ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

தலைநகரில் நாலடியாரும், ஆறடியாரும்


      இப்படி நம் நாடு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்றிடாதோ!!!! (படம் எடுக்க/எடுத்து உதவிய வெங்கட்ஜிக்கு நன்றி)

  சமீபத்திய எனது பயணம் தலைநகரை நோக்கி. சுற்றுப் பயணம் இல்லை. மகன் செல்ல அவனுடன் நானும் தொற்றிக் கொண்டேன். பல மாதங்களுக்குப் பிறகு மகனுடன் பயணம். பல முறை சென்றிருக்கின்றோம். சுற்றியும் பார்த்துள்ளோம். ஒரு மாதம் தங்கியும் இருக்கின்றோம். அப்போதெல்லாம் பதிவுலகில் இல்லையே! அதனால் குறிப்பென்று எதுவும் இல்லை. இப்போது எதைப் பார்த்தாலும் பதிவாக்கிவிடலாமோ என்று தோன்றுகின்றதுதான். ஆனால், சுவாரஸ்யமாக என்னால் பதிவாக்க முடியவில்லையே என்ற ஒரு இயலாமையும் வரத்தான் செய்கின்றது.

      ஜூலை 29 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தமிழ்நாடு விரைவு வண்டியில் ஏறியதும் நாங்கள் பதிவு செய்திருந்த இருக்கைக்குச் சென்று எங்கள் இருக்கை-துயிலிடத்தைக் கண்டு எங்கள் பயணப் பெட்டியை வைக்க முயற்சித்த போது,

“ஆப்கா பெர்த் நம்பர் க்யா ஹை” (தங்களின் பெர்த் நம்பர் என்ன?) என்று அங்கு தங்கள் இருக்கையைக் கண்டுபிடிக்க வேண்டித் தடுமாறிக் கொண்டிருந்த இரு வட இந்திய இளைஞர்கள் எங்களிடம் வினவ, எங்கள் எண்களைச் சொன்னோம்.

“ஹமாரே நம்பர் ஹி ஹை” (எங்களின் எண்ணும் அதே) “ஆப்கா கோச் நம்பர்” என்று அவர்கள் வினவ நாங்கள் அவர்கள் எண்ணைக் கேட்டு, எங்கள் பதிவையும் விளக்கி அப்படியாக ஒரு 20 நிமிடத்தை விழுங்கிய பின் ஒரு வழியாக எங்கள் இருக்கையில் அமர முடிந்தது.

அடுத்தது அவர்கள் சொன்னார்களே பார்க்கலாம், “ஆப் லோக் மதராசி ஹை ந...ஆப்கோ ஹிந்தி  நஹிம் மாலும்? ஹிந்தி பஹுத் சுந்தர் பாஷா! ஹிந்தி சிகாவோ. ஹிந்தி மேம் போலோ!” (நீங்கள் மதராசி இல்லையா உங்களுக்கு ஹிந்தி தெரியாது? ஹிந்தி மிகவும் அழகான மொழி. ஹிந்தி கத்துக்கோங்க. ஹிந்தியில் பேசுங்கள்” என்று சொல்லவும் எங்களுக்குச் சிரிப்புதான் வந்தது. நான் ஹிந்தியில்தான் பேசினேன். எனக்குத் தெரிந்த விதத்தில். அதில் தவறு என்று சொல்லுவதற்கில்லை என்றாலும் ஒருவேளை அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இல்லையோ என்னமோ?!


மறு நாள் காலை எழுந்தவுடன் காபி, பின்பு கனிவு கொடுக்கும்?? நல்ல செய்தித்தாள் என்ற முடிவுடன், அந்த வெந்நீரை வாங்கினால் அந்த கப் இதுவரை ரயிலில் பார்க்காத, வித்தியாசமான ஒன்றாக இருந்தது. அதில், ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால், அடித்தட்டு குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட வேண்டுவதன் முக்கியத்துவத்தை, சங்கல்ப் ஃபவுண்டேஷன் எனும் ஒரு பொதுத் தொண்டு நிறுவனம் செய்வதைப் பற்றிய செய்தி அச்சடிக்கப்பட்டிருந்தது.  அதன் சுட்டி இதோ. http://www.sankalpfoundation.org.  நல்ல ஒரு சேவையாகத் தெரிகின்றது.

 பின்னர் நானும் மகனும் செய்தித் தாள் வாங்கி அதை வாசித்துக் கொண்டிருந்த போது அதில் மோடியைப் பற்றிய செய்தி ஒன்றை வாசித்து அதைப் பற்றிப் பேச,

“பாயி சாப் மோடி நஹின் “மோதி”. ஆப் லோக் மோடி மோடி கஹ்தே ஹோ” என்றார். அதாவது மோடி என்று சொல்லக்கூடாது. மோதி என்று சொல்ல வேண்டும். 

“தன்யவாத், பாயிசாப்” (நன்றி சகோதரரே)

புகைவண்டியில் கூட்டம் இல்லை. பல இருக்கைகள் பயணிகள் இன்றி இருந்தன. அதனால் சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை. அந்த இரு இளைஞர்களும் நாக்பூரில் இறங்கிவிட்டனர். எங்களுடன் மதுரைத் தமிழர் – K . தவசிலிங்கம் – சேது பொறியியல் கல்லூரியில், இயந்திரவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணி புரியும் இளைஞர் பயணித்தார். அவரும் எங்கள் பகுதியில் இரவு படுக்க மட்டுமே வந்தார்.  மற்ற நேரங்களில் அவரது மாணவர் குழுவுடன் தான் இருந்தார். இந்தக் குழுவைப் பற்றி இதன் தொடர்ச்சியில் சொல்கின்றேன். பயனுள்ள தகவல் அறிந்தேன். 
சென்னையிலிருந்து செல்லும் போது தெலுங்கானா -வாரங்கல் வரை வருகின்ற கொஞ்சம் வறட்சியான பகுதிகள், மஹாராஷ்ட்டிரா, மத்தியப்ரதேச மாநிலங்களில் அப்படியே பசேலென்று மாறிவிடுகின்றன. நாக்பூரிலிருந்து போபால் செல்லும்வரை மிக அழகான இயற்கைக் காட்சிகள். போபால் வரும் சமயம் இரவு ஆகிவிடுவதால் அதன் பின் பார்க்க முடியவில்லை. குறிப்பாக, நாக்பூர் கடந்து மத்தியப்ரதேச மாநிலத்தில் நுழையும் போது,  மத்தியப்ரதேச மாநிலத்தின் மலைகளும், ஆறுகளும், நீரோடைகளும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. மத்தியப்ரதேசத்தின் இப்பகுதி மிகவும் அழகான பகுதி!

 ஆங்காங்கே மழை                நாக்பூர்-இட்டார்சிக்கிடையில் தண்டவாளத்தில் சோதிக்கப்படுகிறது??


வழியில் வரும் பெரிய ரயில் நிலையங்களைத் தாண்டும் போதோ, நுழையும் போதோ கூவம் போன்ற ஒன்று வரத்தான் செய்கின்றது. குறிப்பாக போபால், தில்லி. பல கிராமங்கள் ஒரு சில வீடுகளுடன் எந்தவித வசதியும் இல்லாமல் இருக்கின்றன.  சில பள்ளிகள் கூட கண்ணில் தென்பட்டன. அவை உட்பட. நம் நாட்டின் உண்மையான முகம் இங்குதான், ஒவ்வொரு நகரத்தின் புறத்தில்தான் இருக்கின்றது. இதுதான் உண்மையான இந்தியா. வழியில் ஆங்காங்கே நல்ல மழை. 31 ஆம் தேதி தில்லி சென்றடைந்தோம்.

பிரதமர் ஒரு நாள்தான் சுத்தம் பற்றி பேசினார் போலும். பிரதமர் தில்லியில்தானே இருக்கின்றார்?!

 தலைநகர் மாறியதாகத் தெரியவில்லை. 10 வருடங்களுக்குள் பல முறை சென்றிருந்தாலும், இப்போதும் தலைநகரைத் தொடும் முன் வரும் குடிசைகள், பாமரர் வாழும் பகுதிகள் மாறாவில்லை. அப்படியேதான் இருக்கின்றன. ஒரே ஒரு வித்தியாசம். கண்ணாடிக் கட்டிடங்கள் பெருகி உள்ளன. மேலைநாட்டுக் கடைகளைப் போல் குழம்பிக் கடைகள்(காஃபீ ஷாப்), ஆடையகங்கள், மால்கள் என்று பெருகி உள்ளன.  ஆனால், ரிக்ஷாகாரர்கள் மாறவில்லை.

    நாங்கள் பெருநகர் புகைவண்டியில், எனது தங்கை இருக்கும், தில்லியின் எல்லையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குர்காவ்ன் சென்றோம். பரவாயில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் சென்ற போது எப்படி இருந்ததோ அப்படியே பராமரிக்கப்படுவது தெரிகின்றது. தங்கை இருப்பது புது குர்காவ்ன் என்பதால் ஹூடாசிட்டி நிறுத்தத்தில் இறங்கினோம். அதுதான் இறுதி நிறுத்தம் இந்த மஞ்சள் நிற வழித்தடத்தின் ஒரு பகுதியில். தில்லியின் பல பெருநகர் வழித்தடங்களில் ஒன்றுதான் இந்த மஞ்சள் நிற வழித்தடம். தில்லியின் ஒரு பகுதியான ஜஹாங்கிர் புரியிலிருந்து மறு பகுதியான ஹூடாசிட்டி, ஹரியானா எல்லையைத் தொடும் நிறுத்தம் வரையான வழித்தடம். மொத்தம் 45 கிமீ, 34 நிறுத்தங்களை இணைக்கின்றது.

31 ஆம் தேதி மகனது நண்பருடன் குர்காவ்ன் சுற்றினோம். பணக்கார இடம். சிறு கடைகள் என்பதே கண்ணில் படாது.  எல்லாமே மால்கள் தான். பணக்காரத் தோற்றத்துடன் பல அடுக்கு மாடிகள் கொண்ட வளாகங்கள் எங்கு பார்த்தாலும். சமீபத்திய விலை 25 கோடி. அதன் பிறகு பிற செலவுகள். நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. மயக்கம் வந்தது. நிமிர்ந்ததால் அல்ல, விலையைக் கேட்டு. பழைய குர்காவ்ன் பகுதியும் உண்டு. அது கொஞ்சம் சென்னை போன்று இருக்கின்றது. அங்கு தனி வீடுகள், சிறு கடைகள் எல்லாம் இருக்கின்றன.

இரு பகுதிகளிலும் பொது போக்குவரத்து என்பதே கிடையாது. ரொம்பக் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் வெளியில் வந்தால் மூன்று சக்கர வாகனத்தில்தான் பயணம். தில்லி செல்ல பெருநகர் புகைவண்டி பிடிக்க வேண்டும் என்றாலும். சனிக்கிழமை மகனது நண்பருடன் தில்லி விலங்கியல் பூங்கா சென்றோம். சொல்லும் படி ஒன்றும் இல்லை. தலைநகர் விலங்கியல் பூங்கா என்று பெயர். பராமரிப்பு மிகவும் மோசம். 

புலி இருக்கும் பகுதியில் உள்ள தடுப்புச் சுவர். இதையும் மீறித்தான் அந்த மனிதர் இறங்கியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் ஒருவர் புலி இருந்த பகுதியில் விழுந்த இடத்தைப் பார்த்தோம். அவரைக் கொன்ற புலி இறந்துவிட்டதாம். அங்கு ஒரு வெள்ளைப் புலிதான் கம்பீரமாக நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தது. வேறு புலிகளைக் காணவில்லை. சிங்கங்களைக் காணவில்லை. மதிய நேரம் என்பதால் குகைக்குள் இருந்தனவோ என்னவோ. நீர்யானைகள் மிக மிக நாற்றம் அடிக்கும் அழுக்கு நீரில் நீந்திக் கொண்டிருந்தன. சுத்தமாகப் பராமரிக்க முடியவில்லை என்றால் ஏன் இப்படி விலங்குகளை அடைத்து வைத்துக் காட்சிப் பொருளாக்குகின்றார்கள் என்று தெரியவில்லை. விலங்கியல் பூங்கா சுவாரஸ்யமாக இல்லை. தில்லி – தலைநகர் ரயில் நிலையமும் சுத்தமாக இல்லை. பிரதமர் அவர்களின் “சொர்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்” என்பது ஒரு நாள் விளம்பரம்தானோ!?

ஞாயிறு மகனுக்கு வேலை.  மகனிடம் சொல்லியிருந்தேன். திங்களன்று நாலடியாராகிய நான் நிமிர்ந்து பார்க்க வேண்டிய நண்பர், தில்லியின் வலை ராஜா, ஆறடியாரைக் காணச் செல்ல வேண்டும் என்றும், அவருடன் பேசி விட்டேன், நேரம் சொல்ல வேண்டும் என்றும். தெரிந்துருக்குமே! ஆம்! நாம் எல்லோரும் காணாத, காண ஆசை கொள்ளும் விதத்தில், மிக அழகான படங்களுடனும், மிக நுணுக்கமான தகவல்களுடனான, பயணப் பதிவுகளாலும், தலைநகரில் இருப்பதால், அருமையான, குளிர்ச்சியான, சத்துள்ள ஃப்ரூட்சாலட் தந்தும் நம்மை எல்லாம் மகிழ்விக்கும், நம் நண்பர் வெங்கட் ஜியேதான்!

முதலில் காலையில் செல்வதாக இருந்தது. மகனுக்கு அன்றும் வேலை வந்துவிட்டதால், மதியம் என்று சொல்ல, நானும் வெங்கட் ஜியிடம் சொல்லிவிட்டேன். மகன் மதியம் எனை அழைக்க, நான் வீட்டிலிருந்து ஹூடாசிட்டி சென்று மகனுடன் பெருநகர் புகைவண்டியில் பயணம். நண்பர் எங்களை சென்ட்ரல் செக்ரட்டேரியட் நிறுத்தத்தில் இறங்கச் சொல்லியிருந்தார். என்னை எய்ம்ஸ் எனும் நிறுத்தம் வரும் போது அவரை அழைக்கச் சொல்லியிருந்ததால் அழைத்துச் சொன்னேன். அடுத்த 5 வது நிறுத்தம் சென்ட்ரல் செக்ரட்டேரியட். இறங்கியதும், அவரை அழைத்து, எங்கிருக்கின்றார் என்று அலைபேசிக் கொண்டே மின் ஏணியில் சென்றால் அங்கே ஆறடியார்! அவர் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி! எங்களை மிகவும் ஆவலுடனும், மகிழ்வுடனும் வரவேற்று கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்! 


பயணத்தைத் தொடர்கின்றேன்....படங்களுடன்...

----கீதா

45 கருத்துகள்:

 1. இப்போது எதைப் பார்த்தாலும் பதிவாக்கிவிடலாமோ என்று தோன்றுகின்றதுதான். ஆனால், சுவாரஸ்யமாக என்னால் பதிவாக்க முடியவில்லையே என்ற ஒரு இயலாமையும் வரத்தான் செய்கின்றது
  ஆஹா இடையில் இப்படி ஒரு புரூடாவா

  படங்கள் அழகு அன்று வெங்கட் ஜி பதிவில் சொல்லும்போதே எனக்கு யார் என்று தெரியும் ஆனால் அதை அவரது பதிவில் சொல்லாமல் விட்டு விட்டேன்.
  மோடிஜியை ஸாரி மோதிஜியை குற்றம் சொல்லாதீங்கோ தெய்வ குற்றமாகிப்போகும்

  பயணத்தை நானும் தொடர்கிறேன்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரஸ்யமாக பதிவிடமுடியாதது உண்மைதான் நண்பரே! அழகாக எழுத முடியவில்லை என்ற ஒரு குறை எனக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. எந்த பதிவு எழுதினாலும் ஒரு திருப்தி வருவதில்லை....கற்றுக் கொண்டு இருக்கின்றேன்...எனது பள்ளி, கல்லூரி நாட்கள் போல எழுத வேண்டும் என்ற ஆவலுடன்....

   நீக்கு
 2. ஹஹஹஹ் மிக்க நன்றி நண்பரே! முதலில் வந்து கருத்திட்டமைக்கும், வாக்களித்ததற்கும். சுத்தம் என்பது சிறு வயதிலேயே அறிவுறுத்தப்பட்டோ, இல்லை வளரும் போது தாங்களாகவோ அதை உணர்ந்து பின்பற்றுவது. ஒரு நாள் அதைப் பின்பற்றுவது என்பது எல்லாம் விழிப்புணர்வு என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோ.

  இனிமையான பயணத்தில் எங்களையும் கூட்டிச் செல்கிறீர்கள்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. 9 aandukalukku munpu delhi ku sendra anupavathai ungal rail payanam ninaivu paduthiyathu madam.
  malai kodainju track pottu vantha pala kokaikal delhi ku pokumpothuthaan paarakka mudinjathu.

  ---


  payana katturai svaarasyam.

  thodarkiren madam.


  ---
  இப்போது எதைப் பார்த்தாலும் பதிவாக்கிவிடலாமோ என்று தோன்றுகின்றதுதான். ஆனால், சுவாரஸ்யமாக என்னால் பதிவாக்க முடியவில்லையே என்ற ஒரு இயலாமையும் வரத்தான் செய்கின்றது.////

  hahaa enakku irukkum pirachanai ungalukkumthaana madam:)!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஷ்! தங்கள் கருத்திற்கு.

   ஆம் மகேஷ். பல சமயங்களில், என்னால் அழகாக எழுத முடியவில்லையே என்ற எண்ணம் வந்து கொண்டுதான் இருக்கின்றது...கற்றுக் கொண்டு வருகின்றேன்....

   நீக்கு
 5. சுவாரஸ்யமாக தங்களால் பதிவிட இயலவில்லை என்று யார் சொன்னது?
  அருமையாய் காட்சிகளை நகர்த்தி செல்கின்றீர்கள் சகோதரியாரே
  அருமை
  படங்கள் அருமை
  ஆறடியார் யாரென்று மீசைக்கார நண்பர் சொல்லிவிட்டாரே
  தொடருங்கள்
  தொடர்கிறேன்
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே தங்களின் ஊக்கமான வார்த்தைகளுக்கு...நான் உண்மையைத்தான் சொல்லி இருக்கின்றேன்..என்றாலும் தங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி...

   ம்ம்ம் அவருக்குத் தெரியும்....அதனால்தான்...

   நீக்கு
 6. "ஆப் கா ஹிந்துஸ்தானி லேகின் ஹிந்தி நஹின் மாலும்"-ன்னு எவனாவது சொன்னா செவுல்லியே பொளேர்ன்னு ஒன்னு விடனும்ன்னு தோணும். இருந்தாலும் நாக்க புடுங்குற மாதிரி கேட்டுட்டுதான் விடுவேன்...!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹாஹ்...வாங்கப்பா...லகலகல்கனு.....கலகலகல நு எழுதினாலும் லகலக நுதான் வருது....

   எனக்கு என்ன தோணிச்சுன்னா....நாங்க ஹிந்தி கத்துக்கறோம்...அதே போல நீங்களும் தமிழ் கத்துக்கலாமே...பட்லர் தமிழ்ல பேசினாக் கூட பரவால்ல...அப்படீனு...தமிழ் பி ஹிந்துஸ்தானி பாஷா ஹை....என்று சொல்லி...(பட்லர் இங்க்லீசு மட்டும்தானாக்கும்?!! நாங்க பட்லர் ஹிந்தி பேசுவோம்ல அதே மாதிரி...ஹிஹி..)...ஆனா கேக்கல...ஏன்னா லகல்கலகலக சவுன்ட் ஆஃப் ஆயிடுச்சு...

   நீக்கு
 7. பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடி அருமை. உங்களுடன் பயணித்த அனுபவம் நிறைவாக இருந்தது. தொடர்ந்து பயணிப்போம்.
  நச்சென்று நான்கு செய்திகள். பதிவுகள். நன்றி.
  தமிழ் விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பான எனது பதிவை
  http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு.

   வேண்டிய பதிவு! இதோ வருகின்றோம்...வாசிக்க...

   நீக்கு
 8. மயில் படங்கள் உட்பட அனைத்தும் அழகான படங்கள்...

  பயணத்தை தொடர்கிறேன்...

  ஏன் எழுத்தளவு அங்கங்கே பெரிது...? சிறிது...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி. எழுத்தளவா ...அது சில சமயம் பதிவிடும் போது இப்படி ஆகிவிடுகின்றது. இதோ மாற்றி விடுகின்றேன்.....

   நீக்கு
 9. பயணம் அனுபவம் அருமை. அவர்களுக்கு மொழிப்பற்று அதிகம், இந்தி பேசினால் மகிழ்வார்கள். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. தலைநகர் செல்லும் போதெல்லாம் நினைப்பது தலைநகரை சுத்தமாக வைத்துக் கொள்ள கூடாதா? என்றுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரி! ஹிந்தியில் பேசினால் மகிழ்வார்கள்...மிக்க நன்றி சகோதரி.. அதே சுத்தமாக இல்லை...நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டேன்.....மிக்க நன்றி சகோதரி...

   நீக்கு
 10. வணக்கம்
  அண்ணா

  தங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் த.ம 8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு...

   நீக்கு
 11. ஆறடி இருக்குறவங்களை நம்பலாம்,
  ஏன்னா அவங்க ஏற்கனவே வளர்ந்து வளைந்து கெட்டவங்க.. ?!

  ஆனா இந்த நாலடியாருங்க இருக்காங்க பாருங்க...... வெரி வெரி டேஞ்சுரஸ் தன்னடக்கமா பேசிக்கிட்டே செமையா (பதிவு மூலமா) பஞ்சும் அப்புறம் டிஞ்சும் குடுப்பாங்க.. அதனால நாலடியாருங்க கிட்ட கொஞ்சம் உஷாராயிருக்கணும். ஆமா
  அந்த நாலடியார் யாரு ???????????
  (திங்களன்று நாலடியாராகிய நான் நிமிர்ந்து.. அச்சச்சோ சாரிக்கா .. !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ ...சக்தி இப்படி நாலடியார் எல்லாம் மறந்துட்டீங்கனா...நீங்க தமிழ் வகுப்புல நல்லா தூங்கியிருந்திருக்கீங்க....நாலடியார் யாருன்னு கேட்டதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ....ஹஹஹஹ

   நீக்கு
 12. நாலடியாரும் ஆறடியாரும்..... :)

  தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கீதாஜி. தலைநகர் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒவ்வொரு தலைநகர் வாசியின் கடமை. ஆனாலும், இங்கே இருக்கும் மனிதர்களுக்கு தங்கள் வீடுகள் சுத்தமாக இருந்தால் போது எனும் எண்ணம் நிறைய. போலவே இங்கு தினசரி வந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில். ஒரு புறம் பெரிய பெரிய பணக்காரர்கள் இருக்க, இன்னுமொரு புறமோ ஏழை எளிய மக்கள் பிழைப்புக்காக வந்து இங்கே இருக்கிறார்கள். அதிகார உச்சமும், தாழ்வும் இங்கே நிறையவே....

  நீங்கள் நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள்.... அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் நானும்.

  சந்திப்பின் போது தாங்கள் எடுத்த புகைப்படங்களை, முடிந்தால் எனக்கு மின்னஞ்சலில்
  அனுப்புங்கள். முடிந்தால் நானும் சந்திப்பு பற்றி எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி! ஆம் உண்மைதான் நீங்கள் சொல்லி இருப்பது போல் தலைநகரைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது....மக்கள் அதிகம்...ஏழைகள் நிறையவே கண்ணில் பட்டார்கள்.

   நன்றி ஜி நன்றாக எழுதி உள்ளேன் என்று பாராட்டியமைக்கு...

   நிச்சயமாக அனுப்புகின்றேன்....

   நீக்கு
 13. இதைவிட் சுவராஸ்யம் வேறு என்ன வேண்டும்...
  அஹா... அருமையான பகிர்வு.
  வெங்கட் அண்ணாவுடனான தங்கள் சந்திப்பு மற்றும் படங்களைக் காண ஆவல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ! தங்களின் கருத்திற்கு! படங்கல் வரும்...அடுத்த பதிவில் நாளை...

   நீக்கு
 14. டில்லிப் பயணம் சுவாரசியமாக உள்ளது. பயணத்தைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சித்ரா தங்களின் கருத்திற்கு...நாளை பெரும்பாலும் அடுத்த பதிவு இருக்கும்...

   நீக்கு
 15. இனிமையான பதிவர் சந்திப்புத் தொடர்!

  கூடவே பயணிக்கும் உணர்வு கொண்டேன்! அருமை!
  வாழ்த்துக்கள் சகோ! தொடருங்கள்!..

  த ம +

  பதிலளிநீக்கு
 16. ///இப்போது எதைப் பார்த்தாலும் பதிவாக்கிவிடலாமோ என்று தோன்றுகின்றதுதான். ஆனால், சுவாரஸ்யமாக என்னால் பதிவாக்க முடியவில்லையே என்ற ஒரு இயலாமையும் வரத்தான் செய்கின்றது.////
  அப்படி ஒரு நினைப்பே வரக் கூடாது......

  என்னை பொருத்த வரையில் இந்த பதிவில் நான் பார்க்கும் குறை . பதிவின் நீளம்தான் நீங்க சொல்ல பார்த்த விஷயங்களை எல்லாம் ஒரே பதிவில் பதிவு செய்த முயற்சியாகவே தோன்றுகிறது. மற்றபடி உங்கள் எழுத்து நடை மிக எளிமையாவும் தெளிவாகவும்தான் இருக்கிறது...


  இந்த பதிவை இரண்டு அல்லது மூன்று பதிவாக போட்டு இருக்க வேண்டும்,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழா மிக்க நன்றி....

   இல்லை தமிழா எல்லாம் ஒரே பதிவில் எழுத நினைக்கவில்லை. ஏனென்றால் எங்களுக்கே தெரிகின்றது நீளமாகியது என்று. இன்னும் பயணம் முடியவில்லை. இரண்டு/மூன்று பதிவுகளுக்கு இருக்கின்றது. இந்த தில்லிப் பயணம். குறிப்பாக அந்த இஞ்சினியரிங்க் கல்லூரி கலந்து கொண்ட நிகழ்வு பற்றிச் சொல்ல வேண்டும் நிறைய மெக்கானிக்கல் துறை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் நான் அறிந்து கொண்ட விசயம். வெங்கட் ஜி சந்திப்பு பற்றி இன்னும் எழுதி முடிக்கவில்லை...ம்ம் எங்கள் பதிவுகள் நீண்டு விடுகின்றது. குறிப்பாக எனது பதிவுகள். நானும் சுருக்கிப் பார்க்கின்றேன்....பல சமயங்களில் முடியவில்லை. இனி நிச்சயமாக முயற்சிக்கின்றேன் தமிழா...

   மிக்க நன்றி!

   கீதா

   நீக்கு
 17. சுவாரஸ்யமான பயணம்!வெங்கட்டுடனான சந்திப்பு பற்றி அறியக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சென்னைப்பித்தன் அவர்களே. தங்களின் கருத்திற்கு..

   கீதா

   நீக்கு
 18. #சுவாரஸ்யமாக என்னால் பதிவாக்க முடியவில்லையே#
  இப்படி சொல்லி எல்லோர் பாராட்டையும் பெற்று விட்டீர்களே ,போட்டு வாங்குறது என்பது இதுதானோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான் ஜி! அது சும்மா போட்டு வாங்க எல்லாம் இல்லை ஜி/..உண்மையாகவே உணர்ந்து எழுதியவை....பல சமயங்களில் ஃப்யூஸ் ஆகி விடுகின்றது...அதனால்தான்..அப்படிச் சொன்னது...

   மிக்க நன்றி பகவான் ஜி!

   கீதா

   நீக்கு
 19. விஜய் இறந்து விட்டதா? சத்தமின்றி "முடித்து" விட்டார்களோ! சுவாரஸ்யமாகச் சொல்லத் தெரியாது என்று சொல்லியே இவ்வளவு விவரங்கள் தருகிறீர்களே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்...விஜய் இறந்துவிட்டதாம்...அப்படித்தான் சொன்னார்கள். நாங்கள் கூட "முடித்து" விட்டிருப்பார்களோ என்ற எண்ணத்தில் கேட்டோம்..ஆனால் சரியான பதில் வரவில்லை.

   தெருவில் வளரும் நாய் செல்லங்கள் ஏதேனும் மனிதனையோ, இல்லை வேறு ஏதேனும் விலங்கையோ கடித்து இறந்தால் அது ரேபிட் டாக் என்று உறுதிப் படுத்தலாம். விஜய் விலங்கியல் பூங்காவில் வளர்ந்தவன்..அப்படியிருக்க அப்படியும் இருக்க வாய்ப்பில்லை...என்னவோ போங்க...ஆனால் மொத்தத்தில் விலங்கியல் பூங்கா நன்றாக இல்லை...அதுவும் தலைநகரில்..

   வண்டியிலோ, இல்லை பேருந்திலோ, பாத்ரூமிலோ இருக்கும் போது அப்படியே கமல் பாடியது பொல "வார்த்தைகள் கொட்டும்...எழுத நினைக்கும் போது முட்டும்" ஹஹஹ் என்ன செய்ய...

   கீதா

   நீக்கு
 20. நாலடியாரும் ஆறடியாரும் - நாலடியார் தெரியும், அது என்ன ஆறடியார் என்று எண்ணிக் கொண்டே வந்தேன்..தலைப்புக் கலக்கிட்டிங்க கீதா.
  நீங்க நினைக்கிற மாதிரிதான் எனக்கும் தோன்றும், ஹிந்தி நஹி மாலும் என்றாவது நாங்கள் சொல்வோம், தமிழில் சொல்லத் தெரியுமாடா என்று..
  ஹிந்தியின் அகங்காரம் இருக்கிறதே..! இடங்களைப் பேணுவதில் நம்மூர் கில்லாடிகள் தான்..சென்னை கோளரங்கத்தில் இருக்கை எல்லாம் கிழிந்தும் உடைந்தும் தொங்கிக் கொண்டிருந்தன சென்ற வருடம்..நான்கு பேர் ஒன்றாக உட்கார முடியவில்லை.
  பயண அனுபவம் அருமை கீதா. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்,
  தலைப்பே அருமை,
  அந்த ஹிந்தி நண்பர்களிடம் நாங்கள் கற்றுக்கொள்கிறோம், நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம்.
  நல்லா எழுதுகிறீர்கள்.
  அருமையான ஒரு பதிவரைச் சந்தித் அனுபவம் மகிழ்ச்சி.
  தொடருங்கள். தொடர்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வட இந்தியர்களுக்கு தென் இந்தியர்கள் அனைவரும் மதராசிகள். சில நேரங்களில் அவர்கள் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க விரும்பினாலும் நம் டொசைல் குணம் தடுத்துவிடும்

  பதிலளிநீக்கு
 23. //இப்போது எதைப் பார்த்தாலும் பதிவாக்கிவிடலாமோ என்று தோன்றுகின்றதுதான். ஆனால், சுவாரஸ்யமாக என்னால் பதிவாக்க முடியவில்லையே என்ற ஒரு இயலாமையும் வரத்தான் செய்கின்றது// - எவன் சொன்னது அப்படி? நீங்கள் நன்றாகத்தான் எழுதுகிறீர்கள். அது மட்டுமில்லாமல், சுவையான எழுத்தை விடப் அக்கறையான எழுத்துதான் இன்றைய தேவை. அஃது உங்கள் பதிவுகளில் நிரம்பியே இருக்கிறது. வெறும் பயணச் சுற்றுலா பற்றிய பதிவில் உங்கள் சமூக்க அக்கறை எத்தனை இடங்களில் தென்படுகிறது! இதுதானே வேண்டும்!

  "நான் ஹிந்தியில்தான் பேசினேன். எனக்குத் தெரிந்த விதத்தில். அதில் தவறு என்று சொல்லுவதற்கில்லை என்றாலும் ஒருவேளை அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இல்லையோ என்னமோ?!" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கென்ன தோன்றுகிறது என்றால், அவர்கள் உங்கள் மொழிநடையிலிருந்தே நீங்கள் தமிழர் எனக் கண்டுகொண்டு, அதனாலேயே உங்களுக்கு இந்தி தெரியாது என்கிற நினைப்பில் அப்படி ஒரு கருத்தை அடித்து விட்டிருப்பார்கள் என்று. எப்பொழுதும் தாய்மொழி அளவுக்கு மற்ற மொழிகளை நாம் அவ்வளவு உள்ளூர்த்தனத்துடன் பேசிவிட முடியாது. பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது என்பது தொடர்பு கொள்வதற்காகவும் பிற மொழிநயங்களைச் சுவைப்பதற்காகவும்தாமே தவிர, அந்தந்த மொழிக்காரர்களை நிறைவு செய்யும் அளவுக்குக் கச்சிதமாகப் பேசுவதற்காக இல்லை. அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதும் இல்லை, இல்லையா?

  பதிலளிநீக்கு
 24. சுவாரஸ்யமான கட்டுரைதான். இன்னும் இயல்பாக எழுதுங்கள். கட்டுரையிலுள்ள படங்கள் இன்னும் சுவாரஸ்யம் தருகின்றன. இப்பொழுதுதான் படிக்க நேரம் கிடைத்தது.

  பதிலளிநீக்கு