வியாழன், 9 டிசம்பர், 2021

பாபு டாக்டர் - பகுதி 1

         



        “சுருளிச்சாமி அண்ணே! இந்த ஐநூறு ரூபாயைப் பிடிங்க. நாளைக்கு ஒரு 300 ரூபா தாரேன். இந்த பெஞ்ச் இங்கயே இருக்கட்டும். கொஞ்ச நாள் கழிச்சுத்தான் கொண்டு போவேன்.” என்றபடி அழகுராசா என் கையில் திணிக்க வந்த 500 ரூபாய் நோட்டை வாங்காமலிருக்க கை விரல்களை விறைப்பாகப் பிடித்து இரண்டடி பின்னால் நடந்தேன்.

“அழகுராசா! இந்த பெஞ்சை நம்ம பாபு டாக்டர் ஞாபத்துக்காக வச்சிருக்கேன். ஒரு பெஞ்சுக்கு நீ வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்க”

“அண்ணே! இப்ப இத பிடிங்க. நாளைக்கு 500 ரூபா தாரேன். மொத்தம் ஆயிரம் ரூபாண்ணே”

‘ஏய் அழகு! சொன்னாக் கேளு இந்த பெஞ்சு, டாக்டர், கடைசியா கேரளா போகும் போது எனக்குக் குடுத்தது. முன்னாடி இதே மாதிரி நான் அவர்கிட்ட விலைக்கு கேட்டபோது, இத அவரோட குருநாதர் ஞாபகமா வச்சிருக்கிறதா சொன்னார். அதே மாதிரி நானும் இத விக்க மாட்டேன். சும்மாதான் குடுப்பேன். இப்ப இல்ல. நேரம் வரும் போது” என்றபடி மனவி கோமதியிடம் “கோமதி, அந்தப்பக்கம் பிடி” என்றேன்.

நானும் கோமதியும் அந்த பெஞ்சை வீட்டுக்கு வெளியிலுள்ள கடையில் வைக்க வேண்டாம் என முடிவு செய்தோம். அதற்கு மேல் அங்கிருந்து பலனில்லை என்று அழகுராசா போனதும், அந்த பெஞ்சின் மேல் உட்கார்ந்தேன். இருபுறமும் இரண்டு கைகளையும் ஊன்றி அந்த பெஞ்சைப் பார்த்தேன். மனத்திரையில் சிரித்தபடி பாபு டாக்டர் முகம்.

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் வருசநாடு காவல் நிலையம் அருகே “சாந்தா கிளினிக், டாக்டர் பாபு RIMP” என்ற போர்டையே பார்த்தபடி நடந்த நான், என்ன நிகழ்கிறது என்பதை உணரும் முன் திடீரென யாரோ என்னை எடுத்து எறிந்தது போல் ரோடின் வலதுபுறத்திலுள்ள முனியாண்டியின் பலசரக்குக் கடைமுன் விழுந்தேன்.

யாரோ சிலர் என்னை பிடித்துத் தூக்கி அருகிலிருந்த “சாந்தா கிளினிக்”குக்குக் கொண்டு போகும் போது நான் விழுந்த இடத்திற்கு அருகே நின்றிருந்த காரை பார்த்ததும்தான், அந்த கார்தான் என் மேல் மோதியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

“அண்ணே! சாரிண்ணே! திடீர்ன்னு அந்த சைக்கிள், சந்துலருந்து வந்ததும் கன்ட்ரோல் பண்ண முடியல” என்று சொல்லிக் கொண்டே என்னை வலப்புறம் தாங்கிப் பிடித்தபடி வந்த இளைஞனைப் பார்த்தேன்.

அவன்தான் காரை ஓட்டியிருக்க வேண்டும். எனக்கு மூச்சுவிடக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. காலிலும் இடுப்பிலும் நல்ல வலி. கால்களைத் தரையில் ஊன்ற முடியவில்லை. “சாந்தா கிளினிக்”கில் கிடந்த இந்த பெஞ்சில்தான் அன்று என்னை மெதுவாகச் சரித்து படுக்க வைத்தார்கள்.

            நல்ல சிவந்த ஒரு மனிதர் வந்தார். என் உடலில் வலியுள்ள இடங்கள், காயங்கள் எல்லாவற்றையும் பார்த்த பின் உள்ளே சென்றார். காயங்களைச் சுத்தம் செய்யத் தேவையான பஞ்சு மற்றும் மருந்துகள் அடங்கிய ஒரு ட்ரேயைக் கொண்டு வந்தார். கத்தரிக்கோல் போல் தோன்றிய ஒரு இடுக்கியில் பஞ்சை வைத்து ஏதோ தண்ணீர் போன்ற திரவத்தில் முக்கி நெற்றியிலிருந்த என் காயத்தைத் துடைத்தார். ஏதோ தீக்கங்கை என் காயத்தில் இட்டது போல் உணர்ந்த நான் “ஸ்…ஆ” என்றபடி அவரது கைகளைப் பிடித்தேன். பஞ்சு போன்ற மென்மையான கைகள்.

அதே கைகளை ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளாவிலுள்ள கோட்டயத்தில் அவர் உடலை அடக்கம் செய்ய எடுக்கும் முன் தொட்ட உணர்வு..... இப்போதும் உயிரோட்டமுள்ள கையையும், உயிரோட்டமில்லாத கையையும் தொட்ட தொடு உணர்வுகளை உணர முடிகிறது.  அந்த இரண்டு தொடு உணர்வுகளுக்கும் இடையே உள்ள நீண்ட 18 வருடங்கள் மனத்திரையில் ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தோன்றியது.

மணமாகும் முன் கோமதியைப் பெண்பார்க்க கண்டமானூர் போன போது அம்மா சொன்ன வார்த்தை, “நாம் சாப்பிடுற ஒவ்வொரு சோத்துப் பருக்கையிலும் நம்ம பேரு எழுதியிருக்கிற மாதிரி நாம் போக வேண்டிய இடம், பாக்க வேண்டிய ஆளுக, பழக வேண்டிய ஆளுக, கூட வாழ வேண்டிய பொண்ணோ ஆணோ இப்படி எல்லாத்துலயும் நம்ம பேரு எழுதியிருக்கும். பொண்ணை போயி பாரு. தெரியும்” என்ற வார்த்தை எவ்வளவு உண்மை!

கோமதியைப் பார்த்தேன். மனது சொன்னது, “இவதான் என்னோட வாழ வேண்டியவள்னு”. அது போல் பாபு டாக்டரைப் பார்த்ததும் ஏதோ ஓர் உள்ளுணர்வு சொன்னது, “இவரோட நட்பு கிடைச்சா நல்லது. கிடைக்குமா?”

அந்தச் சந்திப்பும் அதைத் தொடர்ந்து வந்த சில சந்திப்புகளும் நான் எதிர்பார்த்தது போல உடனே எங்கள் நட்பை வளர்க்கவில்லை. ஆனால், அடுத்த வருடம் அதற்கான ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

            பாபு டாக்டர் என் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் இருந்த அன்னக்கொடி காம்ப்ளெக்சிற்கு குடியிருக்க வருவதாக அறிந்தேன். மெயின்ரோட்டை ஒட்டியிருக்கும் அந்த காம்ப்ளெக்சின் முன்னே உள்ள நான்கு கடைகளில் ஒன்று நகைக்கடை.  மற்றொன்று துணிக்கடை, ஒரு பலசரக்குக் கடை, ஒன்று ஹார்ட்வேர் கடை. பின்புறமுள்ள விசாலமான நான்கு அறைகளும் ஒரு ஹாலும், சமையலறையும் உள்ள பகுதிதான் பாபு டாக்டர் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒற்றிக்கு எடுத்திருந்த வீடு.

டாக்டரும் மனைவி சாந்தம்மாவும் அங்கு குடியேறினார்கள். மகன் மனோஜ் கோட்டயத்தில் ப்ளஸ்டூ முடித்து எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் படிப்பதாக அறிந்தேன். என் மகன் பன்னீர் செல்வத்தின் வயதுதான். பாபு டாக்டரின் மகன் மனோஜ் அவர்கள் வீட்டிற்கு வந்த போது பன்னீருடன் பழகி, இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். 

பாபு டாக்டரும் இடையிடையே என் டீக்கடையில் வடை சுடும் போது சூடாக வடை வாங்கிச் செல்வார்.

நன்றி: ஓவியர் தமிழ் செல்வன்

காய்ச்சல் சீசன் வந்த போதெல்லாம் நானும் என் குடும்பமும் பாபு டாக்டரிடம் ஒரு ஊசியுடன் ஓரிருநாள் மாத்திரைகளும், கூடவே ஓய்வும் எடுத்துக் குணமாக்கிக் கொள்வோம்.

இடையில் எப்போதாவது பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்ய முயலும் கேஸ்கள் வரும். அப்போது அவர்களுக்கு எனிமா கொடுத்து, வாந்தி எடுக்க வைத்து பல மணி நேரங்கள் க்ளினிக்கிலேயே தங்க வைத்து கண் காணிப்பார்கள்.

ஒரு சில நேரங்களில் அத்தகைய பரபரப்பான பாய்ஸன் கேஸ்கள் (டாக்டரும், டாக்டரம்மாவும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயல்பவர்களை பாய்ஸன் கேஸ் என்பார்கள்) இரவு நேரங்களில் வரும். அப்போதெல்லாம் இரவு முழுக்க டாக்டருக்கும் டாக்டரம்மாவுக்கும் சிவராத்திரிதான்.

தற்கொலை முயற்சி செய்தது பெண் என்றால் டாக்டரம்மாதான் எனிமா கொடுப்பதும் அருகில் இருப்பதும் (சாந்தம்மா பத்துவருட காலம் ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றியவராம்) அப்போதெல்லாம் டாக்டர் வெளியில் வந்துவிடுவார். அது போன்ற சந்தர்ப்பங்களில் நானும் அவரும் பேசிக் கொண்டிருப்போம்.

ஆண்டுகள் பல ஆனதும் எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. பல நேரங்களில்,

“என் கூடப் படிச்ச ‘ஜோய்’ கிட்டத்தான் அதுவும் நான் 15, 16 வயதிருந்த போதுதான் இப்படி மனசு திறந்து உங்ககிட்ட பேசுற மாதிரி பேசியிருக்கேன்” என்பார்.

ஆமாம் வருசநாடு வரும் முன் அவர் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி, வீரபாண்டி, கண்டமானூர், அம்பாசமுத்திரம், இப்படி பல ஊர்களில் மருத்துவமனை வைத்துத் தங்கியிருந்திருக்கிறார். அங்கெல்லாம் யாரிடமும் இப்படி ஒரு நெருக்கமான நட்பு இருந்ததில்லையாம். அவரது பெற்றோர் கேரளாவிலிருந்து 1957ல் ராசிங்கபுரம் வந்து மருத்துவத் தொழில் செய்தவர்களாம்.  ஆனால் இவர் கேரளாவில் தாத்தா வீட்டில் தங்கி பத்தாவது வரை படித்து 1970 ல் தான் இங்கு பெற்றோரிடம் வந்திருக்கிறார்.

பாபு டாக்டரின் அப்பாவிடம் அப்போது மருத்துவம் கற்க வந்த எல்லோரும் (பெரும்பாலும் அனைவரும் அவரது சகோதர சகோதரி பிள்ளைகள்தானாம்) ஓரிரு வருடம் அப்பாவுடன் தங்கி மருத்துவக் கல்வி அனுபவம் பெற்று அவரிடமிருந்து பெறும் அனுபவச் சான்றிதழ் உதவியால் பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை கல்லூரியிலிருந்து RIMP எனும் சான்றிதழ் பெற்ற பின் சொந்தமாக ஒரு மருத்துவமனை ஏதேனும் ஒரு கிராமத்தில் தொடங்குவது வழக்கமாக இருந்ததாம்

  அதே போல் இவரும் ஒரு சான்றிதழ் பெற்று 1978 முதல் மருத்துவம் செய்து வந்ததாகச் சொன்னார். சான்றிதழ் சித்த மருத்துவம் செய்யத்தான் என்றாலும் அலோபதி மருத்துவம்தான் (ஆங்கில மருத்துவம்) எல்லோரையும் போல் இவரும் செய்துவந்திருக்கிறார்.

கடந்த இருபது ஆண்டுகளில் அலோபதி மருத்துவர்களது (ஆங்கில மருத்துவர்களது) எண்ணிக்கை அதிகரித்ததால் இது போன்ற RIMP  எனும் சான்றிதழ் பெற்றவர்கள் அலோபதி மருத்துவம் (ஆங்கில மருத்துவம்) செய்யக் கூடாது என அரசு உத்தரவிட்டிருப்பதால் இது சட்ட விரோதம்தான். ஆனாலும், 30 ஆண்டுகள் அவர்கள் இதை ஒரு தொழிலாகச் செய்து வந்ததால் அவர்களை விடுத்து இது போல் புதிதாய் முளைக்கும் போலி மருத்துவர்களுக்கு எதிராக அரசும், சம்பந்தப்பட்டவர்களும் நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பது போன்ற பல தொழில் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு எங்கள் நட்பு நாளடைவில் வளர்ந்தது.

மகன் மனோஜ் கோட்டயத்தில் படிப்பை முடித்து ஒரிரு பிசினஸ் முயற்சிகள் தோல்வியடைந்ததின் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், அதனிடையே அவனுள் மலர்ந்த அவனது காதலை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் இறுதியில் அனுமதித்து, மகன் காதலித்த கிறித்தவப் பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைக்கப் போவதாகவும் சொன்னார்.

திருமணத்திற்கு நானும் மகன் பன்னீர் செல்வமும் சென்றிருந்தோம். காலையில் ஒரு கோயிலில் இந்து சமய முறைப்படி கல்யாணம். மதியம் ஒரு சர்ச்சில் கிறித்தவ முறைப்படித் திருமணம். அது எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது..

மனைவியுடன் மனோஜ் வருசநாட்டில் பெற்றோருடனேயே தங்கினான். அவனுக்கு ஒரு ஓம்னி வேன் வாங்கிக் கொடுத்தார். ஓரளவு நல்ல வருமானம் மனோஜிற்குக் கிடைத்தது. மருமகள், டாக்டருக்கும் டாக்டரம்மாவுக்கும் உதவியாக இருந்தாள். அவர்களுக்கு முதல் குழந்தை சச்சின் பிறந்தான். மனோஜின் கல்யாணத்திற்குப் பின் என் மகன் பன்னீருக்கு மணமாகி ஒரு பெண் குழந்தை அமுதா பிறந்தாள்.

எங்கள் நட்பு வளர்ந்தது போல், மனோஜ், பன்னீரின் நட்பும் வளர்ந்தது. ஆனால் அவர்களுடன் மது எனும் நச்சு நட்பும் வளர்ந்தது. அப்போதெல்லாம் எங்கள் பேச்சில் மனோஜ், பன்னீரின் குடிப் பிரச்சனைகளும், அவற்றால் வீட்டில் உண்டாகும் பிரச்சனைகளும்தான் அதிகம். இடையிடையே பாலைவனச்சோலை போல் என் பேத்தி அமுதா மற்றும் டாக்டரின் பேரன் சச்சினின் சேட்டைகள் பற்றிப் பேசி மகிழ்வோம்.

இதனிடையே மனோஜின் மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்தாள். பிரசவம் கேரளா கோட்டயத்தில் நடத்த முடிவானது. நார்மல் பிரசவம் சிரமம் என்றதால் சிசேரியன் செய்ய முடிவானது.

பாபு டாக்டர், ஜாதகம், சோதிடம் போன்றவற்றில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர். ஆனால், சாந்தம்மா அதிலெல்லாம் அளவுகடந்த நம்பிக்கை உள்ளவர். இடையிடையே மனோஜின் ஜாதகத்தையும், சச்சினின் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு கண்டமானூர் சோதிடரிடம் ஓடுவார்.

 சிசேரியனுக்கான தினம்  நவம்பர் 15 (2007) என்று சொல்லப்பட்டதால், இந்த தினத்தைப் பற்றியும் அறிய சோதிடரிடம் ஓடினார். அன்று ஏதோ கருத்த பூராடமாம். அதனால் அதற்கு முன்போ பின்போ பிறப்பதுதான் நல்லது என்றாராம் ஜோசியர்.

ஆனால் மனோஜின் மனைவிக்கு அந்த நவம்பர் 15 அன்றுதான் சிசேரியன் என்று தீர்மானித்துவிட்டார்கள்.  மருத்துவர்களுக்கு ஏற்ற நாள் என்பதாக அவர்கள் சொன்னதும் மனோஜின் மனைவி வீட்டார்களும், சோதிடத்தில் நம்பிக்கை இல்லாததால், அதற்குச் சம்மதித்து விட்டார்கள்.

அதிர்ந்த சாந்தம்மா எவ்வளவோ மன்றாடியும் யாரும் செவி கொடுத்துக் கேட்கவில்லை. பாபு டாக்டர் வீட்டில் 14 ஆம் தேதி இரவில் எல்லாம் இதைப் பற்றி வாதங்கள் நடந்தது. 15 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மனோஜும் சாந்தம்மாவும் ஓம்னியில் கோட்டயம் மருத்துவமனைக்குப் பயணமானார்கள்.  ஏனோ பாபு டாக்டர் அடுத்த நாள் போக முடிவு செய்தார்.

அன்று  முற்பகல் 11 மணிக்கு பாபு டாக்டர் வீட்டில் அவர்களுக்கு உதவிக்குப் பணியாற்றும் ராசாத்தி ஓடி வந்து என்னிடம்,

“ஏதோ பிரச்சனை. வாங்க” என்றார் பதற்றத்துடன்.


------அடுத்த பகுதியில் நிறைவு பெறும்.

 

--------துளசிதரன்

         


36 கருத்துகள்:

  1. திடீர்க் கதை. நல்ல சுவாரஸ்யமாகப் போகிறது. னான் இப்போதுதான் எங்கல் தளத்தில் கேரள டைப் திருமணங்களில் ஒரு கிறித்தவக் கல்யாணம், ஒரு இந்துக் கல்யாணம் அட்டெண்ட் செய்திருக்கிறேன் என்று பதிலளித்திருந்தேன். இரண்டும் இங்கே ஒன்றாய் வந்திருக்கிறாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி! திடீர்க் கதைதான் ஆனால் எழுதி வைக்கப்பட்டு தயாராக இல்லாமல் இருந்தது. இடையில் நீங்கள் எங்கள் ப்ளாகில் கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு ஏதேனும் கதை இருக்கிறதா என்று கேட்டதாக கீதா என்னிடம் சொன்ன போது அப்போது இந்தக் கதை தயாராக இருக்கவில்லை. என் கையெழுத்து புரிந்த அளவு கீதா டைப் செய்து வைத்திருந்தார். இடையில் பல வரிகள் விடுபட்டிருந்ததால் அதை சமீபத்தில்தான் கரெக்ஷன் சொல்லி தயாராக்க முடிந்தது. அப்படியே இங்கு நான் எழுதி சில மாதங்கள் ஆனதால் போட்டுவிட்டோம்.

      உங்களின் கருத்தை அங்குப் பார்த்தேன். ஆமாம் இங்கு இரண்டுமே ஒரே நிகழ்வில்.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  2. பொருத்தமான ஓவியம் ஒன்று இங்கு உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதா, இல்லை இதற்காகவே வரையப்பட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்காக வரையப்படவில்லை. இது ஏற்கனவே நாவலில் இருந்த படம் தான் அதைத்தான் இங்கும் பயன்படுத்திக் கொண்டேன்.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  3. உன்மையில் RIMP மருத்துவர்களை அலோபதி மருத்துவம் செய்யக்கூடாது என்று சட்டம் இருந்தது. அந்தச் சான்றிதழ் பெறுவதுதான் எவ்வளவு எளிதாக இருந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதெல்லாம் சான்றிதழ் பெறுவது எளிதாக இருந்ததாகத் தெரிகிறது. இப்போது எப்படி என்று தெரியவில்லை. இப்போது அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. அருமை... அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    கதை (ஒரு வேளை இது உண்மை கதையோ?) நன்றாகப் போகிறது. விளக்கமாக சொல்லிச் செல்லும் விதம் நன்றாக உள்ளது. அந்த பெஞ்சின் மேல் கதை சொல்பவர் எவ்வளவு பிரியமாக இருக்கிறார் என்பதிலிருந்தே அவர் டாக்டர் பாபுவின் மீதும் எவ்வளவு வாஞ்சையாக இருந்திருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது.

    ஓவியம் நல்ல அழகுடன் கதைக்குப் பொருத்தமாக உள்ளது. ஜோதிடத்தை ஏன் அந்த வீட்டில் சாந்தம்மாவை தவிர வேறு எவரும் நம்பவில்லையோ...? இறுதியில் ஏதோ பதற்றம் என அவ்வீட்டில் பணியாற்றுபவர் வந்து அழைத்ததும், எனக்குள்ளும் அப்பதற்றம் ஒட்டிக் கொள்கிறது. அடுத்த பகுதியை அனைத்தும் நலமாக நடந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நட்பு வட்டத்தில் நான் அறிந்த ஒரு சில நிகழ்வுகள் அவற்றைத் தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதியது.

      சுற்றத்தை விட நட்பு பல சமயங்களில் ஆழமானதாகிவிடுகிறதுதானே!

      கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      கீதா

      நீக்கு
  6. கதை நன்றாக சொன்னீர்கள்.
    நட்பு, காதல், அன்பு, பாசம் , நம்பிக்கை என்று நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

    அடுத்த பகுதியை படிக்க ஆவலாக இருக்கிறேன், நான் நினைத்த விஷயம் , சாந்தாம்மா பயந்தது போல் ஏதோ நடந்து விட்ட்தோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி கோமதி அரசு, நீங்கள் நினைத்த விஷயம் சரியா என்று அடுத்த பகுதியில் தெரிந்துவிடும்.

      //நட்பு, காதல், அன்பு, பாசம் , நம்பிக்கை என்று நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது./

      இவை எல்லாம் நிறைந்ததுதானே வாழ்க்கை.

      கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
  7. மிக அருமையாகச் செல்லும் கதை. நிஜமோ?

    வாழ்வின் பல சம்பவங்கள் கதை போலத் தான் நிகழ்கின்றன.
    கோர்வையாகச் சொல்லும் துளசிதரனுக்கு வாழ்த்துகள்.
    டாக்டர் பாபு சாந்தம்மா, மனோஜ்
    என்று பல பாத்திரங்கள் வந்தாலும் புரியும்படி எழுதி இருப்பதே சுவாரஸ்யம்.

    அதுவும் பிடித்த ஊர்களின் பெயரோட
    கேரளாவின் சாயலுடன்
    பசுமையாக இருக்கிறது. தென் பாகங்களில் இது போலக் கிறித்தவமும்
    இந்துக்களும் கலந்த வாழ்வு மிக சகஜம்.

    அருமையான அடுத்த பகுதிக்குக்
    காத்திருக்கிறேன். நன்றாக இருந்ததுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நட்பு - சுற்று வட்டத்தில் நான் அறிந்த ஒரு சில நிகழ்வுகள் அவற்றைத் தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதியது.

      //வாழ்வின் பல சம்பவங்கள் கதை போலத் தான் நிகழ்கின்றன.//

      ஆமாம். அதிலிருந்து பிறப்பதுதானே கதைகள். சுற்றிலும் நடப்பது நம் கண்ணில் படும் போது அல்லது கேட்கும் போது அவை சில சமயம் பொறி கிடைத்து கதையாக மாறுகிறது.

      வருடம் தேதி கொடுத்து எழுதுவதால் நிஜம் போன்று தோன்றும்.

      //தென் பாகங்களில் இது போலக் கிறித்தவமும்
      இந்துக்களும் கலந்த வாழ்வு மிக சகஜம்.//

      இப்பகுதியில் இப்படி நடப்பது நிறையவே தான். கேரளத்திலும், எங்கள் சுற்றத்திலும்.

      //கோர்வையாகச் சொல்லும் துளசிதரனுக்கு வாழ்த்துகள்.
      டாக்டர் பாபு சாந்தம்மா, மனோஜ்
      என்று பல பாத்திரங்கள் வந்தாலும் புரியும்படி எழுதி இருப்பதே சுவாரஸ்யம்.//

      உங்களின் அன்பும் ஊக்கமும் மிக்க கருத்திற்கு மிக்க நன்றி வல்லிம்மா

      துளசிதரன்

      நீக்கு
  8. இப்போது பதட்டம் எம்முள்...ஆவலுடன்..

    பதிலளிநீக்கு
  9. தமிழ் செல்வன் வரைந்திருக்கும் படம் மிக மிக அருமை. அப்படியே தத்ரூபமாக ஒரு டீக்கடை.
    மனிதர்களின் உருவ அளவும் கச்சிதம். முக பாவனை
    சூப்பர்ப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா. அவர் மிக மிக நன்றாக வரைபவர்.

      இந்தப் படம் நான் எழுதிய கதைப் புத்தகத்தில் போட்ட படம். அதைத்தான் இங்குப் பொருத்தமாக இருக்கும் என்று பயன்படுத்தினேன்.

      மிக்க நன்றி வல்லிம்மா

      துளசிதரன்

      நீக்கு
  10. தமிழ் செல்வன் அவர்கள் வரைந்த ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.

      அவரைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு

      துளசிதர்ன

      நீக்கு
  11. முக்கியமான இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்.

    என்னவென்று அறிய தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பகுதியாகப் பிரித்ததில் நல்ல வேளை இந்த வரி சரியாக அமைந்தது இல்லை என்றால் பிரிப்பது சிரமமாக இருந்திருக்கும்.

      கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  12. கதையின் அமைப்பு உண்மை நிகழ்வை கூறுவதுபோலவே அமைந்துள்ளது... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் உண்மை ஆனால் கற்பனை கலந்தது.

      நாஞ்சில் சிவா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

      துளசிதரன்

      நீக்கு
  13. பதில்கள்
    1. முனைவர் ஐயா, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  14. கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது. பாபு டாக்டர் இப்போது இல்லை என்றாலும் அவர் நினைவில் இருக்கும் பெஞ்ச் எப்போதுமே அவரை நினைவூட்டுகிறது. அதோடு கதையின் சம்பவங்களும் தென்மாவட்ட மக்களின் பழக்கங்களையும் திருமண முறையையும் நினைவூட்டுகிறது. இங்கேயும் அப்படித் தான். அடுத்து என்ன நடந்திருக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆவல். கதைக்குப் பொருத்தமாக ஓவியமும் அமைந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாபு டாக்டர் இப்போது இல்லை என்றாலும் அவர் நினைவில் இருக்கும் பெஞ்ச் எப்போதுமே அவரை நினைவூட்டுகிறது.//

      கதை அதன் வழி பயணிப்பதற்கு ஏற்ப கிடைத்த ஒரு கற்பனை. சம்பவங்கள் அப்பகுதியில் நடந்தவைதான். நான் தேனி மாவட்டத்தில் ராசிங்கபுரத்தில் பிறந்து வளர்ந்ததால் அறிந்தவை.

      ஆமாம் ஓவியம் பொருத்தம் என்று தோன்றியதால் நாவலிலிருந்து எடுத்து இதில் சேர்க்கப்பட்டது.

      உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம்

      துளசிதரன்

      நீக்கு
  15. இந்தக் கதையின் "பாய்சன் கேஸ்" பற்றிப் படித்ததும் தேனியைத் தாண்டிச் சின்னமனூரில் என் சித்தப்பா பார்த்த மருத்துவங்களும், அவர் அடிக்கடி இந்த மாதிரிப் பாய்சன் கேஸ்களை எதிர்கொள்வதையும் நினைவூட்டியது. ஒரு பாய்சன் கேசில் அவர் மருத்துவம் பார்ப்பதை நேரில் பார்க்க நானும், என் பெரியம்மா பெண்ணுமாகச் சென்றிருந்தோம். அந்தக் குழாயைத் தொண்டையில் விட்டு மேலே பெரிய புனல் வைத்து உப்புத்தண்ணீரை ஊற்றுவதைப் பார்க்கையிலேயே வயிற்றை என்னமோ செய்கிறது. இப்போதெல்லாம் எந்த முறை எனத் தெரியவில்லை. இதற்கே அக்ரஹாரத்தில் பலரும் எங்களைக் கண்டித்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் சின்னமனூர் வந்திருக்கிறீர்களா? பசுமையான வயல்வெளி, வாய்க்கால், உயரமான தென்னைமரங்கள், புகழ்கிரி தியேட்டர், அதன் அருகில் குச்சனூர் கோயில், என்று உங்கள் வரிகள் அருமையான என் கடந்தகால வாழ்க்கை நிகழ்வுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வைத்தது.

      உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
    2. அந்த பாய்சன் கேஸ்கள் அந்தப் பகுதிகளில் ரோசக்கார மனிதர்கள். மனது நோகப் பேசிவிட்டால் (கவரிமான் போல்) பருத்திச் செடிக்கு அடிக்கும் இகலெக்ஸ், ரோஜர், அரளி விதை சாப்பிட்டு உடனே தற்கொலை முயற்சிதான். எனது 8,10 வயதுவரை...... கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சிகளும் நடக்கும். 70 களில் கிணற்றில் தண்ணீர் வற்றிப் போந்தால் பாய்சன் கேஸ்கள். நீங்கள் சொல்லியிருப்பது போல் வாந்திக்கும், எனிமா கொடுப்பதற்கும் அந்த குழல் பொருத்திய கருவி வைத்து என்று எல்லாம் நினைவில். இப்போது அங்கு எப்படி என்பது எனக்கும் தெரியவில்லை. என் படிப்பு முடிந்ததும் கேரளத்திற்கு வந்துவிட்டதால் தெரியவில்லை. மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
    3. சின்னமனூர் எங்க சித்தப்பா மருத்துவராக இருந்த ஊர். அவருடைய சொந்த ஊரும் சின்னமனூர் தான். புகழ்கிரி திரையரங்கில் தான் நான் "உயர்ந்த மனிதன்" "நெஞ்சிருக்கும் வரை" என சில/பல ஜிவாஜி படங்கள் பார்த்திருக்கேன். சித்தப்பாவைப் பிச்சுமணி என அழைப்பார்கள். பெயர் சுப்ரமணியம். பேருந்து நிலையம் அருகே மருத்துவமனை இருந்தது. எம்ஜிஆர் எப்படிப் பிரபலமோ அதே போல் இவரும் ஏழைகளின் மருத்துவர் எனப் பெயர் பெற்றவர். சின்னமனூர் பஞ்சாயத்துத் தலைவராகவும் இருந்தார். இவர் திடீரென இறந்தபோது ஊரே ஒன்று கூடி உடலைத் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு எல்லா ஜாதி/மதக்காரர்களும் சேர்ந்து கொண்டு அவரவர்கள் உரிமையை நிலைநாட்டிக்கொண்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று பின்னர் மயானக்கரையில் தான் உடலைப் பிள்ளைகளிடம் கொடுத்தார்கள். சுமார் 3,4 மணி நேரம் ஊர்வலமாகச் சென்றிருக்கின்றனர். அக்கம்பக்கத்துக் கிராம மக்கள் அனைவரும் இவருக்காகத் தங்கள் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அந்த மக்களை இவரும் நேசித்தார்.அவர்களும் நேசித்தார்கள்.

      நீக்கு
    4. கிரேட் ...அவர் ஆரோக்கிய காவலர் மட்டுமல்ல, சமூகக் காவலரும் கூட இல்லையா! அதான் அவர் இழப்பு அந்த அன்பான சமூகத்திற்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு. இது போன்ற உயர்ந்த மனிதரைப் பற்றிக் கேட்பதும், பேசுவதும் புண்ணியம்!

      மிக்க நன்றி சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
  16. கதை துவக்கமே நன்றாக இருக்கிறது. படமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன், மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  17. முக்கியமான இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்.ஆவலுடன் அடுத்த பக்கம் நோக்கி.

    பதிலளிநீக்கு