திங்கள், 30 டிசம்பர், 2013

கலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ்.கே பற்றி - வாசித்ததில் ரசித்தது!


இந்தியாவின் சார்லி சாப்லின்


மாலை மலர் ‘தீபாவளி மலரில் (நன்றி: மாலை மலர்) கலைவாணரைப் பற்றிய சுவாரசியமான சம்பவங்களைப் படித்தவுடன், ‘மதுரை வீரனில் இளவரசி அவர் மனைவியை ‘அத்தை என்றதும், “அத்த நீ செத்த என்று ரைமிங்க் நகைச்சுவையில் கலக்கியது நினைவுக்கு வந்தது. நாகர்கோவில், ஒழுகினசேரியில் பிறந்து (முத்து தியேட்டர் அருகில் தான் அவரது வீடு) வில்லுப்பாட்டுக்காரராக தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்து, “இந்தியாவின் சார்லி சாப்ளின் என்று பாராட்டப்பட்டு கலையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.தன்னுடைய தனித்தன்மையுள்ள நகைச்சுவையால், கருத்துக்களையும் அள்ளித் தெளித்தவர்.  பெரும்பாலும் தனது வசனங்களைத் தானேதான் எழுதும் வழக்கம் கொண்டவர். என்.எஸ்.கே. எங்கள் ஊர்காரர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்குப் பெருமைதான். (நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவளுடன் நாகர்கோவிலில் தனது (துளசிதரன்) கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தவர்.  ஆதலால் எங்கள் ஊர்)

 மாலை மலர் தீபாவளி மலரில் வாசித்தது ரசித்தது

கலைவாணரும் பழைய சோறும்

சினிமாவில் நகைச்சுவை மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர் கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன்.  அவரது வாழ்க்கையிலும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் உண்டு.  அதில் ஓரிரு சம்பவங்கள்...
கலைவாணர் ஒரு நாள் காலையில் தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும், முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன்,


“என்னங்க, உங்க மனைவி மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா? பழைய சோறு சாப்பிடுறீங்க! என்றார்.

கலைவாணர் எதுவும் பேசாமல், வேலைக்காராரைக் கூப்பிட்டு, “இந்தா..இந்த ஒரு ரூபாய்க்கு (ஒரு ரூபாய் அப்போது...இப்போது மதிப்பு ??) பழைய சோறு வாங்கிட்டு வா. என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்கார்ர், “ ஐயா, நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன், ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல என்றார்.
“கேட்டீங்களா நடராசன்.  எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்.  அதனால்தான் இதை சாப்பிட்டேன்! என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி, மதுரமும் அசந்து விட்டார்.

[வாழ்க்கையை எந்தக் கோணத்தில் எப்படிப் பார்த்தார் என்.எஸ்.கே என்று தெரிகிறது.  அதாவது, பழைமை மறக்கக் கூடாது என்பதுதான் அது. ]

பெரியார் பக்தி

1947 ஆகஸ்ட் 15 முதல் சுதந்திர நாள் என்பதற்காக கலைவாணரை சென்னை வானொலி நிலையம் அழைத்திருந்தது.  நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட்டார் என்.எஸ்.கே.  நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம் பெற்றிருந்தது.  வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர்.
கலைவாணருக்கு வந்ததே கோபம்.  பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும்  இடம் பெறாது என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிலையத்தினர் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச்சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.

[எங்கு ஒரு அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர்]

கலைவாணரும் அண்ணாவும்

கலைவாணர் சிலை திறப்பு விழா பேரறிஞர் அண்ணா தலைமையில் நடந்தது. கலைவாணர் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில், அண்ணா கூறியதாவது :-

"கலைவாணர் கலையுலகதிற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் நம்முடையை தொண்டுகளைச் செய்ய வேண்டும். அதற்கு இந்தக் கலை ஒரு விழிகாட்டியாக அமையவேண்டும் என்ற முறையில் கலைத் துறையைத் தேர்ந்த்தெடுத்தார். அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல், கலைத்துறைக்கே, நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.   நகைச்சுவை பாத்திரமென்றால், ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும்.  அது நகைச்சுவைப் பாத்திரம் நடக்கின்ற பொழுது இடறிக் கீழே விழுவார்கள்...அது நகைச்சுவைப் பாத்திரம்.  இப்படி இருந்ததை மாற்றி, நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிறிது நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ் கிருஷ்ணன் என்று அண்ணா தனது பேச்சில் குறிப்பிட்டு பாராட்டினார்.


அன்று முதல்










                                                                                இன்று வரை


நகைச்சுவையில் தனி இலக்கணமே வகுத்தவர் என்று அண்ணாவால் சொல்லப்பட்டு, அந்த நகைச்சுவையாலேயே தன்னைப் பொது வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத நபராக ஆக்கிக் கொண்டவர் கலைவாணர்.  சொல்லப் போனால் இவரது நகைச்சுவை பாதிப்பு அன்று டணால் தங்கவேலுவிடமும் இருந்தது என்றும் சொல்லலாம்.  இன்று ‘சின்னக் கலைவாணர் என்று அறியப்படும் விவேக் வரை கலைவாணரின் தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை பாதிப்பு, காலம் கடந்து வந்து நிற்கிறது என்றால் அது பெருமை மிக்க ஒரு விஷயம் மட்டுமல்ல அது எந்த அளவு நகைச்சுவை உலகை பாதித்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! 



சனி, 28 டிசம்பர், 2013

பரோல் - Parole



குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இவ்வுலகில் குடி, பொய், களவு, காமம், கொலை என்பன அறநூலுக்கு மாறானவையாகக் கருதப்படுகின்றன. இவை ஐம்பெருங்குற்றங்கள் எனப்படும். என்றாலும், குற்றங்கள் நடக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் அர்தங்களும், தண்டனைகளும், சட்டத்தின் பார்வையும், சமுதாயத்தின் பார்வையும் மாறுபடும். குற்றங்கள் வெவ்வேறு காலகட்டத்தைப் பொறுத்தும், ஒவ்வொறு தனிமனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஏற்றவாரு, மாறுபடலாம்.  குற்றங்கள் எல்லாமே சட்டங்கள், விதிகள் மீறல்தான் என்றாலும், எல்லா மீறல்களும் குற்றங்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. என்றாலும்,

இந்தச் சமுதாயம் ஒரு திருடனையும், கொள்ளையனையும், பாலியல் பலாத்காரம் செய்பவனையும், கொலை காரனையும் ஏற்றுக் கொள்ள்ளாமல் இருப்பது நியாயம்தான்.  இங்கு இரு திருக்குறள்கள், திருவள்ளுவர் என்ன சொல்கிறார் பாருங்கள். 

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
[பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.]

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
[குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.]

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அமைதி அழிந்தது, புயலும் எழுந்தது என்ற ரத்தக் கண்ணீர் படத்தில் வரும்  அருமையான பாடல் சொல்லும் நிலைதான் ஒவ்வொரு குற்றவாளிக்கும்.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
[குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.]

இது பல சமயங்களில் மனிதனுக்குச் சாத்தியமாகாமல் போவதால் பல குற்றங்கள் சமூகத்தில் நடக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால்,

பெரும்பாலான குற்றங்கள் உணர்ச்சிகளின் அடிப்படையில், அந்த உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல், ஒரு வரம்பிற்கு மேல் போகும்போது நடப்பவையே. ஒரு நொடிப்பொழுதில் உணர்ச்சிகளின் மேலீட்டினால் எடுக்கப்படும் முடிவினால் நடக்கும் குற்றங்கள் ஏற்படுத்தும் பின்விளைவுகள் மிகப் பயங்கரமானதாகக் கூட இருக்கும். கோபம், காதல், காமம், வேதனை, பொறாமை, பொஸ்ஸிவ்னெஸ் (Possessiveness - தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம்), தாய்மை, அன்பு, ஆவேசம்,  நட்பு, நக்கல், எரிச்சல், ஆகிய உணர்ச்சிகள் எல்லாம் மனம் எனும் ஜீபூம்பாவிலிருந்து எழுந்தாலும் இவற்றிற்கெல்லாம் அடிப்படை அறிவியல்தான் அதாவது நமது மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் தான். Brain Chemistry.!!  இந்த உணர்வுகளின் அடிப்படையில் ஒரு நொடிப் பொழுதில் எடுக்கும் முடிவில் வெளிப்படும் குற்றம் நம் வாழ்கைப் பயணத்தையே திசை திருப்பி விடுகின்றது. இந்த உணர்வுகளை நாம் அணுகும்விதத்தில் அணுகி அதைக் கையாளும் முறை தெரிந்தால் நம் வாழ்வு இனிதாகிவிடும்!

இந்தச் சமுதாயத்தின் பார்வையில் ஒரு மன நோயாளிக்கும், மாற்றுத் திறனாளிக்கும், ஆதரவும், இரக்கப்பார்வையும் கிடைக்கிறது.  ஆனால், அதே சமுதாயம், நல்ல மனிதர் ஒருவர், உணர்ச்சிகளின் மேலீட்டினால் ஒரு நொடிப் பொழுதில் தவறி குற்றம் புரிந்து, அதற்கானத் தண்டனையை அனுபவித்து, குற்ற உணர்வுடன் மனம் வெம்பி, மனம் திருந்தி இச் சமுதாயத்தில் இணைய நினைக்கும் ஒருவரை, ஏற்றுக் கொள்வதில்லை!  அவருக்கு ஜெயிலில் அனுபவித்த தண்டனை தவிர இரண்டாவது கட்டமாக இந்தச் சமுதாயமும் அவருக்குத் தண்டனை கொடுக்கிறது! அப்படியாக அவருக்கு ஆயுள் தண்டனை!!  தன் குற்றத்தை உணர்ந்து அது தவறு என்று நினைத்து வருந்தி, திருந்தி, நன்னடத்தையின் காரணமாக ஜெயிலிலிருந்து விடுமுறையில் வருவது போல் சில நாட்களுக்கு மட்டும் விடுவிக்கப்பட்டு (பரோலில்) வரும் ஒருவரை, அவர் தான் செய்த தவறை  உணர்ந்து மீண்டும் நல்லவனாக வாழ ஆசைப்படுகிறார் என்றால் அவரை இந்த சமுதாயம் ஏற்று அவரது வாழ்விலும் ஒளியேற்றி, குற்ற உணர்விலிருந்து விடுவித்து, அவர் வாழ்வை மீண்டும் ஒளிமயமாக்க உதவலாமே! அது உதவி மட்டும் அல்ல நம் கடமையும் கூட.  குற்றவாளிகளை எப்போதுமே குற்றவாளிகள்தான் என்று கருதுவதும் சரியல்ல  என்ற கருத்தின் அடிப்படையில், எனது நண்பர் துளசிதரனால் எடுக்கப்பட்டதுதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள “பரோல் குறும்படம்.  பார்க்கப்போனால், உணர்ச்சிகளின் மேலீட்டினால் நடக்கும், ஒன்றுகொன்று தொடர்புடைய இரு குற்றங்கள், இந்தக் குறும்படத்தில், அவரால்  சொல்லப்பட்டிருக்கின்றன.

க்தை இதுதான்.  இரு நெருங்கிய நண்பர்கள்.  அடுத்தடுத்த வீட்டில்.  இருவரது குழந்தைகளும் மிக நன்றாக பழகி வருகிறார்கள்.  ஒருவரது மகன் மற்றவரது சிறிய பெண்ணுடன் நன்றாகப் பழகி வரும் சமயம் அந்தப் பையன் அந்தச் சிறிய பெண்ணிற்குத் தவறான படங்களைக் காட்டி, அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயலும்போது அப் பெண்குழந்தை இறந்து விடுகிறது.  அக்குழந்தையின் தந்தை நண்பரின் பையனை உணர்ச்சிகளின் மேலீட்டினால் கொன்று விடுகிறார். தண்டனை அனுபவிக்கிறார். பரோலில் வரும் அவரை அண்டை அயலாரும், ஊருமே ஒதுக்குகின்றது. அவரது மனைவி சித்தம் கலங்கிய நிலை. அவர் தன் தவறை நினைத்து தற்கொலை செய்ய முயல்கிறார்.  அச்சமயம் அடுத்த வீட்டில் இருக்கும் அவரது நண்பர்,(அவரது மகனைத்தான் இவர் கொன்றார்) தன் மகனைக் கொன்றவர் என்றும் பாராமல் தற்கொலை முயற்சியை தடுத்து அவரது மனதில் உள்ள குற்ற உணர்விலிருந்து அவரை விடுவித்து வாழ வழி செய்வதாகக் கதை.


சிறிய பட்ஜெட் படம் என்பதால் பொதுவாக எதிர்பார்க்கபடும் சில விஷயங்கள் இல்லாமல் போகலாம். அதை மனதில் கொள்ளாமல், அவரது முயற்சியைப் பாராட்டலாமே! அவரது முயற்சி மேலும் வெற்றி அடைய வாழ்த்தலாமே! 
 
இதைப் பார்த்து விட்டு உங்கள் மேலானக் கருத்துக்களையும், காரமான, உண்மையான, நேர்மையான விமர்சனங்களையும் தெரிவிக்கவும். உங்கள் கருத்துக்களும், விமர்சனமும் அவருக்கு இன்னும் செதுக்கி, மேம்படுத்தி, தவறுகளைத் திருத்திக் கொண்டு, நல்ல விதத்தில் அடுத்த படம் எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இதில் உரையாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும்.  அதற்கான சப் டைட்டில் (sub title) மளையாளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழில் இல்லை.  தயவு செய்து மன்னிக்கவும்.


பரோல் - Parole

a short film by Thulasidharan V Thillaiakathu 









பின் குறிப்பு:

இப்படம் என் நண்பர் துளசிதரனால், சக ஆசிரியர்களின் உதவியுடன், மாணவர்களுக்காக எடுக்கப்பட்டது. அதாவது, அவர் ஒவ்வொரு வருடமும் தனது ஒரு மாத வருமானத்தை (அதற்கும் மேலே கொஞ்சம் கூடுதலாகலாம்) மாணவர்களுக்காகக் குறும்படம் எடுக்க எந்தவித லாப நோக்கமும் இல்லாமல்ஒதுக்குகின்றார். ஒரு service போலத்தான். சிறிய பட்ஜெட் குறும்படம்தான் என்றாலும் அதில் மாணவர்களையும், சக ஆசிரியர்களையும் உட்படுத்தி, நடிக்கச் செய்து, அவர் டைரெக்ட்  செய்து தாயாரிக்கின்றார். மாணவர்களை  ஆங்கிலத்தில் உரையாடச் செய்து, அவர்களையும் "interactive session" ல் கலந்து கொள்ளச் செய்து ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஆர்வம் ஏற்படுத்த ஒரு முயற்சி. இது அவரது இரண்டாவது முயற்சி.

அதன் லிங்க் இதோ (student activities)

http://www.youtube.com/watch?v=4E50nBSZamE

இந்தப் படம், சமீபத்தில், 22.12.2013 அன்று, "மலபார் ஃபில்ம் சொசைட்டி" பெருந்தல்மன்னா எனும் இடத்தில் நடத்திய குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இரண்டாம் பரிசு வென்றது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று அவர் பயணத்தில் இருக்கின்றார்.  இந்தக் குறும்படம் பதிவேற்றம் செய்யப்படுவது அவருக்குத் தெரியாது.  சொல்லப் போனால் இதை நான் சென்றத் திங்கள் கிழமை அதாவது 23 ஆம் தேதி பதிவேற்றம் செய்ய நினைத்தேன்.  ஆனால், அவருக்கு இதை வலைப்பூவில் பதிவேற்றம் செய்வதில் விருப்பமில்லை. முதலில் சம்மதிக்கவில்லை. தற்புகழ்சி என்றார்.  இன்று அவர் இல்லாததால் இந்தப் பதிவேற்றம். 


வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை போல், மனிதனுக்கு பூமியில் இடம் கொடுத்தது இறைவன்/இயற்கை செய்த தவறோ!!??


தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டிருந்தன. 'அம்மா, எனக்கு சில கேள்விகள் இருக்கு.  கேக்கலாமா?

அம்மா: கேளு மகனே! ஏன்? ஏதாவது பிரச்சினையா?


“அம்மா,  நமக்கு ஏன் திமில் இருக்கு?

“மகனே நாம பாலைவனத்துல வாழற விலங்கு.  இந்தத் திமில் தான் நமக்குத் தண்ணீர் சேமித்து வைக்க உதவும். நாம தண்ணீர் இல்லாமலே கூட வாழ்ந்துடுவோம். அதற்கு பேர் போனவர்கள்.

“அம்மா நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு?  என்று கேட்டது குட்டி.

“பாலவன மணல்ல நடக்கணும்னா, கால் நீளமா இருந்தால்தான் வசதி.  அதான் என்றது தாய்.

“அம்மா நமக்கு ஏன் கண் இமை முடிகள் எல்லாம் நீளமா இருக்கு?

“அப்போதான் காத்தடிக்கும் போது பறக்கும் பாலைவனத்து மணலெல்லாம் கண்ணுக்குள் புகாது

“நம்ம தோல் ஏம்மா சொர சொரனு ரொம்ப கெட்டியா இருக்கு?

“பாலைவனத்துல வெயிலும், குளிரும் கடுமையா இருக்கும்ல. அதை தாங்கிக்கிறதுக்காக தோல் கெட்டியா இருக்கு

“எல்லாம் சரிம்மா, அப்போ நாம் ஏன் பாலைவனத்துல இல்லாம இங்க ஜூவுல இருக்கோம்? என்று குட்டி கேட்ட கேள்விக்கு தாயிடம் பதில் இல்லை.


-----------------------------------------------------------------------------

தாய் ஒட்டகத்திடம் பதில் இல்லையாக இருக்கலாம்பாவம்! ஆனால், அதற்கு பதில் இதோ. குட்டி ஒட்டகமே நாங்கள், மனிதர்கள் தான் காரணம். நாங்கள் சுயநலவாதிகள்.  அதுதான் காரணம்.  மேலே அந்த ஒட்டகத்தைப் பற்றிய சிறு கதையைப் படித்தவுடன் தந்தையின் மனதில் பல எண்ணங்கள் தோன்றத் தொடங்கியது கட்டுரை வடிவில்.

மனிதன் குரங்கிலிருந்து வந்து பரிணாம வளர்ச்சியில் மேலே உச்சியில் இருந்தாலும், ஆதி மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நிலை படிப்படியாக, மனிதன் சுயநலத் தேவையை ஒட்டி சிந்திக்கத் தொடங்கியதாலும், அவன் முடிவுகள் எல்லாமே சுயநலம் சார்ந்ததாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினாலும் இன்று, மனிதன் வாழும் இந்த பூமியில் இயற்கையும், விலங்கினங்களும் கூட எதிரியாகி விட்டதோ என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சுயநலம் அதிகரிக்கும்போது மனிதன் இயற்கையை விட்டு விலகுகிறான். இயற்கையைச் சுரண்ட ஆரம்பிக்கின்றான். காண்கீரீட் காடுகளை வளர்க்கிறான். 5 அறிவு படைத்த விலங்குகள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த, முன்பு காணப்பட்ட பல உயிரினங்கள் இன்று பூமியிலிருந்து அடியோடு அழிந்து விட்டன. பூமி வெப்பமாகுதலால், அவற்றால், இப்போது ஏற்படும் மாறுபட்ட பருவநிலையில் வாழ முடியவில்லை. மனிதனின் சுயநலம் அந்த அளவு வளர்ந்து விட்டது. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இந்த பூமியில் இடம் இல்லாமல் போகிறதால், அவைகளை ஒரு சின்னக் கூண்டுக்குள், இல்லை சின்ன ஏரியாவுக்குள் அடைத்து வனவிலங்கு உயிரியல் பூங்கா (zoo), இல்லை இயற்கை வனவிலங்கு உயிரியல் பூங்கா என்று ஒட்டி, பணம் பார்க்கிறோம். இதில் சில இடங்களில் இவை சர்க்கஸ் கூட செய்யும்!! 

இயற்கை தனக்கென்று எதுவும் சேமித்து வைத்துக் கொள்ளாமல்,  தான் சேர்ப்பது எல்லாவற்றையும் நம் மனித குலத்திற்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தரும் போது, அந்த இயற்கையைக் காப்பாற்றாமல், அதற்குத் தீங்கு இழைப்பது  மனிதனின் ஒரு குரூரமான, சுயநலமிக்கச் செயல் அல்லாது வேறு என்ன என்று சொல்ல முடியும்? அது நமக்கு உதவும் பங்கில் ஒரு துளியாவது நாம் அதற்குத் திரும்பத்தருகிறோமா?  (கல்யாணம் போன்ற விசேஷங்களில் ஒருவர் நமக்கு என்ன மொய் வைக்கிறார் என்று ஆராய்வதில் நாம் படு கில்லாடிகள்.  பதில் மொய்?!!! மூச்சு!! மொய் வைப்பவர்களைப் பற்றி இங்கு பேச்சு இல்லை).
 
இயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. அது நமக்குத் தரும் பயன்களை ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், இனம், மொழி பார்த்துத் தருவதில்லை.  நதிகளும், ஏரிகளும், குளங்களும், கிணறுகளும்  நமக்கு ஜாதி பார்த்து, மொழி பார்த்து நீர் தருவதில்லை. பார்க்கப் போனால் நாம் தள்ளும் அழுக்கையும், கழிவையும் அது சுமந்து கொண்டுதான் போகிறது.!! 

ஆனால், இங்கு “எலேய் அந்த வாய்க்கா தண்ணி அந்த சாதிக்காரன் ஊருக்குள்ள போகுது......அவன் வயலுக்கு.  அந்த வாய்க்கால தடுக்கணும்லேய்”. 

“இந்தக் கிணத்துல மத்த ஜாதிக்காராலாம் வந்து தண்ணி இறைக்கப்டாது. தீட்டு படறது. 

“இந்தப் படித்துறைல நீங்கள்லாம் வந்து குளிக்கப்படாது.  துணி தோய்க்கப்படாது.

நதி நீருக்கும், அணை நீருக்கும், மாநிலத்திற்கிடையே சண்டைகள்!

சுயநலம் என்பது மனிதனின் குணம். அதில் விதி விலக்கு என்பதே யாரும் கிடையாது. அப்படி ஒருவர் இருந்தால் கண்டிப்பாக அவர் மனிதரா என்ற சந்தேகம் வரத்தான் செய்யும்.  ஏன் அப்படி என்று கேட்கின்றீர்களா? சொல்லுகிறேன்.  மனிதன் விலங்குகள் வளர்ப்பது கூட ஒன்று உணவிற்காக, சுமைதூக்க, பாரம் இழுக்க, இல்லை புண்ணியத்திற்காக! அதில் பசு வளர்த்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு, சுய நலம். விலங்குகள் எல்லாம் தங்கள் குணங்களை நேருக்கு நேர் காட்டி விடும்.  நடிக்கத் தெரியாது! (அப்போ தேவர் ஃப்லிம்ஸ், ராமநாராயணன் படத்துல எல்லாம் நடிக்குதேனு நீங்க கேக்கக் கூடாதுங்க!!) ஆனால், மனிதன் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசி, அடுத்தவனைக் கவுக்க நினைப்பதில் கைதேர்ந்த நடிகன்.

மரங்கள் வளர்ப்பதிலும் கூட சுயநலம்தான். போனால் போகட்டும்! மரம் வெட்டினால் திரும்ப நட வேண்டும் என்ற சிந்தனை 6 அறிவு படைத்த மனிதனுக்குத் தோன்ற வேண்டாமா? துளசி வளர்த்தால் புண்ணியம். மரம் நட்டால் புண்ணியம். அதில் கூட சுயநலம். மனிதனுக்கு மனிதன் உதவி செய்வதில் கூட! உதாரணமாக, கல்விக்காகச் செய்யும் உதவியிலும், ஆடையும், அன்னமும் தானமாக வழங்குதலிலும் கூட புண்ணியம் என்பதுதான், மனித நேயத்தை விட முன் நிலைப்படுத்தப்படுகிறது! சமுதாயத்திற்காகச் சேவை செய்வது கூட அதுவும் அறக்கட்டளை என்ற பெயரில், பணத்திற்காகவும், புகழுக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும்தான் என்று ஆகி விட்டது.  ஏன் நீங்கள் ஏதாவது அறக்கட்டளைக்கோ இல்லை, சமுதாயத் தொண்டு நிறுவனத்துக்கோ பணம் செலுத்தினால் அதற்கு கூட வருமான வரித்துறை விலக்கு அளிக்கிறது!! அப்படியாவது மக்கள் முன்வருகின்றார்களா என்பதற்காகத்தான்! 

மது விற்கும் பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுடைய கணவன் எப்போதும் அவளிடம், "ஏய், நம்ம கடைக்கு அதிகமான ஆட்கள் மது அருந்த வரவேண்டும்.  அதுக்காக நீ தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" எனக் கூறுவான்.

ஒரு நாள் குடிக்கவந்த ஒருவன், இந்தப் பிரார்த்தனையைக் கேட்டான். அவன் அந்தப்பெண்மணியிடம், "எனக்கும் அதிகம் ஆர்டர்ஸ் கிடைப்பதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். என்றான்.

"உங்கள் வேலை என்ன?" என்று அவள் கேட்டதற்கு, "சவப்பெட்டி தயாரித்தல் என்றான். 

அவனும், ஏன் நாமும்தான் ஒரு நாள் அந்தச் சவப் பெட்டிக்குள் தான் போக வேண்டும் என்பதை அவன் மட்டும் அல்ல நாமும் அறியாமல் இல்லை. இந்த பூமியின் நிலை அப்படித்தான் மாறி உள்ளது.

மகாத்மா காந்தியும், "இந்த பூமியில் நம் எல்லோரது தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமான வளங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு தனிமனிதனின் பேராசையை நிறைவேற்ற அதனால் முடியாது'. இப்படிப்பட்ட பேராசைதான், இன்று நம் இயற்கைச் சூழல் நாசமானதற்கும், இயற்கை வளங்கள் வற்றிப் போனதற்கும், இயற்கைப் பேரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

------------------------------------------------------------------------------

எழுதி விட்டு, சோர்வு அகல தந்தை எழுந்து நடக்கிறார்.  அங்கு பையன் வந்து அவர் எழுதியதைப் படிக்கிறான்.

மகன் தந்தையிடம்: அப்பா நமக்கு மட்டும் ஏன் ஆறறிவு? அந்த ஒட்டகம், மத்த விலங்குகளுக்கு எல்லாம் ஏன் 6 அறிவு இல்லை?

தந்தை : அது பரிணாம வளர்ச்சியால் சாத்தியமான ஒன்று.

மகன் : சரி அப்போ 6 அறிவு என்றால் என்ன?  அதனால் என்ன பயன்?

தந்தை: 6 வது அறிவு என்பது சுயமாகச் சிந்திக்க உதவுவது.  அது நன்மை தீமைகளை ஆராயும், பகுத்தறிவு!.  அதுதான் விலங்குகளுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம்.

மகன் : அது சரி! அப்படியென்றால், ஓரறிவிலிருந்து, 5 அறிவு படைத்த விலங்குகள் எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ முடியும் போது ஆறறிவு படைத்த மனிதனால் ஏன் ஒன்றி வாழ முடியவில்லை? எவ்வளவோ கண்டுபிடித்து, அறிவியலில்  முன்னோடிகளாகத் திகழ்வதாகப் பறை சாற்றுகின்ற 6 அறிவு மனிதானால் ஏன் மரணத்தை வெல்ல முடியவில்லை?

கட்டுரை எழுதிய தந்தையிடம் பதில் இல்லை.

அப்பா உங்கள் கட்டுரையை இப்படி முடிக்க முடியுமா என்று பாருங்கள்!

பார்க்கப்போனால், மனிதன் தன் குழியைத் தானே வெட்டிக் கொள்கிறான்.  தனக்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கும் சேர்த்துத்தான்! மனிதன் தன் 6 அறிவால் இந்த உலகை ஆள நினைத்து இயற்கையோடு ஒன்றி வாழாமல், இயற்கையைக் கவனிக்காமல் போனால், நாளை மனிதனின் நிலையும், பருவநிலையுடன் இணைந்து செல்ல முடியாமல், காணாமல், அழிந்து போன விலங்குகள் பட்டியலில் மனித இனம் சேர்ந்து விடும். 6 அறிவு படைத்தவன் சிந்திக்கத் தெரியவில்ல என்றால், 5 அறிவு படைத்த விலங்குகள் தானே!!? அதனால் மனிதனுக்கு காங்க்ரீட் ஜூ ரெடி!!


This is like being in a tiny cage in the human zoo—one of the ones that is made of concrete and bars instead of natural landscaping and water features.

இந்தப் பூமி வெகு சீக்கிரம் பாலைவனமாகி விடும். குட்டி ஒட்டகங்கள் ஜூவிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழட்டும்!!!. அந்தக் குட்டி ஒட்டகத்திடம் சொல்லுங்கள்! பாலைவனம் ரெடி என்று!










புதன், 25 டிசம்பர், 2013

கொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்லை!.......அப்பாடா!!




50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், பெரும்பான்மையான கோயில்களுக்குக் காளைகள் நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது. (கன்று குட்டிகள் வளர்ந்து கோயில் காளையாகும்.  முழு சுதந்திரமுள்ள கோயில் காளையாகத் திரியும்.)  அன்றெல்லாம் அவிழ்த்து விடப்படும் பசுக்கள், காளைகள், ஆடுகள் போன்றவை நம் சமூகத்திற்கு ஒரு பிரச்சினையே அல்ல.  வழியோரங்களிலும், தரிசு பூமிகளிலும் அவற்றிற்கான புல் பூண்டுகள் முளைப்பது சகஜமே.  ஆனால், இப்போதைய சூழலில் காண்க்ரீட் கட்டிடக் காடுகளுக்கிடையே ஒரு கோயில் காளை நகர வீதிகளில் உலாவருவதை (சினிமா போஸ்டர்களைத் தின்று கொண்டு.)..சற்று சிந்தித்துப் பாருங்கள்!. அது எத்தனை விபத்துகளுக்குக் காரணமாகும்? எத்தனை பேர்களுக்கு தன நஷ்டத்தை ஏற்படுத்தும்?


கேரளாவில், காஞ்சிரப்பள்ளி எனும் இடத்திலுள்ள ஸ்ரீ கணபதியார் கோயிலிலும், இது போல் ஒரு காளை முன்பு எப்போதோ நேர்ந்து விடப்பட்டிருக்கிறது.  கணேஷ் என்று அழைக்கப்பட்ட அந்தக் காளையாலும் சிலப் பிரச்சினகள், சில விபத்துக்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.  பல மதங்களைச் சேர்ந்த, பல தெய்வங்களை வழிபடும் மனிதர்களிடையே, இது போன்ற சம்பவங்கள், ஒரு சில பிரச்சினைகளை உண்டாக்கியிருக்கலாம்.  எப்படியோ, கடந்த ஞாயிறு அன்று (22.12.2013) அக் கோயில் காளை, கை, கால்கள் கட்டப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் ஸ்ரீ கணபதியார் கோயிலருகே காணப்பட்டது.  இக்கொடிய செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மறு நாள் திங்கட் கிழமை, முற்பகல் 11 மணி முதல், மாலை 6 மணிவரை அப்பகுதியில் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது.  கோயில் காளையுடன் ஊர்வலம் செல்ல சிலர் முயன்ற போது, சமயோசிதமாக போலீஸாரும், கணபதியார் கோயில் நிர்வாகிகளும் ஈடுபட்டு அதைத் தடுத்தனர்.  ஒருவேளை அதைத் தடுக்காமல் இருந்தால் ஊர்வலத்தினிடையே சில அசம்பாவித சம்வங்கள் நிகழ்ந்து அது அரசியல் லாபத்திற்காக மதக் கலவரமாக மாற்றப்படவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.  காலத்திற்கேற்ற சில மாற்றங்களை எல்லா மதத்தில் உள்ளவர்களும் உட் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் மத சார்பற்ற இந்தியாவில் எல்லோரும் சமாதானத்துடன் வாழ முடியும். இந்துக்கள் மட்டும், அல்லாது, இந்துக்கள் கூடுதலாக வாழும் கிராமங்களில் ஒரு வேளை இப்போதும் இதுபோல் கோயில் காளைகள் உலா வந்து கொண்டிருக்கலாம்.  சமூகத்தில் இது போல் கோயில்களுக்கு நேர்ந்துவிடும் காளைகளையும்,யானைகளை,பசுக்களை பெரும்பான்மையான கோயில்களில் பராமரிப்பது போல், பராமரிக்க கோயில் நிர்வாகிகளும் தயாராக வேண்டும். அப்போதுதான் இவற்றால் சமூகத்திற்கு உண்டாகின்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சமூகத்தில் அமைதியானச் சூழலை ஏற்படுத்த, முக்கியமாக, இது போன்ற ஏதேனும் ஒரு மதத்தினரை வருத்தும் சம்பவங்கள் நடக்கும் போது, எல்லோரும் ஒரு மனதாய் நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என்று தங்கள் சொல்லாலும், செயலாலும், தங்கள் ஆதரவையும், வருத்தத்தையும் வெளிப்படுத்துவது நல்லது. 


தாலிபன்,  பாமியான் குன்றுகளில், 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட புத்தரது சிலைகளை எல்லாம், டைனமைட் வைத்துத் தகர்த்தெறிந்த போது
மௌன ஊர்வலம் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த புத்த மதத்தவரின் சகிப்புத் தன்மையுடன், காஞ்சரபள்ளி மக்களின் சகிப்புத் தன்மையை ஒப்பிடும் போது சிறிதுதான் என்றாலும் பாராட்டத்தக்கதே.


செவ்வாய், 24 டிசம்பர், 2013

வரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப்


“இன்று போகட்டும்.  நாளை வருகிறேன்.  ஷூட்டிங்க் இருக்கிறது, என்ற மலையாள நடிகர் திலீப் இன்று வேறு வழியின்றி கொச்சி Central  Excise and Customs Office ல் ஆஜராகி இருக்கிறார்.  தீலீப் “ஜனப்பிரிய நடிகர் என்ற பெயரில் கேரளாவில் அழைக்கப்படுபவர். செலக்டிவாக படம் செய்து தனக்கென்று ஓரிட்த்தை மலையாள திரை உலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு திறமை மிக்க நடிகர்.


இரண்டு வருடங்களுக்கு முன் நம் பாக்கியராஜ் அவர்கள் ஜூரியாக வந்த போது முதன் முறையாக மலையாளத் திரை உலகில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


(பெரும்பாலும், மோஹன்லால், மம்மூட்டிகள் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்-இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே).  திலீப், கதைகளையும் கதா பாத்திரங்களையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர்.  அது போல பண விஷயத்தில் அதை விட கவனமும் விழிப்புணர்வும் உள்ளவர்.  சில மாதங்களுக்கு முன் மம்மூட்டி, மோஹன்லால்  போன்ற சூப்பர் ஸ்டார்களுக்குக் கிடைத்ததை விட, கணக்கிட்டுப் பார்க்கும் போது இவருக்கு ஊதியம் கூடுதல் என்று பரவலாகப் பேசப்பட்ட்து.  இவர் ஊதியத்துடன்,  ஓரிரு மாவட்டங்களுக்கான வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளரிடமிருந்து பெறுவதுதான் காரணம் என்றும் பேசப்படுகிறது.  இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு இவர் மலையாள சூப்பர் ஸ்டார்களை ஓவர்டேக் செய்தாராம்.  எப்படியோ வரி இலாக்காவிற்கு இந்தச் செய்தி காதில் தேனாய் பாய்ந்திருக்க வேண்டும்“மாயா மோஹினி, “ஸ்ருங்காரவேலன்” (சிங்காரவேலனைத்தான், ஸ்ருங்கார வேலனாக்கியிருக்கிறார்கள்.  “ஜொள்ளு வேலன்.  கேரளத்தில் மதம் பார்த்து இறைவனைக் கிண்டல் செய்யலாம்.  அல்லாஹுவை கேலி செய்து கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தயாராக்கிய கேரளா, மூவற்றுப்புழையைச் சேர்ந்த ஒரு ப்ரொஃபசரின் கை இனி ஒரு போதும் அந்தக் கை வைத்து எழுத முடியாத அளவிற்கு வெட்டப்பட்டுவிட்டது.  இப்போதும் அவர் பெட் ரெஸ்டிலதான்) போன்ற படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த அதிக பணத்திற்கான வரி கட்டப்படவில்ல என்று வரி இலாக்கா, அவர் மேல் குற்றம் சாட்டி விசாரணைக்கு அழைத்திருக்கிறது.  “நாடோடி மன்னன் எனும் திரைப்படத்தில் “பத்மநாபதாசனாகவும் பத்மநாப தாஸர்களின் தானாகவும் நடித்தும், திருஅனந்தபுரியில் அனந்தசயனம் செய்யும் பத்மநாபன் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை.


பாவம், அவரே தன் காலடியில், தன் தீவிர பக்தனாக இருந்த மார்த்தாண்ட வர்மாவினால் பதுக்கி வைக்கப்பட்டதெல்லாம் பொதுவுடைமை ஆக்கப்படப் போகிறதே என்ற வருத்தத்தில் இருக்கும் போது இந்த சுந்தரக் கிலாடி யை (கிலாடி என்றதும் கில்லாடி என்று தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  கிணறு வெட்டிகள் தான் கிலாடிகள்.  ஒரு படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் தான் இந்த “சுந்தரக் கில்லாடி ஸாரி “சுந்தரக் கிலாடி) எப்படிக் காப்பாற்றுவார்?  இனி எல்லாம் தலைவிதி வசம்.


தலைவிதி'வசம்'


பின் குறிப்பு: அவருடைய தலைவிதி'வசம்' வேறு ஒரு நல்ல சம்பவம் கூட நடக்க இருக்கிறது.  இனி வருவது அவருடைய தலைவி திவசங்கள் (நாட்கள்).  அவரை மணந்தது முதல் இதுவரை நடிக்காமல் இருந்த அவரது மனைவி மஞ்சுவாரியார் எனும் மிகச் சிறந்த நடிகை மீண்டும் திரையுலகிற்கு வருகிறார்.

'தலைவி'திவசங்கள்