சனி, 5 அக்டோபர், 2013

பயணம்

பயணம்

    
சமீபத்தில் நான் மேற்கொண்ட பயணத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம் மிக மிக உன்னதமான ஒன்று. நான் சென்ற இடம் நகரத்தின் பூச்சு எதுவும் இல்லாத, அதிலிருந்துத் தப்பிய ஒரு இடம். எனது பயணம் மலைகளின் நடுவில் உள்ள ஒரு  கிராமத்தை நோக்கி.
அப்படி பயணம் செய்யும் போது, பாலக்காட்டிலிருந்துப் பேருந்தில் பயணம். பாலக்காடு, முண்டூரிலிருந்து கல்லடிக்கோடு வரை இரு புறமும் கண்குளிரும் வண்ணம், மனதை மயக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கைக் காட்சிகளும்,
ஆங்காங்கே வளைந்து, நெளிந்து ஓடும்
நீரோடைகளும், ஆறுகளும் மனதைக் கொள்ளை கொண்டதோடு மட்டுமல்லாமல், அங்கு இந்த இயற்கை சூழலில் வசிக்கும் மக்களைக் கண்டு எனக்குச் சிறிது பொறாமையும் வந்ததை இங்கு சொல்லத்தான் வேண்டும். அதன் பின்னரும் ஒலவக்கோட்டிலுருந்து பெருந்தில்மன்ன, பின்னர் அங்கிருந்து எனது நண்பரின் கிராமம் வரை உள்ள அந்த இயற்கைக் காட்சிகளை வருணிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவு பற்றாது.
எனக்கு இயற்கையைப் பூசிக்கும் பூசாரி ஆகிய ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) நினைவுக்கு வந்த்தார். கவிதை என்பது அவரைப் பொருத்தவரை The spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion Recollected in Tranquility”. பயணத்தின் போது நாம் காணும் காட்சிகளை, சம்பவங்களை, நிகழ்வுகளை, அனுபவங்களை அமைதியான தருணத்தில் மனம் மீண்டும் மீண்டும் அசை போடும் போது இயற்கையாக, அருவி போன்று கொட்டும்  உள் உணர்வுகளை கவித்துவமாக உணர முடிகிறது.  “Nature teaches everything to us.  Nature watches us everytime”. இயற்கை நமக்கு எல்லாமே கற்றுத் தருகிறது.  இயற்கை நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.   காலார நடக்கும் வசதி. நடக்கும் போது யார் மீதும் மோதிக் கொள்ளாமல் நடக்கும் ஒரு சுகம். எதிரில் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாத அளவு பனி மூட்டம். காலையில் எழும் போதே பறவைகளின் ஒலியும், சில் வண்டுகளின் ரீங்காரமும் செவி வழி மனதில் இறங்கி ஒரு இனிய இசையாகப் பதிந்தது.  பல வண்ணங்களில் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள், அவற்றின் இயற்கையான சூழலில் இருந்ததால் பார்க்க மிக ரம்மியமாக இருந்தது. புகை இல்லாத, பெட்ரோல் நெடி இல்லாத சுகந்தமானக் காற்று.  அலைபேசிகளுக்கு ஓய்வு. எங்கும் அமைதி.  நகர வாழ்வில் கிடைக்காத ஒரு அமைதி. இந்த அமைதி மனதிற்கு வேண்டிய ஒன்றாக இருந்தது.  மனம் அமைதியாக இருக்கும் போதுதான் நாம் பல விஷயங்களைக் கற்கிறோம். இங்குள்ள மனிதர்கள் யாரும் எதைப் பற்றியும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. நடையில் ஒரு வேகமோ, பரபரப்போ இல்லை. யாருக்கும் எந்த ஒரு குறிக்கோளோ, இலக்கோ இல்லாத ஒரு அமைதியான முகம். ஆனால் மிக சந்தோஷமான முகங்களாகத் தெரிந்தது ஒரு வித்தியாசமான காட்சிதான். “இன்னாமே வீட்டுல சொல்லிகினு வந்தியா, கஸ்மாலம், சாவு கிராக்கி, அன்னாண்ட இட்டுகினு போ இப்படிப்பட்ட தேவ வாக்குகள் எதுவும் இல்லாததால் ஏதோ நான் வேற்று கிரகத்திற்கு வந்து விட்டேனோ என்று கூடத் தோன்றியது.
நண்பரின் வீட்டைச் சுற்றியும் ரப்பர் தோட்டங்கள். பக்கத்துச் சுவர் வழி அடுத்த வீட்டு ரகசியத்தை இலவசமாகக் கேட்க வழியில்லாமல் ஆங்காங்கே வீடுகள். எங்கும் அமைதியாக, சூடான வார்த்தைகள் இல்லாமல், பரபரப்பு இல்லாமல், நெற்றிச் சுருக்கங்கள், கண் சுருக்கங்கள் இல்லாமல், முகத்தில் சந்தோஷமும், அன்பும், நாவில் இனிய சொற்களும், இயற்கையோடு ஒன்றி வாழும் சூழலும் இருந்து விட்டால் அது சொர்கம்தான்.  ஏனென்றால் அது நம் மனதை இலகுவாக்கி, இளமையாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல் ஆன்மாவை அறிய உதவும் ஓர் இடமாக அமைவதால். அப்படிப்பட்ட இயற்கையின் சூழலை நவீன மயமாக்குதல் மூலம் நாம் சிறிது சிறிதாக இழந்து, இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையை இழந்து வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.
பயணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு சமயத்தில், அடிக்கடியோ அல்லது எப்போதாவதோ நிகழும் ஒன்றுதான். விமானப்பயணம், ரயில் பயணம் பேருந்துப் பயணம், கப்பல் பயணம் என்று பல. சைக்கிளிலும், இரு சக்கர வாகனங்களிலும் கூட பயணம் மேற்கொள்பவர்கள் உண்டு. சிலர்க்கு நிகழாமலேயேக் கூட இருக்கலாம்.  நிகழாமல் இருப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் என்பது எனது எண்ணம்.  ஏன் என்றால் பயணம் என்பதற்கு வண்டிகள் ஏதும் அவசியம் இல்லை. 
கால் நடையாகவே கூடப் பயணம் மேற்கொள்ளப்படலாம். இவை எல்லாவற்றையும் விட மனம் என்ற குதிரை ஒன்றே போதும் பயணிக்க. பொதுவான திருவிழாக்கள், கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் இவற்றிற்காக மேற்கொள்ளப்படும் பயணம், சுற்றுலாப்பயணம், நாடுகடந்த பயணம் நம் சொந்த ஊர் பயணம், படிப்பிற்கான பயணம், வேலைக்கான பயணம் இப்படிப் பல பயணங்களை நாம் நமது வாழிவில் மேற்கொள்ளத்தான் செய்கிறோம். பல பண்பாடுகளையும், நாகரிகங்களையும் நாம் கற்றுக் கொள்கிறோம். பயணங்களின் மூலம் பல உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்பு உண்டு. பயணங்களால் நமது ஆளுமை விரிவடைகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கையையும், வாழ வேண்டும் என்ற உந்து சக்தியையும் ஊர்ஜிதப்படுத்துகிறது. அதனால் வாழ்க்கையின் மீது ஒரு ஆர்வம் கூட உருவாகுகிறது. வாழ்வை நேசிக்கக் கற்றுக் கொள்வதால் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்திலும், வித்தியாசமான, பரந்த பார்வையுடனும் பார்க்க ஒரு ஆரம்பமாக அமைகிறது. 
நம் உறவுகளையும், நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் நம்மைச் சுற்றி இருக்கும் மக்களையும் புரிந்து கொள்ள மட்டுமல்லாமல் அவர்களை நேசிக்கவும் கற்றுத்தருகிறது.  சில சமயங்களில் பயணம் ஆழமான அன்பையும், நேசத்தையும் கூடப் புரிய வைக்கிறது.  பல புதிய நட்புகளை உருவாக்குகிறது. புதிய மனிதர்களை நேசிக்க வைக்கிறது.  இந்த உலகம் மிகவும் பரந்தது, அதில் எண்ணற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை உணர வைக்கிறது.  பயத்தை போக்கித் தனியாகப் பயணம் மேற்கொள்ளவும கூட கற்றுத் தருகிறது. பயணம் எதுவாக, எதற்காக, எந்த வகையில் இருந்தாலும், அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் இன்றியமையாதது. நமக்கு வேண்டப்பட்டவரின் இறந்த செய்தி கேட்டு அதற்காக நாம் பயணம் மேற்கொள்ளும்போது, நம் மனது அவரைப் பற்றியேச் சுற்றி வந்து அவரது அனுபவங்கள், அவருக்கும் நமக்கும் இருந்த உறவு, நமக்கு அவருடன் உண்டான அனுபவங்கள் என்று மனது பல விஷயங்களை அசை போட்டு பல பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது.  இதைத்தான் நான் எனது முந்தைய பதிவுகளாகிய வாழத்தெரியாத ராஜீவ், மாதவன் மாமா இரண்டிலும் பதிவு செய்திருந்தேன். எல்லாப் பயணமும் ஏதோ ஒரு வகையில் நமக்குப் பாடங்கள் கற்பிக்கத்தான் செய்கின்றன. சிறு பயணமாக இருந்தாலும் சரி, நெடும்பயணமாக இருந்தாலும் சரி நாம் பார்க்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, சமூகம்,  கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள், கிராமங்கள், அங்கு வாழும் மக்கள், ஏன் சிறு புல் கூட, சிறு எறும்பு கூட நமக்குப் பல பாடங்களைக் க்ற்றுத் தரும்.  ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவப் பாடமே. அதைக் கூர்ந்து நோக்கினால் மட்டுமே நாம் கற்பதும், நமக்குப் புரியும். நம்மை நாமே உணரவும் பயணங்கள் உதவுகின்றன. அவற்றை உள்வாங்கி மனதில் பதிப்பதும், பதிக்காததும் அவரவரைப் பொருத்தது.  நமது பார்வையில்தான் உள்ளது எல்லாமே. 
 பயணம் செய்யும் போது நான் கண்ட வாசகம் “Less luggage; More comfort" லெஸ் லக்கேஜ் மோர் கம்ஃபோர்ட்”. 
ஆம் உண்மைதான்.  சுற்றுலாப் பயணம் என்றாலும் சரி,
ஆன்மீகப் பயணம் என்றாலும் சரி, அல்லது எந்த ஒரு பயணமாக இருந்தாலும், நமது தேவைகள் அதிகரித்து அதனால் சுமைகளும் அதிகரித்தால் மனம் அவற்றின் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திப்பதில் ஆழ்ந்துவிடும்.  நமது தேவைகளுக்கு நாம் அடிமையாகி விட்டாலும் அந்தச் சூழல் உள்ள ஒரு இடத்தைத் தங்குவதற்கு நாம் தேடத் தொடங்குவோம். ஆதலால்  நாம் அனுபவிக்க இருக்கும் மகிழ்வான தருணங்களை நம் மனம் தவறவிடும் வாய்ப்புண்டு.  இறைவனுடன் ஒன்றி வழிபடும் அந்தத் தருணமும் தவறலாம்.  இந்த உலகே ஒரு அழகுதானே!  அதனோடு ஒன்றி அதன் அழகை ரசித்து அனுபவிக்க வேண்டாமா? ஒரு நல்ல யாத்ரீகன் தனது பயணத்தைக் குறித்து பல அனுபவப் பாடங்களையும், தனது பார்வையையும், கருத்துக்களையும் பயணக் கட்டுரைகளாக பதிவு செய்வதில் தவறுவதில்லை.  அப்படிப் பார்க்கும் போது, திரு பரணீதரன், திரு. ப்ரியாகல்யாணராமன் இவர்கள் எழுதிய ஆன்மீக திருத்தலப் பயணத் தொடர்கள் நம்மையும் அந்தப் புனித இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆன்மீக உணர்வைத் தோற்றுவிக்கும் அளவு சக்தி வாய்ந்தவை.
 அதைப் போன்று, திரு. ஞானி, திரு. இராமக்கிருஷ்ணன் இவர்கள் எழுதும் பயணப் பதிவுகள் நம்மையும் அவர்களுடனேயே பயணம் செய்வது போன்றத் தோற்றம் தருவது மட்டுமன்றி, பல நல்லக் கருத்துக்களைக் கொண்டதாகவும், சிந்திக்க வைப்பவையாகவும் இருக்கும்.
    
இலக்கில்லாமலும் பயணம் மேற்கொள்ளப்படலாம். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாத ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்?  நினைத்துப் பாருங்கள்.  இலக்குகள் இல்லை. மனம் போகும் போக்கில் கால்கள் செல்லும் போது, மனம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் ஆராயத் தொடங்கும்.  அப்படி ஆராயும் போது பல நல்ல அனுபவப் பாடங்கள் நமக்குக் கிடைக்கும்.  
     உடலால்தான் பயணம் மேற்கொள்ள வேண்டுமா?  ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாலே பயணம் மேற்கொள்ள முடியும்.  எப்படி? மனம்தான் குதிரை ஆயிற்றே! தனிமையில் இருக்கும் போது வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னது போல் நம் மனதை நாம் பயணம் செய்த இடங்களுக்கு எல்லாம் அனுப்பி எவ்வளவு முறை வேண்டுமென்றாலும் உலா வரச் செய்து இன்புறலாம். அது பறந்து செல்லும் இடங்களை, முன்னர் ஏற்பட்ட அனுபவங்களை நிகழ்வுகளை அசை போட்டு, கூர்ந்து கவனித்து, பல வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக் கொள்ளவும் செய்யலாம்.. 
இந்தப் பயணங்கள் எல்லவற்றையும் விட மிக மிக உண்மையான, யாராலும் தவிர்க்க முடியாத, எல்லோரும் பயணிக்கும் ஒரு பயணம் ஒன்று உண்டென்றால்  அதுதான் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டே பயணிக்கும் இறப்பு என்றப் பயணம்.
இதைத்தான் எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) “Because I could not stop for death, HE stopped for me”  எனும் கவிதையில் மரணத்தை நம்மை இவ்வுலக வாழ்க்கையிலிருந்து அழைத்துச் செல்ல வரும் இரதத்தோடு ஒப்பிட்டு இருக்கிறார்.  நம் முன்னோர்களும் மரணம் என்ற இந்தப் பயணத்தைக் கண்டு பயம் கொள்ளாதவர்கள் தானே!. அதனால் தானே அவர்கள் மரணம் என்ற பயணம் மேற்கொண்டவர்களைச் சிவலோக பதவி/வைகுண்ட பதவி அடைந்ததாகக் கருதினார்கள்!.  அந்தப் பயணம் நமக்கு வேண்டுமானால் ஒர் அமைதியானப் பயணமாக இருக்கலாம். ஆனால், நம்மைச் சுற்றி உள்ளவர்க்கு அது ஒரு நல்ல அனுபவப் பாடமாகக் கூட அமையலாம்.

நான் இந்தக் கட்டுரையை எழுதி முடித்து இந்த வலைப் பூவில் பதிவு செய்யலாம் என்று வைத்திருந்த சமயம், எனது மதிப்பிற்கும், மரியதைக்கும் உரிய, நான் மிகவும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் திரு. இராமக்கிருஷ்ணன் அவர்கள், தி ஹிண்டு தமிழ் நாளிதழில் (வெள்ளி செப்டெம்பர் 20 2013) “சாலை கற்றுத்தருகிறது  என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரையை எழுதியிருந்தார்.  இப்படி ஒரு அருமையான கட்டுரை வந்த பிறகு எனது இந்தப் படைப்பை வலைப்பூவில் பதிய வேண்டுமா என்று சிந்திக்கத் தொடங்கி விட்டேன்.  எனது இந்தப் பதிவு அவரது படைப்பு போன்று சிந்திக்க வைக்கும் அளவற்றக் கருத்துக்களைக் கொண்டதாக இல்லை என்றாலும், ஏதோ என் சிறு மூளையில் தோன்றிய ஒரு சில கருத்துக்களை இதில் பகிர்ந்து பதிவு செய்துள்ளேன். திரு. இராமக்கிருஷ்ணன் அவர்கள் தமது கட்டுரையின் முடிவில்
எமர்சனின் மிக அருமையான மேற்கோள்  ஒன்றைச் சுட்டிக் காட்டியிருந்தார். “பயணத்தில் சிலர் வியப்பூட்டும் இடங்களைப் பார்க்கிறார்கள்.  ஒரு சிலரே அங்குள்ள ஆன்மாவைக் காண்கிறார்கள்.”  அதைப் போலத்தான் நான் எனது எல்லாப் பயணங்களிலும் அந்தந்த இடங்களின் ஆன்மாவை உணரத்தான் முயற்சி செய்வேன். சமீபத்திய பயணத்தில் முதல் பத்தியில் எழுதியுள்ளதைப் போல் அந்த கிராமத்தின் இயற்கையின், இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையின் ஆன்மாவை உணர முடிந்ததாக உணர்கிறேன்.

1 கருத்து:

  1. பயணங்கள் ஒவ்வொரு அனுபவம் என்பதை அழகாகச்சொன்னீங்க. வெவ்வேறு அனுபவங்களை நமக்கு தந்தாலும் இயற்கையோடு இணைந்த நம் பயணங்கள் என்றும் சலிப்படையச் செய்யாதவை என்றும் புதுசு புதுசாக நமக்கு கற்றுத்தருபவை. இயற்கையோடு இணைந்த பயணங்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு