கதைகளைப் பற்றி - 1/7 , 2/7 , 3/7 , 4/7
சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன். இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால், ஆசிரியர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 5/7
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளைக்
கோட்டு
அபிநவம் ராஜகோபாலன்
ஆசிரியர் - 80 வயது இளைஞரான ஆசிரியர். எழுத்திற்கு
வயது தடையல்ல என்பதற்கு நமக்கு நல்ல உதாரணம். சார்ட்டட் அக்கௌண்டன்ட் பல
நாடுகளில் பணிபுரிந்தவர். இரண்டு எம். ஏ. இரண்டு எம்ஃபில் பட்டங்களைப் பெற்ற இவரது ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரு சுயமுன்னேற்ற நூல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலும் நாவல் எழுதியுள்ளார். கதைப் போட்டிகளில் பல
பரிசுகள் வென்றிருக்கிறார். இன்னும் சொல்ல இருந்தாலும் அதுவே நீண்டுவிடும் என்பதால் இடம் கருதி சொல்லவில்லை.
கதை - ஒரு மருத்துவமனையில் 'லேபில்' வேலை செய்யும் உமாவுக்கு, ஒரு கம்பெனியில் ரிசப்ஷனிஸ்டாக இருக்கும் தன் தங்கை சுதா விதமாக உடை உடுத்தி மேக்கப் செய்துகொண்டு அலங்கார பொம்மையாகப் போவது போல், தான் போகமுடியாமல் எப்போதும் வெள்ளைக் கோட்டை மாட்டிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கம்.
வீட்டிற்குச் சென்றதும், குளித்து
பளிச்சென்று ஒரு ஆரணி சில்க் புடவையைக் கட்டிக் கொண்டு பர்ஃப்யூம் போட்டுக் கொண்டதும்,
பகல் முழுவதும் வெள்ளைக் கோட் போட்டுக் கொண்டு தன் தனித்துவத்தை இழந்ததற்கு மாற்றாக
நினைக்கிறாள்.
இரவு அவள் தங்கை சுதா வந்ததும்
அந்த நாள் நிகழ்வுகளைச் சொல்கிறாள். "எல்லாம் கோட், சூட் ரகம்டி. ரேமான்ட் அட்வர்டைஸ்மெண்டுக்குப்
போஸ் குடுக்கற மாதிரி வருவானுங்க. ஒண்ணு ரெண்டு கொஞ்சம் ஜொள்ளு விடும். பொழுது ஜாலியாப்
போகும்னு வைச்சுக்கோ" என்று சொன்னதும் உமாவுக்குத் தன் ஆஸ்பத்திரி லேப் வாழ்க்கை
ஞாபத்துக்கு வருகிறது. சோகமான பேஷன்டுகள், அவர்களின் ரத்தம், யூரின், ஸ்டூல்...என்று 'என்ன வாழ்க்கை' என்று தோன்றுகிறது கூடவே தன் தோழிகள் ஜாலியான வேலையில் இருப்பதையும்
நினைத்துப் பார்க்கிறாள்.
'ஏதாவது தேவை என்றால் வந்து பார்'
என்று சொன்ன சாந்தா நினைவுக்கு வந்ததும் தொடர்பு கொள்கிறாள். "ஒரு ஆல் இண்டியா
சாரி ஷோரூம்ல ஆளெடுக்கறாங்க. சேர்ல்ஸ் கேர்ல் போஸ்ட். சம்பளம் ரொம்ப பெரிசில்ல. ஆனால்
லோகத்துல இருக்கற அத்தனை வகை சாரிகளும் இருக்கும். பணக்காரப் பெண்கள் வருவாங்க, கவர்ச்சியான
ஜவுளி உலகம்" என்றதும் உடனே வேலைக்கு ஒத்துக் கொள்கிறாள் உமா.
அந்தக் கடையில் சேர்ந்துவிடுகிறாள்.
தன் தங்கையைப் போல போகலாம், குறிப்பாக வெள்ளைக் கோட்டு இல்லை என்று மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
கடையில் பட்டுப்புடவை செக்ஷன் அவளுக்கு ஒதுக்கப்படுகிறது.
ஒரு நாள் வசதியான குடும்பத்தைச்
சேர்ந்த இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் வருகிறார்கள்.
ஷோ ரூம் சூப்பர்வைஸரே எழுந்து வரவேற்கிறார்.
வந்தவர்கள், "ரொம்ப அவசரம்,
நல்ல காஸ்ட்லியா அஞ்சாறு பொடவை காட்டுங்க" என்று சொல்கிறார்கள். "ஜாஸ்தியா
உள்ளதில ஜாஸ்தியா இருக்கற சரக்கைக் காமி" என்கிறார்கள்
உமா காஸ்ட்லியான புடவைகளைக் காட்டுகிறாள்,
அவர்கள் "எத்தனை புடவை இருக்கு" என்றதும், "கைவசம் ஐந்துதான் இருக்கு" என்கிறாள். ஐந்தையும் உடனே பாக் செய்யச் சொல்கிறார்கள்.
அவர்கள் யார்? ஏன் அவசரம் அவசரமாகப்
புடவைகள் வாங்குகிறார்கள்? அதன் பின் நடப்பதென்ன? உமாவுக்கு ஏற்படும் மாற்றம் என்ன? என்பதைக் கதையில் தெரிந்து கொள்ளலாம்.
வித்தியாசமான கதைக்கரு. முடிவில்
சொல்லும் தத்துவ வரிகள் நன்றாக இருக்கின்றன.
80 வயது இளைஞர் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
நாயென்றால்
இளப்பமா
அர்ஜுனன் சிவகாமிநாதன்
ஆசிரியர் - ஆயுள் காப்பீட்டுக்
கழகத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்
எழுதியிருக்கிறார். இவருடைய கட்டுரைத் தொடர், சிறுகதைத் தொகுப்பு, பாரதியின் புதிய
ஆத்திச்சூடியின் விளக்கக் கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. இப்படிப் பல பெருமைகளைக்
கொண்டவர் ஆசிரியர்.
கதை - கணேசனும் அவன் பெண் ரக்ஷணாவும்,
தங்கள் செல்ல நாய்க்குட்டியை (அப்படிச் சொன்னால் கணேசனின் மனைவி ஈஸ்வரிக்குக் கோபம்
வந்துவிடும்!) செல்லப் பிராணியை தடுப்பூசி போட அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு
செல்கிறார்கள்.
மருத்துவர் வர தாமதமாகும் போது,
மருத்துவமனையைச் சுற்றிப் பார்க்கிறார்கள். மருத்துவமனை பராமரிப்பில்லாமல் அடர்ந்த
புதர்களுடன் இருப்பதைப் பார்க்க நேரிடுகிறது. அப்போது புதருக்குள்ளிருந்து, பிறந்து
ஓரிரு மாதங்களேயான நாய்க்குட்டியின் சத்தம் கேட்கிறது. அதைக் காப்பாற்ற முற்பட நினைத்தாலும்,
அச்செடிகளை வெட்டி அகற்றச் சில உபகரணங்கள் தேவை.
அங்கு பணிபுரியும் செவிலியரிடம்
சொல்ல, அவரோ "அதுக்கு நாங்க என்ன செய்யமுடியும்? புதரைக் காலி பண்ணுங்கன்னு மேலிடத்துக்குச்
சொல்லி ஒரு மாசம் ஆச்சு" என்று அவர்கள் அலட்சியமாகச்
சொல்கிறார்கள். "சே என்ன மனிதர்கள் இவர்கள்" என்று ஈஸ்வரியையும் நினைத்துக்
கொள்கிறான். கூடவே தெருவோர நாயான டாமி எப்படி அவர்கள் வீட்டிற்கு வந்தது என்பதையும்
அசை போடுகிறான்.
மருத்துவர் வருகிறார். டாமிக்கு
ஊசி போடும் போது அவரிடமும் சொல்கிறான். "அந்த நாய்க்குட்டி உள்ளே போய் ரெண்டு
மூணு நாள் ஆச்சு. புதர்காடா இருக்கிறதுனால எங்களால ஒன்னும் செய்ய முடியலை" என்று
சொல்லி அந்தச் செவிலியர் சொன்ன அதே பதிலையும் சொல்கிறார்.
ரக்ஷணா கேட்டுக் கொண்டதால் புதரில் சிக்கியிருந்த அந்த நாய்க்குட்டியை ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறான். வீட்டுக்கு
வந்த பிறகும் அவனுக்கு நிம்மதி இல்லை.
ஈஸ்வரியின் ஆலோசனையின் பேரில்,
ஃபயர் சர்வீஸை தொடர்பு கொள்கிறான். அவர்கள், அது தங்கள் பணியல்ல என்றதும் வனத்துறையை
தொடர்பு கொள்கிறான். ஞாயிறு என்பதால் எந்தவிதப் பயனும் இல்லை. மறுநாள் மீண்டும் தொடர்பு
கொண்டதும் வனத்துறை அலுவலகர், அந்தக் கால்நடை மருத்துவமனை இருக்கும் ஏரியா மாநகராட்சி
கவுன்சிலரைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறார். மாநகராட்சி கவுன்சலரின் நம்பரைத் தேட வேண்டுமே
என்று நினைத்த போது சென்னை டைம்ஸ் என்ற பத்திரிகையில் நிருபராக இருக்கும் நண்பன் ராகவன் நினைவுக்கு வருகிறது. தொடர்பு கொள்கிறான்.
ராகவன் என்ன செய்கிறான்? அதன்
பின் நடப்பது என்ன? நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? நாய்க்குட்டி காப்பாற்றப்பட்டதா?
முடிவு, பரவாயில்லையே! இப்படி நடக்கிறதா? என்ற ஆச்சரியம் எழுந்தாலும், செல்லப்பிராணிகள் மீதான கரிசனம் வெளிப்படும் அழகான கதை.
ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
சிவப்பு விளக்கு
பவானி சற்குணசெல்வம்
ஆசிரியர் - இலங்கையில் பிறந்தவர்.
கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் பட்டம் பெற்று அங்கு
கடமையாற்றியவர். புலம் பெயர்ந்து நெதர்லாந்தில் வசிப்பவர். டச்சுமொழியைக் கற்று
உளவியல் மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். அகதிகளுக்காகப் பணியாற்றியவர்.
அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். கவிதைத் தொகுப்பு ஆய்வுக் கட்டுரைகள் என்று பல
வெளியீடுகள். பைந்தமிழ்ச்சாரல் எனும் தளம் அமைத்து சர்வதேச ரீதியாக நூல்களின் திறனாய்வு,
பட்டிமன்றம், கவியரங்கு என்று பல நிகழ்வுகளை நடத்தி இணையத்தில் பதிவாக்கி
வருகிறார். இன்னும் நிறைய சொல்லலாம்.
கதை - இலங்கைத் தமிழே நம்மை ஈர்க்கும்தானே! கதைசொல்லி மூலம் கதை இலங்கைத் தமிழில் செல்கிறது. கதைசொல்லி அலுவலகக் கூட்டம் முடிந்து வெளியில் வந்து கால்வாயோரமாக நடக்கத் தொடங்குகிறார். அவரெதிரில் ஒரு பெண் மிதியுந்தில் வேகமாக வந்து நிறுத்தி விட்டுத் தன் கைநாடியை வெட்டிக்கொள்வதற்காகக் கத்தியை கொண்டு செல்லும் நேரம், கதைசொல்லி பாய்ந்து சென்று அதைப் பிடுங்கி கால்வாயில் வீசுகிறார்.
அப்பெண் மன உளைச்சலில் இருப்பது
தெரிகிறது. அவள் விரக்தியில் திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்கிறாள். கதைசொல்லி
அவளை நிறுத்தி அவளுடன் பேச்சுக் கொடுக்க யத்தனிக்கிறார். என்ன மொழி என்று
கேட்கிறார். அவள் ஆங்கிலம், டச்சு என்றதும் டச்சு மொழியில் உரையாடத்
தொடங்குகிறார்.
"நீ என்ன தொழில் பார்கிறாய்" - கதைசொல்லி 'தன்னிச்சையாகத் தொழில் புரியும்
விபச்சாரி' இது அவளின் பதில். எப்படி எதனால்? என்று கதைசொல்லி கேட்க அவள் தன் கதையை
விவரிக்கிறாள்.
அவளுடைய அம்மா நெதர்லாந்துக்காரர்.
அப்பா குருசோ நாட்டைச் சேர்ந்தவர். ஒரே பெண் இவள் என்பதால் செல்லமாக வளர்கிறாள்.
அப்பா பாதுகாப்புப் படைப்பிரிவில் இருந்ததால் வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர். ரஷ்ய
நாட்டுப் பெண்ணுடன் காதல்வர அவள் அம்மா பிரிகிறார். அவளைத் தன் தங்கையின்
வீட்டிற்கு அனுப்புகிறாள். அங்கு அவளுடைய சித்தி நன்றாகக் கவனித்துக் கொண்டாலும்,
சித்தாப்பாவும், சித்தியின் குழந்தைகளும் அவளைத் துன்புறுத்துகின்றனர்.
பெற்றோரின் அன்பிற்காக ஏங்குகிறாள்.
மனஅழுத்தங்களுக்கு ஆளாகி, சித்தி வீட்டிலிருந்து பிரிந்து, தன் சிறு வயது ஆசையான
பியானோ வாசிக்கக் கற்றுக் கொள்கிறாள். கற்றுக் கொடுப்பவருடன் பல இசைக்கச்சேரிகள்
செய்கிறாள். அவர் அவளுக்கு அப்பா வயது. இவள் அவரைக் காதலிக்கத் தொடங்குகிறாள்.
ஆனால் அவர் அவளுக்கு அறிவுரை கூறி விலகுகிறார். அவள் பின்னர் தன் நட்புகளுடன் மது,
இசை என்று வயிற்றுப் பிழைப்பு, கூடவே உடல் தேவைக்கு விபச்சாரத் தொழிலில்
ஈடுப்படுகிறாள்.
கடைசியில் அவள் வந்து செட்டில் ஆவது
"சிவப்பு விளக்கு" பகுதியில். அங்குதான் அவள் தற்கொலைக்கு உந்தப்படும்
சம்பவம் நடக்கிறது. என்ன சம்பவம் அது?
ஒரு குழந்தைக்குப் பெற்றோர் எவ்வளவு
முக்கியம், வளர்ப்பு எவ்வளவு முக்கியம் என்பதுதான் இக்கதையின் அடிநாதம்.
மனதைக் கொஞ்சம் வருத்திய கதை. இப்படி
எத்தனைப் பெண்கள், உலகம் முழுவதும் என்று மனதின் ஓரத்தில் வலி.
கதாசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்!
தராசு
சந்துரு மாணிக்கவாசகம்
ஆசிரியர் - சென்னை, அரசு திரைப்படக்
கல்லூரியில் திரைக்கதை எழுதுதல் மற்றும் இயக்குநருக்கான பட்டயமும் பெற்றுள்ளார்.
மத்திய மாநில அரசுத் துறைகளுக்கான ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். இரு
திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 2015 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படம் மூலம்
இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். விருதுகளின் பட்டியல் மிகவும் பெரியது. இடம்
போதாது! விருதுகளின் நீளமான பட்டியலில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின்
சிறந்த சிறுகதைக்கான விருதும் அடக்கம்.
கதை - கதைசொல்லியின் வழியாகக் கதை நகர்கிறது. கதைசொல்லியின் அம்மா பெரிய மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகியிருக்கிறார். அவரின் அருகில் கதைசொல்லியின் மனைவி இருக்கிறார். கதைசொல்லி பார்வையாளர் நேரத்தில் அம்மாவைப் பார்க்கச் செல்கிறார். மருத்துவமனை வாசலில் இருக்கும் செக்யூரிட்டி பழனிச்சாமியை அவருக்கு ஏனோ பிடிப்பதில்லை. பகை ஒன்றுமில்லை.
அவன் பெரிய வணக்கம் ஒன்றை வைத்து உள்ளே
அனுப்பும் அவனின் கரிசனத்தைப் பெறுவதில் அவருக்கு விருப்பமில்லை. "காசுக்காக
நடிக்கும் இவனுக்கெல்லாம் மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறதென்ற கோபம்தான் 'அவன்' 'இவன்' என ஏகவசனத்தில் பேச வைக்கிறது", அவரை.
அவர் அம்மாவை ஆம்புலன்ஸில் கொண்டு
வந்து இறக்கிய வேளை முதல் அந்த செக்யூரிட்டி பழனிச்சாமியின் அதீத வரவேற்பும் உபசரிப்பும்
கதைசொல்லியை பயங்கர எரிச்சலுக்குள்ளாக்குகின்றன. போகும் போதும் வரும் போதும் பல்லைக்காட்டியபடி அம்மாவைப் பற்றி விசாரிப்பதுமான அவன் செய்கை அவருக்கு, அவன்
முகமூடியை ஒட்டிக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது.
அவ்வப்போது அம்மாவின் அறைக்கே வந்து
விசாரிப்பதுமாக இருக்கிறான் அந்த செக்யூரிட்டி பழனிச்சாமி.
"ஒரு நாளைக்கி எவ்ளோ பேஷன்ட் வர்றாங்க, எல்லாரையுமா இப்புடி ரூம்ல
போயி விசாரிச்சுகிட்டு இருக்கப்போறான்? அவனுக்கு நம்ம மேல ஒரு இது. ஏன் மூஞ்சிய
காட்டுறீங்க?" என்று சொல்லும் அளவிற்கு கதைசொல்லியின் மனைவிக்கு அந்த
செக்யூரிட்டி மீது கரிசனம்.
கதைசொல்லி தன் அம்மாவிடம் பேசி
அம்மாவைப் பேச வைக்க முயற்சி செய்கிறார். டிஸ்சார்ஜ் பற்றி விசாரிக்கிறார்.
பழனிச்சாமி அப்போதும் அறைக்கு வருகிறான். அம்மாவை விசாரிக்கிறான். "வாய்க்கு புடிக்கலன்னாலும் எப்படியாச்சும் கஷ்டப்பட்டு ஆகாரம் எடுத்துக்கங்கம்மா. தெம்பு வந்தாதானே இங்கேருந்து போகமுடியும்?" என்று சொல்லிவிட்டு கதைசொல்லியைப் பார்த்துச் சிரிக்கிறான். ஏதாவது வேண்டும் என்றாலும் இன்டர்காமில் சொன்னால் தான் சென்று வாங்கிவருவதாகச் சொல்கிறான். கதைசொல்லி முந்திக் கொண்டு உதவி தேவையில்லை, தானே வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிடுகிறார்.
டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றால்
செக்யூரிட்டி பழனிச்சாமி ட்யூட்டியில் இல்லாத நேரமாகப் பார்த்து டிஸ்சார்ஜ் செய்ய
வேண்டும் என்று கதைசொல்லி நினைக்கிறார். அந்த அளவிற்கு பழனிச்சாமியின் மீது
அவருக்கு எரிச்சல்.
திடீரென்று, வயிற்றுக்கும்
நெஞ்சிற்கும் இடைப்பட்ட மையப்பகுதியில் வலிப்பதாக அம்மா கைவைத்துக் காட்டும் போது
மூச்சுவாங்குகிறது. நர்சைக் கூப்பிட அவர் வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு
ஓடிச் சென்று ட்யூட்டி டாக்டரை அழைத்துக் கொண்டு வருகிறார். அப்போதைக்கான வலிக்கான
ஊசியைப் போட்டுவிட்டு ரெகுலராகப் பார்க்கும் மருத்துவர் வந்துவிடுவார் என்று
சொல்லிச் செல்கிறார்.
ரெகுலர் டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, "ஆபரேஷன் ஒன்று செய்ய வேண்டியிருக்கும். பயப்பட வேண்டாம்" என்று சொல்லிவிட்டுச்
செல்கிறார்.
கதைசொல்லியும் மனைவியும்
யோசிக்கிறார்கள், செகன்ட் ஒப்பீனியன் கேட்கலாம் என்று. ஆனால் ரிப்போர்ட்ஸ் எல்லாம்
டாக்டரின் டேபிளில். எப்படி செகன்ட் ஒப்பீனியன் பெற முடியும் என்று குழம்புகிறார்
கதைசொல்லி.
அதன் பின் நடப்பதென்ன? பழனிச்சாமியைப் பற்றி ஊகித்துவிடமுடிகிறது. கூடவே முடிவையும் ஓரளவு.
உணர்வுபூர்வமான ஒரு
குறும்படத்துக்கான கதை.
ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
ராக்கி சக்ரா
கணேஷ்
ஆசிரியர் - மதுரையில் பிறந்தவர். தற்போது
கோவையில். இருபது ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றியவர். போட்டித்
தேர்வுகளுக்கும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும்
வழிகாட்டியாகவும், பார்வைத் திறன் அற்றவர்களுக்குத் தேர்வுகளில் விடைத்தாள்
எழுதிக் கொடுப்பவராகவும் இயங்கி வருகிறார்.
கதைப் போட்டிகளில் பரிசுகள் பல வென்றிருக்கிறார். மாணவர்களின் வகுப்புகளை சுவாரஸ்யமாக்க எடுத்த முயற்சிகளின்போது அவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பு இரு நூல்களாக வெளிவந்துள்ளன. வித்தியாசமான வெளியீடு!
கதை - ஆசிரியர் விமானப்படையில்
பணியாற்றியவர் என்பதால் கதையும் இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் உணர்வுகளுடன் களத்தில்
பறக்கிறது! வருடம் 1965. இந்தியா பாகிஸ்தான் போர். சென்றவருடத்து
ஆப்பரேஷன் சிந்தூர் நினைவுக்கு வந்தது.
சந்திரசேகர் எனும் சந்தர், நட்கர்னி
என்ற நாட்டி இருவரும் உற்ற தோழர்கள். போர்விமானங்களின் பைலட்டுகள். பாகிஸ்தான்
எல்லைக்கு சற்று முன்பாக அமைந்துள்ள விமானப்படைத் தளம். சீனாவுடன் நடந்த சண்டையில்
பட்டை தீட்டப்பட்டிருந்த இந்திய ராணுவத்திற்கு அடுத்த சவாலாக 1965ல் "ஆபரேசன்
ஜிப்ரால்டர்" என்று தனது தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியிருந்த நேரம். இந்திய
விமானப்படை தயாராக இருக்க வேண்டிய சூழல்.
சந்தர் தன் அப்பாவிற்குக் கடிதம்
எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு வரும் நாட்டி கிண்டலடிக்கிறான்.
"காதலிக்கு எழுத வேண்டிய நேரத்துல.." என்று
சந்தரும் கிண்டலடிக்கிறான்.
"உனக்கென்னப்பா...எங்க பணியில் போட்டாலும் சுத்திச் சுத்தி உன்னோட ஊரு கிட்டயேதான் இருக்கு.
நெனைச்சா போயிட்டு வந்துருவ. ஒரு நாள் கிடைச்சா கூட போய் உன்னோட காதலியப்
பாத்துட்டு வந்துர்ற.."
மறுநாள் ஆபரேஷன் தொடங்கிவிடும் என்று
பேசிக் கொள்கிறார்கள்.
"சந்தர், ஒரு நாள் பாரேன் ஆர்மியே
தேவைப்படாம போர்விமானங்கள் மட்டுமே களத்துல இறங்கி ஜெயிச்சுக் காட்டும்"
என்கிறான் நாட்டி
("உங்கள் கனவு பலித்துவிட்டது நாட்டி, "ஆப்பரேஷன் சிந்தூர்" அப்படித்தானே நடந்தது!" எனக்கு இப்படி டக்கென்று மனதில் தோன்றியது)
இப்படிப் பேசிக் கொண்டிருந்த
சமயத்திலேயே சைரன் ஒலிக்கிறது. 'என்னது இப்போதே' என்று இருவரும் விரைகின்றனர். இருவரும்
ரிப்போர்ட்டிங் செய்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் பார்த்து பத்திரமாகப் போய்வா என்று சொல்லும் போது, "நாட்டி, நான் 62 லயே ஒரு விபத்தைச் சந்திச்சுட்டேன். நீ இன்னும் சந்திக்கல...என்ன நடந்தாலும் பதட்டப்படாத" என்கிறான் சந்தர்.
"நீ சொல்றது சரிதான்...முதமுறையா நம்ம விமானப்படை ஒரு முழுமையான போரைச் சந்திக்கப் போகுது என்ன வேணும்னாலும் நடக்கலாம்..." - நாட்டி
"பாகிஸ்தான் எல்லைக்குள்ள புகுந்து தாக்கப் போறோம். ஒரே குண்டு மழைதான் ஒவ்வொரு முறை போறப்பயும் நொறுக்கித் தள்ளிட்டு வரணும்" என்று குதூகலமாகப் பேசுகிறான் சந்தர்.
இன்னும் 60 நிமிடங்களில் தாக்குதல்
தொடங்கும் என்று கமாண்டர் சொல்லும் போது, 'எதற்கு 60 நிமிடங்கள் காத்திருக்க
வேண்டும்?' என்று சந்தரின் கைகள் தன் ஹெல்மெட்டை இறுகப் பிடிக்கின்றன.
நட்கர்னியோ தன் காதலி இருக்கும்
திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
"ஒவ்வொரு முறை குண்டு போடும்
போதும், நீ சீக்கிரம் ஊருக்குப் போகணும்னு நினைச்சுக்கிட்டே போடுறேன்" என்று
சந்தர் சொல்லவும் அருகிலிருந்தவர்களும் சிரிக்கிறார்கள்.
புறப்படும் நேரம் வரவும், சந்தர், நட்கர்னியைப் பார்த்து கை அசைத்து, அத்திசையைக் காட்டித் தான் பார்த்துக்
கொள்வதாகச் சொல்கிறான். மற்ற விமானிகளும் அத்திசையை நோக்கி சல்யூட் அடிக்கின்றனர்.
குடும்பத்தைப் பிரிந்து, நாட்டைப்
பாதுகாக்க, சட்டென்று தொடர்பு கொள்ள முடியாத தொலைதூரத்தில் இருக்கும் நம்
வீரர்களின் உணர்வுகளும், அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதும் கண் முன் நிழலாடின. இப்படித்தானே பல வீரர்களும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள்! ஒருவருக்கொருவர்
ஆறுதலாக, ஆதரவாக, இல்லையா?
சந்தர் வேகமாகச் செல்கிறான் எதிரில்
பாகிஸ்தான் விமானம் வருகிறது. ஆனால் சந்தரின் இலக்கு அதுவல்ல என்று விலகிச் செல்ல வேண்டும் என்று கமாண்டரிடம் இருந்து தகவல் வருகிறது. சந்தர் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதும்
பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அலறுகின்றன.
தளத்தில் இருக்கும் தளபதிகளுக்குக் குழப்பம்.
'தடுக்கச் சென்ற நமது விமானங்கள் எங்கே? வான்சண்டை நடக்கவில்லையா' என்று.
சற்று நேரத்தில் சந்தரின் விமானம்
மற்றும் பல விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்த தகவல்கள் கிடைக்கின்றன. திரும்பியதும்
ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். சந்தரும் நாட்டியும்
உட்பட.
இடையில் ஒரு சின்ன நகைச்சுவையும்
வருகிறது....
மீண்டும் பாகிஸ்தானை நோக்கிப்
பறக்கின்றன விமானங்கள். இப்போதும் அதே பாகிஸ்தான் விமானம் எதிரில் வருகிறது.
தன்னைத் தடுப்பதற்காக வருகிறது என்று நினைத்த சந்தர் அதைச் சமாளிக்கும் போது, அந்த
விமானத்தின் பாதை மாறுவதை உணர்கிறான். எல்லோரும் சல்யூட் அடித்த நட்கர்னியின் ஊர் திசையை நோக்கி அந்த
விமானம் செல்வதாகப்பட்டது அவனுக்கு.
உடனே, அவன் தன் தளத்திற்கு விஷயத்தைச்
சொல்லாமல், தன் விமானத்தைத் திருப்பி பாகிஸ்தான் விமானத்தை எதிர்கொள்கிறான்.
பாகிஸ்தான் விமானத்திலிருந்து வந்த குண்டுகளிடமிருந்து தப்பி, அந்த விமானத்தின்
மீது குண்டு போட்டு நொறுக்கிவிடுகிறான்.
அதன் பின் அவர்களின் முகாமை நோக்கி முன்னேறும் போது, ஒரு பீரங்கியிலிருந்து வரும் குண்டு சந்தரின் விமானத்தைத் தாக்குகிறது.
அதன் பின் நடப்பது என்ன? சந்தர்
தப்பிக்கிறானா? நட்கர்னியின் ஊர் பிழைக்கிறதா?
கிட்டத்தட்ட "ஆப்பரேஷன் சிந்தூர்'
போல இக்கதை என்னைக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைத்ததால் இங்கும் கதையைப் பற்றிச்
சொல்கையில் பெரிதாகிவிட்டது.
நம் நாட்டு எல்லைப் போர்கள், குறிப்பாக பாகிஸ்தானுடன், அதில்
நாம் வெற்றி கொள்ளும் தருணங்கள், நம் வீரர்கள் எதிரிகளை அடித்து நொறுக்குவதை எல்லாம் வாசிக்கும் போதும், காணொளியில் பார்க்கும் போதும் பதற்றமும் பரவசமும் நம்மைத் தொற்றிக் கொள்ளும் இல்லையா!?
ஆசிரியருக்கு சல்யூட்டுடன், மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
-----கீதா
80 வயது இளைஞர் சொல்லி இருக்கும் ட்விஸ்ட் என்ன என்று படிக்கும் ஆவல் வருகிறது. பார்ப்போம்.
பதிலளிநீக்குவாசித்துப் பாருங்க முடியும் போது, ஸ்ரீராம்....
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
அர்ஜுனன் அவர்கள் படைப்பு செல்லப் பிராணிகள் பற்றிய கதையா... படித்து விடுவோம். எப்போன்னு கேட்காதீங்க.. சீக்கிரமே!
பதிலளிநீக்குஹாஹாஹாஅ....எப்ப முடியுதோ வாசிங்க ஸ்ரீராம்.
நீக்குகீதா
சிவப்பு விளக்கு கதை வேதனைக்கதை என்று தெரிகிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல நாட்டுக்கு நாடு சோகம்!
பதிலளிநீக்குஆமாம்.
நீக்கு// வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல நாட்டுக்கு நாடு சோகம்!//
வரியை ரசித்தேன், ஸ்ரீராம்.
மனுஷங்க நிறைந்ததுதானே உலகம்...
கீதா
பதிலளிநீக்குநீங்கள் சொல்லி இருப்பது போல தராசு கதை ஒரு குறும்படத்தின் போக்கிலேயே நகர்கிறது. முடிவை அறியும் சுவாரஸ்யமும் வருகிறது..."நான் நினைத்தது சரிதானா?' என்று பார்க்கும் ஆர்வம்! சமயங்களில் வாசகனை அப்படி நினைக்க வைத்து அழைத்துச் சென்று கதாசிரியர் ஏமாற்றி விடுவதும் உண்டு!
நான் நினைத்தது சரியாக இருந்தது ஸ்ரீராம், அது போல உங்களுக்கும் சரியாகத் தோன்றலாம்.....
நீக்குஎன்னுடைய யூகத்துக்கு ஒத்துப் போனதால், கதாசிரியர் ஏமாற்றவில்லை!!!!! ஹாஹாஹா
நன்றி ஸ்ரீராம்
கீதா
ராக்கி சக்ரா சீக்கிரம் படிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. எனக்கு சுஜாதாவின் வானமெனும் வீதியிலே மற்றும் இன்னொரு கதை சட்டென தலைப்பு நினைவுக்கு வரவில்லை.. அதுவும் நினைவுக்கு வந்து விட்டது.
பதிலளிநீக்குஎனக்கும் சுஜாதாவின் கதை நினைவுக்கு வந்தது அது பங்களதேஷ் போர் கதைக்களமாக இருந்த ஒன்று என்று நினைவு எனக்கும் தலைப்பு சட்டென நினைவுக்கு வரவில்லை.
நீக்குவானமெனும் வீதியிலே வாசித்திருக்கிறேனா ஒரு வேளை அதுதான் அந்தப் போர் விவரங்கள் அடங்கிய ஒன்றோ...
பார்க்க வேண்டும்
கீதா
ஆனால் இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கும் ஸ்ரீராம்? பல புத்தகங்க்ள் படிக்க வேண்டியிருக்கு. சிலவற்றை எடுத்தால் சில மணி நேரம் படிக்க முடிகிறது. ஆனால் தொடர்ந்து படிக்க இயலவில்லை
நீக்குஎனக்குமே கூட அப்படித்தான் நெல்லை. கொஞ்ச நேரம் தான் வாசிக்க முடிகிறது. பல வேலைகள். அவ்வப்போதுதான் முடிகிறது.
நீக்குஸ்ரீராமிற்கும் அதேதான் என்று நினைக்கிறேன்.
கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து....தினமும் கொஞ்சம் வாசிக்க வேண்டும் என்று வைத்திருந்தாலும் சில சமயம் விட்டுப் போகிறது. இருந்தாலும் கூடியவரை முயற்சி.
கீதா
// ("உங்கள் கனவு பலித்துவிட்டது நாட்டி, "ஆப்பரேஷன் சிந்தூர்" அப்படித்தானே நடந்தது!" எனக்கு இப்படி டக்கென்று மனதில் தோன்றியது) //
பதிலளிநீக்குகீதா.. சம்பவம் அப்போது நடந்ததாகச் சொன்னாலும் கதை இப்போதுதானே எழுதப்பட்டிருக்கிறது! நீங்கள் நினைப்பதை மனதில் வைத்துதான் கதாசிரியர் அதை எழுதி இருக்கிறார்!
ஆமாம் ஸ்ரீராம். அது புரிந்தது. அறியவும் முடியுமே. ஆசிரியரும் அந்த உரையாடலை வைத்திருப்பதிலேயே தெரிந்துவிடுகிறதே....
நீக்குஇது அந்தக் கதாபாத்திரத்துக்குச் சொன்னதாக...அவ்வளவு ஒன்றிவிட்டேனாம் ஹிஹிஹிஹி...நமக்குதான் இந்தப் பாகிஸ்தானோடு போர், நாம தகர்த்தோம்னாலே மெய்சிலிர்க்குமே!
நன்றி ஸ்ரீராம்.
கீதா
எத்தனை விதவிதமான சிறுகதைகள்... எவ்வளவு கதையாசிரியர்கள். அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.
பதிலளிநீக்குஇவற்றை வாசித்து நல்ல விமர்சனம் எழுதியுள்ள உங்களைப் பாராட்டுகிறேன்.
வாங்க நெல்லை.
நீக்குஉண்மைதான். விதம் விதமான சில வித்தியாசமான கருவைக் கொண்ட கதைகள்.
அவற்றையும் அவற்றை எழுதிய ஆசிரியர்களையும் எல்லோரும் தெரிந்துகொள்ளலாமேன்னும், எவ்வளவு பேர் எழுதுகிறார்கள் என்பது தெரிவதற்காகவும், எழுதுபவர்கள் எப்படிப் பெருமைகளை கொண்ட புன்புலம் கொண்டவர்கள் என்றும், கதையின் ஒரு சிறு பகுதியைச் சொல்லும் போது அதிலிருந்து நமக்கு வேறு கதைகள் எழுத ஒரு கரு கிடைக்கும் என்றும், எனக்கு ஒரு பயிற்சியாகவும் தான், நெல்லை இங்கு எழுதுவது.
நன்றி நெல்லை
கீதா
கதையிலிருந்து புதிய கதைகள் எழுத கரு கிடைக்கும்தான்.
பதிலளிநீக்குஅப்படி எழுதினால், கதாசிரியர்கள் சண்டைக்கு வரமாட்டாங்களோ (ஒருவேளை பரிசு பெற்றால்...ஹிஹிஹி)
நெல்லை, நீங்க எங்க வரீங்கன்னு புரியுது ஹாஹாஹாஹா....
நீக்குஅதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், ஒரு இன்ஸ்பிரேஷன் கிடைத்து நம் பாணியில், வேறு வகையில் கொண்டு போய்டலாமே!!!
பெரிய பெரிய எழுத்தாளர்களுமே கூட கிட்டத்தட்ட ஒரே கரு ஆனால் வெவ்வேறு வகையில் கொண்டு சென்று முடித்திருப்பவையும் இருக்கின்றனதானே...அப்படி...
கீதா