தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
திங்கள், 27 டிசம்பர், 2021
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 5
சனி, 18 டிசம்பர், 2021
திங்கள், 13 டிசம்பர், 2021
பாபு டாக்டர் - பகுதி 2
பாபு டாக்டர் - பகுதி 1
“ஏதோ பிரச்சனை. வாங்க” என்றார்
பதற்றத்துடன்.
இதில் முடித்திருந்தேன் பகுதி ஒன்றை. இதோ தொடர்கிறது இரண்டாவது பகுதி - நிறைவுப்பகுதி
வியாழன், 9 டிசம்பர், 2021
பாபு டாக்டர் - பகுதி 1
“சுருளிச்சாமி அண்ணே! இந்த ஐநூறு ரூபாயைப் பிடிங்க. நாளைக்கு ஒரு 300 ரூபா தாரேன். இந்த பெஞ்ச் இங்கயே இருக்கட்டும். கொஞ்ச நாள் கழிச்சுத்தான் கொண்டு போவேன்.” என்றபடி அழகுராசா என் கையில் திணிக்க வந்த 500 ரூபாய் நோட்டை வாங்காமலிருக்க கை விரல்களை விறைப்பாகப் பிடித்து இரண்டடி பின்னால் நடந்தேன்.
சனி, 4 டிசம்பர், 2021
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 3
அடுத்த
பதிவில் திருப்பதிசாரத்தின் கீழூர் மேலூர் பற்றியும், தேரேகால் எப்படி மரிந்து ஊருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது,
ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத்
தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட
படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்//
என்று
முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். இதோ மேலூர் கீழூர்.
செவ்வாய், 23 நவம்பர், 2021
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 2
சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 2
https://thillaiakathuchronicles.blogspot.com/2021/11/%20%20%20%20%20%20%20%20%201.html பகுதி 1
பகுதி 1ல் எங்கள் ஊரில் தண்ணீர் புகுந்ததைப் பற்றி எழுதத் தொடங்கினேன். அதன் படங்கள் மற்றும் காணொளிகளின் சுட்டி (துளசியின் தில்லைஅகத்து யுட்யூப் சானல்) சில இங்குப் பகிர்கிறேன்.
இன்னும்
பல படங்கள், காணொளிகள் இருப்பதால் பகுதி பகுதியாக இங்குப் பகிர்கிறேன்.
தேரேகால் வாய்க்கால் வீட்டின் எதிரே - நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளில் இடம் பெறும் பேர் பெற்ற தேரேகால் வாய்க்கால்
இதன் காணொளியின் சுட்டி இதோ
https://www.youtube.com/watch?v=dG9FB2KmEZQ
எங்கள் ஊரின் வழி செல்லும் தேரேகால் வாய்க்காலில் (அப்பா இருக்கும் (தம்பியின் வீடு - வீட்டிற்கு தொட்டடுத்து ஓடும் தேரேகால் வாய்க்காலில்) தண்ணீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறியதன் படங்கள் மற்றும் காணொளிகளை இங்குப் பகிர்ந்திருக்கிறேன். வீட்டிலிருந்து பார்த்தாலே தண்ணீர் வரத்து நன்றாகத் தெரியும்.
https://www.youtube.com/watch?v=_BNHjHliAXI
வீட்டின் எதிரே முன்பு சிறிய தாமரைக் குளமாக இருந்த பகுதி
கீழூர் வீடுகளின் பக்கவாட்டுப் பகுதியில் தேரேகால் தண்ணீர் வரத்து அதிகரித்து வீடுகளின் பின்பகுதி வழியும் புகுந்தது
திருப்பதிசாரம் கீழூர், மேலூர் விளக்கம் படங்களுடன் இனி வரும் பதிவுகளில். இரண்டிற்கும் நடுவில்தான் இந்த தேரேகால்.
அடுத்த
பதிவில் தேரேகால் எப்படி மரிந்து கீழூர், மேலூருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது,
ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத்
தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட
படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்.
இப்பதிவில்
அதிகம் எழுத இயலவில்லை. எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஊருக்குள் தண்ணீர் வந்ததற்கான
படங்களுடன் காரணங்களையும் ஏன் வாய்க்காலின் குறுக்கே உடைத்து விட வேண்டியதானது என்பதையும்
சொல்கிறேன்.
இந்தப்
பெருமழையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவை பயிர்கள்
– வயல், வாழை, ரப்பர் தோட்டங்கள். எங்கள் ஊரில்
வயல்களில் நாற்றுகள் பாதிக்கப்பட்டதால் நட்டம் என்று தெரிகிறது. செய்திகளிலும் பாதிக்கப்பட்ட
ஊர்கள் பட்டியலில் திருப்பதிசாரத்தின் பெயர் அடிபட்டதாகத் தெரிகிறது.
ஒட்டுமொத்தமாகச் சொல்லப்படும் கருத்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் சமீபகாலமாக நீர் நிலைகளும் அதன் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது/படுவது மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகள் என்பதுதான்.
அப்படிச் சொல்லப்படுவது சும்மா வாயளவில். வாய்ச்சொல்லில் வீரர்கள் அவ்வளவே. ஏனென்றால் நடைமுறையில் பூஜ்ஜியம். என்னதான் இவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் காரணத்திற்கு உரிய மக்கள் திருந்தப் போவதில்லை. திருந்தவும் மாட்டார்கள். ஆட்சியாளர்களும் அப்படியே.
குப்பைகளை வாய்க்காலில் கொட்டும் மக்களை என்ன
சொல்வீர்கள்? குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
ஏதேதோ காரணங்கள்….எனக்குப் புரியவில்லை.
நீரின்
பாய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகள் என்னை வருந்த வைக்கவில்லை. வைப்பதில்லை ஏனென்றால்
நாம் செய்யும் தவறுகளுக்கான பின்விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்!
சிறிய சிறிய காணொளிகள்தான். நேரம் இருந்தால் பாருங்கள்.
------------கீதா
வியாழன், 18 நவம்பர், 2021
பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 1
சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 1
பெங்களூரிலிருந்து
என் தாயக ஊராகிய நாகர்கோவிலுக்கு/திருவண்பரிசாரத்திற்குப் பயணம். கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம்
சென்று கடைசியில் திருப்பதிசாரத்திற்கு என்று திட்டமிட்டப் பயணம்.
பொதுவாகப்
பயணத்தின் தொடக்கத்திலிருந்து நம் அனுபவங்களைச் சொல்வோம். ஆனால் நான் பயணத்தின் கடைசிப் பகுதியிலிருந்து தொடங்குகிறேன்.
அதாவது திருவண்பரிசாரத்து அனுபவங்களிலிருந்து குறிப்பாகச் சாது பொங்கிய கதையிலிருந்து
தொடங்குகிறேன்.
சாது
என்பதற்கு அப்பாவி என்று ஒரு பொருள் உண்டு. அப்பாவியாக இருக்கும் ஒருவர் திடீரென்று
ஒரு நாள் பொங்கினால் அந்தத் தாக்கத்தை நம்மால் தாங்க இயலுமா?
சாது
- ஞானி/அறிஞர் என்ற பொருளும் உண்டு. ஒரு சாதுவைப் பழித்தால் பின்விளைவுகளை நாம் எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். போட்டுப் புரட்டித் தள்ளிவிடும்.
இங்கு
எதற்கு இதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாம். காரணம், என்னைப் பொருத்தவரை,
இயற்கையும் சாதுதான். நமக்குப் பல தத்துவங்களை, பாடங்களை, அறிவைப் புகட்டும் சாதுவும்
கூட.
இயற்கை
அமைதியாக இருக்கும் நேரத்தில் அது நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேதான் இருக்கிறது.
நாம் அதைக் கூர்ந்து நோக்கிப் படிக்கத் தவறி பழித்துப் பகைத்துக் கொள்ளும் போதும் கூட
அது தன் எச்சரிக்கையை ஓங்கி அறிவிக்கிறது. அதிலிருந்தும் நாம் பாடம் கற்கத்
தவறினால் நாம் அழிவை நோக்கி வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறோம், நம் அழிவு நிச்சயம்
என்பதையும் இப்போது எங்கள் நாஞ்சில் நாட்டில் ஏற்பட்ட தண்ணீரின் பாய்ச்சல் சொல்லிச்
சென்றிருக்கிறது.
தொடர்
மழையில் எங்கள் ஊர்ப் பகுதி ஆறுகள், குளங்கள் உடைந்து தண்ணீர்ப் பாய்ச்சலை நாங்கள் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியிருக்கிறோம். பயந்ததில்லை. பழித்ததில்லை. ஆனால் சென்ற முறையும், இம்முறையும் எச்சரிக்கை
மணியை பலமாக அடித்து எதிர்காலத்தின் பயத்தை எங்களுக்குள் விதைத்துவிட்டுச் சென்றுள்ளது.
இதைத்
தான் கல்கி இதழ் நடத்திய போட்டிக்கு நான் எழுதிய கதையில் மறைமுகமாகச் சொல்லியிருந்தேன்.
அது எபி யில் வெளிவந்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால் அதுதான் இப்போது நடந்துள்ளது.
இயற்கையின்
நீதிமன்றம், நம் நீதிமன்றம் போன்றதல்ல. அதன் நீதிமன்றத்தில் பணமோ, சட்டத்தின் பொத்தல்களோ
பயன்படுத்தித் திறமையாக வாதிட்டு வெல்ல முடியாது. நீதியை மாற்ற முடியாது. இயற்கை தேவதை
தன் கண்களைக் கட்டிக் கொள்ள மாட்டாள்.
இயற்கையைப்
பழித்து, அதற்கு எதிராக, அதன் வழித்தடத்தை நாம் மாற்ற நினைத்து அதன் வழியில் நாம் எதிர்த்து
நின்றால் அழிவு, மரணம் நிச்சயம் என்பதை நம் அரசிற்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும்
தற்போதைய நாஞ்சில் நாட்டு தண்ணீரின் பாய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை சுட்டிக்
காட்டி வலியுறுத்துகிறேன்.
கன்னியாகுமரி
மாவட்டம் கேரளமா, தமிழ்நாடா என்ற குழப்பம் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது போலும்!
கவனிக்கப்படாத மாவட்டம். அவர்கள் இதைக் கவனிப்பார்களா என்று தெரியவில்லை. என்றாலும்
கவனிக்கக் கோரிக்கை விடுத்து, எங்கள் கிராமமும் சுற்றியுள்ள கிராமங்களையும் அமைப்பையும்,
காரணங்களையும் அனுபவங்களையும் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.
நன்றாகக்
கவனியுங்கள், நான் ‘வெள்ளம்’ என்று சொல்லவில்லை. தண்ணீரின் பாய்ச்சல் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
தண்ணீரின் பாய்ச்சலை வெள்ளமாக மாற்றிவிடாதீர்கள். அதைப் பின்வரும் பதிவுகளில் நீங்கள்
புரிந்துகொள்வீர்கள்.
அதுவரை,
எங்கள் ஊர் மாறிவிடும் முன் தற்போதைய இப்படங்களைப் பார்த்துக் கொஞ்சம் சந்தோஷப்படுங்கள்.
இயற்கையோடு ஒன்றுங்கள். (எபியில் ஞாயிறுகளில் எங்கள் ஊர்ப் பகுதி படங்கள் வருகிறதே!!!!)
புதன், 20 அக்டோபர், 2021
மகன்தாய்க்கு ஆற்றும் உதவி – சியமளா மாமியின் கதை; மாமியார் மெச்சிய மருமகள்
மகன்தாய்க்கு ஆற்றும்
உதவி……
முதியவர். முதுமையை எளிதாகக் கடப்பது என்பது எளிதல்ல. அதுவும்
90 வயதைக் கடந்தவரை, சுய நினைவுடன் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவரது உடல்நலத்தைப் பேணிக் கவனித்துக் கொளல் என்பது சாதாரண காரியமல்ல.
96 வயதான அம்மாவை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும், அதுவும்
இந்தக் கோவிட் சமயத்தில் என்பதற்கு அரிதான முன்னுதாரணமானவர்களில்
ஒருவர்.
தன் தேவைகளைச் சுருக்கி,
வயதான அம்மாவின் கோணத்திலிருந்து ஒவ்வொன்றையும் சிந்தித்து அதை ஒட்டியே தன் பணிகளை
மேற்கொண்டு அம்மாவின் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப அம்மாவின் சௌகரியத்திற்கேற்ப, அம்மாவின் செயல்களை, நித்தியக் கடமைகளை எளிதாக்கிக் கொடுத்தும், உதவியும்
பார்த்துக் கொண்டார் அந்த அம்மாவின் கடைசி மகன் தன் முதுகுவடத்தின் வால் பகுதிப் பிரச்சனையினால் ஏற்பட்ட இடுப்பு, முதுகுவலியினிடையில். அம்மாவிற்கு எப்படிச் செய்தால் அவருக்குப் பாதிப்பு இருக்காது, சௌகரியமாக இருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப பல விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்.
அம்மாவின் வயதிற்கான சிறிய பயிற்சிகள், கூடியவரை தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கான உதவி மற்றும் பயிற்சி,
நினைவுத்திறன் அதிகம் மங்கிவிடாமல் இருக்க சில பயிற்சிகள் (வாசிக்க வைத்தல், அவ்வப்போது
கேள்விகள் கேட்டல், உறவினர் பெயர்கள் கேட்டல், அன்று அவர் சாப்பிட்ட உணவு, டிவி நிகழ்ச்சி
பற்றி என்று), உணவைக் கூடத் தன் விருப்பம் பார்க்காமல் அம்மாவுக்கு ஏற்ற உணவு செய்தது உட்பட.
வயதான காரணத்தினால் அம்மா இயற்கை உபாதை கழிக்கச் சிரமப்பட்ட போது அருவருப்பு பாராமல், அம்மா கிரமப்படாமல் இயற்கை உபாதை கழிக்க உதவியது; வாக்கர் அல்லது சக்கரநாற்காலி உதவியுடன் வீட்டில் கைத்தாங்கலாய் வளைய வர வைத்தது; அம்மாவின் செவித்திறனுக்கேற்ப எழுதிக் காட்டி, அருகில் இருந்து ஒவ்வொரு தேவையையும், சிறு சிறு தேவையையும் கூடக் கவனித்து மிகவும் பொறுமையுடன் பதிலளித்து, அன்புடன் கவனித்துக் கொண்டது; எல்லாம் மிகையல்ல. இப்படிச் செய்பவர்கள் அரிதானவர்கள்! அந்த அரிதானவர்களில் ஒருவராய்...
எனது கடைசி மைத்துனர்!
மகன்தாய்க்கு ஆற்றும்
உதவி இவன்தாய்
என்நோற்றாள் கொல்எனும்
சொல்.
சியமளா மாமி எழுதிய கதை: மாமியார் மெச்சிய மருமகள்
மாமியைப் பற்றி: மாமியும் அவரது குடும்பமும் எங்களுக்குத் திருவனந்தபுரத்திலிருந்த போது மலர்ந்த நட்பு. நாங்கள் தாமசமிருந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்கள். மாடியில் மாமியின்
குடும்பம். கணவர், இரு மகன்கள், ஒரு பெண். பெரிய மகன் அப்போது மருத்துவப் படிப்பில்
ஹவுஸ் சர்ஜனாக இருந்தார். இரண்டாவது மகன் பொறியியல் படிப்பிலும், மகள் வேளாண்மைக் கல்லூரியிலும்
படித்து வந்தனர்.
என் மகன் அப்போது ஒன்றே
கால் வயதிற்குள்தான். இவர்கள் அனைவருக்கும்
செல்லப் பிள்ளை.
தற்போது மாமியின் பெரிய மகன் திருவனந்தபுரத்தில், அரசுமருத்துவமனையில் ஆர்த்தோ சர்ஜன். இரண்டாவது மகன் அமெரிக்காவில். மகள் இங்கு இருக்கிறார். மாமா தற்போது மகளுடன். அனைவருமே எங்கள் நலம்விரும்பிகள்.
மாமி இறைவனடி சேர்ந்து
1 ½ வருடங்கள் ஆகிறது. மாமி கற்பனை வளம் உள்ளவர். தன் ஆத்ம திருப்திக்கு அவ்வப்போது
எழுதுவதை என்னிடம் சொல்லிக் காட்டுவார். தற்போது அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த போது
அவரிடம் இருந்த சில கதைகளைக் கொண்டுவந்தேன். மீதி சென்னையில் இருக்கிறது.
மாமி, எழுத்தாளர் தேவனின்
விசிறி. சாம்பு கேரக்டரை மிக மிக ரசித்தவர் என்பது அவர் கதைகளில் தெரிகிறது. அதையொத்த கதைகள் சிறிய சிறிய கதைகளாகச்
சில எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று இங்கு.
மற்றவை பிறிதொரு சமயம்.
மாமியார் மெச்சிய மருமகள்
போலீஸ் ஸ்டேஷனில் இருந்த
இன்ஸ்பெக்டர் சந்தானத்தை நோக்கி ஒடி வந்தார், ஊரே மூக்கில் விரல் வைக்கும் கிரிமினல்
வக்கீல் வரதராஜன்.
“உட்காருமய்யா. என்ன
மூச்சிறைக்க ஒடி வருகிறீர்”
“ஸார், நான் என் வீட்டிலேயே
ட்ராயரில் வைத்திருந்த 4 லட்சம் ரூபா எங்க போச்சு, எப்படிப் போச்சுன்னு தெரியலையே!
அதான் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.”
“உமக்கே தெரியலையா!?
யாரெல்லாம் வந்தா உங்களைப் பார்க்க”
“மதுரையிலருந்து சாம்பமூர்த்தி,
ஒரு கேஸ் விஷயமா வந்திருந்தார். அப்புறம்…அதுதான்…எதிர்க்கட்சி அம்மா அடிதடி விஷயமா
கேஸ் எடுத்துண்டு வந்தா. இப்படி 5,6 பேர் வந்தா. யார் மேல எப்படிக் குற்றம் சாட்டறது?
புரியலை. அதான் உங்ககிட்ட கேஸ் கொடுத்துட்டுப் போகலாம்னு….”
இன்ஸ்பெக்டர் சந்தானம்
ஆட்களை விட்டு வக்கீல் சொன்ன ஆட்களைச் சல்லடை போட்டு விசாரித்துக் குழம்பி நின்றார்.
அவர்களுக்கு எப்போதும் ஆபத்பாந்தவன் விச்சு
தானே! உடனே அவரைப் பார்க்கக் கிளம்பினார்.
விபரத்தைக் விச்சுவிடம்
சொன்னார். விச்சு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
“என்ன ஓய் விச்சு! உமக்கு
இந்த கேஸ்ல ஏதாவது பிடி கிடைத்ததா” என்றார் சந்தானம்.
அப்போது ரேடியோவில்
‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்திலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
விச்சு உள்ளே பார்த்து,
“சச்சு, அந்த ‘மாமியார்
மெச்சிய மருமகளை’ உரக்க வை” என்றார்.
உடனே சந்தானம், “என்ன
விச்சு? நேரடியாய் சொல்ல மாட்டீரோ? இப்போதே வரதராஜன் வீட்டிற்குப் போய் விசாரிக்கிறேன்”
எனப் புறப்பட்டார்.
வரதராஜன் வீட்டில் அவர்
மனைவியையும், அம்மாவையும் தனித்தனியாக விசாரித்தார்.
“இத்தனைப் பேர் வந்து
போற இடத்துல 4 லட்ச ரூபாயை ட்ராயர்ல பூட்டாம வைச்சுட்டுப் போனவரைக் கண்டிக்கணும்னு
நான்தான் அதை எடுத்து என் மாமியார்கிட்ட கொடுத்தேன்.” – மருமகள்.
மாமியாரும் மருமகளை மெச்சி
லாக்கரில் வைத்திருக்கிறாள். இதை அறியாத அந்த வக்கீல் பதறிப் போய் கேஸ் கொடுத்திருக்கிறார்.
‘விச்சுவுக்கு இதெல்லாம்
எப்படிச் சட்டென உதித்ததோ’ இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கு ஆச்சரியம். விச்சுவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர்
சந்தானம்.
‘எதற்கு இந்த இன்ஸ்பெக்டர்
நன்றி சொல்கிறார்?’ எனத் தெரியாமல் முழி முழின்னு முழித்துக் கொண்டிருந்தார் விச்சு! - ஷியாமளா (13-6-2010)
செவ்வாய், 12 அக்டோபர், 2021
அனுகூல்-ANUKUL
அனுகூல். நான் ரசித்துப் பார்த ஒரு குறும்படம். அதைப் பற்றிச் சொல்லும் முன் கொஞ்சம் கதைத்தல்.
நான் ஏற்கனவே இயற்கை வலியது என்ற கதையை எழுதிய போது (எபி யில் வந்தது) அப்போது இந்தப் படம் கண்ணில் படவில்லை. அக்கதை எழுதிய
பின் மேலும் சில கற்பனைகள் மனதில் ஓடியதை வைத்து
எழுதத் தொடங்கிய ஒரு கதை அப்படியே ப்ரேக் போட்டு நிற்கிறது.
செயற்கை
நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) குறித்து கொஞ்சம் தரவுகள், புதிய ஆய்வுகள்
என்று எடுக்க அவ்வப்போது இணையத்தில் தேடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன் அப்படித் தேடிய
சமயம் கிடைத்த குறும்படம்தான் இந்த அனுகூல்.
சத்யஜித்ரே
1976ல் எழுதிய அனுகூல் எனும் சிறுகதையைத் தழுவி படத்தை இயக்கியவர் சுஜாய் கோஷ்.
2017 ல் வெளிவந்திருக்கிறது.
படம்
பார்த்ததும் கதையின் மூல வடிவம் கிடைக்கிறதா என்று தேடினால் பெங்காலியில்தான் கிடைத்ததே
அல்லாமல் ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ கூடக் கிடைக்கவில்லை.
இதைப்
பற்றி நான் எழுதத் தொடங்கிய சமயம், பானுக்கா, தான் ரசித்த கதை என்று 2003 ல் சுஜாதா
எழுதிய “ரிசப்ஷன் 2010” கதையைப் பற்றி எழுதியிருந்தது எபியில் சனிக்கிழமை அன்று வந்திருந்தது.
அதில் மனிதர்களைப் போலவே வித்தியாசம் தெரியாமல் இயந்திர மனிதர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள்
என்று வரும். நான் பதிவு எழுதத் தொடங்கியிருந்ததால் அனுகூல் பற்றி நான் கருத்தில் எதுவும்
சொல்லவில்லை.
மனித
வாழ்க்கைக்குள் இயந்திர மனிதர்கள் புகுந்துவிட்டால் விளைவுகள் என்ன? ஃபிக்ஷனாக 1976ல்
அனுகூல் கதையில் சொல்லியிருக்கிறார் சத்யஜித்ரே. ஆனால் இப்போது அது சாத்தியமாகி வந்து கொண்டிருக்கிறது.
அவருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி மிகுந்த
ஆர்வம் உண்டாம். அதனால் அதைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய வாசித்ததாகத் தெரிகிறது.
கதை
இதுதான்…
https://www.youtube.com/watch?v=J2mqIgdae5I
ஒரு
ஹிந்தி ஆசிரியர் தனக்கு உதவிக்காக ரோபோ ஒன்றை வாடகைக்கு எடுக்கிறார். ரோபோவின் பெயர்
அனுகூல். இப்போதெல்லாம் வீட்டு வேலை, பிற வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜன் போன்று
ரோபோவை வாடகைக்கு விடுபவர் சொல்வார், எல்லா
நாளும் அனுகூல் வேலை செய்வார், கூடுதல் மணிநேரம் வேலை செய்வதற்கு மேலதிகப் பணம் கொடுக்கத்
தேவையில்லை என்று. ஆனால் மனிதர்களை வாடகைக்கு
விடும் ஏஜண்டுகள் அப்படிச் சொல்வதில்லையே! எனவே வீட்டு வேலைகளுக்கு படத்தில் சொல்வது
போல் வரும் காலம் அருகில்தான்.
அனுகூல்
இவரது வீட்டிற்கு வந்து உதவி செய்கிறார்/து. நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து
ஆர்வம் பெற்று வாசிக்கத் தொடங்குகிறார்/து.
ஆசிரியரும் அனுகூலும் நல்ல புரிதலில் இயங்குகிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு
பிணைப்பே ஏற்படுகிறது!!!!
ஒரு
நாள் ஆசிரியரின் சித்தப்பா/பெரியப்பா மகன் வீட்டிற்கு வருகிறார். தனக்கு ரோபோவின் வருகையால்
வேலை போனதாகச் சொல்கிறார். அப்போது ஆசிரியரின் உத்தரவுப் படி அனுகூல் அங்கு தேநீர்
கொண்டுவர அனுகூல் ரோபோ என்று தெரிந்ததும் சகோதரருக்குக் கோபம் வருகிறது. வீட்டிற்குள் செல்பவர் அனுகூல் துணி தேய்த்துக் கொண்டிருந்த
போது அந்த இஸ்திரிப் பெட்டியாலேயே அனுகூலைத் தாக்குகிறார். அனுகூல் செயலிழந்துவிடுகிறார்/து.
சேவையாளர்
வந்து அனுகூலை உயிர்ப்பிக்கிறார். (இதன் அடிப்படையில் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது.
அதுவும் நான் ஆஇ ஒட்டி எழுதும, இப்போது ப்ரேக் போட்டு இருக்கும் கதையில்)
“இந்த
முறை அனுகூல் எதுவும் செய்யவில்லை அதனால் உங்கள் சகோதரர் தப்பித்தார். இனி அவர் மீண்டும்
தாக்கினால் அனுகூல் சும்மா இருக்கமாட்டார் எலக்ட்ரோ சார்ஜ் செய்துவிடுவார்” என்று எச்சரிக்கை
செய்துவிட்டுப் போகிறார்.
இரவு
ஆசிரியர் தூக்கம் வராமல் நடந்து கொண்டிருக்க, அறையில் அனுகூல் புத்தகம் வாசிப்பதைப்
பார்க்கிறார். அனுகூல், ஆசிரியரிடம் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, தனக்குத் தூக்கம்
வரவில்லை என்று சொல்லி விட்டு, “நீ தூங்கவில்லையா” என்று கேட்க அனுகூல் சொல்கிறார்/து
“எனக்குத் தூக்கம் ஏது?” என்று
அனுகூல்
தான் பகவத் கீதை வாசிப்பதாகவும் புரியவில்லை என்று சொன்னதும் ஆசிரியர், “நீ எனக்கு
தினமும் உதவுகிறாய். இன்று நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொல்லி “உனக்கு என்ன புரியவில்லை?
கேள்” என்று சொல்லி உரையாடுகிறார். ஆசிரியர் அனுகூல் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்
சொல்கிறார்.
இதை
நான் இங்கு சொல்வதை விடப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். மிக மிக அழகான காட்சி.
சிந்திக்க வைத்த உரையாடல்கள்.
உரையாடலின்
இடையே அனுகூல் கேட்பார்/கும்
“யார்
இந்த நீலமனிதர்”
“பகவான்
கிருஷ்ணர்” - ஆசிரியர்.
“ஏன்
அவர் நீலமாக இருக்கிறார்?”
ஆசிரியர்,
கிருஷ்ணர் நீலமாக இருப்பதற்கான, விஷம் குடித்த கதையைச் சுருக்கமாகச் சொன்னதும்,
“அவர் இறக்கவில்லையா?” என்று கேட்கிறது அனுகூல்.
“அவர்
பகவான். எப்படி இறப்பார்?” என்று ஆசிரியர் சொன்னதும், உடனே அனுகூல் சொல்கிறார்/து
“நானும்
இறக்க முடியாது” என்று!!!!!
ஆசிரியர்
கொஞ்சம் ஜெர்க் ஆகி, “இல்லை அது வெவ்வேறு விஷயங்கள். அதை விடு, உனக்கு கீதையில் என்ன
புரியவில்லை அதைச் சொல்” என்று சொல்லி தர்மம், கடமை என்பதை பற்றி அனுகூல் கேட்க ஆசிரியர்
பதில் சொல்கிறார்.
சரி
எது தவறு எது, நியாயம் இதெல்லாம் எப்படி முடிவு செய்யப்படும் என்று அனுகூல் கேட்க ஆசிரியர்
நெஞ்சைத் தொட்டு, “மனசாட்சி” என்று சொல்லும் போது அனுகூலும் தன் நெஞ்சில் கை வைத்துப்
பார்த்துக் கொள்ளும்.
இதன்
அர்த்தம் படத்தின் முடிவில் உங்களுக்குப் புரியும்.
இதைப்
பார்க்கும் போது கிட்டத்தட்ட மனித மூளைக்கு நிகரான இயந்திர மனிதன் என்பது புரிகிறது.
இப்போது இந்தக் கதையில் வரும் அனுகூல் போல கிட்டத்தட்ட வந்தாயிற்று. அனுகூல் போலவே விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.
இதோ
கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள். சவுதி அரேபியாவின் குடியுரிமை (சிட்டிசன்ஷிப்) பெற்ற
சோஃபியாவைச் சந்தியுங்கள். (ஏன் பெண்? பெண் ரோபோதான் ஈர்க்கும் என்றோ?!!)
https://www.youtube.com/watch?v=uDoBKpTckuU
மனிதனுக்கும்,
மனிதனால் உருவாக்கப்படும் ரோபோவுக்கும் உள்ள வேறுபாடுகள் மனிதனுக்கு இருக்கும் சுய
சிந்தனை, இரக்கம், வருத்தம், ஆசாபாசங்கள் போன்ற நுண்ணுணர்வுகள். இவை எல்லாம் ரோபோவுக்குள்
சில்லு சில்லுகளாய் நிறுவப்பட்டால், ரோபோக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், அப்படி
மனித மூளைக்கு நிகராகச் சிந்தித்து முடிவு எடுக்கத் தொடங்கினால்? என்னாகும்? மனிதன்
தன் சுயநலத் தேவைக்கு ஏற்ப ரோபோவை வடிவமைத்தால்…? உலகம் ரோபோ உலகமாகிவிடும் அபாயம்
இருக்கிறதோ?
Artificial
Intelligence is the manifestation of the failure of humanity to understand
natural intelligence. It is going to snatch away the nature from everybody’s
life, in second by second basis and is designed to swallow humans from nature
forever. Nature wins!
-------கீதா
வியாழன், 7 அக்டோபர், 2021
நினைவோ, ஒரு பறவை…
நினைவுகள் பின்னிலிருந்து தள்ள கனவுகள் முன்பிருந்து இழுக்க, இப்படியாகத்தானே நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒவ்வொரு சூழலிலும் நாம் இறையருளால் கவனமாக இருந்து செயல்பட்டு ஓரளவு சுகமாக வாழ்கிறோம், எழுதுகிறோம், வாசிக்கிறோம் என்பது இதை எழுதும் போது எனக்கும், வாசிக்கும் போது உங்களுக்கும் உறுதியாகியிருக்கும்தானே. இது போல் எப்போதும் இறையருளால் கனவு நனவாகும் நிகழ்காலமும், நிகழ்வு நினைவாகவிருக்கும் நினைவுக்காலமும் நமக்குத் துணையாகட்டும்.
இருந்தாலும்
இளமையில் கனவுகளுக்கு இருந்த வேகமும் வித்தியாசமான தோற்றமும் முதுமையை நெருங்கும் போது
இருப்பதில்லை. ஆனால் எப்படியோ நம் வாழ்க்கை ஓடத்தின் சீரான பயணத்தை நினைவுக்காற்று
தேவையான நேரத்தில், தேவையான அளவு வீசி எளிமையும் இனிமையும் ஆக்கி விடுகிறது. சிறகு
விரித்துப் பறக்கும் எண்ணங்கள் அப்படி 40 க்கும் 50க்கும் மேல் வயது ஏற ஏற நெல்லிக்கனியாய்
இனிக்கிறது.
எங்கள்
ப்ளாகில் வெள்ளி தோறும் ஒவ்வொருகாலகட்ட பாடல்களை, தான் ரசித்த பாடல்களை மையமாகக் கொண்டு அவற்றைப் பற்றிய விவரங்களுடன்
ஸ்ரீராம்ஜி எழுதும் போதெல்லாம் அவர் பதிவுகள் எனக்குப் பல நினைவுகளை எழுப்பிவிடுவதுண்டு.
ஆனால் அவற்றை அங்கு கருத்தில் பகிர்ந்ததில்லை. பதிவு போன்றதாகிவிடுமே என்ற காரணத்தினால்.
பதிவு எழுதும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று ஓரிருவரிகளில் சொல்லிச் செல்வதுண்டு.
நானும் கீதாவும் அவை தொடர்பான எங்கள் அனுபவங்கள், நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுண்டு.
ஆனால், பதிவு எழுத முடியாமல் போனது. இனி அதையும் எழுத முயற்சி.
இங்கு
தேவைப்படுவதெல்லாம் நேரமும் சூழலும் தான்.
அப்படிப்பட்ட நேரமும் சூழலும் சில நாட்களுக்கு முன் அதிர்ஷ்டவசமாக எனக்குக்
கிடைத்தது. க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டி (Quarantine from Reality) சுபஸ்ரீ தணிகாச்சலம்
தன் தொடரில் அப்படியான ஒரு பாடலைக் கடந்த வருடம் பகிர்ந்திருந்தது இப்போதுதான் என்
கண்ணில் பட்டது. என்ன செய்ய? கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் ஒரு வருடம்
அதுவும் இந்த கோவிட் நாட்களில் போனது பேரிழப்புதான்.
எங்கள் ப்ளாகில் அருமையாக எழுத்தில் பதிவது போல், QFR ல் சுபஸ்ரீயும் பாடல், ராகம், பாடகர்கள் மற்றும்
இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தல் என்று அருமையாக க்வாரண்டைன் ஃப்ரம்
ரியாலிட்டியை (QFR) கொண்டு செல்கிறார். அதில் நான் கேட்ட பாடல் ‘பிரியா’ படத்தில்
‘ஹே பாடல் ஒன்று’. இசை ஞானியின் இசையமைப்பில் பஞ்சு ஐயா எழுதி கான கந்தர்வன் ஏசுதாசும்,
இசைக்குயில் ஜானகி அம்மாவும் பாடியது. ஒரு கவிதையை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்குவது
போல் அருமையான ஒரு விளக்கம் வேறு சுபஸ்ரீயிடமிருந்து. கூடவே அந்தப் பாடலுடன் தொடர்புள்ள
நிகழ்வுகளையும் தருவது அருமை. இப்படிப் பாடல் கேட்கும் போதெல்லாம் கவிதை வரிகளும் குரல்களின்
இனிமையும், கூடவே, ரஜனியும் ஸ்ரீதேவியும் மனதில் வருவது வழக்கம்தான்.
கேரளாவில்
இருக்கும் எனக்கு இதெல்லாம் எப்போதாவது நிகழும் நிகழ்வுதான் பெரும்பாலும். அதனால் அப்போதெல்லாம்
அப்பாடல் இடம் பெற்ற படமும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் வந்து நீண்ட நேரம் நினைவுகளில்
பயணிக்க வைக்கும்.
ஆனால்
சுபஸ்ரீயின் விளக்கமும், சிவாவின் எடிட்டிங்கும், புதிய இளம் பாடகர்களின் குரலும்,
இசைக்கருவிகளைக் கையாளும் மாயாஜாலக்காரர்களின் மந்திர விரல்களும் ஒரு புது உலகத்தையே
என்னைப் போன்றவர்களுக்குக் காட்டித் தந்தது.
இது அவரால் மட்டும்தான் முடியும். (கீதா சொல்லி சுபஸ்ரீயைப் பற்றி அதிகம் தெரிந்து
கொண்டேன்). இதெல்லாம் தமிழுக்காகத் தமிழ் உள்ளங்களால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்று.
அவரது சேவை தொடரட்டும். புகழ் ஓங்கட்டும்.
இந்த
“ஹே பாடல் ஒன்று’ பாடல் என் நினைவுச் சிறகை விரிக்க வைத்தது. என்னை என் வாழ்வின்
1978, 1979க்குக் கொண்டு சென்று என்னை இன்ப வானில் பறக்கச் செய்ததை சொல்லத்தான் இந்தப்
பதிவு.
போடிநாயக்கனூர்
சிபிஏ (CPA) கல்லூரியில் பியுசி படித்த காலம். செனட்ரல் தியேட்டரில் படம் பார்த்து
நண்பர்களுடன் நடந்து, பரமசிவன் கோவில் மலை அருகேயுள்ள கல்லூரி விடுதிக்குச் சென்ற நாட்கள்.
எங்களில் இனிமையாகப் பாடும் மீனாட்சிபுரம் முருகேசின் குரலில் இப்பாடல் ஒலிப்பதை இப்போதும்
உணரமுடிகிறது.
கல்லூரி
உதவிப் பேராசிரியரும், விடுதி வார்டனுமான முருகானந்தன் சாரின் அன்பான, ஆறுதலான வார்த்தைகள்.
அதையெல்லாம் அப்போது புரிந்து கொள்ளாமல் அவருடன் விரோதித்துக் கொண்ட நாட்கள். அதன்பின்
பலமுறை என் ஆசிரியப் பணியிடையே, பல மாணவர்கள் சீறும் போது, ‘அன்று முருகானந்தம் சார்.
இன்று நான்’ என்று எண்ணி சிரித்து, என் சீற்றத்தைத் தவிர்த்ததுண்டு.
எப்போது
சிபிஏ (CPA) கல்லூரி நாட்கள் நினைவுகள் வந்தாலும் அதனுடன் வருசநாடு சேகர் நினைவுக்கு
வருவதுண்டு. எப்போதும் சந்தோஷமாக, எதைப்பற்றியும் வருந்தாமல் இருக்கும் சேகர். வெளிப்படையாகப் பேசுபவர். குற்றம் காணும் போது அதைச்
சுட்டியும் காட்டுவார். ஒரு பையன் ஷோலே என்பதற்குப் பதிலாக ஜோலே என்ற போது யாருக்குமே
புரியவில்லை. சேகர், “ஓ ஷோலே படத்தைப் பத்தியா சொல்ற? ஒன்னு சரியா ஷோலேன்னு சொல்லு இல்லேன்னா அட்லீஸ்ட் சோலே ன்னாவது சொல்லு.
பியுசி படிக்கிற நீ இனி இப்படிச் சொல்லாதே” என்றது இப்போதும் நினைவில் பசுமையாய் வந்து
சிரிக்க வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. தவறை தவறென்று சொல்லி திருந்தச் செய்யும்
மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?
“பியுசி
படிக்கிறதில 5 பேர் மட்டும்தான் பாஸாக வாய்ப்பு. பாக்கி எல்லாம் சும்மா, இந்த நான்
உட்பட” என்ற சேகரின் வார்த்தை உண்மையானது. இதைவிட ஆச்சரியம் ஒரு முறை சேகர் எழுதிய
ஒரு கதையை எனக்குக் காண்பித்ததுதான். முதல் வரியே “நான் ஒரு நாற்காலியில் சாய்த்து
வைக்கப்பட்டிருக்கிறேன். என் முன் பத்திக் குச்சிகளிலிருந்து வரும் மணமுள்ள புகை. என்
முன் எல்லோரும் அழுது கொண்டும், தேம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்” என்ற வரிகள். நான்
அதிர்ந்தே போனேன்.
சிரித்த
சேகர், “இதும் நடக்கப் போற ஒன்னுதான்”. என்றதும்,
அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி சமாதானப்படுத்தினாலும், சேகரின் பக்கத்து
ஊர் பழனிச்சாமி, “சேகர் இதுக்கு முன்னாடி ஒரு தடவ தற்கொலை முயற்சி செய்திருக்கான்”
என்று சொன்னது எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது. பியுசி ஒரு வருடம் தான். பிரிந்த நாங்கள்
எல்லோரும் பல வழிகளில் பயணித்தோம்.
சில
வருடங்களுக்குப் பின் தேனி பேருந்து நிலையத்தில் பழனிச்சாமியைச் சந்திக்க நேர்ந்த போது,
பலதும் பேசினோம். அப்போது நான் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். பேச்சினிடையே
பேரிடியாய், “சேகர், போனவருடம் தற்கொலை செய்து கொண்டான்” என்ற செய்தி. அதன் பின் இன்று
வரை எப்போதெல்லாம் என் வாழ்வில் என் சிபிஏ(CPA) கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வந்தாலும்
முருகானந்தம் சாருடன் சேகரின் நினைவும் வரும்.
மரணத்தை
விரும்பிய சேகர். மரணத்தை மணந்து பிணக்கோலமாய் அமர்வதைக் கதையாய் எழுதிக் காத்திருந்த
சேகர். காரணம் கேட்ட போதெல்லாம் சிரித்து மழுப்பிய சேகர், கூடாது என்று அறிவுரை சொன்ன
போதெல்லாம் “அதெல்லாம் நான் சும்மா சொல்றது” என்று விசயம் மாற்றிய சேகர். நாற்பது வருடங்கள்
கடந்தாலும், நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு வலி.
இனிய
நினைவுகளுடன் நமக்கு வேதனை தந்த/தரும் நினைவுகளும் வருவது இயல்புதானே. “பிரியா” படம்
பார்க்கப் போன போது சேகரும் எங்களுடன் வந்திருந்தார். இந்தப் பாடலைக் கேட்டதும் என்
மனம் அந்த நாட்களை வட்டமிட்டது. இப்போதும் புரிந்துகொள்ள முடியாத டீன் ஏஜ் மனதை எனக்கு
நினைவூட்டியது.
பயமறியாத
காலம். ஓடும் பாம்பினை மிதிக்கத் தூண்டும் மனதைத் தரும் பருவ்ம். தவறை தவறென்று யார்
சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத பருவம். எல்லோரும் அல்ல, சிலர். இப்படி சில அல்லது
பல பாடல்கள், தொடர்புடைய ஏதேனும் பொக்கிஷம் போன்ற நிகழ்வு, நினைவுகள், நாட்கள் உங்களுக்கும்
நினைவுக்கு வரலாம். பகிர்ந்து கொள்ளுங்கள். வேதனயான நிகழ்வுகள் என்றால், பகிர்ந்தால் அந்த வேதனையே
பாதியாகும். இன்பத்தைப் பகிர்ந்தால் இன்பம் இருமடங்கு இன்பமாகும்.
-----துளசிதரன்
வெள்ளி, 17 செப்டம்பர், 2021
ஊஞ்சலாடும் எண்ணங்கள்
ஊஞ்சலாடும் எண்ணங்கள்
“குட்டி! நீ தமிழிலு எழுத்து
எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா?” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா?) மலையாள பூமியில் இருக்கும் என் அன்புத் தங்கையின் வாட்சப் கேள்வி.
என்ன இது சம்பந்தமே இல்லாமல்
இப்படி ஒரு கேள்வி? ஏதோ உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவையாய்
என்னவோ எழுதுகிறேன் என்பதற்காக நான் என்னவோ தமிழ் இலக்கியத்தையே
கரைத்துக் குடித்தவள் போல இப்படி ஒரு கேள்வி.
விளித்தேன். என்ன என்று கேட்டேன்.
“ஓஃபீஸ்ல, ஃப்ரென்ட், சம்சாரிச்சிட்டிருந்தப்ப புறநானூறுல ஒரு பாட்டு சொல்லி கேட்டப்போ, எனக்கு ஓர்மையில்லை. நீ தமிழிலு எழுதறியேன்னு உங்கிட்ட கேட்டுச் சொல்லலாமேன்னு…”
அவள் சொன்ன ஓரிரு சொற்கள் - புலவர்கள், வறுமை, பரிசில் - கொண்டு கூகுள் களஞ்சிய அலமாறியை, பக்கங்களைப் புரட்டோ புரட்டு என்று புரட்டினேன். புறநானூற்றுப் பாடல்களில் புலவர்கள் தங்கள் வறுமையைச் சொற்களில் தோய்த்து எழுதியிருந்தது தெரியவந்தது. நான் பாடல்களை இங்கு குறிப்பிடவில்லை. கருத்துகள் மற்றும் அதோடு எழுந்த என் கோக்கு மாக்கு கற்பனை மட்டும்.
முற்காலத்தில் புலவர்கள் வறுமையில் வாழ்ந்ததாகப் பல செய்யுள்கள் சொல்கின்றன. சில புலவர்கள் மன்னர்களைச் சும்மானாலும் புகழ்ந்து பாடி, “ஏதேனும் கொடப்பா” என்று பரிசில்கள் வாங்கிச் சென்றதாக எதிலோ வாசித்த நினைவு.
பரிசில்கள் கிடைக்கவில்லை
என்றால் மன்னரைத் தூற்றிப் பாடிய புலவர்களும் உண்டாம். பின்ன கஷ்டப்பட்டு ஏதோ கிடைக்குமே என்று புகழ்ந்து பாடியும் பேமென்ட் கிடைக்கலைனா வீட்டம்மாகிட்ட வசை வாங்கணுமே!
பெருஞ்சித்திரனார்
எனும் புலவர் தான் இயற்றிய பாடலைப் பெரும் வள்ளலான அதியமானைத்
தேடிச் சென்ற போது அதியமான் இவரைப் பார்க்காமல், பாட்டைக் கேட்காமல், புலவருக்குப்
பரிசிலை மட்டும் அனுப்பினானாம்.
புலவர் கொஞ்சம் மானஸ்தன்.
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்
கடைசி வரி பாருங்க நச்!
“நான் வாணிகப் பரிசிலன் அல்லேன்….வியாபாரி அல்லன் என் பாட்டை, அறிவை, புலமையைப் பார்த்து, கேட்டு, தகுதி இருக்கான்னு பார்த்து தந்தா ஓகே....இல்லைனா அட போயா! வேண்டாம்னு சொல்லிவிட்டார்.
அடுத்து, வறுமையில் வாழ்ந்தாலும் தகுதி இல்லாத மன்னரைப் பாடவே மாட்டார்களாம்.
இன்னொன்று, புலவர்கள் பாராட்டிப்
பாடும் அளவுக்கு மன்னர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனராம்.
மன்னர்களுக்கு அறிவுரை செய்த புலவர்களும் உண்டு! ஔவையார் பற்றி நமக்குத் தெரியும்.
நம்ம மனசு சும்மாருக்குமா? போக்கிரித்தனமாகக் கற்பனை செய்தது. வேண்டாத வேலை!
இப்போதைய கவிஞர்களில் சினிமா பாடல்கள் எழுதுபவர்கள் (அதிலும் ஒரு சிலர் தானோ?) சம்பாதிக்கிறார்கள். ஏனையோர் எப்படியோ? தற்போது கவிஞர்களின் நூல்கள் போணியாகிறதோ?! சரியாகத் தெரியவில்லை. நேற்று மறைந்த கவிஞர் ஜெ. பிரான்ஸிஸ் கிருபா சில திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதியிருப்பதாக ஏகாந்தன் அண்ணா தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். கிருபா கவிதைப் புத்தகங்களும் போட்டிருக்கிறார். அவர் மறைந்த நிகழ்வு ஜெமோ தளத்தில் அறிந்தது.
ஆனால், ஏனோயொர்? தற்போது புகழ்ந்து பாடி சம்பாதிக்க மன்னர்களும் இல்லையே. சரி, தலைவர்களைப் புகழ்ந்து பாடினால் ஏதேனும் கிடைக்குமோ?
ஒரு வேளை ஒன்றும் தேறவில்லை என்றால் அக்காலத்துப் புலவர்களைப் போல் தூற்றிப் பாடினால் என்ன ஆகும்?! இல்லை, தலைவர்களுக்குக் கவிஞர்கள் இடித்துரைத்து அறிவுரைகள் வழங்கினால்? கவிஞர்கள் பாடு திண்டாட்டம்தானோ?!
சத்தியமாய் இது வேறு எதுவுமில்லை, சும்மா ஒரு கோக்கு மாக்கு கற்பனை! தில்லைஅம்பலனே சரணம்! காப்பாத்துப்பா! எனக்குச் சுயமாகப் பாடல் எல்லாம் எழுதத் தெரியாது ஈசா! அதுக்காக என்னைக் கண்டுக்காம இருந்திடாதப்பா, தில்லை அம்பல நடராஜா!
சென்ற மாதம் இந்த மாதிரி வேண்டாத சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்த சமயம், ஜெமோ தளம் அடிக்கடி வாசிப்பதால், மொபைலில் ஜெமோ தளத்தின் பதிவு ஒன்றை சென்ற மாதம் கூகுள் அனுப்பியது. (கூகுளுக்குத் தெரியாம (கூகுள் ஆண்டவர்??!!!) எதுவுமே செய்ய முடியாது போல. நாம் எதைப் பார்க்கிறோமோ அதைப் பற்றி, தளங்கள் பலவற்றை மொபைலுக்கு அனுப்பிடுது!!!) அதில் கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களுக்கான விஷ்ணுபுர விருது குறித்து. இந்த விருது 2010 லிருந்து கொடுப்பதாகத் தெரிகிறது. கவிஞர்களும் தற்போது கௌரவிக்கப்படுகிறார்கள்! நல்ல விஷயம். தொடர வேண்டும்.
*************
தங்கை வாட்சப்பில் அனுப்பியிருந்த அனந்துவின் படம் அனந்துவுடனான என் முதல் அனுபவத்தை நினைவுபடுத்தியது! பலவருடங்களுக்கு முன், அன்று, என் கற்பனையில் விரிந்ததை என்னவோ அதிசயமாக மூளை சேமித்து வைத்திருந்தது!!
அனந்துவின் அப்பாயின்ட்மென்ட்
கிடைப்பது சிரமம். உங்களுக்கு எப்படியோ தெரியாது. என் அனுபவம் அது. அனந்து பெரும்புள்ளி! மிகவும்
பிராபல்யமானவர்! அப்பாயின்ட்மென்ட் கிடைத்தாலும் கெடுபிடிகள் அதிகம். பெரும் கூட்டம்
வரும் முன் அதிகாலையில் பார்த்துவிட வேண்டும் என்று அப்பாயின்ட்மென்ட் …
சரி அப்படி அப்பாயின்ட்மென்ட் எதற்கு?
அதென்ன அப்படி ஒரு கேள்வி?
பிரபலமானவரை அருகில் பார்க்க விரும்புவோம்தானே. புலம்ப வேண்டாமா? வேறெதற்கு?
ஆனால் பாருங்க, மல்லாக்கப்
படுத்துக் கொண்டு, கைகளை விரித்துக் கொண்டு, வலது கையை ஒய்யாரமாகத் தொங்க விட்டு, கண்ணை மூடிக் கொண்டு அஸிஸ்டென்ட்கள் சூழ என்ன ஒரு ரிலாக்ஸ்ட் சயனம்!
அனந்த சயனம், யோக நித்ரா வாம். நானும் இப்படி சயனிக்கத்தான் நினைக்கிறேன். முடிகிறதோ?! யோக நித்ரா என்று தூங்கிவிடுகிறேனே! மனம் உடனே சிவ யோகம் பற்றியும் பதஞ்சலி முனிவர் பற்றியும் அவர் வழியில் வந்த என் யோகா குருஜி சொன்னதிற்குத் தாவியது. சிவ யோகம் என்பது எளிதல்ல. குருஜியும் எத்தனையோ அறிவுரைகள் சொல்லிக் கற்றுக் கொடுத்தார்.
ஆதியோகி ஈசனின் அத்தனை யோக நிலையும் மனதில் ஓடியது. எப்போதும் கண்மூடி யோகநிலை! நாம் தொழுவது அவர் யோகநிலையைக் கலைக்குமோ! ஸாரி ஆதியோகி! ஹூம் எந்த சிவ யோகமும் வாய்க்கவில்லை! ஒழுங்காகப் பயிற்சி செய்தால்தானே! அதாவது மனம் ஒன்றி! அதுதானே முக்கியம்.
ஹூம்! உம் ஃப்ரென்ட் ஆதியோகி கண்டு கொள்ளவில்லை! தாமோ? என்று அனந்துவிடம் புலம்பினால் பதில் சொல்வாரோ? மேலே நோக்கிக் கண்ணை மூடிக் கொண்டு நம்மைத்தான் பார்க்கவே இல்லையே பதில் வராது என்றே நினைத்தேன். இருந்தாலும்….
புலம்பினேன்! உலக யோகம் வேண்டிப்
புலம்பத் தொடங்கவில்லை! அனந்துவாவது யோகநித்திரைக்கு அருள் செய்வாரோ என்று! நீங்கள் கண்டிப்பாக நம்ப மாட்டீகள் தெரியும். நானுமேதான். (அருளினாலும் நீயல்லவா பயிற்சி செய்ய வேண்டும்!! என் மனசாட்சி!) மனம் தாவியது.
எங்கு? அனந்து யோகநித்திரை என்றதும், திருமெய்யத்துக்கு. அங்கு சத்யமூர்த்தியும் யோகநித்திரையில்தான். அங்க ஒரே இடத்திற்குள் அடுத்தடுதாற்போல் ரெண்டுபேருமே இருக்கிறார்களே சத்யகிரீஸ்வரர்(சிவன்), சத்யமூர்த்தி! திருச்சுற்று இருவருக்கும் சேர்த்துதான். விண்ணப்பம் ஈசியா கொடுத்துவிடலாம்! ஆனால் பாருங்க நம்ம மனுஷங்கள் ரெண்டு பேருக்கும் நடுல மதிற்சுவர் கட்டிப் பிரிச்சுட்டாங்க என்ன சொல்ல? நல்லகாலம் சுசீந்திரத்தில் பிரிக்கவில்லை! சுசீந்திரம் போன மனது உடனே மீண்டும் அனந்துவிடம் வந்து நின்றது.
விண்ணப்பத்தைக் காது கொடுத்துக்
கேட்டாரோ, தெரியவில்லை. எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. சரி, எப்போது வேண்டுமானாலும் பார்த்துச்
செய்யட்டும், ஆதியோகியிடமும் சிபாரிசு செய்யட்டும், சொல்ல வேண்டியதைச் சொல்லி வைப்போம் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன் அரங்கத்து……
பார்த்தீர்களா, அனந்துவிடமிருந்து
அடுத்து ரங்குவிடம் தாவிவிட்டேன். ரங்குவாச்சும் கொஞ்சம் சைடுல திரும்பி சயனம்! பூலோகத்தர்! நித்திரைன்னு எல்லாம் சொல்லப்படாததால் கண் மலர்ந்து நம்மைப்
கொஞ்சம் பார்க்கறாற் போல இருக்கிறாரேன்னுதான்….திருஇந்தளூர் பரிமள ரங்கு விடம் கூட மனம் தாவியது ஆனால் அவர் நெடுந்துயிலாம்! திருமங்கை ஆழ்வாரே கோச்சுக்கிட்டு நிந்தா துதி பாடியிருக்க நம்மளை பார்த்துவிடப் போகிறாரா என்ன?
அனந்து முன்னே நின்று கொண்டு சத்தியகிரீஸ்வரர், சத்தியமூர்த்தி, பரிமளரங்கு, ரங்குவை எல்லாம் நினைக்கலாமா? அதனாலென்ன? எல்லாரும் ஒன்றுதானே. இப்போதைக்கு அனந்துவிடமே சொல்லிடலாம்….டக்கென்று மூளையில் பளிச்!
ஓ! யோக நித்திரையாச்சே!! கலைக்கக் கூடாது! எதுவும் வேண்டக் கூடாது, புலம்பக்
கூடாது என்று பாட்டி சொல்லிக் கேட்டதுண்டே!
ஓ! அனந்து! உன் யோக நித்திரைக்குத்
தொந்தரவு தரமாட்டேன்! ஸாரி அனந்து! மன்னித்துவிடு! சத்தியகிரீஸ்வரர், சத்திய மூர்த்தியும் யோகநிலை! பரிமள ரங்குவோ ரொம்ப ரெஸ்டிங்க்! ரங்குவிடமே சொல்லிக் கொள்கிறேன்!
அட! ஏதோ கேட்கிறதே! இத்தனை பேரை பார்க்கலாம்னு சொன்னதும் அனந்து ரெஸ்பாண்டெட்? (இதான் டெக்னிக்?...பாத்துக்கோங்க!)
“என்ன புலம்பப் போற? இந்த மாசக் காப்பி பொடி வாங்க
வழி செய்துடுப்பான்னுதானே!!!”
ஹோ ! என்ன குறும்பு பாருங்க! வெரி நாட்டி!
--------கீதா
ரொம்ப நாள் கழித்து எங்கள் வலைத்தளத்தைத் தூசிதட்டியிருக்கிறோம்/றேன்.
திங்கள், 28 ஜூன், 2021
மர்மம் – துப்பறிவாளினி – செல்லம்
மர்மம்
வீட்டில் ஒரு மாதமாக மர்மம்.
சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில
தினங்கள் காலையில் அடுக்களையிலிருந்து ஓடுவதையும் கண்ணால் கண்டோம். உறுதியானது. நேரில்
பார்த்த சாட்சி.
இது ஒரு மாதம் முன்பு. அப்போது
கண்ணழகி காலையில் அடுக்களையில் மோப்பம் பிடித்து அந்தப் பாதையை அப்படியே நூல் பிடித்து
குளியலறை வரை மோப்பம் பிடித்துக் கொண்டே சென்று அங்குமிங்கும் ஓடிப் பிடிக்க முயன்றாள்
ஆனால் பொருட்கள் அவளுக்குத் தடையாக இருந்தன. ராத்திரி கூட ஓடியிருக்கிறாள் என்று சில
தடயங்கள் அறிவித்தது.
சில பொருட்கள் அல்லது இடங்களின்
முன் காவல் இருப்பாள். தலைமறைவான எலியார் எப்போது வெளியில் வருவார் என்று ஆனால் கொஞ்ச
நேரத்தில் அவள் இலக்கு மாறிவிடும். இதுதாம் பூஸாருக்கும் பைரவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
அது ஒரு காலம்! நம் வீட்டுச்
செல்லம் போட்டுத்தள்ளிவிட்டுக் காவல் காப்பாள்.
அவர்களின் சட்டத்தில் போட்டுத் தள்ள இடம் உண்டு. பாவ புண்ணியக் கணக்கு உண்டா என்று
தெரியவில்லை! இப்போது அவள் ஓடி சாகசம் செய்யும் நிலையில் இல்லை. ஏன்? தகவல் கீழே. தலைப்பு
செல்லம்.
என்கௌண்டர் தொடங்கலாம் -
விஷம் வைக்கலாம், ஒட்டிக் கொள்ளும் அட்டை வைக்கலாம் என்று உள்துறையில் பல ஆலோசனைகள்
வழங்கப்பட்டன.
என்கௌண்டருக்கு நான் எதிரி.
போட்டுத்தள்ள நமக்கு என்ன அதிகாரம்? எலியாருள்ளும்
உயிர்தான். வெளித்தோற்றம்தான் வேறு. மனிதர்கள் யாரேனும் நமக்குத் தொந்தரவு கொடுத்தால் சட்டத்தைக் கையில் எடுத்து நாம்
என்ன போட்டுத் தள்ளுகிறோமா? அவர்கள் உலகச் சட்டம் வேறு. என்று லா பாயின்ட், தத்துவம் எல்லாம் பேசினேன்.
அதுவும் இது உள்வீ(நா)ட்டு
விவகாரம். நாம் அவரைப் பிடித்து துரத்திவிட்டு மீண்டும் உள்நுழையாமல் எல்லைப் பாதுகாப்பு
போடுவோம். பார்த்துக் கொள்வோம் என்று அரசியல் பேசினேன். பொறி எங்கு கிடைக்கிறது என்று
பார்த்தால் அருகில் எங்கும் இல்லை. சந்தையில் கிடைக்கும் ஆனால் சந்தை இப்போது இல்லை.
இந்த கோவிட் சமயத்தில் அலைய தயக்கம்.
ஸ்காட்லாந்து யார்ட், லண்டன்,
ஆரேகன் என்று வெளிநாட்டு நிபுணர்களை ஏற்பாடு செய்யலாமா என்றும் யோசித்தேன்! அவர்கள்
எல்லோரும் அப்பாயின்ட்மென்ட் கொடுப்பது கடினம்.
துப்பறிவாளினி
நான் தான்!!! தடயங்கள்
கிடைத்தன. அதை வைத்து அவர் எங்கெங்கு செல்கிறார் எங்கு தலைமறைவாகிறார், என்னென்ன பொருட்களைத்
திருடுகிறார், சாப்பிடுகிறார் என்று ஆராய்ந்தேன்.
காணாமல் போனவை : சுவாமி முன்
அரிசி மாவில் போடும் கோலம் (நான் வாசலிலும் அரிசிமாவுதான். கோலமாவு என்று விற்பது வாங்குவதில்லை).
விளக்குத் திரி, சுவாமிக்கு வைக்கும் வீட்டில் பூத்த மல்லிப் பூக்கள், தவறிப் போய்
பீன்ஸ் காரட் ஏதேனும் ஒன்றிரண்டு வெளியில் இருந்தால் பீன்ஸ் காணாமல் போயிருக்கும்.
காரட் துருவப்பட்டிருக்கும். காணாமல் போனவை ஏதேனும் டப்பாவின் பின்னால் இடுக்கில் இருக்கும்.
அஹிம்சை வழியில் முதலில்
வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று அலசியபோது அவருக்கு வெங்காயம், பூண்டு பிடிக்காது.
வெட்டி அவர் வரும் இடங்களில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தால் வரமாட்டார் என்று
ஒரு தகவல். ஒரு சந்தேகம் முளைத்தது. வெங்காயம் பூண்டு போட்ட மசால் வடைக்கு ஆசைப்பட்டு
வந்துதானே பொறியில் சிக்குவார்! ஒரு வேளை பூண்டும் வெங்காயமும் பச்சையாகப் பிடிக்காது
போலும்! சரி வந்தது வரட்டும். அதையும் வெட்டிப் போட்டுப் பார்த்தேன்.
முதல் நாள் வெற்றி. குறிப்பாகப்
பொருள்கள் எதுவும் கலைந்திருக்கவில்லை. காணாமல் போகவில்லை, கோலம் உட்பட. அவரது கக்காவும்
இல்லை. ஆனால் இதில் ஒரு சங்கடம். வெங்காயம் பூண்டு மணம் ஓரிரு நாள்தான். பின்னர் மீண்டும்
வருகை இருக்கும். இதற்காகக் கிலோ கிலோவாக வெங்காயம், பூண்டு வாங்க முடியுமா? நிதித்
துறை பின்வாங்கியது.
சரி அடுத்த அஹிம்சை நடவடிக்கை.
கடலைமாவு, பாராசிட்டமால், (எலியாருக்கும் ஜுரம் வருமா அல்லது ஜுரம் வரவழைக்குமோ?!!)
தக்காளிச்சாறு என்று ஏதோ சில குறிப்பிட்ட அளவு கலந்து உருட்டி மணிக் கொழுக்கட்டை சைசில்
லட்டு பிடித்து வைக்கச் சொல்லி ஒரு தகவல். உங்களுக்குக் கூட லட்டு பிடித்து தந்ததில்லை
ஆனால் எலியாருக்கு லட்டு பிடித்தேன். ஹூம் நான் செய்த லட்டு பிடிக்கவில்லை போலும் எலியார்
சீண்டவில்லை. அவருக்கும் நம்ம டெக்கினிக்குகள் தெரியாமல் இருக்குமா என்ன?! தப்பித்துத்
தலைமறைவானார்.
இத்தனைக்கும் வீட்டிலுள்ள
ஒட்டைகள் எல்லாம் அடைத்தாயிற்று. நாங்கள் ஒவ்வொரு செக் ஆக வைக்க வைக்கத் தடயங்கள் மாறிக்
கொண்டே இருந்ததால் எப்படி வந்து எங்கு சென்று ஒளிகிறார், தலைமறைவாகிறார் என்று ரொம்பக்
குழப்பமாக இருந்தது. மூளையில் பளிச். கண்ணழகி குளியலறை வரை நூல் பிடித்துச் சென்று
முகர்ந்தது நினைவுக்கு வர…
குளியல் அறையில் இருக்கும்
அந்தக்கால முறையில் சுடுதண்ணீர் போடும் சிமென்ட் தொட்டி உட்புறம் ஒரு பானை இருக்கும்
(பானை இன்பில்ட் போன்று வெளியில் எடுத்துக் கழுவி எல்லாம் செய்ய முடியாது) அடியில்
விறகு வைக்க வெளியிலிருந்து ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அதற்குள் லைட் அடித்துப் பார்த்தால்
சாம்பல் மண் என்று ஒரு பக்கத்தில், ஓட்டையும் இருப்பதாகத் தெரிந்தது. ஓ! இதுதானா! என்று
வெளிப்புற ஓட்டையை தகரம், கல் என்று மூடி கம்பிகள் இல்லா சிறையாக்கினோம்.
இரவு குளியலறைக் கதவின் தாழ்ப்பாளைச்
சரிசெய்து நன்றாக மூடி விட்டோம். மறுநாள் குளியலறையைத் திறந்த போது எலியாரின் துவம்சம்
தெரிந்தது. துடைப்பக்கட்டை, மாப்பர் எல்லாம் கீழே விழுந்து குவளை எல்லாம் புரண்டு இருந்தது.
அவரது கக்கா வேறு. அடப்பாவி! சிறைக்கதவை உடைத்து தப்பித்துவிட்டாரா? ஆராய்ந்தால் அவை எல்லாம் சரியாகத்தான் இருந்தன.
குளியலறையில் இருக்கும் பரண்
கண்ணில் பட, அதில் வீட்டு உரிமையாளர் கச்சடா சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்.
சரி அதில்தான் தலைமறைவாகி இருக்க வேண்டும் என்று ஒரு யூகம்.
மறுநாளும் இதே போல் பாதுகாப்பு
செய்ய எலியார் உள்ளே துவம்சம் செய்திருக்க சுவாமி முன்னான கோலம் அழிந்திருக்கவில்லை.
சரி அவர் ராஜ்ஜியம் குளியலறையோடு என்பது தெரிந்திட, எப்படியாவது வெளியேற்றலாம் என்று
நினைத்து வழக்கம் போல சுவாமி முன் கோலம் போட்டுவிட்டு மொட்டைமாடி சென்று வந்து பார்த்தால் சுவாமி முன் போட்டிருந்த கோலம் அழிந்திருந்தது.
எனக்கு ஆச்சரியம். என்னடா
இது ஒரு 10 நிமிடத்தில் இப்படியா என்று தோன்றிட கணவர் சொன்னார் ஒரு வேளை பல்லியாக இருக்கலாம்.
அரிசிமாவைச் சாப்பிட்டது பல்லியாரா? எலியாரா? எனக்கோ, குளியலறைக் கதவு திறந்திருந்ததால்,
“இரண்டு நாள் என்னை அடைத்து வைச்சீங்கல்ல. பாருங்க நான் இப்ப அடுக்களையில் புகுந்துட்டேன்
என்று கோபத்தில் எலியார் சவால் விடுவது போல் இருந்தது.
மீண்டும் இரவு குளியலறைக்
கதவை மூடி வைத்துப்படுத்தோம். மறுநாள் பொருட்கள்
எல்லாம் அப்படியேதான் இருந்தது. அவரது கக்காவும் இல்லை. அப்போ அடுக்களையில்தான் தலைமறைவு.
உன் அஹிம்சை செல்லாது, மறைமுக
என்கௌண்டர் தான் சரி என்று எலியாருக்கான விஷ கேக்குகள் – பச்சைக்கலரில் எள்ளு கடலைமிட்டாய்
போல இருப்பது - வாங்கிவந்து வைத்தார் கணவர். நானோ, “பிள்ளையாரப்பா எலியைப் பிழைக்க
வைத்துவிடு. உனக்கு தேங்காய் உடைச்சு கொழுக்கட்டை, மோதகம் எல்லாம் செஞ்சு தரேன்” என்று!!!
வேண்டுதல் வைத்தேன்! எலிக்காக வேண்டிக் கொண்டவர் யாரேனும் இருந்தால் என் குழுவில் இணையலாம்!
விஷக் கேக்கில் ஒரு முனை
மட்டும் மிஸ்ஸிங்க். அதுவும் மிகச் சிறிதளவே. என் பிரார்த்தனை பலித்ததோ? அந்தச் சிறிய
அளவை ஒரு வேளை பல்லியார் சாப்பிட்டிருப்பாரோ? இல்லை எலியாருக்கு விஷக் கேக்கும் பழக்கமாகி
சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் ஆகிவிட்டாரா, அல்லது தெரிந்து சீண்டவில்லையா?
குளியலறையில் எந்தத் தடயமும்
இல்லை. கோலம் மட்டும் அழிந்திருக்கிறது. ஆனால் அரிசி மாவு வைத்திருக்கும் கிண்ணத்தில்
மாவில் எந்தத் தடயமும் இல்லை. கக்கா கூட இல்லை. பல்லியார்தான் கோலத்தைக் கலைத்திருப்பாரோ?
எலியார் பரணில் இருக்கிறாரா? ஒரே மர்மமாக இருக்கு.
தலைமறைவாகிய பெண். வயது
6 மாதம். கொழு கொழு உடம்பு. கண்டால் துப்பறிவாளினி எனக்குத் தகவல் சொல்லிடுங்க! அடையாளம் - அவர் வால் நுனியில் ஒரு சிறு வெட்டுக்காயம்
இருக்கும்.
செல்லம்:
செல்லத்திற்கு வயது 12 முடிந்து
4 மாதங்கள். 10 நாட்களுக்கு முன் தொடங்கியது மூச்சுவிடச் சிரமப்படுகிறாள். பலசமயங்களில் முகத்தை உயரே தூக்கிக் கொண்டு மூச்சு
விடுகிறாள். மார்புப் பகுதி பெரிதாகி வீங்கியது போல் இருக்கு. பல்மொனரி எடிமா. நுரையீரல்
உள்ளே அல்லது வெளியே நீர் கோர்த்திருக்கலாம். மருத்துவரை வீட்டிற்கு வந்து பார்க்கச் சொல்லி மகன் அவரோடு பேசினான். ஹார்ட் ஃபெயிலியர் என்றான் மகன். இசிஜி, எக்ஸ்ரே எடுக்கச்
சென்றால் செல்லம் ஒத்துழைக்கவில்லை. மகனும், பரவாயில்லை விடு என்று மாத்திரை சொன்னான். கொடுத்து
வருகிறோம்.
இவளை ரெஸ்டில் இருக்க வை என்று சொல்கிறான்!! எப்படி?
மகனிடம் சொன்னேன். “என்னடா
இவளுக்கா ஹார்ட் ஃபெயிலியர்? என்ன டயக்னாசிஸ் செய்யற? மாடி ஏறுகிறாள், தெருவில் செல்லங்கள்
போனா ஒடிச் சென்று குரைக்கிறாள் வம்பு வளர்க்கிறாள்!
அவன் சிரித்துவிட்டான். “ம்மா
ரொம்ப முடியலைனாதான் அடங்கி ஒடுங்கி இருப்பாங்க இல்லைனா கடைசி வரை அப்படித்தான் இருப்பாங்க.
எனிவே அவள் காலம் முடியப் போகிறது. அவளை நிறைய கொஞ்சு, தடவிக்கொடு, சந்தோஷமாக இருக்கட்டும்
என்றான்.
அவள் கஷ்டப்படாமல் தன் இறுதி
மூச்சு வரை சந்தோஷமாக இருக்கட்டும்!
(சில காரணங்களினால் (செல்லம்
காரணமல்ல) மீண்டும் இணையம் பக்கம் வரமுடியுமா என்று தெரியவில்லை. முடிந்தால் நேரம்
கிடைத்தால் இடையில் வருகிறேன். )
-----கீதா
சனி, 26 ஜூன், 2021
கல்வியால் ஆய பயனென்கொல்?
(இது கொஞ்சம் பெரிய சீரியஸ் பதிவுதான். மன்னிக்கவும். முடிந்தால், ஆர்வமிருந்தால் வாசியுங்கள். )
பயணக்கட்டுரைகள்,
நகைச்சுவை, ஜனரஞ்சகமான பதிவுகள், அனுபவப்பதிவுகள், புத்தகங்கள் பற்றிய பதிவுகள், சமையல்,
கதைகள், என்று என்னை ஈர்க்கக் கூடியவற்றின் இடையே கொஞ்சம் சீரியசான கல்வி, உளவியல்
என்று வந்தா நமக்குத்தான் உடனே ஆர்வம் மேலோங்கிவிடுமே.
இப்பதிவே
கூட கோர்வையாக, சரியாக எழுதியிருக்கிறேனா என்பது எனக்குச் சந்தேகம்தான். சரி புலம்பலை
விட்டு பதிவிற்கு வருகிறேன்…
மதிப்பெண்ணிற்கு
அப்பாற்பட்டு விரிவான அறிவு தேவை என்று அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் அப்பதிவு ஆசிரியர்களுக்கும்
பொருந்தும். அவர்களும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்களின் அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர்களும் இறுதி வரை மாணாக்கர்தாம்.
விசாலமான
அறிவுவளர, குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும், ஆசிரியர்களும் சரி, பெற்றோரும்
சரி. அதுதான் முதல் படி. அதுதான் சிந்தனையைத் தூண்டும். சீரியசிந்தனைகள் அதாவது தருக்கச்
சிந்தனைகள் (logical thinking) எத்தனை முக்கியமோ அதைப் போல வித்தியாசமாகச் சிந்தித்தல்
லாட்டரல்திங்கிங்க்தான் ஒருவரைத் தனித்தன்மை உடையவராகக் காட்டும்.
விடை
தெரியவில்லை என்றால் பொதுவாக, குழந்தைகளைக் குட்டி, அதிகப்பிரசங்கித்தனமா கேக்காத,
தொணதொணன்னு, அடுத்த க்ளாஸ் போறப்ப படிப்ப, தொந்தரவு செய்யாத, சொல்லிக்கொடுத்தது புரியலையா?
அப்படியே மனப்பாடம் செய், என்று சொல்லி முடக்கப்படுகிறார்கள் கட்டிப் குழந்தைகளின்
ஆர்வமும், தைரியமும் அடக்கப்படுகின்றன.
இது
ஒரு வகை என்றால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் ரொம்ப
புத்திசாலி என்று பிரகடனப்படுத்தி ஓவராகத் தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடுகிறார்கள்.
குழந்தைகள் வயதுக்கு மீறி என்ன பேசினாலும் அதை ரசித்து, பெருமையாகச் சொல்லி அதுவும்
இப்போது காணொளியாக வேறு போடுகிறார்கள். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று.
எல்லாப் பெற்றோரும் கல்வி அறிவோ, பண வசதி படைத்தவர்களாகவோ இருப்பதில்லை என்பதால் இங்கு ஆசிரியர்களின் பங்கு மிக மிக முக்கியமாகிறது. (கல்வி அறிவும், வசதியும் உடைய பெற்றோருக்கும் இது பொருந்தும்.)
குழந்தைகள்
கேள்விகேட்கும் போது ஆசிரியரும் சரி, பெற்றோரும் சரி, விடை தெரியவில்லை என்றால், “தெரியவில்லை”
என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, “நான் பார்த்து தெரிந்துகொண்டு விளக்குகிறேன்” என்று
சொல்லி அதைச் செய்யவும் வேண்டும். குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மீது நம்பிக்கை, ஈடுபாடு
வரவேண்டும். கற்றலில் (இந்தச் சொல் மிக முக்கியம்) ஈடுபாடு ஏற்படும் படியான சூழலை விதைக்க
வேண்டும். இது தொடக்கப்பள்ளியில் ஒரு விதையாக மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
அடுத்து இடைநிலைப் பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியிலும் பராமரிக்கப்பட்டால் தானே நல்ல
பூத்துக்குலுங்கும் மரமாகும்.
ஆசிரியர்களும்
சரி பெற்றோரும் சரி, “இதுகூடத் தெரியலையா, முட்டாள், ஒண்ணுக்கும் உதவாக்கரை, என்னத்தபடிச்ச?
நீயெல்லாம் எதுக்குப் பிறந்த, எதுக்கு ஸ்கூலுக்கு வர, எருமை, நாயி, பேசாம மேய்க்கப்
போ,” இப்படியான சொற்கள் வீசப்படும் சூழலை புறம் தள்ள வேண்டும். இவை கற்கும் ஆர்வத்தையும்
கற்பதையும் முடக்குபவை.
சில
குழந்தைகள் இதை அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவார்கள். ஆனால் எல்லாக்குழந்தைகளுக்கும்
மனம் ஒரே போன்று அல்ல. தொட்டாலே உடையும் கண்ணாடி போன்ற மனதுடைய குழந்தைகள் நத்தை போல்
ஓட்டிற்குள் சுருங்கிக் கொள்வார்கள். சில குழந்தைகளின் ஒழுக்கத்தையும், ஆளுமை வளர்ச்சியையும்
உரசிப்பார்க்கும்.
ஆசிரியப்பயிற்சியில்
கல்வி உளவியலின் (Education Psychology) பங்கு மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின்
மனமுதிர்ச்சி ப்ளஸ் கற்றல் திறன் வேறுபடுவதால் மிக மிக அடிப்படைத் தேவையாகிறது.
ஒவ்வொரு
காலகட்டத்திலும் சமுதாயச் சூழல் மாறுபடுவதாலும், அதுவும் இப்போதைய காலகட்டத்திற்கு
ஏற்பவும் - சமூகவலைத்தளங்கள், இணையம், கையடக்க
அலைபேசி என்று தொழில்நுட்பமும், மின்னியல் பொருட்களும் சல்லிசமாக இருப்பதால், பிஹேவியரல்
அடிக்ஷன் (behavioural addiction) ஏற்படுவதால் - கற்றல் உளவியலில் மேம்பாடு செய்யப்பட
வேண்டியது இன்றியமையாத அடிப்படைத் தேவை. ஆசிரியர்,
மற்றும் பெற்றோர் அவர்களைச் சிறப்பாகக் கையாளும் திறன் பெற்றிருப்பதோடு, ஒழுக்கம் மிக்கவராகவும்
இருக்க வேண்டும்.
ஒரு
குழந்தை சாதிப்பதற்குப் – புகழ் பெறவேண்டும் என்றில்லை, கல்வியில் முதலிடம் பெறவேண்டும்
என்றில்லை, எந்தத் துறையானாலும் செய்வதை செம்மையாகச் செய்வது, நேர்மையாகச் செய்வது,
நல்ல ஒழுக்கத்துடன் மனித நேயத்தை இழக்காமல் செய்வது என்பதுதான் மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கான உளவியல்,
அவர்களது ஆளுமைத் திறனை வளர்ப்பது, சூழல் என்பவை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சூழல்
சரியில்லை என்றால் கற்பது என்பது மிகக்கடினம்.
பாடங்களை மனப்பாடமாய்ப் படிக்கும் திறன் கூடுதல் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று
வெற்றி, மெடல் என்று வாங்கிவிட முடியும். ஆனால் அவர்கள் படித்ததை ஆழ்ந்து கற்றார்களா என்றால் அது
பெரிய கேள்விக்குறி.
மேலே
சொன்ன கருத்தில் இரு விஷயங்களைச் சொல்ல வேண்டும். சாதனை அல்லது வெற்றி (இரண்டிற்கும்
சிறு வித்தியாசம் உண்டு என்றாலும்) இவற்றிற்கு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம் என்றாலும் அந்த
இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நேர்மையானதாக, நல் வழியில் எடுக்கப்படுவதாக
இருக்க வேண்டும்.
ஆம்பிஷன்
– Ambition – தவறில்லை. ஆம்பிஷியஸ் – Ambitious என்பதும் நல்லதுதான் ஆனால் எப்படியேனும் (இந்த வார்த்தை மிக மிக முக்கியம்)
அடைய வேண்டும் என்று வெறித்தனத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு மனிதனின் குணங்களையும்,
நல்ல பண்புகளையும் வீழ்த்தி ஆளுமைத் திறனைச் சிதைக்கவும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கவனம் மிகத் தேவை. வெற்றி, சாதனை என்பதை விட வாழ்க்கையின் எந்தச் சூழலையும் மனம் தளராமல்
எதிர்கொள்ளும் திறன் தான் முதலில் போதிக்கப்பட வேண்டும்.
இதற்குத்தான்,
பல சாதாரணக் குழந்தைகளுக்குக் கற்றலுக்கான, நல்ல ஆளுமைத் திறனை, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள,
வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொள்ள
சூழல் இல்லை என்பதால் பள்ளி, கல்லூரி, ஆசிரியர்களின் பங்கு மிகமிக இன்றியமையாததாக ஆகிறது.
குழந்தைகள்
உளவியல், கல்வி உளவியல் பயிற்சி பெற்று கவுன்சலிங்க் செய்து வரும் நட்பு ஒருவர் கேட்ட
கேள்வி, “எப்படி ஆசிரியர்கள் கல்வி உளவியல், குழந்தைகள் உளவியல் பயிற்சி பெறாமல் ஆசிரியர்களாகிறார்கள்
என்பது ஆச்சரியம். கூடவே வேதனை. படித்த பெற்றோரும் குழந்தைகளைக் கையாளத் தெரியாமல்….என்னிடம்
உளவியல் கவுன்சலிங்கிற்கு வரும் பல குழந்தைகளைப் பார்க்கும் போது வரும் ஆதங்கம் இது,
என்றார்.
ஆசிரியர்கள்
பலரும் பாடத்திட்ட வளர்ச்சிக்கும், காலக்கட்டத்திற்கும் ஏற்ப மேம்படுத்திக் கொள்ளாமை,
ஆசிரியப்பயிற்சி சரியான விதத்தில் கொடுக்கப்படாமை, அப்பயிற்சியை உணர்ந்து கல்லாமை,
அதை நடைமுறைப்படுத்தாமை, மதிப்பெண்களுக்கு மட்டுமே பயிற்றுவித்தல், ஸ்மார்ட்ஃபோனுக்கு
அடிமையாதல், பொறுமை இல்லாமை என்று பல காரணங்கள்.
இதில்
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களில் சாதிப்போர்
அதிகம் ஆனால் இவர்கள் முட்டாள் என்று கைவிடப்பட்டு ஒதுக்கப்படும் போது வாய்ப்புகள்
இல்லாமல் சுருங்கிப் போகிறார்கள். (கற்றல் குறைபாடு என்று நான் இங்கு குறிப்பிடுவது
ஸ்பெஷல் குழந்தைகள் அல்ல.)
ஆசிரியப்பயிற்சி
என்பதே சும்மா சான்றிதழ் பெறுவதாக, பல ஆசிரியர்களும் சான்றிதழ் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், கற்பித்தலில் பூஜ்ஜியமாக இருக்கிறார்கள், சிலர் ஒழுக்கத்திலும் மோசமாக இருக்கிறார்கள்
என்பது மிக மிக வேதனையான, ஆதங்கப்பட வேண்டிய விஷயம், என்பதை நான் இங்கு வேதனையுடன்
பதிவு செய்கிறேன். சமூகவலைத்தளங்களுக்கு, இணையத்திற்கு அடிமையான ஆசிரியர்கள் பலரின்
செயல்பாடுகள்தான் என்னை அப்படி எழுத வைத்தது. (பதிவுலகில் உள்ள ஆசிரியர்கள் என்னை மன்னிக்கவும்.)
ஆசிரியர்
என்பவர், மாணவர்களை மையமாகக் கருத்தில் கொண்டு, கருணையுடன், நட்பாக, மெய்யியலாளராக,
நல்லவ வழிகாட்டியாக இருக்க வேண்டியவர்கள். இது பெற்றோருக்கும் பொருந்தும். Friend,
Philosopher, Guide
இதைப்
பற்றி எழுத வேண்டுமென்றால் பெரிய கட்டுரையாக தொடராக உதாரணங்களுடன் எழுதலாம். அத்தனை
இருக்கிறது. இங்கு இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
நன்றி மதுரைத்தமிழன்.
-------கீதா