புதன், 29 அக்டோபர், 2014

அளவுக்கு மீறிய அன்பும், ஆராதனையும், ஆவேசமும் ஆபத்தானது!

இதில் நடுவில் இருப்பவர் உன்னிக் கிருஷ்ணன்

தீபாவளி நாளில், பாலக்காடு அருகே மனதிற்கு மிகவும் வேதனை தந்த ஒரு சம்பவம் நடந்தது. இளையதளபதி விஜயின் “கத்தி பட்த்தின் கட் அவுட்டுக்குப் பாலபிஷேகம் (!?) செய்ய, 30 அடி உயரமுள்ள ஃப்ளக்ஸ் போர்ட் வைத்திருந்த வடக்கன்சேரி ஜெயபாரத் தியேட்டரின், மேல் பகுதியில் ஏறி அபிஷேகம் செய்த பின், ஆவேசத்துடன் தன் நண்பர்களுடன் ஓடிக் கீழே இறங்க முயன்ற வடக்கன்சேரி விஜய் ரசிகர் மன்றத்தின் செயளாளரான உன்னிக் கிருஷ்ணன் (25), ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தகர்ந்ததால், கீழே விழுந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்திருக்கிறார்.  என்ன செய்வது? இது போல், அரசியல் தலைவர்களுக்காகவும், திரைப்பட நடிகர்களுக்காகவும் அறிந்தோ அறியாமலோ உயிர் பலி கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டுதான் இருக்கின்றது.  எத்தனை பேர் என்னென்ன சொன்னாலும், எழுதினாலும், இது போன்ற மரணங்களைத் தவிர்க்க முடியவில்லைதான்.   (உண்மையானவன் வலைத்தளத்தில் நண்பர் சொக்கன் அவர்கள் இதைப் பற்றி மிகவும் வருந்தி திங்களன்று ஒரு அழகான இடுகை பதிந்திருக்கின்றார்).


      திரைப்படங்களில் விஜய், தூரப் போகும் புகைவண்டியில் ஏற பல கட்டிடங்கள், மரங்கள் மீதெல்லாம் தாவிச் செல்லும் காட்சிகள் ரசிகர்களின் மனதில் நிறைந்து நிற்கும் போது, நாம் நிற்பது கட்டிடத்தின் மேல் என்றும், கட்டிடத்தின் கூரையாக இடப்பட்டிருக்கும் ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட் எளிதில் ஒடிந்து விடும் என்றும் அவர்கள் சிந்திப்பதில்லை.  ஆனால், 25 வயதான, கட்டிட வேலைக்குச் சென்று கிடைக்கும் வருமானத்தில், குடும்பத்தினரைப் பாதுகாக்கும் உன்னிக் கிருஷ்ணனின் இழப்பு அக்குடும்பத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றிச் சிந்திக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.  இது போன்ற சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க திரையரங்கு உரிமையாளர்களும் காவல்துறையும், திரைப்பட நடிகர்களும் தங்களால் என்னென்ன செய்ய முடியுமோ, அதைப் பற்றியெல்லாம் சிந்தித்து ஆவன செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.
 

இருப்பினும்,விஜய் ரசிகர்கள் வசூலித்த 2 லட்சம் ரூபாயும், அத்துடன் திரைப்பட விநியோகஸ்தரின் 1 லட்சம் ரூபாயும் சேர்த்து 3 லட்சம் ரூபாயை கடந்த தினம் கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்த உன்னிக் கிருஷ்ணனின் மறைவுக்கான இறங்கல் கூட்டத்தில்,  மறைந்த உன்னியின் தம்பி மற்றும் தங்கைக்கு வழங்கப்பட்டது.  அதில் விஜயும் கலந்து கொண்டு தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்ததுடன், தாமதமின்றி தான் நேரில் உன்னியின் வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் சொல்லப் போவதாக்ச் சொல்லியிருக்கின்றார்.  படப்பிடிப்பு மற்றும் நேரமின்மைக்கு இடையே அதை எல்லாம் விட விலைமதிக்க முடியாதது தன் ரசிகரான உன்னியின் உயிர் என்பதை உணர்ந்து வந்தது சிறிது மனதிற்கு ஆறுதல்தான். இருப்பினும், அவர் தன் ரசிகர்களிடம் இது போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் ஆராதனை கூடாது என்று அறிவுறுத்தி இனி இது போல் ஒரு மரணம் ஏற்படாமல் இருக்கத் தன்னால் இயன்றதைத் செய்வார் என்று நம்புவோம். 


                ரசிகர்களின் இது போன்ற ஆவேசங்களுக்கு நீண்ட ஆயுள் கிடையாது என்பதுதான் உண்மை.  நடிகை குஷ்புவுக்கு ஒரு கோயிலையே கட்டி ஆராதனை நடத்தியவர்கள் அவரது இடத்தை நிரப்ப புதிய நடிகைகள் வந்ததும்,  அவர்கள் பின்னால் செல்ல, இடையில் ஒரு விவாதத்தில் குஷ்பு சிக்க, பெண்கள் அவருக்கு எதிராகத் துடைப்பக் கட்டையுடன் ஆர்பாட்டம் நடத்திய போது, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோயில் கட்டிய ரசிகர்கள் வரவில்லை. புரட்சித்தலைவருக்கும் மிகப் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கத்தான் செய்தது.  அவர் அரசியலில் இறங்கினார் என்றாலும் அவர் தன் ரசிகர்களைச் சிறப்பாகக் கையாண்டு தமிழ் நாட்டையே ஆண்டிருக்கிறார். நடிகர் திலகமும் - அவரும் அரசியலில் இறங்கினாலும் அது தோல்வியைத் தழுவிய ஒன்று – தனது ரசிகர்களைப் பிரச்சினைகள் வராத அளவு கையாண்டார் என்று சொல்லலாம். உலக நாயகனோ அரசியல் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை! ரஜனி, கமல் ரசிக மன்றங்களுக்கிடையில் பல சச்சரவுகள் நிகழ்ந்தாலும், ரஜனியும், கமலும் பேசி,  ஒருவிதமாக அதைக் கட்டுக் கோப்புக்குள் கொண்டு வர, கமல் தனது மன்றத்தை ஒரு சமுதாய நல மன்றமாக மாற்றி ரசிகர்களின் கவனத்தைத் திசை திருப்பி விட்டார். ரஜனியின் அரசியல் பிரவேசம் கேள்விக் குறியாகவே இருந்தாலும் அவரும், தனது மன்றத்தைத் திசை திருப்பி வைத்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். “தல”, தனது ரசிகர்கள் தனக்காகத் தங்கள் நேரத்தை வீணாக்குவதை விரும்பாமல், குடும்பத்திற்காக உழைத்து, நேரம் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தி தனது மன்றத்தையே கலைத்துவிட்டார். சூர்யா தனது ரசிகர்களைத், தன் தந்தை வழி கல்வி அறக்கட்டளையை விரிவாக்கி, அகரம் என்ற அறக்கட்டளையை நிறுவி ரசிகர்களைத் திசை மாற்றி விட்டார்.

சிறந்த நடிகனுக்கு நடிப்பும், பேரும், புகழும், பணமும் மட்டுமல்ல. கூடவே, இவற்றிற்கு மூல காரணமான ரசிகர்களையும் பேணிக் காக்க வேண்டியப் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது. விஜய் இதற்கிடையில் அரசியலில் ஆர்வம் காட்டுவதாகச் செய்திகள் அடிபட்டதால் அவர் இது போன்ற சம்பவங்களை மனதில் கொண்டு மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும்.  அவர், கமல், ரஜனியைப் போல் ஆவாரா, அஜித், சூர்யாவைப் போல் ஆவாரா, புரட்சித் தலைவர் போல் ஆவாரா?!!!!! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.  காத்திருப்போம்!
     

படங்கள் : இணையம்
     


33 கருத்துகள்:

 1. உங்கள் கவலை எனக்கு புரிகிறது ,புரிந்து என்ன செய்ய ?விஜய்க்கு அல்லவா புரிய வேண்டும் ?
  த ம 1

  பதிலளிநீக்கு
 2. சிறந்த நடிகனுக்கு நடிப்பும், பேரும், புகழும், பணமும் மட்டுமல்ல. கூடவே, இவற்றிற்கு மூல காரணமான ரசிகர்களையும் பேணிக் காக்க வேண்டியப் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது. //

  நடிகர்கள் இவர்களை திசை மற்ற வேண்டியது அவசியமானது மற்றும் கடமையும் கூட.
  செய்வார்களா..? மற்றம் வரவேண்டும்.

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  தம.2

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு ..காது கொடுத்து கேட்க வேண்டியவர்கள் ரசிகர்களே !நடிகரை நடிப்புக்காக மட்டும் காணும் மனப்பான்மை வரணும் ..மூன்று லட்சம் என்ன முப்பது லட்சம் கொடுத்தாலும் போன உயிர் கிடைக்குமா ..??
  பாவம் இப்போதான் அந்த பையனின் படத்தை பார்க்கிறேன் சிறு வயதில் தேவையா இதெல்லாம் ??அவனை பெற்றவங்களுக்கு எவ்ளோ மன வேதனையா இருக்கும் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! ஆம் உண்மையே எத்தனை கொடுத்தாலும் உயிர் திரும்ப வரப் போஅதில்லை..நட்டம் நட்டம்தான்....இந்தப் பசங்களைத்தான் சொல்லணும்! பொறுப்பற்றத்ட் தன்மைக்கு!

   நீக்கு


 4. "அரசியல் தலைவர்களுக்காகவும், திரைப்பட நடிகர்களுக்காகவும் அறிந்தோ அறியாமலோ உயிர் பலி கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டுதான் இருக்கின்றது." என்பதுடன் ஈழத் தமிழருக்காகவும் என்பதையும் சேர்த்திருக்கலாம்.

  ஈழத் தமிழருக்காகவோ
  அரசியல் தலைவர்களுக்காகவோ
  திரைப்பட நடிகர்களுக்காகவோ
  தற்கொலை செய்வதை நிறுத்திப்போட்டு
  மாற்றுவழியைக் கையாளலாமே!

  "சிறந்த நடிகனுக்கு நடிப்பும், பேரும், புகழும், பணமும் மட்டுமல்ல. கூடவே, இவற்றிற்கு மூல காரணமான ரசிகர்களையும் பேணிக் காக்க வேண்டியப் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது." என்ற கருத்தை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! ஆம் இல்லையா! அதுவும் பொறுப்பற்றத் தன்மைதான். உயிர் மாய்த்துக் கொள்வதால் தீர்வு கிடைக்கப் போவதில்லையே! மிக்க நல்ல அக்ருத்து நண்பரே! மிக்க ந்னறி!

   நீக்கு
 5. நான் இப்பொழுது தான் அந்த இறந்தவரின் புகைப்படத்தை பார்க்கிறேன். கொடுமை.
  இறந்தவரின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாயை விஜய் வழங்கினார் என்று பத்திரிக்கையில் படித்தபோது, விஜய் தன்னுடைய சொந்த பணத்தை தான் வழங்கினார் என்று நினைத்தேன். அது தவறு என்று இப்போது தான் தெரிகிறது. 2 லட்ச ரூபாயும் ரசிகர்கள் வசூலித்த பணம் தானா அது,அட கடவுளே. நீங்கள் சொல்வது மாதிரி, விஜய் தன் ரசிகர்களிடம் இது போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் ஆராதனை கூடாது என்று அறிவுறுத்தி ஒரு அறிக்கை விடுவார் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை.

  பார்ப்போம் இது போன்ற அபத்தமான செயல்கள் இனியாவது நடக்காமல் இருக்கிறதா என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஜய் வழங்கினாரோ இல்லையோ செய்தி அப்படித்தான் வந்தது. விஜய் கொடுத்துவிட்டு வெளியில் தெரியாமல் இருக்கட்டும் என்ரு நினைத்திருக்கலாமோ? இல்லை வீட்டிற்குச் சென்று கொடுக்கலாமோ? என்னவோ...போன உயிர் போனதுதானே....பசங்கல் உணர்ந்தால் தான் இதற்கெல்லாம் வழி பிறக்கும்....

   நீக்கு
 6. சினிமா நடிகர்களை அஎஆதிக்கும் பழக்கம் வெறுப்பையே தருகிறது. நாமும் அந்தக் காலத்தில் நடிகர்களை ரசித்திருப்போம். ஆனால் நம் கடமைகளை முதலில் வைத்துக்கொண்டு, அவர்களை ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே ரசித்தோம். கோடி கொடியாக சம்பாதிக்கும் நடிகர்களுக்காக முதல் நாளே பார்க்கும் வெறியில் 300 ரூபாயும், நானூறு ரூபாயும் கொடுத்து படம் பார்த்துக் கொண்டு... ஏதோ ஒரு இடத்தில் முதல் நாள் மூவாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்றார்களாம்!

  என்னவோ போங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடப்பாவி! 3000 ரூபாயா? உருப்பட்டாப்லதான்.......என்னவோ போங்க உங்கள் வார்த்தைகள்தான்! நாமும் ரசித்தோம் தான்...உண்மையே ஆனால் இப்படியா? ம்ம்ம் பொறுப்பற்றத் தன்மைய என்னனு சொல்றது.....

   நீக்கு
 7. என்னவோ போங்க!

  கட்டிக்கிட்ட வீட்டுக்காரி,
  பெத்த புள்ளைங்க,
  வயசான அப்பா அம்மா,

  இவங்களை விட
  அவுங்க பக்கம்
  மனசு எப்படித்தான் போவுது
  அப்படின்னே புரியல்ல.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைச் சொல்லுங்க தாத்தா...பொறுப்பற்றத் தன்மையே! எல்லம் அந்த இளம் வயது செய்யும் அதென்னவோ சொல்வாங்களே கெமிஸ்ட்றி???!!!

   நீக்கு
 8. மிகச் சரியான நேரத்தில்
  மிக மிக அவசியமான பதிவு
  (பதிவர் சந்திப்பில் தங்களைச் சந்திக்கக் கூடும்
  என எண்ணி இருந்தேன்.அடுத்த முறை அவசியம் சந்திப்போம் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! நிச்சயமக அடுத்த முறை சந்திப்போம்....இம்முறை வர முடியாமல் போனது.....வருத்தமே!

   நீக்கு
 9. தங்கள் அறிவுரை மிகவும் நன்று! இனியாவது திருந்துவார்களா......!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருந்த வேண்டும் அறிவு வந்தால்! நம்புவோம் ஐயா!

   மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 10. அட கஷ்ட காலமே!...

  இறந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாயை - விஜய் தன் கையிலிருந்து வழங்க வில்லையா?..

  அடுத்தவரின் பையிலிருந்தா!..

  ஊரார் வீட்டு நெய்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்தான் வழங்கினாரா இல்லையா என்று தெரிய வில்லை இதுதான் செய்தி! ஆனாலும் உயிருக்கு இந்த நெய் அவசியமில்லாமல் போய்விட்டதே! போன உயிர் போனதுதானே!

   நீக்கு
 11. நடிப்பை ரசிப்பதோடு விட்டுவிட வேண்டும் அதையும் தாண்டி இப்படி கொடி பிடித்து அலைவது வீண் என்பதை ரசிகர்களும்,இப்படியான ரசிகர்களை கட்டுப்படுத்த நடிகர்களும் முன்வரவேண்டும். நல்ல பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிகச் சரியே! ரசிகர்கள் மீதுதான் தவறு என்றலும், நடிகர்களும் கட்டுப் படுத்தித்தான் ஆக வேண்டும்......மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. ஆசானே வணக்கம்.

  உண்மையானவன் சொக்கன் அய்யா அவர்களின் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை இங்கும் பதிவது தவறாகாது என்று நினைக்கிறேன். ..

  ““கூத்தர்கள் கூழுக்கு ஏங்கி ஊர் ஊராக அலைந்த காலங்கள் உண்டு.
  கூத்தாடிக் கூட்டம் என்று இகழப்பட்டதுண்டு. பரம்பரை பரம்பரையாய் வேறு தொழில் அறியாதோராய் இரந்து வாழும் வாழ்வைப் பெற்றதுண்டு. அவர்கள் உண்மையில் கலைஞர்கள். தங்களது உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் தாங்கள் சார்ந்த கலைக்காக அர்ப்பணித்து அவல வாழ்வு வாழ்ந்தவர்கள்.
  ஆனால் காலத்தின் சுழற்சி இன்று வேறுவிதமாய்த்தான் இருக்கிறது.
  பணம் சம்பாதிக்கவும் பிழைப்பு நடத்தவும் பின்பு வாய்ப்புக் கிடைத்தால் ஆட்சியைப் பிடித்து மணிமுடி சூடவும் நடிகர்களுக்கு ஆசை வந்திருக்கிறது.
  நடிப்பு.. அரசியலுக்கு இன்று மூலதனமாகிவிட்டது.
  நம்மவர்களும் நிஜமென்று நிழலின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள்!
  உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய பதிவு அய்யா!
  ஆனால் என்ன
  செவிடன் காதில் ஊதுகின்ற சங்கினைப் போலத்தான் இவர்களுக்கு இதைச் சொல்வது!
  நன்றி““

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நல்லத் கருத்துள்ள பின்னூட்டம்! பின்னூட்டத்திலும் அருமையான கருத்தைச் சொல்லுவது ஆசான் தான்! மிக்க நன்றி ஆசானே!

   நீக்கு
 13. மிக நீண்ட ஆய்வுக் கட்டுரை ...
  எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரை ...
  படித்தேன் ...
  எங்கள் ஊரில் ஒரு பெரும் தனவந்தர் திருமணத்தின் பொழுது அவரிடம் பணம் பெரும் ஆசையில் மிகப் பெரும் ப்ளக்ஸ் ஒன்றை தூக்கி நிறுத்துகிறேன் என்று தூக்க அது மின் கம்பியில் பட பறந்தன மூன்று உயிர்கள்!

  அதுவும் நினைவில் வந்தது..
  இது குறித்து ஒரு சமூக உளவியல் ஆய்வு அவசியம்.
  மலர்த்தரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இப்போதெல்லாம் மன்சள் நீராட்டுவிழா, காதுகுத்தல் விழா, பிறந்தநாள் என்று கட் அவுட்டுகள் ப்ளக்ஸ் பெருகிவிட்டன.....பணமும் கொழித்திருக்குமோ....,,உயிர் போவதுதான் வருத்தமாக இருக்கின்றது.....

   நிஹ்சய்மாக சமூக உளவியல் ஆய்வு அவசியம்...நல்ல கருத்து நண்பரே!

   நீக்கு
 14. திருந்தாத ஜன்மங்கள்..... நடிகர்கள் மீது இருக்கும் மோகம் என்று தான் குறையுமோ.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! திருந்தாத ஜென்மங்கள்தான். உருப்படியாகச் செய்ய எத்தனையோ வேலை இருக்க...இந்த மோகம் இப்படி இவர்களை ஆட்டிப் படைக்கின்றதே! என்ன செய்ய...மிக்க ந்னரி வெங்கட் ஜி!

   நீக்கு
 15. சினிமாவும் நடிகர்களும் எந்த அளவுக்கு மக்களை ஆக்ரமித்திருக்கிறார்கள்? வேதனைதான் மிஞ்சுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சார்! நம்மூரில் சினிமாவின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கின்றது! தாக்கம் இருப்பதில் தவறில்லை! அந்தத்தாக்கத்தையும் நல்ல வழியில், ப்ரொடக்டிவ்வாக உப்யோகித்தால் நன்றாக இருக்கும்......இந்த பாலபிஷேகம், ஆராதனை எல்லாம் தான் அநாகரீகமான செய்லகளாக இருக்கின்றது. மட்டுமல்ல இது முன்பெல்லாம் கேரளாவில் இல்லாமல் இருந்தது. இப்போது அது அங்கும் பரவி உள்ளதே! ம்ம்ம்ம் என்ன சொல்ல....

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே ! தேவையான பதிவே அருமையாக சொன்னீர்கள் . மக்கள் சக்தி மாபெரும் சக்தி வாய்ந்தது. அதை சரியான முறையில் கையாண்டு அறிவு பூர்வமாகவும் மனித நேயம் உள்ளதாகவும் பயனுள்ள வகையிளும் மாற்றியமைப்பதும் நன்றியுள்ள நல்ல தலைவர்களுக்கு அழகு. இல்லாமல் யாராக இருந்தாலும் இவற்றை நடக்க விட்டு வேடிக்கை பார்ப்பது தன்னலம் நிறைந்ததாகவே உள்ளது நியாயம் இல்லாத கொடூரமான விடயம் தான் என்று தோன்றுகிறது. இது போன்ற விடயங்கள் நடக்கா திருக்க ஆவன செய்யுமாறு தங்கள் விடுத்த அறிக்கைக்கு மனம் மகிழ்கிறேன். மிக்க நன்றி சகோ இருவருக்கும் ! வாழ்த்துக்கள் .....! தாமதமாக வந்தமைக்கு கோபம் இல்லையே ஹா ஹா ...

  பதிலளிநீக்கு