தலக்காடு - 1 ன் தொடர்ச்சி.
மைசூர் உடையார் வம்சத்தின் ராணியான அலமேலு, சில வரலாற்றுச் சம்பவங்களால் - அப்படியான ஒரு சம்பவத்தில் தன் கணவரை இழந்ததால், சோழர்களுக்கும், உடையார்களின் வம்சத்திற்கும் சாபம் இட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சாபத்தின் விளைவாக, காவிரி நதியின் போக்கு மாறி, மணல் திட்டுகள் உருவாகி,
14 ஆம் நூற்றாண்டில் இந்தத் தலக்காடு நகரத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கோயில்களையும்
(இந்தப் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள், கீர்த்திநாராயணன் கோவில் போன்றவற்றோடு இன்னும்
பல கோவில்களை) மணல் திட்டுகளுக்குள் புதைத்துவிட்டதாம்.
1911 ஆம் ஆண்டிலேயே
ஏறக்குறைய அனைத்துக் கோவில்களும் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டனவாம்.
தோண்டி எடுக்கப்பட்டது என்பது நன்றாகத் தெரியும். இதோ கீழே
சொல்லப்படும் கோவில்கள் கிட்டத்தட்ட 30 ஆடி ஆழப் பள்ளத்தில்தான். அடுத்த பதிவுகளில் படங்களில் காட்டுகிறேன்.
தொல்லியல் துறையினர் மிகுந்த சிரமத்திற்கிடையில் இக்கோவில்களை
மீட்டெடுத்து புனரமைத்துள்ளார்கள். எனினும் மழைக் காலங்களில் இக்கோவில்கள்
மீண்டும் பாதி அளவு மணலில் மூழ்கி விடுவதுண்டாம். மீண்டும் இவற்றைத்
அகழ்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதும் அப்படியா என்று
தெரியவில்லை.
சுவாரசியமான தகவல்.
தலக்காடு பற்றி தி.ஜானகிராமன் “நடந்தாய் வாழி காவேரி” (காலச்
சுவடு பதிப்பகம், 2007. 287 பக்கம்) எனும்
நூல் எழுதியிருக்கிறார். காவிரியின் பிறப்பிடம் முதல் கடலில் சேரும் வரை ‘சிட்டி’யுடன்
(பெ கோ. சுந்தரராஜன்) சேர்ந்து ஜானகிராமன் நடத்திய பயணத்தின் பதிவு அது என்றும் தமிழில்
பயண இலக்கிய நூல்களில் முக்கியமான ஒன்று என்றும் ஜெமோ குறிப்பிடுகிறார்..
தலக்காடு ஒரு பாலைவனத்தை நினைவுறுத்தும் நிலப்பகுதி என்று தி.ஜ வர்ணித்திருக்கிறார். மாபெரும் மணல் மேடுகள், அதில் ஒரே ஒரு கோவிலின் மேல்நுனி மட்டும் தெரிகிறது. மேலும் பல கோவில்கள் மணலில் மூழ்கிக் கிடக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது ஒரு தொன்மமாக மட்டுமே கூட இருக்கலாம் என்று ஜானகிராமன் குறிப்பிட்டிருப்பதாக ஜெமோ சொல்கிறார். - நன்றி ஜெ மோ தளத்திற்கு.
அப்படி அகழ்ந்து எடுக்கப்பட்ட கோவில்களில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள் - பஞ்சலிங்கங்கள்
என்று அழைக்கப்படும் 5 கோவில்கள். பிரசித்தி பெற்றவை.
நாங்கள் பார்த்தவற்றை (பார்க்காதவற்றையும்) வரிசைப்படி கொடுத்திருக்கிறேன்.
1. பாடலேஸ்வரா / வாசுகீஸ்வரா (பாதாளீஸ்வரர்-வாசுகீஸ்வரர்) - பாட(த? தா?)லேஸ்வரா (கன்னடத்தில் 'ட' போட்டிருப்பதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது தமிழில் பாதாளீஸ்வரர் என்று இணையத்தில்.
2. மாரளேஸ்வரா (மருளீஸ்வரர்/மாரளீஸ்வரர்/சைகதேஸ்வரர்)
3. வைத்யநாதேஸ்வரா (வைத்யநாதேஸ்வரர்),
4. அர்கேஸ்வரா (அர்கேஸ்வரர்)
5. மல்லிகார்ஜுனா (மல்லிகார்ஜுனர்) மற்றும்
பஞ்சலிங்கங்களோடு, ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனால்
நிர்மாணிக்கப்பட்ட, கீர்த்தி நாராயணர் கோவிலும் பாடலேஸ்வரா, மாரலேஸ்வரா,
வைத்யநாதேஸ்வரா கோவில்களின் அருகில் இருக்கிறது. இந்தக் கீர்த்தி நாராயணர் கோவில்
பஞ்ச நாராயண கோவில்களில் ஒன்றாம்.
அப்படி எங்களால் நான்கு கோவில்கள் - முதல் மூன்று சிவன்
கோவில்களையும், விஷ்ணு கோவிலான கீர்த்திநாராயணர் கோவிலையும் மட்டும்தான் கவர்
செய்ய முடிந்தது.
அர்கேஸ்வரர் கோவில் இந்தக் கோவில்களில் இருந்து, சற்று
தூரத்தில் இருக்கிறது. மல்லிகார்ஜுனா கோவிலும் சற்று தூரத்தில் ஒரு குன்றின் மீது,
தலக்காடு போகும் சாலையில் பார்த்தேன். படமும் ஓடும் காரிலிருந்து எடுத்த நினைவு
ஆனால் படத்தைக் காணவில்லை! இவை இரண்டையும் கவர் செய்ய முடியவில்லை.
தலக்காடு பீச் பற்றி போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா.
அங்கு அப்பாவை காரில் இருக்கச் சொல்லிவிட்டு, நெல்லை, நான், நம்மவர் மூவரும் இந்த
பீச்சின் அருகிலேயே இருக்கும் கோவில்களுக்கு நடக்கத் தொடங்கினோம்.
பார்க்கிங் பகுதியிலிருந்து சில அடிகள் நடந்தால் இடப்பக்கம்,
கோவில்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் அதில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது.
அவங்க ரெண்டு பேரும் - நெல்லையும், நம்மவீட்டவரும் வேகமா
போறாங்க பாருங்க...
அவர்கள் இருவரும் வேகமாக நடந்திட நான் கொஞ்சம் மெதுவாக அதுவும் புகைப்படங்கள், காணொளிகள் எடுத்துக் கொண்டே வேறு நடந்தேன். என்னைக்
காணவில்லையேன்னு திரும்பிப் பார்க்க....நான் நின்னு நின்னு ஃபோட்டோ, வீடியோ ஷூட்டிங்க்!!!!
நடக்கும் வழி கொஞ்சம் வெறிச் என்று
தோன்றினாலும், சுற்றிலும் மரங்கள் அப்பகுதி அழகாக இருக்கிறது. நான் ரசித்து
ரசித்துப் பார்த்துக் கொண்டே மரங்களை க்ளிக்கிக் கொண்டே....நடந்தேன்.
இதில் நெல்லையை உன்னிப்பாகப் பாருங்க. ஒரு கையில்
மொபைலை வைத்துக் கொண்டு நடந்து கொண்டே எடுத்துக் கொண்டு போறார் பாருங்க.
இப்படித்தான் கோவில்களிலும். நான் எப்படி ஈடு கொடுக்க முடியும் சொல்லுங்க!!!!! அவர் உயரமாவும் இருப்பாரா!!!!!
நெல்லை வேகமாக நடந்து கொண்டே ஒற்றைக் கையில் மொபைலை வைத்துக்
கொண்டு படம் எடுத்திடுவார். எனக்கு அது சுத்தமாக முடியாத ஒன்று. அதுவும் குறிப்பாக, கோவில்களில் அவர் வேக வேகமாக எடுத்த
போது, என்னால் அவர் வேகத்திற்கு நடந்து ஈடு கொடுக்க முடியவில்லை.
அப்படியாக முதல் கோவிலான பாடலீஸ்வரர் கோயிலை அடைந்தோம்.
பதிவு பெரிசாகிவிடுவதால், இப்பதிவில் போகும் வழியின் காட்சிகள் கொடுத்துவிட்டு முடிக்கிறேன். கோவில்கள் பற்றி அடுத்த பதிவிலிருந்து
ஒவ்வொரு கோவிலாகப் போவோம்...
குறிப்பு - 1. பாதளீஸ்வரர் கோவில் மற்றும், மாரளீஸ்வரர் கோவில்கள் இரண்டையும் பார்த்துவிட்டு, நேரே பீச் பார்க்கிங் வந்து நம் வண்டியை எடுத்துக் கொண்டு வைத்தியநாதேஸ்வரர், கீர்த்தி நாராயணர் கோவிலுக்குப் போகலாம்.
2. இல்லை என்றால் முதல் இரு கோவில்களும் பார்த்துவிட்டு மீண்டும் அதே வழியில் வந்து முதல் கோவிலின் எதிரே இருக்கும் வழியில் (கொஞ்சம் ஷார்ட் கட்), அடுத்த இரு கோவில்களுக்கும் செல்லலாம்.
ஆனால் நடக்க முடியாதவர்கள் முதல் குறிப்பைப் பின்பற்றுவது நல்லது. எப்படி இருந்தாலும் முதல் இரு கோவில்களுக்கும் நடந்து தான் செல்ல வேண்டும்.
3. இரண்டாவதையும் இன்னும் கொஞ்சம் டிப்ஸ், தலக்காடு பீச் நுழையும் முன்னரே வலப்பக்கம் சாலை கீர்த்திநாராயணர், வைத்யநாதேஸ்வரர் கோவில் செல்லும் வழி என்று தகவல் பலகையுடன் இருக்கும். அப்பாதையில் சென்று அந்த இரு கோவில்களையும் பார்த்துவிட்டு - முதலில் கீர்த்தி நாராயணரையும், அடுத்து வைத்யநாதேஸ்வரரையும் பார்த்துவிட்டு அக்கோவிலின் அருகிலேயே இருக்கும் பாதை வழி சென்று பாதாளீஸ்வரர் மற்றும் மாரளீஸ்வரர் கோவில்களைப் பார்த்துவிட்டு அதே வழியில் திரும்பிவிடலாம்.
நாங்கள் இந்த மூன்று வழிகளிலும் அல்லாமல் முழுவதும் நடந்தே சென்றோம். அதைப் பற்றி அடுத்த கோவில்கள் பற்றி வரும் போது சொல்கிறேன்.
4. வது ஆகச் சிறந்த டிப். தலக்காடு செல்ல நினைப்பவர்கள் குளிர்காலத்தில் போய்வாருங்க. அதாவது நவம்பரிலிருந்து ஃபெப்ருவரி 15க்குள். வெயில் சமயம் போவது வேண்டாம். அதுவும் எப்ப போனாலும் காலையில் போய் மதியத்திற்குள் பார்த்துவிடுவது நல்லது.
-----கீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக