சனி, 21 டிசம்பர், 2013

ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதான் நீதி வழுவா நெறி முறையோ?


கடந்த சில நாட்களாக, இந்திய துணை தூதர் கைதைப் பற்றிய விவகாரத்தில், அமெரிக்கப் போலீசாரின் நடவடிக்கையைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கண்டித்து கர்ஜனை செய்யும் நம்மவர்கள், இங்கு சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில்,, போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சட்டையைப் பிடித்த ஒருவரை, போலீசார் பரலோகத்துக்கே அனுப்பிய சம்பவத்தைப் பற்றியும் நம் அரசோ, காவல் துறையோ சிந்திக்குமா? 





விஷயம் மிகவும் வருத்தமான ஒன்று. சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கைது செய்யப்பட்ட 29 வயது நபர் (25 என்றும் 29 என்றும் சொல்லப்படுகிறது.  எத்தனை வயதாக இருந்தால் என்ன) போலீஸ் கஸ்டடியில் இறந்து விட்டார். 

நடந்த சம்பவம் இதுதான். அந்த நபர் காய்கறி விற்பவர். சென்ற ஞாயிறு (15-12-2013) அன்று பொது இடத்தில் தொந்தரவு செய்ததாக, அந்தப் பகுதியில் ரோந்து வந்த சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும், அந்த நபரைக் கேள்வி கேட்கப்போக, போலீசுக்கும், அவருக்கும் இடையே நடந்த வாக்கு வாதத்தில், போலீசார் அவரை அடித்து, அற்ப காரணங்கள் சொல்லி போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கின்றனர். 


போலீஸ் ஸ்டேஷனிலேயெ முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையைப் புழல் சிறைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன குற்றம்தான் செய்தாரோ?! புதிர்தான்! அந்த சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் அவரைக் கொஞ்சம் நன்றாகவே ‘கவனித்திருந்திருக்கின்றனர்.

புதன் கிழமை(18-12-2013) அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வர, cardiac arrest ல் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ஆஸ்பத்திரியில் சொல்லிவிட்டனர். அவருக்கு ஏற்கனவே ஒரு சில உடல் உபாதைகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதி மக்களும், அவர் குடும்பத்தாரும், – ஏறத்தாழ ஒரு 300 பேர் - அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டம் செய்தனர். பின்னர், வேன்களில் வந்து போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலும் செய்தனர். இறந்தவருக்குத் திருமணம் ஆகி 1 வருடமே ஆகிறது என்றும், அவருக்கு, ஒரு கைக்குழநதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அன்று மாலை, அவரது குடும்பத்தாரும், அப்பகுதி மக்களும்,  போலீஸ் மீது நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனறும், இறந்தவரின் மனைவிக்கு வேலை வாய்ப்புத் தரவேண்டும் என்றும் ரோடை ப்ளாக் செய்து போராடினர். மறு நாள், அதாவது வியாழக் கிழமை அப்பகுதியில் கடை அடைப்பு நடத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏதோ சில லட்சங்கள் தந்துவிடுவதாகவும், இந்தக் கேஸை இப்படியே விட்டு விட வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வியாழன் மாலை வரை பிணத்தை சம்பந்தப்பட்டோர் வாங்கவில்லை. நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று சொல்லி. நேற்று (20-12-2013) வெள்ளியும் கடை அடைப்புதான். நேற்று பிரேத பரிசோதனை. வணிகர் சங்கத் தலைவரும், அந்த இரு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த இரு போலீசாரும் தற்போது அப்பகுதி ஸ்டேஷனிலிருந்து மாற்றப்பட்டு விட்டனர். இப்போது, இந்த வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.


இது போன்று நம்மூரில் போலீஸ் கஸ்டடியில் உயிர் போவது என்பது சகஜமாக நடக்கும் ஒன்றுதான். போன உயிர் போனதுதான். ஒரு சாதாரணக் குடிமகனுக்கு, அவர் தவறு சிறிய குற்றமாக இருந்தாலும் பெரிய குற்றமாக இருந்தாலும் அவரை கஸ்டடியில் எடுத்து குற்றத்திற்கேற்ற தண்டனைதான் கொடுக்கப்படவேண்டும்.  ஆனால், கைது செய்து, அடித்து இப்போது பரலோகத்திற்கே அனுப்பி விட்டனர்! நம் போலீசார்! நம் நாட்டில், எப்போதுமே சட்டமும் சரி, காவல் துறையும் சரி, ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவித்தான் நீதித் தராசை தூக்குகின்றன.  இல்லையேல்,  நீதித் தாய் கண்ணைக் கட்டியிருப்பது போல தங்கள் கண்ணையும் கட்டிக் கொள்கின்றன. நீதிக்கு முன் பணக்கார வர்கமும், பாமர வர்கமும் ஒன்றுதானே? தேவயானி போன்ற மேலதட்டு வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் நம் நாட்டில் தீவிரமாகக் கொடுக்கப்படும் ஆதரவு, சங்கீதா மற்றும் இது போன்ற பாமர மக்களுக்கு இல்லாதது மிகவும் வேதனைக்குறிய ஒன்று. நம் நாட்டில் தான் இது போன்ற இரு வகையான நீதிகள், சட்டங்கள்! பணமிருந்தாலும், அதிகாரமிருந்தாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு! சாதாரண மனிதனை நன்றாக "கவனிக்க"த் தெரியும். அதிகார, மேல்தட்டு வர்கத்தை அவர்கள் என்ன தவறு செய்தாலும் சமுதாயத்தில் சுதந்திரமாக நடமாட விடவும் தெரியும்!!  அவமானம்! நம் நாட்டில், நீதித் தேவதையின் தராசு சமமாக நிற்பதில்லை, பதிவர் திரு ரமணி அவர்கள் தன் பதிவாகிய “அனுமார் வாலில் சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய.......செல்வமும் செல்வாக்கும் நீதியை முடிவு செய்ய என்று குறிப்பிட்டுள்ளதைப் போல!! இந்த நிகழ்வுகளை எல்லாம் உற்று நோக்கும் போது, நம் நாடு சோஷியலிச ஜனநாயக நாடா இல்லை bourgeoisie நாடா என்ற சந்தேகம் வருகிறதுமுதலாளித்துவ/மேலை நாடுகளில் கூட, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், சாதாரணக் குடிமகனுக்கும் ஒரே சட்டம்தான்.! ஆனால், இங்கு சோஷியலிச ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில், அதிகாரத்திலும் செல்வாக்கிலும் உள்ளவர்களுக்கும், சாதாரண குடிமகனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாக உள்ளது. இதுதான் நம் போலீஸ்!  நம் நாட்டுச் சட்டம்!! அப்படி இல்லை என்றாலும், சுயநலவாதிகள் சிலரது குறுக்கீட்டால் இப்படியெல்லாம் சட்டமே திருத்தப்பட்டு நடக்கிறதோ? அந்த சிலருக்காக ஏன் மற்றவர்கள் மௌனம் சாதிக்கின்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை?! அவர்களுக்குச் சட்டம் பெரிதா இல்லை அவர்களுடன் பணியாற்றுவோரின் நலன் பெரிதா? இது மாற வேண்டும்.  இது போன்ற இடைவெளிகள் இல்லாமல் எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்!! நடக்குமா? இனியொரு விதிசெய்யப்படுமா? எந்த நாளும் காக்கப்படுமா? காத்திருப்போம் கண்கள் இரண்டும் நோகும் வரை?!!





14 கருத்துகள்:

  1. முதலில் கை நீட்ட எவனுக்கும் உரிமை இல்லை;
    இது மாமூல் கொடுப்பதில் வந்த பிரச்னை; இப்படி மாமூல் கொடுக்க மறுப்வர்களுக்கு இப்படி பாடம் எடுப்பது இந்தியாவில் சகஜம்; பாடம் அதிகமா போனதால் இறந்தான்; டாக்டர ஏற்கனவே இருந்த வியாதிகளினால் இறந்தார் என்று சான்றிதழ் கொடுக்க விள்ளஎன்றால், அவருக்கு இல்லை அவர் வீட்டில் ஒருவருக்கோ மறுபடியும் பாடம் எடுப்பார்கள்!

    இதில் கொடுமை என்ன வென்றால், இறந்தவனும் ஏட்டும் ஒரே வர்க்கமாக கூட இருக்கலாம்! பதவி வந்தவுடன் இவன் அவனை கொன்றான்.

    பின்குறிப்பு:
    காய் கறி விற்ப்பவன் ஏட்டு ஆகியிருந்தாலும் அவனும் இப்படித்தான் நடப்பான்! இவர்கள் எல்லோரும் நம் பங்காளிகள்; வல்லரசு இந்தியாவில் வாழ்க்கை என்ன என்றால் ஒருத்தனை ஒருத்தன் ஓxxx பிழைப்பது தான்!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வது உண்மைதான்!பின் குறிப்பு மிகச் சரியே!! நம்பள்கி! ஏனென்றால் 99% மக்கள் தொகை அப்படித்தான் வளர்கிறார்கள்! சட்டத்தில் ரோல்மாடல் யாரேனும் இருக்கிறார்களா? இந்தியாவில்?

    பதிலளிநீக்கு
  3. வா என்றால் வந்து விடுமா? போ என்றால் போய் விடுமா? ???

    பதிலளிநீக்கு
  4. துனிசியாவில் ரோட்டு ஓரம் காய் கறி கடை நடத்துபவர் முகம்மத் பவுசிசி. அவரிடம் காவலர்கள் மாமூல் கேட்கவும், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் எதிர்க்கு பேசவும் வாக்குவாதம் முற்றி காவலர்கள் அவரின் கடையை உடைத்துப் போட்டு அவரையும் தாக்கிவிட்டுச் சென்றனர். அநியாயத்தை கண்டு மனம் நொந்த பவுசிசி தீயிட்டு தற்கொலை செய்தார். இச்செய்தி ஊர் எல்லாம் பரவ, மக்கள் கலவரத்தில் திரள அது புரட்சியாக வெடித்து துனிசியாவின் சர்வாதிகாரி பென் அலியின் ஆட்சிக்கே வேட்டு விழுந்தது. இது நிற்காமல் லிபியா, எகிப்து என பரவ கடாபி, முபாரக் என்ற சர்வாதிகாரிகளின் ஆட்சி முற்றுப்பெற்றன. ஆனால் ஜனநாயக நாடான நம் இந்தியாவில் அரசு எந்திரம் வசதி படைத்த சாதி உயர்ந்த மேட்டுக்குடிகளுக்கு மட்டுமானது. நம் மக்களும் போராட திராணியற்றவர்கள். மேட்டுக்குடிக்கு ஒன்று என்றால் மெளனியான மண்மோகன் சிங்கே வாய்திறக்கின்றார். ஆனால் மணிப்பூரில் தண்டகாரண்யத்தில் கோண்டவனத்தில் மன்னார் குடாவில் செத்தொழியும் நம் ஏழை மக்களினை பற்றி புட்டத்தைக் கூட திறந்தது இல்லை. தூ. என்ன எழவு நாடு? மனம் வெம்புகின்றது.


    --- விவரணம் --- 

    பதிலளிநீக்கு
  5. எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்!! நடக்குமா? நடமென்ற நம்பிகையை நானும் நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  6. நம்புவோம் கவியாழி! நம்புவோம்! உங்கள் நம்பிக்கையான கருத்திற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  7. நம்பள்கி உங்கள் தேவயானிக்கு பதில் வருகிறது!!!!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கருத்து நிறையவே யோசிக்க வைக்கிறாது!! உங்கள் முதல் வருகைக்கும். கருத்திற்கும் மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  9. விவரணம் நீலவண்ணன் அவர்களுக்கு வாசித்திருக்கிறேன்! உங்கள் பின்னூட்டங்கள் நிறைய நல்ல தகவல்களைத் தருகின்றன!! உங்கள் கருத்துக்கள் உண்மைதான்! புரட்சி வருமா? பகிர்தலுக்கு மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன். தாங்களும் ஒரு ஆசிரியர் என்பதை அறிந்து மகிழ்ந்த்ன் . இனி தொடர்ந்து வருகை தருவேன் . நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! நண்பரே! தங்கள் முதல் வருகக்கு! நாங்களும் தங்களைத் தொடர்கிறோம்! நண்பரே!

      நீக்கு
  11. இந்திய ஜனநாயக போலீஸ்கள் ஆக அவர்கள் இன்னும் மாறவில்லை ,இன்னும் பிரிட்டிஷ்கால அடிமை போலீஸ்கள் போலவே செயல்படுகிறார்கள் ....காவல்துறை உங்கள் நண்பன் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவிள்தான் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை! ஜனநாயகம் என்பதே மறந்து போகிறது பல சமயங்களில்! என்ன பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதிலும், குப்பை கொட்டுவதிலும்தான் ஜன நாயகம் இருக்கிறதோ!!??

      நன்றி பகவான் ஜி!

      நீக்கு