ஞாயிறு, 17 நவம்பர், 2013

பெரியாரின் சொற்பொழிவு என்னுள் உணர்த்திய அனுபவமும், சிந்தனைகளும்

பெரியாரின் சொற்பொழிவு என்னுள் உணர்த்திய அனுபவமும், சிந்தனைகளும்

தமிழ் ஓவியா அவர்களின் “பார்ப்பான் ஓட்டலில் சாப்பிடக் கூடாது-பெரியார் என்ற பதிவை அவரது வலைப்பூவில் http://thamizhoviya.blogspot.in/2013/11/blog-post_2462.html
வாசிக்க நேர்ந்தது.  அதற்கு ஒரு பின்னூட்டம் இட நினைத்து எழுத, அது பெரிதாகி ஒரு இடுகையாக மாறி விட்டது.  அதைத்தான் இங்கு பதிந்துள்ளேன்.


தஞ்சையில், 26.08.1960 அன்று, பெரியார் ஈ.வே.ரா.  ஆற்றிய சொற்பொழிவு, 01.09.1960 அன்று “விடுதலையில் பிரசுரமானது.  அன்று, நான் பிறக்கவே இல்லையென்றாலும், கருவறையில் இருந்தேன். 6 மாதங்களுக்குப் பிறகு, பெரியார் எனும் புரட்சிவீரர் செம்மைப்படுத்திய தமிழகத்தில் பிறந்தேவிட்டேன். (25 வருடங்களுக்குப் பிறகு, கேரளாவுக்கு வந்த பிறகுதான், தமிழுலக வாழ்க்கை எனக்குத் தந்த சைவமத அறிவும், பெரியாரின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளும் என்னை நானாக்க எவ்வளவு இன்றியமையாதவையாக இருந்தன என்பதை உணர்ந்தேன்.  அவை இரண்டிலும் “குணம் நாடி, குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்ளவும் செய்தேன்)


நான் பிறந்த ராசிங்கபுரம் என்னும் கிராமத்தில் இருந்தது ஒரே ஒரு கன்னட ஐயர் வீடு. (எனக்கு 15 வயது ஆகும் வரை கன்னடியர் வீடு என்றுதான் தெரிந்திருந்தது..  பிறகுதான் யாரோ சொன்னபோது கன்னட ‘ஐயர் என்றுத் தெரிய வந்தது.) பூசாரி வீடு அவ்வளவே. சமூகத்தில் எல்லோரையும் போல அவர்களும்.  மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொண்ட சம்வங்கள் என் கண்களிலும் படவில்லை, காதிலும் விழவில்லை. 



1972-ல் போடிநாயக்கனூர் ZKM ஹைஸ்கூலில் படிக்கப் போன போதுதான், முதன் முறையாக என் மனதை உலுக்கிய ஒரு சம்பவம் நடந்தது.  எனது நண்பனான சுப்பிரமணியன் எனும் பிராமணப் பையனுடன் அவன் வீட்டுக்குப் போவோம் என, என் மற்ற நண்பர்களாகிய, முருகேசன், ராஜேந்திரன், தமிழ் அழகன், ‘தொந்திமீரான் இவர்களிடம் சொன்னபோது அவர்கள்,

“நாங்க வரமாட்டோம்.  அவங்க வீட்டுக்கெல்லாம் போகக் கூடாது.  தண்ணி கேட்டா சொம்ப கைல கொடுக்க மாட்டாங்க.  கையிலதான் தண்ணிய ஊத்தித் தருவாங்க.என்றனர்.

ஏனோ, அன்று மட்டுமல்ல, ஒருபோதும் நான் சுப்பிரமணியன் வீட்டிற்கு மட்டுமல்ல, பிராமண நண்பர்கள் வீட்டுக்கே போகவில்லை.  ஆனால், என் 12-வதுவயதில் மனதில் எங்கள் கிராமத்திலுள்ள முத்தழகு தேவர் கடையில் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் ‘மாதாரிகள் என்று அழைக்கப்பட்ட தாழ்தப்பட்டவர்களை நினைத்தபோது சின்னவருத்தம் வரத்தான் செய்தது. பின்பு எப்போதோ, வருடங்களுக்குப் பிறகு, அந்த ஹோட்டலில் அவர்களுக்கென, ஒரு ஓரத்தில் ஒரு மேசை போடப்பட்டதாக ஞாபகம். பிராமணர்களுக்கு மற்ற சாதியினர் எப்படியோ அப்படித்தான் என் கிராமத்திலிருந்த அத்தனை சாதிகளுக்கும் ‘மாதாரிகள். அவர்களைத் தொடக் கூடாது.  அவர்களும் தொடக் கூடாது.  மாதாரிகள் மற்றவர்களை எல்லாம் ‘சாமி என்றுதான் அழைக்க வேண்டும்.  மற்ற சாதியினரின் 5 வயதுப் பையன்கள் கூட 60 வயது மாதாரியை “ஏய் தொம்மையா, பொம்மையா, சின்னச்சாமி என்று கூப்பிடலாம்.  ஆனால், என் வீடும், என் பெற்றோர்களும் ஒரு போதும் நான் என் நண்பர்களான, முருகேசன், மாரியப்பனுடன் (தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள்) விளையாடியதைத் தடுத்ததே இல்லை.  சபரிமலைக்கு எல்லாவருடமும் சென்ற குருநாதரான என் அப்பாவோ முதன் முறையாக மாதாரி சாமிகளை 1971 ல் இருமுடியுடன் கூட்டிக்கொண்டு போனார்.  மருத்துவரான அவர் எல்லோரையும் தொடவும், ஊசி குத்தவும் செய்யத்தானே வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த எனக்கு, “பிராமணர்கள், 'பிற்பட்டவர்களை எப்படி ஒதுக்கலாம்' என்று சொல்லி அதற்கெதிரே போராடுபவர்கள் ஏன் பிற்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவடர்களை ஒதுக்கும்போது அதற்கெதிரே குரல்கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று குழம்பியதுண்டு. 


நான் 10அம் வகுப்பு சில்லமரத்துப்பட்டி ஸ்கூலில் சேர்ந்த போதுதான் தமிழாசிரியரும், பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றியவருமான சுருளிச்சாமி ஸாரின் வகுப்புகளும், அனுபவங்களும் கிடைக்கப் பெற்றேன். பெரியார் எனும் தனிமனிதனின் போராட்டத்தால் தமிழகம் எப்படித், தன்னிடமிருந்து தொலைக்கவிருந்த திராவிடப் பண்பாட்டை மீண்டெடுத்தது என்பதை அறிந்தேன்.  அன்றைய பார்ப்பனர்கள் இறைவனின் பெயரால் நடத்திய அட்டூழியங்கள், பாமர மக்களான, அன்றாடம் காய்ச்சிகள் பக்தியின் பெயரால் செய்யும் முட்டாள்தனங்களைக், கேட்டும், படித்தும் அறிந்த நான் ஒரு 3 ஆண்டு காலம் நாத்திகனாகவும் வாழ்ந்தேன்.  அதன் பின் தில்லைஅகத்தானாக வாழ்ந்தாலும், பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளின் பாதிப்புதான் என்னை சிந்திக்க வைத்து என்னை நானாகஆக்கியது.  அதனால்தானோ என்னவோ, பெரியார் கொள்கைகளில் மிகவும் உன்னதமான சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு மட்டும் கிடைக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் தமிழகத்தில் கிடைக்கவில்லையோ என்ற ஐயம் என்னை விட்டு அகல மறுக்கிறது. முற்பட்டோர்களுக்கும், பிற்பட்டோர்களுக்கும் இடையில் உள்ள படு குழியை மண்ணிட்டு நிரப்பி சமமாக்குவதில் ஓரளவிற்கு வெற்றி கண்ட தமிழகம், அதேபோல், அதைவிட ஆழமாகவும், அகலமாகவும் பிற்பட்டோர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் இருந்த பள்ளத்தை, படு குழியை மறந்தே போனதோ என்றும் தோன்றுகிறது..  அந்தப் படுகுழி, நான் என் 10 ஆம், 12 ஆம் வயதில், என் கிராமத்தில் கண்டு வருந்திய அதே படுகுழியை, என் 19 ஆம் வயதில் கல்லூரியிலும் கண்டேன். அதற்கு அன்று சொல்லப்பட்ட பெயர், BC, SC தகராறு.  ஏதோ ஒரு கல்லூரி விடுதியில் நடந்த தகராறுக்கு, போடிநாயக்கனூர் மீனாட்சிப்புரத்தைச் சேர்ந்த என் விடுதி மாணவர்கள் சிலர், உசிலம்பட்டியில் பஸ் மரியல் நடத்தப்பட்டு, பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டு அடித்து, உதைக்கப்பட்டார்கள்.  இதில் எல்லாம் உடன்பாடில்லாத என்னை, என் நிறத்தையும், உருவையும் மட்டும் வைத்து “இவன் அவங்க ஆளு என்று முத்திரை குத்தி எத்தனையோ நல்ல நண்பர்கள் என்னிடமிருந்து முகம் திருப்பிச் சென்று விட்டார்கள். (இன்றும், 2013லும் அதே BC, SC  தகராறு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சென்ற வாரம் என் தோழியின் கணவர் வேலை செய்யும், கோயம்பத்தூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் அவரது வகுப்பில் இத் தகராறு நடந்து ,பெரிய அளவில் கைகலப்பாகி இருக்கிறது)







1986-ல், தமிழக நாற்றங்கால்களில் வளர்ந்து நின்ற நான் பிடுங்கப்பட்டு கேரளாவில்  நடப்பட்டேன்.  கொச்சியிலும், நிலம்பூரிலும், இப்போது பாலக்காட்டிலும், ஆசிரியனாக பணி புரிந்த நாட்களின் இடையே எப்போதோ அறிந்தேன், “தேனிக் கண்டமனூரில் சாதிக் கலவரமாம்.  ஏராளமானோர் சாவாம்.”.  வாஸ்தவத்தில், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்  பின், தமிழகத்தில், சாதிக்கொரு கட்சியாக உருவாகத் தொடங்கியது. ஒவ்வொரு சாதி கட்சியினரும், சாதியினரும், தங்கள் சாதிக் காரர்களுக்காக பலவித கல்லூரிகளை நிறுவத் தொடங்கினார்கள். விளைவோ, ஒரு காலத்தில் சாதிகளில் உயர்வு தாழ்வு பாராது இருந்த திராவிட சமூகம் இப்போது சாதிச் சிறையில். (திருவள்ளுவர், மைலாப்பூரில் பிறந்த ஒரு அந்தணர் என்று, அன்று கதை கட்டினார்கள்.  இதோ இன்று, ராஜராஜ சோழனையும், ஏன் ஔவையாரையுமே ஒரு சாதி வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்களே!)  பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே உள்ளக் குழி, ஆழமும், அகலமும் கூடி அதில் கடைசியாக உலகறிய விழுந்து மாண்டவர்கள்தான் இளவரசனும், திவ்யாவின் தந்தையும்.  இன்னும் உலகறியாது மாள்பவர்கள் எத்தனையோ?! தந்தை பெரியாரின் பாசறை இருந்த திராவிட நாட்டில், திராவிட மக்களின் மனது ஏன், எப்படி இப்படி மாசானது?  சாதி ஒழிப்பையும், கலப்புத் திருமணத்தையும், ஊக்குவித்தப் பெரியார் அதன் அவசியத்தை உணர்த்திய பேச்சுகள, தமிழர்கள் செவியில் எப்போதும் முழங்க வேண்டும். கருத்துக்கள் எப்போதும் பரிமாறப்படவேண்டும்.  இல்லையேல் கலங்கிய திராவிட வெள்ளத்தில் மீன் பிடிக்க ஆரியர்கள் வருவார்கள். (இறைவனின் பெயரால் மனித குலத்திற்கு அநீதி இழைப்பவர்கள்.  அவர்கள் எல்லா மதத்திலும்தான் இருக்கிறார்கள்). மீன்களைப் பிடித்த பின் குழி வெட்டுவார்கள்.  மூடப்பட்டகுழி முற்பட்டோருக்கும், பிற்பட்டோருக்கும் இடையில் உள்ள குழியை மட்டுமல்ல, பிற்பட்டோரில் ஒவ்வொரு சாதிக்கு இடையிலும் புதிதாக குழி வெட்டுவார்கள். (பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் இடையில் குழி பெரிதாகிக் கொண்டே போகிறது. (BC-MBC).  மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இவர்களுக்கிடையேயான குழிகள், மிகப் பெரிதாகி எங்கேயும், எப்போதுமே பிரச்சினைகள் உண்டாகிக் கொண்டே இருக்கிறது. (MBC_SC/ST).).

இப்படியே போனால், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றி வளர்ந்த இந்த மூத்தக்குடி தமிழனின் செழிப்பாக (சமூக அடிப்படையிலும், பொருளாதாரஅடிப்படையிலும், ஆன்மீக அடிப்படையிலும்,Socially, Economically, Spiritually) இருந்த இந்த திராவிட நாடு, சாதிப் பிரிவினையால் குண்டும் குழியுமாக இருந்தால், பாதம் பட்டாலே, குழிகளில் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்து, வாழத் தகுதியற்ற ஒரு வன்முறை தமிழ்நாடாகிவிடுமோ என்ற அச்சம் வருகிறது.






6 கருத்துகள்:

  1. அய்யா சொல்லியவைகளை செய்தாலே போதும் ...நாடே நலம் பெரும்.
    தனிமனித உயர்வு வேட்கை செய்யும் வேலையால், பல இழி செயல்களும் அவலங்களும் நடக்கின்றன.
    தமிழ் அறிந்த பலரும் இதில் பலி ஆகின்றார்கள் .

    பகுத்தறிவு என்று சொன்னாலே அதை இழிவு படுத்துவோர் பலர் இங்கு உள்ளனர். அதை தலைப்பிலே வைத்தும் தொடர்ந்து இழிவு செய்கின்றனர் ..ஒரு கூட்டம் இதை செய்தால் வியப்பில்லை ..ஆனால் தமிழ் இன மக்களே அதை செய்யும் போது வேதனை ..

    அய்யா சொல்லிய இந்த வாசகத்தில் ஒவ்வொரு சொல்லும் காலத்தை வென்று நிற்கும். உலகிலேயே அற்புதமான ஒரு வரி உண்டு என்றால் அது இது தான் .. சிந்தித்து பார்க்க பார்க்க வியப்பே மேலிடுகிறது...
    இதை உருவாக்க எவ்வளவு ஆராய்ச்சிகளும் , சிந்தனையும் செய்திருக்க வேண்டும்...
    "கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி! முகமூடியிட்டு வந்து கருத்து தெரிவித்தாலும் நாங்கள் அதை மதிக்கிறோம். மிக்க சந்தோஷமே!. இறைஉணர்வு உள்ளவர்களும், அந்த உணர்வு மிக்க உள்ளவர்களும் கூட பூணூலை அறுத்தெறிந்து விட்டுப் பெரியாரின் கொள்கைகளை (சாதி ஒழிப்பு, மூடநம்ம்பிக்கைகளை ஒழித்தல், சுயமரியாதை உணர்வு வளர்தல்...) மதித்து, பின்பற்றத்தான் செய்கிறார்கள். இறைவனுக்கும், சாதிக்கும் எந்த முடிச்சும் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து. சாதி என்பது மனிதனால், சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு வேளை இறைவன் கறுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும், ஆடுகள், கோழிகள், நாய்கள் போன்றவற்றைப் படைத்தது போல மனிதனையும் படைத்திருக்கலாம். அதில் (தந்திரசாலியான மனிதன் ‘நான் பெரியவன்’ என்று சொல்லவும், கறுப்பு மனிதன் தான் சின்னவந்தான் என்று ஒத்துக் கொண்டால் என்ன செய்வது?
      எனவே, அந்த அடிப்படையில் பார்த்தால் இறைவன் பெயரைச் சொல்லி தன் சுயநலத்திற்காக சாதியை உருவாக்கியவன் முட்டாள். இறைவன் இச்சை என்று சொல்லி தன் சுயநலத்திற்காக சாதியைப் பரப்பியவன் அயோக்கியன். சுயநலத்திற்காக சாதியின் அடிபடையில் இறைவனை வணங்குபவன் காட்டுமிராண்டி.

      நீக்கு
  2. அடடே! நீங்க நம்ம ஆளு! தமிழ் மனம் வோட்டு பிளஸ் 1. போட்டாச்சு!
    உங்கள் கட்டுரையை பற்றி சில கருத்துக்கள் அடுத்த பின்னூட்டத்தில் எழுதிகிறேன்; அது, அதவாது, அடுத்த பின்னூட்டத்தில் நான் எழுதப்போவது---உங்கள் பார்வைக்கு மட்டுமே என்பதை நினவில் கொள்க! பொதுவில் வைக்க அல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks,Your Majesty.I am grateful and I promise that I will obey your commands(comments) ,My Lord.

      நீக்கு
    2. நம்பள்கி! My Lord, Your Majesty போன்ற un parliamentary?!!!!!!!!!! வார்த்தைகளை தெரியாமல் உபயோகப்படுத்திவிட்டேன். ( உங்களுக்குப் பிடிக்காது என்பதை சக்தி தான் உங்கள் புதிய இடுகையில் வந்ததைப் பார்த்து எனக்குத் தெரிவித்தார். உங்கள் இடுகையைப் படித்துவிட்டேன்). இனி அது போன்ற வார்த்தைகள் இல்லை. உறுதி.
      இந்தத் தில்லைஅகம் 1 ஆள் அல்ல. சிவனுடன் சக்தியாகிய எனது உற்றத் தோழியும் உண்டு. சக்தியும் என்னைப் போன்று அதே கருத்துக்கள், சிந்தனைகள், ஆர்வங்கள் உடையவர்தான். அவரும் நம்ம ஆளுதான்!

      நீக்கு
  3. பெரியாரின் கொள்கைகள் எனக்கும் பிடித்தவை ஆனாலும் என்ன இங்கு பெரியார் கொள்கைகளை மதித்து நடப்பவர்களை இழிவாகப் பேசுபவர்களே அதிகம்.மூடநம்பிக்கையில் இருந்து வெளிவரச்சொன்னால் இங்கு வேறு மாதிரி தான் பேசுகிறார்கள் என்ன செய்வது?

    பதிலளிநீக்கு