திங்கள், 12 ஜனவரி, 2026

தலக்காடு - 7 - கீர்த்தி நாராயணர் கோவில் - 2

  தலக்காடு- 1,  2345 , 6

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

சென்ற தலக்காடு பதிவு 6ல் கீர்த்திநாராயணர் கோவிலில் முகப்பு மண்டபம் படங்களைப் பகிர்ந்திருந்தேன்! இதோ மண்டபத்துள் ஏறி நுழையப் போகிறோம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா இதோ ஏறிவிட்டோம். 

ஏறியதும் வலப்புறம் இராமானுஜர். அரசன் விஷ்ணுவர்தன் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம் இல்லையா? அவன் வைணவ மதத்திற்கு மாறிய பிறகு நிர்மாணித்த விஷ்ணு கோவில்களில் இராமானுஜர் சன்னதியையோ திருஉருவத்தையோ நிறுவினான் என்று வரலாறு. 

இடப்புறம் பெருமாளும் கீழே தாயார். வலப்பக்கம் சரியாகத் தெரியவில்லை.  இவை முகப்பு மண்டபத்தில். இனி கீழே கோவில்

முகப்பு மண்டபத்திலிருந்து இறங்குகிறோம். நேரே தெரிவதுதான் கீர்த்தி நாராயணர் மூலவர் உற்சவர் இருக்கும் கோவில். சின்ன கொடிமரம் தெரிகிறதா? வலப்பக்கம் நாங்கள் நடந்து வந்த கூடாரப் பாதை தெரிகிறதா?

முகப்பு மண்டபத்திலிருந்து இறங்கியதும், வலப்பக்கம் ஆஞ்சனேயர் என்று நினைக்கிறேன். மூடியிருந்த சன்னதியை ஒரு க்ளிக்.

இப்ப முகப்பு மண்டபத்தை உள்ளிருந்து க்ளிக்ஸ் கீழுள்ள படங்களும். இடப்பக்கம் ஆஞ்சநேயர் சன்னதி என்று நினைத்த... மூடியிருந்த சன்னதி. கொடிமரம். 

கொடிமரம் முழுவதும் தெரிகிறது இல்லையா?

முன்மண்டபத்தை உட்பக்கத்திலிருந்து இடப்பக்கம் வலப்பக்கம் க்ளிக்ஸ்
கோவிலுக்குள் ஏறப் போகிறோம் ஏறும் முன் படிகளின் சைடில் இந்த வடிவம். மறுபுறமும் இதே வடிவம்தான். இது என்ன விலங்கு? 

கோவிலின் உள்ளே போகும் முன் இடப்புறம். zig-zag வடிவம்-மடிந்து மடிந்து... நுழையும் இடத்தில் உண்டியல் தெரிகிறதா? வலப்புறம் படம் கீழே அடுத்திருப்பது.

கோவிலின் அடித்தளம் " ஜகதி " என்று அழைக்கப்படும் சுமார் ஒரு மீட்டர் உயரமுள்ள ஒரு மேடையில், முழுவதையும் பார்த்தால் நட்சத்திர வடிவத்தின் மேல் கோவில் எழுப்பப்பட்டிருப்பது தெரியும். (கீழே காணொளியில் தெரியும் என்று நினைக்கிறேன்) இக்கோவில் ஹொய்சாளர் கலையின் ஆரம்பகால வடிவத்திற்கு ஓர் உதாரணம். சோழர்களை வென்றதைக் குறிப்பிடும் வகையில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

உயரமுள்ள ஒரு மேடையில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது தெரிகிறது இல்லையா?

ஹொய்சாளர் கலையில் தூண் வடிவங்கள் கொஞ்சம் க்ளோசப்பில். லேத்தில் வெட்டி வடிவமைத்தது போன்று தூண் வடிவங்கள். சோப்ஸ்டோன் எனப்படும் மென்மையான கல்லைப் பயன்படுத்திச் செய்வார்களாம். இக்கல்லை எளிதில் செதுக்கலாமாம்.

ம்பிகளுக்கு உட்புறம் கோவிலுக்குள்ளும் இதே போன்ற தூண்கள்தான். ஆனால் உள்ளே எடுக்க அனுமதி இல்லை. நான் உள்ளே செல்லும் போதே என் கையில் இருந்த கேமரா மற்றும் மொபைலை அங்கிருந்த பட்டாச்சாரியார், பார்த்திருக்கிறார். உள்ளே எடுக்கக் கூடாது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அங்கிருந்த தூண்கள் அதன் மேற்புறம் எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து ஓரிடத்தில் நின்று பார்த்தேனா, பட்டாச்சாரியார் கண்ணில் நான் படவில்லை. சற்று நகர்ந்து வந்து என்னைப் பார்த்து "ஃபோட்டோ எடுக்கக் கூடாது, நீங்கபாட்டுக்கு எடுத்துப் போடறீங்க அப்புறம் மேலிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல எங்களுக்குத் தர்மசங்கடம் ஆகிறது. பிரச்சனை ஆகிறது." என்று கடுமையாகச் சொன்னதும், "நான் எடுக்கவில்லை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்" என்று சொல்லிக் கொண்டே அவர் கண் முன்னே உள்ளே வைத்துவிட்டேன். 

உள்ளே கீர்த்தி நாராயணர் மிகப் பெரிய திருஉருவம். நின்றகோலத்தில். சுற்றி வந்து வெளியில் வரும் முன் அந்த உண்டியலின் அருகில் இருக்கும் தூணில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன. ஆனால் எடுக்க முடியாதே! அக்காலத்து கன்னட வடிவம் கூடவே தமிழ் வடிவ எழுத்துகளும். நெல்லையும் நானும் அதைப் பார்த்துக் கொண்டே அதைப் பற்றிப் பேசினோம். அருகில் வேறு பணியாளர் (பாதுகாப்பாளர்) உட்கார்ந்திருந்தார். வெளியில் வந்துவிட்டோம். வந்த பிறகு வெளிப்புறம் எடுத்த படங்கள் கீழே.

ஹொய்சாளர் கலைவடிவம் பாருங்க. வேல் போன்ற வடிவம்? - கூம்பு வடிவமே அழகாக இருக்கிறது இல்லையா! ஒவ்வொரு கூம்புப் பகுதியின் மேல் உள்ள வடிவமும் கூம்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன. தூண்களின் மேலே மூக்கோணங்களைக் கவிழ்த்திப் போட்டு அடுக்கடுக்காகத் தாமரை வடிவம்? போன்றும், கீழே செவ்வக வடிவக் கற்களைப் பொருத்தி வித்தியாசமாக இருக்கின்றன. zig-zag வடிவம் ஹொய்சாளர் கலையின் புதுமை. இந்த வடிவத்தை ஓரளவு கீழே உள்ள காணொளியில் காணலாம். 

கோவில் கோபுரம் பார்த்தீர்களா?  கீழே கூம்பு வடிவங்கள் இதில் கொஞ்சம் வித்தியாசமாக.

கோயிலின் உள்ளே சன்னதியின் மேல் சாளரம்

இந்த இரு வேல் போன்ற கூம்பு வடிவங்கள் இரண்டும் வித்தியாசமாக சுற்றியுள்ள டிசைன்களும் வித்தியாசமாக இருக்கின்றன தெரிகிறதா? 

இதோ இன்னும் இரண்டு மேலே உள்ளவை போன்ற ஆனால் சற்று வித்தியாசமாக...

இதோ இரண்டு அடுத்தடுத்து. இடப்பக்கம் உள்ளதை ஏதோ செப்பனிட்டுள்ளது போல் இருக்கிறது. கலர் வித்தியாசமாக.

கல்வெட்டு தமிழ் எழுத்துகள் தெரிகின்றன கொஞ்சம். கீழேயும். கொஞ்சம் வாசிக்க முடிகிறது இல்லையா? அகழ்ந்து எடுக்கும் போது ஒரு வேளை தொட்டடுத்திருக்கும் வைத்தியநாதேஸ்வரர் கோவில் கல்வெட்டை தெரியாமல் இங்கு கொண்டு வந்து பதித்துவிட்டார்களோ?! 

 

சுமார் ஒரு மீட்டர் உயரமுள்ள மேடையில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்று மேலே சொல்லியிருந்தேன் இல்லையா? அந்த மேடையிலேயே நடந்து படங்களும் காணொளிகளும் எடுத்த போதுதான், மேடை குறுகலாக இருப்பதால் ஆர்வத்துடன் எடுக்கும் போது அதன் விளிம்பைக் கவனிக்கத் தவறி கீழே விழும் ஆபத்தை உணர்ந்ததும் உடனே கீழே இறங்கி எடுக்கத் தொடங்கினேன். கீழிருந்து எடுத்தால்தான் சரியாக எடுக்கவும் முடியும். மேடையில் இருந்தால் வேல் போன்ற வடிவங்களை கிட்டத்தில் எடுக்கலாம் ஆனால் கோவிலின் உயரத்தை எடுக்க வேண்டும் என்றால் கீழே இறங்கித்தான் எடுக்க வேண்டும். அந்த மேடையை காணொளியில் பார்க்கலாம். கொஞ்சம் காட்டியிருப்பேன். கோயில் முழுவதும் சுற்றி கூடியவரை எடுத்திருக்கிறேன். ஆனால் நடந்து கொண்டே எடுத்ததுதான் நான் செய்த தவறு. என் நடைக்கேற்ப வீடியோ நடனம் ஆடியிருக்கிறது!

சரி நாம் கோயிலில் இருந்து வெளியே அதே முகப்பு மண்டபம் வழி வந்து வைத்யநாதேஸ்வரர் கோவிலைப் பார்க்கப் போவோம்.


-----கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக