வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

பள்ளிச்சாலையைத் தந்த ஏழைத் தலைவன்...

     Image result for independence day
படங்கள் இணையத்திலிருந்து:  எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துகள்.  இது வெறும் வாழ்த்தல்ல! நம் கலாமின் கல்விக் கனவு நிறைவேற வேண்டும் என்ற நல்லெண்ணதுடனான வாழ்த்து.  அதையொட்டிய ஒரு பதிவு.   ஒரு சிறிய கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு சாமானியரால் கல்வியின் விதை ஊன்றப்பட்ட ஒரு செய்தியை, இந்த நல்ல நாளில், இங்கு சொல்வதற்கு மகிழ்கின்றோம்.ஹஜ்ஜப்பா!

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.”
- அவ்வை

“.....நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்தின்
வேருக்கு நெக்கு விடும்’.

      அவ்வையார் அருளிய இவ்வரிகளை எழுதும் இச்சமயம் மட்டுமல்ல, இவ்வரிகளை நினைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் என் வாழ்வில் வந்த போதெல்லாம்  என் மனத் திரையில், 1970ல், நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது எங்களுக்குத் தமிழ் கற்பித்த சுருளியம்மா டீச்சரின் உருவம் ஒளிர்வதுண்டு. கூடவே அன்று அவர் பாடி என் மனதில் பதிய வைத்த அந்த இனிய குரலும் தெளிவாக என் மனச் செவியில் விழுவதுண்டு.  இப்போதும் கூட மூக்குப் பொடிச் சிமிழில் இருந்து பொடி எடுத்து இடையிடையே மூக்கில் திணித்த பின்பு பாடிக் கற்பிக்கும் பழக்கமுடைய சுருளியம்மா டீச்சரின் உருவம் மனத்திரையில் மிளிர்கிறது. கூடவே எனக்குக் கற்பித்த மணி வாத்தியார், என்னைச் சித்திரகுப்தனாக நடிக்க வைத்த செல்லத் துரை வாத்தியார், ஆங்கிலம் கற்பித்த முத்துக் கருப்பையா வாத்தியாரும் மனத்திரையில் வந்து மனதை நெகிழச் செய்கிறார்கள்.  ஆனால், ஒரு போதும் இதற்கு முன், கட்டாயப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்ட, நான் 1 முதல் 5 ஆம் தரம் வரை கல்வி கற்ற அந்த ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியை, என் கிராமமான ராசிங்கபுரத்தில் நிறுவக் காரணமான, அதற்கான முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றி கண்டவர்களை நான் நினைத்துக் கூடப் பார்த்த்தில்லை.

   அன்று ராசிங்கபுரத்தில் மறைந்த திரு சர்க்கரைப் பிள்ளை அவர்கள் நிறுவிய மல்லிங்கேஸ்வரர் இந்து உயர் துவக்கப்பள்ளி எனும் வேறு ஒரு பள்ளி, கிராமத்திலுள்ள மாணவ மாணவியர்களுக்கு நல்ல முறையில் கல்வி அறிவு புகட்டிக் கொண்டுதான் இருந்தது. இருப்பினும் வளர்ந்து வரும் அக்கிராமத்திற்கு, கிராமத்தின் வட கோடியுலுள்ள அப்பள்ளி மட்டும் போதாது என்றும், தென்பகுதியில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதற்கான முயற்சியில் இறங்கி, பள்ளி நிறுவப்பட காரணமாக இருந்த அந்த முகம் தெரியா நல்ல உள்ளம் படைத்தவர்களை 45 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மனமாரப் பாராட்டத் தோன்றுகின்றது.  அது போல் உயர்நிலைக் கல்வி பெற உதவிய போடி நாயக்கனூர் ஜ கா மு (ஜமீந்தாரணி காமூலம்மாள் நினைவு உயர்நிலைப் பள்ளி) யை நிறுவியவர்களையும், இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற மதுரைக் கல்லூரியை நிறுவியவர்களையும், முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்ற நாகர்கோவில் தெ தி இந்துக்கல்லூரியை நிறுவியவர்களையும் உளமாரப் பாராட்டத் தோன்றுகின்றது.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி என் மனதில் அவர்களைப் பற்றிய எண்ணம் திடீரென தோன்றக் காரணமான ஒருவர்தான் இந்த ஹஜ்ஜப்பா.!

      நான் இப்போது ஆசிரியனாய் பணிபுரியும், பாலக்காடு அருகேயுள்ள மாத்தூர் CFDVHS பள்ளியும் 1981 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி இல்லாதிருந்த ஒரு கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில நல்ல உள்ளம் படைத்தவர்களால், அவர்கள் ஒவ்வொரும் தங்களால் இயன்ற அளவு ஒரு தொகையை பள்ளியைத் துவக்கச் செலவிட்டு தொடங்கப்பட்ட பள்ளிதான். அவர்களது சேவையால் உருவான பள்ளி 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்து, உயர் மேல்நிலைப் பள்ளியாய் மாறி அப்பகுதிக்குத் தேடித்தந்த முன்னேற்றத்தை நேரில் கண்டறிந்தவன் என்ற முறையில், அதற்குக் காரணமான அப்பள்ளியை நிறுவியவர்களில் ஒருவரான மறைந்த திரு பாலகிருஷ்ணன் மாஸ்டரை (பாலன் மாஸ்டர்) நினைவு கூரத்தான் எங்களது மூன்றாவது குறும்படமான கார்பெண்டர் த க்ரேட்டை அவருக்குச் சமர்ப்பித்திருந்தோம்.

    ஆனால், இப்போதெல்லாம் தொடங்கப்படும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முதலீடு செய்பவர்கள் வியாபார ஸ்தாபனம் தொடங்குவது போல்தான் அவற்றைத் துவங்கி நடத்துகிறார்கள். தன்னலம் மட்டும் கருதி லாப நோக்குடன் நடத்தப்படும் அந்நிறுவனங்களை உருவாக்கும் வியாபார நோக்குள்ளவர்களைப் போலல்லாமல், முன்பெல்லாம் பொது நல நோக்குடன் தொடங்கப்பட்ட பள்ளிகளும், கல்லூரிகளும்தான் என்னைப் போன்ற, நம்மைப் போன்றவர்களுக்கு கல்வி போதித்த கல்விச் சாலைகள். அவற்றை நிறுவக் காரணமானவர்களை எப்போதாவது நினைவு கூர்ந்து அவர்களைப் பற்றி அறியாதவர்களுக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் பொது நல சேவை செய்யும் ஆர்வம் அடுத்த தலைமுறை ஒரு சிலருக்கேனும் தோன்றும்.


     சிறுவயது முதல் ஆரஞ்சுப் பழங்கள் விற்று தன் குடும்பத்தினரைக் காப்பாற்றி வந்த ஹரேக்களா ஹஜ்ஜப்பா, மங்களூருவில் தன் விற்பனைக்கிடையே, ஏதேனும் ஒரு சமயம், தனக்கு ஏட்டுக் கல்வி அறிவு இல்லாமல் போன குறையை உணர்ந்திருக்க வேண்டும். அது போல ஒரு இழிநிலை தன் கிராமத்திலுள்ள  அடுத்த தலைமுறைக்கு ஏற்படக் கூடாது என நினைத்த அவர், அதற்காக பலரையும் அணுகி பலனில்லாமல் போகவே, தானே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள  தீர்மானித்திருக்கிறார். அப்படி 1991 ஜூன் 6 ஆம் தேதி, தன் கிராமமான, ஹரேக்களாவிலுள்ள த்வாக் மஸ்ஜிதின் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆரஞ்சுப் பழங்களை விற்று தான் சேமித்து வைத்த பணத்தின் உதவியால் ஒரு பள்ளியைத் தொடங்கியும் விட்டார் ஹஜ்ஜப்பா. 


  பள்ளிக்குக் குழந்தைகள் வரவேண்டி அவர்கள் பின்னாலும், அவர்களது பெற்றோர்களின் பின்னாலும் நடையாய் நடந்து ஒரு வழியாக 28 குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தும் விட்டார். அவர்களுக்குக் கல்வி கற்பிக்க ஒரு ஆசிரியையும் ஏற்பாடு செய்து அவருக்குச் சம்பளம் கொடுக்க, அன்றிலிருந்து, அதிகமான நேரமும், அதிகமான தூரமும் ஓடி ஓடி ஆரஞ்சுப் பழங்களைச் சுமந்து விற்கத் தொடங்கியும் விட்டார்.


    ஆனால், பள்ளி தொடங்கிய பின்பு, தொடங்கிய பள்ளிக்கு அங்கீகாரம் வாங்க அவர் அதைவிட அதிகமாக  கல்வி இலாகா அலுவலகங்களுக்கு ஓட வேண்டி இருந்தது.  முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் தானே? அங்கீகாரம் கிடைத்த போதுதான், அவருக்கு வேறு ஒரு விசயம் தெரிய வந்தது.  கிடைத்த அங்கீகாரம் நிலையான அங்கீகாரம் ஆக வேண்டுமெனில் பள்ளிக்குச் சொந்தமாக இடமும் கட்டிடமும் வேண்டியிருந்திருக்கிறது.  பல நல்ல மனிதர்களை நேரில் கண்டு உதவி கேட்டார். ஓடி ஓடி உழைத்தார். பலரிடம் கடனும் வாங்கினார்.  அப்படி 2001ல், தான் சேகரித்த ரூ 50,000 கொடுத்து பள்ளிக்காக 40 சென்ட் இடமும் வாங்கியேவிட்டார்.


    அதுவரை  ஏளனம் செய்தவர்கள் அதற்குப் பின் ஹஜ்ஜப்பாவை ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும் பார்க்கத் தொடங்கினார்கள்.  நல்ல மனமுள்ள பலரும் ஹஜ்ஜப்பாவின் வீடு தேடிவந்து அவருக்கு உதவவும் ஆரம்பித்துவிட்டார்கள்.  இதற்கெல்லாம் மேலாக “கன்னட பிரபா” எனும் கன்னட நாளிதழ் அவ்வருடமே அவரது சேவையைப் பாராட்டி நாளிதழின் “மேன் ஆஃப் தெ இயர்”  ஆக அவரைத் தேர்ந்தெடுத்து, பரிசுத் தொகையான ரூ 1 லட்சத்தை அவருக்குக் கொடுத்து உதவியது.

    2007ல் சிஎன்என், ஐபிஎன், “த ரியல் ஹீரோவாக” ஹஜ்ஜப்பாவைத் தேர்ந்தெடுத்து பர்சுத் தொகையான ரூ 5 லட்சத்தை வழங்கியது.  அப்போதும் பரிதாப நிலையிலிருக்கும் தன் வீட்டை புதுப்பிக்கவோ, தனக்கோ தன் மனைவி குழந்தைகளின் தேவைகளுக்கோ, கிடைத்த பரிசுத் தொகையிலிருந்து 1 ரூபாய் கூட எடுக்காமல் அதை அப்படியே தன் பள்ளிக்கு நன் கொடையாகக் கொடுத்துவிட்டார் ஹஜ்ஜப்பா.
 
     அன்றைய கர்நாடக கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர், ஹஜ்ஜப்பாவை தன் மாளிகைக்கு அழைத்து அவரைக் கௌரவித்தார். 2011 ஆம் ஆண்டு கர்நாடக அரசின் “ராஜ்யோத்ஸவ்”  பரிசும் அவருக்குக் கிடைத்தது.  கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரு, குவேம்பு, தாபங்கரே எனும் பல்கலைக் கழகங்களில் அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் “மூடிவாணி” (இனிய எழுத்துக்கள்) எனும் தலைப்பில் இளங்கலை மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

   இப்போது மங்களூருலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள “ந்யூ பதப்பு” எனும் கிராமத்தில் ஹஜ்ஜப்பாவின் பள்ளி 1 ½ ஏக்கர் இடத்தில், 10 வகுப்புகள் உள்ள இரண்டு கட்டடங்களாக தலை நிமிர்ந்து நிற்கிறது.  அரசின் உதவித்தொகையும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது இந்த “தக்ஷின கன்னடா ஜில்லா பஞ்சாயத்து ஹையர் ப்ரைமரி ஸ்கூலுக்கு”  ஒவ்வொரு வகுப்பிற்கும்  விவேகானந்தர், டாக்டர் ராதா கிருஷ்ணன், கல்பனா சாவ்லா போன்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.


  இப்பள்ளியை ஒரு மேல்நிலைப்பள்ளியாக்கியே தீருவேன் என உறுதியாக இருக்கும் நம் ஹஜ்ஜப்பாவிற்கு அது எட்டாக் கனியல்ல; உள்ளங்கை நெல்லிக் கனியே......மன்னிக்க....உள்ளங்கை ஆரஞ்சுப்பழமே!!! வாழ்த்துவோம் இம்மனிதருள் மாணிக்கத்தை!! போற்றுவோம்!! கல்விச் சாலையைத் தந்த இந்த ஏழைத் தலைவனை!!!

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து - நன்றி
பின் குறிப்பு: நாங்கள் இருவருமே இந்த மூன்று நாட்கள் வேலைப்பளு காரணமாக அன்பர்களின் வலைத்தளம் வர இயலாமல் போகும்...திங்கள் கிழமைதான் வலைப்பக்கம்.  காரணம்? விரைவில் வரும்..
44 கருத்துகள்:

 1. ஹஜ்ஜப்பா பற்றி அறியத் தந்தீர்கள்...
  நல்ல மனிதரை வாழ்த்துவோம்.
  கன்னடபிரபா இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நாளிதழ்...
  தினமணியில் இருக்கும் போது கன்னடபிரபா குழுவுடன் பணி செய்திருக்கிறேன்..
  நல்ல மனிதரை உலகுக்கு காட்டியிருக்கிறது கன்னடபிரபா...
  சுதந்திர தினத்தில் திரு.கலாம் அவர்களின் கனவை நனவாக்குவோம் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி குமார்! ஆஹா தாங்கள் கன்னட பிரபா குழுவுடன் பணி செய்திருக்கின்றீர்களா?! பத்திரிகைத் துறையில் இருந்ததால் தான் இவ்வளவு அழகான படைப்புகள் தங்களிடமிருந்து...மிகவும் பெருமையாக இருக்கின்றது நண்பரே! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு....

   நீக்கு
 2. தமிழ் மணம் 1
  நடுச்சாமத்துல பதிவு போட்டா.... மனுஷன் தூங்குறதா என்ன ?
  நாளைக்கு வர்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ கில்லர் ஜி....இது ஷெட்யூல்ட் பதிவு....ஹஹஹ நல்லா தூங்குங்கப்பா...

   நீக்கு
 3. நாடு எக்கேடு கெட்டால் எமக்கென்ன என்று ...,
  கல்விக்கூடங்களை நடத்த வேண்டிய கடமை மறந்து ....
  பலர் தம் தலையில் கொண்ட அதிகாரமெனும் மமதையால்
  தினமும் திறக்கின்றார் 'மதுக்கூடம்'

  யெது அறிவார்ந்த செயல் என சுட்ட கடமையுள்ள அலுவலர் சிலரும்
  வாய் பொத்தி நிற்கின்றார்... பணி மூப்புக்கு பின்னும்
  ஆலோசகராக தொடர்ந்திட அரசியலாளர் தரும்
  வாய்ப்பை எண்ணி ...

  வெட்கமாகத்தான் இருக்கிறது
  இங்கு வாழ...
  ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது
  எப்படியாவது வாழ பழகிக்கொண்டோம். என்பதுதானே யதார்த்தம்.

  இந்த நிலையில் நம்முடன் இப்படி ஒரு மனிதர் இருக்கிறார்
  என்பதே பெருமைக்குறிய, பெருமிதப்பட வேன்டிய தகவல்.

  வாழ்த்துவோம் அவரையும் அவர் சேவையையும்.. இச்சுதந்திர நாளில்...

  பதிலளிநீக்கு
 4. வியாபார உலகில் இப்படியும் ஒரு மாமனிதர் ஹஜ்ஜப்பா பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள் இப்படி தேடல் மிக்க பதிவை பகிர்ந்ததுக்கு.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் விரிவான வாழ்த்திற்கு!

   நீக்கு
 6. அருமையான பதிவு. ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் பெரும்பாடு பட வேண்டியுள்ளது. எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு, ஏளனங்களை சகித்துக்கொண்டு சாதிக்கும் ஹஜ்ஜப்பா அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சம்பத் கல்யாண்! இது உங்களின் முதல் வருகை என்று தோன்றுகின்றது. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 7. உயர்ந்த மனிதர் ஹஜ்ஜப்பா. இவர் போன்ற மனிதர்களால்தான் நாடு வாழ்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஸ்ரீராம்! நிச்சயமாக....அரசு செய்ய வேண்டியதை பல சமயங்களில் சாமான்ய மனிதர்கள் செய்ய வேண்டி உள்ளது...என்றாலும் நல்லது நடந்தால் நல்லதே...

   நீக்கு
 8. ஹஜ்ஜப்பாவின் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள். சுதந்திர தின நாளில் அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஹஜ்ஜப்பா அவர்கள் போற்றப்படக்கூடியவர் வாழ்த்துவோம் இன்னும் இவரைப்போன்ற மாமனிதர்களால்தான் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. நல்லமனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.!

  பதிலளிநீக்கு
 11. இங்குள்ள கல்வி முதலைகளை நோக்கும் போது ஹஜ்ஜப்பாவின் சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது! அவரது கனவு நிறைவேற வாழ்த்துவோம்! நல்லதொரு மனிதரை அறிமுகம் செய்த பதிவு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. மாமனிதர்..... நீடுழி வாழ எனது வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 13. பல நல்ல காரியங்களுக்கான வித்துகள் இதுபோன்ற தன்னலமற்ற மனிதர்களால் விதைக்கப்படுகின்றன.

  ஆனால் நாளாவட்டத்தில் அதை அறுவடை செய்பவர்கள் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்.

  ஒரு நல்ல மனிதரை உங்கள் பதிவு வழி தரிசித்தேன்.

  நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி விஜு சகோதரரே! தங்களின் கருத்திற்கு! நீங்கள் சொல்லுவதும் சரிதான் ...இது நன்றாக வளர வாழ்த்துவோம்...

   நீக்கு
 14. இவர் இல்லைனா வேற யாருங்க ரியல் ஹீரோ!!!! அசாத்தியமான மனிதர் அசாத்தியமான சாதனை. இப்படி தகவல்களை நீங்கள் கொடுக்கும் பாங்கே தனி !! மிக்க நன்றி சகாஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்...இதெல்லாம் தானே எங்களுக்கு ஊக்கம் அளிக்கின்றன...

   நீக்கு
 15. ஹஜ்ஜப்பா போற்றுதலுக்கு உரியவர்
  போற்றுவோம்
  வாழ்த்துவோம்
  வணங்குவோம்
  தம+1

  பதிலளிநீக்கு
 16. இதிலிருந்து அனைவருக்கும் தெரிவது..ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் பெரும்பாடு பட வேண்டியுள்ளது. என்பதுதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! உண்மையே! மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
 17. எனக்கு என்ன சொல்வதெனவே தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் ஐயா இவர்!!! ஏழை, ஓடி ஓடிப் பழம் விற்றால்தான் அன்றாடம் உணவு உண்ண முடியும் எனும் நிலை, அகவையும் ஒன்றும் இளமையில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் எப்பேர்ப்பட்ட அருஞ்செயலைப் புரிந்திருக்கிறார்! கோடிக் கோடிக் கோடியாய்ச் சேர்த்து வைத்தும் இன்னும் பணவெறி அடங்காமல் மீண்டும் மீண்டும் ஆட்சி, பதவி ஆகியவற்றுக்குப் போட்டி போட்டு மறுபடியும் மறுபடியும் பணத்தையும் சொத்துக்களையும்குவிக்கும் அரசியலாளர்களும், தலைவர்களும், அரசு ஊழியர்களும், இவர்களையெல்லாம் பார்த்துத் தாங்களும் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தொடங்கிவிட்ட பொதுமக்களும் நிறைந்த இதே உலகில் இப்பேர்ப்பட்ட மனிதர்கள் எப்படி உருவாகிறார்கள்!

  பேராபத்தில் சிக்கிக் கத்திக் கதறிக் கூப்பாடு போட்டாலும் வந்து தொலையாத, உதவித் தொலைக்காத கடவுள்களையே இன்னும் நம்பிக் கோயில் கட்டிக் கும்பிடும் மனிதப் பிண்டங்களே! இப்படிப்பட்ட மனிதர்களின் கால் தூசி பெறுவானா அந்தக் கடவுள்? சிந்தியுங்கள்!

  நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன்! இப்பேர்ப்பட்ட மனிதரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா! பொதுவாக இப்படிப்பட்ட தகவல்களையெல்லாம் ஆனந்த விகடன், குமுதம் போன்ற பெரிய இதழ்களில்தாம் படிக்க முடியும். ஆனால், தாங்கள் இருவரும் எங்கிருந்தோ இப்படிப்பட்ட அரிய செய்திகளைக் கொண்டு வந்து வியப்பிலாழ்த்தி விடுகிறீர்கள்! நன்றி ஐயா! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! உங்கள் கருத்துகள் அனைத்தும் மிகவும் உண்மையே. பணக்கார முதலைகள் கூட பள்ளிகள் கட்டினால் அதில் வாங்கும் கட்டணம் ...சாமானியக் குழந்தைகள் படிக்க முடியாத நியலி...ஆனால் இந்த சாமானியரைப் பாருங்கள். எத்தனை உயர்வான ஒரு விடயத்தைச் செய்து எளிமையாக இருக்கின்றார்....

   நாங்களும் வாசிப்பதையும், அறியவருவனவற்றையும் வைத்துதான் கொடுக்கின்றோம் நண்பரே! மிக்க நன்றி தங்களின் அழகான விரிவான பின்னூட்டத்திற்கு...

   நீக்கு
 18. ஹஜ்ஜப்பாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. எத்தனை அருமையான மனிதர். அவரது லட்சியங்கள் நிறைவேற என் பிரார்த்தனைகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வல்லிசிமன் சகோதரி தங்கள் கருத்திற்கும் முதல் வருகைக்கும்...

   நீக்கு
 20. மகத்தான செயல் புரிந்த மாமனிதரைப்பற்றிய பகிர்வு. படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. அவரவர் பெற்ற பிள்ளைகளை படிக்கவைக்கவே எத்தனை பாடுபடவேண்டியிருக்கு. இவரை வணங்கி வளரும் தலைமுறைக்கு இது போன்ற செயல்களை கொண்டு செல்ல வேண்டும். தளராத முயற்சி தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டான மாமனிதர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி சசி...தங்களின் கருத்திற்கு. ஆம் இது போன்ற செயல்கள் அடுத்த தலைமுறையிலும் வர வேண்டும்...

   நீக்கு