வெள்ளி, 16 ஜனவரி, 2026

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025 பரிசு பெற்ற கதைகளைப் பற்றி...பகுதி - 6 - 6/7

 கதைகளைப் பற்றி - 1/7 , 2/7 , 3/7 , 4/7 , 5/7

சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன்.  இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால்,  ஆசிரியர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.  நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 6/7.

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

செல் முளைக்கும் பருவம்

ஜெ பி ஆதிரன்

ஆசிரியர் - ஜெயபிரகாஷ் எனும் ஆதிரன், சேலத்தில் இயன்முறை மருத்துவர் (ஃபிசியோதெரபிஸ்ட்). தினமலர் கதைகள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பரிசு பெற்றுள்ளார். தமிழ்ப் பல்லவி காலாண்டு இலக்கிய இதழ் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசும் பெரும்பலூர் இலக்கிய வட்டம் சிறுகதைப் போட்டியில் மற்றும் விடியல் இலக்கிய இதழ் நடத்திய போட்டியிலும் பரிசு பெற்றிருக்கிறார்.

கதை - தலைப்பே கதையை கொஞ்சம் யூகிக்க வைக்கிறதோ? இன்றைய தலைமுறையினரில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குமே கூட பல peer pressure எனப்படும் அழுத்தங்கள் உருவாகின்றன. குறிப்பாக, நட்பு வட்டத்தில் உள்ள கொஞ்சம் பணக்கார அல்லது உயர் மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கொஞ்சம் உயர்ரக செல்ஃபோன் வைத்திருந்தால், அது போலவே தனக்கும் வேண்டும் என்று வீட்டு நிலைமையை புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் ஒரு புறம்; வீட்டின் நிலைமை தெரிந்து, கேட்காமல் ஆனால் தனக்கு அப்படி ஒரு மொபைல் இல்லையே என்று தாழ்வுமனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் பிள்ளைகள் மறுபுறம். ஒருசிலர் மட்டுமே இந்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கின்றனர். இன்னும் உண்டு.... இந்த முன்னுரை எதற்கு? 

கதையில் வரும் மனோஜ், நான் மேலே சொல்லியிருக்கும் வகையில் வருபவனா இல்லை இரண்டும் இல்லாத வகையா? கதைக்குள் செல்வோம்...

அம்மாவின் மொபைல் ஃபோனையே பயன்படுத்தி வந்த மனோஜ், பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த போதே தனக்கென்று ஒரு செல்ஃபோன்-ஸ்மார்ட்ஃபோன் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்க, சாதாரண புரோட்டா மாஸ்டராக இருக்கும் அவன் அப்பா ராஜாமணியால் ஃபோனை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துக் கல்லூரியில் சேரவிருப்பவனுக்கு ஒரு ஸ்மார்ட்ஃபோன் வாங்கிக்கொடுக்கலாம் என்று புகழ்பெற்ற "மொபைல் வேர்ல்ட்" கடைக்குச் செல்கிறார் ராஜாமணி.

கடையின் உரிமையாளரான சேகர், ராஜாமணியின் பட்ஜெட் 10 ஆயிரத்திற்கு நல்ல ஃபோன் கிடைக்காது, 20 ஆயிரம் ரூபாயில் வாங்கினால்தான் ஓரளவு நல்ல ஃபோன் கிடைக்கும் என்று பல மாடல்களை காட்டுகிறான். ராஜாமணிக்கு அதைப்பற்றிய விவரங்கள் தெரியாது என்பதால் சேகரையே தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொல்லி பாதிப்பணத்தைத் தவணையில் கட்டுவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டு வருகிறார். 

மகனை, அவன் பருவ வயதைப் புரிந்துகொள்ளும் அப்பா. தான் சந்திக்கும் பார்க்கும் பருவ வயதுப் பிள்ளைகளும், ஏன் பெரியவர்களுமே கூட மொபைலில்தான் பாட்டு கேட்கிறார்கள், வீடியோ பார்க்கிறார்கள், செல்ஃபி எடுக்கிறார்கள், விளையாடுகிறார்கள், சினிமா பார்க்கிறார்கள் என்றிருக்க பருவ வயது மனோஜிற்கும் அந்த ஆசை இருக்கும்தானே என்று நினைத்துக் கொண்டாலும், மகன் மனோஜ் என்ன சொல்வான் இந்த ஃமொபைலை பார்த்து? அவனுக்குப் பிடிக்க வேண்டுமே என்ற பயம் மனதில் இருக்கிறது.

அவர் மனைவிக்கு செல்ஃபோனைப் பார்த்ததும் சந்தோஷம். மகன் வந்ததும் அம்மா சொல்கிறாள், "நீ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்த புது செல்ஃபோன் அதோ உனக்காகக் காத்துக் கிடக்கு" என்றதும், மனோஜின் முகத்தில் மகிழ்ச்சி. மொபைல் பெட்டியை எடுத்து ஆர்வத்துடன் பிரிக்கிறான். ஃபோனை பார்த்ததும் அவன் முகம் இருள்கிறது. கோபத்துடன் தன் அப்பாவைப் பார்க்கிறான்.

"இந்த மொக்கை செல்ஃபோனுக்கு தான் இவ்வளவு பில்டப்பா..? நான் என்ன கேட்டேன் ...ஒங்க வீட்டுக்காரர் என்ன வாங்கிட்டு வந்துருக்கார்? கடைக்குப் போகும் போது என்னை ஏன் கூப்பிடலை?"

அப்பா ராஜாமணிக்கு ரோசம் வந்தாலும், அடக்கிக் கொண்டு, "இந்த ஃபோனுக்கு என்னப்பா குறைச்சலு...இதுல பேச முடியாதா?"

மனோஜ் அப்பாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல் கூரையைப் பார்த்துக் கொண்டிருக்க, ராஜாமணி சொல்கிறார், "என்னால இவ்வளவுதாம்பா முடியும் இதுக்கே இன்னும் முழுசா பணம் கொடுக்கலை. இன்னும் பத்து நாளைக்கு அடுப்புகல்லு முன்னாடி நின்னு புரோட்டா தட்டுனாதான் அந்தக் கடனை அடைக்க முடியும்"...."மனுசங்க தங்களோட வசதிக்கேத்த மாதிரிதான் வாழப் பழகிக்கணும்"

மனோஜ், கோபத்துடன் படுக்கை அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறான்.

கடைக்குச் சென்றாலும் ராஜாமணிக்கு மனசு பதட்டத்துடன் இருக்கிறது. இப்போதைய பதின்ம வயதுப் பிள்ளைகளின் கோபம் பெற்றோரை பதைபதைக்கவைக்கிறது என்று நினைப்பவருக்கு இந்த மொபைல் ஃபோனினால் விளையும் தற்கொலைகள் பற்றிய செய்திகள் எல்லாம் கண் முன் விரிகின்றன. அவர் மனைவியை அழைத்துக் கேட்கிறார். மகன் அறையை விட்டு வெளியில் வந்தானா என்று.

அதன் பின் என்ன நடக்கிறது?

அப்பா அடுப்பின் முன் படும் கஷ்டமும் அவர் சொல்லும் வரிகளும், மனதை என்னவோ செய்கின்றன. இன்றைய தலைமுறையில் சில பிள்ளைகளிடம் இருக்கும் பிரச்சனையை எடுத்து உணர்வுபூர்வமாக, அழகாகக் கையாண்டிருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

இப்படியும் ஒரு பெண்

கரந்தை இந்து

ஆசிரியர் - தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர். படித்தது கரந்தை தமிழ்ச் சங்கத்துடன் இணைந்த தமிழ்வேள் உமாமகேஸ்வரா பள்ளியில். (சகோதரர் கரந்தை ஜெயகுமார் பணியாற்றிய பள்ளி). சின்னச் சின்னக் கவிதைகளாக எழுதிப் பழகியவர் தற்போது கதைகளாக எழுதிக் குவிக்கிறார். பல போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறார். சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியிலும் வென்றிருக்கிறார். எழுத்தாளர்கள் குழுவாக எழுதப்பட்ட சிறுவர்களுக்கான ஏழு கதைகளில் இவரது கதையும் இடம் பெற்றிருக்கிறது. பரிசும் பெற்றிருக்கிறார்.

கதை - சுதாராணியின் குழந்தைகள் சுமந்த் மற்றும் பெண் சுமிதா சின்னக் குழந்தைகளாக இருக்கும் போதே அவள் கணவர் இறந்துவிட, அவரது பிஎஃப் பணம் மற்றும் தன் சம்பளத்தில் மகனையும், மகளையும் நன்றாகப் படிக்க வைக்கிறாள். நல்ல முறையில் வளர்கிறார்கள். மகன் அமெரிக்காவில் வேலை கிடைத்துச் சென்றதும் தங்கைக்கும் பொறுப்பாக அமெரிக்காவில் இருக்கும் பையனைப் பார்த்துக் கல்யாணம் செய்துவைக்கிறான்.

மகன் தனக்கு, தன் அம்மாவிடமே பெண் பார்க்கச் சொன்னதும், சுதாராணி பல பெண்களைப் பார்த்தும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை.

மகனும் சொல்கிறான் பெண் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. பெண்கள் கண்டிஷன் போடுகிறார்கள், அதுவும் தான் இருக்கும் இடம் ஒரு எல்லையில் மெக்சிகோ அருகில் அங்கு அவன் வேலை செய்யும் கம்பெனி மற்றும் இரு கம்பெனிகள் தவிர வேறு ஒன்றும் இல்லாத வளர வேண்டிய நகரமாக இருப்பதால் பெண்கள்  யோசிப்பார்கள் என்கிறான்.

என்றாலும், "எப்படியாவது இந்த வருடத்தில் சுமந்த் கல்யாணத்தை நடத்தி வை கடவுளே' என்று வேண்டிக் கொள்கிறாள்.

தேடலை விடாத சுதாராணி மேட்ரிமோனியலில் வந்த இரு ப்ரொஃபைல்களைத் தேர்ந்தெடுக்கிறாள்.

அந்த இரண்டில், முதல் பெண் கவிதா 28 வயது.  அவள் தன் வேலையை விட்டுவிட்டு பி ஹெச்டி செய்கிறாள். ஏற்கனவே 32 வயசு சுமந்துக்கு இவள் படித்து முடித்து குடும்பம் என்று ஆக லேட் ஆகுமே என்று  இரண்டவது பெண் சந்தியா 30 வயது, இந்தியாவில் ஐடி வேலை ரொம்பவே பொருத்தமாக இருப்பது போன்று தெரிகிறது. அவர்கள் வீட்டைத் தொடர்பு கொண்ட போது அவளுக்கு வரன் அமைந்துவிட்டது என்று தெரிந்ததும், வேறு வழியின்றி முதல் பெண் கவிதாவின் வீட்டைத் தொடர்பு கொள்கிறாள்.

அவள் அப்பா, அவள் சொன்னதுதான் சட்டம் என்றும் அவளை மீறி எதுவும் முடிவு எடுக்க முடியாது, அவளிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்று சொல்கிறார்.  

மகனிடம் இத்தகவலைச் சொல்லும் போது, மகனை அப்பெண்ணே தொடர்பு கொண்டு பேசியதாகவும், இவன் அவளிருக்கும் இடத்திற்குச் சென்று சந்திக்க இருப்பதாகவும் சொன்னதும், அம்மா வியக்கிறாள். அப்பெண்ணின் அப்பா தன்னைத் தொடர்பு கொள்ளாமல் தன் பெண்ணைத் தொடர்பு கொண்டு பையனிடம் பேசச் சொல்லியிருக்கிறாரே என்று.

அப்பெண் தன் குடும்பத்திற்கு ஒத்துவருவாளா என்று தோன்றுவதையும் தன் மகனிடம் சொல்கிறாள். அவள் மகனோ அப்பெண்ணின் குணத்தை பாசிட்டிவாகப் பார்க்கிறான்.

சுதாராணிக்கு அதுதான் கவலையாகிறது. பிடிவாதமான பெண் தன் குடும்பத்திற்கு ஒத்துவருமா என்று. அதனால், சுதாராணிக்கு அன்றைய காலையிலிருந்தே மனசு சரியில்லை. காரணம், அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் சுமந்த், தற்போது இவள் பார்த்திருக்கும் கவிதாவை சந்திக்கவிருக்கிறான். பிடிச்சிருக்கு என்று சொல்லிவிடாமல் இருக்க வேண்டுமே! பிடிச்சிருக்கு என்று சொன்னால் அன்பு மகனின் வார்த்தையை மீறவும் முடியாதே. அவன் அழைப்பிற்காகத் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

பையன் பெண்ணை சந்திக்கிறானா? அப்பெண் என்னென்ன கண்டிஷன்கள் போடுகிறாள்? 

தலைப்பையும் மனதில் கொண்டு, நீங்களும் யூகிக்கலாம்.

நல்ல கதை. ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

சிறிய தவறு

ஆர். சிதம்பர நடராஜன்

ஆசிரியர் - முந்தைய தலைமுறை எழுத்தாளர் திரு ம.ந. ராமசாமி (திருவாழத்தான்) அவர்களின் புதல்வர். நிர்வாகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பல புகழ்பெற்ற நிர்வாகப் பள்ளிகளில் பேராசிரியராகவும். இயக்குநராகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.

இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு நாவலையும், ஒரு நாடகத்தையும் எழுதியுள்ளார். இதே நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளார்.

கதை - நீதாவுக்கும் தினேஷுக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்குக் குழந்தை இல்லை. திருமணம் நடந்த நாள் அன்று தினேஷ் நோய்வாய்படுகிறான். அது தீவிர கபஜுரமாக மாறி அரிதான கிருமியின் விளைவால் அவனுடைய இனப்பெருக்கச் சுரப்பிகள் பாதிக்கப்படுவதால் குழந்தையின்மை.

ஒரு நாள், நீதா, டிவியில் நடக்கும் க்விஸ் ப்ரோக்ராமைப் பார்த்துக் கொண்டு தினேஷிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டு ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்கள் உரையாடல்கள் மிகவும் சுவாரசியம். ஆசிரியரின் எழுத்து நடையை ரசித்தேன். அப்படிப் பேசிக் கொண்டிருந்த வேளையில் தினேஷிற்கு மொபைலில் ஒரு அழைப்பு வருகிறது.

"நான் மிஸஸ் ஷோபா சுப்ரமணியன், பால வித்யாலயாவோட பிரின்சிபல்"

தினேஷ் குழம்புகிறான். "நாளை காலை பத்து மணிக்கு ஸ்கூல்லே என்னை மீட் பண்ண முடியுமா? ஒரு ஸ்டூடன்ட் பத்தி, சீரியஸ் மேட்டர், மிஸ்டர் தினேஷ்"

"உங்க ஸ்கூலுக்கும் எனக்கும் என்ன சீரியஸ் மேட்டர் இருக்க முடியும்? அங்கே எனக்கு யாரையும் தெரியாதே."

"உங்க மகள்"

"மகளா?"

"ஆமா நாளை பத்து மணிக்கு என்னை மீட் பண்ணினீங்கனா நல்லது" என்று சொல்லி அழைப்பு துண்டிக்கப்படுகிறது.

நீதா "யார்" என்று கேட்கிறாள். தினேஷ் சொல்கிறான். உனக்குத் தெரியுமா என்று கேட்கிறான். மஹிலா சமாஜ் மெம்பர். டஃப் லேடி...என்கிறாள்.

அவனை ரிலாக்ஸ் என்று சொல்லிவிட்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு விசாலமான பகுதியில் உள்ள பெரிய காண்டொமினியம் அவர்களின் இருப்பிடம் என்பதால் 'வாக்கிங் போலாமா' என்று, தங்களின் செல்லமான கோல்டன் ரெட்ரீவரோடு கடற்கரையோரம் வாக்கிங்க் போகிறார்கள். செல்லத்தின் பெயர் டெக்ஸ்டர் அவனையும் கதையில் இணைத்து, அவனோடான சில சம்பாஷணைகள் ரசிக்க வைக்கின்றன!

"அது சரி, புதுசா இந்த மகள் யாரு, டெக்ஸ்டர்? எங்களுக்குத் தெரியாம யாராவது தங்கச்சிய தூக்கிட்டு வந்துட்டியா?"

அவர்கள் பள்ளியிலிருந்து வந்த அழைப்பைப் பற்றி யோசித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைத் தவிர "வேறு யாராவது பெண்ணுடன்?" என்று நீதா கேட்பதற்கு அவன், "என் உடம்பைப் பற்றித் தெரியாதா" என்று கேட்கிறான்.

"கல்யாணத்துக்கு முன்னாடி?"

ரூபா எனும் பெண்ணை விரும்பியதாகவும் நெருக்கமாக இருந்ததாகவும் சொல்கிறான். நீதா திடுக்கிட்டு, தன்னிடம் சொல்லவே இல்லையே எனும் போது, அதற்கு அவசியமில்லையே, "நீயும் கேட்கவில்லையே" என்கிறான். நீதா ஒவ்வொன்றாய் கேட்க அவனும் சொல்கிறான் ரூபாவுடனான காதலை. அது போல அதன் பின் ஆஃபீஸ் பெண் ஜாக்குலின்....

நீதா சர்வ சாதாரணமாகப் பேசுகிறாள் ஒரு தோழியைப் போன்று.  அவனின் பழைய கதைகளைத் தெரிந்து கொண்டபிறகும் கூட, நீதாவின் உரையாடல்கள் எல்லாம் அவளை ரொம்ப ஈசி கோயிங் பெண்ணாக, மிகவும் இயல்பாக உரையாடும் கதாபாத்திரமாகக்  காட்டுகின்றன. 

"அப்படி என்றால் அந்தப் பெண் குழந்தை அப்படிப் பிறந்ததாக இருக்குமோ? நீ ஏற்றுக் கொள்வாயா" என்று கேட்கிறான் நீதாவிடம். அவளும் ஏற்றுக் கொள்வதாகச் சொல்கிறாள்.

இருவருமே ரொம்ப சகஜமாக இயல்பாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது போன்று பேசுவதாக உரையாடல்கள். நீதாவின் கதாபாத்திரம் ஒரு சராசரிப் பெண்ணல்ல என்று எண்ண வைக்கும் கதாபாத்திரம்.  அதே போலதான் தினேஷின் கதாபாத்திரமும்.

சரி அதன் பின் என்ன? பள்ளிக்குச் செல்கிறார்களா? அக்குழந்தை தினேஷிற்குப் பிறந்த குழந்தையா? முடிவு என்ன?

கதையை வாசித்து வரும் போதே கதையின் முடிவை ஊகித்துவிட முடிகிறது. தொய்வில்லாத நடை. 

ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!  வாழ்த்துகள்!

சுந்தரகாண்டம்

பட்டுக்கோட்டை ராஜா

ஆசிரியர் - இயற்பெயர் பி எல் ராஜகோபாலன். இவரது படைப்புகள் பற்றிச் சொல்ல இந்தப் பக்கம் போதாது. சின்னதாகச் சொல்கிறேன். சிறுகதைகள் - 896; தொடர்கதை - 1; குறு நாவல்கள் - 15; நாவல்கள் - 12; நாடகங்கள் - 16; ஏராளமான கவிதைகள். இவரது சிறுகதை மற்றும் இரு கவிதைகள் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பல பரிசுகள் வென்றிருக்கிறார். பட்டுக்கோட்டை ராஜா அவர்களின் பெயர் எழுத்துலகத்தில் எனக்குப் பரிச்சயம்.

இவரது மூத்த சகோதரர் (அமரர்) பி எல் ராஜேந்திரன் 600 நூல்களுக்கு மேல் எழுதிய நாவலாசிரியர்!

கதை - சுந்தரம் புரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கும் உணவுக்கடையின் முதலாளி செல்வம். நெற்றி நிறையத் திருநீறு, மத்தியில் குங்குமம் என்று பக்திப் பழமாக காலையில் கல்லாவில் அமரும் போது, 30 வயது மதிக்கத்தக்க லட்சணமான பெண் மல்லிகா வேலை கேட்டு வருகிறாள்.

கடையைக் கூட்டிப் பெருக்கி இட்லி சுட்டுக் கொண்டிருந்த கனகம் முந்தைய தினம் கணக்கு முடித்துச் சுந்தரத்துக்குக் கூடத் தெரியாமல் சென்றிருந்ததால், இப்புது பெண்ணை சேர்க்கலாமா என்று யோசிக்கிறான், செல்வம்.

அவளைப் பற்றிக் கேட்கிறான். டாக்சி டிரைவராக இருந்த அவளுடைய கணவன் விபத்தில் இறந்துவிட இன்னும் இன்சுரன்ஸ் பணம் வரவில்லை, வந்ததும் தருகிறேன் என்று டாக்சி ஒனர் சொல்வதால், இவள் பகலில் ஒரு வீட்டுக்கு வேலைக்குச் செல்கிறாள். பிறவி ஊனமான மகன் வீட்டில். சம்பளம் பத்தவில்லை என்பதாலும் இக்கடை இரவுக்கடை என்பதாலும் இங்கும் வேலைக்கு வருவதாகச் சொல்கிறாள்.

"போச்சுடா, கடவுளுக்கு ஏழைகளைச் சோதிக்கறதே வேலையாப் போச்சு!" என்று செல்வம் சலித்துக் கொண்டு சுந்தரத்தைப் பார்த்துக் கேட்கிறான். சுந்தரமும், இவளைக் கனகத்துக்குப் பதிகலாகச் சேர்த்துக் கொள்ளலாம் என்றதும் சேர்த்துக் கொள்கிறான் செல்வம்.

ஒரு நாளைக்கு 500 ரூ சம்பளம். லீவு போட்டால் சம்பளம் கிடையாது. அன்றன்றே சம்பளம் கிடைத்துவிடும் என்றும் சொல்கிறான், செல்வம். கடை மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை. எனவே 5 மணிக்கெல்லாம் வந்து கடையை சுத்தமாகக் கூட்டி வாசலில் கோலம் போட வேண்டும். 6 மணிக்கு இட்லி ரெடி செய்யணும். சர்வர்களோடு இவளும் சாம்பார் சட்னி ஊற்றணும்...குடும்பக் கதை பேசக் கூடாது, கடையை விட்டுப் போகும் முன் சாமான்களைக் கழுவி வைத்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்ற பல கண்டிஷன்கள் போட்டாலும் 500 ரூ கொடுத்து நல்லதாகப் புடவை வாங்கிக் கட்டிக் கொண்டு வர வேண்டும் என்றும் சொல்கிறான். மறுநாள் வருவதாகச் சொல்லிச் சென்றுவிடுகிறாள், மல்லிகா.

இரவு 8 மணிக்கு மேல் இருவர் போதையில் கடைக்கு வருகிறார்கள். ஒருவன் அந்த ஊர் வார்டு கவுன்சிலர்.  செல்வம் அவர்களைப் பார்க்கிறான். "செல்வம் என்ன பார்க்கிறே? போதையில் இருக்கேன்னு நெனைக்காதே. உன் கடைக்கு உள்ளதானே குடிக்கக் கூடாதுன்னு போர்டு வச்சிருக்கே...நான் வெளியவே குடிச்சிட்டு பாட்டிலை வீசிட்டு வந்திட்டேன்!" என்று கவுன்சிலர் சொல்லும் போது மற்றவன் சிரிக்கிறான். அலம்பல்கள் செய்யாம சாப்பிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும், ஓசில கொடுக்க சத்திரம் நடத்தவில்லை என்று செல்வம் சொல்கிறான். 

உடனே சட்டைப் பைக்குள்ளிலிருந்து சில நூறுரூபாய்த் தாள்களை எடுத்துக் காட்டுகிறான், கவுன்சிலர். ரெண்டு வீச்சுப் புரோட்டாவும் ரெண்டு சப்பாத்தியும் ஆர்டர் செய்கிறான். புரோடாவை சோமு கொண்டு வைக்க,  சர்வர் வரதன் குருமாவை புரோட்டாவின் மீது ஊற்றவும் கெட்ட வார்த்தையில் திட்டி, குருமாவை ஏன் புரோட்டாமீது ஊற்றின என்று அவனை அடிக்கிறான். வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

சுந்தரம் கவுன்சலரின் வெள்ளைச் சட்டையைக் கொத்தாகப் பிடித்து எழுப்புகிறார். "அவனை அடிக்க எவன்டா உனக்கு உரிமை கொடுத்தான்? கவுன்சிலர்னா பெரிய கொம்பா?" என்றதும், கவுன்சலரின் கூட வந்தவன் அடிக்கக் கையை ஓங்கும் போது சுந்தரம் அவன் கையைப் பிடித்து முறுக்கி ஓங்கி அறைகிறார்.

அவர்கள் இருவரும் சவால் விட்டுக்கொண்டு கடையை விட்டுச் செல்கின்றனர்.  

மறுநாள் அப்புதிய பெண் மல்லிகா கடைக்கு வேலைக்கு வருகிறாள். சில நாட்களில் சுந்தரத்தின் தைரியத்தையும் நேர்மையையும் அவள் கவனிக்கிறாள். 

மல்லிகாவின் அழகின் மீது செல்வத்திற்குக் கண். அவன் அவள் வீட்டிற்கு இரவில் அவள் மகனைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லும் போது, தன் வீடு இருக்கும் பகுதி சாக்கடையும் குப்பையுமாக அசிங்கமாக இருக்குமே என்கிறாள். செல்வம் தான் பத்து நிமிடத்தில் கிளம்பிவிடுவேன் என்று சொல்கிறான். 'முதலாளி' என்பதால் மல்லிகா, அவனை வரச் சொல்கிறாள். கடையில் செல்வத்தின் பார்வை அவள் மீது படர்வதை சுந்தரமும் கவனிக்கிறார்.

மறுநாள் செல்வம் வரும் முன்னரே சுந்தரம் அவளிடம், "தபாரு மல்லிகா, முதலாளிகிட்ட வீட்டுக்கெல்லாம் வரவேணாம்னு சொல்லிடு....ஊர் உன்னைத்தான் தப்பா பேசும்...வேலியில் போற ஓணானைப் பிடிச்சி உன் புடவைக்குள்ள விட்ட கதை ஆய்டும்" என்று எச்சரிக்கிறார். 

அதன் பின் என்ன ஆகிறது? எதிர்பாராத ட்விஸ்ட்! அது என்ன?

நல்லதொரு கதை. எழுத்தாளர் பட்டுக்கோட்டை ராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!

 

நூலறுந்த காலணி

உ ராஜேஷ்வர்

ஆசிரியர் - 29 வயதே ஆன இளைஞர். "தமிழ்ப்பெருக்கில் நானும் ஒரு வழிப்போக்கன்" என்று தன்னைப் பற்றிச் சொல்பவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.

ஆசிரியரின் எழுத்து சொல்வனம் மூலம் பரிச்சயமுண்டு. சொல்வனம், கீற்று, புக்டே, பதிவுகள், வாசகசாலை, அனிச்சம் போன்ற இணைய இதழ்களில் கவிதைகளும், வாசகசாலையில் சிறுகதையும் வெளிவந்துள்ளன. சென்ற வருடம் 'புன்னகை கவிதை இதழ்' தேர்ந்தெடுத்த சிறந்த பத்துக் கவிதைகளில் இவருடைய கவிதையும் தேர்ந்தெடுக்கப்பட்டு, புத்தகமாக வெளிவந்துள்ளது. அறிவியல் கட்டுரைத் தொடர்களும் எழுதுகிறார்.

கதை - நிரஞ்சனுக்கு சமீப நாட்களாக லெதர் ஸ்லிப்பர்கள் மீது அலாதி பிரியம் ஏற்படிருக்கிறது. அதை ஆசிரியர் சொல்லும் விதம் ரசிக்கத்தகக்து. "மனிதர்களுக்குத் திடீரென அற்ப விஷயங்களின் மீது ஆசை துளிர்விடும். ஒருவரிடத்திலும் வெளிப்படுத்த முடியாத ஆசை அதுவாகவே இருக்கும். தன்னிடம் மீதமிருக்கும் குழந்தைத்தனத்தை அது கிளறிக் கொண்டெ இருக்கும்"

அப்படி ஒரு ஆசை எழுந்த நிரஞ்சன் முகைதீன் பாய் ஸ்லிப்பர் கடைக்கு வந்து தான் ஆசைப்பட்டதைத் தேடி, இறுதியாக ரூபாய் எழுநூறு மதிக்கத்தக்க சுப்பீரியர் லெதர் ஸ்லிப்பர் ஜோடிகளைத் தனது கால்களில் அணிகிறான். அதை அணிந்து கொண்டதும் பறப்பது போன்று இருக்கிறது அவனுக்கு. சாலையில் இறங்கியதும் சொல்வதற்கரிய அவன் உணர்வுகள் மேலோங்குகின்றன.

செல்லும் வழிகளில் எல்லாம் நடந்து செல்பவர்களின் கண்களைப் பார்த்தபடியே செல்கிறான். யாராவது இவனுடைய ஸ்லிப்பர்களை ஏதேச்சையாகப் பார்த்தால் அதே இடத்தில் நின்று எதையோ தேடுவது போலப் பாசாங்கு செய்து, தன் ஸ்லிப்பரைப் பார்க்க வழி செய்கிறான்!

ஸ்லிப்பர் வாங்கிய தினம் செவ்வாய் என்பதால் கடையிலிருந்து இரு தெருக்கள் கடந்து சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்குச் செல்கிறான்.  வழக்கமாகச் செவாய்க்கிழமைகளில் செல்பவன் இப்போது கோவிலுக்குள் செல்லத் தயங்குகிறான். காரணம் புது ஸ்லிப்பர். காலணி பாதுகாக்கும் அறை வழக்கம் போல மூடியிருக்கிறது.

அங்கிருக்கும் பூக்காரக் கிழவியிடம் 10 ரூபாயை அரைமனதோடு நீட்ட, கிழவி "நூறு நாப்பது ரூபா" என்கிறாள்.

"அவ்ளோ கட்டுப்படியாகாது. 10 ரூபாய்க்கு என்ன வருமோ அத்த கொடு, போதும்" 

நூலைப் பிடித்துக் கொண்டு இரண்டு மலர்கள் தொங்கிக் கொண்டிருந்ததைக் காட்டி இவ்வளவுதான் வரும் என்று சொல்கிறாள் கிழவி.

போதும் என்று சொல்லி 5, 6 மலர்கள் தொங்கிய சரத்தை வாங்கிக் கொண்டு, தன் புது செருப்பைக் கிழவியின் கண் பார்வையில் பூப்போலக் கழற்றி, "பாட்டிம்மா இத்த கொஞ்சம் பாத்துக்கோ! புது செருப்பு" என்கிறான் நிரஞ்சன்.

"என்னடா, சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு யோசிச்சேன், சரியாப்போச்சு! பத்து ரூவா கூடப்போட்டு பூ வாங்க துப்பில்ல, இவனுக்கெல்லாம் புது செருப்பு" கிழவி தனக்குள்ளாகக் கடிந்து கொள்ளும் வரிகளை வாசித்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது!

வழக்கத்திற்கு மாறாக 5 நிமிடங்களில் தரிசனத்தை முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாகக் கோவிலின் வாயிலை அடைகிறான். அவனுக்குத் திக் என்றிருக்கிறது. பதட்டத்தோடு சுற்றிலும் தேடத் துவங்குகிறான். புலப்படவில்லை. கிழவியிடம் காட்டமாகக் கேட்கிறான். கிழவியும் மரியாதையாகப் பேசச் சொல்லி இதுவா தன் வேலை என்று பொரிந்து தள்ளுகிறாள்.

போவோர் வருவோரை எல்லாம் ஆராய்கிறான் தன் செருப்பாக இருக்குமோ என்று. கோவிலுக்கு வரும் அவன் நண்பன் வினோத், பித்துப்பிடித்தது போல அமர்ந்திருக்கும் நிரஞ்சனிடம் விசாரிக்க, நிரஞ்சன் சொன்னதும் அவனுக்குச் சிரிப்பு வந்தாலும் நிரஞ்சனின் உணர்வை வேடிக்கை செய்யாமல் அவனைத் தேற்றுகிறான். "ஸ்லிப்பர் கெடைச்சிடும் கவலைப்படாத! இந்த ஓட்டல்ல ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்" என்றதும், நிரஞ்சன் எரிச்சலோடு எழுகிறான்.

ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். அங்கு இருக்கும் சப்ளையர்களில் ஒருவர் வினோதிற்கு மிகவும் நெருக்கமானவர். நிரஞ்சனின் நிலைமையை எடுத்துச் சொல்லி, ஓட்டலின் வாயிலில் இருக்கும் சிசிடிவி காமேராவை ஆராய்ந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று கோருகிறான். ஓனர் பத்து நிமிஷத்துல கிளம்பியதும் பார்க்கலாம் என்று சொல்கிறான், சப்ளையர்.

ஓனர் சென்றதும் சிசிடிவி கேமராவைப் பார்க்கிறார்கள். ஒரு வயதானவர் செருப்பைப் போட்டுக் கொண்டு செல்வது தெளிவாகத் தெரிகிறது.

அப்பெரியவர் யார்? செருப்பு கிடைக்கிறதா? அதன் பின் நடப்பது என்ன?

ஒரு சின்ன விஷயத்தை கனமான விஷயத்தோடு தொடர்புபடுத்திச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அப்பகுதியில் வரும் பெரிய பாராவை வேறு வகையாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றினாலும் கூட, அழகான கதையைக் கொடுத்த  ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!


------கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக