கதைகளைப் பற்றி - 1/7 , 2/7 , 3/7 , 4/7 , 5/7 , 6/7
சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன். இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால், ஆசிரியர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 7/7. நிறைவுப்பகுதி
கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
ராம்குமார்
சுந்தரம்
ஆசிரியர் - இளைஞர். நெல்லையைப்
பூர்வீகமாகக் கொண்ட பெங்களூர்வாசி. தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இவர் ஆங்கிலத்தில்
ஒரு கவிதைத் தொகுப்பும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும்
வெளியிட்டுள்ளார். குக்கு எஃப்எம் செயலியில் இவரது மூன்று அறிவியல் புனைவு சார்ந்த நன்றாக வரவேற்பு பெற்ற ஒலிக்கதைகள் வெளியாகியுள்ளன. மூன்று குறும்படங்களுக்கான முழு
உரைநிரல்களை எழுதியுள்ளார். பிரபல பதிப்பகத்தின் தளத்தில் இவரது அறிவியல் தொடர் 23
வாரங்கள் வெளிவந்ததாம். இவருடைய குறுநாவல், குவிகம் குறும் புதினப் போட்டி 2024ல் பரிசு
பெற்றதாம். இப்படி நிறைய...
கதை - இக்கதை இலங்கைத் தமிழில்
உள்ள கதை. ஆசிரியர் இலங்கைக்கு நேரடியாகச் சென்ற அனுபவம் இல்லாமலேயே அவர்களின் வட்டாரவழக்கில்
எழுதியுள்ளார்.
கொழும்பு நகரின் கெப்பெட்டிப்போலா சாலையில் ஒரு டீக்கடையில்
அமர்ந்திருக்கும் வசந்தன் எதையோ யோசித்துக் கேவிக் கேவி அழ ஆரம்பிக்கிறான். டீக்கடையை நடத்தும்
ரணநாயக அவனை ஆசுவாசப்படுத்த முயற்சித்தும் பலனில்லை. என்ன பிரச்சனை என்று கேட்கிறான்.
வசந்தன், தான் மலையகத்து ஊரான
சிவனூரட்டு டவுனிலிருந்து வருவதாகவும், மணமாகி 6 வருடங்கள் ஆகிய நிலையில் தன் மனைவி ரேகா
ஓடிப்போய்விட்டதாகவும் சொல்லி ஃபோட்டோவைக் காட்டுகிறான். சிவனூரட்டில் பெரிய தொழிலதிபருடைய ஒரே மகன் ராஜேஷ் இவர்களின் ஊரில் ஃபேக்டரி நிறுவ வந்த போது இவன் மனைவி ரேகாவுடன் பழக்கமாகி
கொழும்பு நகருக்குக் கூட்டிக் கொண்டுவந்துவிடுகிறான். இப்போது இந்த டீக்கடை இருக்கும் ஏரியாவில்தான்
அவர்கள் தங்கியிருப்பதாகவும் தான் 4 நாட்களாகத் தேடி அலைவதாகவும் சொல்கிறான்.
ரணநாயக, தான் காண நேர்ந்தால் சொல்கிறேன்
என்று சொல்லியதோடு இருவரும் வாட்சப் எண்ணையும் பரிமாறிக் கொள்கிறார்கள். ரணநாயக தன் நம்பிக்கையான
நண்பர்களுக்கும் அனுப்புகிறான். வசந்தன், தான் லீலா லாட்ஜில் தங்கியிருப்பதையும் சொல்லிவிட்டுச்
செல்கிறான்.
அன்று மாலை நான்கரை மணியளவில்,
டெய்லர்கடை ஆள் ரணநாயகாவிற்குச் செய்தி அனுப்புகிறான், ரேகா 'கோல்டன் அபார்ட்மென்ட்ஸ்'
கட்டிடத்திற்குள் ராஜேஷுடன் செல்வதைப் பார்த்ததாக. வசந்தனுக்கும் செய்தி அனுப்பப்படுகிறது.
வசந்தன் துப்பறியும் வேடத்தில்
உடனே கோல்டன் அபார்ட்மென்ட்ஸிற்குச் சென்று, வாச்மேனுக்குப் பைசா கொடுத்து, ரேகாவும்
ராஜேஷும் அபார்ட்மெண்டின் நான்காம் தளத்தில் குடியேறி இருப்பதையும், ரேகாவின் கழுத்தில்
புதிய தாலிச்சரடு இருப்பதையும் அறிகிறான்.
அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால்
அவர்கள் இருவரும் வெளியே வருவர் என்று எதிர்பார்த்திருந்தும் வரவில்லை. இருள் கவ்விய
பிறகும் வரவில்லை. வாச்மேன் அசந்த நேரத்தில் சிசிடிவி கேமரா படாத இடமாகப் பார்த்து
பின்பக்கச் சுவர் வழியாக ஏறிக் குதித்து உள்ளே போகிறான் வசந்தன். ராஜேஷின் ரெட் கலர்
ஃபியட் காரின் லாக்கை இரும்புக் கம்பியால் திறந்து பின் சீட்டினடியில் படுத்துக் கொள்கிறான்.
பேகிலிருந்து கள்ளச்சந்தையில் வாங்கிய துப்பாக்கியை எடுத்துக் கையில் வைத்துக் கொள்கிறான்.
அவன் எதிர்நோக்கியபடி ராஜேஷும்
ரேகாவும் வந்து காரில் அமர்ந்து கார் புறப்பட்டு சாலையில் செல்லும் போது, பின் சீட்டினடியிலிருந்து மெதுவாக ஊர்ந்து
மேலெழும்பிய வசந்தன் ராஜேஷின் பின் கழுத்தில் துக்கியை வைத்து, "டேய் ராஜேஷ்,
காரை சாமிராஜா மில்ஸ் பின்னாடி இருக்கற பாழடைஞ்ச கட்டிடத்துக்கு விடடா!" என்று
மிரட்டுகிறான்.
இதற்கப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான்
மீதிக்கதை.
கதையில் நிறைய லாஜிக் பற்றிய கேள்விகள்
எழுகின்றனதான். கதையை இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியது.
ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,
பாராட்டுகள்!
சுதர்சனா
புவனேஷ்
ஆசிரியர் - இவரும் 38 வயதான இளைய
எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை தினகர் தமிழ்த்
திரைப்படத் துறையில் அரைநூற்றாண்டுகக்கும் மேல் இயங்கிவருபவராம்.
கல்வித் தகுசி பிஏ., பிஎல்., மற்றும்
லண்டன் சென்று எம்பிஏ பயின்றவர். சென்னையில் வழக்கறிஞராக இயங்கிவருகிறார். எழுத்தார்வத்தால் சிறுகதைப் போட்டிகளில் கலந்து
கொள்ள ஆரம்பித்தாராம், அவரது முதல் சிறுகதையே
பரிசு பெற்றதில் மிகுந்த மகிழ்சி அடைவதாகக் கூறுகிறார் சுதர்சனா. வழக்கறிஞர் என்பதால்
நிறைய கதைக்களங்கள் கிடைக்கும் என்பதையும் சொல்கிறார்.
கதை - ஓவியப்படிப்பு முடித்து பல இடங்களுக்குச் சென்று நாட்கணக்கில் தங்கி, அங்கிருக்கும் கோவில் சிற்பங்களைப் பார்த்து
அப்படியே தத்ரூபமாக வரையும் சிவாவிற்கு மதுரையிலுள்ள திருமலை நாயக்கர் மகாலை நேரில்
பார்த்து வரைய வேண்டும் என்ற ஆசையில் அங்கு செல்கிறான்.
மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு,
ஓரிடத்தில் அமர்ந்து வரையத் தொடங்குகிறான். அப்போது எங்கிருந்தோ ஒரு கைக்குட்டை பறந்து
வந்து அவன் முகத்தை மூடுகிறது. லேடிஸ் கர்சீஃப். அதன் மணம் அவனை மயங்க வைக்கிறது. "ஹலோ"
என்ற குரல் கேட்டு இவன் இந்த உலகிற்கு வர, "அது என் கர்சீஃப் காத்துல பறந்து வந்திருச்சு"
என்கிறாள் ஒரு அழகிய பெண். (இந்த இடத்தில் "கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா.
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா..." பாடல் என் நினைவுக்கு வந்தது).
அவள் அழகிலும் அவள் நடை அழகிலும் சொக்கிப் போகிறான். இதுவரை சிற்பம் போன்ற அப்படி ஒரு அழகியை அவன் பார்த்ததே இல்லை. அந்த மஹாலின் நடுவில் நின்று "இவள்தான் என் மனைவி" என்று கத்த வேண்டும் போல இருக்கிறது அவனுக்கு.
கர்சீஃபை வாங்கிக் கொண்டவள் எங்கு
சென்றாள் என்று தெரியாமல் தேடுகிறான். அவள் ஓரிடத்தில் குழந்தைகளுக்கு நடன வகுப்பு
எடுப்பது தெரிகிறது. அவள் அபிநயம் பிடிக்க குழந்தைகள் ஆடுகிறார்கள். இவன் அவர்களுக்குத்
தெரியாத ஓரிடத்தில் நின்றுகொண்டு அவளை ஓவியமாகத் தீட்டுகிறான்.
ஒத்திகை வகுப்பு முடிந்து தன்
சகாக்களுடன் அவள் - பெயர் நிர்மலா - பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு சிறுமி ஓடி வந்து
நிர்மலாவிடம், "டீச்சர், வாசல்ல ஒருத்தர் உங்க படத்தை வரைஞ்சு வச்சு வித்துகிட்டிருக்காரு"
என்று சொல்ல நிர்மலாவிற்குக் கோபம் வருகிறது.
எல்லோரும் அந்த ஓவியத்தை மெய்மறந்து
பார்த்துக் கொண்டிருக்க, நிர்மலா சிவாவிடம், எப்படித் தன்னைக் கேக்காமல் படத்தை வரையாலாம்
என்று கோபப்படுகிறாள்.
"நிலாவை வரையறோம்...உலக அதிசயங்களை
வரையறோம், அதுங்க கிட்ட கேட்டுக்கிட்டா வரையறோம்? என்னைப் பொருத்த மட்டில் எனக்கு உலக
அதிசயம் உலக அழகி ரெண்டும் நீங்கதான்" என்றதும் அவள் அதிர்ந்து போகிறாள். ஆனால்
மனதிற்குள் சிறிய சலனம் ஏற்படுகிறது. அமைதியாகக் கடந்து போய்விடுகிறாள். மறுநாளும்
வருவார்களா என்று சிவா சிறுமியிடம் கேட்க அவள் "ஆமாம்" என்கிறாள்.
மறுநாளும் சிவா வந்துவிடுகிறான்.
நிர்மலாவும் குழுவும் அங்கு இருக்கிறார்கள். அங்கு சின்ன சலசலப்பு. ஹார்மோனியம் வாசிக்கும்
டீச்சர் வரமுடியவில்லை என்று சொல்லிவிடுவதால் என்ன செய்வதென்று தெரியாத நிலை. நிகழ்ச்சியின்
ஆர்கனைசர் விஷயம் தெரிந்ததும், அங்கேயே யாரும் கிடைக்கிறார்களா என்று பார்ப்பதாகச்
சொல்லிச் சென்றவரைப் பார்த்த சிவா அவரை நெருங்கி, தனக்கு ஹார்மோனியம் வாசிக்கத் தெரியும்
என்கிறான். சற்று நேரத்தில் ஹார்மோனியம் வாசிக்கும் சத்தம் கேட்டதும் சோர்ந்திருந்த
நிர்மலாவுக்கு சிவா ஹார்மோனியம் சுதி செட்செய்வது தெரிகிறது.
சிவாவிடம் அவள், கர்நாடகசங்கீதம்
முறையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்றதும் சிவா சின்னஞ்சிறுகிளியே வை வாசித்திட அதில்
மயங்கிய ஆர்கனைசர் நிர்மலாவை ஒத்திகைப் பார்க்கச் சொல்கிறார். ஒத்திகைக்கு அவனை வாசிக்கச் சொல்கிறார்.
நிர்மலாவும், சிவாவும் இருவரும் நிறைய பரிமாறிக் கொள்கிறார்கள். சிவா அங்கிருக்கும் வரை தினமும் சந்திக்கிறார்கள். தங்கள் அன்பையும். நிர்மலா தன் குடும்பச் சூழல் தற்போது சரியில்லாததால், சரியாக ஒருவருடம்
கழித்து இருவர் மனதிலும் இதே அன்பு இருந்தால், திருமணம் ஆகியிருக்கவில்லை என்றால் இந்தத்
தூணருகில், இதே நேரத்தில் சந்தித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று அங்கிருக்கும் ஒரு தூணில் கையெழுத்திட்டுப் பிரிகிறார்கள்.
மறுவருடம் சந்திக்கிறார்களா? திருமணம்
செய்து கொள்கிறார்களா? வெள்ளித் திரையில்....ஸாரி புத்தகத்தில்.
கதை, முடிவு எல்லாமே ரொம்பவே சினிமாட்டிக்.
திரைப்படத்திற்குச் செல்லுபடியாகும் கதை. க்ளிஷேவாக இருப்பது போல் தோன்றியது. கதையை
வாசிக்கும் போது ஹீரோயின், ஹீரோ யாரைப் போட்டால் நன்றாக இருக்கும், ஸ்க்ரீன் ப்ளே,
காட்சிகள் என்றெல்லாம் மனதில் ஓடத் தொடங்கியதைத் தவிர்க்க இயலவில்லை. ஓவியம், கர்நாடக
இசை, நடனம் காதல் என்று பலபடங்களின் கலவைகள்
மனதில் ஓடின!
கதையின் தொடக்கத்தில் ஆசிரியரின்
சில உவமைகளை ரசித்தேன்.
"உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு அந்த அறை வெப்பத்தைத் தானே தாங்க முடியாமல் ஒருவித புலம்பல் ஒலியுடன் விதியை
நினைத்து தானே சுற்றிக் கொண்டிருந்த ஒரு ஹைதர் காலத்து மின்விசிறி"
"கிழிந்து குடலைக் கக்கிக்
கொண்டிருந்த தலையணை"
ஆசிரியர் தன் எழுத்துத் திறமையை
செப்பனிட்டால் மிளிரும் வாய்ப்புகள் நிறைய.
சுமைய்யாஜெஸ்மி,
மட்டக்களப்பு
ஆசிரியர் - இவரும் இளைய எழுத்தாளர்.
இயற்கை எழில் பொலிந்த மருஹமுனை எனும் கிராமத்தில் பிறந்தவர். "சுமைய்யா ஜெஸ்மி
மூஸா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் எழுத்தாளர் பாத்திமா சுமைய்யா.
2010ல் தமிழ் மொழியைத் தெரிவு செய்து பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கு இசை, நாடகம்,
ஆடல், பேச்சு ஆகிய துறைகளிலும் பயிற்சியளித்து பிரம்மாண்ட கலை நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.
நிறைய பரிசுகள், இலக்கிய விருதுகள்
பெற்றிருக்கிறார். சர்வதேச சிறுகதைப் போட்டியில் தேர்வு, பேசும் புதிய சக்தி (இந்தியா)
சர்வதேச சிறுகதைப் போட்டியில் சிறப்புச் சிறுகதை என்று பட்டியல் நீள்கிறது.
கதை - ஆயிஷாவும், அனஸும் தம்பதிகளாகி
ஒரு மாதகாலத்தில், இரு வாரத்தில் வந்து ஆயிஷாவை தேன்நிலவுக்கு அழைத்துச் செல்ல
வருவதாகச் சொல்லி, அனஸ், தான் வேலை செய்யும் இடத்திற்குப் பயணம் செய்கிறான்.
கல்யாண வேலைகளில் பிஸியாக இருந்ததால்
முகநூல் பக்கம் போகாமல் இருந்த ஆயிஷா முகநூல் நோட்டிஃபிக்கேஷன்கள் வந்து குவிந்திருப்பதைப்
பார்த்ததும் முகநூலுக்குள் செல்கிறாள். இவள் கடைசியாகப் பதிவிட்ட "சுதந்திரம்" எனும் கவிதையைப் பாராட்டி
வந்தவை அனைத்தும். அதில் அவள் கணவன் அனஸின் கருத்தும், "பெண் சுதந்திரம் பற்றிப்
பறைசாற்றி நிற்கும் தங்களின் கவிதை அற்புதம். வாழ்த்துகள் மேடம். தொடர்ந்து உங்கள்
எழுத்துக்களை எதிர்பார்க்கிறோக்ம்"
அவள் கணவனுக்குத் தெரியாது இவள்தான்
ரோஸ் ரோஸ் என்ற ஃபேக் ஐடியில் எழுதுபவள் என்பது. இவளும் அவனுக்கு இதயக் குறியீடும் போடுகிறாள் பதிலாக. ரோஸ் ரோஸ் ஐடிதானே என்று.
கொஞ்சம் ஃப்ளாஷ் பேக். ஆயிஷா கவிதைகள்
இலக்கியம் என்று இருக்கும் பெண். பிரபல நகர்ப்புற பாடசாலை மாணவர்களை எல்லாம் தோற்கடித்துப் பாடசாலையில் பரிசு வெல்லும் போது அவள் பெயர் பிரபலமாகிறது. பல பரிசுகள், பேட்டிகள், பாராட்டுகள்
என்று புகைப்படத்துடன் வாழ்த்துச் செய்திகள் வருகின்றன. அவள் சந்தோஷத்தில் இருக்கிறாள்.
ஊரின் உலமா சபையை சேர்ந்த ஒருகுழுவினர்
அவள் வீட்டுக்கு வந்து, "இப்படி உங்கட மகள்ட புகைப்படங்கள் வீடியோக்கள் நியூஸ்
பேப்பர் என்று வாறத கண்டம். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியில்லை. ஊருக்கு
அவமானம், உங்கள் மகளுக்கு சாலிஹான மாப்பிள்ளை எடுத்து கல்யாணம் பண்ற ஐடியா இருந்தா
இதுகள இதோட நிறுத்திக்கங்க" என்று சொல்லியதும் ஆயிஷா முடங்குகிறாள். முடக்கப்படுகிறாள்.
அப்படியிருக்கும் போது, கொழும்பில்
வசிக்கும் அவள் தந்தையின் தங்கை குடும்பத்தைப் பார்க்கச் செல்லும் சமயம், அவள் மாமி அவர்களின்
மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பர்சானா எனும் பெண் ஒரு கவிதை புக் பளிஷ் பண்ணும் நிகழ்விற்கு ஆயிஷாவின்
ஆர்வத்தை முன்னிட்டு அவளையும் அழைத்துச் செல்கிறார். அங்கு சிறப்பு விருந்தினராக அனஸ்
பேசிய பெண்களைப் பற்றிய முற்போக்கு எண்ணங்கள் ஆயிஷாவைக் கவர்கின்றன. பெண்கள் எழுத வேண்டும்
ஆண்கள் துணை நிற்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறான். ஆயிஷா (றழி) முதல் மலாலா வரை இஸ்லாமிய
வரலாறு நெடுகிலும் அறிவைப் பயன்படுத்தி சாதித்தப் பெண்களைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறான்.
அனஸ் பேசியவை அனைத்தும் தனக்காகவே பேசியதாக
நினைக்கிறாள், ஆயிஷா.
வீட்டிற்கு வந்ததும், அவள் ஆர்வங்கள் மீண்டும் புத்துணர்வு பெற்றிட, வீட்டு முற்றத்தில் பூத்திருக்கும் இரட்டை
ரோசா மலர்களைப் படம் பிடித்து தன் ஃப்ரொஃபைல் பிக்சராக வைத்து 'ரோஸ் ரோஸ்' என்று முகநூல்
கணக்கு தொடங்கி நிறைய நட்புக் கோரிக்கை விடுத்திட நட்பு வட்டம் பெருகுகிறது. அதில் அனஸையும்
தேடிப் பிடித்து நட்பு கோரிக்கை விடுக்க நான்கைந்து நாளில், 'விரிவுரையாளர், நூல் ஆய்வாளர்,
இலக்கிய ஆர்வலர், வீரப்பேச்சாளர் அனசினால் நட்பு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அனஸ், பல பெண்களை எழுதத் தூண்டி உற்சாகப் படுத்தும் பணியை முகநூல் மூலமாகச் செய்து கொண்டிருப்பதையும் அறிகிறாள். அனஸ் பேசும் பெண்கள்
தொடர்பான முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்துவதான மேடைப் பேச்சுக்கள் பல பதிவேற்றப்பட்டிருந்ததையும்
பார்க்கிறாள்.
தான் முடக்கப்பட்ட போது எழுதி
வைத்திருந்த கவிதைகள் பலதையும் பதிவேற்றுகிறாள். பாராட்டுகள் குவிகின்றன. சில மாதங்களில்
அவள் கவிதைக்கென வாசகர் வட்டம் உருவாகிறது. அனஸையும் டேக் செய்திட அவனிடம் இருந்தும்
லைக்ஸ் வருகின்றன.
அப்படிச் சென்று கொண்டிருந்த போது
கொழும்பு மாமியிடமிருந்து ஆயிஷாவிற்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகச் செய்தி வர, அது
அனஸ் என்று தெரிந்ததும் ஆயிஷா மட்டற்ற மகிழ்ச்சியடைகிறாள்.
ஃப்ளாஷ்பேக் இங்கு முடிகிறது.
தற்போது கணவன் அனஸ். திருமண விடுமுறை முடிந்து சென்ற அனஸ், 2 வாரம் கழித்து ஆயிஷாவை
அழைத்துச் செல்ல வருகிறான். அதன் பின் என்ன நடக்கிறது?
தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது.
முடிவையும் சொல்லிவிடுகிறது. கதையை வாசிக்கும் போதே கதையின் போக்கையும், முடிவையும்
யூகித்துவிட முடிகிறது. நீங்களும் யூகித்திருப்பீர்கள்!
நன்றாக எழுதியிருக்கும் ஆசிரியருக்கு
மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்.
ஜனனம்
தமிழ்ச்செல்வன்
ரத்னவேல் பாண்டியன்
ஆசிரியர் - தூத்துக்குடி மாவட்டத்தைச்
சேர்ந்தவர். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் எழுதத் தொடங்கி இந்த 4 வருடங்களில்
1105 சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒரு சரித்திர நாவலும் எழுதியிருக்கிறார். கடந்த நான்கு
வருடங்களில் 34 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். அவற்றில் ஏழு ஆங்கிலத்தில் மூன்று சுற்றுலா
ஸ்தலங்கள் பற்றியவை. மூன்று தன்னம்பிக்கைக் கட்டுரைகள், மற்றவை சிறுகதைத் தொகுப்புகள். கதைகள் தவிர தமிழ்க்கட்டுரைகள் நூற்றுக் கணக்கில் எழுதியுள்ளார். பட்டியல் நீள்வதால்,
இடம் கருதி இங்கு தரவில்லை.
கதை - கந்தன், வள்ளி தம்பதிகளுக்கு
சுபா ஒரே பெண். சிறிய மண் வீடு. ஒரே ஒரு மின்விசிறியுடன். வள்ளி நாலு வீடுகளில் வீட்டு
வேலை செய்து சம்பாதிப்பவள். கந்தன் பணி புரிவது மின்மயானத்தில். சுபாவின் பள்ளியிலிருந்து
2 கிமீ தூரத்தில் என்பதால் சுபாவைப் பள்ளியில் விட்டுவிட்டுத் தன் பணிக்குச் செல்பவர்.
தினமும் உடல்களைப் பார்த்து பார்த்து,
தொலைக்காட்சியில் அழகிகளைப் பார்த்தால் கூட அந்த அழகு கவர்வதில்லை. "இந்த உடம்பும்
எரிந்து சாம்பலாகத்தானே ஆகும்" என்றுதான் மனசில் அவருக்குத் தோன்றுகிறது. யாரைப் பார்த்தாலும், "கடைசில எங்கிட்டதானே
வரணும்" எனும் எதிர்மறை சிந்தனை மனதுள் அவருக்குத் தோன்றும் போதெல்லாம், தன் இழிவான
நினைப்பு குறித்து அவருக்கே வெறுப்பாகிறது. அழகான பூக்களையோ, மலைகளையோ, கடற்கரையையோ
கூட ரசிக்க முடியாத அளவு கடினமாகிவிட்ட உணர்வு.
வருடங்கள் ஓடுகின்றன. இந்த இடத்தை
ஆசிரியர் சொல்லியிருக்கும் விதம் ரசனையானது. "நாடார் கடை காலெண்டர் வருடா வருடம்
ஒவ்வொரு சாமி படமா போட்டு நிறைய வந்து போயின"
சுபா டாக்டருக்குத் தேர்வாக முடியாமல்
இரண்டாவது விருப்பமான வேலையான செவிலியராக நன்கு படித்து, பக்கத்து ஊர் தனியார் மருத்துவமனையில்
சேர்ந்தும் விடுகிறாள். கந்தனுக்கும் வள்ளிக்கும்
ரொம்ப மகிழ்ச்சி. எல்லோரிடமும் சொல்லி மாய்கின்றனர்.
கந்தனுக்கு அவர் அடிமனதுள் இருக்கும் ஆசை அப்போது எழுகிறது.
அது என்ன ஆசை? அது நிறைவேறுகிறதா?
வித்தியாசமான கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த
ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!
பிரியம்
தங்க
ஆரோக்கியதாசன்
ஆசிரியர் - தமிழிலும், உளவியலிலும்
தனித் தனியாக இளங்கலை பட்டம் பெற்றவர். மத்திய
அரசின் இராணுவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது மாணவர்கள், தொழிலாளர்கள்
மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவலர்களுக்கு கௌரவ விரிவுரையாளராக வாழ்வியல் வகுப்புகள்
நடத்துகிறார். பல இலக்கியச் சிற்றிதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
அம்பத்தூர் கம்பன் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்; பட்டிமன்றப் பேச்சாளர்; நிகழ்ச்சித்
தொகுப்பாளர். ஏராளமான சிறுகதைப் போட்டிகளில்
வெற்றி பெற்றவர். தமிழ்த் தாத்தா உ.வே.சா பாற்றியும்,
புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றியும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டவர். இரு சிறுகதை
நூல்கள் வெளிவந்துள்ளன.
கதை - கதையின் கதாபாத்திரம் - அவன் கடற்கரையில் அமர்ந்து கொண்டு அலைகளையே பார்த்துக்
கொண்டிருக்கிறான். கரை தாண்ட முடியாமல் திரும்பித் திரும்பிக் கடலுக்குள் செல்லும்
அலைகளைப் போலவே தானும் தன் முயற்சிகளில் தோற்றுப் போவதாக உணர்கிறான். எவ்வளவு நேரம் அப்படியே இருக்கிறானோ? இரவுப் பொழுது ஆரம்பிக்கிறது. அருகில் ஒருவர் நிற்பது போன்று தோன்றிட, பார்க்கிறான். அது ஒரு பெண்.
பார்த்ததுமே தெரிகிறது. அவள் அப்படியான
பெண் என்று. அவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்கிறாள் "போலாமா"
என்று. அவனும் அவளுடன் நடக்கிறான். அந்த நிமிடத்தில் அவனுக்கு யாரையோ பழிவாங்கிவிட்ட
வெற்றிக்களிப்பு.
எதிரில் வரும் போலீஸ்காரர் அவளைப்
பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார். அவளும் ஜாடையாக ஏதோ பேசுகிறாள் போலீஸ்காரரும்
தலையசைக்கிறார்.
ரோட்டிற்கு வந்ததும், "ரூம்
போடுறியா இல்ல என் வீட்டுக்கு வரியா, ரூம் போடுறதா இருந்தா ஆட்டோ புடிக்கலாம். வீட்டுக்குப்
போறதா இருந்தா நடந்தே போகலாம்" என்றதும் அவன் வீட்டுக்கே போகலாம் என்கிறான்.
அவனுக்கு அது புது அனுபவமாக இருக்கிறது.
ஜனசந்தடி மிக்க தெருக்களில் சாக்கடை நீரைக் கடந்து நடக்கிறார்கள். தெருவோரக்கடை மசாலா
மூக்கைத் துளைத்துத் தொண்டையில் கமறிட கர்சீஃபால் மூக்கைப் பொத்திக் கொண்டு நடக்கிறான்.
இளவட்டங்கள் இவர்களைப் பார்த்து சீட்டியடித்து சிரிக்கின்றனர்.
அவள் வீடு இருக்கும் இடத்தை அடைந்ததும்,
குடித்தனங்கள் அவளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவது காதில் விழுகின்றன.
வீட்டினுள் சென்றதும் இவன் தயங்கித் தயங்கி உட்கார்கிறான். அவளுக்கு இவன் வித்தியாசமானவனாகத் தெரிகிறான். வழக்கமாக என்ன நடக்கும் என்பது அவளுக்குத்தானே தெரியும். சாப்பிட என்ன வாங்க வேண்டும் என்று கேட்கிறாள் அவன் எது வேண்டுமென்றாலும் என்று சொல்லி தன் மணிபர்சை கொடுக்கிறான். அவள் அதிசயமாகப் பார்த்துவிட்டு, அதிலிருந்து ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று பரோட்டா, சால்னா, கறி, இரண்டு வாட்டர் பாட்டில்கள் வாங்கிக் கொண்டு வருகிறாள். "இப்படி உக்காருய்யா, கீழ உக்காந்து சாப்ட்டாதான் பரோடா சால்னாவுக்கு தோதா இருக்கும், உன்னைப் பார்த்தா பெரிய வசதியான ஆளாடம் தெரியுது. அதான் மினரல் வாட்டர் வாங்கியாந்தேன்" என்று அவளே பிரித்து, பரோட்டாவைப் பிய்த்துப் போட்டு சால்னாவையும் அதன் மீது ஊற்றி அவனுக்கும் எடுத்து வைக்கிறாள்.
அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து பரிமாறுவதில் அவன் நெகிழ்ந்து போகிறான். அவனுக்கு இப்படி அன்புடன் பரிமாறப்பட்டுச் சாப்பிடும் அனுபவம் புதியதாக இருக்கிறது. டேபிள் மீது வேலைக்காரர்கள் பரிமாறுவதை முள்கரண்டியில் வேண்டா வெறுப்பாகக் கடமைக்கு உப்புச் சப்பில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
சரி, நல்ல பணக்கார வாழ்க்கையிலிருக்கும் அவன் ஏன்? எதற்காக? இப்படியான இடத்திற்கு வருகிறான்? கொஞ்சம் நாம் யூகிக்க முடிகிற கதைதான்.
ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.
எப்படியோ ஒரு வழியாக முடித்துவிட்டேன். கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல!
-------கீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக