“நான் இந்துவாக இறக்க
மாட்டேன்.” இதைச் சொன்னவர் நம் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை 141
நாட்களில் எழுதி சாதனை படைத்த டாக்டர் ஆம்பேத்கார். அவர் இங்கிலாந்தில்
தங்கியிருந்த வீட்டைக் கோடிகள் கொடுத்து வாங்கும் நம் அரசு அதை ஒரு ம்யூசியமாக
மாற்ற இருக்கிறது. இப்படி எல்லாம் பெருமைப்படுத்தப்படும் அவர் மகர் சாதியில்
பிறந்ததால் பட்ட அவமானங்களாலும், அனுபவித்த வேதனைகளாலும் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள
கோடிக்கணக்கானத் தாழ்த்தப்பட்டவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டவர்கள் படும்
அவமானத்தையும், வேதனையையும் கண்டதாலும், தீண்டாமையை ஒழித்தாலும் அவ்வளவு எளிதாக,
சாதியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்ததாலும் லட்சக்கணக்கான, தாழ்த்தப்பட்டவர்கள்
என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுடன் புத்த மதம் தழுவினார். அவர் சொன்னது போல அவர் ஒரு இந்துவாக
இறக்கவில்லை. புத்த மதத்தவனான [ ஒரு இந்தியனாக இறந்தார்.
இந்து மதத்தை விட்டுப்
போனவர்களுக்கு, போகின்றவர்களுக்குச் சாதியில்லை.
அல்லது சாதிகளால் வரும் பிரச்சினைகள் இல்லை என்பதுதான் உண்மை.
“புத்த மதம், கிறித்தவ மதம், இஸ்லாம் மதம் போல் இந்த இந்து மதத்திற்கு
உயிர் கொடுத்தது யார்?” என்று கேட்டால்,
“இவை எல்லாம் தோன்றும் முன் இந்தியாவில் இருந்த மதம் இது” என்பது
பதில்.
“அம்மதங்கள் தோன்றும் முன் “சைவ, சமண மதங்கள் தானே இருந்தன”?, என்று
கேட்டால்,
“வைணவமும் இருந்தது. சைவமும், வைணவமும் சேர்ந்துதான் இந்து மதம் உண்டானது '' என்பது
பதில்.
“எப்போது, யார், ஏன் சைவத்தையும், வைணவத்தையும் கலந்து இந்து மதத்தை
நிறுவினார்கள்”? என்று கேட்டால் பதிலே இல்லை.
“அப்படியானால் சாதிகள் எப்படித் தோன்றின?” என்பதற்குப் பதிலாக
“விஷ்ணு பகவானின் நெற்றி, தோள், வயிறு, கால் போன்ற பாகங்களிலிருந்து தோன்றிய
மனிதர்கள், வழி வந்தவர்கள் தான் உயர்ந்த, மற்றும் தாழ்ந்தவர்கள். மிக உயர்ந்தவர்கள், கொஞ்சம் உயர்ந்தவர்கள்,
இடைப்பட்டவர்கள், தாழ்ந்தவர்கள். இப்படி
மேலிருந்து கீழாக '' என்கின்றார்கள்.
“அப்படியானால், சிவநெறி பின்பற்றி வாழும் சைவ மதத்தினருக்குச் சாதிகள்
பாதகமில்லையே ?'' என்று கேட்டால்,'' இந்து மதத்தில் சைவமும் உட்படுத்தப்பட்டதால், சாதி
சைவ மதத்தினருக்கும் பாதகமே'',என்பது பதில் .
இப்படி இறைவனைக் கூறு போட்டு ஏலம் விட்டதைப் பார்த்த , இறைவன்
பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்களையும், அநீதிகளையும் கண்டு, பொறுக்க
முடியாமல்தான், “மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியாததை, இறைவனால் எப்படி பொறுத்துக்
கொள்ள முடிகிறது......அப்படியானால் இறைவனே இல்லை” என்ற முடிவுக்கே வந்தார் தந்தை
பெரியார். மட்டுமல்ல மூட நம்பிக்கைகள் மற்றும் தீண்டாமையை ஒழிக்க
சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியும், கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தும் , ஆதரித்தும் திராவிடர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால்,
எப்படியோ காலப்போக்கில் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களில் பலரும்,
பார்ப்பன விரோதத்தையும், நாத்திகத்தையும், மூட நம்பிக்கை எதிர்ப்பையும் மட்டும் உள்வாங்கி, சாதி ஒழிப்பு மற்றும்
தீண்டாமை ஒழிப்பை மறந்தே போனார்கள் என்றே தோன்றுகின்றது. அதன் விளைவோ தமிழகத்தில் சாதிக்கட்சிகளும்,
சாதிக் கலவரங்களும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. முற்பட்டோருக்கும், பிற்பட்டோருக்கும் இடையே
இருந்த இடைவெளி , விரிசல் இப்போது பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே
வந்திருக்கிறது. ஒரு காலை பாதித்திருந்த
யானைக்கால் வியாதி மருந்து சாப்பிட, அது வலது காலை விட்டு இடது காலுக்கு வந்த கதை
போலாகிவிட்டது.
மதசார்பற்ற இந்தியாவாக
இனி இந்தியா இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூச்சலிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது .அதற்கு எதிர் குரல்
கொடுத்து பலனில்லை எனும் நிலை நம்நாட்டில்.
எனவே, மதத்தையும், சாதியையும் ஒழிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். சரிநிகர் சமானமாக பல மதங்கள் உள்ள நம் நாட்டில் , சரிநிகர் சமானமான பல சாதிகள் என்ற நிலையை உருவாக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே
தோன்றுகிறது. முற்பட்டவர்களை, பிற்பட்டவர்கள் புறக்கணித்து நாங்கள் ஒருவிதத்திலும்
பிற்பட்டவர்கள் அல்ல என்று உறுதியாய் இருந்தது இடைவெளியை இல்லாமல் செய்தது போல், பிற்பட்டோரிடம், நாங்கள்
ஒருவகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று சொல்லி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்
வாழவேண்டும். தாழ்வு மனப்பான்மை
உள்ளவர்கள்தான் உயர்வு மனப்பான்மை உள்ளோரது சூழ்ச்சிக்குப்
பலியாடாகின்றவர்கள். “நாமார்க்கும்
குடியல்லோம்” என வாழ்ந்தால் மட்டும் போதாது. அப்படி வாழத் தெரியாத வாழ
தைரியமில்லாத நம்மைச் சூழ்ந்துள்ள எல்லோருக்கும் உதவி, அப்படிப்பட்டவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தி, வரையப்பட்ட ஒரு கோடை
அழிக்காமலேயே அதனருகே அதை விட பெரிய கோடாகவோ, அதற்கு சமமான கோடாகவோ மாறி, மாற்றி
இன் நிலைக்கு ஒரு விடை காண வேண்டும்.
சாதியை ஒழிக்க சில சமுதாயத்தினர் மட்டும் சாதிப் பெயரை இனியும்
உபயோகிக்காமல் இருந்து பயனில்லை. முள்ளை முள்ளால் எடுப்பது போல் - If you want peace be prepared for war,
என்பதைப் போல - சாதியை சாதியால்
முறியடிக்க, எல்லோரும் அவர்களுக்கு உகந்த ஒரு பெயரை சாதிப் பெயராக உபயோகிப்பது
நல்லது என்று தோன்றுகின்றது. அப்படி எல்லோரும் உபயோகித்தால் நாளடைவில் சாதிப்
பெயர் என்பது ஒரு சுருக்கொப்பம் (இனிஷியல்) போல ஒரு அடையாளம் ஆக வாய்ப்பு உண்டு. இதற்கு
உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், வட இந்தியாவில் பிற்பட்டவர்களான யாதவர்கள்,
யாதவ் என்று சாதிப் பெயர் வைத்துள்ளது போல் மீணா எனும் தாழ்த்தப்பட்டவர்களும்
தங்களது சாதிப் பெயரை தங்கள் பெயருடன் உபயோகின்றார்கள். பெரும்பாலும், அப்படி எல்லோரும்
அவரவர்களது சாதியை அவர்களது பெயருடன் இணைத்திருக்கிறார்கள். எனவே, சாதி பார்க்கும்
மனிதர்களிடையே நான் இன்ன சாதி என்று சொல்லத் தயங்கவோ, அஞ்சவோ தேவையில்லை. ஏனென்றால் சாதியை உருவாக்கியது இறைவன் அல்ல.
தந்திரசாலிகளான சில சுயநலவாதிகள். அந்த விஷப்பாம்புகளுக்கு பாதுகாவலர்களாய்
நிற்பவர்கள், அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அநீதியைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை.
அதனால் தான் “காலமெல்லாம் வாழும் காதல்” எங்கெல்லாம் எப்போதெல்லாம்
எட்டிப்பார்க்கிறதோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் அவர்கள், நம் நம்பள்கி சொல்வது போல், “யாரவன்/அவள்
நம் சாதியா. அப்படின்னா, சம்பந்தம் பேசிக் கல்யாணத்தைப் பேசுவோம். இல்லை வேற
சாதின்னா அருவாளை எடுத்துட்டுப் போய் கலவரம் பண்ணி அவங்க கதைய முடிப்போம்” என்று
கொந்தளிக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் வாழும் நாட்டில் தான், சாதியில்லை என்று உதட்டளவில்
மட்டும் சொல்லாமல், சாதி பாராமல் எழிலை தன்னில் ஒரு பாகமாக்கி சாதியை ஒழித்து
வாழும் பெருமாள் முருகன், நம் முன்னோர்கள் சாதி பார்த்ததில்லை எனும் உண்மையை தன்
மாதொருபாகனில் சொல்லத் துணிந்திருக்கிறார்.
அதற்கு நாங்கள் எழுதிய விமர்சனத்திற்கு வந்த பின்னூட்டங்களுக்கு அவ்வப்போது
பதில்கள் கொடுத்திருக்கின்றோம். ஆனால், பல
பின்னூட்டங்களிலும், பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பல நல்ல விளக்கங்கள்
தரப்பட்டிருந்தன. நிறைகளும், குறைகளும் சுட்டிக்காட்டப்பட்டன. பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும், எதிராகவும்
நண்பர்கள் மலரன்பனும், வருணும் அருமையாக எழுதியிருந்தார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்தான் ஒவ்வொரு
பிரச்சினைக்கும் இரு வாத முகங்கள். அவற்றை எல்லாம் எழுதிய நம் பதிவர் நண்பர்கள்
எல்லோரும் இடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் ஆழமாக வாசித்து, உணர்ந்து கருத்துச்
சொல்லியிருக்கிறார்கள். எனவே, அவையெல்லாம்
இவ்விடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் புரிந்து கொள்ள அவசியாமானவையே.
இங்கு முக்கியமாக சாதி பற்றிய எங்கள் கருத்தைச்
சொல்லவே இந்த இடுகை. சாதி இரண்டொழிய வேறில்லை என்று நம்பும் எங்களுக்கு, சாதி ஒழிய
வேண்டும் என்று விரும்பும் எங்களுக்கு மாதொருபாகனை எழுதிய முருகனுக்கு எதிராக
நடந்தவை வேதனை தந்தது. அதே சமயம், அவர்
கொங்கு வெள்ளாளரையும், திருச்செங்கோடையும் குறிப்பிட்டதால், அவர்களுக்கு ஏற்பட்ட
அவமானம், மற்றும் வேதனையை நினைக்கையிலும் எங்களுக்கு வேதனையே. எழுத்தாளரான முருகனே தனது படைப்பு கொங்கு
வெள்ளாள சமுதாயத்தையும், திருச்செங்கோடில் வாழ்பவரையும் வருத்தியதை எண்ணி வருந்தி ,'' திருச்செங்கோடு மக்களை விட பெரிதல்ல எனது புத்தகங்கள் '', என்று சொல்லிய பின்னும்,
அவரை மீண்டும் மீண்டும் சொல்லாலும், செயலாலும், துன்புறுத்த முயல்வது
மனிதாபிமானமுள்ளவர்கள் செய்யக் கூடாத ஒன்று. சென்னை உயர்நீதி மன்றமும், இது போல்
ஒரு எழுத்தாளனின் எழுத்துச் சுதந்திரத்தை, மாவட்டப் பஞ்சாயத்து தன் அதிகாரத்தை
உபயோகித்து கவர்வது முறையல்ல என்று சொல்லி இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள
பெரும்பான்மையான எழுத்தாளர்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவு
தெரிவித்து அவர் தொடர்ந்தும் எழுத வற்புறுத்துகிறார்கள் . மட்டுமல்ல
அவர் இதற்கு முன் கொங்குநாட்டவருக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் எழுதியவைகளை
எல்லாம் மறந்து விடவும் கூடாது. அது போன்ற
பல படைப்புகளை வாசிப்பவர்களது மனம் புண்படாமல் இதற்கு முன் எழுதியது போல் அவரால்
இனியும் எழுத முடியும். அவர் எழுத
வேண்டும். எழுதுவார் என்று
நம்புவோம்.
பின் குறிப்பு: “1950, 60 களில் பிறந்த
கொஞ்சப் பேர்தான், இப்பவும் சாதி பேசி கலவரம் பண்ணிக் காதலைத் தடுக்கறாங்க. அவனுக செத்தாத்தான் இந்தச் சாதிப் பிரச்சினை
ஒழியும்” கயல் படத்தில் நாயகன் சாதி பாராமல் காதலிக்கும் காதலர்களை பிரிக்க முயல்பவர்களைப்
பற்றிச் சொல்லும் வார்த்தைகள்தான் இவை.
இதைக் கேட்டதும், அந்த வசனம் எழுதிய கைககளைக் குலுக்கி அவர் வாயில்
சர்க்கரை போட வேண்டும் போலிருந்தது. திரைப்படத்தில் வரும் ஒரு வசனம்தான். ஏட்டுச்
சுரைக்காய் கறிக்கு உதவாதுதான் என்றாலும், இளைஞர்களில் சிலரேனும் இப்படிச்
சிந்திக்கின்றார்கள் என்பதை எண்ணி மகிழத் தோன்றுகின்றது. இப்படி எல்லோரும் சிந்த்திக்க மாட்டார்களா என்ற
ஏக்கமும் வருகின்றது. எப்படியோ மனதில் சின்னதாக
ஒரு நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தலை தூக்குகின்றது.