திங்கள், 13 டிசம்பர், 2021

பாபு டாக்டர் - பகுதி 2

 

பாபு டாக்டர் - பகுதி 1

“ஏதோ பிரச்சனை. வாங்க” என்றார் பதற்றத்துடன்.

இதில் முடித்திருந்தேன் பகுதி ஒன்றை. இதோ தொடர்கிறது இரண்டாவது பகுதி - நிறைவுப்பகுதி

    ஓடிச் சென்ற நான், கண்ணீர் மல்க தழுதழுத்த குரலில் யாருடனோ மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்த டாக்டரைப் பார்த்ததும், ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று ஊகித்தேன். பலமுறை பல ஃபோன் கால்கள் பலரிடமிருந்து வந்தது. அவரும் பலருக்கும் ஃபோன் செய்து கொண்டிருந்தார். இடையே என்னிடம்

“என்னை அம்போன்னு விட்டுட்டு ரெண்டு பேரும் போய்ட்டாங்க” என்றார். எனக்குப் பகீர் என்றது.

டாக்டரும் நானும் பன்னீர் செல்வமும் காரில் பயணித்து முண்டக்கயம் மருத்துவமனையை அடைந்தோம். போஸ்ட்மார்ட்டம் நடத்தி மறுநாள்தான் இருவரது உடல்களும் கிடைக்கும் என்றனர். அன்று ஒரு லாட்ஜில் தங்கி அடுத்த நாள் ஆம்புலன்சில் மனோஜ் மற்றும் சாந்தம்மாவின் உடல்களுடன் கோட்டயம் அருகேயுள்ள ‘கோத்தல’ எனுமிடத்தை அடைந்தோம்.

அருகருகே தாய்க்கும் பிள்ளைக்கும் வைக்கப்பட்ட சிதைக்குத் தீ வைக்கப்பட, அருகே சச்சினை பிடித்தபடி நின்ற பாபு டாக்டரைக் கண்டதும் பன்னீர் கதறி அழ நானும் கதறி அழுதேவிட்டேன்.

பாபு டாக்டர் எல்லா துக்கத்தையும் அடக்கிப் பேசிக் கொண்டிருந்தார். வரும் ஃபோன்களுக்குப் பதிலும் கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் பிரசவ மருத்துவமனையிலிருக்கும் மனோஜின் மனைவியையும் குழந்தையையும் பார்த்து அவரிடம் விடை பெற்றுத் திரும்பும் போது பாபு டாக்டர்,

“நான் டிசம்பர் 26 ஆம் தேதிதான் எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு வர முடியும். விபத்து நடந்தது 9.17க்காம். 9.15க்கு அவனுக்கு ஃபோன் வந்திருக்கு. ஆப்பரேஷன் சக்ஸஸ். பெண்குழந்தை என்று. அடுத்த 2 நிமிடத்துக்குள் ஆக்சிடென்ட்.


கார் மோதி விபத்து நடந்த பஸ் டிரைவர் “நான் நேரா மோத வந்த கார்ல மோதாம இருக்க மேக்சிமம் வலது பக்கம் ஒதுக்கியும் கார் நேரா வந்து பஸ்ஸில் மோதிருச்சு” என்றாராம். 

ஒரு வேளை குழந்தை பிறந்திருந்த அன்று மனோஜின் மொபைலுக்குப் ஃபோன் வந்ததும், “ஐயோ! கெட்ட நேரத்தில குழந்தை பிறந்திருக்கே. இனி என்ன ஆகுமோ” என்று சாந்தம்மா காரில் பதறியிருக்கலாம். கோபத்திலும் பதற்றத்திலும் ஒரு செகண்ட் மனோஜின் கவனம் சிதறியிருக்கலாம்....

“என்ன பண்ண? எல்லாம் அந்த ஒரு செகன்ட்ல நடந்திடுச்சு. இது மூட நம்பிக்கையோட விளைவா? கருப்பு பூராடத்தோட விளைவா? அவனோட மதுப்பழக்கத்தோட விளைவா இல்லை விதியா? ஒண்ணும் புரியலை’  எப்படியோ நான் தனிமரமாயிட்டேன்” என்றார்.

அடுத்த வருடமே என் மகன்பன்னீர் திடீரென ஏதோ ஒரு கோபத்தில் தற்கொலை செய்து கொண்டது என்னை நடைப்பிணமாக்கிவிட்டது. ஏன் தற்கொலை என்பது எனக்கு இப்போதும் புரியாத புதிர். குடிப்பழக்கமும் அதன் விளைவும் அதற்கு ஒரு காரணம்தான்.

மனைவியும் குழந்தைகளுமாக வாழும் மகனின் இழப்பு ஒரு தந்தையை எவ்வளவு பாதிக்கும் என்பதை நான் அப்போதுதான் உணர்ந்தேன். எனக்கு மனைவியும் மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆனால் பாவம் பாபு டாக்டருக்கு மனைவி இல்லை. ஒரே மகனான மனோஜும் இல்லை.

உடலிலிருந்து உயிர் பிரியும் தருவாயில், “நான் இறந்தாலும், என் மனைவி, பிள்ளைகள் எனக்குப் பதிலாக என் நினைவுடன் வாழ்கிறார்கள்” என்ற ஒரு எண்ணம் மனதிலும் முகத்திலும் ஒரு சம்திருப்தி தரும்.  அந்த இன் முகத்தை உயிர் பிரியும் போது உடலில் விட்டுச் செல்வது என்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம்தான். அப்படிப் பார்க்கையில் பாபு டாக்டரின் நிலை என் நிலையை விட மிகவும் பரிதாபம்தான் என்று நினைத்ததுண்டு.

மனோஜின் மனைவி தன் குழந்தைகளுடன் அவள் பெற்றோர்களுக்கு அருகாமையில்.  மனோஜிற்கு விபத்து மரணம் மூலம் இன்ஷுரன்ஸ் கம்பெனியில் இருந்து கிடைத்த பணத்துடன் பாபு டாக்டர் தனது கையிலிருந்த பணத்தையும் சேர்த்து வாங்கிய ஒரு வீட்டில் தங்கியிருந்ததால் இவர் மனோஜின் மனைவி சிமிக்குத் தேவையான பண உதவிகள் செய்ததுண்டு. சிமி, கோட்டயத்தில் ஏதோ ஒரு துணிக்கடையில் சேல்ஸ் பெண்ணாக ஒரு சின்ன வேலையில் இருந்தாள். 

            அதன் பின் பாபு டாக்டர் ஒன்பதாண்டு காலம் இங்கு வருசநாட்டில் தங்கியிருந்தார். உதவிக்கு ராசாத்தி. ராசாத்தி, பாபு டாக்டரின் ஆலோசனைப்படி பெண்களுக்கு இஞ்செக்ஷன் போட்டு விடுவதுண்டு. இடையில் டாக்டரின் மருமகள் சிமியும் பேரனும் பேத்தியும் வருவார்கள். பாலக்காட்டிலிருக்கும் தம்பி எப்போதாவது அவரது குடும்பத்துடன் வருவார்.

 “எனக்கு வைத்தியத்தைத் தவிர ஒண்ணும் தெரியாது. முடியறவரை இங்கே இப்படியே காலத்த ஓட்டிட வேண்டியதுதான். ஏதாவது ஒரு ஆபத்துனா நீங்கல்லாம் இருக்கீங்களே” என்பார் பாபு டாக்டர் இடையிடையே.

ஒரு நாள் அரசு மருத்துவமனை டாக்டரான கோபாலுடன் அவர் கொஞ்சம் வாக்குவாதம் நடத்தியதைப் பார்த்ததும், நான் மெதுவாக அருகே சென்றேன். உடனே கோபால் அங்கிருந்து போய்விட்டார்.

“கோபால் டாக்டருக்கு இடையில ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுக்கறதுண்டு. இப்ப எல்லா மாசமும் எனக்கு ரெண்டாயிரம் வேணும் இல்லேனா போலி டாக்டர்னு சொல்லி கம்ப்ளெயின்ட் பண்ணி அரெஸ்ட் பண்ண வைச்சிருவேன்னு மிரட்டுறார். நான் சொன்னேன், எனக்கு வேற வருமானம் இல்ல. வேற இடமும் இல்ல. இப்ப தர்ற மாதிரி என்னால முடிஞ்சத தர்ரேன். எல்லா மாசமும் ரெண்டாயிரம் தர என்னால முடியாது, இனி இந்த மாதிரி தொந்தரவு பண்ணினா “என் தற்கொலைக்குக் காரணம் கோபால் டாக்டர்தான்னு எழுதி வைச்சிட்டு செத்தே போவேன்னு சொல்லிட்டேன்” என்றார்.

அதிர்ந்த நான் அன்று மாலை கோபால் டாக்டரைக் கண்டு, “சார் அவர் எப்படியாவது பிழைச்சு போகட்டும் விடுங்க. இப்பெல்லாம் அவர் ரெம்ப கம்மியாத்தான் பணம் வாங்குறார். ராசாத்தி சொல்லிச்சு. அவர் சொன்ன மாதிரி ஏதாவது செஞ்சா ரெம்ப பெரிய பாதகமாயிப் போகும்” என்றேன்.

“இந்த மாதிரி போலி டாக்டர்கள் எல்லாம் ஒவ்வொரு ஊர்ல எங்கள மாதிரி ஆளுகளுக்கு ஆறாயிரம், எட்டாயிரம்னு கொடுத்திட்டுத்தான் இருக்காங்க. நான் ரெண்டாயிரம்தானே கேட்டேன்”

“அவரோட சம்சாரமும் பையனும் போய்ச் சேர்ந்திட்டாங்க. மருமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தேவையான பணத்தையும் இந்த வயசுகாலத்துல அவர்தான் கொடுக்குறார். ம் போகட்டும் விடுங்க. அவரு அவரால முடியறத தரார்ல. போதும் சார். அவர் சொன்ன மாதிரி ஏதாவது செஞ்சா அசிங்கம். அதுமட்டுமில்ல ஏழு தலைமுறைக்கு அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது” என்று அவரை சமாதானப்படுத்தினேன். அதையறிந்ததும் பாபு டாக்டர் கண்ணீர் மல்க எனக்கு நன்றி கூறிய போதுதான் அது அவருக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தது என்று புரிந்தது.

            5 ஆண்டுகளுக்கு முன், கடந்த 2016 மார்ச் மாத இறுதியில் சிமியும் பிள்ளைகளும் வந்த போது என்றுமில்லாத ஒரு சந்தோஷம் பாபு டாக்டர் வீட்டில் நிலவியது. ஒரு நாள் காலை சிமியும் டாக்டரும் எங்கோ போய்த் திரும்பி வந்த போது,

“எங்க? காலேல ரெண்டு பேரும் போயிட்டு வரீங்க” என்றதும்

“தனசேகரைப் பார்த்து எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா எனக்குக் குடுக்க வேண்டிய ‘ஒத்தி’ பணத்தை சிமிக்குக் குடுக்கணும்னு சொல்லிட்டு வந்தேன்” என்றார்.

எப்படியோ அன்று அவருக்கு அப்படிச் சொல்லத் தோன்றியிருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு எல்லோரும் போனதும், டாக்டருக்கு இனம் புரியாத சோகம்.

வழக்கத்திற்கு மாறாக ராசாத்தியிடம் “நான் தேனிக்குப் போய் மருந்து வாங்கிட்டு வரேன்’ என்று சொல்லிக் கிளம்பினார். சாதாரணமாக ஒவ்வொரு வாரமும் மருந்து கம்பெனி ஆட்கள் அங்கு கொண்டு வந்து தேவையான மருந்துகளைக் கொடுப்பதுதான் வழக்கம்.

ராசாத்தியும் அவரது உற்சாகத்தைக் கண்டு போக வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு மணி நேரத்தில் ராசாத்தி பதட்டத்துடன் ஓடி வந்தாள். கடமலைக்குண்டிலிருந்து ஒரு ஃபோன் வந்ததாகச் சொன்னாள். டாக்டர் பஸ்ஸில் மயங்கி விழுந்து விட்டாராம். அவரை பஸ் ஊழியர்களும், பயணிகளில் சிலரும் கடமலைக்குண்டில் இறக்கி ஓரிடத்தில் உட்காரவைத்து அங்குள்ளவர்களிடம் அவரது வீட்டிலுள்ளவர்களை வரவழைக்கச் சொன்னார்கள் என்றும் சொன்னாள்.

உடனே நானும் ராசாத்தியும் ஒரு வாடகைக் காரில் கடமலைக்குண்டு சென்றோம். நல்ல மனம் படைத்த சிலர் அவரை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போயிருந்தார்கள்.

அங்கிருந்த டாக்டர், “பிரஷர் குறைவாகியிருக்கு. சீக்கிரம் தேனிக்குக் கொண்டு போங்க” என்றார்.

கிருஷ்ணம்மாள் மருத்துவனமனையில் இருந்து இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு வருசநாட்டிற்குத் திரும்ப வந்தாலும் பழைய நிலைக்குப் பாபு டாக்டர் திரும்பவில்லை.

அவர் வந்ததை அறிந்து ஓரிருவர் அப்போதும் அவரிடம் மருத்துவ உதவி பெற வந்தார்கள். அவர்களுக்கு ராசாத்தியின் உதவியுடன் ஊசி போட்டு மாத்திரைகளும் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் தளர்வாக இருக்கிறது என்று சொல்லிப் படுத்துவிட்டார். மீண்டும் அவரது நாவு குழைந்து சொல்வது விளங்காத நிலை.

மருமகள் சிமியும் அவள் சகோதரனும், அவர்கள் கோட்டயத்திலிருந்து வந்த காரில் பாபு டாக்டரை கோட்டயத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்தார்கள். ராசாத்தியும் அவர்களுடன் செல்வதற்குத் தயாரானாள்.

போகும் முன் என்னிடம் “இந்த பெஞ்சை உங்க கடைல போட்டுக்கோங்க” என்றார்.

“அதெல்லாம் பிறகு பாத்துக்குவோம்” என்றேன்.

“சிமி ரெம்ப நேரமா சொல்லிட்டிருக்கா” என்று  சொன்னதும், சிமியும் அவரது சகோதரனும் அந்த பெஞ்சை பிடிக்க முயல, நான் சிமியை விலகச்சொல்லி அப்பகுதியைப் பிடித்து என் கடையில் கொண்டு வந்து போட்டேன்.

முன்பு ஒரு முறை நான் இந்த பெஞ்சை விலைக்குக் கேட்ட போது, “உங்களுக்குத் தர்ரேன். இப்ப இல்ல பிறகு” என்றது என் நினைவுக்கு வந்தது. அந்த நிலையிலும் அவர் அதை மறக்கவில்லை என்பதை நினைத்து என் மனம் பூரித்துப் போனது.

மூன்று நாட்கள் கோட்டயத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இரண்டாம் நாள் பேசவும் செய்தார். “இப்ப நல்லாருக்கு. ரெண்டு நாள் கழிச்சு அங்கே வந்திடுவேன்” என்றார் என்னிடம். ஆனால் ஏப்ரம் 4 ஆம் தேதி ராசாத்தியின் ஃபோன். “டாக்டர் போயிட்டாரு”.

பாபு டாக்டர் இனி இல்லை. நினைவில்  மட்டும்தான். ஏனோ பாபு டாக்டரின் இறுதிச் சடங்கில் பங்கெடுத்து அவரது ஆத்மாவிற்குப் பிரார்த்திக்க எப்படித் தனியாகப் பொவது என்று தவித்துக் கொண்டிருந்த போது ராசாத்தியின் ஃபோன்.

டாக்டரின் நண்பர் டேவிட் வாழையத்துபட்டியிலிருந்து இறுதிச் சடங்கில் பங்கெடுக்க வருகிறாரார் என்றும், மறுநாள் 11 மணிக்குத்தான் சடங்கு, எனவே அவருடன் இரவு 10.30க்குத் தேனியிலிருந்து பஸ் ஏறினால் 5 மணிக்குக் கோட்டயம் வந்துவிடலாம். சிமியின் அப்பா பஸ்டாண்டிலிருந்து எங்களைக் கூட்டிச்  செல்ல வருவார் என்றும்  ராசாத்தி சொன்னார்.

            சொன்னபடி நாங்கள் கோட்டயத்தில் போய் இறங்கியதும் சிமியின் அப்பா காத்திருந்தார். சிமியின் வீட்டையடைந்தோம். டாக்டரின் உடல் காலை 10 மணிக்குத்தான் மார்ச்சுவரியிலிருந்து கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள்.

சிமியும், ராசாத்தியும் அவரது இறுதி நாட்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே, அவரும் நானும் சேர்ந்து செலவிட்ட நேரங்களைப், பேசியவற்றை நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

10 மணிக்கு உடல் மார்ச்சுவரியிலிருந்து கொண்டு வந்த  போது கூடவே அவரது தம்பியும் குடும்பமும் வரிசையில் நின்றதைக் கண்டு நானும்  கடைசியாக அவர் முகத்தைக் கண்டு அவரது ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்தேன்.

கிறித்தவ பாஸ்டர்கள் பிரார்த்தனையுடன் பாடவும் செய்தார்கள். 11 மணிக்கு உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி அங்கிருந்து 12 கிமீ தூரத்திலுள்ள “சொர்கீய விருந்து” எனும் சிமிட்ரிக்குக் கொண்டு போனார்கள்.

‘சொர்க யாத்திரை’ செய்யுன்னு எனும் பாடலுடன் சென்ற ஆம்புலன்ஸின் இரு பக்கங்களிலும் பலரும் இறந்தவருக்கு மரியாதை செய்யும் விதமாக எழுந்து நின்றும், கண்களை மூடியும் பிரார்த்தனை செய்தது எனக்கு வியப்பாயிருந்தது.  இறந்தவர் யாராயினும் எழுந்து மரியாதை செய்வதும் அவரது ஆத்மாவுக்காகப் பிரார்த்திக்கும் அவர்களது மனநிலையைப் பாராட்டத் தோன்றியது.

உடலை அடக்க அங்கு குழி ஏதும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. செங்கற்சூளை போல் தோற்றமளித்த ஓரிடம். கீழே தரை மட்டத்தில் கொண்டு வந்த ஸ்ட்ரெச்சருடன் உடல் உள்ளே தள்ளி வைக்கப்பட்டது. அதன் கீழே ஒரு பெரிய கிணறு போன்ற அமைப்பாம்.

நாங்கள் போனபின், அதன் காவலர் அந்த ஸ்ட்ரெச்சரை எடுத்து உடலை மட்டும் வைத்து வெளி வாயிலை சிமெண்டால் பூசி அடைத்துவிடுவார். இது போல் அதைச் சுறறி 16 வாயில்கள் உள்ளதாம். வரிசையாக எல்லாவற்றிலும் உடல்கள் வைக்கப்பட்ட பின் பதினேழாவதாக வரும் உடலை வைக்கும் முன் அங்குள்ள உடல் கீழே தள்ளப்படுமாம்.

பாபு டாக்டரது மனைவி மற்றும் மகனது உடல்கள் அவர்கள் இறந்தபோது எரிக்கப்பட்டது.  ஆனால், இவர் உடல் ஏன் இப்படி என்று அங்கு வந்திருந்த சாந்தம்மாவின் தங்கையின் கணவரிடம் கேட்டேன்.

“சிமியும் (பாபு டாக்டரின் மருமகள்) சிமியின் வீட்டாள்காரும் பெந்தேகோஸ்த்கள். சேச்சியும் (டாக்டரின் மனைவி சாந்தம்மா), மனோஜும் மரிச்ச (இறந்த) பிறகு பாபுசேட்டன் இவர்ட கூட சேர்ந்தாச்சு. அதனால நமக்கு வாய்ஸ் இல்லே” என்றார்.

மெதுவாக என் காதில், “இந்த பெந்தேகோஸ்து குரூப்புக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு. அங்க பிள்ளைகளுக்குப் படிக்க இந்த சரீரம் (உடல்) கொண்டு போகப்படும். இப்ப இல்ல. நாம எல்லாரும் போயி கழிஞ்ஞுட்டு” என்றார்.

எனக்குப் பகீர் என்றது. அப்படி எல்லாம் இருக்காது என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். இருக்கக் கூடாது என்று பிரார்த்தனையும் செய்தேன். அவரது தம்பியும் அங்கிருந்தார். ஏதேதோ ரெஜிஸ்டரில் அவரும் கையெழுத்துப் போட்டார். அதனால் அவர் மிகைப்படுத்தியது போல் ஏதும் இருக்காது என்று தோன்றியது.

ஒரு வேளை அவருக்கு, ஒரே குடும்பத்தில் இந்து மதத்திலும், கிறித்தவ மதத்திலும் நம்பிக்கையுடவர்கள் என்பதால் பாபு டாக்டரின் உடலும் எரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அது நடக்காததால் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். எனக்கென்னவோ இவையெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

நான் பிறந்ததும், வளர்ந்ததும் எல்லாம் வருசநாட்டில். என் உலகம் மிகச் சிறியது. வடக்கே பழனி. கிழக்கே மதுரை. தெற்கே குமுளி. மேற்கே போடிநாயக்கனூர்.

பாபு டாக்டர் எனது நண்பரானதால்தான் நான் அவரது வாழ்வில் நடந்த நடக்கும் சம்பவங்களுக்குச் சாட்சியளிக்கிறேன். இனி என் மரணம் வரை இப்படி ஏதாவது ஒரு சூழலில் அவரைப் பற்றிய நினைவுகள் என்றும் வரத்தான் செய்யும்.

அம்மா சொன்னது சரிதான், “நாம சாப்பிடற ஒவ்வொரு சோத்திலயும் நம்ம பேரு எழுதியிருக்கும். நாம யாரோட  பழகணும், பேசணும்ங்கறதும் அது போலத்தான்.”

கோடிக்கணக்கான ஆட்களிடையே இந்த பாபு டாக்டருடன் நான் பழக வேண்டும் என்றிருந்திருக்கிறது. அதை நான் உங்களுக்கு இது போல் பகிர வேண்டும் என்றிருந்திருக்கிறது. மட்டுமல்ல நான் என் பேரனின் மொபைலில் இடையிடையே எம்ஜிஆர் பற்றி நேதாஜி வரதராஜன், சித்திரா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன், இதயக்கனி விஜயன் எல்லாரும் சொல்வதைக் கேட்கும் என் போன்ற சாதாரண ஆட்களுக்கு பாபு டாக்டர் போன்ற ஒரு சாதாரண மனிதரின் நட்புதான் கிடைத்தது. அதிலும் சில அரிதான நிகழ்வுகள் இருந்ததால் உங்களிடம் சொல்கிறேன். அவ்வளவுதான். உங்கள் வாழ்விலும் இது போல் கடந்த காலத்தில் வந்து போன சிலரை நீங்களும் அவ்வப்போது நினைத்துப் பார்ப்பீர்கள் இல்லையா? 

முற்றும்

வாசித்துக் கருத்து சொல்லும் அனைவருக்கும் மிக்க நன்றி

-------துளசிதரன்


22 கருத்துகள்:

 1. மிக எளிமையான கதையமைப்பு.  மனதைத்தொடும் சம்பவங்கள். நன்றாக எழுதி இருக்கிறீர்கள் துளஸிஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 2. எத்தனையோ ஆயிரம் பேர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் சிலர் மட்டும் நினைவில் தனியிடம் பிடித்து விடுகிறார்கள்.  பாபு டாக்டர் எங்கள் மனதிலும் நிற்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், ஸ்ரீராம்ஜி. மிகவும் சரியே

   பாபு டாக்டர் எங்கள் மனதிலும் நிற்பார்.//

   கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

   துளசிதரன்

   நீக்கு
 3. கதை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் சொன்ன விதம் பிடி படவில்லை. ஏதோ நியூஸ் பேப்பர் ரிப்போர்ட் போன்று தோன்றுகிறது. கொஞ்சம் கூடுதல் திருத்தங்கள் (editing) செய்திருக்கலாம். ஆனாலும் பாபு டாக்டரின் மரணம் மனதை நெருடியது என்பது உண்மை.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவிட்ட பின் மீண்டும் வாசித்த போது கொஞ்சம் வேகமாகச் செல்கிறதோ என்றும் தோன்றியது. பதிவு நீண்டு போகாமலிருக்க, டயலாக்ஸ் கொடுத்து அந்த பாணியில் விவரிக்காமல் சென்றதாலும், முதல் பத்தியின் தொடர்ச்சியாகப் பல சம்பவங்களும் வருவதாலும் ஒன்றில் கூடுதல் மரணங்களும், இறுதிச் சடங்குகளும் வருவதாலும் தோன்றியதாக இருக்கலாம். இனி இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன் சார்.

   சொல்லியதற்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் சார்.

   துளசிதரன்

   நீக்கு
 4. மிக அருமை. இதைக் கதையாகச் சொல்லாமல் உங்கள் பாணியிலேயே சொல்லி இருப்பது இன்னமும் சிறப்பு. உங்கள் மன உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊக்கமான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்

   துளசிதரன்

   நீக்கு
 5. எளிமையான நடையில் மனதை தொட்ட கதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்

   துளசிதரன்

   நீக்கு
 6. பல நிகழ்வுகளின் தொகுப்பு... கதை அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி உங்களின் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 7. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! கதை மனதை தொட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன் உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 8. அருமையான கதை .ஆயுல்வேத மருத்துவத்தில் இப்படியும் சில மனிதர்கள்.மதமாற்றம் பல சிக்கலைக்கொடுக்கும் இறுதியில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் நேசன் உங்களின் கருத்திற்கு. பல நாட்கள் கழித்து வலைப்பம் வருகை இல்லையா?

   துளசிதரன்

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  நல்ல விளக்கமான நட்பின் கதை. படிக்க, படிக்க மனது கனத்துப் போனது. ஜாதகம் ஜோதிடம் சிலசமயங்களில் பலித்துதான் போகிறது. சிலருக்கு இவ்வகையான சோகங்கள் வாழ்வின் நிரந்தரம் போலும். இறுதியில் நீங்கள் சொன்ன விஷயங்கள் அறியாதது. நீங்கள் தெளிவாக கதை நகர்வுகளை சொன்ன விபத்தில் பாபு டாக்டரை எங்களாலும் என்றும் மறக்க முடியாது. கதை உண்மையின் பக்கமாக இருக்கும் போது அவருக்கு என் அஞ்சலிகளும்.

  சில காரணங்களால் நீங்கள் இந்த இரண்டாம் பகுதியை பதிவிட்ட அன்று முதல் இரண்டொரு நாள் நான் வலைப்பக்கம் வரவில்லை. அதனால் இன்று வர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். சகோதரி கீதா ரெங்கன் அவர்களும் என்னை மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜாதகம் மூட நம்பிக்கை பொய் என்று சொல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது. கிரஹ நிலை வைத்து மோசமான நிகழ்வுகள் வரவிருப்பதை அறிந்து பிரார்த்தனை செய்து விதியை நம் மதியால்....இறை அருள் கிடைத்தால் வெல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. பலருக்கும் இத்தகைய அனுபவம் உண்டுதான். உறுதியாக ஒன்றும் சொல்ல முடியாதுதான். அதனால்தான் அப்படிக் கதையில் சொல்லிச் சென்றேன்.

   மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்களின் கருத்திற்கு

   தயவாய், மன்னிப்பு என்று சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து வாசித்திடலாம். தாமதமானாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இதெற்கெல்லாம் மன்னிப்பு எதற்கு சகோதரி?

   மிக்க நன்றி

   துளசிதரன்

   நீக்கு
 10. “இந்த பெந்தேகோஸ்து குரூப்புக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் இருக்கு. அங்க பிள்ளைகளுக்குப் படிக்க இந்த சரீரம் (உடல்) கொண்டு போகப்படும். இப்ப இல்ல. நாம எல்லாரும் போயி கழிஞ்ஞுட்டு” என்றார்" - ஐயையோ கதை சொல்லுறேன், கதை சொல்லுறேன்னுட்டு கடைசியில உண்மைய சொல்லிப்புட்டீங்களே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இது உண்மையா வதந்தியா என்று தெரியவில்லை. அதைப் பற்றி அப்படி ஒரு நிகழ்வில் கேட்ட போது கொஞ்சம் ஷாக்காக இருந்தது, அதனால் ஏற்பட்ட கன்ஃப்யூஷனை நான் பெற்ற கன்யூஷன் பெறுக இவ்வையகமும்னு அதைக்கதையில் பொருந்தி வந்ததால் சொன்னேன். நீங்கல் அதை உண்மை என்று ஒரு ஷாக் கொடுத்துப் போயிருக்கீங்க!. ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு. இருக்கக்கூடாது, இருக்காது என்று சுருளிச்சாமி போன்று நினைக்கத்தான் ஆசை.

   மிக்க நன்றி நாஞ்சில் சிவா உங்களின் கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 11. //“நாம சாப்பிடற ஒவ்வொரு சோத்திலயும் நம்ம பேரு எழுதியிருக்கும். நாம யாரோட பழகணும், பேசணும்ங்கறதும் அது போலத்தான்.”//

  உண்மை உண்மை.

  கதை மிக அருமை. டாகடர் பாபு உடல் தானம் செய்து விட்டாரா!
  உடல தானம் நல்லதுதான். ஆனால் அது அவராக விரும்பி செய்யப்பட்ட தானம் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று!!!

   உடல் தானம் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒரு ஈமச்சடங்கிற்கு நான் சென்றிருந்த போது அந்த உடல் வைக்கப்பட்ட இடம் , மற்றும் ஒருவர் சொன்ன தகவல் இது. அது சந்தேகத்தை உருவாக்கியது. இறந்த நபர் உடல் தானம் விருப்பத்துடன் செய்வதற்குக் கையொப்பம் இட்டிருந்தாரா என்பதும் தெரியவில்லை. அதனால் வந்த சந்தேகம். அதைத்தான் இந்தக் கதையில் பயன்படுத்திக் கொண்டேன். சுருளிச்சாமி வாயிலாக. ஒவ்வொருவருக்கும் ஒரு சரித்திரம். ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் பல நிகழ்வுகள் நமக்கு ஏற்படாத போது அது புதிதாகவும், படிப்பினையாகவும் புது அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துகிறதுதான்.

   நீங்கள் சொல்லியிருப்பது போல் உடல் தானம் மிக மிக நல்லது. ஆனால் விருப்பத்துடன் இருக்க வேண்டும்.

   மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்கள் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு