வெள்ளி, 28 நவம்பர், 2014

அளவுக்கு மீறினால், அமிர்தம் மட்டுமல்ல, அன்பும் நஞ்சே!


படம் : இணையத்திலிருந்து

      இங்கு நான் சொல்லப் போகும் விசயம், துளசி எங்கள் வலைத்தளத்தில் எழுதிய “கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்” என்ற பதிவை அடிப்படையாகக் கொண்டது. http://thillaiakathuchronicles.blogspot.com/2014/11/Corporal-Punishment-My-Experience.html

      அதில், அவர் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து எழுதியிருந்தார். ஆசிரியை ஒருவர்  மாணவனைக் கன்னத்தில் கிள்ளியதற்காக, அவனது தாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த ஆசிரியருக்குப் பெரிய தொகை ஒன்று அபராதமாக விதிக்கப்பட்டது. அதுவும் போதாது என்று குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றிருக்கின்றார் அந்தத் தாய். இது அந்தக் குழந்தைக்கு நல்ல உதாரணம் அல்ல. துளசி, தனது அனுபவங்களையும் சொல்லி, அதனால் “ஆசிரியர்களே அடிக்காதீர்கள்” என்று முடித்திருந்தார். மிகவும் சரியே!. இன்னும் ஒரு சில இடுகைகளில் ஆசிரியர்கள் அடிப்பதையும், தண்டனைகள் கொடுப்பதைப் பற்றியும் வேதனையுடன் எழுதியிருந்தோம். எனது கருத்திலும் பெரும் மாற்றம் இல்லை என்றாலும் ஒரு சிறு திருத்தத்துடனான கருத்து. இது உளவியல் சார்ந்தக் கருத்து. இது பெற்றோர்களாகிய நமக்கு. என் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் எதனால்? இதோ ஒரு சம்பவம்.  அது என்னைப் பலவாறாகச் சிந்திக்க வைத்தது. 

      மேற்சொன்ன சம்பவம் நடந்தது பள்ளியில். இதோ இந்த சம்பவம் கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில். மிகவும் திறமையான ஆசிரியர் மட்டுமல்ல, நேர்மையான, கிட்டத்தட்ட தமிழ் திரைப்படத்தில் காட்டப்படும் நேர்மையான, தைரியமான, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஹீரோ போன்ற குணநலனுடன் உள்ளவர். வசனங்களும் அப்படியே. பாடம் நடத்தும் போது ஒரு மாணவன் டெஸ்கின் மேல் தாளம் போட்டு பாடிக் கொண்டிருப்பானாம்.  அதனால், மற்ற மாணவர்கள் பாதிக்கப்பட அவர்கள் இந்தப் பேராசிரியரிடம் வந்துத் தொடர்ந்து புகார் சொல்லியிருக்கின்றார்கள். பேராசிரியர் அந்த மாணவனை அழைத்து எச்சரித்துள்ளார். 

மாணவன் உடனே, “நான் யாரு தெரியுமா? யாருனு தெரியாம நீங்க எங்கிட்ட பேசுறீங்க” என்று சொல்ல, ஹீரோ பேராசியருக்குக் கோபம் வந்துவிட்டது. (இப்படி ஒரு மாணவன் அல்ல.  பல மாணவர்கள் பல கல்லூரிகளில் இருக்கத்தான் செய்கின்றார்கள். நம் திரைப்படத்தில் வரும் மாணவர்களைப் போல். இதைப் பார்த்து திரைப்படமா இல்லை படம் பார்த்து இவர்களா?!!)

“நீ யாரா இருந்தா எனக்கென்ன. காலேஜ்ல எனக்கு நீயும் மத்த ஸ்டூடன்ட்ஸ் போலத்தான். மத்த பசங்க படிக்கணும். அவங்க கஷ்டப்படற குடும்பத்துலருந்து வந்து, பணம் கட்டிப் படிக்கறாங்க. அவங்கள நீ எப்படி டிஸ்டர்ப் பண்ணலாம்? நீ பெரிய வீட்டுப் பையானா இருக்கலாம்.  ஆனா, எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். நீ நல்ல மாணவான இருக்கறதுக்குத்தான் இந்த அறிவுரை. இல்லன்னா உன்னை டிசி கொடுத்து வெளிய போக வைச்சுடுவேன். டிகிரியே வாங்க முடியாமப் போயிடும்.” என்று வசனம் பேச மாணவன் அடுத்த நாளே தனது பெற்றோரோடு கல்லூரிக்கு வந்துவிட்டான். அவனது தந்தை பெரிய பதவியில் இருப்பவர்.  கல்லூரியின் சாதியைச் சேர்ந்தவர் வேறு. பேராசிரியருக்குப் பிரச்சனைகள் தொடங்கியது. கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை அழைத்து,

“நீங்கள் கல்லூரிக்கு நல்லது செய்திருப்பதால் நல்ல முறையில் உங்களை வெளியில் அனுப்புகின்றோம்.  இல்லையென்றால் நடப்பதே வேறு”. யதார்த்தத்தில், ஹீரோயிசத்தைக் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். ஆனால், தனது அறிவையும், கொள்கையையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர். சலாம் போடும் ஆளும் அல்ல. இப்படித்தான் இந்தப் பேராசிரியர் பல கல்லூரிகள் மாற வேண்டியதாயிற்று. இவர் வேறு யாருமல்ல, கணவர்.

இப்போதையக் கல்வி நிறுவனங்கள். சாதி சார்ந்தவையாக இருக்கின்றன இல்லையேல் கட்சி சார்ந்தவையாக இருக்கின்றன.

இந்த சம்பவம் என்னைப் பலவாறாகச் சிந்திக்க வைத்தது. இந்த மாணவனின் வளர்ப்பு முறையைப் பற்றி. எவ்வளவு கேவலமாக வளர்க்கப்பட்டிருக்கின்றான் என்பதை எண்ணி. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம்.  தந்தை பெரிய பதவியில் இருந்தால் எதை வேண்டுமானாலும் நடத்திக் காட்டலாம்.  என்று. இந்த மாணவன், எதிர்காலத்தில், இந்த சமுதாயத்தில் எப்படிப்பட்ட ஒரு நபராக இருப்பான்?  எங்கு வேண்டுமானாலும் தன் பதவி, பணம், சாதியை வைத்துச் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் அல்லவா உருவாகின்றான். இது போன்றவர்களால்தானே ஊழல் மிக்க ஒரு சமுதாயம் உருவாகின்றது? விஷமுள்ள விதைகள் ஊன்றப்படுகின்றன? அப்படித்தான் வருவார்கள் என்று சொல்ல முடியாதுதான் என்றாலும், பெற்றோர்களாகிய நாம் அதற்கு விதை ஊன்றாமல் இருக்கலாமே.

அந்தப் பள்ளிச் சம்பவத்தின் தொடர்ச்சிதான் இது போன்ற கல்லூரிச் சம்பவங்கள். அந்தச் சிறு பள்ளி மாணவனின் மனதில் ஒரு தவறான எண்ணம் உருவாக வழிவகுக்கலாம்.  நமக்கு நம் பெற்றோர் இருக்கின்றார்கள்.  நாம் என்ன செய்தாலும் அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற எண்ணம் உருவாகிடலாம்.  ஆசிரியர்கள் அடிக்கக் கூடாதுதான். ஆசிரியர்கள் கடினமானத் தண்டனைகள் கொடுக்கக் கூடாதுதான். குழந்தைகளைக் கீழ்தரமாக நடத்தக் கூடாதுதான்.  தகாத வார்த்தைகளால் வசை பாடக் கூடாதுதான். ஆனால், அதே சமயம் பெற்றோர்களாகிய நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

நம் குழந்தைகள் நமக்குச் செல்லங்கள் தான். மறுப்பதற்கில்லை.  ஆயினும், ஆசிரியரின் முன்பும், பள்ளியிலும் அவர்கள் எல்லோரும் சமம்தான். சிறிய தண்டனைகள் இருக்கும் பட்சத்தில், நாம் ஆசிரியர்களிடம் தனிப்பட்ட முறையில் நமது ஆதங்கத்தைச் சொல்லலாம். பேசவேண்டும். நட்புறவு கொண்டாட வேண்டும். நம் குழந்தையைப் பற்றியும் பேச வேண்டும். நாம் ஆசிரியர்களைக் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால், நம் குழந்தை முன்னிலையில் ஆசிரியர்களைச் சந்தித்துக் கேள்விகள் கேட்பது நல்லதல்ல. நம் குழந்தைகள் முன்னிலையில் அந்த ஆசிரியரை இகழ்ந்து பேசுதலும் கூடாது. பிரச்சினைகளை பெற்றோராகிய நாமும் ஆசிரியரும் தீர்த்துக் கொள்ள வேண்டுமே அல்லாது வெளியில் கொண்டுவருவது, நீதிமன்றம் செல்வது என்பது நம் குழந்தையின் மனதில் தவறான எண்ணங்களை விதைத்து எதிர்மாறான விளைவுகளை விளைவிக்கும்.  அன்பு அவசியம் தான்.  ஆனால், அது குருட்டுத்தனமான அன்பாகவும், அதீத செல்லமாகவும் இருத்தல் குழந்தைகளுக்குத் தவறான அபிப்ராயத்தை மனதில் விளைவிக்கலாம். அது நம் குழந்தையின் ஆளுமைத் திறனில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.  இங்கிருந்துதான் சமூகக் குற்றங்கள் துளிர்விட ஆரம்பிக்கின்றன.

அப்படியே ஆசிரியர்கள் தண்டனை எதுவும் கொடுத்திருந்தாலும், நம் குழந்தைகளுக்கு ஆசிரியரைப் பற்றியத் தவறான எண்ணம் வந்துவிடக் கூடாது. அது எப்படிப்பட்டத் தண்டனை, ஆசிரியர் எதற்காகத் தண்டனை கொடுத்தார்கள் என்பதை நாம் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உணரவேண்டும். குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.  ஆசிரியரிடம் உள்ள நல்லவற்றையும் பேசவேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு ஆசிரியர் மேல் தவறான எண்ணம் வந்துவிட்டால் அந்தப் பாடத்தைப் படிப்பதிலும், கற்றலிலும் ஆர்வம் குறைந்து விடலாம். அது நம் குழந்தையைத்தானே பாதிக்கும்? சற்று யோசிக்க வேண்டும். அதே சமயம், ஆசிரியர்கள், பாலியல் குற்றம், வன்முறைகளில் ஈடுபட்டால் நிச்சயமாக நாம் நீதிமன்றப் படிகள் ஏறத்தான் வேண்டும்.

நம் கண்மூடித்தனமான அன்பினாலும், பாசத்தினாலும், குழந்தைகளை ஆதரிப்பதினால், அந்தச் சூழலில் வளரும் குழந்தைகள்தானே மேலே சொன்ன சம்பவத்தில் வரும் இளைஞனைப் போல் பிற்காலத்தில் உருவாக வழிவகுக்கின்றது? இது போன்ற எண்ணங்கள் குழந்தைகளை பருவ வயதில் திசை மாற வழி வகுக்க நேரிடலாம் அல்லவா? மகாபாரதத்து திருதாஷ்டிரனைப் போல்!

எனது மகனிற்கும் இது போன்ற நிகழ்வுகள் இருக்கத்தான் செய்தது.  அதுவும் கற்றலில் குறைபாடுடன் இருந்ததாலும், அவனுக்கும் பள்ளிக்கும் இடையே பனிப்போர் நடக்கத்தான் செய்தது. அவன் வீட்டில் வந்து பள்ளியில் என்ன பாடங்கள் நடத்தினார்கள் என்று சொல்ல மாட்டான். தான் பள்ளியில் எழுதி ஆசிரியர் திருத்திய தாள்களைச் சுருட்டி பையில் வைத்திருப்பான்.  நான் அவனது பையை துழாவினால் கிடைக்கும் தாள்களில் இருந்துதான் அவன் மன நிலையைப் படிக்க முடிந்தது.  அவனுக்கு நண்பர்கள் இல்லை.  ஏனென்றால் அவன் வகுப்பில் தரத்தில் இறுதியில் இருப்பவன் இல்லை ஏதேனும் பாடத்தில் தோல்வி காண்பவன் ஆயிற்றே. தரத்தில் இருந்தால் மட்டுமே நட்புகள் கிடைக்கும். இருவர் மட்டுமே இவன் குணம் அறிந்து பழகியவர்கள்.  அவர்கள் வீட்டிற்குச் சென்ற போதுதான் நான் அறிந்தேன், பள்ளியில் ஆசிரியர் அவன் சந்தேகம் கேட்டதற்கு அவனைப் படிக்காத மாணவன் என்று எல்லோர் முன்னும் திட்டியதாக. அவனுக்குக் குறைபாடு இருந்ததால் சந்தேகம் கேட்பதே அரிது. அரிதாய்க் கேட்ட சந்தேகத்திற்கும் வசை கிடைத்ததால் மகன் நத்தை போல் சுருங்கத் தொடங்கினான்.

 அவர்களால் இவனைப் புரிந்து கொள்ள முடிவில்லை. நான் அவனது பள்ளி ஆசிரியர்களைச் சென்று சந்திக்கவில்லை. ஏனென்றால் அதில் எந்தவித உபயோகமும் இல்லாமல் போனதால். அவனைப் பற்றிய குறைகள் மட்டுமே பேசப்பட்டது. எனவே, நானே அவனை நத்தை ஓட்டிலிருந்து வெளியில் கொண்டுவர முயற்சித்தேன். ஆசிரியர்கள், அவனது மதிப்பெண்களைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ஆனால், வீட்டில் அவனிடம் அவன் மதிப்பெண்களைப் பற்றிப் பேசாமல் அவனது அறிவை வளர்க்கும் விதத்தில், கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மட்டுமே பேசினோம். நல்ல புத்தகங்களையும், இசையையும், நல்லத் திரைப்படங்களையும் (எல்லா மொழிகளிலும்) அறிமுகப் படுத்தினேன். இயற்கையையும், வாழ்க்கையை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக் கொடுத்தேன். மதிப்பெண்களை விட ஒரு நல்ல மனிதனாக வர வேண்டும் என்று கற்றுக் கொடுத்து, ஆசிரியர்கள் குறை சொன்னாலும் நல்லதற்கே என்று நேர்மறையாக எடுத்துக் கொண்டு, மதிக்கவும் சொல்லிக் கொடுத்தோம்.

மிகச் சிறு வயது முதலேயே கால்நடை மருத்துவனாக வேண்டும் என்ற அவனது விருப்பத்தை அடைய வேண்டியதற்குத் தேவையான தன்னம்பிக்கையை அவன் இழக்கக்கூடாது என்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். நான் எடுத்துக் கொண்ட ஒரே ஆயுதம் அதுதான். படி என்று சொல்லாமல், அவனது லட்ச்சியத்தையும், வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதற்குத் தேவையான நல்ல விசயங்களையும் மட்டும் பேசிப் பேசி ஆர்வத்தைத் தூண்டி, ஊக்கம் அளித்து, பள்ளியின் மீதும், ஆசிரியர்கள் மீதும், பாடங்களின் மீதும் வெறுப்பு வாராமல், நேர்மறை எண்ணங்களை ஊட்டி, அவன் மனதைப் பக்குவப்படுத்தத் தொடங்கினோம். ஏனென்றால், கற்றலில் குறைப்பாடுள்ள மகன் இந்தச் சமூகத்தில் கால் ஊன்றி, ஒரு நல்ல மனிதனாக எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால்.

பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளைப், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் எதிரான எண்ணங்களுடன் வளர்க்காமல், அவர்களுக்கு, வாழ்க்கை என்பதே சவால்தான்; இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் என்பதைக் கற்றுக் கொடுத்து அதை எதிர் நீச்சல் அடித்துக் கடக்கவும், நேர்கொள்ளவும் கற்றுக் கொடுக்கலாமே.  பள்ளி, கல்லூரிகளில் மட்டும்தானா தண்டனைகள்? சமூகத்திலும், தொழில் சார்ந்த இடங்களிலும் பல அவமானங்களும், தண்டனைகளும் வாழ்க்கையில் வரத்தானே செய்கின்றன. குழந்தைகள், பள்ளியிலும், கல்லூரிகளிலும் நம் ஆதரவுடன் நீந்திவிடலாம். ஆனால், இறுதிவரைத் தனிப்பட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள? எனவே, குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும், ஆளுமைத் திறனைக் கற்றுக் கொடுங்கள். பயிற்சி அளியுங்கள். இதனை என்னால் மிகவும் ஆணித்தரமாகவும், தைரியமாகவும் உரைக்க முடியும். காரணம், எனது எதிர்நீச்சல் வாழ்க்கையும், அனுபவமும், முயற்சிகளும், அதனால் ஏற்பட்ட இன்றைய பலனுமே இந்தக் கருத்துக்களைக் குறித்துப் பேச வைத்துள்ளது. தொடர்வோம். கல்வித் துறையின் அவலங்கள் பற்றி.


47 கருத்துகள்:

  1. பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளைப், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் எதிரான எண்ணங்களுடன் வளர்க்காமல், அவர்களுக்கு, வாழ்க்கை என்பதே சவால்தான்; இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் என்பதைக் கற்றுக் கொடுத்து அதை எதிர் நீச்சல் அடித்துக் கடக்கவும், நேர்கொள்ளவும் கற்றுக் கொடுக்கலாமே//

    ஆம் பெற்றோர்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    அவர்கள் பிள்ளைகளுக்கு நல்லது,மரியாதை, தவறு செய்தால் திருத்திக் கொள்ளல், என ஆரம்பத்திலேயே ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டி கொண்டுவந்தால்...பிற்கால சமூகத்தில் நல்ல பிரஜைகளாக நடமாடுவார்கள்.

    தம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெற்றோர்கள் நல்ல வழிகாட்டியாகவும், உதாரணமாகவும் இருந்துவிட்டால் .பிற்கால //சமூகத்தில் நல்ல பிரஜைகளாக நடமாடுவார்கள்.// மிகவும் சரியே! மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  2. //ஆளுமைத் திறனைக் கற்றுக் கொடுங்கள். பயிற்சி அளியுங்கள்.//

    அருமையான கூற்று !சின்ன விஷயத்துக்கு பெற்றோர் இப்படி செய்தா பின்னாளில் கஷ்டபடபோவது அந்த மாணவனே..பெற்றோர் அதிக செல்லம் கொடுத்தல் தவிர்ப்பது மாணவர்களுக்கு நல்லது ..
    மகனின் உயர்வுக்காக நீங்கள் எவ்வளவு முயற்சிதிருக்கிறீர்கள் ..பாராட்டுக்கள் மனம் நெகிழ்ந்தது .உங்கள் பிரயாசைகள் முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும் ..உங்கள் மகன் மிகவும் கொடுத்து வைத்தவர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களது புரிதலுக்கும், பாராட்டிற்கும். பார்க்கப் போனால் நம் வலைதளங்களில் பல சகோதரர்கள், சகோதரிகள், (தாங்க்ளும்தான்) மிக மிக நன்றாகக் குழந்தைகளை வளர்க்கின்றீர்கள். நான் சொல்லி இருப்பது பெருமைக்காக இல்லை. பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்குகுறைபாடுகள் இருந்தாலும் நல்ல விதத்தில் வளர்ப்பதற்காகத்தான்...

      நீங்கள் எங்கள் ஃப்ளாகில் இன்று பாசிட்டிவ் செய்திகள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதில் ஒரு பெற்றோர், தங்களது காது கேளாத பேச வராத குழந்தைகளை நல்ல நிலைக்கு, நல்ல குழந்தைகளாக வளர்த்துள்ளார்கள். எவ்வளவு பெரிய விஷயம்....வியந்து விட்டேன்! அதைத் தெரிவித்த நண்பர் ஸ்ரீ ராம் அவர்களுக்கும் நன்றி...

      மிக்க நன்றி சகொதரி.

      நீக்கு
  3. நீங்க கணவர் என்று சொல்லும்முன் தோன்றிய விஷயத்தை சொல்கிறேன் தோழி! கொள்கைக்காக வாழ்கிறவர்களுக்கு ஊதியம் இரண்டாம் பட்சம். இதுபோன்ற ஒரு சூழலில் அந்த பணியை தூக்கிஎறிந்து விட்டு மற்றொன்றை தேடிக்கொள்ளும் துணிவும் தெளிவும் உங்க உறுதுணையும் இருப்பது பெரிய விஷயம் இல்லையா??

    ஒரு நல்ல பெற்றோராய், நல்ல முன்மாதிரியாய் இருக்கிறீர்கள் தோழி!! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி! அப்படி இருப்பது நல்லதுதான். நானும் அது போன்ற எண்ணங்களை உடையவள் தான்....ஆனால் நாம் நினைப்பது போல் இந்த உலகம் இயங்காது. யதார்த்த வாழ்க்கைக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். நம் கொள்கைகளையும், விட்டுக் கொடுக்காமல், நேர்மையாக அதேசமயம் யுக்தியுடன் யதார்த்த வாழ்க்கையைச் சாமர்த்தியமாகக் கையாளத் தெரியவும் வேண்டும். இந்தப் பேராசிரியரின் சகோதரர்களும் மிகவும் நேர்மையானவர்கள். ஆனால் யதார்த்தட்தை மிகவும் நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவர்கள் வாழ்க்கையைத் தொலைக்காமல். ஐடியல் உலகம் நம் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் தோழி! ம்ம் அதைப் பற்றி ஒரு பதிவு விரைவில் வரும்.....

      நீக்கு
  4. தொடர்ந்து கல்வித்துறை பற்றிய சிந்தனைகளாகவே பதிவிட்டு வருகிறீர்கள்.

    இந்தப் பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. கல்லூரியில் அடாவடி செய்த மாணவன் பற்றியும், சந்தேகங்கள் கேட்டால் புறக்கணிக்கப்பட்ட மாணவன் (மகன்) பற்றியும் சொன்னது சிறப்பு. நான் அப்படிப் பார்த்த மாணவர்கள் பற்றியும் நினைவுக்கு வந்தது. நானுமே கூட சந்தேகங்கள் கேட்டு, வந்த பதில்களினால் சுருங்கிப் போனவன்தான்.என் அம்மா படிக்காதவர். என் படிப்பைப் பற்றி அவருக்குத் தெரியாது. அப்பா மார்க்ஷீட் பார்க்கும்போது மட்டும் திட்டுவார்! அவரும் எனது படிப்பைப் பற்றி 'இப்படிச் செய், அப்படிப் படி' என்று சொன்னதில்லை!

    ஹூம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! ஆம்! இன்னும் ஒரு பதிவு இருக்கின்றது. அத்தோடு முடித்து விடுவோம். கல்வி பற்றி மது அவர்கள் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். தென்றல் கீதா அவர்கள் மாணவர்கள் தற்கொலை பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தார். நண்பர் சொக்கன் அவர்களின் பதிவுகள், கரந்தையாரும், நீங்களும், விசுஆசானும், மணவை ஜேம்ஸ் அவர்களும், சகோதரி ஏஞ்சலின்,கில்லர்ஜி அவர்களும் பின்னூட்டத்தில் சில கருத்துக்களைத் தெரிவிக்க அது சில இடுகைகளுக்கு வழி வகுத்தது.

      அடுத்த பதிவு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணும் பதிவு. அதற்குப் பிறகுதான் இந்தக் கல்வி பற்றிய இறுதிப் பதிவு.
      உங்க்ளது இந்தப் பின்னூட்டம் மிகுந்த வேதனையைத் தந்தது. நீங்கள் சுருங்கிப் போனது போல மகனும்..அடுத்தப் அப்திவில் அதுவும் வருகின்றது.

      உங்களைப் போலத்தான் எங்கள் வீட்டிலும். பெரிய கூட்டுக் குடும்பம். ஒப்பிடுதல் என்று...நாந்தான் எங்கள் வீட்டிலேயே மிகவும் குறைவான மதிப் பெண்கள் எடுப்பவள். எனது கசின்ஸ் எல்லோரும் ராங்க் வாங்குபவர்கள். எனக்கு விழும் அடி பாருங்கள். நம்ப மாட்டீர்கள் 12 ஆம் வகுப்பு வரை அடிவாங்கியிருக்கின்றேன். எங்கள் காலமும் அப்படித்தான் எனும் போது உங்கள் காலமும் அப்படித்தானே இருந்திருக்கும்....விடுங்கள்...நீங்கள் எவ்வளவு அழகாக எழுதுகின்றீர்கள்..இப்போது ஆவியின் போட்டிக்கு நீங்களும் நடுவர்...அதையெல்லாம் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோம்...வேறு வழி?!! ...

      நீக்கு
  5. இன்றைய கல்வித் துறை தவறான பாதையில், மிக வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது மிகவும் நலிவடைந்த நிலையிலேயே உள்ளது. காரணம். தேர்ச்சி.
    தேர்ச்சி என்ற ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கல்வி முறை வெற்றியடைய வாய்ப்பே இல்லை. ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சம்பவங்கள் எங்கேனும் நடந்ததாக கேள்விபட்டிருப்போமா?
    வாய்ப்பில்லை.
    மதிப்பெண்களை மட்டுமே பெறுவதற்குத்தான் இன்றைய கல்வி முறை பயன்படுகிறது
    வாழ்வில் வெற்றிபெற இம்முறை உதவாது
    மாற்றம் வேண்டும், அதுவும் விரைவில் வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக மோசமான நிலையை நோக்கி...சொல்லியது மிக மிகச் சரியே! நமது காலத்தில் இப்படியெல்லாம் இல்லை. இப்போது குழந்தைகள் இயந்திரங்களாக மாற்றப்படுகின்ரார்கள். என்ன செய்ய,,,,,,மாற்றம் வந்தால் நலல்து....

      மிக்க நன்றி!

      நீக்கு
  6. வணக்கம்
    யாவரும் அறிய வேண்டியவிடயத்தை தெளிவாக சொல்லியுள்ளீர்கள் அதுவும் மிக விரிவாக .. பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. அதுவும் சரியே டிடி! கல்வியின் காலம் அப்படியாகிக் கொண்டு வருகின்றது.

      நீக்கு
  8. ஆசிரியர் மாணவர் புரிதலுக்கும் பெற்றோர் உதவி செய்யாமல் தவறான கண்ணோட்டத்துடன் செயல்படுவதே மூலகாரணமாய் இருந்துவிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியானக் கருத்தே! ஆசிரியர்களும். பெற்றோரும் ஒரு புள்ளியில் சந்தித்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும் நண்பரே! மிக்க நன்றி!

      நீக்கு
  9. //அவர்களுக்கு, வாழ்க்கை என்பதே சவால்தான்; இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் என்பதைக் கற்றுக் கொடுத்து அதை எதிர் நீச்சல் அடித்துக் கடக்கவும், நேர்கொள்ளவும் கற்றுக் கொடுக்கலாமே.//

    நியாயமான கருத்து.. என்பிள்ளைகளை இப்படித்தான் வளர்த்தேன்..

    //பள்ளி, கல்லூரிகளில் மட்டும்தானா தண்டனைகள்?.. சமூகத்திலும், தொழில் சார்ந்த இடங்களிலும் பல அவமானங்களும், தண்டனைகளும் வாழ்க்கையில் வரத்தானே செய்கின்றன..//

    நானும் அனுபவிக்கின்றேன்.. - மூடர் கூடமாகிப் போன நிர்வாகத்தினால்!..

    பயனுள்ள பதிவினை அளித்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமான கருத்து.. என்பிள்ளைகளை இப்படித்தான் வளர்த்தேன்../ மிகவும் மகிழ்ச்சி ஐயா! எவ்வளவு நல்ல விஷயம்.

      நானும் அனுபவிக்கின்றேன்.. - மூடர் கூடமாகிப் போன நிர்வாகத்தினால்!..// பல நிர்வாகங்கள் அப்படித்தான் இருக்கின்றன....வேதனையான விஷயம். நம் மனதை வலிமையுடன் வைத்துக் கொண்டால் மீண்டு வந்துவிடலாம்....மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  10. நல்ல கட்டுரை. தவறுகள் இரண்டு பக்கமும் இருக்கின்றன என்பது தான் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இரு பக்கமும் தவறுகள் இருக்கின்றன...மிக்க நன்றி வெங்கட் ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் !

      நீக்கு
  12. அன்புள்ள சகோதரி,

    ‘ அளவுக்கு மீறினால், அமிர்தம் மட்டுமல்ல, அன்பும் நஞ்சே! ’ படித்தேன். எவ்வளவு பொறுப்புள்ள பெற்றோர்களாக இருந்திருக்கிறீர்கள் என்பதை அறிய முடிந்தது.

    ‘ தனது அறிவையும், கொள்கையையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர். சலாம் போடும் ஆளும் அல்ல. இப்படித்தான் இந்தப் பேராசிரியர் பல கல்லூரிகள் மாற வேண்டியதாயிற்று. இவர் வேறு யாருமல்ல, கணவர். ’

    அய்யாவின் குணத்தை பிரதிபலிக்கும் கண்ணா(ட்)டி நீங்கள் அல்லவா!
    படி என்று சொல்லாமல், அவனது லட்ச்சியத்தையும், வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதற்குத் தேவையான நல்ல விசயங்களையும் மட்டும் பேசிப் பேசி ஆர்வத்தைத் தூண்டி, ஊக்கம் அளித்து, பள்ளியின் மீதும், ஆசிரியர்கள் மீதும், பாடங்களின் மீதும் வெறுப்பு வாராமல், நேர்மறை எண்ணங்களை ஊட்டி, அவன் மனதைப் பக்குவப்படுத்தத் தொடங்கினோம். ஏனென்றால், கற்றலில் குறைப்பாடுள்ள மகன் இந்தச் சமூகத்தில் கால் ஊன்றி, ஒரு நல்ல மனிதனாக எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி மனநிறைவு பெற்று மகிழ்ச்சியடைந்திருப்பதை அறிந்து மகிழ்கின்றேன்.

    அன்பு கூட பிள்ளைகளிடம் அளவுக்கு மீறிக் காட்டி... அவர்களின் எதிர்கால வாழ்வைத் தொலைத்துவிட பெற்றோர்களே காரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்கு முன்னமே சொன்னதே நல்ல சான்றாகும்.
    படிப்பில் பின்தங்கிய மாணவனை தங்களைப் போல் ஊக்கப்படுத்தினால் பிற்காலத்தில் பிரகாசிப்பான் என்பது திண்ணம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் ஆசிரியர் அல்லவா! அதான் நன்றாகப் புரிந்து கொண்டீர்கள்! பெருமைக்காக எழுத வில்லை! குறைப்படுள்ள குழந்தைகளை நாம் சரியாகக் கையாண்டால் அவர்களையும் இந்த சமூகத்தில் வாழ வைக்க முடியும் என்பதற்காகவும், ஆசிரியர்களிடம் குறைகள் இருந்தாலும், அவர்களும் மனிதர்களே அவர்களையும், பெற்றோர்களும் குழந்தைகளை நல்ல விதத்தில் கையாளத் தெரிய வேண்டும் , எதிர்மறையாக இல்லாமல் நட்புடன் தொடர்பில் இருந்தால் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கலாம் என்பதைச் சொல்லத்தான். மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கும், நல்ல அழகிய பின்னூட்டத்திற்கும்.

      நீக்கு
  13. \\ஆசிரியர் – மாணவன் உறவு தாயும், சேயும்போல் தொடக்கம் முதலே வரவேண்டும் இதற்க்கு ஆசிரியர்தான் முதலில் தாயாக வேண்டும் மாணவனை குறை சொல்ல முடியாது காரணம் அவன் குழந்தை. அன்பால், பண்பால், அறிவின்பால் அவனுக்கு அறிவை இனிமேல்தான் ஆசிரியர் ஊட்டவேண்டும்\\

    இது ஏற்கனவே தங்களது பதிவுக்கு நான் சொன்னதே உண்மைதான் குழந்தைகளின் மனநிலையை முதலில் படிக்கவேண்டும்.

    ‘’எழுத்றிவித்தவன் இறைவன்’’

    ஆசிரியரை எந்த நிலைக்கு நம் சான்றோர் உயர்த்தி இருக்கிறார்கள்,, இதை ஆசிரியர்களும் உணரவேண்டும் முதலில் ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் நல்லுறவு வளரவேண்டும் அதன் மூலமே நாம் நமது குழந்தைகளை ஆசிரியரின் கடமைகள் பற்றி உணர்த்தவேண்டும் இதுவே ஆசிரியருக்கும், மாணவனுக்கும் நட்புறவை தழைக்கச் செய்யும்.

    \\தாங்கள் ஆசிரியரை காணாமல் தாங்களாகவே தாயின் நிலைப்பாட்டிலிருந்து எடுத்த முடிவு பாராட்டுக்குறியது\\

    இன்றைக்கு கல்லூரிகளை நடத்துபவர்கள் யார் ? 75 சதவீதம் அரசியல்வாதிகளின் பிணாமி.. சிந்திக்கவேண்டியவை இவர்கள் படித்தவர்களா ?

    அரசு நடத்தவேண்டிய கல்வியை தனியாரும், தனியார் நடத்தவேண்டிய டாஸ் மார்க்கை அரசும் நடத்தும் இழிநிலை மாறும்வரை இதில் பட்டுக்கொண்டிருப்பது \\மதில் மேல் பூனையாய் வாழும்\\ நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கமே,,,

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி,
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் நல்லுறவு வளரவேண்டும் அதன் மூலமே நாம் நமது குழந்தைகளை ஆசிரியரின் கடமைகள் பற்றி உணர்த்தவேண்டும் இதுவே ஆசிரியருக்கும், மாணவனுக்கும் நட்புறவை தழைக்கச் செய்யும்.// மிகவும் சரியே கில்லர் ஜி!

      அரசு நடத்தவேண்டிய கல்வியை தனியாரும், தனியார் நடத்தவேண்டிய டாஸ் மார்க்கை அரசும் நடத்தும் இழிநிலை மாறும்வரை இதில் பட்டுக்கொண்டிருப்பது// மிகவும் அருமையானக் கருத்து.

      மிக்க நன்றி கில்லர் ஜி!

      நீக்கு
  14. இன்றைய நிலை குறித்து
    புலம்புவதைத் தவிர
    வேறொன்றும் வழி இல்லை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தாத்தா? மாற்றம் வருமா? வந்தால் நல்லதுதானே! மிக்க நன்றி தாத்தா..

      நீக்கு
  15. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள சில நிதர்சன உண்மைகளைச் சொல்லிப் போகும் பதிவு.இது ஒரு போட்டிகள் நிறைந்த உலகம்பெரும்பாலும் இளைஞர்கள் கனவு காணும்போது இன்பமயமாகவே உணர்கிறார்கள். ஆனால் விழித்துக் கொண்டதும் கடமைகள் நிறைந்த , எதிர் நீச்சல் போட வேண்டிய வாழ்க்கையில் வெற்றிபெற பெற்றோர்கள் வாழ்ந்து காட்டவேண்டும் , என்பதே என் புரிதல்பள்ளியில், அலுவலகத்தில் சுற்று வட்டத்தில் இப்படிஎல்லாமே குறைகளாக எண்ணாமல் நேர்மறைச் சிந்தனைகளை வளர்க்கப் போதிக்க வேண்டும். நல்ல ஆராய்ச்சி செய்து எழுதியபதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! நீங்கள் மிகவும் உயர்ந்த சிந்தனையாளர். நல்ல தந்தை! அது தங்கள் பதிவுகளிலிருந்தும், தங்கள் குடும்பத்தாரைப் பற்றிச் சொல்லியிருப்பதில் இருந்தும் புரிந்து கொண்டோம். தங்கள் கருத்து மிகச் சரியே! தாங்கள் பாராட்டியதற்கு மிக்க நன்றி!! சார்

      நீக்கு
  16. நல்ல புத்தகங்களையும், இசையையும், நல்லத் திரைப்படங்களையும் (எல்லா மொழிகளிலும்) அறிமுகப் படுத்தினேன். இயற்கையையும், வாழ்க்கையை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக் கொடுத்தேன். மதிப்பெண்களை விட ஒரு நல்ல மனிதனாக வர வேண்டும் என்று கற்றுக் கொடுத்து, ஆசிரியர்கள் குறை சொன்னாலும் நல்லதற்கே என்று நேர்மறையாக எடுத்துக் கொண்டு, மதிக்கவும் சொல்லிக் கொடுத்தோம்//

    அருமையாக சொன்னீர்கள்.. இது தான் வேண்டும் குழந்தைகளுக்கு.
    எப்போதும் முதலாக வருவது, மட்டுமே வாழ்க்கை இல்லை என்பது தெரிந்து இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு.
    தன்னம்பிக்கையும், வாழ்க்கையை எதிர் கொள்ளும் பக்குவமும் வந்து விட்டால் நாம் கவலை பட வேண்டாம் குழந்தைகளைப் பற்றி, பிழைத்துக் கொள்வார்கள். அதற்கு தயார் செய்வது நம் கையில் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்.

      இது தான் வேண்டும் குழந்தைகளுக்கு.
      எப்போதும் முதலாக வருவது, மட்டுமே வாழ்க்கை இல்லை என்பது தெரிந்து இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு.
      தன்னம்பிக்கையும், வாழ்க்கையை எதிர் கொள்ளும் பக்குவமும் வந்து விட்டால் நாம் கவலை பட வேண்டாம் குழந்தைகளைப் பற்றி, பிழைத்துக் கொள்வார்கள். // உண்மை உண்மை! நல்ல கருத்து. மிக்க நன்றி! தொடர்கின்றோம் தங்களை.

      நீக்கு
  17. நன்றாகச்சொன்னீர்கள்! பெற்றோர்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும்! அதே சமயம் ஆசிரியர்களும் எதற்கெடுத்தாலும் தண்டனை பிரம்படி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகவும் ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால் நல்லது நடக்கும்.

      நீக்கு
  18. // இப்போதையக் கல்வி நிறுவனங்கள். சாதி சார்ந்தவையாக இருக்கின்றன இல்லையேல் கட்சி சார்ந்தவையாக இருக்கின்றன. //
    ஆமாம் சகோதரி உண்மைதான். மனது கனக்கத்தான் செய்கிறது. நாடு எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. ஒரு சுனாமி அல்ல, ஆயிரம் சுனாமிகள் வந்தாலும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சுனாமி அல்ல, ஆயிரம் சுனாமிகள் வந்தாலும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.// ம்ம்ம் உண்மைதன் ஐயா! உண்மை கசக்கத்தானே செய்யு,ம்! ம்ம் என்ன செய்ய....நம் குழந்தைகலைத்தான் நாம் பக்குவமாக நடந்துக் கொள்ளச் சொல்லித் தரவேண்டும்...மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  19. பயனுள்ள பதிவு. அலசி ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. முன்பெல்லாம் பள்ளிகளில் இப்போது நடக்கின்ற கசப்பான சம்பவங்கள் நடைபெறாது .மாணவனே மாணவனை வகுப்பறையில் குத்திக் கொள்ளும் அளவிற்கு சீர்கேடுகள் அதிகரித்து விட்டன .கல்வியும் வணிகமயம் ஆனதின் பின் விளைவுகள் இவ்வளவு மோசமாக நடப்பதற்கு அரசின் கொள்கையும் காரணம் !தன்னுடைய கடமையில் இருந்து மத்திய ,மாநில அரசுகள் நழுவிக் கொண்டிருக்கின்றன .
    த ம வோட்டு 11 யை போடும் அளவிற்கு தாமதம் ஆனதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !

    பதிலளிநீக்கு
  21. அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.குழந்தைகளுக்கு ஆளுமைப் பண்பு மிகவும் அவசியம்.அதை சிறு வயது முதலே வளர்க்க வேண்டியது அவசியம் என்பதை அழகாக குறிப்பிட்டிருக்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்!

      நீக்கு
  22. உண்மையில் இந்த காலத்தில் ஆசிரியரின் கைகள் கட்டப்பட்டுத்தான் இருக்கிறது. அதே சமயம் ஆசிரியரிடம் மரியாதை இருக்க வேண்டுமே ஒழிய, பயம் இருக்க கூடாது என்று நினைப்பவன் நான்.

    சில நாட்களுக்கு முன்பு படித்த செய்தி மனதை வேதனை அடையச் செய்தது. தன்னிடம் பணபலம்,படைபலம் இருக்கிற காரணத்தினால், பள்ளிக்குள் புகுந்து, ஆசிரியரை தாக்கிய சம்பவம் மிகவும் கொடுமையானது. அந்த பெற்றோரின் பிள்ளை எப்படி நல்ல மனிதனாக மாறுவான்.

    பதிலளிநீக்கு
  23. மிக சரியான தலைப்பு. இப்படி இருந்தால் நல்ல ஆசிரியர்கள் எப்படிக் கிடைப்பார்கள். செல்லம் கொடுப்பதன் பலனை பின்னர் நிச்சயம் அனுபவிக்க நேரும்

    பதிலளிநீக்கு
  24. உண்மை சகோ...ஆசிரியர் பெற்றோர் உறவு நிலை சீராக இருந்தால் மட்டுமே...வளரும் சமுதாயம் தரமுள்ளதாய் அமையும்..

    பதிலளிநீக்கு