வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தலக்காடு - 11 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 4

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9 , 10

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கோயிலைச் சுற்றி படங்கள் எடுத்துக் கொண்டே வந்ததைச் சொல்லி வருகிறேன் இல்லையா...தொடர்ச்சி. பின் மண்டபத் தூண்களின் படங்கள் சில...

இச்சிற்பம் சிதைந்திருக்கிறதோ? வருணனின் விலங்கு மகரம் அது போன்று இருக்கிறது போன்று தோன்றுகிறது ஏனென்றால் இதே போன்ற ஒரு சிற்பம் தெளிவாக வெளிப்புறத்தில் இருக்கிறது அது இதோ....நான் இப்படி நினைத்தேன். இச்சிற்பம் பற்றி இணையத்தில் தேடினேன். நான் சரியாகத் தேடியிருந்தால் கிடைத்திருக்கும்.  கோமதி அக்கா கருத்தில் சொல்லியிருப்பது சரியாக இருக்கும் என்பதால் மாற்றிவிட்டேன். முதலை விழுங்கிய குழந்தையை சுந்தரர் பதிகம் பாடி மீட்டு கொடுப்பார் அவிநாசியில் அந்த கதையை விளக்கும் சிற்பம் போல இருக்கிறது. நன்றி கோமதி அக்கா.

ஒரு குதிரை முகம் தெரிகிறதா? அதன் அப்புறத்தில் யாளி முகம்?  குதிரையின் மீது வீரர் என்று தோன்றுகிறாது. கீழே யானை... எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்

மேலே இடப்பக்கம் கண்ணப்பநாயனார் நிகழ்வு போல் இருக்கிறது இதே போன்று கொஞ்சம் வித்தியாசமாக, கோயிலின் சைடில் உள்ள வாயிலின் தூண்களிலும் ஒன்று இருக்கிறது தெளிவாக....அது இதோ...


பின் பகுதி தூண்களில் இருப்பவற்றைப் படம் பிடித்துக் கொண்டே வந்ததைச் சொல்லி வருகிறேன் இல்லையா. இப்ப தூண்கள் பகுதியில் இருந்து வலப்புறம் திரும்பினால் கோயிலின் உள்ளிருக்கும் சன்னதிகளின் சுவர் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே படங்கள் எடுத்துக் கொண்டே...  


கோயிலின் உள்ளிருக்கும் கருவறை சன்னதியின் கோபுரத்தின் மூலைப் பகுதியில் இருந்து எடுத்த படம். 
இது சைடில்

வாழைப்பூ தொங்குவது போன்று....

பூத கணங்கள் புடைசூழ நின்றானே 
வேத வித்தகன் ஈசன் மெய்யானானே

பூதகணங்கள் என்போர் சைவம் மற்றும் சாக்த மதங்களில், சிவபெருமானின் சேவகர்ளாகவும், கயிலை மலையின் காவல் தெய்வங்களாகவும் கருதப்படும் பதினெண் கணங்களில் ஒரு பிரிவினர். இவர்கள் குள்ளமான உடல் அமைப்பு, பெரிய கண்கள் மற்றும் தடித்த முகம் போன்ற விசித்திரமான, வடிவங்களைக் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மெயின் கருவறையின் மேலிருக்கும் விமானம்/கோபுரம். இது இடப்புறம். முன்பு வலப்புறம் உள்ளதைப் போட்டிருந்தேன் 

ஒவ்வொரு தூண் போன்ற செதுக்கல்களிலும் உச்சியில் சிங்க முகம் எவ்வளவு இண்டு இடுக்குகள்! இவற்றுள் பூச்சிகள் சென்று குடித்தனம் நடத்தாதோ? ரொம்பவே பராரிப்பு தேவை. தூணின் கீழே நரசிம்மர் சிறிய சிற்பவடிவில்

இப்படித்தான் ஒவ்வொரு தூண் போன்ற செதுக்கல்களிலும் உச்சியில் சிங்க முகம் மீண்டும் மீண்டும் இப்படியான வடிவங்கள் சுவர் முற்றிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதுவே அழகான கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

 

தூண்கள் சந்தித்து மடிந்து இருக்கும் இடத்தில் இரு பக்க சிங்கங்களின் சைடி வடிவங்கள் இணைந்து ஒரே முகம் போன்று! எப்படி எல்லாம் சிந்தித்து படம் வரைவது போன்று செதுக்கியிருக்கிறார்கள்! இப்படிக் கோயிலைச் சுற்றிலும் ஜிக்ஜாக் - ஃப்ரில் வைப்பது போன்ற வடிவில் சுவர் அதில் நுணுக்கமான வேலைப்பாடுகள் பெரும்பாலும் ஒரே வடிவங்கள்தான் மீண்டும் மீண்டும் இருப்பதைப் பார்க்கலாம். அதாவது ஒரு pattern! இவை அப்படியே மண்ணின் அடியிலிருந்து எடுக்கப்பட்டவையா அல்லது தூண்கள் ஆங்காங்கே பிளவுபட்டு அவற்றைச் சீர்ப்படுத்திக் கோர்த்திருப்பார்களா? ஏனென்றால் வாயிலில் பல தூண்கள் கிடப்பதைப் பார்க்க முடிந்தது

இங்கு ஒரு மடிப்பு தெரிகிறதா...இந்த இடத்தில் கொஞ்சம் வித்தியாசமாக அழகாக இருக்கிறது இல்லையா நுணுக்கமான வடிவங்கள் பென்சில் வைத்து கூர் முனையால் சின்ன சின்ன வளைவுகளைச் செதுக்கியது போன்று...

இந்த அழகு மங்கையும் அவளைச் சுற்றியுள்ள வடிவங்களையும் பாருங்க! இதிலும் மடிப்பு மடிப்பாக...


கங்கா தேவி மகரத்தின் மீது இரு பக்கமும் துவாரபாலகர்... இச்சிற்பத்தைப் பார்த்துக்கோங்க இப்ப கீழ போவோம்.... 


.
.இந்த இரு படங்களும் (ஒரே சிற்பம் தான்) கங்காதேவி மகரத்தின் மீது துவாரபாலகர்கள் இரு புறமும்.....ஆனால் முதலில் சொல்லிய சிற்பத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா! வெவ்வேறு சிற்பிகள் செதுக்கியிருப்பார்களோ?

குழந்தையை இடுப்பில் வைத்திருக்கும் பெண் சிற்பம். குழந்தையின் தலையைக் காணவில்லை! யார் என் குழந்தையின் தலையைக் கொய்தது எனக்கு நீதி வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது!

இச்சிற்பத்தையும் கீழே உள்ள மூன்று படங்களில் உள்ளவற்றையும் பாருங்கள்! மேலே குமிழ் போன்று, ஏதோ பல்பு தோரணம் கட்டியது போன்று இருக்கா? இல்லை தாமரை மொட்டுகளைக் கவிழ்த்து தோரணம் போன்று வைத்திருப்பது போல் இருக்கிறதோ? 

முந்தைய படங்களில் காட்டிய அந்தக் குமிழ்கள் உள்ள பகுதியில்தான் இது.  இதனை நான் எடுத்திருந்தேன். ஆனால் சரியாக வரவில்லை எனவே இணையத்திலிருந்து இப்படம்.

கோயிலைச் சுற்றி முன்பக்கம் வரும் முன் வடகிழக்கு கூரை மேலே இது இருக்கிறது. கோயிலின் இடப்புறம். இது நாககர்ண குண்டலமாம். 800-1000 ஆண்டுகள் பழமையானதாம். இக்கோயில் பற்றிய தகவல்களில் இது மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வளையத்தைப் பாருங்கள் ஒன்றோடொன்று கோர்க்கப்பட்ட ஒற்றை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட வளையங்கள். ஐந்துதலை பாம்பின் மீது கோர்க்கப்பட்டுள்ளது. வெட்டிக் கோர்க்காமல் எந்தவித வெட்டும் இணைப்பும் இல்லாமல் அப்படியே கோர்க்கப்பட்ட வடிவச் சிற்பமாம். அப்போதைய 10-14 ஆம் நூற்றாண்டு கலைஞர்களின் மிகச் சிறந்த கலைப்படைப்பாகப் போற்றப்படுகிறது!

இன்னும் சில சிற்பங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போம்! 


-----கீதா

34 கருத்துகள்:

  1. வைத்யநாதேஸ்வரா கோயில் சிற்பங்கள் எல்லாம் அழகு. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.


    //இதே போன்ற ஒரு சிற்பம் தெளிவாக வெளிப்புறத்தில் இருக்கிறது அது இதோ....//

    முதலை விழுங்கிய குழந்தையை பதிகம் பாடி மீட்டு கொடுப்பார் அவிநாசியில் அந்த கதையை விளக்கும் சிற்பம் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. விளக்கமும் தெரிந்து கொண்டேன். அங்கும் மாற்றிவிட்டேன். மிக்க நன்றி கோமதி அக்கா. உங்களுக்கு அனுப்பி கேட்டிருந்திருக்க வேண்டும். இணையத்தில் தேடினேன் ஆனால் நான் சரியாகத் தேடவில்லை என்றே நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  2. தூண் சிற்பம் கண்ணப்பநாயனார் கதையை சொல்கிறது. தூண் சிற்பங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. குழந்தையை இடுப்பில் வைத்திருக்கும் பெண் சிற்பம் குழந்தை தலை உடைந்து இருப்பது பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

    கங்காதேவி மகரத்தின் மீது இருக்கும் இரண்டுக்கும் தலைஅலங்காரம் வேறு மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சிற்பங்கள் சிதைந்திருந்தனதான். மணலுக்கடியிலிருந்து எடுத்ததால் இருக்கலாம்.

      கங்காதேவி மகரத்தின் மீது தலை அலங்காரம் வேறாக இருக்கு. அதான் வெவ்வேறு சிற்பிகள் வடிவமைச்சிருப்பாங்களோ என்று தோன்றியது.

      நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  4. நாககர்ண குண்டலம் படம் அருமை.
    இணைய படம் நன்றாக இருக்கிறது.

    //தாமரை மொட்டுகளைக் கவிழ்த்து தோரணம் போன்று வைத்திருப்பது போல் இருக்கிறதோ?//

    வாழைப்பூ போல என்பார்கள்.
    அனைத்து படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைப்பூ போல என்பதும் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறேன் அதில் வாழைப்பூ தொங்குவது போல இருக்கிறது. இது இதழ் விரிந்து உள்கூம்பு கவிழ்ந்து இருப்பது போல் தோன்றியதால்...

      வாழைப்பூ என்றும் சொல்வதுண்டு.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  5. கோவில் கவனிப்பாரின்றி, பழையதாக இருப்பதால் சிற்பங்களை  பாதுகாப்பார் இல்லை போல.  ஆனால் பழமையான கோவில்களுக்கு என்றுமே மதிப்பு அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் சொல்ல முடியவில்லை, ஸ்ரீராம் இன்னும் முழுவதும் மீட்டெடுக்கவில்லையாமே. மணல் அடியிலிருந்து. இருப்பதைப் பராமரிப்பது போலத் தோன்றியது நேரில் பார்க்கறப்ப. சுத்தமாக வைத்திருக்காங்க. தொல்பொருள் இலாகாவின் கீழ். இன்னும் மேம்படுத்தினால் நல்லாதான் இருக்கும்.

      //ஆனால் பழமையான கோவில்களுக்கு என்றுமே மதிப்பு அதிகம்.//

      அதே!

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  6. நீங்கள் சொல்லும் உருவங்களை படித்த பிறகு சிற்பங்களை பார்த்தால் அப்படிதான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.  வெளிப்புறம் இருக்கும் சிற்பம் எண்ணெய் படாமல் தெளிவாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தூண்களில் இருப்பவற்றை மக்கள் குங்குமம் இட்டு மலர் எல்லாம் வைப்பது போலத் தோன்றியது சிலவற்றைப் பார்க்கறப்ப. ஆனால் மங்கலாக கருப்பாக இருப்பது கிரானைட் கல் இல்லையா ஸ்ரீராம் சில பகுதிகள் கருப்பாக இருக்கிறது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. குதிரை முகம், யாளி முகம்... ஊஹூம்... எனக்கு ஒரு புலிக்குட்டி ஏதோ ஒரு தேவன் மடியில் இருப்பது போல் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா!!!! கீழ இருக்கும் யானை கூடவா தெரியலை, ஸ்ரீராம்?

      இச்சிற்பம் வடிவமைச்சவரும் ரொம்ப திறமைசாலியாக இந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

      கீதா

      நீக்கு
  8. கண்ணப்ப நாயனார் கதை உருவம் தெளிவாக தெரிகிறது.  பொதுவாக படங்கள் அனைத்தையும்கே ரசிக்க முடிகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் முதல் சிற்பம் தூணின் மேல் இடப்பக்கம் இருப்பது டக்குனு பார்ப்பது கடினம் ஆனால் அதற்கடுத்தபடம் தெளிவு

      //பொதுவாக படங்கள் அனைத்தையும்கே ரசிக்க முடிகிறது. //

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. கர்ணகுண்டலங்கள் எண்ணும்போதே அது காதில் அணிவது என்று தெரிகிறது.  பின்னாட்களில் கிராமப்புறங்களில் பாம்படம் என்று காதில் அணிவார்கள்.  இது தாயத்து போல ஒரு கவசம் போல பாதுகாப்புக்காக இருக்கலாம்.  அல்லது குறிப்பிட்ட பரம்பரையினரின் அணிகலனாக இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்லியிருப்பது போல், பாம்படம் கூட ஒரு பாதுகப்பு இல்லைனா பரம்பரையாக....கிராமங்களில். பாரம்பரியமாகவும் அணிவதுண்டு. குறிப்பாக எங்க ஊர்ப்பக்கங்களில். காது இழுக்கப்பட்டுத் தொங்கும் பெரிய ஓட்டையுடன் எப்படி இவ்வளவு எடையைச் சுமக்கறாங்க கடினமாக இருக்காதோன்னும் தோன்றும். இன்னொன்று, பாம்பு போன்ற தலை விரிந்து இருக்கும் பாம்படங்கள் அணிவாங்க. அதனால்தானே பாம்படம் நு பெயர்!

      உங்களுக்குக் கூடுதல் ஒரு தகவல் தருகிறேன். இந்தப் பாம்படம் இப்போது மறைந்துவருவதால் நெல்லை மாநகராட்சியில் இதற்குச் சிலை வைச்சிருக்காங்க!!! கௌரவப்படுத்தியிருக்காங்க!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. முதலை விழுங்கிய குழந்தையை பதிகம் பாடி மீட்டு கொடுப்பார் சுந்தரர் அவிநாசியில் அந்த கதையை விளக்கும் சிற்பம் போல இருக்கிறது.
    சுந்தரர் விடு பட்டு இருக்கிறது என் முதல் கருத்தில்.

    "எற்றான் மறக்கேன் எழுமைக்கும்

    எம்பெரு மானையே

    உற்றாய்என்று உன்னையே உள்குகின்

    றேன்உணர்ந்து உள்ளத்தால்

    புற்றாடு அரவா புக்கொளி

    யூர்அவி நாசியே

    பற்றாக வாழ்வேன் பசுபதி

    யேபர மேட்டியே.''

    என்ற தேவார பதிகம் பாடி குழந்தையை மீட்டு கொடுத்து பெற்றோரை மகைழ் வைத்தார்.


    தாமரைக்குளம் சென்றார் சுந்தரர். "அவிநாசி அப்பனே! எமனிடம், இந்தக் குளத்தில் குளித்த குழந்தையைத் தரச் சொல்!'' என்று வேண்டிக் குளக்கரையில் நின்று அவர் பாட, திரும்பி வந்தது முதலை!! என்ன அதிசயம்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விழுங்கிய பாலகனைக் கரையில் உமிழ்ந்தது முதலை. சிறுவன் வளர்ந்திருந்தான். பூமியில் வாழ்ந்திருந்தால் எவ்வளவு வளர்ந்திருப்பானோ, அவ்வளவு வளர்ந்திருந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையும் பதிகமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி கோமதிக்கா. தெரிந்து கொண்டேன்.

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கோவிலும், அங்குள்ள தூண்களும், அதில் உள்ள சிற்பங்களும் கண்களை கவர்கின்றன.

    ஒவ்வொரு சிற்பங்களை அழகாக படம் எடுத்தது மட்டுமின்றி அதற்குரிய விளக்கங்களையும் தந்துள்ளீர்கள். படித்துப் பார்த்து அதன் பிண்ணனி கதைகளையும் தெரிந்து கொண்டேன்.

    கண்ணப்ப நயினார் கதை சிற்பம் நன்றாக தெரிகிறது. மேலும், வாழைப்பூ போல இருப்பது, மடக்குமடக்கான சிற்பங்கள், அவைகளில் உள்ள நுணுக்கங்கள் என அனைத்தையுமே ஒரு கலை கண்ணோட்டத்தோடு பார்த்து நம்மால் ரசிக்கவும், வியக்கவும் முடிகிறது.

    எத்தனை சிறந்த சிற்பிகள் அங்கு வேலைசெய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் எனும் போது, அந்த பாலங்களும் நம் கண் முன்னே விரிகிறது.

    கருவறை விமானங்களின் வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. இவையெல்லாம் பல காலந்தொட்டு இப்படி சிறப்பாக நிற்கிறதென்றால், அக்கால மன்னர்களின் தெய்வ பக்தியும், சிற்பக்கலை நோக்குடைய அவர்களது கற்பனைகளும், அதற்கேற்ப அப்போது வாழ்ந்த சிற்பிகளின் உழைப்புக்களும் நாம் கண்டிப்பாக வணங்க வேண்டிய ஒன்று. 🙏.

    இறுதிபடமும் அருமை. இரு வளையங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக பொருந்தி, பொருத்தப்பட்ட இடத்தையே காண முடியாதவாறு பார்க்கவே சூப்பராக உள்ளது. எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ரசித்தேன். வியந்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ம்.

      கமலாக்கா. ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுச் சொன்னதற்கு. ஆமாம் கலைக்கண்ணோடு பார்த்தால் ரசிக்கலாம் வியக்கலாம்.

      உண்மையிலேயே திறமை மிக்க சிற்பிகள்.

      மண்ணில் புதையுண்டதை மீட்டெடுத்து இவ்வளவு தூரம் பராமரிக்கிறார்களே அதுவே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது கமலாக்கா

      எல்லாம் ரசித்துப் பார்த்துக் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. ஒரு மொபைலை வைத்துக்கொண்டு நீண்ட கருத்துகளும் பதிவுகளும் எழுதுவது எவ்வளவு கஷ்டம். இருந்தாலும் உங்கள் உழைப்பு ஆர்வத்தை பாராட்டறேன் கமலா ஹரிஹரன் மேடம்.

      கண்ணப்ப நயினார் என்பதைப் பார்த்ததும் கலாய்க்காமல் சென்றால் நான் நெல்லைக்காரனாக இருக்க முடியாதே. அங்குதான் 'நயினார்' என்ற பெயர், பிள்ளைவாள்களிடம் புழங்கும். நயினார் என்றே பெயரும் வைத்துக்கொள்வார்கள்.

      நீக்கு
    3. நெல்லை நானும் கவனித்தேன் ஆனா பாருங்க பாவம் அக்கா மொபைலில் எவ்வளவு கஷ்டப்பட்டு அடிக்கறாங்கன்னு.....

      நீங்க கலாய்ப்பது வழக்கம்...ஆனா நான் அக்காவைக் கலாய்த்தது இல்லை....ரொம்பப் பெரியவங்க!!!!!!!!!!!!! என்னைவிடன்னு சொன்னேன்!!!

      கீதா

      நீக்கு
    4. அடாடா..! கண்ணப்ப நாயனார் என்பது நயினார் என வந்துள்ளது. இப்போதுதான் கவனித்தேன். ஆம். நயினார் என்றொரு பிரிவு அங்கு உண்டென கேள்வி பட்டதுண்டு. அங்கிருக்கும் போது அக்கம்பக்கம் அவர்களை பார்த்ததுமுண்டு. சித்ர குப்த நயினார் என்று கூட எமதர்ம ராஜனின் கணக்காளரை குறிப்பிட்டுச் சொல்வோமே ..!

      திருத்தம் என வரும் போது, குறிப்பிட வயது ஒரு காரணமா சகோதரி..? இருப்பினும் நான் அவ்வளவு வயது முதிர்ந்தவள் அல்ல. படிப்பறிவிலும், பட்டறிவிலும்,, உங்களனைவரையும் விடவும் நான் ரொம்ப சின்னவள்தான்..! எனவே சகஜமாக தவறை சுட்டிக்காட்டலாம். பிழையொன்றுமில்லை. ஹா ஹா ஹா. நன்றி.

      நீக்கு
    5. கமலாக்கா, தவறு எதனால் என்பதால் சொல்லவில்லை. உங்களுக்குத் தெரியும் ஆனால் தட்டச்சில்தானே பிழை. அதனால் சொல்லலை.

      சும்மா சின்னவள்னு எல்லாம் சொல்லிக்கக் கூடாது கேட்டேளா!!!!!!...ஓகே ஓகே இனி நீங்களும் சின்ன அக்கா!!!!.

      அக்கா பட்டறிவு வாழ்க்கைக்குச் சும்மா சம்பாதிக்கத்தான். ஆனால் நிஜமான அறிவு என்பது வாழ்க்கையை பாலன்ஸ் செய்து சமாளித்து ஓட்டிச் செல்வது. எனவே நீங்க பெரியவங்கதான்!! ஹாஹாஹா இது எப்படிக்கீது!!!

      கீதா

      நீக்கு
    6. :))) 👌அட..! சின்ன அக்கா.!!! இது கூட நல்லாயிருக்கே.!

      நீக்கு
    7. ஹாஹாஹா இனி கூப்பிட்டிடுவோம்!!!!

      கீதா

      நீக்கு
  12. சிற்பங்களும் படங்களும் மிக அருமை. பார்த்த நினைவு வருகிறது.

    இதற்கெல்லாம் அடிப்படை தெய்வ பக்தி என்றே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் சிற்பிகள் இப்படியெல்லாம் செதுக்கியிருக்கின்றனர். மன்னர்களும் இந்தக் கலையை ஆதரித்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      தெய்வபக்தி ஒரு காரணமாக இருக்கலாம்...ஆனால் அதைவிட அக்கலையின் மீதான ஈடுபாடும், சிரத்தையும், அர்ப்பணிப்பும், அதன் மீதான பக்தியும் என்று சொல்லலாம், நெல்லை. கூடவே நீங்க சொன்னது போல மன்னர்களின் ஆதரவு இக்கலைக்கு. இல்லைனா செதுக்கியிருக்க முடியுமா?!

      கீதா

      நீக்கு
  13. பெண்கள் வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம் வெவ்வேறு பெண்களாக இருந்திருக்கக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி? கங்காதேவிதானே மெயினாகச் சொல்லப்படுவது மகர வாகனம் என்று வருணன். ஆணல்ல...எனவே ...வெவ்வேறு பெண்கள் என்றால் வேறு யார்?

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  14. கண்ணப்ப நாயனார் சிற்பம் நல்லாத் தெரியுது. ஆனால் முதலில் பார்த்தபோது குதிரையில் அமர்ந்திருப்பதுபோல இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தூணில் இருப்பது குதிரையில் அமர்ந்திருப்பது போல இருக்கிறது அதனால் கொஞ்சம் யோசித்தேன்...ஆனால் வெளியில் எடுத்தது தெளிவாக இருந்ததால் புரிந்தது.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு