உலகம் சுற்றும் வாலிபர் என்று
பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டு ராஜா 64 வது வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றாலும்
அவரிடமிருந்து பயணக்கட்டுரைகளை எதிர்பார்க்க முடியுமா!!!!! தலைநகரிலிருந்து உள்நாடு
சுற்றும் வாலிபர், ஒவ்வொரு சிறு பயணத்தையும் மிக அழகான படங்களுடனும், விளக்கமான குறிப்புகளுடன்
எழுத்தின் மூலம் நம்மை எல்லாம் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நம் தில்லி ராஜா, நான்
சென்ற மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக மிகக் குறுகிய பயணமாக தில்லிக்குச் சென்றிருந்த
போது, தனது வேலைப் பளுவின் இடையிலும் என்னை சந்தித்தார்.
இச்சந்திப்பைப் பற்றி வந்ததும்
எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், பல காரணங்களால் மனதில் ஒரு சுணக்கம்.
அதனால் தாமதமாகிவிட்டதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெங்கட்ஜி சிறு
இடைவெளிக்குப் பிறகு வலையுலகம் வந்ததும் பதிவில் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
மிக்க நன்றி வெங்கட்ஜி!
நான் ரயிலில் முன்பதிவு செய்திருந்தாலும்,
எனது பயணத்தை இறுதிவரை உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் வெங்கட்ஜியை நான் தொடர்பு
கொள்ளவில்லை. இறுதியில், பயணத் தேதி நெருங்கிட நான் பயணம் செய்யப் போவது ஓரளவு உறுதியானதும்
வெங்கட்ஜியைத் தொடர்பு கொண்டேன். நான் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலையைச் சொல்லியிருந்தேன்.
அவரோ என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிட எனக்கு மனதிற்குச்
சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அவருக்கோ பணிச்சுமை. வலைப்பக்கம் கூட வர இயலாத நிலை.
நான் பயணம் செய்த தமிழ்நாடு விரைவு வண்டி இரவு 10.30 ற்கு. அந்த நேரத்தில் அவர் என்னைச்
சந்திப்பதற்காக என்று ரயில் நிலையத்திற்கு வர வேண்டுமே, அது அவருக்குச் சிரமமாக இருக்குமே
என்றும் தோன்றியது. ஆனால், வெங்கட்ஜி மிகவும் ஆர்வமுடன், சந்தோஷத்துடன் என்னைச் சந்திப்பதாகச்
சொன்னார். சந்தித்தார்.
விழா குர்காவ்னில் இருந்த என்
தங்கையின் வீட்டில். நான் அங்கிருந்த 4 நாட்களில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள், உறவினர்கள்
என்று கடந்துவிட 4 வது நாள், புறப்படும் நாள், இரவு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் தில்லி
ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஒரு மணி நேரப் பயணம். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து
வெளியில் வருவதற்கே சிறிது நடக்க வேண்டும். வெளியில் வந்து நடைமேடைக்குச் செல்லவும்
சற்று நடக்க வேண்டும். இரு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான்
நுழைய முடியும். என் அப்பா முன்னதாகவே அங்கு சென்றிருந்ததால், அங்கிருந்து வரும் போது
என்னுடன் வந்தார். 82 வயது. மின்படிகள் வழி ஏறி, முந்திக் கொண்டும், தள்ளிக் கொண்டும்
போகும் கூட்டத்தினிடையே அவரை மெதுவாகக் கவனமாக நடக்கச் சொல்லி நடைமேடையை அடைந்தோம்.
வெங்கட்ஜி 6 அடியார் என்பதால்
கூட்டத்தில் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், நாலடியாராகிய என்னைக் கூட்டதில்,
நான் கையைத் தூக்கிக் காட்டினாலும் காண்பது கடினமாயிற்றே, தேடுவதில் அவர் நேரம் தொலைந்துவிடக்
கூடாதே என்று நான் நடைமேடைக்கு இறங்கும் படிகளின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டு படிகளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறேன் என்று கேட்டுக்
கொண்டே வெங்கட்ஜி இறங்கி வரவும், நான் அவரைக் கண்டதும் கையசைக்க, நல்லகாலம் துள்ளித்
துள்ளிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் (ஹிஹிஹி), வெங்கட்ஜியும், என்னைக் கண்டு விட்டார்.
இரு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாகக்
கொடுத்தார்.
1. சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள்
தொகுப்பு: வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்பிரமணியன்
2. தனது “ஒரு சிறு இசை” எனும்
சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜியின்
(வண்ணதாசன்) கவிதைகள்.
எதிர்பாரா அன்பளிப்பு மகிழ்ச்சியாக
இருந்தது. ரயிலில் நல்ல துணை என்று சொல்லி நன்றி சொன்னேன். கூடவே, அடடா நாமும் அவருக்குப்
புத்தகம் கொடுத்திருக்கலாமே தோன்றாமல் போய்விட்டதே என்ற வெட்கமும் எழுந்தது. தில்லி
ரயில் நிலையத்தில் ஒழுங்கற்ற கூட்டம் பற்றிச் சொல்லி, ஒரு முறை தனது வேலைப்பளுவின்
காரணமாக ரயிலைப் பிடிக்கத் தாமதமாகிவிட, தன் பையை தலைமேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு
கூட்டத்தினிடையில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும். தலைநகர் ரயில் நிலையம் சுத்தமாக
இல்லாதது பற்றியும் மக்கள் துப்புவதைப் பற்றியும், சொன்னார். துப்புவது எங்கள் உரிமை
என்று பதிவும் எழுதியிருக்கிறார். http://venkatnagaraj.blogspot.com/2017/06/blog-post_11.html
ஒரு பயணி ஜோடி தங்கள் செல்லங்களான
இரு பக் பைரவர்களையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். படம் எடுக்க ஆசை ஆனால் எனது
கேமராவில் உயிரில்லையாதலால் எடுக்கவில்லை. ரயில் நடைமேடைக்கு வந்ததும் சட்டென்று வெங்கட்ஜி
என் அப்பாவின் கனமான பையையும் எனது முதுகுப் பையையும் தூக்கி ரயிலில் எங்கள் இருக்கையின்
அடியில் வைத்து உதவினார். பெரும்பாலும் நான் தனியாகப் பயணிப்பதால் எப்போதுமே எனது பைகளை
நானே தூக்கிப் பழக்கம். யாரேனும் கூட வந்தாலும் நானேதான் எனது முதுகுப்பையுடன் எனது
பைகளைத் தூக்கிப் பழக்கமானதால் வெங்கட்ஜி தூக்கி வைத்ததும் எனக்கு நெகிழ்ச்சி, வெட்கம்
கலந்த ஒரு சங்கடம் ஏற்பட்டது.
ரயில் புறப்படுவதற்குச் சற்று
முன் விடைபெற்றார். வெங்கட்ஜியைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ரயில் பிரயாணத்தின்
போது அவர் கொடுத்த சிறுகதைகள் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.
சமீபகால சிறுகதைத் துறையில் தடம்
பதித்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் பதினெட்டு பேரின் (மா. அரங்கநாதன், கந்தர்வன், களந்தை பீர்முகம்மது,
சு, சமுத்திரம், சிவகாமி, சுரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, என்.ஆர்.தாசன், திலகவதி,
தோப்பில் முகம்மதுமீரான், பாவண்ணன், பிரபஞ்சன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி, செ.
யோகநாதன், சி.ஆர்.ரவீந்திரன், ராஜம் கிருஷ்ணன், ஜெயமோகன்) படைப்புகள் “சமீபத்திய
தமிழ்ச் சிறு கதைகள்” என்று தொகுப்பட்ட இத் தொகுப்பை நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது.
அனைத்துமே அருமை. நவீன சிறுகதையின் செழுமையை எடுத்துக் காட்டும் விதத்தில் நேஷனல் புக்
ட்ரஸ்ட் ஏற்கனவே “புதிய தமிழ்ச் சிறுகதைகள்” – அசோகமித்திரன் தொகுத்தது – என்ற தொகுப்பை
வெளியிட்டிருக்கிறது என்பதையும் இப்புத்தகத்தின் முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது.
கல்யாண்ஜியின்/வண்ணதாசனின் கவிதைகள்
புத்தகத்தை இனிதான் வாசிக்க வேண்டும். வெங்கட்ஜிக்கு எனது நன்றிகள் பல! இரு முத்தான
புத்தக அன்பளிப்புடன் என்னைச் சந்தித்தமைக்கு!
----கீதா