலுக்குப் போனதுண்டு. சமீபத்தில் 2G ஊழல், குவாரி  ஊழல் இப்படி பல. நாம் அறியாததா என்ன? போனமா, வந்தமா என்று வெளியில் வந்தவர்களும் உண்டு. பெயர் அடிபட்டாலும் ஜெயிலுக்குப் போகாதவர்களும் உண்டு. பெரிய ஊழல், கொலைகள் செய்யும் நபர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட, வறுமையில், அன்றாடம் காய்சிகளாக, பசியின் கொடுமையால், ஏதோ ஒரு கணத்தில் திருடுபவர்கள் ஜெயிலில். அதைவிடக் கொடுமை எந்தத் தவறுமே செய்யாத பலர் ஜெயிலில் இருக்க நிஜக் குற்றவாளிகள் வெளியில் உல்லாசமாக.  நலிந்தவர்களுக்கு ஒரு சட்டம்; வலியோருக்கு ஒரு சட்டம். இப்படிக் குற்றமே செய்யாதவர்கள் ஜெயிலுக்குப் போய் பல வருடங்கள் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, வருடங்களுக்குப் பிறகு நிரபராதிகள் என்று தீர்ப்பு எழுதப்பட்டு வெளியில் வருவது எவ்வளவு கொடூரமானது? எத்தனை வருடங்கள் அவர்களது வாழ்வில் இழப்பு! குடும்பத்திலிருந்து பிரிந்து, மன வேதனை. நிரபராதி என்று சட்டம் தீர்ப்பு சொல்லும் முன்போ, சொல்லும் சமயமோ அந்த நிரபராதி ஜெயிலிலேயே இறப்பதும் உண்டு.

இந்த இடத்தில், லியோ டால்ஸ்டாயின் ஒரு அருமையான கதை நினைவுக்கு வருதிறது. “GOD SEES THE TRUTH, BUT WAITS”.  கதையின் நாயகன் அக்ஸியோனோவ், அவன் செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக, அவன் பையில் ரத்தக் கறை படிந்த ஒரு கத்தி இருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு, அவன் தான் குற்றவாளி என்று சட்டம் அவனை ஜெயிலில் தள்ளுகின்றது.  26 வருடங்கள் ஜெயில் வாழ்க்கை. ஜெயிலிலும் நல்லவனாகவே இருக்கிறான். ஜெயில் அதிகாரிகளுக்கும் அவனைப் பிடித்து விடுகின்றது.  என்ன பிரயோஜனம்?  சில வருடங்களில் ஜெயிலுக்கு புது குற்றவாளிகள் வரும்போது அதில் ஒருவனாக வரும் மாகர்செமியோனிச்சும் இவனுடைய ஊராக இருப்பதால் அவனுடன் பேசும் போது அவன் தான் உண்மையானக் கொலைக் குற்றவாளி என்பதைத் தெரிந்து கொள்கிறான். கோபம் வருகிறது. ஆனால், பிரார்த்தனை செய்து மனதை அடக்குகிறான். இனி வெளியில் போயும் பயன் இல்லை என்பதால். மாகர் ஜெயிலில் இருந்து தப்பித்துச் செல்ல மண்ணைத் தோண்டி வழி உண்டாக்குகின்றான்.  ஜெயில் அதிகாரிகளுக்கு இது தெரியவர, அந்த மண்ணைத் தோண்டியது யார் என்று அறிய, நேர்மையான அக்ஸியோனோவிடம் அது பற்றி விசாரிக்கின்றனர். ஆனால், அவனுக்கு அது மாகர் தான் என்று தெரிந்திருந்தாலும் காட்டிக் கொடுக்கவில்லை. இதை அறிந்த மாகருக்குக் குற்ற உணர்வு வந்து அவன் அக்ஸியோனோவிடம் மன்னிப்புக் கோரி, தன் குற்றத்தை அதிகாரிகளிடம் ஒப்புக் கொள்ளப் போவதாகவும், அதனால் அக்ஸியோனோவ் விடுதலையாகலாம் என்றும் கூறுகிறான்.  ஆனால், அக்ஸியோனோவ் மறுத்துவிடுகிறான்.  மனைவி இறந்தாயிற்று, குழந்தைகளுக்கு அவனை நினைவு இல்லை என்று இருக்கும் போது இவன் வெளியில் போய் என்ன செய்வது என்பதால் மறுத்து “கடவுள் உன்னை மன்னிப்பாராக என்றுக் கூறிவிடுகிறான். ஆனால், மாகர் தன் குற்றத்தை அதிகாரிகளிடம் ஒத்துக் கொண்டு, அதிகாரிகள் அக்ஸியோனோவை விடுதலை செய்யும் ஆர்டருடன் அக்ஸியோனோவைக் காண வரும்போது இறந்து கிடக்கும் அக்ஸியோனவைத்தான் அவர்களால் காணமுடிகிறது. இதற்குப் பெயர்தான் “அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்?

மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை ஒருவனுக்குக் குற்ற உணர்வை வரவழைத்து அவனைத் திருந்தச் செய்கிறது என்றால் அந்த வார்த்தையும், அந்த மனம் உள்ளவர்களும் மிகச் சிறந்தவர்கள்தான். மன்னித்தல்தான் சிறந்த தர்மம்; மறப்போம் மன்னிப்போம் என்ற தத்துவத்துடன் அக்ஸியோனோவைப் போல வாழ்பவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

http://www.readbookonline.net/readOnLine/5322/.  “GOD SEES THE TRUTH, BUT WAITS”.

  சட்டம் சொல்லுவதென்னவோ, குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படவே கூடாது என்றுதான்.  இதைத் தானேயா நமது திரைப்படங்களில் ஹீரோக்கள் வசனமாகப் பேசி வருகிறார்கள். நிரபராதிகளில் ஒரு சிலர், நமது திரைப்படங்களில் வருவது போல் பழிவாங்கும் உணர்வுகளோடு வெளியில் வந்து, தான் ஜெயிலுக்குப் போக காரணமாக இருந்தவரை பழிவாங்குகிறார்கள். இல்லையேல், தான் நிரபராதியாக இருந்தும் தண்டிக்கப்பட்ட காரணத்தால் சமுதாயத்தின் மேல் உள்ளக் கோபத்தால் குற்றங்கள் செய்து, திரும்பவும் ஜெயில் வாழ்க்கைக்குப் போகவும் செய்கிறார்கள்.  யோசிக்கவே மாட்டார்களா இவர்கள்? யாருக்கு பாதிப்பு? நமது கேப்டன் ரமணாவில் சொல்லுவாரே “எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘மன்னிப்பு’” என்பதைப் போல். இதைக் கேட்கும் போது இதுவும் சரிதான் என்று தோன்றுகிறது. அக்ஸியோனோவ் போல் இருப்பவர்கள் அப்படி இருக்கட்டும்.  கேப்டன் போல் உள்ளவர்கள் இப்படிச் செய்யட்டும். இங்கே இரு தரப்பினருக்கும் தண்டனைக் கிடைக்கத்தான் செய்கிறது.  ஒருவனுக்கு மரண தண்டனை.  ஒருவனுக்கு மரணம் வரை தண்டனை. (குற்ற உணர்வுடன் வாழ்ந்து).


   சட்டத்திலும் பல ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன.  குற்றம் செய்தவர் எந்த அளவிலான குற்றம் செய்திருக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  இதோ இந்தச் சம்பவத்தைப் படித்தால் உங்களுக்கே புரியும்.  அருணா ஷன்பாக் என்னும் ஒரு பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை செய்து வந்தார்.  அங்கு பணிபுரிந்த ஒரு டாக்டரைக் காதலித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருந்த சமயம், ஒரு நாள் இரவு, அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் வால்மீகி என்ற மொள்ளமாரி – இந்த நாய்க்கெல்லாம் வால்மீகினு ஒரு பேரு-வார்ட் பையன் (சுத்தம் செய்பவன்?!) அருணா உடை மாற்றும் ரூமிற்குச் சென்று, அவரை நாயைக் கட்டும் செயினால் கழுத்தை இறுக்கி, மிகவும் குரூரமாகக் கற்பழித்தான். கழுத்தை இறுக்கியதால், அருணாவிற்கு மூளைக்கு  ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிப்பு அடைந்ததாலும், செர்விகல் கார்ட் பாதிபடைந்ததாலும் அவள் கழிந்த 40 வருடங்களாக “Living Vegetable” ஆக – ஒரே பெட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். அந்த ஆஸ்பத்திரியில் உள்ள கருணை உள்ளங்களின் அரவணைப்பில் இருந்து வருகிறார். அவரது கண்கள் இயல்பாக இருந்தாலும் பார்வை இழப்பும் உள்ளது. The asphyxiation cut off oxygen supply to her brain, resulting in brain stem contusion injury and cervical cord injury apart from leaving her cortically blind.  அந்த கேடுகெட்ட மொள்ளமாரிக்கு 7 வருடங்கள்தான் தண்டனை.  அதன் பிறகு வெளியில் வந்து, இந்த வெட்கம் கெட்டவன், மனசாட்சி இல்லாத மனித மிருகம் அவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். இங்கு தண்டனை யாருக்கு? ஒரு குற்றமும் செய்யாத, வாழ்வைத் தொலைத்த அந்தப் பெண்ணிற்கு. அதுவும் 40 வருடங்கள். படுத்த படுக்கையாக.......  இப்படிப்பட்ட ஓட்டைகளுடன் சட்டம் இருப்பதால்தான், மக்களுக்குக் குற்றம் செய்வதில் பயம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது.  குற்றங்களும் பெருகுகிறது என்பதுதான் மிக்க் கேவலமான, கசப்பான உண்மையும் கூட.  சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும். 

 பத்திரிகையாளரான அந்தப் பெண்ணின் தோழி, பிங்கி விரானி, அருணாவின் அவஸ்தையைக் கண்டு அவரைக் கருணைக் கொலை (Mercy Killing/Euthanasia) செய்ய அனுமதிக்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டிற்கு மனு கொடுக்க, கோர்ட்டோ அதை நிராகரித்து விட்டது.  ஆனால், கோர்ட் Passive Euthanasia வை அனுமதித்ததாகத் தெரிய வருகிறது.  இது போன்ற சித்திரவதைகளை அனுபவிப்பவர்களை அதிலிருந்து மீட்கக் கூட விடாமல் நம் சட்டம் தடையாக இருக்கிறது. ஆனால், கருணைக் கொலையைச் சட்டமாக்குவது நம் நாட்டிற்குச் சரிப்பட்டு வராது. ஒன்று, நம் மக்கள் இன்னும் அந்த அளவிற்கு மனப்பக்குவம் அடையவில்லை. ம்ற்றொன்று, அந்தச் சட்டத்திலும் ஏதாவது ஓட்டைகளைக் கண்டுபிடித்து, இல்லையென்றால் ஓட்டை போட்டு தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகம். நம் மக்கள் புத்திசாலிகள் என்று பெயர் எடுத்தவர்களாயிற்றே.


ஊழல்கள் செய்வது யாருக்கும் தெரியாத வரை எல்லாம் சரி.  ஆனால், ஊர், உலகம் அறியும்போதாவது, ஊடகங்களில் பெயர் அடிபட்டு கிழிபடும்போதாவது, ஜெயிலுக்குப் போகும்போதாவது, அவர்களது மனசாட்சி அவர்களோடு சிறிதாவது பேசாதா? உயர்நீதி மன்றங்களையும், உச்சநீதி மன்றங்களையும் விடுங்கள். இவர்களின் மனதிற்குள்ளும் இருக்கும் மனசாட்சி என்ற கோர்ட்டில் கூடவா, படங்களில் வரும் கோர்ட் ஸீனில் எல்லாம் நீதி தேவதைகளின் கண்கள் கட்டியிருப்பது போல, மனசாட்சித் தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது?!
எப்போது இவர்கள் எல்லோரும் திருந்துவார்கள்? இத்தனை அட்டூழியங்களுக்கிடையிலும் “இந்தியா வல்லரசு நாடாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று புளுகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டத்தின் பிடியில் சிக்காத, மனசாட்சி இல்லாதவர்கள், ஊழல் செய்பவர்கள், கொலைகாரர்கள், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை உள்ள மனித மிருகங்கள், பொறம்போக்குங்க அதிகமாக உள்ள இந்த நாடு வல்லரசானால், அது உலகிற்கே ஏற்படும் ஒரு சாபக்கேடு.  நாம வல்லரசு எல்லாம் ஆக வேண்டாம். ஜப்பான், நார்வே, ஸ்வீடனில் எல்லாம் ஒரு லட்சத்தில், 50 பேர்தான் குற்றவாளிகளாம். அது போல ஒரு நல்லரசானாலே போதும்.

சட்டத்தில் உள்ள இந்த ஓட்டைகளை அடைக்க சட்ட வல்லுநர்களும், அரசும், காவல் துறையினரும், பொது மக்களும், நேர்மையுடன் முயன்றால், நம் நாடு நீதிக்குத் தலை வணங்கும் நாடாக மாறுவது உறுதி. Idealistic Thought and Dream???!!!!.  கேக்க நல்லாத்தான் இருக்கு. அதெல்லாம் சரி, இந்தச் சட்டத்தில உள்ள ஓட்டைகளை அடைக்கச்  சட்டம் எங்கருக்குது? சட்டம் யார் கையில?  தேடுங்க!  தேடிப் பாருங்க!  தேடிக்கிட்டே........... இருங்க!!!!!........கிடைக்குன்றீங்க????!!!!!!!

6 கருத்துகள்:

  1. நீதிக்கு தலை வணங்குவதா ? இப்பொழுதெல்லாம் நீதியே விலை கொடுத்து வாங்கப்படுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் உங்கள் முதல் வருகைக்கும், முதல் கருத்துக்கும் மிக்க நன்றி, நண்பரே!
      நீங்கள் சொல்வது மிகச் சரி! நீதிக்கு நாம் தலை வணங்கினோம்னு வையுங்க, அவ்வளவுதான் எவனாவது அறுவா, கத்தி தூக்கிகிட்டு வந்து, வணங்கும்போது குனியும் தலைய வெட்டிகிட்டு போயிடுவாங்க ஸார்..அந்த நீதிய யாரு விலை கொடுத்து வாங்கைருக்காங்கனுதான் ..தேடுங்க...தேடிகிட்டே இருங்கனு.....மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு!

      நீக்கு
  2. # தேடுங்க! தேடிப் பாருங்க! தேடிக்கிட்டே........... இருங்க!!!!!...#தேடினால் நாம்தான் காணாமல் போக வேண்டியிருக்கும் !
    இதை சொலவது ...சிரிங்க ..சிரிங்க ...சிரிச்சுகிட்டே இருங்கன்னு சொல்லும் ஜோக்காளி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதென்னவோ சரிதான்! நாம காணாம போயிட்டோம்னு வையுங்க அப்புறம் நம்மைத் தேட அந்தக் காணாமப் போன சட்டம் தேவையாகிடுமே!!! இப்படிபட்ட நிலைமை நீடித்தால் இந்திய மக்கள் எல்லோருமே காணாமல் போய் விடுவார்கள். இப்போதுள்ள தலைமுறை நம் நாட்டை விட்டுப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்தான். பகவான் ஜி!!! உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
    2. நீங்கள் சொல்வதென்னவோ சரிதான்! நாம காணாம போயிட்டோம்னு வையுங்க அப்புறம் நம்மைத் தேட அந்தக் காணாமப் போன சட்டம் தேவையாகிடுமே!!! இப்படிபட்ட நிலைமை நீடித்தால் இந்திய மக்கள் எல்லோருமே காணாமல் போய் விடுவார்கள். இப்போதுள்ள தலைமுறை நம் நாட்டை விட்டுப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்தான். பகவான் ஜி!!! உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  3. ஓட்டையை அடைக்க ஒரு சட்டம் தேவையில்லை; ஓட்டை போடுபவர்களை நடுத்தெருவில் நிறுத்திச் சாட்டையால் விளாசினால் போதும்.

    இது நம் காலத்தில் நடக்கப்போவதில்லை.

    அயோக்கியர்கள் திருந்த வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட நல்ல பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு