புதன், 21 ஜனவரி, 2026

தலக்காடு - 8 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 1

 தலக்காடு- 1,  2345 , 6 , 7

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

சரி நாம் கீர்த்தி நாராயணர் கோயிலில் இருந்து வெளியே வந்து வைத்யநாதேஸ்வரர் கோவிலைப் பார்க்கப் போவோம். 

இப்படி வெளியில் வந்ததும் இடப்பக்கம் புதியதாக ஒரு சன்னதி கட்டியிருப்பது தெரிந்தது. என்ன சன்னதி என்று தெரியவில்லை. தெப்பக்குளம். வலப்பக்கம் வைத்தியநாதேஸ்வரர் கோவில்.
இந்தத் தெப்பக் குளத்தின் எதிரில் வைத்தியநாதேஸ்வரர் கோயில். 
படத்தில் உள்ள பகுதிக்கு இடப்புறம் சற்றுத் தள்ளி செருப்பை விடும் இடம். கோவிலின் வெளிப்புறமே இப்படிக் கல்வெட்டொன்று. தமிழில். அதன் மேலிடுக்கில் தென்னை வாரியல் தெரிகிறதா? வலப்புறம் சிறிய இடைவெளி தெரிகிறதா? அதை ஒட்டித்தான் கோவிலுக்குள் செல்லும் பகுதி.
யாளியா, மானா .......
இதுதான் நுழைவு வாயில். அழகான சிற்பம். கீழே படி தெரிகிறதா? அதைத் தாண்டி விளிம்பில் ஒருவர் உட்கார்ந்திருக்க அங்கிருப்பதைப் படம் எடுக்க முடியவில்லை.  நுழைவு வாயிலை தள்ளி நின்று எடுக்கவிட்டுப் போச்சு. காரணம் இதுவே 4 மணி ஆகிவிட்டது. அவசரமாக உள்ளே சென்றோம். 
நுழைவு வாயில் - சிற்பம் - விலங்கு என்று தெரிகிறது ஆனால்...

மேலைகங்கர்கள் ஆண்ட வருங்களிலேயே இக்கோவிலிற்கான வேலைகள் நடந்திருக்கின்றன. அவர்கள் நிறுவியதை அதன் பின்  சோழர்கள் 11 ஆம் நூற்றாண்டில் வென்று 12 ஆம் நூற்றாண்டு வரை அதாவது ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்தன் சோழர்களை வெல்லும் வரையான காலத்திற்குள் சோழர்கள் இக்கோவிலில் தங்கள் கலைஅம்சங்களை உட்படுத்தி மேம்படுத்தியுள்ளார்கள். சோழர்களின் கலைவடிவம் இக்கோவிலில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் பின் வந்த ஹொய்சாளர்களின் கலைவடிவமும், விஜயநகர கலை அம்சமும் இக்கோயிலில் இருப்பதைக் காணலாம் என்பது வரலாற்றுத் தகவல்கள். 

இதோ உள்ளே போகிறோம். கொடிமரம் கொடிமரத்தில் சிவலிங்கம்....நேரே கோயில். 

கோவிலின் முன் மண்டபத்தில் படிகளில் ஏறும் போது ஆனை வடிவம் சிதைந்த நிலையில்

கிழக்கு நோக்கிய முன்மண்டபம் என்ன ஒரு அழகு இல்லையா! உள்ளே இருக்கும் பெரிய லிங்கவிடிவ இறைவன் கொஞ்சமாகத் தெரிகிறாரா?

சோழர்களால் கட்டப்பட்ட கோவில் என்று சொல்லப்பட்டதை நேரில் பார்த்த போது முழுவதும் சோழர்களால் என்று சொல்ல முடியவில்லை. ஹொய்சாளர்களின் கலையம்சமும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. (படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கும் புரியும்) நான் வீட்டிற்கு வந்ததும் இணையத்தில் பார்த்த போது கிடைத்த தகவல்களின் படி நான் நினைத்தது சரியென்று தோன்றியது. 

மேலைகங்கர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், அதன் பின் 14 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த விஜயநகர பேரரசின் கலை அம்சங்களும் இக்கோவிலில் இருப்பதாகவும் அத்தகவலில் இருந்தது. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 14 ஆம் நூற்றாண்டுவரை இக்கோவிலில் அந்தந்த காலகட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் தங்கள் கலையம்சத்தை உட்படுத்தியிருக்கின்றனர்.

முன்மண்டபத்தில் மிக அழகான தூண்கள் சிற்பங்கள். மாபெரும் துவாரபாலகர்கள் முகப்பை அலங்கரிக்கிறார்கள்.
வலப்புறம் உள்ள இந்த துவாரபாலகர் சைடில் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்தவாறு விநாயகர் வித்தியாசமாகக் காட்சி தருவது இப்படத்தில் லேசாகத் தெரிவார். கீழே முழுவதும்...
மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்தவாறு விநாயகர் வித்தியாசமாகக் காட்சி

துவாரபாலகர்களை அன்று புகைப்படம் எடுத்த போது டக்கென்று அவர்களின் வடிவத்தில் ஒன்று பிரத்யேகமாகத் தோன்றியது. அட! என்று வியந்து வீட்டிற்கு வந்து படத்தைப் பெரிதாக்கிப் பார்த்து உறுதியும் செய்து கொண்டேன். சிற்பயின் கலைநுணுக்கத் திறமையைச் சொல்லும் விஷயம். உங்கள் கண்ணிற்கும் தெரிகிறதா என்று பாருங்கள். கருத்தில் சொல்லுங்கள். அதன் பிறகு நான் சொல்கிறேன்.

இந்த துவாரபாலகர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள் இல்லையா? ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டவர்கள். என்றாலும் ஒரு காதில் நூலை நுழைத்தால் மறு காதின் வழி வெளியில் கொண்டு வரமுடியுமாம். அது போல தலைக்கு மேலே உள்ள ஓட்டை வழியாக நூல் நுழைத்து இரு காதுகளின் வழியாகவும் கொண்டுவரலாமாம். இது இக்கோவிலின் கலையைப் பற்றித் துழாவிய போது அறிந்து கொண்ட தகவல். 

துவாரபாலகர்களை ஒட்டி இடப்புற, வலப்புற நிலைப்படிகளும் கோவிலுக்குள் உட்புறம் செல்லும் வழியும். உட்புறம் கொஞ்சம் தெரிகிறதுதானே
இந்த முன் மண்டபத்தைக் கட்டியது இராஜேந்திரசோழன் என்று சொல்லப்படுகிறது.

உள்ளே கருவறையில் பெரிய லிங்க வடிவில் வைத்தியநாதேஸ்வரர்.  கருவறையின் முன்புறத்தில், இடப்புறம் முருகனும் வலப்புறம் கணபதியும் வீற்றிருக்கிறார்கள். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. 

வெளியில் வந்ததும் முன் மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் க்ளிக்ஸ் 

அடுத்தாற் போல் கோவிலைச் சுற்றி இருக்கும் சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே சுற்றி வருவோம். அடுத்த பதிவில் பார்ப்போமா...



--------கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக