இந்தப் பதிவு சகோதரி தேனம்மை அவர்கள், தனது தளத்தில் சனிக்கிழமை தோறும் இடும் சாட்டர்டே போஸ்டில் எனது பேட்டி இடம் பெற வேண்டிக் கேட்ட போது எழுதிய கட்டுரை. அவர்கள் தளத்தின் சுட்டி இதோ. http://honeylaksh.blogspot.in/2015/04/blog-post_25.html மிக்க நன்றி சகோதரி தேனம்மை. அவர்கள் அனுமதியுடன் இங்கு பதிவை இடுகின்றோம்.
2000
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தாய் மொழியான தமிழில்
எழுதப்பட்ட திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்து மகிழும் நமக்கு,
வெறும் 700 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் வாழ்ந்த சாசரால் எழுதப்பட்ட
காண்டர்பரி டேல்சிலிரிந்து வளரத் தொடங்கிய ஆங்கிலம், இன்றியமையாத ஒரு மொழியாக
மாறியிருப்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. தமிழகம் உட்பட இந்தியா மட்டுமல்ல, கடந்த
நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலிருந்த
சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், இப்போது ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத்
தொடங்கியிருக்கின்றன.
ஆனால்,
16 ஆம் நுற்றாண்டில், ஷேக்ஸ்பியரின் கால கட்டத்தில் வாழ்ந்த ஃப்ரான்சிஸ் பேகன் போன்ற
மேதைகள் ஆங்கில மொழிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்காது என்ற நம்பிக்கையில்,
அவர்களது படைப்புகளில் பெரும் பகுதியை க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில்தான்
எழுதியிருக்கிறார்கள். இத்தகைய சூழலில்
வளர்ந்த ஆங்கில மொழிதான் இன்று நூலக மொழி எனும் பதவியிலிருந்து, கணினி மொழி, இணைய
மொழி எனும் உயர் பதவியை எட்டிப் பிடித்து உலக மொழியாய் மாறி, உலகெங்கிலும் உள்ள
மக்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு மொழியாய் மாறியிருக்கின்றது.
பழைமையான
க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளுக்கும், அதிகமான மக்கள் பேசும் சீன மொழிக்கும், தென்
அமெரிக்காவில், ஸ்பெயினில், லாட்டின் அமெரிக்காவில் பேசப்படும் ஸ்பானிஷ், இனிமையான
ஃப்ரென்ச் மொழிக்கும் கிடைக்கப் பெறாத பாக்கியம் எப்படி ஆங்கில மொழிக்குக் கிடைத்தது
என்று கேட்டால், சந்தேகமே வேண்டாம், நமக்குக் கிடைக்கும் பதில்கள் இவைதான்.
16 ஆம்
நூற்றாண்டு முதல், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை, உலகெங்கிலும் உள்ள
நாடுகளுக்கு, வியாபார நோக்குடன் சென்று, அவற்றை எல்லாம் தங்களது சாம்ராஜ்யத்தின்
பாகமாக மாற்றி, அந்நாடுகளை ஆண்ட ஆங்கிலேயர்களும், அவர்களுக்கு இருந்த மொழிப்
பற்றும், ஜெர்மன், ஃப்ரென்ச்சு, டானிஷ், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின்
கலவையான ஆங்கில மொழி எல்லா மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைத் தன்னுள் உட் கொண்டு
வளரத் தயாரானதும் அதற்கானக் காரணங்களே. அத்துடன்
18, 19 ஆம் நூற்றாண்டுகளிலும் அதன் முன்பும், உலகில், முக்கியமாக ஐரோப்பாவில்
நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும், வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்வுகளும்,
க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், போன்ற மேதைகளால்
நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அரிய நூல்களும் ஆங்கில மொழியில் மொழியாக்கம்
செய்யப்பட்டு, அச்சடிக்கப்பட்டு, புத்தகவடிவில் உலகெங்கும் உலா வரத் தொடங்கியதும்,
உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு அவற்றை எல்லாம் அறிய, ஆங்கில மொழி இன்றியமையாத ஒன்று
என்பதை உணரச் செய்ததும் ஒரு காரணமே.
நம்
நாட்டிலும், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் எழுதப்பட்ட அரிய நூல்களுக்குச்
சமமான நூல்கள், வட மொழியிலும், திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் மற்றும் துளு மொழிகளில் இருக்கத்தான் செய்தன. ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த அவை எல்லாம்
சமஸ்க்ருத மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு எல்லோரும் கற்கவோ, எல்லோராலும்
கற்பிக்கப்படவோ அனுமதிக்கப்படாமல் பாழாய்ப் போனது நம் துரதிர்ஷ்டம் என்றுதான்
சொல்ல வேண்டும். அப்படித் தனி உடைமை
ஆக்கப்பட்ட சமஸ்க்ருத மொழி எல்லோராலும், பேசப்படாத, வாசிக்கப்படாத காரணத்தால்
அழிந்த போது, எல்லோராலும் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட ஆங்கில மொழி உலக மொழியாக
வளர்ந்து விட்டது. சமஸ்க்ருதம் மட்டுமல்ல.
அது போல மக்கள் பேசாததாலும், எழுதாததாலும், அழிந்த மொழிகள் தான் ஈப்ருவும்,
லத்தீனும்.
20க்கும்
மேலான மொழிகள் பேசப்படும் இந்தியாவில், இந்தி தேசிய மொழியாக அங்கீகாரம் பெற்ற
போது, அது திராவிட மொழி பேசும் தென்னிந்திய மக்களுக்குக் கற்கவும், பேசவும்
எழுதவும் சிரமமான ஒன்றானது. எனவே,
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற நாம் ஆங்கிலத்திற்கு விடை சொல்லி அனுப்ப
முடியவில்லை. ஆங்கிலம் நம்முடனேயே தங்கி விட்டது. தென்னிந்தியாவிலிருந்து, வட
இந்தியா செல்லுபவர்கள் ஆங்கில மொழியின் உதவியோடுதான் தங்களது கருத்துகளை
அங்குள்ளவர்களிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நிலை நம் நாட்டில் உருவானது.
இந்தியப் பல்கலைகழகங்களில் ஆங்கில மொழி
வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படுவதால் இங்கு கற்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல்,
உலகெங்கும் சென்று உயர் கல்வி பெறவும், வேலை வாய்ப்புத் தேடவும் முடிகின்றது. இருப்பினும், 20 க்கும் மேற்பட்ட மொழிகள்
பேசப்படும் இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலத்தில், ஒவ்வொரு மொழி பேசுவோரது மொழி
ஆதிக்கம், அவர்கள் பேசும் ஆங்கிலத்தில் கலந்து விடுவதைத் தடுக்க, ஏனோ இத்தனை
ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. அல்லது எடுத்த முயற்சிகள் வெற்றி காணவில்லை
என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது.
இனிமேலாவது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
உலகமயமாக்கலின்
பாகமாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானதால், உலக மொழியான ஆங்கிலத்தை
முறையாகக் கற்று, பேசவும், எழுதவும் வேண்டும். அதற்கு முதற்படியாக, ஆங்கில மொழியை முறையாகத் தொடக்கப்பள்ளி முதல் கற்பிக்க
வேண்டும். பிற மொழி கற்பதால், தாய் மொழி
கற்பதில் சிரமம் ஏற்படும் என்பதெல்லாம் வீண் வாதமே. இரண்டோ, மூன்றொ மொழிகளில்
குழந்தைகள் சிரமமின்றி பேச முடியும்.
உதாரணமாக, பீஹாரில், போத்கயாவில் பீடா விற்கும் லகன் எனும் 5 வயதுச்
சிறுவன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலமும், கொரிய மொழியும், ஜப்பான்
மொழியும் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறானாம். 6 வயது மோனு எனும் சிறுவன்
ஆங்கிலம், ஜப்பான் மொழி, திபெத் மொழி மற்றும் தாய்லாந்து மொழிகளில் பேசி
அவ்வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றானாம்.(!!) (பள்ளி செல்ல வேண்டிய இக்
குழந்தைகள் இப்படிப் பணம் சம்பாதிக்க வைப்பது குற்றம். விரைவில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள்
என்று நம்புவோம்.) இதிலிருந்து 5 அல்லது 6
வயது குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய விதத்தில் மொழிகளைக் கற்பித்தால், கற்கும்
சூழல்களை ஏற்படுத்தினால், அவர்கள் கற்பார்கள் என்பது உறுதியாகின்றது.
தொடரும் ...அடுத்த பதிவில் முடிகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர் விழாவிற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது. உங்கள் வருகையைப் பதிவு செய்யுங்கள். வர இயலவில்லை என்றாலும், வாழ்த்திவிட்டு, கையேட்டிற்கான விவரங்களையும், 20-09-2015 ற்குள் தயவாய் பதியுங்கள். உங்கள் விவரங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும், உங்களையும் பலரும் அறிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும். விழாவிற்கான வலைத்தளமாகிய இந்தத் தளத்தில் http://bloggersmeet2015.blogspot.com நிகழ்வுகள், தகவல்கள் அவ்வப்போது வெளியாவதால் அதைத் தொடருங்கள். தகவல்கள் அறிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கும், தகவல்கள் அறியவும், விவரங்கள் கொடுக்கவும், தங்கும் அறை தனியாக வேண்டும் என்றாலும் இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். bloggersmeet2015@gmail.com





