ஞாயிறு, 4 ஜனவரி, 2026

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025 பரிசு பெற்ற கதைகளைப் பற்றி...பகுதி - 4 - 4/7

கதைகளைப் பற்றி முதல் பகுதி 1/7

கதைகளைப் பற்றி இரண்டாம் பகுதி 2/7

கதைகளைப் பற்றி மூன்றாம் பகுதி - 3/7

சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன்.  இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால்,  ஆசிரியர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.  நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 4/7

கருத்திடுபவர்களுக்கு -  நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், எனக்கு யாரென்று புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

 அருள்வாக்கு

கணேஷ்ராம்

ஆசிரியர் - கல்வித் தகுதிகள் - கணிதத்தில் பட்டம், பூனா சிம்பயாசிஸில் வணிக மேலாண்மை. வங்கிப் பணியில் முதன்மைப் பொது மேலாளராகப் பணியாற்றியவர். பல பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள், மொழிபெயர்ப்புக் கதைகள் வெளிவந்துள்ளன. இவர் எழுத்து எனக்கு நவீன விருட்சம், சொல்வனத்தின் மூலம் பரிச்சயம்.

கதை - கதாபாத்திரம் சீனி விலை உயர்ந்த காரில் வருகிறான். நல்ல ஆடை அணிந்திருக்கிறான். கார் நுழைய முடியாத தெரு என்பதால் தள்ளி நிறுத்திவிட்டு நடந்து வந்து இந்தப் பைப்படியைப் பார்த்துக் கொண்டிருப்பதில் கதை பின்னோக்கிச் செல்லத் தொடங்குகிறது. ஏன் பைப்படியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் அதன் பின்னணி என்ன? என்பது ஃப்ளாஷ் பேக்கில்

சீனியின் குடும்பத்தில் பரம்பரையிலேயே சீனிதான் முதல் பட்டதாரி. அதற்கு அவனும் அவன் அம்மாவும் பட்ட  கஷ்டங்கள் நிறைய. அவமானப்பட்டு அவமானப்பட்டு ஃபீஸ் கட்டி ஒரு பேப்பர் ஃபெயிலாகி அதை பாஸ் செய்வதற்குள் படாதபாடுபட்டு பாஸாகிறான். ஆனால் அவன் நண்பன் பாலாஜி முதல் அட்டெம்ப்டிலேயே பாசாகிவிடுகிறான்.

சீனிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. பாலாஜியை வழியில் சந்திக்கும் போது அவன் ஏதோவொரு கம்பெனியில் வேலை பார்ப்பது தெரிகிறது. அப்போதுதான் பாலாஜி டிகிரி முடித்தது எப்படி என்ற ரகசியத்தைச் சொல்கிறான். அருள்வாக்குகளை வீசும் ஒரு உபாசகரைப் பார்க்க காலை ஏழுமணிக்குள் போய் எதிரே அமர்ந்தால் அவரே ஞானதிருஷ்டியால் அழைத்து சில கேள்விகள் கேட்பார் பின்னர் மிகவும் சுலபமான பரிகாரங்கள் சொல்வார். அதைக் கடைபிடித்தால் காரியம் உடனே நடக்கும் என்று சொல்கிறான்.   சீனியும் போகிறான்.

இதன் பின் இன்னும் அதற்கும் முன்னான சீனியின் வாழ்க்கை பற்றி வருகிறது. உதவாக்கரை அண்ணா, சித்த பிரமையோ ஏதோ ஒன்றினால் தாக்கப்பட்ட அக்கா. வைத்தியம் பார்க்க முடியாத நிலை என்று சீனியின் வாழ்க்கைச் சம்பவங்கள்.

சீனி ஒரு உபாசகரைப் பார்க்கச் சென்றான் இல்லையா? அந்த உபாசகர் என்ன சொல்கிறார்? அதனால் சீனிக்கு என்ன ஆகிறது? என்றாலும் அவன் அந்த அருள்வாக்கை எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பதுதான் கதை.

அருள்வாக்கு பலித்த விதத்தை நேர்மறையாகவும் பார்க்கலாம், எதிர்மறையாகவும் பார்க்கலாம். கதாபாத்திரம் அதை நேர்மறையாகப் பார்ப்பதாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார். Cause and Effect.

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

 

அக்னிக்குஞ்சு

லதா சுப்ரமணியம்

ஆசிரியர் : கொரோனா காலத்தில் பிரதிலிபி தளத்தில் எழுத ஆரம்பித்து 'அறம் கூற்றாகும்' என்ற சரித்திரப்புனைவுக் கதையை எழுதினார்.  அங்கு நிறைய நாவல்களும் கவிதைகளும் எழுதி வருகிறார். மூன்று புதினங்கள் நூல்களாக வெளியாகியுள்ளன. சென்றவருடம் அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதைப் போட்டி - 2024 ல் "நீங்காது பூமாது" என்ற கதைக்குப் பரிசு பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதை - சமீபத்தில் ஈரோடில் 13 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு மருத்துவமனைகள் மூட நடவடிக்கை எடுத்த விஷயம் பற்றி நாம் அறிந்திருப்போம். அதை அடிப்படையாக வைத்து அழகான கதை புனைந்துள்ளார் ஆசிரியர். 'கருமுட்டை தானம்' செய்வதில் நடக்கும் அவலங்களை அப்படியே கண் முன் கொண்டு வரும் வகையில் எழுதியிருக்கிறார்.

ஆண் விந்து மையங்கள் உண்டு. அது போல கருமுட்டை தானம் செய்வதும் சட்டத்தில் இடம் உண்டு. எப்படி வாடகைத் தாய் என்பதற்குச் சட்டத்தில் விதிமுறைகளுடன் இடம் உண்டோ அது போல குழந்தை பெற முடியாதவர்கள் இப்படி ஆண் விந்துவிற்கோ அல்லது பெண்ணின் கருமுட்டைக்கோ அணுகுவதுண்டுதான். ஆனால் அதற்கும் சட்டம், விதிமுறைகள் உண்டு. குறிப்பாக மருத்துவ விதிமுறைகள்.

ஆனால் யதார்த்தத்தில் நடந்த/நடக்கும் அவலத்தைப் பேசுவதுதான் இக்கதை.

13 வயதே ஆகும் பெண் குழந்தை கல்பனா. அவளின் தாய் பொன்னம்மாள். அவளுடன் அவ்வப்போது 'உறவாடும்' முனுசாமி. பொன்னம்மாள் ஏற்கனவே கருமுட்டை தானம் கொடுத்து பணம் ஈட்டுகிறாள். அதற்கான ஏஜன்ட் அஞ்சலை, பொன்னம்மாளை, அவள் பெண்ணையும் கூட்டி வரச் சொல்கிறாள். முதலில் பொன்னம்மாள் மறுக்கிறாள்.

ஆனால் கூட இருக்கும் அந்த முனுசாமிக்கு ஏற்கனவே அந்தக் குட்டிப் பெண் மீது கண் என்பதால், பொன்னம்மாளிடம் குழந்தையையும் விட்டால் பணம் நிறையக் கிடைக்கும் என்று மூளைச் சலவை செய்கிறான். பொன்னம்மாள் கூட்டிச் செல்கிறாள். மருத்துவர், "நீ கொடுத்து இப்ப ரெண்டு மாசம்தானே ஆகிறது கொடுக்க முடியாது" என்று சொல்ல பொன்னம்மாள் கல்பனாவைப் பற்றிச் சொல்கிறாள்.

மருத்துவர், கல்பனாவைப் பார்த்து சின்னப் பெண் என்கிறாள். ஆனால் பொன்னம்மாள் கல்பனாவின் வயதை 25 என்கிறாள். மருத்துவர் நம்பமுடியலை என்றதும், தன் வறுமையைக் காரணம் சொல்லி அதனால் கல்பனா இப்படி இருக்கிறாள் என்று சொல்கிறாள். மருத்துவரும் பிரச்சனை வராதே என்றோடு நிறுத்திக் கொண்டு கருமுட்டை எடுப்பதற்கான நடைமுறைகளை முடிக்கச் சொல்கிறார்.

என்ன மருத்துவர் இவர்? ச்சே என்று நம்மை எண்ண வைக்கிறது.

பாவம் குழந்தை கல்பனா. வயிற்று வலியில் சுருண்டு படுக்கிறது.

உறவு கொண்டால் நிறைய கருமுட்டைகள் வரும் என்று அந்த முனுசாமி பொன்னம்மாளிடம் சொல்லி, அக்குழந்தையுடன் உறவுகொள்வது எல்லாம் நம்மைத் தூக்கிவாரிப் போடச்செய்யும் இடங்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அக்குழந்தை கல்பனா மிகவும் அவஸ்தைப்படுகிறாள். நம்மைக் கலங்க வைக்கும் இடங்கள்.

இன்னும் பணம் கிடைக்கும் என்று ஆந்திரா பக்கம் ஒரு மருத்துவமனைக்குப் போகலாம் என்று சொல்கிறான் அந்த முனுசாமி. பொன்னாம்மாளும் மகளை அழைத்துக் கொண்டு மூவரும் போகிறார்கள்.

அந்த மருத்துவ மனையிலும் சட்டவரம்பிற்கு மீறி நடக்கின்றன விஷயங்கள். கருமுட்டை தானம் செய்ய வரும் பெண்களுக்கு ஹார்மோன் ஊசி போட வேண்டும். இப்பணியில் இருக்கும் தீபா கல்பனாவைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறாள். கல்பனாவிடம் விவரம் கேட்கவும் குழந்தை எல்லா உண்மைகளையும் சொல்லி என்னைக் காப்பாத்துங்க என்று சொல்கிறாள்.

தீபா உடனே நடவடிக்கை எடுக்கத் துடிக்கிறாள். நடவடிக்கை எடுத்தாளா? குழந்தை கல்பனா காப்பாற்றப்பட்டாளா?

கதையை வாசித்ததும் உலுக்கி விட்டது. இரு நாட்கள் அடுத்த கதைகளை வாசிக்க, நான் புத்தகம் பக்கமே செல்லவில்லை. மனம் அந்த அளவு கலங்கியிருந்தது. என்ன உலகம் இது என்று. அழகாகச் சித்தரித்திருக்கிறார் கதையை.

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

(இக்கதையை வாசித்ததும், நான் எழுதிய "நான் ரேணு எனக்கு விடுதலை வாங்கித் தருவீங்களா" என்ற கதை நினைவுக்கு வந்தது. வேறு கதைக்களம் என்றாலும் பெண் சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகளில் ஒன்றை முன்வைத்து எழுதிய கதை.)

 

அன்னபூரணி

நத்தம் எஸ் சுரேஷ்பாபு

 

ஆசிரியர் - ஆசிரியரைப் பற்றிச் சொல்லணுமா? நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமானவர். அவர் நடத்தும் இணைய இதழ் பற்றியும் அறிவோம். "தேன்சிட்டு" தீபாவளி மலர் வருடம் தோறும் வெளிவரும் ஒன்று. சிறுவர் கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள். மிகச் சிறிய குறுங்கதைகள், ஹைக்கூ, லிமைரைக்கூ, சென்ரியூ, வடிவக் கவிதைகள் எழுதுவார். குழந்தைகள் கதைகளும் எழுதக் கூடியவர். அச்சுப் பிரதியாகவும் வந்திருக்கின்றன.

கதை - ஹேமா மாமி பரோபகாரி. அவர்கள் வீட்டிற்கு வரும் ஐயங்கார் மாமி பேசிக் கொண்டே 'வேண்டாம் வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டே எல்லாம் வாங்கிக் கொண்டு செல்கிறாள். ஹேமா மாமியின் மகன் கணேஷிற்குக் கோபம் வருகிறது. அப்பாவும் கோபப்படுகிறார். ஆனால் ஹேமா மாமி அவர்களை அடக்கி விட்டு, அந்த மாமியே கேட்காவிட்டாலும் தானாகவே வேறு கொடுக்கிறாள். இப்படி ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டும், ஹேமா மாமியே எல்லாம் கொடுப்பதுமாக இருக்க....

ஃப்ளாஷ் பேக் கணேஷ் (அப்படித்தான் நினைக்கிறேன்) பார்வையில் விரிகிறது.

தொடக்கத்தில் மூன்றாவது நபர் சொல்வதாகத் தொடங்கும் கதை, அடுத்து கதை சொல்லியின் பார்வையில் மாறுகிறது.

எனவே இங்கு 'நான்' என்று சுய அனுபவங்களில் கதை நகர்கிறது. இந்த ஐயங்கார் மாமியும், அவள் கணவர் ஐயங்கார் மாமா என்று கதையில் சொல்லப்படும் மாமாவும் ஒரு நாள் இவர்கள் வீட்டுத் திண்ணையில் தங்கள் மூட்டை முடிச்சுகளுடனும், மாடுகளுடனும் வந்து சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

இவர்கள் வீட்டிற்குள் ஒரு அறையை அவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார்கள். ஹேமா மாமியும் இசைந்துவிடுகிறாள். ஒரு அறையில் புகுந்து விடுகிறார்கள். அந்த ஐயங்கார் மாமா சமையல் வேலைக்குச் செல்லும் போது கிடைக்கும் இனிப்புகள் காரங்களில் ஒன்றொன்று ஹேமா மாமியின் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். குழந்தைகளுக்கு இன்னொன்று வேண்டும் என்றாலும் கொடுப்பதில்லை.

இவர்கள் வறுமையில் வாடினாலும் அவர்கள் உதவுவதில்லை. தங்கள் வீட்டில் தாங்கள் கறக்கும் பாலில் கொஞ்சம்  கூடக் கொடுப்பதில்லை. அறைக்கு வாடகையும் கொடுப்பதில்லை. இது வீட்டிலுள்ளவர்களுக்குப் புரிந்தாலும் ஹேமா மாமி பெரிது படுத்தாமல் போகிறார்.

ஒரு முறை, ஹேமா மாமி குடும்பத்தில் பால் இல்லாமல் போக ஐயங்கார் மாமி ஒரு துளி கூடக் கொடுக்காமல் ஆனால் அதே சமயம், பாலுக்கு உறை போட தயிர் கேட்கிறாள். ஹேமா மாமி அதைச் சொல்லிக் காட்ட உடனே சண்டை போட்டுக் கொண்டு வெளியேறினாலும் மீண்டும் சில வருடங்களில் இங்கேயே வந்துவிடுகிறார்கள். அதே போன்று மீண்டும் கார்த்திகை தீபம் சமயத்தில் சண்டை வர மீண்டும் வெளியேறிவிடுகிறார்கள். அதன் பின் அந்த ஐயங்கார் மாமா இறந்துவிட, மாமி அல்லாடுகிறாள், கூலி வேலை பார்த்து.

அப்படித்தான் இவர்கள் வீட்டில் அவ்வப்போது வந்து சாப்பிட்டு, பொருட்கள் வாங்கிச் செல்கிறார்.

ஹேமா மாமி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். கணேஷிற்குப் பிடிக்காமல் கேள்வி கேட்டாலும் ஹேமா மாமி சொல்லும் பதில், "அது அவ குணம். மாத்த முடியாதுடா. நம்ம குணம் கொடுக்கிற குணம்! அவ ஈரக் கேழ்வரகாவே இருக்கட்டும் ஆனா நான் சுரக்கிற பாத்திரம்! அதை என்னால் மாத்திக்க முடியாது"

அன்னபூரணி!

கதையில் எனக்கு வந்தக் குழப்பம், மூன்றாம் நபர் சொல்வது அதாவது ஆசிரியர் சொல்வது போலத் தொடங்கிய கதை பின்னர் 'நான்' என்று ஃப்ளாஷ்பேக் தொடர்ந்து முடியும் போதும் மூன்றாவது நபர் அதாவது ஆசிரியர் சொல்வது போல முடிகிறது.

ஆசிரியர் சுரேஷிற்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!

 

கோபுர வாசல்

எம் எஸ் பெருமாள்

ஆசிரியர் - 'கலைமாமணி' எம் எஸ் பெருமாள். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பணியாற்றி பொதிகை தொலைக்காட்சியின் இயக்குநராக ஓய்வு பெற்றவர்.

பல விருதுகள் பெற்றவர், படைப்புகள் படைத்தவர் என்ற பெருமைகள் பல. சொல்லிக் கொண்டே போகலாம்.

மூன்று திரைப்படங்கள் இவரது கதைகளைக் கொண்டு எடுக்கப்பட்டவை! மூன்று திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பிரபல பேச்சாளர் சுகி சிவம் இவரது கடைசித் தம்பி.

கதை - சில வருடங்களுக்கு முன், ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில்கள் திறப்பது பற்றிய சர்ச்சை கிளம்பியதை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். அதை அடிப்படையாகக் கொண்ட கதை.

ஆங்கிலப்புத்தாண்டிற்குக் கோவிலின் வாசல் தயாராகிறது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், பல வித கடைகள் அங்கு திறப்பதற்கும் அந்தந்தக் கடைகளைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அங்கு 20 கடைகள் போட இடம் பிடித்துக் கொடுத்திருக்கிறான் ஊர் பிரசிடென்டின் மச்சினனான சின்ராசு என்ற பெயர் கொண்ட பரந்தாமன். பரந்தாமன் அங்கு கடைகளைப் பார்வையிட வரும் போது அங்கு கடை போடுபவர்களுடனான உரையாடல்களில் கதையும் கதை மாந்தர்களுடன் நகரத் தொடங்குகிறது.

பூக்காரி மரகதம் ஆட்டோ முழுவதும் உதிரிப்பூ மூட்டைகளுடன் வந்து இறங்குகிறாள்.

கதிர்வேலு, பால் கேன் டீத்தூளுடன் வந்து இறக்கும் போதே ராத்திரி போணியாகுமா என்ற கவலையுடனும் சந்தேகத்துடன் இருக்கிறான். பரந்தாமன் நம்பிக்கை அளிக்கிறான், எப்படியும் விடியும் வரை கூட்டம் இருக்கும், உன் கடை பக்கத்துலயே உன் மச்சானுக்கும் கடை போட்டிருக்கேன்,  பசியாற டீ, பணியாரம் பிஸ்கட்டுன்னு சாப்பிடுவாங்க, நீயும் உன் மச்சான் தங்கராசுவும் காசைக் கோணிச்சாக்குல கட்டித் தூக்கிட்டுப் போவீங்க என்று நம்பிக்கை கொடுக்கிறான். இருந்தாலும் கதிவேலுவுக்கு நம்பிக்கை வரவில்லை.

மச்சானின் பலகாரத்தை, வைத்திருந்து வித்துவிடலாம் ஆனால் பால் அப்படியில்லையே என்று புலம்பும் போதுதான் பரந்தாமனுக்கு விஷயம் தெரியவருகிறது, கதிரின் புலம்பலின் மூலம்.

ஜனவரி ஒன்றாம் தேதி நமக்கெல்லாம் புதுவருடம் இல்லை அதனால் இன்றைக்கு இரவு பன்னிரெண்டு மணிக்கு கோவிலைத் திறந்து வைக்கக் கூடாது என்று நோட்டிஸ் ஒட்டியிருப்பதாகத் தெரியவருகிறது.

அப்படிச் செய்தவன் போஸ்ட்மாஸ்டர் வீட்டுப் பையன் சாரங்கன் மற்றும் அவனுடைய சினேகிதர்கள் என்றும் சொல்கிறார்கள்.

பரந்தாமனுக்குக் கோபம் வருகிறது. ஒவ்வொரு கடையிலிருந்தும் 500 ரூபாய் கமிஷன் கிடைக்கும், 10000 ரூபாய் நஷ்டம் என்பதை விட அவன் வார்த்தையின் மதிப்பு போய்விடக் கூடாது என்று.

பிரசிடென்ட் கோபாலனின் பங்களா முன் ஊரின் முக்கியஸ்தர்கள் கூடுகிறார்கள். பரந்தாமனும் அங்கு ஓரமாக நிற்கிறான். சாரங்கனும் அக்கூட்டத்தில் தைரியமாகப் பேசுகிறான். கோவிலின் ஆகம விதிகளை மீறி கோவிலை நள்ளிரவில் திறந்து வைக்கக் கூடாது என்று. பரந்தாமன் சண்டை போடுகிறான்.

அப்புறம் என்ன நடக்கிறது? கோவில் இரவு திறக்கப்பட்டதா? இல்லையா? என்ன ஆகிறது என்பது மீதி வெள்ளித்திரையில் என்பது போல் கதையில்.

ஆசிரியர் கதையை எப்படி முடித்திருப்பார் என்று நீங்களும் யூகிக்கலாம். கருத்தில் சொல்லலாம்!

கதையை வாசிக்கும் போது திரைப்படம் போன்று காட்சிகள் விரிகின்றன. கதையை வாசிக்கும் உங்களுக்கும் அப்படித் தோன்றக் கூடும். திரைப்படத்துக்கான நல்ல கதை அமைப்பு.

ஆசிரியர் ஐயாவிற்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

 

பெயர் தெரியாத பெண்மை

ரத்னமாலா புரூஸ்

ஆசிரியர் - சென்னையில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் என் ஊரான நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன் அவர் மகன் ஹாரி கிருஷ்ணாவைப் பற்றிய குறிப்பில் இருந்ததால். (ஹாரி கிருஷ்ணாவும் பரிசு பெற்றவர் எங்கிருந்தோ வந்தான் கதைக்கு. ஏற்கனவே அக்கதை பற்றிச் சொல்லிவிட்டேன்.)

படைப்புகளுக்கும், அவர் பெற்ற விருதுகளுக்கும் கணக்கே இல்லை.

முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி, மாவட்ட ஆட்சியரின் 'சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்' சான்றிதழைப் பெற்றவர்.

கதை - பேருந்தில் ஓட்டுநரை மாமா என்று அழைத்துக் கொண்டே டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் அப்பெண் பேருந்தையும் கலகலப்பாக வைப்பவள். அந்த ஊரின் ரவுடி போன்றவள். கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில். எனவே அவள் ஏறினால் பேருந்தில் அவளுக்கு எதிராக எந்தப் பேச்சும் இருக்காது. அதே பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவிகளான கீதாவும் ரத்னாவும் அவளுடைய ஆர்பாட்டத்தைக் கண்டும் காணாததுமாகப் பயணிப்பார்கள். ரத்னாவிற்கு அப்பெண்ணைக் கண்டால் பிடிப்பதில்லை.

அப்பெண், அந்த ஊரின் சுற்றுக்கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதால் மிகவும் பிரபலம். கரகாட்டக்காரியும் கூட. அப்படி ஒரு முறை கோவில் திருவிழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த புல்லட் ராஜன் எனும் ரவுடியை அவன் சட்டையைப் பிடித்து, "ஒழுங்கா என்னை கல்யாணம் பண்ணிக்க. இல்லைன்னா உன்னை சும்மா விடமாட்டேன்" என்று மிரட்டுவதால், அவனே ரவுடி ஆனால் அவனையும் விட ரௌடியான அவளை தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறான். அதிலிருந்து அவள் புல்லட்ராஜனின் பெண்டாட்டி என்று அழைக்கப்படுகிறாள். அவன் கட்டபஞ்சாயத்து செய்ய இவள் கள்ளச்சாராயம் தொழில்.

அவள் பேருந்திலும் அடாவடி செய்து கொண்டு கலகலப்பாக்கி வர ஒரு முறை ரத்னா அவளைத் திரும்பிப் பார்த்திட, அவள், அவர்கள் அருகில் வந்து அமர்ந்து பேசத் தொடங்குகிறாள். பயந்து போகிறார்கள். ரத்னா தன் அம்மாவிடம் அவளைப் பற்றிக் கேட்கிறாள். 'அவள் மோசமானவள் அவள் போகும் பேருந்தில் ஏற வேண்டாம்' என்று சொல்கிறாள் அவள் அம்மா.

அதனால் மறுநாள், ரத்னாவும் கீதாவும் புல்லட் ராஜனின் பெண்டாட்டி போகும் பேருந்து வந்தும், அதில் ரத்னாவும் கீதாவும் ஏறாததைக் கண்ட புல்லட் ராஜனின் பெண்டாட்டி, 'ஏன் ஏறவில்லை' என்று கேட்டாலும் இவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் வேறு பேருந்தில் ஏறுகிறார்கள். அப்பேருந்தில் கூட்ட நெரிசல். அதில் வரும் ஒரு பையன் ரத்னாவிடம் சீண்டுகிறான். கீதா அவளிடம் சொல்கிறாள், புல்லட் ராஜனின் பெண்டாட்டி எப்படி இருந்தால் என்ன, அந்தப் பேருந்தில் நமக்கு இப்படியான தொல்லைகள் இருக்காது என்று.

கல்லூரி வரை அப்பையன் தொடர்கிறான். ரத்னாவுக்குச் சிறிது பயம் வருகிறது. அடுத்த நாள், கீதா வரவில்லை. ரத்னா தனியாகச் செல்கிறாள் கல்லூரிக்கு. புல்லட் ராஜன் பெண்டாட்டி செல்லும் பேருந்தில் ஏறலாம் என்று ஏறினால், அன்று அவள் அதில் இல்லை. வம்பு செய்த பையனும் அதே பேருந்தில் வந்து ரத்னாவிடம் வம்பு செய்கிறான். அடுத்த நிறுத்தத்தில் புல்லட் ராஜனின் பெண்டாட்டி ஏறியதும்தான் ரத்னாவிற்கு மனதின் படபடப்பு அடங்குகிறது. அவள் அப்பையனைத் தட்டி பேருந்திலிருந்து இறக்கிவிடுகிறாள்.

அன்று மாலை கல்லூரியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் பேருந்து வராததால், ரத்னா நடக்கத் தொடங்குகிறாள். கீதா அன்றும் வரவில்லை எனவே தனியாகச் செல்கிறாள். இருள் தொடங்கும் நேரம் மரங்களும் இருப்பதால் ரத்னா பயத்துடன் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறாள். அப்போது ஒரு குரல் கேட்க யாரென்று பார்த்தால் புல்லட் ராஜனின் பெண்டாட்டி.

ரத்னாவிற்கு அப்போதுதான் தைரியம் வருகிறது. அப்போது புல்லட் ராஜனின் பெண்டாட்டி, அவளை இப்பகுதி நல்ல பகுதி இல்லை, இப்படித் தனியாக வரக்கூடாது, என்று அறிவுறுத்துகிறாள். கூடவே அவள் சொல்லும் வரியாக வருவது, "ஒரு காலத்துல என்னையும் அந்த இருட்டுக்குள தள்ளி விட்டுருச்சு இந்த உலகம். சுதாரிச்சு வெளில வர்றதுக்குள்ள என் பகலும் இருட்டாயிருச்சு" என்று அவளிடம் சொல்லும் போது புல்லட்டின் பெண்டாட்டிக்குக் குரல் கம்முகிறது. 

'வெளில வர்றதுக்குள்ள பகலும் இருட்டாயிருச்சு' என்பதுதான் முக்கியமான வரி.

இந்த வரி சொல்லும் முக்கியமான பாயின்ட் இதுதான், பெண்கள் பலரையும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத சூழல் அவர்களை எப்படியோ இருட்டில் தள்ளுகிறது, ஆனால் அவர்களுக்குள்ளும் நல்ல மனம் இருக்கும் என்பதுதான். 

ரத்னாவைப் பயப்படாமல் போகச் சொல்கிறாள், தான் இருக்கிறேன் என்று. ரத்னா அந்த ரவுடிக்குள் இருந்த பெண்மையைப் பார்க்கிறாள்.

கதையின் போக்கைக் கொஞ்சம் யூகிக்க முடிந்தது.

ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

 

-----கீதா

8 கருத்துகள்:

  1. கதையைப் பற்றிய உங்கள் பார்வைகள் வழக்கம்போல் அருமை.  கதையைச் சொல்லி விடாமல், அதேசமயம் என்னவாக இருக்கும் எனும் ஆர்வத்தைத் தூண்டி என்று நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஒரு சில கதைகளில் அப்படிச் சொல்வது சிக்கலாக இருந்தது. இப்போது தோன்றியது என்னவென்றால் அக்கதைகளையும் கூட அதாவது இரு கதைகள் இந்தத் தொகுப்பில், அவற்றையும் அப்படிச் சொல்லியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. Its too late!!!

      கீதா

      நீக்கு
  2. படைப்பாளிகளின் ஒவ்வொருவரின் பின்னணியும் பிரமிக்க வைக்கிறது.  இத்தனை பெரிய கைகள் செல்லப்பா ஸாருக்கு உறுதுணையாய் நின்றிருப்பது  போற்றுதலுக்குரியது.  செல்லப்பா ஸாரின் பெருமையும் புரிகிறது.  வாழ்க, வளர்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். ரொம்பவே பிரமிப்பு. அதேதான் செல்லப்பா சாருக்கு இத்தனை பேர் இருப்பதும் அவரது பெருமையையும் சொல்கிறது என்பதை மறுக்க முடியாது. குழுவிலும் பார்த்திருப்பீர்கள் அவர்களின் திறமைகளை அவர்கள் அவ்வப்போது பகிரும் போது.

      கீதா

      நீக்கு
  3. வணக்கம், என்னுடைய கதையைப்பற்றி அருமையான விமர்சனம் தந்தமைக்கு நன்றி. இந்தக்கதை எழுதி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது முன்பு போல எழுத முடிவதில்லை. இந்தக்கதையில் முதலில் மூன்றாம் நபர் சொல்வது போலவும் பின்னர் தானே சொல்வது போலவும். மீண்டும் மூன்றாம் நபர் முடிப்பது போலிருக்கும் குழப்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். புத்தகமாகி என் கைக்கு வந்தபின் தான் கவனித்தேன். இந்தக் குறை இக்கதையின் முதல்பரிசு வாய்ப்பையும் பறித்திருக்கலாம். இக்கதையை வேறுபத்திரிகை போட்டிகளுக்கும் முன்பு அனுப்பி தேர்வு பெறவில்லை. பின்னர் சில திருத்தங்கள் செய்து இந்த போட்டிக்கு அனுப்பினேன். அப்போதும் இந்தப்பிழை எனக்குத்தோன்றவில்லை. இனிவரும் காலங்களில் இன்னும் கவனமாக இருப்பேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்.

      இது பொதுவாக நடப்பதுதான். சில சமயம் இப்படி நம் கண்களுக்குப் புலப்படாமல் போகும். எனவே நாம் எழுதும் கதைகளை நமக்கு நெருங்கிய நட்புகள் யாருக்கேனும் அனுப்பி வாசிக்கச் சொல்லி கருத்து கேட்டால் நம் கண்களில் படாமல் போனவை கூட அவர்கள் சொல்லிவிடுவார்கள்

      அப்படித்தான் நாங்கள் (என் நட்புகளுடன்) செய்வது. வெளியிடும் முன் அல்லது போட்டிக்கு அனுப்பும் முன்னும் கூட.

      பரவாயில்லை சுரேஷ். இனி அதைப் பார்த்துக்கொண்டால் போதும். நீங்கள் நன்றாக எழுதக் கூடியவர் என்பதால்.

      மீண்டும் நன்றியுடன்

      கீதா

      நீக்கு
  4. கதை விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறீர்கள் கீதா.

    அக்னிக்குஞ்சு

    லதா சுப்ரமணியம் அவர்கள் கதை மனதை மிகவும் பாதித்து விட்டது.
    வறுமை

    "//அது அவ குணம். மாத்த முடியாதுடா. நம்ம குணம் கொடுக்கிற குணம்! அவ ஈரக் கேழ்வரகாவே இருக்கட்டும் ஆனா நான் சுரக்கிற பாத்திரம்! அதை என்னால் மாத்திக்க முடியாது"//

    தளிர் சுரேஷ் கதையில் இருந்த வரிகள் ஆமாம் , சில குணங்களை மாத்த முடியாதுதான் என்று நினைப்பு வருகிறது.


    பெயர் தெரியாத பெண்மை

    ரத்னமாலா புரூஸ்

    அந்த மாதிரி வாழ்க்கைக்கு தள்ள படட்டவர்கள் அவர்களிடமும் நல்ல குணங்கள் இருக்கிறது என்கிறது கதை.

    அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான விவரங்கள்..... ஒவ்வொரு கதை குறித்தும் நீங்கள் தந்திருக்கும் விளக்கம் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு