திங்கள், 25 நவம்பர், 2013

தமிழ்நாட்டின் (நெடுஞ்)சாலைகள் படுகொலைச் சாலைகளா??


24.11.2013, தி இந்து தமிழ் செய்தித்தாளில் வெளியாகி இருக்கும் செய்தி “கொலைக்களமாகும் சாலைகள் என்று. காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூரில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இது வாடிக்கையாகி விட்டது.  இதில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தவர் அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகன விபத்து மட்டுமா?

நாம் நடராஜா சர்வீஸில் போனாலும் நம்மை இடித்துத் தள்ளிவிட்டுத்தானே செல்கிறார்கள். நடப்பது கூட இப்போது பாதுக்காப்பானதாக இல்லாமல் ஆகிவிட்டது. 


     புள்ளி விவரம் சொல்வதாவது - 67,757 விபத்துக்களில் 16,175 மரணங்கள். அதுவும் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதலிடம். பெரும்பான்மையான விபத்துக்கள், மதியம் 3 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள்ளும் (16.7%), மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள்ளும் (16.6%) நடக்கின்றது. மற்ற நேரங்களைக் கணக்கிடும் போது நடு நிசி 12 மணியிலிருந்து விடியற் காலை 3 மணி வரை ரோடுகள் கொஞ்சம் பாதுகாப்பாக ???!!!! (6.3%) இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் தான் அதிகமான விபத்துகள் (38,920) நடக்கிறதாம்.  எமனுக்குப் பிடித்த மாதமோ?!

                10 வது முறையாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாம். 3 நிமிடங்களுக்கு ஒரு சாலை விபத்து நடைபெறுகிறதாம். எப்பேர்பட்ட பெருமை மிக்க விஷயம்...

    
சாலை விபத்துக்களுக்குக் காரணங்கள் என்று பார்க்கப் போனால், வளைவுகளிலும், ஏற்றங்களிலும், பாலங்களிலும் ஓவர்டேக் செய்வது, யாரேனும் ஒவெர்டேக் செய்ய முயலும்போது வேகத்தைக் கூட்டுவது, ஓவர்டேக் செய்ய முயலும் வாகனத்திற்கு முன் செல்லும் வாகனம் சிக்னல் தராமல் இருப்பது, மது அருந்தி ஓட்டுவது, இடையில் அறியாமல் உறங்கிப் போவது, அது போல இரவில் எதிரே வரும் வாகனங்களுக்கு வண்டியின் ஹெட்லைட்டை “டிம் (Dim) செய்யாமல் ஓட்டுவது, 
மொபைல் பேசிக் கொண்டே ஓட்டுவது, .சாலை விதிகளை மீறுதல், பின்பற்றாமல் இருத்தல்,  வண்டிகளுக்கிடையே போதுமான இடைவெளி இல்லாமல் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுவது, விதிமுறைகளைக் கடைபிடிப்பதில் சட்டம், ஒழுங்கு முறை கடுமையாக இல்லாது இருத்தல்,
சாலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பது, அவசியமான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் இல்லாமல் இருத்தல், இப்படிப் பல.
வாகன ஓட்டுநர் என்றால் நல்ல பொறுமையும், மற்றவர்களின் உயிருக்கு தன் சிறிய கவனக் குறைவு ஒருபோதும் காரணமாகக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியும், மற்றவர்களின் தேவை இல்லாத அவசரத்தையும், பழக்கமின்மையால் செய்யும் தவறுகளையும் புரிந்து அதற்கேற்ப வளைந்து கொடுக்கும் பெருந்தன்மையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். எனவே ஓட்டுநர் உரிமம் பெறும் ஒரு நபர் இவற்றை எல்லாம் அறிந்தவராக இருத்தல் அவசியம். அது போல் உரிமம் வழங்கும் போது அவருடைய வாகனம் ஓட்டும் திறனை மட்டும் அல்லாமல் இது போன்ற குணங்களையும் உடையவரா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால், முகம் காட்டாமலேயே கூட உரிமம் இந்தியாவில் மட்டும்தான் வாங்க முடியும் என்று நினைக்கிறேன்.  சமீபத்தில் சென்னையில் உள்ள எனது நண்பரின் மகனுக்கு, இரண்டுச் சக்கர வாகனத்திற்கும்(பைக்), காருக்கும் சேர்த்து ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டி பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, கற்று பின்னர் உரிமம் வாங்கும் நாள் வந்து, அந்த அலுவலகத்துக்குச் சென்றாயிற்று.  டெஸ்டுக்கு வேண்டிக் காத்திருந்து, காத்திருந்து, ஒரு வழியாக மதியம் 1 மணிக்கு மேல் பிரேக் இன்ஸ்பெக்டர் வந்துத் தன் திருமுகத்தைக் காட்ட, அவர் அங்கு டெஸ்டுக்கு இருக்கும் யாருடையத் திரு முகத்தையும் பாராது, எல்லா பயிற்சிப் பள்ளிப் பிரதிநிதிகளையும் கூப்பிட்டு, எல்லா விண்ணப்பங்களையும் வாங்கிப் படிக்காமலேயே கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட்டார்.  ஓட்டுநர் உரிமமும் வாங்கியாயிற்று.  இவன் அங்கு செல்லும் முன்னும், சென்ற பிறகும், 8 போட்டுப் பழகியதும், காரை முன்னும், பின்னும் எடுத்துப் பார்த்துப் பழகியதும் எதற்கோ?  இதற்கு எதற்கு ஓட்டுநர் உரிமம் என்று தெரியவில்லை. இப்படி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டால், ஏன் சாலை விபத்துக்கள் நடக்காது? 

     எனது நண்பர் அமெரிக்காவில், கலிபோர்னியாவில் தான் ஓட்டுநர் உரிமம் வாங்கியதை விவரித்த போது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முதலில் ஒரு written test  அதிலும் குறிப்பிட்டத் தவறுகளுக்கு மேல் இருந்தால் fail.  அதன் பின்னர் ரோட்டில், ட்ராஃப்பிக்கில், அருகில் DMV சோதனையாளர் இருக்க, அவர் இவரைக் கவனிக்க, அவர் சொல்லும் instructions க்கு இவர் ஓட்டிக் காட்ட வேண்டுமாம்.  அதிலும் குறிப்பிட்டத் தவறுகளுக்குள் இருந்தால் மட்டும்தான் உரிமம். இல்லை என்றால் திரும்பவும் டெஸ்ட். அதைக் கேட்ட பொது அவர்கள் எப்படி மனித உயிருக்கு மதிப்புக் கொடுக்கிறார்கள் என்றுத் தோன்றியது.  அதே போன்று இங்கும் மனித உயிரை மதித்து அது போன்ற கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும், சாலை விதிகளும் பின்பற்றப்பட்டால் இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கலாமே?  எதற்காக இப்படி உயிரிலும் ஊழல் விளையாடி உயிரைப் பலி வாங்குகின்றது?  


   விபத்து நடந்த பின்பு, விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநரை அடிப்பது, உதைப்பது போன்றவற்றில் செலுத்தும் ஆர்வத்தை பொதுமக்கள் காயமடந்தைவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் ஆர்வத்தைக் காண்பிக்காமல் இருப்பதும், பின் போலீசுக்கு ஃபோன் செய்து காத்திருப்பதும், விபத்துக்குள்ளான நபருக்குக் கொடுக்கவேண்டிய முதல் உதவிகளைக் குறித்து அறியாமல் இருப்பதும், விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், போலீஸ், கேஸ், நீதி மன்றம் என்று வீண்ணாக அலைய வேண்டி வரும் என்று பயப்படுவது, இப்படிப்பட்ட ஏராளமானப் பிரச்சினைகள்தான் விபத்துக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கான காரணங்கள்.  இவற்றிற்கெல்லாம், அரசுதான் ஏதாவது வழி காணவேண்டும் என்று நினைக்காமல், நல்ல மனது படைத்த இளைஞர்கர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இப்படி எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும் விபத்து உதவி மையம் தொடங்கினால் அது போன்ற உதவி மையங்கள் எல்லா இடங்களிலும் பரவி விபத்துகள் மூலம் உண்டாகும் மரணங்களைக் குறைக்கலாம்.  உண்மையிலேயே இது போன்ற மக்கள் சேவையே நாம் மகேசனுக்குச் செய்யும் சேவை.

     இன்று சென்னை T. நகர் சிக்னலில் வண்டியை நிறுத்திய போது, நான் நினைத்தது போல், “தோழன் என்ற அமைப்பு, நோட்டீஸ் ஒன்று கொடுத்தார்கள்.  அது “சாலை விதிகளை மதிப்போம் வீதிகளைக் கடப்போம் என்பதைப் பற்றியது.  அதில் நான் இங்கே மேலே கொடுத்திருக்கும் புள்ளி விவரங்களுடன் (தி இந்து தமிழ் நாளிதழ் 23.11.2013) பொது மக்களின் கடமையைச் சுட்டிக் காட்டி, ஆதரவைக் கோரும் நோட்டீஸ்.  நம் ஆதரவை அதில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி கொடுத்து நமது ஆதரவைத் தெரிவிப்போம். இது எங்களது வேண்டுகோளும் கூட. இது போன்ற நல்லார்வ அமைப்புகள் நம் நாடெங்கும் உருவாகி, விபத்துகள் நிகழாமல் இருக்க வேண்டிய அறிவுரைகளை, பரிந்துரைகளை வழங்குவதோடு நின்றுவிடாமல் விபத்துகுள்ளானவரைக் காக்கும் கரங்களாகவும் மாறும் என்ற எங்கள் கனவு மெய்படட்டும்.
14 கருத்துகள்:

 1. வணக்கம்

  அருமையான விழிப்புணர்வுப்பதிவு...... மேலும் தொடருங்கள்..... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்தி ஊக்குவிப்பதற்கும் மிக்க நன்றி ! நண்பரே!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாருங்கள்! திருந்துவார்களா? ம்ம்ம்ம்ம்ம் பார்ப்போம், திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில்!!! நம்பிக்கைதானே வாழ்க்கை!!!!!? அந்த அமைப்பிற்கு ஏதேனும் சிறிதாவது வெற்றி கிடைக்கிறதா என்று! அரசில் ஊழல் இருக்கும் வரை போராடுவதில் பிரயோஜனம் இல்லை. அதனால at least மக்களையாவது திருத்தி பார்க்கலாமே! நன்றி போ +1 ற்கு!!!

   நீக்கு
 3. நல்லதொரு பதிவு ,அனைவரையும் சென்று சேர வேண்டுமென வோட் செய்ய நினைத்தாலும் முடிய வில்லை !சரிசெய்யுங்கள் துளசிதரன் ஜி !

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க மிக்க நன்றி! பகவான்ஜி! நாங்களும் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை எப்படிச் சேர்ப்பது முயற்சி செய்துப் பார்த்து விட்டோம். தெரியவில்லை. எப்படிச் சேர்ப்பது என்று யாரேனும் தெரிவித்தால் நல்லது. நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

   நீக்கு
 5. வர வர சாலை விபத்து அதிகமாகிக் கொண்டு வருகிறது மேலும் வேதனை தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி! நண்பரே! நீங்கள் உதவ முன் வந்தமைக்கு நன்றி! நன்றி!! உங்களைத் தொடர்பு கொண்டுள்ளேன்!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தொடர்வதற்கு மிக்க நன்றி நண்பரே!! நங்களும் உங்களைத் தொடர்கிறோம்.

   நீக்கு
 7. பயனுள்ள தகவல்களைத்தரும் தங்கள் பதிவுகளை இனித் தொடந்து படிப்பேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், எங்கள் வலைப்பூவைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி!!! உங்களைப் போன்ற வாசகர்களின் ஊக்கம் தான் எங்களுக்குத் தேவை!! நன்றி!

   நீக்கு
 8. வாகனங்கள் அதிகமாகிவிட்டது காரணமா அல்லது மக்களின் அவசரமும் ஆணவமும் காரணமா ஆனாலும் விபத்தில் பாதிக்கப்படுவது நாம் தான் என்பதை உணர்ந்தால் இது போன்ற விபத்துகள் அதிகமாகாது. ஆச்சரியமாக பல தகவல்கள் எதில் முதலிடமோ இல்லையோ இது போன்ற இழிவான செயல்களில் தொடர்ந்து முதலிடம்..என்ன சொல்வது வேதனை.

  பதிலளிநீக்கு