திங்கள், 3 நவம்பர், 2014

கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்


சில வருடங்களுக்கு முன்பு வரை மாணவர்களை, அவர்கள் நன்மை கருதி செய்யக் கூடாதவைகளைச் செய்யும் போதும், செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இருக்கும் போதும், பிரம்பால், கையிலும், திருப்பி நிறுத்தி பின் புறம் பிட்டத்திலும், அடித்திருக்கிறேன். 

“அது பெரும்பாலும் அவர்களுக்கு வலியை விட ஒரு வித அவமானத்தையே ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.  அப்போதுதான் அவர்களால் வகுப்பில் மீண்டும் பிரச்சனைகள் வராது.  அல்லது அவர்கள் எப்படியாவது படித்துத் தேர்வில் வெற்றி பெற முயல்வார்கள்.” என்ற எண்ணத்துடன் தான் பிரம்பை வகுப்பில் முன்பெல்லாம் நாங்கள் (ஆசிரியர்கள்) உபயோகிப்பது வழக்கம். அடிவாங்கும் மாணவன் தான் ஆசிரியர்களின் அறைக்குச் சென்று பிரம்பை எடுத்து வந்து, அடி வாங்கிய பின் திரும்ப அந்தப் பிரம்பை அங்கு கொண்டு வைக்க வேண்டும்.
 

எனவே அடிவாங்கும் போது ஏற்படும் வலியை விட அவர்களுக்கு அடி வாங்கும் முன்னும், அடி வாங்கிய பின்னும் பிரம்புடன் நடக்கும் அவர்களைப் பார்க்கும் மற்ற ஆசிரியர்கள், மற்றும் பிற வகுப்பு மாணவர்களின் பார்வையில் தெரியும் ஏளனம் அவர்களிடம் தேவையான மாற்றத்தை எளிதில் கொண்டுவந்து விடும்.  50 மாணவ, மாணவிகள் உள்ள வகுப்பில், இப்படி அடி அவசியமாவது என்னவோ ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே.  அதைக் காணும் மற்றவர்கள் அடி வாங்காமலேயே அங்குக் கல்வி கற்கும் இரண்டு வருடங்களில் செய்ய வேண்டியவைகளை எல்லாம் செம்மையாகச் செய்தும், செய்யக் கூடாதவைகளைச் செய்யாமல் இருந்து, கற்பித்தலையும், அதன் தொடர் நிகழ்ச்சிகளையும் எளிதாக்குவது வழக்கம்.
எனவே, பிரம்பு என்பது, வகுப்பில், ஒரு வருடத்தில், ஒரு சில நேரங்களில் பிரவேசித்துப் போகும் ஒரு இன்றியமையாத ஒன்றாகத்தான் எங்கள் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.  வருடங்களுக்கு முன்பே, வகுப்பறையில், பிரம்பு உபயோகிப்பதைக் கல்வித் துறை தடை செய்துவிட்டதால், அடிக்காமலேயே இம்போசிஷன், எழுந்து நிற்கச் செய்தல், போன்றவைகளின் உதவியால், ஓரளவு வகுப்பறை வேலைகள் சிரமமின்றி இப்பொது நடந்து போகின்றது.
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு, முன் மாணவனும், இப்போது பட்டாம்பி அருகே உள்ள சிற்றூர் தத்தமங்கலத்தில் உள்ள பள்ளியில் வோக்கேஷனல் லாப் டெக்னீஷியனாக பணிபுரியும் சுரேஷைக் காண நேர்ந்தது.  ஓரிரு முறை வேலை கிடைத்த பின் பள்ளிக்கு ஆசிரியர்களைக் காண வந்த போதெல்லாம், என்னைக் காண வந்து, காண முடியாததற்கு வருந்துவதாகச் சொன்னதும், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அதன் பின் சுரேஷ் சொன்ன வார்த்தைகள் என்னை முள்ளாய்க் குத்தியது.

“உண்மையிலேயே எனக்கு சார் கிட்ட வரவோ, பேசவோ பயம். அசைன்மென்ட் வைக்கலன்னு ஒரு நாள் என்னைக் க்ளாசுக்கு வெளியே கொண்டு வந்து, அடிக்கும் போது, ‘சும்மா பின்னாடித் திரும்பக் கூடாது, அங்க தூரத்துல தெரியற கொடிமரத்தைப் பாருன்னு’ சொல்லி என் பிட்டத்தில் அடித்த அடி, பின்னாடி தீக்கங்கை அள்ளி எறியற மாதிரி இருந்துச்சு சார்.  அதுக்குப் பிறகு நல்ல ஸ்டூடண்டா மாறிட்டேன் சார்.....”

என்று சொன்னதும், என் முகத்தில் அடித்தாற் போல் இருந்தது.  அவமானமாக இருந்தது அந்தச் சந்திப்பு.  ‘வாழ் நாள் எல்லாம் மனதில் முள்ளாய் குத்துமே இந்த வார்த்தைகள்’ என்று வேதனையாய் இருந்தது.  இரண்டு வருடம் என்னிடம் கற்ற சுரேஷின் மனதில் மற்றதெல்லாம் மறந்து அடித்தது மட்டும் நினைவு இருந்ததை நினைத்து வருந்தினேன்.  அன்று அடிக்காமல், இப்போது செய்வது போல் வகுப்பில் எழுப்பி நிறுத்தவோ, இம்போசிஷன் கொடுக்கவோ செய்திருக்கலாம்.  கோப உணர்ச்சியைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி இருக்கலாம். 

இந்த நிகழ்வின் போதுதான், “சுரேஷை நான் அடித்ததைப் போலத்தானே நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தலைமை ஆசிரியர், ஒரு தினம், என்னை அடித்தார். நான் அதன் பின் அவரை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தேன்! பல வருடங்கள் அந்த அடி மறக்காமல் என் மனதில் இருந்ததே!  நானும் சுரேஷைப் போலத்தானே இருந்தேன்! அதை நான் எப்படி மறந்து போனேன் சுரேஷை அடிக்கும் போது!?” என்ற குற்ற உணர்வு என் மனதை மிகவும் வருத்தியது. அன்று நான் முடிவு செய்தேன். 

“என்னதான் மாணவர்களின் நன்மைக்காக என்று சொன்னாலும் அடிப்பதும் அவமானப் படுத்துவதும் அவர்கள் மனதில் காயத்தைத்தான் ஏற்படுத்தும். அப்படிக் காயப்படுத்தாமல் அவர்களை அன்புடன் நல்வழிப்படுத்துதல் தான் சிறந்த வழி” என்பதைத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.  கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.  வகுப்பறையில் பிரம்பு உபயொகிப்பதைத் தடை செய்த கல்வித் துறைக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.  இல்லையேல் சுரேஷ் போன்ற பல பழைய மாணவர்களைக் கண்டு மனம் நோக வேண்டியிருக்கும்.
 

      பெற்றோர்களும் இப்போதெல்லாம் மிகவும் மாறிவிட்டார்கள்.  சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் தரத்தில் படிக்கும் ஆரிக்ஃப் எனும் மாணவன், வீட்டுப் பாடம் செய்யவில்லை என்று, அவன் கன்னத்தில் கிள்ளிய ஆசிரியையான ராமகௌரி, மாணவனுக்கு நஷ்ட ஈடாக ரூ 50,000 கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த வருடம் ஆரிக்ஃபின் தாய் கொடுத்த புகாரை பரிசோதித்தத் தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், ராம் கௌரிக்கு ரூ 1,000 அபராதம் விதித்திருந்தது. ஆனால், ஆரிக்ஃபின் தாயான மெஹருனிசா, ஆசிரியைக்கு அந்த அபராதமும், தண்டனையும் போதாது என்று தீர்மானித்ததால், வழக்கை உயர்நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று 1,000 த்தை 50,000 ஆக்கி விட்டார்.  ஆசிரியையும், தான் கன்னத்தைக் கிள்ள வில்லைக், காதைத்தான் கிள்ளினேன் என்றெல்லாம் சொல்லியும் பலனில்லாமல் போனது.  ஆனால், மெஹருனிசா ஆசிரியைக்கு ரூ 50,000 அபராதம் மட்டும் போதாது, அவருக்குச் சிறை தண்டனையும் வழங்க வேண்டும் என்ற நோக்குடன் சைதாப்பேட்டை ஜுடிசியல் மெஜிஸ்ட்ரேட் கோர்ட்டிலும் வழக்குத் தொடுத்திருக்கிறார்.
 
ஒரே நேரத்தில், பல நீதி மன்றங்களில் பல வழக்குகளைத் தொடுத்துத் தன்னை மன அழற்சிக்கு உள்ளாக்கித் துன்புறுத்துகின்றார் என்று கூறி, ஆசிரியையும் மெஹருனிசாவுக்கு எதிராக, உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கின்றார்.  ஆசிரிய, ஆசிரியைகளே ஜாக்கிரதை!  கோபத்தை அடக்குங்கள்! குழந்தைகளிடம் அன்பாய் இருங்கள்!  இல்லையேல், ராமகௌரி ஆசிரியை போல் பல நீதி மன்றங்கள் ஏறி இறங்க வேண்டியிருக்கும். 

      மெஹருனிசா இந்த அளவிற்குப் போக வேண்டியதில்லையோ என்று சிந்திக்கும் போது, என் மன சாட்சியும் உறுத்துகிறது.  காரணம், 1967ல், ஒண்ணாம்தரத்தில் படிக்கும் போது என் ஆசிரியர், முத்துக் கருப்பன் சார், நான் ஏதோ சேட்டை செய்ய என் தலையில் கம்பால் அடித்து, உச்சித் தலையில் சிறு காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்து வீங்கியும் விட்டது.  என் தந்தை இதைப் பற்றிக் கேட்கப் போய் வாக்க்கு வாதம் முற்றியது.
 
“இனியும் இப்படி ஏற்படலாம், அதனால் உங்கள் மகனை ஆசிரியர்கள் அடிக்காத பள்ளியில் கொண்டு சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்ல நான்  அந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற வேண்டியதானது.  சில பெற்றோர்கள் இப்படித்தான்! என் அப்பாவைப் போல், மெஹருனிசாவைப் போல்! பிள்ளைப் பாசம் இப்படி எல்லாம் அவர்களைச் செய்ய வைக்கும்.

  எனவே, ஆசிரியர்கள் தான் இங்குக் கட்டுப்பாடோடு, மாறத் தயாராக வேண்டும்.  எனக்கு என்ன பயம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த சுரேஷ் போன்ற மாணவர்களில் யாராவது சிலர் எனக்கு எதிராக வழக்குத் தொடுப்பார்களோ என்றுதான்......என்ன சொல்றீங்க?....சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன் நடந்த சம்பவங்களுக்கு எதிராக எல்லாம் வழக்கு தொடுக்க முடியாது என்றா?....அப்படியென்றால்......பயப்பட வேண்டாம் என்கின்றீர்கள் அப்படித்தானே! நன்றி! மகிழ்ச்சி! (உண்மையிலேயே திருந்தி விட்டேன்!..நம்புங்கள்!...கோபப்படாதீர்கள்!)

-துளசிதரன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 இந்தப் பதிவை துளசி கீதாவிற்கு டிக்டேட் செய்து விட, கீதா அதை ப்ளாகரில் போட்டுப் பதிவேற்றம் செய்வதற்காக, அதற்கானப் படங்களைக் கூகுளில் தேடிய போது ஆச்சரியம்! உலகம் முழுவதுமே, மேலை நாடுகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்காவிலும் கூட (கீதா அமெரிக்காவிலும் இருந்த அனுபவம் இருப்பதால், ஆச்சரியம்! அங்கிருந்த போது மகனின் பள்ளியில் தண்டனைகள் இல்லை!) மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பழக்கம் இருந்திருக்கின்றது/இருக்கின்றது.  பார்க்கப் போனால் அதற்கான சட்டமே கூட இயற்றப்பட்டிருக்கின்றது.  ஆச்சரியம் தான்.  ஆனால் அதை எதிர்த்து இப்போது குரல் ஒலிக்கின்றது.  இதோ, கீழே...


It is legal in 20 states to use paddling, a form of corporal punishment that allows teachers and administrators to hit students on the buttocks with a flat wooden board, according to a recent report released by the American Civil Liberties Union and Human Rights Watch. 
It is a form of discipline that causes immediate pain, and in some cases, lasting injury and mental trauma. Texas, Mississippi, Alabama, Arkansas, Georgia and Tennessee are the six states with the most cases of corporal punishment.
In the 21st century, it is hard to fathom why a civilized person or society would ever desire to hit children, or deem it as acceptable.
In 1867 New Jersey became the first U.S. state to abolish corporal punishment in schools. The second was Massachusetts 104 years later in 1971. The most recent state to outlaw school corporal punishment was New Mexico in 2011. Please help to make the United States a civilized country, where paddling students for punishment gets judged as what it is, as child abuse. Corporal punishment should be illegal in all the states of the United States, as it is in most of the countries around the world!

படங்கள் : கூகுள்

48 கருத்துகள்:

 1. தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.... இன்றைய சூழலில் ஆசிரியர்கள்தான் மாறவேண்டி இருக்கிறது என்ற உண்மையை அழகாக விளக்கியுள்ளீர்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி! ஆசிரியர்கள் மாறவேண்டிய காலம்.....

   நீக்கு
 2. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்ற பழமொழி சொல்ற காலம் மலையேறிப் போயாச்சு :)
  த ம 1

  பதிலளிநீக்கு
 3. மிக நல்ல பதிவு சார்....
  அடி வாங்கி படிக்கும் மாணவர்கள் இடத்தில் பயமிருந்தாலும் நல்ல பண்புகளும் இருந்தது.
  இன்று அடிக்கவில்லை என்றதும் மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காத நிலை வரும்...
  கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கத்தான் வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நண்பரே! மிகச் சரியான கருத்து! இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை ஓட்டும் நிலைதான். அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்வதும் நடக்கத்தான் செய்கின்றது!

   மிக்க நன்றி!

   நீக்கு
 4. துளசி, நீங்க இதை எனக்கு டிக்டேட் செய்யறப்ப கூட, அதுக்கு முன்னாடியே கூட உங்களை செமையா கலாய்ச்சேன். கலாய்ச்சுருக்கேன்..நம்ம அப்பா உங்களுக்கு சப்போர்ட் வந்தது, நீங்களும் உங்க சார்கிட்ட அடிவாங்கி பேசாம இருந்திருக்கீங்க ஆனா சுரேஷை அடிச்சது.... நியாயமானு கேட்டு...

  ஆனா சத்தியமா என்னால நம்ப முடியல. உங்களுக்கும் கோபம் வரும்னு, எனக்குத் தெரிஞ்ச வரை, உங்களுக்குப் பொறுமை அதிகம். ரொம்பவே ஜோவியல்! க்ளாஸ்ல கூட ....கல்லூரிக் காலத்துல இருந்தே.....வரம்பு மீறும் சமயம் மட்டுமே உங்களுக்குக் கோபம் வரும்னு தெரியும்னாலும், நீங்க உங்க ஸ்கூல் பத்தி பசங்க ரொம்ப மீறும் போது உங்க கோபம் பத்தி எல்லாமே சொல்லியிருக்கீங்கன்னாலும் ...எனக்குத் தெரிந்த வரை உங்க கோபம் ஆச்சரியமே!

  உங்களுக்கே கூடத் தெரியாது. நான் உங்ககிட்ட சொன்னது இல்ல......உங்க ஸ்டூடன்ட்ஸ் எங்கிட்ட பேசும் போது உங்கள ரொம்பவே (கொஞ்சம்..இல்ல இல்ல...ரொம்பவே ஓவாராதான்) புகழ்வாங்க. நீங்க ஜோவியல் அப்படி..இப்படினு......அடிச்சத நினைச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு.....

  ஒருவேளை உங்கள ஜோவியல் அப்படினு சொல்லறது........வசூல்ராஜா எம்பிபிஎஸ்ல வர பிரகாஷ்ராஜ் மாதிரி கோபம் வரும் போது சிரிப்பீங்களோ??!!!!!!!!!!!

  -கீதா

  பதிலளிநீக்கு
 5. நான் படித்த பள்ளியில் ஒரு ஆசிரியை இன்னொரு மாணவி மீது புத்தகத்தை வீச அது என் முகத்தில் பட்டு முகம் வீங்கிபோச்சு :) எங்கம்மா மெஹருன்னிசாவை போன்றவர்தான் .அடுத்தநாள் நேரே வந்துட்டார் ஸ்கூலுக்கு :)
  அந்த ஆசிரியை அதற்கப்புறம் யாரிடமும் அப்படி நடக்கவில்லை :)
  பார்த்து இந்த பதிவை யாராச்சும் பழையமாணவர்கள் வாசிச்சா அவங்களுக்கு ஐடியா கிடைக்ககூடும் :)
  எதற்கும் கொஞ்சம் காலம் கவனமாகவே இருங்க :)
  எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் எங்க பள்ளி ஆசிரியர்கள் எங்களை நல்லொழுக்கம் பல சொல்லி தந்து உருவாக்கினார்கள் ..அவர்கள் அனைவருமே ரோல் மாடல் தான் எனக்கு
  இங்கே இங்கிலாந்தில் பிள்ளைங்களை அடிக்க மாட்டாங்க ஆனால் detention உண்டு ..ஒரு மாணவன் கெட்ட வார்த்தை சொன்னதற்காக தனி அறையில் இருக்க வைத்தார்களாம் மகளின் பள்ளியில் ......
  என் பொண்ணு இந்தியா போய் செட்டில் ஆகணும்னு சொல்வா முன்பு அப்போ சொன்னேன் இப்படி நிறைய அடி பள்ளியில் உண்டு என்று :) பயந்து விட்டாள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அனுபவம் வாசித்து மிக்க மகிழ்ச்சி!

   // எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் எங்க பள்ளி ஆசிரியர்கள் எங்களை நல்லொழுக்கம் பல சொல்லி தந்து உருவாக்கினார்கள் ..அவர்கள் அனைவருமே ரோல் மாடல் தான் எனக்கு //

   ஆசிரியர்களை உயர்வாகச் சொன்னதற்கு மிக்க மிக்க மகிழ்வாகவும் பெருமையாகவும் இருக்கின்றது!

   இங்கிலாந்து அனுபவம் குறித்தும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! ஐயோ பாவங்க உங்கள் மகள்! பயம் வேண்டாமே!

   நீக்கு
 6. கண்டிக்கிற இடத்துல பயத்துடன் ஒழுக்கமாக நடக்க ஆரம்பித்தார்கள்.

  ஆனா இப்போ எதிர்த்து பேசுறாங்க. காலம் மாறிவிட்டது. அன்பா தட்டிக் கொடுத்தால் தான் இப்போ சரியா கேட்கிறார்கள். சிறு வயதில் மனதில் பட்டதை காலாகாலத்துக்கும் அழிக்க முடியாது என்பது உண்மைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சரியே! தங்களின் கருத்தும்! வடுக்கள் ஆழமாகப் பதிந்து விட்டால் மறக்காதுதான்! ஒரு வேளை அதைப் புரிந்துகொள்ளும் வயது வரும் போது அந்த வடு மறையலாம். அனுபவம் மறக்காது!

   நீக்கு
 7. வீட்டுபாடம் அசைன்மன்ட் ..இதெல்லாம் உடனே இங்கே முடிப்பாங்க பிள்ளைங்க .இன்னிக்கு என் பொண்ணு பள்ளியிலேயே கணக்கு ஹோம்வர்க்கை முடிச்சிட்டு வந்திட்டா ..அவள் மட்டுமில்லை பள்ளியில் இங்கு அனைவரும் அந்தந்த நேரத்தில் சரியா ஹோம்வொர்க் வேலையை முடிப்பாங்க..because they are awarded marks and special points for home work class work and behavior at school /classroom ..ரிப்போர்ட்டில் அனைத்தும் வரும் ..

  இந்த ஆரிப்ஹ் விஷயம் கொஞ்சம் கவலை தருது ஏனென்றால் பிள்ளைகள் என்ன செய்தாலும் ஆசிரியர் ஒன்றும் செய்யகூடாது என்ற நிலை ஏற்படும் :( அது மிக தவறு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! அனுபவம் நன்றாக இருக்கின்றதே! ஹோம்வ்ரொக் பள்ளி வொர்க்காக! நல்ல முறை! அதை இங்கும் பள்ளிகளில் பின்பற்றலாம்!

   மிகச் சரியே சகோதரி! ஆரிஃப் விஷ்யம் கொஞ்சம் ஓவரோ என்று கூடத் தோன்றத்தான் செய்தது முதலில். பின்னர் எனது அனுபவமும் நினைவுக்கு வந்து அந்த கோணத்தில் சிந்தித்ததில் வந்த பதிவுதான் இது.

   மிக்க நன்றி ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசுவது!

   நீக்கு
 8. ஆசிரியர்கள் என்றாலே நம்மேல் கண்டிப்பும், அக்கரையும் உள்ளவர்கள்தானே. ஆனாலும் சில பள்ளிகளில் கண்டிப்பு என்ற பெயரில் கண்மண் தெரியாமல் அடிப்பவர்களும் உண்டு. இப்போ எப்படின்னு தெரியல.

  இங்கு தவறு செய்பவர்களை தனியாக அமர வைத்துவிடுவார்கள். தன் மகனை(சுத்தமாக அடங்கமாட்டான்) இருட்டறையில் விட்டதாக ஒரு தோழி சொல்லியும் கேள்விப்பட்டேன். இதுவும் மனதளவில் வலியை உண்டாக்கும்தான்.

  எப்போதோ அடித்ததற்கு இப்போது வருந்தும் உங்களின் அனுபவப் பகிர்வு, என்னை பள்ளி நாட்களுக்கே கொண்டுசென்றுவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் கண் மண் தெரியாமல் அடிக்கும் பள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியில் வந்தால் இது போன்ற தண்டனைகள் அளிக்கப்படலாம்.

   னீங்கள் சொல்லி இருக்கும் இருட்டறை தண்டனை நல்லதல்லவே! மிக்க நன்றி தங்களை இந்தப் பதிவு தங்கள் பள்ளி நாட்களுக்குக் கொண்டு சென்றது என்பதற்கு!

   நீக்கு
 9. துளசி சார், உங்க முகத்தை பார்த்தால், கோபமா அப்படின்னா என்ன என்று கேட்கும் மாதிரியல்லவா இருக்கிறது. அதிலும் அந்த குறும் படத்தில் தோன்றும் காட்சியில் உங்களை பார்த்தால் எவ்வளவு சாதுவாக தோன்றுகிறீர்கள்.

  அடடா, எப்படியெல்லாம் யோசிச்சு பயப்பிடுகிறீர்கள்.. ஆனால் உண்மையாக எந்த ஆசிரியரும் வேண்டுமென்று மாணவர்களை அடிப்பதில்லை. "அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதுவுவதில்லைன்னு" சும்மாவா சொல்லியிருக்காங்க.
  ஆனால் இங்கு மாணவர்களை அடிக்காமல் திருத்துவதற்கு "naughty corner", "yellow card" போன்றவகைகளை எல்லாம் பயன்படுத்துகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹஹாஹஹ! நண்பரே! ம்ம்ம் கோபம் எப்போதாவதுதான் வரும்! வராது என்று இல்லை! மனித்ன் என்றால் கோபம் வரத்தானே செய்யும் சில சமய்ங்களில்...அதுவும் வரம்புக்கு மீறிப் போகும் போது....உண்மைதான் ஆசிரியர்கள் வேண்டுமேன்று அடிப்பதில்லைதான். இருந்தாலும்....

   ஓ! அங்குள்ள பள்ளிகளின் முறையைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! இங்கும் கூட ஏதோ சில பள்ளிகளில் அதாவது தனியார் பள்ளிகளில் இருப்பதாகத் தெரிகின்றது! உலகமயமாக்கல்??!!

   நீக்கு
 10. ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த என் பிறந்தநாளை என்னால் மறக்கவே முடியாது. இந்தியாவில் இருப்புப் பாதைகள் என்ற கேள்விக்கான 4 பக்க பதிலில் என்னால் 2 பக்கங்கள் மட்டுமே சொல்ல முடிந்திருக்க, மங்கள்ராஜ் வாத்தியார் இன்னொரு மாணவனை விட்டு தரையில் மண் தூவச் சொல்லி, என்னை அதில்முட்டிக்கால் போடச்சொல்லி, இரண்டு பாதங்களிலும் வெளுத்தார் பாருங்கள்...

  இப்போது டைப் அடிக்கும்போதும் பாதங்கள் குறுகுறுக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடப் பாவமே! பிறந்த நாள் அன்று செம அடியா?!! அது சரி 2 பக்கம் மட்டுமே சொல்லியிருந்தால் ... என்ன தவறா? அதில் எல்லா பாயிண்டுகளும் வந்து விட்டால் தவறில்லையே! பாவம்...நண்பரே! நீங்கள்...மிகவும் வலித்திருக்குமே! அதன் தாக்கம் இப்போதும் நினைவில் இருப்பது....ஐயோ நான் அடித்ததும் அப்படித்தான் இருந்து இருக்கும் போல இல்லையா அந்த சுரேஷுக்கு?! ...ம்ம் நான் திருந்திவிட்டேன்......

   நீக்கு
 11. தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.
  மாணவர்களை அடிப்பது தவறு என்கிறது சட்டம்.
  எந்த ஆசிரியரும் மாணவரை வேண்டும் என்று அடிப்பதில்லை,திருத்துவதற்கத்தான் சிறு சிறு தண்டனைகள் கொடுத்து வந்தனர்.
  இப்பொழுது மாணவர்களிடையே ஒழுங்கீனம் அதிகரித்து விட்டது, தொலைக் காட்சி, திரைப்படத்தின் புண்ணியத்தால், படிக்கும் காலங்களில், காதலிக்காமல் இருப்பது பெருந் தவறு என்று எண்ணுகிறான். இவர்களைத் திருத்த வேண்டிய ஆசிரியர்களின் கரங்களும், வாயும் இன்று, சட்டததால் கட்டியல்லவா போடப்பட்டுள்ளது.
  மாணவரை அடித்தால் குற்றம்
  மாணவனின் மனம் நோகும்படி பேசினால் குற்றம்
  இந்தச் சட்டத்தினை மாணவன் நன்கு அறிந்து வைத்திருப்பதால்,
  நாம் என்ன செய்தாலும் ஆசிரியரால் நம்மை அடிக்க முடியாது, நம்மை திட்ட இயலாது என்பதை மாணவன் அறிந்திருக்கிறான்.
  அதனால் அவன் அவன் செய்கையினைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறான்
  ஆசிரியர்கள்தான் வருந்திக் கொண்டே இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே தங்கள் கருத்துக்கல் மிகவும் சரியே! நல்லதற்காகச் செய்தாலும் சில சமயம் தவறாகி விடுகின்றது. இப்போது மாணவர்களை ஊடகங்கள் மிகவும் பாதிக்கின்றன. கட்டுப்படுத்துவது என்பது பல சம்யங்களில் கடினமாகத்தான் இருக்கின்றது. தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் சரியே! ஆசிரியர்கள் பலர் வருந்துவதும் தெரிகின்றது. இருந்தாலும் அன்பால் திருத்த முடியும் என்ற நம்பிக்கையில் காலம் நகருகின்றது...மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. எனக்கு என்ன பயம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த சுரேஷ் போன்ற மாணவர்களில் யாராவது சிலர் எனக்கு எதிராக வழக்குத் தொடுப்பார்களோ என்றுதான்......///

  ஹாஹாஹா எப்படி எல்லாம் யோசிக்குரீங்க சார். பதிவு சூப்பர்.

  நானும் எட்டாவது வர அடி வாங்கி இருக்கேன். அதன் பிறகு நா அடிவாங்கியது கிடையாது. ஆனால் பக்கத்தில் இருக்கும் மானவனை ஆசிரியர் அடிக்கும்போது எனக்கு அந்த ஆசிரியரின் மீது பயங்கர கோவம் வரும். எதுக்கும் ஒரு லிமிட் இருக்கும் அதையும் தாண்டி அடித்த ஆசிரியர்கலை பார்த்திருக்கிரேன். அதனாலையே கோவம்.

  ஆசிரியர்கல் மார வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஷ்! நானும் மாணவனாக இருந்த போது அடி வாங்கியவன் தானே! அது என் மனதையும் வருத்தியிள்ளதே! உங்கள் வருத்தம் நியாயமானதே!

   மாறிவிட்டேன்(டோம்) மிக்க நன்றி மகேஷ்!

   நீக்கு
 13. வணக்கம் ..
  மிக அருமையான ஒரு சுயவிமர்சனக் கட்டுரை..
  அப்புறம் கீதா அவர்கள் சொன்னதையும் படித்தேன்..
  தேவையில்லாமல் வருந்த வேண்டாம்

  ஒரு பழைய மாணவரைப் பார்த்த பொழுது என்னால் இஞ்சிநீரிங் பாஸ் பண்ண முடியவில்லை உங்களை மாதிரி அடித்துப் படிக்க வைத்திருந்தால் நான் பாஸ் செய்திருப்பேன் என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னார் .
  என்னமாதிரி தவறை நான் செய்கிறேன் என்று உணர்ந்த தருணம் அது
  அடித்தால் தான் படிப்பு வரும் என்கிற மனநிலையை நான் உருவாக்கிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழரே! நீங்களும் நம்ம கட்சிதானா!? ஹப்பா நம்ம கட்சிக்கும் ஆள் இருக்கின்றது! என்னைப் போல் நீங்களும் உணரும் சம்பவம் நடந்திருக்கின்றதே! உங்கள் சுயவிமர்சனமும் என்னுடையது போல்தான்....கிட்டத்தட்ட....அதான் நாம் இப்போ மாற்விட்டோமே....சமாதானப் படுவோம்....

   மிக்க நன்றி தோழரே!

   நீக்கு
 14. அன்று
  அடியாத மாடு படியாதென்று
  எனக்கும்
  பள்ளிக்கூடத்தில அடித்தார்கள் - அதை
  என் அப்பனிடம் சொல்ல
  "ஒழுங்காகப் படித்தால்
  ஏன்
  வாத்திமார் அடிப்பினம்?" என்று
  என்னைத் திட்டினார்!
  இன்று
  இன்றைய பெற்றோர்
  கோடேறுவது அழகல்ல
  மாற்றுவழியைத் தெரிவு செய்யலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது அந்தக் காலம் நண்பரே! இந்தக் காலம் அப்படி அல்ல.....நாங்கள் ஆசிரியர்கள் தண்டிக்கப் படுவோம்...நீங்கள் சொல்லுவதும் சரியாகத்தான் இருக்கின்றது. கோர்ட் என்று போகமல் மாற்று வழியை யோசிக்கலாம் தான்..மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 15. நாங்கள் படித்த பள்ளியில் தேர்வுகளில் தேறாதவர்களுக்கு ஒரு சப்ஜெக்ட்டுக்கு ஒரு பிரம்படி உள்ளங்கையில்விழும். மற்றபடி தண்டனை எல்லாம் வெறுமே தண்டனை போல் காட்டவே. ஒரு மாணவனை பிரம்பால் அடிக்கும் போது ஓங்கிய கையிலிருக்கும் பிரம்பு பார்வைக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர அடி விழும்போது வலி தெரியாமல் இருக்க வேண்டுமாம். எங்கேயோ எப்போதோபடித்தது. திருக்குறளிலா.....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார், தங்கள் அனுபவப் பகிர்வு அருமை! பிரம்படி இப்போதும் தொடர்கின்றதே! அதே உள்ளங்கையில்,,கால்களில் ,....இப்படி....ஆனால் இப்போதெல்லாம் அடிக்க முடியாது சார்.

   மிக்க நன்றி சார்.

   நீக்கு
 16. நான் டியுசன் ஆசிரியனாக இருந்த போது உங்களைப் போல் சில சமயம் கோபம் வந்து மாணவர்களை விளாசித் தள்ளீயது உண்டு. பின்னர் அதனால் எந்த பிரயோசனமும் இல்லை! என்று உணர்ந்து கொண்டு கற்றல்- கற்பித்தல் முறைகளை மாற்றிஅமைத்து வெற்றி கண்டேன். ஆனாலும் குறும்பு செய்யும் மாணவர்களுக்கு என் மீது ஓர் அச்சம் இறுதிவரை இருந்தது. இப்போது கூட சில முன்னால் மாணவர்கள் நான் அடித்ததை நினைவு கூறுவார்கள். அப்போது எனக்கும் வருத்தமாயிருக்கும். ஆனால் இப்போதைய கல்விச்சூழலில் ஆசிரியர்கள் அடிப்பது என்ன கடும்சொல் கூட கூற முடியாது என்று தோன்றுகிறது! நல்ல பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சுரேஷ்! சில சமயம் அது போல் வரம்பு மீறியய்து உண்டு..இப்போது நானும் மாறி விட்டேன். ஆம் கடும் சொல் கூட கூற முடியாது!

   நாங்களும் மாறிவிட்டோம். மிக்க நன்றி சுரேஷ் நண்பரே!

   நீக்கு
 17. பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா!தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும். நாங்களும் தொடர்கின்றோம் தங்களை!

   நீக்கு
 18. உ.வே. சா . அவர்களின் என் சரித்திரம் அந்தக்காலக் கல்வி மரபில் என்னென்ன விதமான தண்டனைகள் கொடுக்கப் பட்டன என்று நாம் அறிந்து கொள்ள ஆதாரம்.
  சட்டாம் பிள்ளையின் அட்டூழியங்கள்.. பழம் பெற்ற கதை என சுவைபட விரியும் அதன் கதை.
  அந்நாட்களில் அது போன்ற தண்டனைகள் வெகுயியல்பாக உட்செரிக்கப்பட்டிருந்தன.
  சமுதாயத்தில் அது பற்றிய ஒரு மாற்றுப்பார்வையில்லை.
  ஏன் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே தான் தன் ஆசிரியரிடம் வாங்கி குட்டுகள் தனான் தன்னை முன்னேற்றத்துக் காரணம் எனக் குறிப்பிடுவார்.
  ஆசிரியரிடம் வகுப்பில் அடிபடுபவன் போலிஸில் பின்னாளில் அடிபடமாட்டான் என்றார் என் ஆசான் ஒருவர்.
  கண்ணை மட்டும் விட்டிட்டு தோலை உரிச்சிடுங்க என்று பெற்றோர் சொல்லிச் சென்ற காலத்தில் இருந்துதான் நம் தலைமுறை வந்திருக்கிறது.
  எந்த அதற்காக எந்த ஆசிரியரும் யார் தோலையும் உரித்ததில்லை.
  காலம் மாறிவிட்டது,
  அன்று ஆசிரியர் அமர்ந்திருக்க மாணவர்கள் நின்று கல்வி கற்ற காலம்.
  இன்று மாணவர் அமர ஆசிரியர் நிற்கும் காலம்.
  நீதிமன்றங்களிலும் காவல்நிலையங்களிலும் நிற்பதையும் சேர்த்துத்தான் சோல்கிறேன்.
  நான் வகுப்பில் கடுமையானவன்.
  சில பாடங்களை உங்களிடத்தும் தோழர் மதுவிடத்தும் கற்று நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
  உங்கள் அனுபவம் என்னைக் கைவிட்டு விடாது என்கிற நம்பிக்கையுடன்!
  காலங்களுடன் நாமும் மாறக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  பணியைத தொழிலாகவும்,
  சேவையை வணிகமாகவும்
  மாற்றிப் பார்க்கும் இந்தக் காலக்கட்டத்தில்
  நம் தொழிலின் புனிதங்களை நாம் மட்டும் பேசிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
  வழக்கம் போல அருமையான பதிவு ஆசானே!
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! ஆசானே! வலுவான கருத்துக்கள், விளக்கமான கருத்துக்கள், உதாரணங்களுடன். அத்தனையும் சரியே! என்னிடமிருந்து என்ன பாடம் அப்படிக் கற்றீர்கள் என்று தெரியவில்லை! என்ன செய்ய இந்தக் கால கட்டத்தில் ஆசிரியர்களாகிய நாம் மாறித்தான் ஆக வேண்டியுள்ளது. புனிதங்களைப் பேசிப் பயனில்லைதான். உ.வெ.சாவை வாசிக்க வேண்டும்.

   ஆர். கே நாராயணனும் கூட நினைவுக்கு வருகின்றார்.

   மிக மிக நன்றி! தங்கள் பின்னூட்டங்களும் கூட குறித்துக் கொள்ள வேண்டியவையாக அருமையாக இருக்கின்றன! நன்றி ஆசானே!

   நீக்கு
 19. இப்போதைய மாணவர்களின் மனநிலையே வேறு மாதிரி உள்ளது.இவர்களுக்கு ஆசிரியரை விட கூகுளும்,டெலிவிஷனும் நிறைய கற்றுக் கொடுப்பதாக நினைக்கிறார்கள்.எழுத்தறிவித்தவனை இறைவனாக நினைத்த காலம் மலையேறி விட்டது.அவர்கள் நம்மிடம் பேசும் போது சார், மேடம் என்று அழைப்பது குறைந்து கொண்டே வருகிறது.யாரோ பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் பேசுவது போல் உள்ளது.தவறு செய்தாலும் அதை heroism ஆக நினைக்கின்றனர்.பற்றாக்குறைக்கு fashion என்ற பெயரில் அவர்கள் யூனிபார்மைக் கூட வேறு மாதிரியாக அணிகின்றனர்.இன்று காலை board exam ல் invigilator ஆக பணியாற்றினேன்.அப்போது ஒரு மாணவன் தேர்வு அறையை விட்டு வெளியேரும் முன்பே கழுத்தில் உள்ள id card ஐ கழட்டினான்.அதைத் தட்டிக் கேட்ட எங்கள் கல்லூரி விரிவுரையாளரை முறைத்தான்.என்ன செய்வது?அவர்களுக்கு தப்பானவற்றைக் கற்றுக் கொடுப்பதற்க்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது.இவ்வுளவு விஷயத்தையும் மீறி நம்மை அவர்கள் மனதி நல்ல ஒரு ஆசிரியராக நிற்பதற்கு நமக்கு தான் பொறுமை வேண்டும்.இதை விட என்னுடைய வேதனை என்னவென்றால் சரி பாதி மாணவர்கள் டீனேஜிலேயே தப்பான பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.இதை யார் பிள்ளையோ எப்படியோ போகட்டும் என்று என்னால் விட முடியவில்லை.அன்பாலேயே திருத்த முயற்சித்துக் கொண்டே இருக்கின்றேன்.
  எதுவாக இருந்தாலு பொறுமை காத்து கல்வியை அன்புடன் கலந்து இன்றைய உலக நடப்புகளை விவாதித்து ,அவர்கள் தவறு செய்தாலும் அப்போது கோபம் வந்தாலும் அதை மறந்து மன்னித்து நல்வழிப்படுத்துபவரே சிறந்த ஆசிரியர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

   மிக மிக அருமையான விரிவான தங்கள் அனுபவத்துடன் ஆன தங்கள் மன ஆதங்கமும் பின்னூட்டமாக....கொடுத்ததற்கு மிக்க நன்றி! தாங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் உண்மைதான்! யார் வீட்டுப் பிள்ளையோ என்று நினைக்காமல் அவர்களை அன்புடன் திருத்த முயற்சிக்கின்றீர்களே! பாராட்டுக்கள் அதுதானே ஆசிரியரின் இலக்கணமே! ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் பல மாணவர்கள் இல்லையே!

   மிக மிக நல்ல ஆழமானக் கருத்துக்களைச் சொன்னதற்கு மிக்க நன்றி! தங்களையும் தொடர்கின்றோம் இனி!

   நீக்கு
 20. ஆசானே!
  பின்னூட்டம் ஒன்றிட்டேன் வந்ததா?

  பதிலளிநீக்கு
 21. இப்படி அடி வாங்கியதுண்டு. எனக்கு வாய்த்த ஒரு ஆசிரியர் பிரம்பினால் கை விரல்களில் அடிப்பார் - அதுவும் உள்ளங்கையில் அல்ல புறங்கையில் - மூட்டுகளில் பட்டு ஒரு பிராண அவஸ்தை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ! பயங்கர வலியாக இருந்திருக்குமே! எங்கள் வகுப்பிலும் உண்டு அந்தக் கால கட்டத்தில். இப்போது அப்படியெல்லாம் இல்லை. காலம் மாறிவிட்டதே! மிக்க நன்றி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு!

   நீக்கு
 22. அய்யா! காலத்திற்கேற்ற பதிவு..! மிகத் தாமதமாக வருகிறேன்.
  நானும் ஓர் ஆசிரியன் என்பதால்,என் நினைவுகளும் எங்கெங்கோ சென்றன.நான் வாங்கிய அடிகளும்,அதற்காக ஆசிரியரை நான் மனதுக்குள் திட்டியதும் காட்சியாகத் தோன்றுகின்றன.
  எத்தனை மாணவர்கள் நம்மைத் திட்டியிருப்பார்கள் என நினைக்கும்போது,கொஞ்சம் வலிக்கிறது.
  "மாற்றம் என்பது மானிடத் தத்துவம்!
  மாறாதிருக்க நான் வனவிலங்கல்ல!"..கண்ணதாசன் வரிகள் எத்தனை அற்புதமானவை..!
  நல்ல பதிவு.!
  என் "எண்ணப் பறவை"க்கு வாருங்கள்!..நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! மிக அருமையான கருத்து! நண்பரே! தாங்களும் ஆசிரியர் எனப்தை அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது!

   கண்ணதாசனின் வரிகள் அருமை அதை இங்கு மேற்கோள் காட்டி தங்கள் அனுபாத்துடன் அழகான பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி!

   னிச்ச்யமாக எண்ணப் பறவைக்கு வருகின்றோம். தங்களையும் தொடர்கின்றோம்.

   நீக்கு
 23. அன்புள்ள அய்யா,

  ‘ கோர்ட்டுக்குப் போகும் குரு, சிஷ்ய உறவுகள்‘ ஓர் அலசல் கட்டுரையைப் படித்தேன். காலத்துக்கேற்ப நாம் மாறிக்கொள்ளத்தான் வேண்டும்.

  கடந்த வருடம் ஆரிக்ஃபின் தாய் கொடுத்த புகாரை பரிசோதித்தத் தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், ராம் கௌரிக்கு ரூ 1,000 அபராதம் விதித்திருந்தது. ஆனால், ஆரிக்ஃபின் தாயான மெஹருனிசா, ஆசிரியைக்கு அந்த அபராதமும், தண்டனையும் போதாது என்று தீர்மானித்ததால், வழக்கை உயர்நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்று 1,000 த்தை 50,000 ஆக்கி விட்டார். இதை ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  மாணவர்களை அடிப்பது மனித உரிமை மீறிய செயலாகக் கருதப்பட்டு ...பள்ளியில் பிரம்பெடுத்து அடிப்பததோ...தண்டனை கொடுப்பததோ தடைசெய்யப்பட்டு இருப்பதை அறிந்து ஆசிரியர்கள் செயல்படவேண்டியது தங்களது கடமையும் ஆகும்.

  நாம் வாங்கிய அடி இன்னும் மறக்காமல் மனதில் ஆழப் பதிந்து இருக்கின்ற . பொழுது.. நாம் அடிகொடுப்பது தவறுதானே..

  தவறென்று தெரிந்தும் செய்வது தப்புத்தானே!

  தற்பொழுது படைப்பாற்றல் கல்வி வந்துவிட்டது...
  படிப்பாற்றல் கல்வி சென்றுவிட்டது....
  ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...
  வகுப்பில் படிக்காமலே
  தேர்ச்சி அடைவது என்றாகிவிட்டது!

  மாணவர்களை ஒழுக்கமுடையவர்காளக ஆக்குவதற்கு மிகவும் சிரமம்பட வேண்டியிருக்கிறது.

  பள்ளி மாணவர்களை, நம் பெற்றெடுத்த பிள்ளையானல்... அந்த பிள்ளையிடம் எவ்வாறு நடந்து கொள்வோமோ அதுபோல நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது எண்ணம். நம பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது என்றால் எவ்வாறு நடந்து கொள்வோமோ அவ்வாறு நடந்து கொண்டால் நலமாக இருக்கும்.

  இளம் நாற்றுக்களை நம் பள்ளி வயல்களில் நட்டுச்செல்கையில் ...நாம் அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமே தவிர...அதை வெடுக்கெனப் பிடுங்கி எறிந்து விடக் கூடாதல்லவா?

  நாம் மாணவர்களிடம் அன்பாகப் பழகினால்...அதன் மதிப்பே தனிதான்.
  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

  என்னிடம் பயின்ற மாணவர்களில் ஒரு பத்துப்பேர் சேர்ந்து ...சென்னையில் ஒரு வங்கியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் செல்வன் பாஸ்கர் என்பவர் தலைமையில அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடாந்து பள்ளிக்கு வந்து ஏழை மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரத்திற்கும் மேலாக கொடுத்துப் படிப்பதற்குக் கருணையுடன் உதவி செய்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  நம் பள்ளிப் பிள்ளைகள் ...நம் பெற்றெடுக்காத நம் பிள்ளைகள் ஆகும்!

  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா தாங்கள் சொல்லி இருக்கும் கருத்து மிகச் சரியே!

   நாம் வாங்கிய அடி இன்னும் மறக்காமல் மனதில் ஆழப் பதிந்து இருக்கின்ற . பொழுது.. நாம் அடிகொடுப்பது தவறுதானே..

   தவறென்று தெரிந்தும் செய்வது தப்புத்தானே!// ஆம் கண்டிப்பாதத் தவறுதான்.

   நம் பள்ளிப் பிள்ளைகள் ...நம் பெற்றெடுக்காத நம் பிள்ளைகள் ஆகும்!// ஆம் நம் பிள்ளைகள்தான். எனவே அவர்களை அன்புடன் தான் திருத்த வேண்டும்.

   தங்கள் மாணவர்கள் குழுவாக ஏழை மாணவர்களுக்கு உதவுவது குறித்து மட்டற்ற்மகசியாக இருகின்றது.

   மாணவர்களை ஒழுக்கமுடையவர்காளக ஆக்குவதற்கு மிகவும் சிரமம்பட வேண்டியிருக்கிறது.//
   உண்மையே! மிகவும் கடினமான செயல் ஆகும்.

   மிக்க ந்ன்றி தங்கள் விரிவான அழகான பின்னூட்டத்திற்கு

   நீக்கு