புதன், 7 ஜனவரி, 2026

தலக்காடு - 6 - கீர்த்தி நாராயண பெருமாள் கோவில் - 1

 தலக்காடு- 12, 3, 4, 5

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

சென்ற தலக்காடு பதிவு 5ல் கீர்த்திநாராயண பெருமாள் கோவிலைப் பார்க்கும் முன், இந்தப் பஞ்சலிங்கேஸ்வர, கீர்த்திநாராயண பெருமாள் கோவில்களின் தொகுப்பில் ஒரு பகுதியான சௌடேஸ்வரி அம்மன் கோவில் இருக்கிறது என்று அதைப் பார்த்தது பற்றிச் சொல்லியிருந்தேன்.

சௌடேஸ்வரி அம்மன் கோவிலைப் பார்த்தாயிற்று இல்லையா, அம்மன் கோவிலில் இருந்து வெளியே வந்து ஊரின் தெரு வழியாக ஒரு 5-7 நிமிட நடையில் இருக்கும் கீர்த்தி நாராயண பெருமாள் கோவிலுக்கு நடந்தோம்.

சூடாக காஃபி குடிப்போமான்னு நம்ம வீட்டவர் கேட்க, அத்தெருவில் இடப்புறம் இருந்த ஒரு காஃபி / டீ கடையில் நுழைந்தோம். கடையும் வீடும் இணைந்து பெரிதாக இருந்தது. நம்ம நெல்லை காஃபி டீ எதுவும் குடிக்க மாட்டார். அங்கிருந்த பெண்மணி 'டீ தான் இருக்கு' என்றதும் இரண்டு டீக்குச் சொல்லி விட்டுக் காத்திருந்த வேளையில் எனக்குச் சட்டென்று ஐடியா தோன்றியது. ஆனால், நேரங் கெட்ட நேரம்! 

இதுதாங்க குத்துமதிப்பா ஒரு மேப், நான் கீழே சொல்லியிருப்பது புரிவதற்காக...புரியும் என்ற நம்பிக்கையில்!

சௌடேஸ்வரி அம்மன் கோவிலின் முகப்பில் வெளிப்பக்கம் உள்ள சாலை நேராக தலக்காடு பீச் நுழைவுப் பகுதி சந்திப்பிற்குக் கொண்டு விடும். இப்போது நாங்கள் கோயில்களைப் பார்த்துவிட்டு பீச் பார்க்கிங் வரை நடக்க கோவில்களின் உட்பகுதி வழியாக நடக்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்ட நேரம் கடந்து நேரமாகிவிட்டது. கொஞ்சம் நேரத்தை மிச்சப்படுத்தலாமே, நம்ம ஓட்டுநர் ஸ்ரீதரை அழைத்து இங்கே வரச் சொல்லிவிட்டால் இப்படியே போய்விடலாமே என்று சொன்னேன்.

நம்மவர், "குழப்பாதே, அவங்க எப்படி இங்கு வரமுடியும், நீ வழியைக் குழப்பிடாதே," என்று என்னை வழக்கம் போல.......(சென்சார்ட்).  ஸ்ரீதருக்கு வழி தெரியும்.

ஒரு இடத்திற்குப் போகும் போது, இணையத்தில் எல்லா விவரங்களும் பார்த்து வழியும் குறித்து வைத்திருந்ததால், தலக்காடு பீச் பகுதிக்குள் நுழையும் போது வலப்பக்கம் இந்தச் சாலையையும் அதன் முகப்பில் இருந்த கீர்த்திநாராயணர், வைத்தியநாதேஸ்வரர் கோவில்கள் செல்லும் வழி என்ற போர்டையும் கவனித்து இருந்ததால் என்னால் உறுதியாகச் சொல்ல முடிந்தது.

"சரி, உனக்குச் சரியா தெரிஞ்சா நீ ஸ்ரீதரை அழைத்து சொல். நான் மொபைலை எடுத்துட்டு வரலை. அது கார்ல இருக்கு" - நம்மவர்

நான் செய்த தவறு என்னிடம் ஸ்ரீதரின் நம்பரை சேமித்துக் கொள்ளாதது. நெல்லையிடமும் அவர் நம்பர் அப்போது இல்லை. எனவே அழைத்து சொல்ல முடியாமல் போனது.

அப்போதே மணி 3.30. கீர்த்தி நாராயணர், வைத்தியநாதேஸ்வரர் இருவரையும் பார்த்துவிட்டு பார்க்கிங் பகுதிக்கு நடந்து .....நேரமாகிவிடுமே.....சரி போகட்டும்...நடக்கிறபடி நடக்கட்டும் என்று டீயைக் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். நம்மவரிடம் டீக்கான சில்லறை இல்லை. கையில் மொபைலும் இல்லை. என்னிடம் சில்லறை இருக்கும் என்று நினைத்துவிட்டார். இல்லை. நெல்லை என்னவென்று கேட்டார். சொன்னதும் அவர் கொடுத்தார். எங்களுக்கு சங்கடமாகிவிட்டது. எப்போதும் நான் நம்மவரிடம் சொல்வது எங்கு போனாலும் கோவிலாகவே இருந்தாலும் கையில் மொபைலை வைத்துக் கொள்வது நல்லது என்று.  என்ன செய்ய? இப்படியான சில அனுபவங்கள்....

சரி, கீர்த்திநாராயணரைப் பார்க்கப் போகும் போதே கொஞ்சம் கோவிலைப் பற்றிப் பேசிக்கொண்டே போவோமா?

"ஒரு நிமிஷம், நீ பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள் பாதை என்று சொல்லிக் கொண்டு வந்தாய் ‘கீர்த்திநாராயணர் பெருமாள் கோவில்’ இங்கு எப்படி? ...."  

"இக்கோவிலும் இந்தக் கோவில்களின் அருகில் கட்டப்பட்ட, இக்கோவில்களைப் போன்றே 'காவிரி தன்னுள் கொண்ட' மணலில் புதைந்த கோவில்களில் ஒன்று என்பதால் இக்கோவிலும் இந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்களின் சுற்றுலா பாதையில் இடம் பெறுகிறது.

கீர்த்தி நாராயண பெருமாள் கோவில், பஞ்ச நாராயண கோவில்களில் ஒன்றாகக் கருத்தப்படுகிறது.

கொஞ்சம் பதிவிக்கு வெளியே போய் மீண்டும் உள்ளே வருவோம்...

பஞ்ச பஞ்சநாராயண ஷேத்திரங்கள்/கோயில்கள் - 

தொண்டனூரில் உள்ள நம்பி நாராயணர் கோவில். இது முதன்மையான மற்றும் பழமையான தலம். இக்கோவில் மற்றும் கீர்த்திநாராயணர் கோவிலை நிர்மாணித்த மன்னன் விஷ்ணுவர்தன் தொடர்புடைய நிகழ்வும் கீழே சொல்லியிருக்கிறேன்.

திருநாராயணபுரம் எனும் மேல்கோட்டையில் இருக்கும் செலு/ல்வநாராயணர் கோவில். இது மிகவும் புகழ்பெற்ற வைணவத் தலம். (இக்கோவில் பற்றியும் நம்ம நெல்லை, எபியில் வைரமுடி சேவை பற்றி சொல்லும் போது எழுதியிருக்கிறார்)

கடகி(g)ல் உள்ள வீரநாராயணர் கோவில்.  

பேளூரில் உள்ள 'சென்னகேசவ பெருமாள் கோவில்' எனும் விஜய நாராயணர் கோவில்.  (இங்கு விஷ்ணுவர்தன் மற்றும் ராணி சாந்தலா சிற்பங்கள் இருக்கிறதாம்.)

கீர்த்தி நாராயண பெருமாள் கோவில், தலக்காடு (நாங்கள் சென்ற கோவில்)

இந்த 5 கோவில்களும் இராமானுசரின் வழி காட்டுதலால் ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனால் நிர்மாணிக்கப்பட்டவை. இவை தவிரவும் பல கோவில்களை அவன் நிர்மாணித்திருக்கிறான்.

மீண்டும் பதிவின் உள்ளே...

தலக்காடிலுள்ள இக்குறிப்பிட்ட கோவிலும் இந்த அரசனும் சம்பந்தப்பட்ட வரலாறு மட்டுமே இங்கு. மற்ற வரலாறு நமக்கு இங்கு தேவையில்லை.

ஹொய்சாள மன்னன் (B)பிட்டி தேவா முதலில் சமண மதத்தைப் பின்பற்றியவன். தலக்காடு பகுதியைச் சோழர்கள் 11 ஆம் நூற்றாண்டில் மேலைகங்கர்களிடம் இருந்து கைப்பற்றி ஆண்டதை முன்பு குறிப்பிட்டிருந்தேன் இல்லையா.

அப்போது சோழர்கள் தலக்காடைச் சுற்றி இருந்த சமண/ஜைன கோவில்களை அழித்ததில் விரக்தி அடைந்த (B)பிட்டி தேவா தனக்கு நெருக்கமான தளபதி கங்கராஜுக்கு உத்தரவிட்டு அவன் தலைமையில் தலக்காடு அருகே சோழர்களை எதிர்த்துப் போர்புரிந்து இழந்த பிரதேசத்தை மீட்டெடுத்தான். இந்த வெற்றிக்குப் பிறகு மன்னன் (B)பிட்டி தேவா, "தலக்காடுகொண்டா" என்ற பெயரைப் பெற்றான்.

சரி, அப்படி, சமணத்தைப் பின்பற்றிய மன்னன் எப்படி வைணவக் கோவில்களை நிர்மாணித்தான்?

மன்னன் (B)பிட்டி தேவாவின் மகளுக்கு ஏற்பட்ட மனப்பிணியை அரண்மனை வைத்தியர்களாலும் யாராலும் குணப்படுத்த முடியவில்லை.  இராமானுஜரின் சீடரான தொண்டனூர் நம்பியின் ஆலோசனையைப் பெற்று நோய்வாய்ப்பட்ட மகளுடன் இராமானுஜரை அணுகுகிறான் மன்னர் (B)பிட்டிதேவா.

ராமானுஜர், மன்னரின் மகளை 'பஞ்ச அப்சர தடாகம்' என்று அழைக்கப்படும் பெரிய ஏரியில் - தொண்டனூர் நம்பியால் நிர்மாணிக்கப்பட்ட ஏரி - மன்னனின் மகளைக் குளிக்கச் சொல்லி அப்படியே யோக நரசிம்மர் கோவிலில் நரசிம்மரையும் தரிசிக்க அறிவுறுத்துகிறார். கோவிலில், அர்ச்சகர், மன்னரின் மகளின் மீது நரசிம்ம தண்டத்தை வைக்கிறார். மகளின் நோய் குணமாகிறது.

இப்போதும், தொண்டனூர் யோக நரசிம்மர் கோவிலில் யோக நரசிம்மர் இந்த மந்திர தண்டத்தை தனது வலது கையில் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. (நான் இப்பகுதியை எழுதிய போது நம்ம நெல்லை இக்கோவிலைத் தரிசித்ததாக, எபியில் 'நான் தரிசனம் செய்த கோவில்கள் தொடரில்' வைரமுடி சேவையின் யாத்திரையைப் பற்றி எழுதிய பதிவொன்றில் குறிப்பிட்ட நினைவு வந்தது.)

இராமானுஜரால் மகள் குணப்படுத்தப்பட்டதும், மகிழ்வடைந்த அரசன் அவருக்குத் தான் என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது, இராமானுஜர் அவனை வைணவ மதத்திற்கு மாறச் சொல்கிறார். வைணவத்தைப் பரப்பச் சொல்கிறார். அப்படித் தன் பெயரை விஷ்ணுவர்தன் என்று மாற்றிக் கொண்டு, வைணவ மதத்தைத் தழுவி ஆதரிக்கத் தொடங்கினான். என்றாலும் அவரது ராணி சாந்தலா தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் சமண மதத்தையே பின்பற்றி வந்ததாகவும் தெரிகிறது.

அப்படி மன்னன் வைணவ மதத்தைத் தழுவிய பிறகு மேலே குறிப்பிட்ட 'பஞ்சநாராயண ஷேத்திரங்களை'யும் வேறு பல கோவில்களையும் நிறுவியிருக்கிறான்.  

இப்போது பஞ்சநாராயண கோவில்களில் ஒன்றான கீர்த்திநாராயணர் கோவிலுக்கு வந்துவிட்டோம்! நுழைவு வாயில்

வலப்புறம் இருப்பவை வழக்கமான சம்பிரதாய அறிவிப்பு பலகைகள். இது பாதுகாக்கப்பட்ட பகுதி போன்ற அறிவுப்புகள்

தொல்லியல் துறையின் கீழ் வரும் இப்பகுதிக்குச் சேதம் விளைவிப்பவர்களுக்கு இரு வருடங்கள் சிறை அல்லது 1 லட்சம் ரூ அபராதம் அல்லது இரண்டும் 

பெரிய நந்தி வடிவம், இன்னும் சில சிற்பங்கள் எல்லாம் அகழ்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்குமோ? 

மூன்று பானைகளை அடுக்கி வைத்தது போன்றிருப்பது உடைந்த தூணாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

இதோ  வடிவங்கள் உடைய கற்கள்

இந்தப் படத்தில் மேலே மேடு தெரிகிறதா? இது ஷார்ட்கட் போல அந்தக் கூடாரப் பாதையை இணைக்கிறது. இது அன்று தெரியாமல் நாங்கள் சுற்றிக் கூடாரப் பாதை வழியாக நடந்து வந்தோம். ஆனால் அப்படி வந்ததால்தான் சௌடேஸ்வரி அம்மனைப் பார்க்க முடிந்தது. இப்படி வந்திருந்தால் பார்த்திருக்க முடியாது! "நடப்பது" எல்லாம் நல்லதுக்கே! 

பலி பீடம் 
பலி பீடத்தை க்ளிக்கியதும் அங்கிருந்து நுழைவு மண்டபத்தை ஒரு  க்ளிக் ஆனால் அது நேர் எதிராக இல்லை. எங்கடா நெல்லைய காணும்? பார்த்தால் அவர் அதோ அங்கே லைட்டா தெரிகிறாரா?
மண்டபத்தின் சைட் போஸ்!!! மேலே அழகான ஹொய்சாள கலை வடிவங்கள்
ஹொய்சாள சிற்பக் கலை வடிவங்கள்

நீளமான ஒரே கல்லில் வடிவமைத்தது போலத் தெரிகிறது

முகப்பு மண்டபம் சைட் போஸ்களை எடுத்த பிறகு....
இதோ மண்டபத்துள் ஏறி நுழையப் போகிறோம். உள்ளே வெள்ளைக் கலரில் தெரிகிறதா அதுதான் உற்சவர், மூலவர் இருக்கும் கோவில்.

நம்மவர் கிடுகிடுவென்று நடந்து உள்ளே சென்று திரும்பி வெளியிலும் வந்தாச்சு! 

நானும் நெல்லையும்தான் படங்களைக் கிளிக்கிக் கொண்டே அப்பதான் உள்ளே போகிறோம்...நான் முகப்பு மண்டபத்தைக் கிளிக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தா நெல்லைய காணும். எங்கே போனார்னு பார்த்தா...பாருங்க அங்க ஸ்பா...முடியலைடா சாமி. அவர் அங்கு பிடித்துக் கொண்டிருக்கும் படத்தை நானும் போகிற போக்கில் எடுத்தேன், அதைத் தாண்டித்தானே போக வேண்டும். ஸோ அதோடு,  பதிவின் அடுத்த பகுதியில், உள்ளே உள்ள கோவிலின் வெளிப்புறப் படங்களுடன் தொடர்வோமா...


-----கீதா


24 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    பதிவு வழி பகிர்ந்த தகவல்கள், படங்கள் என அனைத்தும் சிறப்பு.

    நடப்பது அனைத்தும் நல்லதற்கே என்று இருந்துவிட்டால் நல்லதே.

    பல இடங்களில் அலைபேசி, சில்லறை இல்லாமல் இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். எனக்கும் இப்படி சில சிக்கல்கள் வந்ததுண்டு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி, வெங்கட்ஜி.

      ஆமாம் சில்லறை விஷயங்கள் சில சமயம் சங்கடத்தை விளைவிக்கின்றன. வாங்க முடியாமல் போவது உட்பட.

      கையில் சில்லறை வைத்துக் கொள்வதும் நலம், அலைபேசியும்

      நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  2. ஹா...  ஹா..  ஹா...  கருத்திடுபவர்களுக்கான வேண்டுகோளை எல்லா பதிவுகளிலும் சேர்ப்பது என்று முடிவு செய்து விட்டீர்களா?  ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், சில பதிவுகளுக்கும் சில சமயம் வருதே அதனால.

      கீதா

      நீக்கு
  3. இந்த கீர்த்தி நாராயண பெருமாள் மூன்று வார்த்தைகளை எப்படி எழுதலாம் என்கிற குழப்பம் வந்ததா  கீர்த்திநாராயணப்பெருமாள், கீர்த்திநாராயணபெருமாள்,  கீர்த்திநாராயண பெருமாள்,  கீர்த்திநாயராயணப் பெருமாள், கீர்த்தி நாராயணப்பெருமாள்,  கீர்த்தி நாராயணபெருமாள்...

    நமக்கெல்லாம் வருமே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம், எனக்கு இது ரொம்பவே வரும் ஹைஃபைவ் நமக்கெல்லாம்!!

      கீதா

      நீக்கு
  4. நெல்லை சுத்தமான டீ டோட்டலர் போல...    வெளியிடங்களில் காஃபி ஆர்டர் செய்து ரிஸ்க் எடுப்பதைவிட டீயே பெட்டர்.
    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையை சொன்னதும் எனக்குக் கன்னாபின்னான்னு சிரிப்பு வந்திடுச்சு!

      ஆமோதிக்கிறேன் இரண்டாவது கருத்திற்கு

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. /என்னை வழக்கம் போல.......(சென்சார்ட்).  //

    இதுல ஒரு கஷ்டம் என்னன்னா  இவ்வளவு வரிகள் சொல்லி வந்திருந்தாலும் மனம் அந்த சென்சார்ட் வரிகளில் தடுக்கி நின்று விடுகிறது.  தாண்டி வந்தாலும் கூடவே வருகிறது "என்னவாக இருக்கும்" என்கிற கேள்வி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...ஹைஃபைவ்! சென்சார்ட் வரிகளுக்குத்தான் போகும் நம் மனசு.

      கற்பனையில் கதையும் பிறக்கலாம் ஸ்ரீராம்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. // எனவே அழைத்துச் சொல்ல முடியாமல் போனது. //

    இதைதான் முன்னர் குறிப்பிட்டேன்...   இங்கு ச் வராது என்று நினைக்கிறேன்.   அதேபோல எங்களுக்கு சங்கடமாகிவிட்டது சரி. ச் வேண்டாம் 

    பதிலளிநீக்கு
  7. நந்தியைப் பார்த்தால் குதிரையோட  க்ராஸ்ப்ரீட் போல இருக்கு!  நந்தீஸ்வரா...   என்னை மன்னிச்சுடு..  சிவசிவ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...நந்தியெம்பெருமானே, ஸ்ரீராம் சமத்துப் பையன் தப்பா எடுத்துக்காத! நந்தியின் காதில் ஓதியாச்சு!

      அவர் எடுத்துக்க மாட்டார் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  8. கோவிலின் முகப்பு மற்றும் பக்கவாட்டு படங்கள் எல்லாம் அழகா இருக்கு,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் அழகா இருக்கும் ஸ்ரீராம், இன்னும் உள்ளே அடுத்த படங்கள் வரும் போது இன்னும் தெரியும்...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் எப்போதும் போல் துல்லியம். நல்ல வளமான தங்களது எழுத்துக்களை ரசித்துப் படித்தேன். பாராட்டுக்கள். கீர்த்திநாராயண கோவில், மற்றும் பஞ்ச நாராயணா கோவில்கள் உருவான வரலாறு படித்துக் கொண்டேன். ஒவ்வொரு மதமும் ஒருவருக்குப் மனதளவில் பிடிக்கவில்லையென்றால், அந்தக்கோவில்களை அழிப்பது.. அதனால் விளையும் போர்கள்.. உயிர் சேதங்கள் என தொடர்ந்தது அந்தக்கால மன்னராட்சி. (அப்போது அந்தந்த நாடுகளின் குடிமக்களாக வாழ்ந்தவர்கள் மனங்கள் என்ன பாடுபட்டிருக்கும் .நினைக்கவே கஸ்டந்தான்.. ) ஆனால், அவர்கள் உருவாக்கிய கோவில்கள் இப்போதும் சற்று உயிர்ப்புடன் இருப்பது நம்மால் அந்த புனிதமான வரலாற்றுக்களை உணர வழி வகுக்கிறது.

    நீங்கள் கோவிலின் பாதைகளைப் பற்றியும் உங்கள் அனுபவங்களைக் குறித்தும் விபரமாக சொல்லி வந்ததை படித்து ரசித்தேன்.

    நுழைவாயில் படங்கள், சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்க(ள்)ளை எடுத்த படங்கள் என அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.

    ஹொய்சாலர்களின் கட்டிட கலை வியக்க வைக்கிறது. அந்த மன்னர்களின் கலாரசனை போற்றக்கூடியது./ வணங்கத்தக்கது. 🙏. கோவிலுக்குள் நுழைந்து நாராயணரின் தரிசனம் பெற நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    இதற்கு முந்திய தங்களது இருபதிவுகளை படிக்கவில்லை. (வெளியில் சென்று விட்டதாலும், சற்று உடல்நல குறைபாட்டிலும் வலைத்தள வருகை குறைந்து விட்டது.) அதையும் கண்டிப்பாக படித்து விட்டு வருகிறேன் சகோதரி. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலாக்கா.

      எனக்கும் உங்கள் எண்ணங்கள் போலத் தோன்றுவதுண்டு. //ஒவ்வொரு மதமும் ஒருவருக்குப் மனதளவில் பிடிக்கவில்லையென்றால், அந்தக்கோவில்களை அழிப்பது.. அதனால் விளையும் போர்கள்.. உயிர் சேதங்கள் என தொடர்ந்தது அந்தக்கால மன்னராட்சி.//

      இப்போதும் நடக்கிறதே.

      //நீங்கள் கோவிலின் பாதைகளைப் பற்றியும் உங்கள் அனுபவங்களைக் குறித்தும் விபரமாக சொல்லி வந்ததை படித்து ரசித்தேன்.//

      நன்றி கமலாக்கா

      ஹொய்சாளர் கலையை இன்னும் ரசிக்கணும்னா பேளூர், ஹளபீடு.

      //இதற்கு முந்திய தங்களது இருபதிவுகளை படிக்கவில்லை. (வெளியில் சென்று விட்டதாலும், சற்று உடல்நல குறைபாட்டிலும் வலைத்தள வருகை குறைந்து விட்டது.) அதையும் கண்டிப்பாக படித்து விட்டு வருகிறேன் சகோதரி. நன்றி//

      அக்கா உங்கள் உடல்நலன் முக்கியம். அதுக்குப் பிறகுதான் இவை எல்லாம். எனவே மெதுவா பாருங்க ஒன்னுமில்லை

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  10. கோயில் வரைபடத்தோடு , நிறைய விவரங்களுடன் பதிவு அருமை.

    //எப்போதும் நான் நம்மவரிடம் சொல்வது எங்கு போனாலும் கோவிலாகவே இருந்தாலும் கையில் மொபைலை வைத்துக் கொள்வது நல்லது என்று. என்ன செய்ய? இப்படியான சில அனுபவங்கள்....//

    சில கோயில்களில் மொபைலை அனுமதிப்பது இல்லை பத்திரமாக வைத்து விட்டுதான் போக வேண்டும்.

    பெரிய நந்தி நன்றாக இருக்கிறது. நல்ல வேலைபாடு.
    கோயில் படங்கள், தூண்கள் படம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    "நடப்பது" எல்லாம் நல்லதுக்கே! //

    ஆமாம், நடப்பது நல்லது.
    நடப்பது எல்லாம் நன்மைகே ! என்ற எண்ணமும் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதிக்கா...நன்றி அக்கா

      ஆமாம் சில கோயில்களுக்குள் அனுமதிப்பதில்லை கொடுத்துவிட்டு வர வேண்டும். வெளியில் வரும் போது கையில் இருந்தால் நல்லதுஇல்லையாக்கா....அதுக்குதான்

      //"நடப்பது" எல்லாம் நல்லதுக்கே! //

      ஆமாம், நடப்பது நல்லது.
      நடப்பது எல்லாம் நன்மைகே ! என்ற எண்ணமும் நல்லதுதான்.//

      கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க!!!

      ஸ்ரீராம், கமலாக்கா சொல்லக் கூடும்னு நினைத்தேன்...

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. ஹொய்சாள சிற்பக் கலை வடிவங்கள் என்ற தூண் சிற்ப படத்தில் கண்ணன் குழல் ஊதும் காட்சி தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா, அதுக்காகவே அதை எடுத்தேன் அவ்வளவு தெளிவாக இல்லைன்னாலும்...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. தல வரலாற்று தகவல்கள் சொல்லிச் சென்ற விதம் நன்று.

    படங்கள் வழக்கம்போல அழகு.

    பதிலளிநீக்கு