வியாழன், 6 ஆகஸ்ட், 2015

திரிசங்கு...


                திரிசங்கு சொர்கம். இந்தச் சொல்லை நீங்கள் எல்லோருமே அறிந்திருப்பீர்கள்! உங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பயன்படுத்தியிருப்பீர்கள்! அனுபவம் உண்டா? நிச்சயமாக இருந்திருக்கும். யோசியுங்கள்! அதற்குள் அவளது திரிசங்கு நிலை பற்றி விவரித்து விடுகின்றேன். “அவளது” என்று நான் சொல்லும் “அவள்” அப்படி ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மிக மிகச் சாதாரணமான ஒரு  பெண். குழப்பம்? வாருங்கள். அவளுடன் 50 வருடங்களுக்கு முன்னரான காலகட்டத்திற்கு.

      பிறந்ததும் 10 நாட்களிலேயே அவள் வாயசைத்து ஏதேதோ பேசினாள் என்றும், மருத்துவர்கள் எல்லோரும், அவள் பின்னாளில் ஆசிரியையாக/பேச்சாளராகவோ, சட்ட வல்லுநராகவோ வருவாள் என்றும் அவளது தாயிடம் சொல்லி வாழ்த்தினராம். 3 ஆம் வகுப்பு வரை இலங்கைத் தலைநகரில் வாசம். தமிழ்வழிக் கல்வி. தமிழுக்கு வந்தனம் செய்யும் அருமையான பள்ளி. இலங்கை தமிழ் வானொலியில் நிகழ்ச்சிகள் வழங்கி வந்த மயில்வாகனம் அவர்கள், மறைந்த திருமதி ராஜேஸ்வரி சண்முகம், அவர்களும் அவளை மிகவும் கொஞ்சி, ஊக்கப்படுத்தி, வானொலியில் சிறுவர் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்தவர்கள். பின்னாளில் அவள் நன்றாக வருவாள் என்று சொல்லி வாழ்த்தியவர்கள்! திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் மடியில் தவழ்ந்தவள்!

      நாகர்கோவிலில், செயின்ட் ஜோசஃப் கான்வென்டில் 4 ஆம் வகுப்பு, தமிழ் வழிக் கல்வி. அங்கும் வாழ்த்துகள்! பின்னர், வள்ளியூர் வாசம். அப்போது அவளுக்கு 10 வயது. தந்தையின் பெற்றோர் வீடு. அருகிலுள்ள, ஆண்களுக்கும், பெண்களுக்குமான. அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி 5 ஆம் வகுப்பு. (அட! இப்போது இவளது வயது தெரிந்துவிட்டதோ? ம் பரவாயில்லை!  அவள் நடிகையா என்ன? அவள் வயதையும், வெள்ளி முடிகளையும் மறைப்பதற்கு?!) காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி ஆரம்பித்த முதல் நாள், முதல் வகுப்பு.

ஆங்கில ஆசிரியரான திரவியம் ஐயா வகுப்பினுள் நுழைந்ததும் ஆங்கில விடைத்தாள்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவளுக்குத் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே மிகவும் பிடித்த பாடங்கள். ஆசிரியர், புதிதாக வந்த மாணவி ....... என்று, அவளை எழுந்து நிற்கச் சொல்லி, “விரிவான விடைகளை, கட்டுரைகளை புத்தகத்தில் உள்ளது போல எழுதவில்லை. நான் எழுதிப் போட்டது போலும் எழுதவில்லை” என்று சொல்லவும், வகுப்பு முழுவதும் சிரித்துவிட, அவளுக்கோ பயம் “தோல்வி போலும். அம்மாவிடம் அடி வாங்க வேண்டுமே” என்று பயந்திருக்க.....

“இம்மாணவி பிற்காலத்தில் நல்ல ஆங்கில ஆசிரியையாக வருவதற்கான அறிகுறிகள் உள்ளன. இலக்கணச் சுத்தமாக எழுதியிருக்கிறாள்” என்று சொல்லி, கையெழுத்து மிகவும் நன்றாக இருப்பதாகவும் அறிவிக்க, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை சற்று நேரத்திற்கு. “நீ கல்லூரி செல்லும் போது ஆங்கில இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படித்தால் நன்றாக வருவாய்” என்று சொல்லி விடைத்தாளை அவளிடம் தந்தார். அன்றிலிருந்து ஆங்கிலப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்றால் அவளது பெயர் அதில் இருக்கும்.

அடுத்து தமிழ் வகுப்பு! தமிழ் ஆசிரியர் வேதாரண்யம். தமிழில் எழுத்துப் பிழைகள் நிறைய இருப்பதாகவும், இலக்கணம் யாரும் சரியாக எழுதவில்லை என்றும் எல்லோரையும் திட்டிக் கொண்டு, வரிசையாக விடைத்தாள்களைக் கொடுத்தார். மதிப்பெண் குறைந்து தோல்வி அடைந்தவர்களின் கையில் பிரம்பால் அடி வேறு!

அவளதுபெயர் விளிக்கப்படவில்லை! மீண்டும் பயம். அடியை நினைத்து நடுக்கம். இறுதியாக அவளது விடைத்தாள். “ஓ! நான் தான் மிகவும் குறைந்த மதிப்பெண் போலும்” என்று நினைத்துக் கொண்டே, எழுந்து நின்று கையை நீட்டினாள், கண்ணை மூடிக் கொண்டு, அடி வாங்க! ஆசிரியர் சிரிக்கும் சத்தம். “உனக்கு உன் மேலேயே நம்பிக்கை இல்லையா?” என்று சொன்னதும் தான் கண்ணைத் திறந்தாள். அவளது கையில் கிடைத்ததோ பேனா!”

ஆசிரியர் தொடர்ந்தார். “மற்றவர்களை விட என்று நான் சொல்லுவதை விட, உனது விடைகள் நல்ல மொழி பேசுகின்றன.  இந்த வயதிற்கு மீறி. உனது கடிதமும், கட்டுரையும், செய்யுள் விளக்கங்களும் சொல்லுகின்றன, நீ கோனார் உரை பயன் படுத்துவதில்லை என்பதை.  நீ பிற்காலத்தில் நல்ல தமிழ் ஆசிரியையாக வருவாய்”. ஆம், அவள் பள்ளிப் படிப்பு முடியும் வரை கோனார் உரை பயன்படுத்தியதே இல்லை. அது போல ஆங்கிலத்திற்கும்.  அட!  ஆசிரியை பட்டமா? அன்றிலிருந்து அவளது ஆசிரியையாகும் கனவு மேலோங்கத் தொடங்கியது. மட்டுமல்ல கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளிலும்.

சரி, கணக்கு, அறிவியல் பாடங்களில் எப்படி? என்று இங்குள்ள ஆசிரியர்கள் அவளைக் கேட்டு, அவளை பெஞ்ச் மேல எல்லாம் ஏறி நிற்கச் சொல்லக் கூடாது! சரியா!! பூகோளம், வரலாறு - அவளுக்குத்தான் பக்கம் பக்கமாய் எழுத வருமே, அதனால் கதை விட்டதால் அதிலும் பிரச்சினைகள் இல்லை. அதைத்தானே இப்போதும் செய்கின்றாள்! தொட்டில் பழக்கம் என்ன செய்ய!

 அடுத்து 6 ஆம் வகுப்பு வள்ளியூரிலேயே பாத்திமா கான்வென்ட்.  தமிழ்வழிக் கல்வி. அங்கும் அவளது மொழிகளும், உச்சரிப்பும், இலக்கணமும் ஆசிரியை லீலாவால் மெச்சப்பட்டு, பள்ளி நாடகங்களில் வசனங்கள் பேசவைக்கப்பட்டு என்று தொடர்ந்தது. அவளது அம்மாவிற்குத் தனது சகோதரர்களின் குழந்தைகள் எல்லோரும் நாகர்கோவில் செயின்ட் ஜோசஃப் கான்வென்டில் ஆங்கிலவழிக் கல்வி பயிலுகின்றார்கள் தனது மகள் மட்டும் தமிழ்வழிக் கல்வியா என்று தாழ்வுமனப்பான்மை வர, அவளை மீண்டும் தன் அம்மாவின் கிராமத்திற்கு அழைத்துச் சென்று கான்வெண்டில் 7 ஆம் வகுப்புச் சேர்க்கை ஆனால் அவர் விரும்பியது போல் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்க முடியவில்லை.  தமிழ்வழிக் கல்வி.

அங்கும், ஆங்கில ஆசிரியர்களும், தமிழ் ஆசிரியர்களும் அவளை மிகவும் உற்சாகப் படுத்தினார்கள். வார விடுமுறைகளில் பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள், எடுத்துச் செல்ல வேண்டும். வாசித்து, அடுத்து பள்ளிக்கு வரும் தினத்தில், அதைப் பற்றி விமர்சனம் எழுதிக் கொண்டு வரவேண்டும்.  தமிழ் வகுப்பிலும், ஆங்கில வகுப்பிலும் அதை மாணவிகள் வாசிக்க வேண்டும். அது போன்று, பாடங்களை மாணவிகள் வகுப்பில் சத்தமாக வாசிக்க வேண்டும்.  மாணவிகளே தான் அதில் வரும் வார்த்தைகளுக்கு, அகராதி பார்த்து பொருள் சொல்லி விளக்க வேண்டும்.  அந்த வார்த்தை பெயர்ச் சொல்லா, வினைச் சொல்லா என்று சொல்லி, அந்த வார்த்தையில் அவர்கள் வாக்கியங்களும் அமைக்க வேண்டும். இப்படியாக மாணவிகளின் மொழித் திறமைகள் வளர்க்கப்பட்டன. அவளது திறனும். அவள் வீட்டினற்குத் தெரியாமல், பல பொய்கள் சொல்லி, பள்ளி, மாவட்ட அளவில் நடக்கும் கட்டுரைப் போட்டிகள், கவிதைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளில், பரிசு கிடைக்கின்றதோ இல்லையோ பங்கெடுத்துவிடுவாள்.

10 ஆம் வகுப்பில் தமிழ் சங்கத் தேர்வில் (அப்போதெல்லாம் தமிழ் சங்கப் பரீட்சை என்று ஒன்று நடத்தப்படும்.) வெற்றி பெற, அவளது தமிழ் ஆசிரியை மீண்டும் அவளது ஆசிரியை ஆகும் கனவிற்கு உரம் சேர்த்தார்கள். ஆனால் 11 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் சேர்க்கப்பட்டாள் வீட்டாரால். அங்கும் மொழியியல் அவளை ஆட்கொண்டது.

கல்லூரியில் அவள் விரும்பிய ஆங்கிலம் அல்லது தமிழ் இலக்கியம் சேர நினைத்ததை வீட்டில் அவளைத் தரக்குறைவாக எண்ணினார்கள். அனுமதியில்லை. இயற்பியல், வேதியியலுக்கு வேண்டிய மதிப்பெண்கள் இல்லை. தாவரவியல், விலங்கியல் வீட்டில் மறுக்கப்பட்டதால், வேறு வழியின்றி, பின்னர் எஞ்சியிருந்த பிரிவாகிய பொருளாதாரப் பிரிவில் சேர்ந்தாள். அதிலும் அவளுக்கு நாட்டம் ஏற்பட்டதன் காரணம் ஹோலிக்ராஸ் எனும் அருமையான கல்லூரியும், பேராசிரியர்களும்.

இளங்கலை பொருளாதாரப் பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாகத்தான் வாங்கினாலும் அவள் புத்தகங்கள் வாசித்துக் குறிப்பெடுத்து வித்தியாசமாக எழுதியதையும், செமினார் வகுப்புகள் எடுப்பதையும் பார்த்த பேராசிரியர்கள், “இவளிடம் பின்னாளில் மிகச் சிறந்த பேராசிரியையாக வருவதற்கான எல்லா தகுதிகளும் இருக்கின்றது” எனச் சொல்லி அவளது கனவை, பள்ளிக் கனவிலிருந்து கல்லூரிக் கனவிற்கு உயர்த்தினார்கள்!

முதுகலை பயின்ற இந்துக் கல்லூரியிலும் அப்படியே. பேராசிரியர்கள் அவளது கனவில் வண்ணங்கள் சேர்த்தார்கள். கல்லூரியிலும் அவளது தமிழும், ஆங்கிலமும், பொருளாதாரமும் மெச்சப்பட்டு, அவள் நூலகத்தில் அதிக நேரம் செலவிட்டு, நாடகம், கட்டுரை, பேச்சுப் போட்டி, கவிதைகள், வானொலி நிகழ்ச்சிகள் என்று அவள் வாழ்வில் பொற்காலம். விடை பெற்ற போது பேராசிரியர், பேராசிரியை எல்லோரும் “நீ மிகச் சிறந்த ஆசிரியையாக வருவாய்” என்று வாழ்த்தி வழியனுப்பினர் அவளை. அப்போது ஆசிரியர்கள் மதிப்பெண்ணைத் திறமைக்கு அளவீடாக வைக்கவில்லை.  மாணவிகளின் தனித்திறமையைத்தான் அளந்தார்கள். பாராட்டுகள் கிடைத்தாலும், இறுதிவரை, வகுப்பில் பின் இருக்கை அல்லது எப்போதேனும் நடுவில் இருக்கை.  முன் இருக்கை என்பது இல்லவே இல்லை. 

இதுவரை மேலே சொல்லப்பட்டது அவளைப் பற்றிய பெருமை அல்ல. சத்தியமாக நம்புங்கள்! நல்லாத்தானே போயிட்டிருந்திச்சு! என்னாச்சு?!!! 

ஒண்ணுமில்லை....அவளது அன்றைய தன்னம்பிக்கை இப்போது சிறதிடுச்சே/சோனு தோணிடுச்சா அதான் இப்படி ஒண்ணு...

காலச்சக்கரம் சுழன்றது. சுவாசித்தலாய் இருந்த வாசித்தல் அவ்வப்போது என்றாகி, இறுதியில் பூஜ்ஜியம் என்றாகியது. வாழ்க்கைப்பாடத்திற்கும், மொழிப்புலமைக்கும், கலைகளுக்கும், இடையே ஏற்பட்ட போட்டியில் வாழ்க்கைப் பாடம் மற்றவற்றைப் புறம் தள்ளி முன்னேறியது. எங்கோ, எப்படியோ ஒரு பிழை. நூல் அறுந்து காற்றில் ஆடியது/ஆடுகின்றது. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்? தாய் மொழியான தமிழிலும் செழுமையான அறிவு இல்லை, ஆங்கிலத்திலும் செழுமையான அறிவு இல்லை என்ற நிலைமை. பொருளாதாரப் படிப்போ? ஹஹஹஹ்ஹ....

“என்னிடம் யார் உதைபடுகிறானோ, அவன் மகத்தானவனாக மாறுகிறான். என் வார்த்தையை நம்புங்கள், தனது பள்ளிக் கூடத்திற்கும், ஆசிரியர்களுக்கும், இந்தப் பையன் பெருமை சேர்க்கப் போகிறான்.” அப்துல் கலாமைப் பற்றி அவரது கணித ஆசிரியர் கணித்தது! மிக்க நன்றி சகோதரர் கரந்தையார். http://karanthaijayakumar.blogspot.com/2015/08/blog-post_5.html#link உங்கள் பதிவிலிருந்து இது மட்டும்! ஒரு வேளை அவளும் ஆசிரியர்களிடமிருந்து அடி வாங்கியிருந்தால் இன்று கல்வித் துறையில் ஏதேனும் சிறிது செய்திருப்பாளோ!? (ரொம்பத்தான் ஆசை அப்படின்றீங்களோ..ம்ம்ம் அதுவும் சரிதான்!)

ஹ்ஹ்ஹ்ஹ...என்ன சிரிப்புச் சத்தம்? ஒன்றும் இல்லை. அவள் வீட்டைச் சுத்தம் செய்த போது அவளது அன்றைய போட்டிச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் அவளைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கின்றன. அன்றைய ஆசிரிய, பேராசிரியப் பெருமக்கள் சொன்ன, “நீ மிகச் சிறந்த ஆசிரியையாய், பேராசிரியையாய் வருவாய்” என்ற, மனதில் பதிந்திருந்த வார்த்தைகள் காதில் ஒலித்துக் காற்றில் கரைந்திருக்க..! இப்போது தமிழ், ஆங்கிலம், கற்றப் பொருளாதாரம் எல்லாம் எட்ட நின்று அவளை வேடிக்கைப் பார்த்து ஏளனமாய் சிரிக்க, அவள் இவற்றின் நடுவில், அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு நிற்கும் திரிசங்குவாய்! 


(பின் குறிப்பு: தற்போது வலை அன்பர்கள் உங்கள் எல்லோரது அன்பினாலும், ஆதரவினாலும், அவளிடம் உறங்கிக் கிடந்த அவளது ஆர்வங்களையும், ஆவல்களையும் நன்றாக அறிந்திருந்த நண்பர் துளசி அதை உயிர்ப்பித்துத் தட்டிக் கொடுத்து வெளிக் கொண்டுவர உதவுவதாலும் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருக்கின்றாள் அந்த திரிசங்கு! இந்தத் திரிசங்கு உலகு மிக நன்றாகத்தான் இருக்கின்றது அவளுக்கு! எத்தனை அறிஞர் பெருமக்களின் நட்பு!  வாசிப்பு என்று!)

----கீதா

37 கருத்துகள்:

 1. திரிசங்குவாக மாறக் காரணம் சரியாக சொல்லப்படவில்லையோ. இருந்தால் என்ன. ஒரு ஏமாற்றத்தைமறைத்து ஒளிவு மறைவு இல்லாமல் எழுத எத்தனைபேருக்குவலையுலகில் சாத்தியம்/ வாழ்த்துக்கள் கீதா மேடம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை சார் காரணம் சொல்லியிருக்கிறேனே...வாழ்க்கைப்பாடம் என்று பொதுவாக....குறிப்பாகக் காரணம் அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாதே சார்....அதனால்தான்...

   மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...

   நீக்கு
 2. ஹா ஹா ஹா தொடக்கத்திலேயே இலங்கை, நாகர்கோவில் என்று வரும் போதே புரிந்து விட்டது யாரென்று நாங்களெல்லாம் தும்மும் போதே சத்தத்தை வைத்தே இது தும்மல்னு சொல்லிடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் மட்டுமல்ல எல்லோருமே கண்டு பிடித்துவிட முடியுமே....ஹஹஹ பரம ரகசியம் எல்லாம் இல்லையே...அது சும்மா இப்படி எழுதலாமே என்று தோன்றியதுதான்...மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 3. வணக்கம் சகோ.

  மாணவப் பருவத்தில் மிளர்கின்ற நாம் பெரிய ஆளாகிவிடுவான் என்று கற்பனை செய்கின்ற சுடர்கள் பாதியிலேயே நீரூற்றப்பட்ட கரிக்கட்டைகளாய் எங்கேனும் எரிந்து கொண்டிருப்பதைக் காணும் போது ஓர் ஆசிரியனாய் நான் கொண்ட வேதனைத் தருணங்கள்..... இந்தப் பதிவின் வழி மீண்டும்.

  வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.


  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரரே! மிக உண்மையான வார்த்தைகள்! தங்களை வருத்திவிட்டதா சகோ?

   நீக்கு
 4. தொடக்கத்திலேயே யாரென்று புரிந்தது. அப்போது விட்டதை இப்போது வேறு வகையில் மீட்டெடுக்கிறீர்கள். இதுதான் ஆரம்பம். இன்னும் உயரே போகலாம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ அது எளிதுதானே! இல்லையோ! சும்மா இப்படி எழதலாமே என்று வந்ததுதான்...மிக்க நன்றி ஸ்ரீராம்...முயற்சிதான்...உயரே போகின்றேனோ இல்லையோ ஏதோ சுவையாக எழுத வந்தால்... நல்லது...

   நீக்கு
 5. "சுவாசித்தலாய் இருந்த வாசித்தல்..."
  படிக்க சொல்லோ சோக்கா இனச்சி, ஆனா ஒன்னியும் பிரில...!!
  பிகாஸ் ஐ டோன்ட் நோ டமில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ் அட மலர்வண்ணன் வாங்க..ரொம்ப நாளாச்சு...அது தப்பாயிடுச்சோ....என்னாது உங்களுக்கா தமிழ் தெரியாது....ஏம்பா தப்புனா தப்புனு சொல்றத வுட்டுட்டு இம்மான் தமிழ்ல எயிதினா இன்னா மேன் புரியும்...ஹஹ்ஹ யப்பா விடுங்கப்பா எனக்கு வரல...

   நீக்கு
  2. இனி தொடர்ந்து வருவோம், கண்டபடி கலாய்ப்போம்...
   "இன்னா மேன்" என்பது anglo indian slang . "இன்னாபா"ன்னு கேட்டா அது சென்னை தமிழ்.
   எதையாவது கண்டுபுடிச்சு காண்டாக்கி விடுறதும் ஒரு சந்தோசம் தான்....

   நீக்கு
 6. ஆர்வத்தை சங்கு ஊதி முடித்து விடாமல் .தொடர்ந்து முழங்குவதற்கு வாழ்த்துகள்:)

  பதிலளிநீக்கு
 7. தொடர்ந்து எழுதுங்கள்.....

  வெற்றி உங்களுடையதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்களின் வாழ்த்திற்கு...

   நீக்கு
 8. ஒரு குறிப்பிட்ட பணியில் செய்ய இயலாததை
  அப்பணியில் இல்லாமலே சாத்திக்கத் தொடங்கிவிட்டீர்களே சகோதரியாரே
  இச்சிறு தடைகள், தங்களை தாமதப் படுத்தலாமே தவிர
  தடுத்தி நிறுத்திவிட இயலாதே
  வாழ்த்துக்கள் சகோதரியாரே, தாங்கள் செல்ல வேண்டிய உயரம் நிறைய உள்ளது
  பதிவினில் என் பதிவினையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரரே! தங்களின் ஊக்கமிக்க கருத்திற்கு!

   நீக்கு
 9. துவக்கத்திலேயே கண்டுபிடிச்சிட்டேனே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ் இது சும்மா இப்படி எழுதிப்பார்க்கலாமே என்று தோன்றியதால் எழுதியது அவள் என்று ....மற்றபடி கண்டுபிடிப்பது சிரமம் இல்லைதானே...மிக்க நன்றி ஏஞ்சல்...

   நீக்கு
 10. முதல் பத்தியிலேயே தெரிந்துவிட்டது, சொல்லப்படுபவர் யாரென்று. பேசவும் எழுதவும் மட்டுமன்றி கீதம் இசைக்கவும் வல்லவர் என்பது முடிவில் தெரிந்தது. நடிக்கவும் செய்கிறாராமே! தலையில் தொப்பி அணிந்துகொண்டு, நாக்கின் நுனியில் ஒரு விசிலை வைத்துக்கொண்டு, இயக்குனர் கனவுகளைப் பரிசோதித்தும் வருபவராமே? (2) பெரும்பாலான பெண்களுக்கு எண்ணிய வாழ்க்கை அமைவதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு எண்ணிய மங்கையுடன் வாழ்க்கை அமைவதில்லை. என்ன செய்வது, அடுத்த தலைமுறையையாவது வாழவிடுவோம்! - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹஹஹ்ஹ...ஐயையோ சார்...என்னது! நடிக்க எல்லாம் இல்லை சார்...அடுத்ததும் இல்லையே...இயக்குனர் கனவு...

   இறுதி வரி சூப்பர் சார்...ஆம் அடுத்த தலைமுறையை வாழ விடுவோம்...

   மிக்க நன்றி சார்...

   நீக்கு
 11. மிக அருமையான விவரிப்பு கீதா. எனக்கும் முதுகலையில் தமிழ் எடுக்க ஆசை. அதே போல் இளங்கலையில் வேதியலில் நல்ல மதிப்பெண் என்று வேதியல் எடுத்தேன். :)

  ஆசைப்படுவதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன.. :) ஆனால் நாம் எல்லாம் வலையில் மீட் பண்றோமே அது மிகப் பெரும் பரிசு. :) வலைப்பதிவு என்பது நமது நூல்போல நாம் வாழ்ந்ததற்கான அடையாளம். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தேனு! வேதியியல் என்றாலும் நீங்கள் அப்போதே தமிழில் கலக்கியிருக்கின்றீர்களே! இப்போதும் !! ஆம் வலை நிஜமாகவே நம்மை எல்லாம் பிடித்துப் போட்டு இணைத்துள்ளது. அதைத்தான் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி தேனு!

   நீக்கு
 12. குறிப்பாகச் சொல்லிச் சென்றதே போதும்
  அதிகம் புரிந்தது
  இறுதிப் பத்தியருகில் வருகையில்
  மனம் கலங்கியது நிஜம்
  இது ஒரு பருக்கைச் சோறுதான் என்பதுதானே நிஜம்
  மனம் தொட்டப் பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்,
  பல முறை படித்தேன், நம்முடன் தொடர்புடைய பதிவு போல் இருந்ததால்,
  இனி எல்லாம்,,,,,,,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. செமை ...
  தம +
  ஹோலிகிராஸ் ப்ராடக்ட் எப்படி சோடை போகும் ..

  பதிலளிநீக்கு
 15. தொடர் வாசிப்பும் எழுத்தும் இவ்வாறான பல பதிவுகளைத் தரும். தன்னம்பிக்கையை விடவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 16. கீதா,

  முதல் பத்தியிலேயேக் கண்டு பிடிச்சாச்சூஊஊ !! அப்படின்னா ? அழகானத் தமிழில் பேசுவீங்கதானே !!

  பதிவு மனதைத் தொட்டுவிட்டது. காரணம் முழுதாகத் தெரியவில்லை என்றாலும் ஏதோ ஒரு சூழ்நிலையால் என்பது மட்டும் புரிகிறது. இப்போதுதான் ஆரம்பிதுவிட்டீர்களே, இனி கலக்குங்கள் !

  பதிலளிநீக்கு