=======>முதல் பகுதி<=======
சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன். இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால், ஆசிரியர்கள் தயவாய் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 2/7
உதிரத்தில் கலந்த உதிரம்
நெய்வேலி
பாரதிக்குமார்
ஆசிரியரின் இயற்பெயர் ச. செந்தில்குமார்.
சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று பல வெளியீடுகள், இலக்கியப் போட்டிகளில் 59 பரிசுகள், குறும்படங்கள் இயக்குதல், ஒளிப்பதிவு என்று இன்னும் நிறைய
பெருமைக்குரிய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டவர்.
கதை - இரண்டாம் உலகப்போரின் போது
உருவாக்கப்பட்ட பதுங்கு குழிகளை, உக்ரைன் போரின் போது, ஸப்பரீஷியா மெடிக்கல் காலேஜ்
நிர்வாகம் சீர் செய்து தன் மாணவர்களுக்காகக் கொடுத்திருந்த குழி ஒன்றில் இந்திய மாணவ
மாணவியர் மற்றும் உள்ளூர் மாணவ மாணவியர் பதுங்கியிருக்கின்றனர். அங்கு கொஞ்சம் வித்தியாசமான
தோற்றத்துடன் வரும் விட்டலி ஸ்காகுகன் ஆன்ட்ரி என்பவனுக்குப் பதுங்கு குழியில் இடமில்லை
என்று குழியின் கதவை சாத்துகிறான் இந்திய மாணவக் குழுவை வழிநடத்தும் பாலகுமார்.
பதுங்கு குழியின் மேலே குண்டுகள்
விழுந்து வெடிக்கும் சத்தமும் எப்பொழுதாவது டிரக்குகள் ஊர்ந்து செல்லும் சத்தமும் கேட்டுக்
கொண்டே இருக்கிறது. போர் உக்கிரமாக நடக்கும் அப்படியான இக்கட்டான சூழலில் இந்திய மாணவர்களைத்
திரட்டி, எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று சொல்கிறான், பாலகுமார். இரவு நேரத்தில்
மட்டும் கொஞ்சம் குண்டு சத்தம் குறைவாக இருப்பதால் உள்ளூர் மாணவர்ளை அனுப்பிட நிர்வாகம்,
பேருந்தை ஏற்பாடு செய்கிறது.
இந்திய மாணவர்களின் நிலைமை?
"எப்படியாவது பக்கத்து நாட்டிற்கு
வந்துவிடுங்கள். அங்கிருந்து இந்தியாவிற்கு விமானம் ஏற்பாடு செய்கிறோம்" என்று
நிர்வாகம் சொல்லிவிடுகிறது.
எப்படி பக்கத்து நாட்டிற்கு வெளியேறப் போகிறார்கள்? எந்தெந்த நாடுகளுக்குப் போக முடியும்? அதற்கு பாலகுமார், தான் வகுக்கும் திட்டத்தை அதை மற்றவர்களுக்கு எப்படி விளக்குகிறான், எப்படி வெளியேறுகிறார்கள்?
வெளியேற அந்த எரிச்சலூட்டிய சிரிப்புடன் இருந்த விட்டலி
ஸ்காகுவன் எப்படி உதவுகிறான், ஆபத்தான அச்சூழலில் தடைகளைத் தாண்டி எப்படி நாட்டின்
எல்லையில் இருக்கும் பாலத்தை அடைகிறார்கள், அவ்வழிதான் ரஷ்யப்படைகள் வரும் என்ற நிலையில்
அப்பாலத்தை அடையும் போது என்ன நிகழ்கிறது? அந்த விட்டலி யார்? அவனுக்கும் அந்தப் பாலத்திற்கும்
என்ன சம்பந்தம்? இந்திய மாணவர்கள் தப்பித்து வெளியேற முடிந்ததா?
மீதி வெள்ளித் திரையில் என்பது
போல புத்தகத்தில் வாசிக்கும் போதுதான், ஆசிரியரின் இந்த வித்தியாசமான கதையை அனுபவித்து வாசிக்க முடியும்.
நம்மை அப்படியே உக்ரைன் போர்க்களத்திற்கு
அழைத்துச் சென்றுவிடுகிறார். அங்குள்ள ஊரின் பெயர்கள், காட்சிகள் என்று நாமும்
அந்த மாணவர்களுடன் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார் ஆசிரியர்.
உக்ரைன் போர் உக்கிரமாக நடந்த
போது, கணினியில் நேரடியாகக் காண live
camera Real-time Feeds from Ukraine
என்று ஓரிரு தளங்கள் இருந்தன. அதில் நான் போர்க்காட்சிகளையும்
மக்களின் நடமாட்டத்தையும் பார்த்திருக்கிறேன். சைரன் சத்தம் கேட்கும். குண்டு பாய்வது
தெரியும். போர் நடக்கும் போதும் கூட மக்கள் அங்குமிங்கும் போய்க்கொண்டும், வண்டிகளில் சென்று கொண்டும், கடைகளுக்குச்
சென்று கொண்டும் இருந்ததைப் பார்த்த போது "பக் பக்" என்றிருந்தது. எப்படி
அவர்கள் இப்படி இருக்க முடிகிறது என்று யோசித்தேன். அப்படிக் காட்சிகளைப் பார்த்ததால்,
கதையோடு ஒன்றி வாசிக்க முடிந்தது.
குறும்படம் இயக்குவதிலும் வல்லவரான ஆசிரியரின் கதை விவரிப்பு
காட்சிகளாய் மனதில் ஓட ஒரு பதற்றத்துடன் வாசித்தேன் என்று சொல்லலாம். கடைசி க்ளைமாக்ஸ்
உணர்வுபூர்வமான ஒரு கருத்துடன் கொஞ்சம் நம்மை உலுக்கவும் செய்யும். அருமையான கதை.
ஈரம்
பரிவை
சே குமார்
நம் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமான
ஆசிரியரைப் பற்றிய எந்த அறிமுகமும் தேவையில்லை என்று நினைக்கிறேன். பரிசுகள் புத்தக வெளியீடுகள் என்று எழுத்துலகில் கலக்குபவர். வளர்ந்து வரும்
என்று சொல்வதைவிட எழுத்துலகில் 'வேர்கள்' என்ற வரது படைப்பைப் போன்று ஊன்றிவிட்ட எழுத்தாளர் எனலாம்.
கதை - கதைசொல்லி வழியாகக் கதை
ரயிலில் பயணிக்கிறது. கதை சொல்லும் கதாபத்திரத்துடன் பக்கத்து இருக்கையில் பயணிக்கும்
பயணி தன் கைப்பையை மடியில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு பயணிக்கிறார்.
கதை சொல்லி அவரிடம் அதைக் கீழேயோ
மேலேயோ வைக்கச் சொன்னாலும் வைக்காமல் அதை மேலும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார் அப்பயணி.
இருவருமே வெவ்வேறு விஷயமாக இராமேஸ்வரம் செல்கிறார்கள். இருவரும் உரையாடிக் கொண்டே பயணிக்கிறார்கள். கதையும் பயணிக்கிறது. அவர்களின் உரையாடல்கள் மூலம் இருவரின் பின் புலம், அனுபவங்கள் என்று கதை விரிகிறது.
கதை சொல்லியின் சக பயணியின் அப்பா குடிகாரார். அம்மா வீட்டு வேலை செய்து 6 பிள்ளைகளையும் (பயணியையும் சேர்த்து)
படிக்க வைக்கிறாள். அப்பா குடியில், கஞ்சாவுக்கும் அடிமையாகிக் குடும்பம் இருப்பதே
தெரியாமல், தன் மனைவியை அடிப்பது பிள்ளைகளை அடிப்பது என்று பொறுப்பற்ற குடும்பத் தலைவனாக,
அம்மாதான் எல்லாமே என்பதாக பொறுப்புகள் அவள் தோளில்.
சக பயணி சொல்லச் சொல்ல, கதை சொல்லியும்
தன் வாழ்க்கை குடும்பம் பற்றிச் சொல்லிக் கொண்டு வருகிறார். அவர் அப்பாவும் சின்ன வயதில்
மறைந்திட, குடும்பம் அம்மாவின் பொறுப்பில். உறவுகளின் உதவி எதுவுமில்லாமல். அம்மாவின்
உழைப்பில் எல்லோருமே படித்து அக்காலத்திலேயே எல்லாரும் டிகிரி முடிச்சதையும் பெருமையுடன்
சொல்கிறார் கதை சொல்லி.
சகபயணி தன் அப்பாவிடமிருந்து, தான்
எப்படி இருக்கக் கூடாது என்பதையும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கற்றதாகச் சொல்கிறார்.
9 ஆம் வகுப்பு வரை படித்து அதன் பின் படிப்பை விட்டு ஒவ்வொரு வேலையாகப் பார்த்து பின்னர்
இப்போதுதான் ஓரிடத்தில் செட்டிலானதைச் சொல்கிறார்.
தன் சிறு வயதில் ஒருவர் தன்னை
'கஞ்சாக் குடிக்கி மகனே' என்று திட்டுவதையும் அப்படியே பலரும் திட்டுவது அவர் மனதில் வைராக்கியம் பிறந்திட
அதே மனிதரின் நிலத்தைப் பின்னர் வாங்கி அங்கு இரு மாடிகளுடன் வீடும் கட்டுகிறார்.
"படிப்பை விட வாழ்க்கை நிறைய
அனுபவங்கள் கற்றுக் கொடுத்திருக்குதுல" என்று சொல்லி, அவர் கைகளைப் பிடித்துக்
கொண்டு நெகிழ்கிறார் கதை சொல்லி.
பேச்சு எங்கெங்கு பயணித்தாலும், அப்பாவைப் பிடிக்காவிட்டாலும் பயணியின் பேச்சு அப்பாவைச் சுற்றியேதான் வருகிறது.
கதையும் பயணம் செய்ய கடைசியில் பயணி சொல்லும் விஷயம் கதை சொல்லியை உடைய வைக்கிறது. அது என்ன விஷயம்?
இதன் பின்தான் கதையின் முக்கிய அம்சம். அது என்ன? அப்பயணி இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அப்பையில் என்ன இருக்கிறது? கதை "ஈரம்" வழி, ஆசிரியர் குமார் என்ன சொல்கிறார் என்பதைக் கதையை வாசிக்கும் போது எப்படிக் கதை சொல்லி, "என்ன ஒரு மனிதன் இவன்" என்று வியந்து உடைகிறாரோ அப்படியே நாமும் அப்பயணியைப் பற்றி வியப்போம், இப்படியும் ஒரு மனிதரா என்று.
சில இடங்கள் யோசிக்க வைக்கின்றன. பரிவை சே குமார், உணர்வுபூர்வமான கதையை தன் பாணியில் பயணிக்க வைத்திருக்கிறார்.
வாழ்த்துகள், பாராட்டுகள் குமார்.
சுருதிபேதம்
வ.வெ.சு
(வள்ளியூர் வேங்கடராமன் சுப்ரமணியன்)
ஆசிரியரைப் பற்றிச் சொல்ல நிறைய
இருக்கின்றன. வானொலியிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் அறிவியல், க்விஸ், மெல்லிசை,
கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தினமணியில் சுயமுன்னேற்றம்
தொடர், மற்றும் அம்மன் தரிசனம் ஆன்மிகத் தொடர் எழுதியிருக்கிறார். இப்போதும் நேரடி
நிகழ்வுகள் நடத்தி வருகிறார்.
வள்ளியூர் என்பதைப் பார்த்ததும்
ஒரு சின்ன பூரிப்பு. வள்ளியூரில், பெருமாள் கோவில் தெருவில் நான் இருந்த வருடங்கள்
நினைவுக்கு வந்தன.
கதை - இக்கதையும் கதை சொல்லி வழியாக
நகர்கிறது. கதை சொல்லியின் பால்ய சினேகிதனான,
கர்நாடக சங்கீதத்தில் வித்வானாக, குருவாக இருக்கும் ராமசுப்பு கதை சொல்லியை அழைத்துப்
பேசுவதில் கதை நகர்கிறது.
ராமசுப்பு, தன் நண்பரிடம் (கதை
சொல்லி), "மணி நான் எல்லாத்தையும் விட்டுடலாம்னு இருக்கேன், நான் பண்ணறது சரியா
இல்லையான்னு தெரியலை அதுக்குத்தான் ஒன்னக் கூப்பிட்டேன்" என்று ஆரம்பிக்கிறார்.
"எல்லாத்தையும் விடப் போறேன்னா
என்ன அர்த்தம்"? என்று கதை சொல்லி மணி கேட்டிட, தான் சங்கீதம் பாடுவதையும், கற்றுக்
கொடுப்பதையும் விட்டுவிடப் போவதாகவும், தனக்கு நேரும் அபகீர்த்தியோடு எதுக்குப் பாடணும் என்று
கேட்கிறார்.
காரணம், தன் சீடர்களில் மிகவும்
சிறந்த சீடனான விஸ்வேஸ்வரனை அவன் பெயரை 'விஸ்வா' என்று சுருக்கிப் பல இடங்களில்
பிரபலப்படுத்தி ராமசுப்புவின் சிபாரிசில் முன்னுக்கு வந்து டாப் கியரில் பயணிக்கும் விஸ்வா சமீபகாலமாக,
புரட்சி என்ற பெயரில் அவன் செய்யும் செயல்களால் கர்நாடக சங்கீத உலகில் சர்ச்சைக்குரியவனாகிறான்.
"நீதானே விஸ்வா ன்னு சுருக்கின"
என்று நண்பர் கேட்க அதற்கு ராமசுப்பு, "ஆமாண்டா மணி! அதான் என் முதல் தப்பு. அவன்
பேர்ல இருந்த ஈஸ்வரனை எடுத்துட்டேன் இல்லியா.."
ஆசிரியரின் இந்த வரியை நான் மிகவும்
ரசித்தேன்.
விஸ்வா, ராமசுப்புவை பற்றிச் சொல்லியதை பலரும் அவருக்குப் ஃபோன் போட்டுத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்கத்தான்
இப்படி ஒரு முடிவு அதன் பின் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்களே என்று ஆதங்கத்துடன் விவரிக்கிறார்.
கதாசிரியர் கதையில் குறிப்பிடும் அந்தப்
பாடகர் யதார்த்தத்தில் யார் என்பது நம் மனக்கண்ணில் வருவதைத் தவிர்க்க முடியாது!
கடைசியில், ராமசுப்பு தன் நண்பர் மணியிடம் (கதை சொல்லி) கேட்கிறார், தான் எப்படி
அறிக்கை கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கச் சொல்லி.
அதுவரை ராமசுப்பு சொல்லியதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் நண்பர் மணி, ராமசுப்பு மனதில் உள்ளதை எல்லாம் கொட்டியதும் கொஞ்சம் நிம்மதியாக உணர்வது அவர் முகத்தில் தெரிவதைக் கண்டதும், அப்போது தான் சொல்ல நினைத்ததைச் சொன்னால் அவர் கேட்கக் கூடும் என்று ராமசுப்புவிடம் கேட்கிறாரே ஒரு கேள்வி, அதுதான்..... பல சமயங்களில் கச்சேரிகளில் மேளகர்த்தா ராகங்களையும் விட, இடம்பெரும் ஒரு சுருதிபேத ராகம் கச்சேரியை அழகாக்கித் தூக்கி நிறுத்துவது போல, மணி கேட்கும் அந்தக் கேள்வி, கதையைத் தூக்கி நிறுத்துகிறது.
கதை அழகான 'சுருதிபேதம்'!
மூத்த ஆசிரியருக்கு வாழ்த்துகள்,
பாராட்டுகளுடன், என் வணக்கங்களும்.
மன்னிப்பாயா
த. வேல்முருகன்
ஆசிரியரின் வயது 31 ஆனால் வென்றிருக்கும்
பரிசுகளைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. இந்த இளம் வயதிலேயே பல பரிசுகள்!
கதை - மெதுவாக நினைவிலிருந்து
நீங்கியிருக்கும் முதல் மனைவிக்கும் தனக்கும் பிறந்த மகன் தன்னை அழைத்து சந்திக்க
வேண்டும் என்று சொல்வதோடு தன் அம்மாவிடம் ஒரே ஒரு முறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னால்?
நிரஞ்சன் அமெரிக்க வாசம். ஒரு
ஃபோன் வருகிறது. "மிதுன், கௌரியின் மகன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு. நிரஞ்சன் அதிர்ச்சியடைகிறான்.
மெதுவாக மறந்து போன உறவான முதல் மனைவி. மகனின்
குரல் வழி இடியாக விழுந்து பிளந்திட தூக்கமில்லாமல் தவிக்கிறான். (அவனுடைய தற்போதைய
மனைவி ஷர்மி).
ஃப்ளாஷ்பேக் - கௌரியும் நிரஞ்சனும்
காதலித்து மணம் புரிகிறார்கள். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டதால் நிரஞ்சனின்
வீட்டினர் துரத்தித் துரத்தித் தேடுகிறார்கள். நட்புகள் பலரும் கைவிட, கஷ்டப்படும்
ஜோடிகளுக்கு ஷாஜி என்பவன்தான் கை கொடுக்கிறான். புனேவில் நிரஞ்சனுக்கு ஒரு ஹாஸ்பிட்டலில்
ட்யூட்டி டாக்டர் வேலையும் வாங்கிக் கொடுக்கிறான்.
நிரஞ்சன் கௌரியை அக்கறையுடன் நன்றாகக்
கவனித்துக் கொள்கிறான். கௌரி கர்ப்பமாகும் போது இன்னும் அதிகமாக அவளைக் கவனித்துக்
கொள்வதோடு குழந்தை பிறக்கும் இரு மாதங்கள் முன்னரே குழந்தைக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கி
வைப்பதோடு, பிரசவத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்து கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்
கொள்கிறான்.
குழந்தையும் பிறக்கிறது. நிரஞ்சனின் பொறுப்பும் கூடுகிறது. கௌரி மட்டுமே உலகம் என்றிருந்தவனுக்குத் தேவைகள் கூட செலவுகளும் கூடிட, அதே சமயம் ட்யூட்டி டாக்டரிலிருந்து ஜெனரல் டாக்டராக பதவி உயர்வும் கிடைத்திட, இரவு பகல் பாராமல் உழைக்கிறான். இதுவரை ஃப்ளாஷ்ஃபேக்.
இதற்குப் பிறகு நிகழ்காலத்திற்கு வருகிறது. நுவார்க் ஏர்போர்ட்டிற்குச் செல்கிறது. மகன் மிதுன் நியூஜெர்சிக்கு ஒன்றரை மாத ட்ரெயினிங்கிற்காக வந்து இறங்கியவன் நுவார்க்கில் நிரஞ்சனை சந்திக்கிறான். மிதுனை ஹோட்டலுக்குக் காரில் அழைத்துச் செல்லும் போது மிதுன் சின்னக் குழந்தையாக இருந்த போது அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைச் சொல்லும் போது நிரஞ்சனுக்குக் கண்கள் கசிகின்றன.
ஹோட்டலுக்குச் சென்று பெட்டியை
வைத்துவிட்டு, உணவகத்திற்குச் சென்று அமரும் போது இருவருமே ஒருவிதமான சங்கடமாக உணர்கிறார்கள்,
மிதுன் ரெஸ்ட்லெஸாக இருப்பதைப் பார்த்து நிரஞ்சன் கேட்கும் போது, தனக்காக ஒன்றே ஒன்று
செய்ய வேண்டும் என்று மிதுன் கேட்டிட, நிரஞ்சன் அதைச் செய்வதில் தனக்கு மிகுந்த சந்தோஷம்
கிடைக்கும் என்று சொல்லும் போது மிதுன் கேட்கிறான், "ஒரே ஒரு முறை, தனியா கஷ்டப்பட்ட
ஜீவன் எங்கம்மா, உங்க மனைவிகிட்ட மன்னிப்பு கேக்கறீங்களா? அவங்களுக்கு ஆறுதலா இருக்கும்னு
நினைக்கிறேன்"
நிரஞ்சன் விளக்கம் சொல்ல முயலும்
போது, மிதுன் குரல் உடைய தன் வேண்டுகோளை மீண்டும் சொன்னதும், நிரஞ்சன் சரி என்கிறான்.
நிரஞ்சன் மன்னிப்பு கேட்டானா? மிதுனின் ரியாக்ஷன் என்ன? இதுதான் கதையின் முக்கியப் பகுதி என்பதால் நான் சொல்லவில்லை.
வித்தியாசமான கரு. நன்றாக எழுதியிருக்கும் ஆசிரியருக்கு
என் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.
இலக்கணப்
பிழை
விஜி
சிவா
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில்
பிறந்தவர், தற்போது நார்வே நாட்டில் வசிக்கிறார்.
அங்குள்ள குழந்தைகளுக்கு நம் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளான கோலாட்டம், கரகாட்டம்
போன்றவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இவரது படைப்புகள் பல பெரிய பத்திரிகைகளில்
வெளி வந்திருக்கிறது. இப்படிப் பல பெருமைகளை உடையவர்.
கதை - சுந்தரி தன் வீட்டு வேலைக்கு
உதவிக்கு எல்லா வேலைகளையும் சேர்த்து செய்யும் ஒரே நல்ல ஆளாகப் பார்க்கிறாள்.
எத்தனையோ பேர் வருகிறார்கள் ஆனால் எவரும் சரியாக அமையவில்லை.
மகன் தீனா, "நீ நினைக்கிற மாதிரி எல்லாம் வேலைக்காரங்க இருக்க மாட்டாங்கம்மா. அதுங்க புத்தியதான் அதுங்க காட்டும்" என்று சொல்லும் போது சுந்தரி, வேலைக்காரங்களைத் தாழ்வாகப் பேசக்கூடாது உதவி செய்ய வந்தவங்கன்னு சொல்லு என்று கோபமாகிறாள்.
ஒவ்வொரு ஆளாக வரும் போது நேர்முகத்
தேர்வு போன்று சுந்தரி கேள்விகள் கேட்க, அவர்களும், "வாஷிங் மெஷின் இருக்கும்
போது எதுக்கு துணி துவைக்கணும்னு சொல்றீங்க?" என்று ஒவ்வொரு கண்டிஷன் அறிவுரைகள்,
யோசனைகள் என்று சொல்கிறார்கள்.
சுந்தரி காய்கறி வாங்கச் சென்ற
போது அவளுக்குத் தலைசுற்றல் வர, இரு பெண்கள் அவளுடைய பைகளைத் தூக்கிக் கொண்டு வீடு வரை
வந்து உதவிவிட்டுத் தங்களுக்கு ஏதாவது வேலை இருந்தால் கொடுக்கச் சொல்கிறார்கள். அவர்கள் கார்த்திகா. சியாமளா. சுந்தரிக்கு மகிழ்ச்சி. முருங்கைக் கீரையை ஆய்ந்து கொடுக்கச் சொல்கிறாள். ஆனால், கணவனும் மகனும் அவர்களைப் பார்த்ததும்
அதிர்ந்து அவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்று சுந்தரியிடம்
விவாதிக்கிறார்கள்.
அவர்கள் விவாதித்துவிட்டு வெளியில் வரும் சமயம்
அந்த இரு பெண்களும் அங்கு இல்லை. கீரையை ஆய்ந்துவிட்டு, சுத்தப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
சுந்தரி கண்கலங்குகிறாள்.
கணவனும் மகனும் அப்பெண்களைப் பார்த்து ஏன் அதிர்ச்சியடைகிறார்கள்? ஏன் சுந்தரியுடன் விவாதிக்கிறார்கள்? அந்தக் கார்த்திகாவும் சியாமளாவும் யார்? அப்புறம் என்ன நடக்கிறது? என்பதுதான் மீதிக் கதை.
சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்க வேண்டிய உணர்வுபூர்வமான நல்ல கருவும், நல்ல கருத்துகளும் கொண்ட கதை.
ஆசிரியர் விஜி சிவா அவர்களுக்குப்
பாராட்டுகள், வாழ்த்துகள்.
--------கீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக