திங்கள், 17 ஜூலை, 2017

சந்தித்ததும், சிந்தித்ததும் என்பவரைச் சந்தித்தேன்

உலகம் சுற்றும் வாலிபர் என்று பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டு ராஜா 64 வது வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்குச் சென்றாலும் அவரிடமிருந்து பயணக்கட்டுரைகளை எதிர்பார்க்க முடியுமா!!!!! தலைநகரிலிருந்து உள்நாடு சுற்றும் வாலிபர், ஒவ்வொரு சிறு பயணத்தையும் மிக அழகான படங்களுடனும், விளக்கமான குறிப்புகளுடன் எழுத்தின் மூலம் நம்மை எல்லாம் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் நம் தில்லி ராஜா, நான் சென்ற மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றிற்காக மிகக் குறுகிய பயணமாக தில்லிக்குச் சென்றிருந்த போது, தனது வேலைப் பளுவின் இடையிலும் என்னை சந்தித்தார்.

இச்சந்திப்பைப் பற்றி வந்ததும் எழுத வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், பல காரணங்களால் மனதில் ஒரு சுணக்கம். அதனால் தாமதமாகிவிட்டதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெங்கட்ஜி சிறு இடைவெளிக்குப் பிறகு வலையுலகம் வந்ததும் பதிவில் சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மிக்க நன்றி வெங்கட்ஜி!

நான் ரயிலில் முன்பதிவு செய்திருந்தாலும், எனது பயணத்தை இறுதிவரை உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருந்ததால் வெங்கட்ஜியை நான் தொடர்பு கொள்ளவில்லை. இறுதியில், பயணத் தேதி நெருங்கிட நான் பயணம் செய்யப் போவது ஓரளவு உறுதியானதும் வெங்கட்ஜியைத் தொடர்பு கொண்டேன். நான் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலையைச் சொல்லியிருந்தேன். அவரோ என்னை ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிட எனக்கு மனதிற்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. அவருக்கோ பணிச்சுமை. வலைப்பக்கம் கூட வர இயலாத நிலை. நான் பயணம் செய்த தமிழ்நாடு விரைவு வண்டி இரவு 10.30 ற்கு. அந்த நேரத்தில் அவர் என்னைச் சந்திப்பதற்காக என்று ரயில் நிலையத்திற்கு வர வேண்டுமே, அது அவருக்குச் சிரமமாக இருக்குமே என்றும் தோன்றியது. ஆனால், வெங்கட்ஜி மிகவும் ஆர்வமுடன், சந்தோஷத்துடன் என்னைச் சந்திப்பதாகச் சொன்னார். சந்தித்தார்.

விழா குர்காவ்னில் இருந்த என் தங்கையின் வீட்டில். நான் அங்கிருந்த 4 நாட்களில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள், உறவினர்கள் என்று கடந்துவிட 4 வது நாள், புறப்படும் நாள், இரவு அங்கிருந்து மெட்ரோ ரயிலில் தில்லி ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஒரு மணி நேரப் பயணம். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வருவதற்கே சிறிது நடக்க வேண்டும். வெளியில் வந்து நடைமேடைக்குச் செல்லவும் சற்று நடக்க வேண்டும். இரு ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் நுழைய முடியும். என் அப்பா முன்னதாகவே அங்கு சென்றிருந்ததால், அங்கிருந்து வரும் போது என்னுடன் வந்தார். 82 வயது. மின்படிகள் வழி ஏறி, முந்திக் கொண்டும், தள்ளிக் கொண்டும் போகும் கூட்டத்தினிடையே அவரை மெதுவாகக் கவனமாக நடக்கச் சொல்லி நடைமேடையை அடைந்தோம்.

வெங்கட்ஜி 6 அடியார் என்பதால் கூட்டத்தில் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால், நாலடியாராகிய என்னைக் கூட்டதில், நான் கையைத் தூக்கிக் காட்டினாலும் காண்பது கடினமாயிற்றே, தேடுவதில் அவர் நேரம் தொலைந்துவிடக் கூடாதே என்று நான் நடைமேடைக்கு இறங்கும் படிகளின் அருகில் ஒதுங்கி நின்று கொண்டு படிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டே வெங்கட்ஜி இறங்கி வரவும், நான் அவரைக் கண்டதும் கையசைக்க, நல்லகாலம் துள்ளித் துள்ளிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் (ஹிஹிஹி), வெங்கட்ஜியும், என்னைக் கண்டு விட்டார்.

இரு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.



1. சமீபத்திய தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு: வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்பிரமணியன்


2. தனது “ஒரு சிறு இசை” எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜியின் (வண்ணதாசன்) கவிதைகள்.

எதிர்பாரா அன்பளிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ரயிலில் நல்ல துணை என்று சொல்லி நன்றி சொன்னேன். கூடவே, அடடா நாமும் அவருக்குப் புத்தகம் கொடுத்திருக்கலாமே தோன்றாமல் போய்விட்டதே என்ற வெட்கமும் எழுந்தது. தில்லி ரயில் நிலையத்தில் ஒழுங்கற்ற கூட்டம் பற்றிச் சொல்லி, ஒரு முறை தனது வேலைப்பளுவின் காரணமாக ரயிலைப் பிடிக்கத் தாமதமாகிவிட, தன் பையை தலைமேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூட்டத்தினிடையில் ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டதையும். தலைநகர் ரயில் நிலையம் சுத்தமாக இல்லாதது பற்றியும் மக்கள் துப்புவதைப் பற்றியும், சொன்னார். துப்புவது எங்கள் உரிமை என்று பதிவும் எழுதியிருக்கிறார். http://venkatnagaraj.blogspot.com/2017/06/blog-post_11.html

ஒரு பயணி ஜோடி தங்கள் செல்லங்களான இரு பக் பைரவர்களையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். படம் எடுக்க ஆசை ஆனால் எனது கேமராவில் உயிரில்லையாதலால் எடுக்கவில்லை. ரயில் நடைமேடைக்கு வந்ததும் சட்டென்று வெங்கட்ஜி என் அப்பாவின் கனமான பையையும் எனது முதுகுப் பையையும் தூக்கி ரயிலில் எங்கள் இருக்கையின் அடியில் வைத்து உதவினார். பெரும்பாலும் நான் தனியாகப் பயணிப்பதால் எப்போதுமே எனது பைகளை நானே தூக்கிப் பழக்கம். யாரேனும் கூட வந்தாலும் நானேதான் எனது முதுகுப்பையுடன் எனது பைகளைத் தூக்கிப் பழக்கமானதால் வெங்கட்ஜி தூக்கி வைத்ததும் எனக்கு நெகிழ்ச்சி, வெட்கம் கலந்த ஒரு சங்கடம் ஏற்பட்டது.  

ரயில் புறப்படுவதற்குச் சற்று முன் விடைபெற்றார். வெங்கட்ஜியைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ரயில் பிரயாணத்தின் போது அவர் கொடுத்த சிறுகதைகள் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டேன்.

சமீபகால சிறுகதைத் துறையில் தடம் பதித்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் பதினெட்டு பேரின் (மா. அரங்கநாதன், கந்தர்வன், களந்தை பீர்முகம்மது, சு, சமுத்திரம், சிவகாமி, சுரபாரதிமணியன், தனுஷ்கோடி ராமசாமி, என்.ஆர்.தாசன், திலகவதி, தோப்பில் முகம்மதுமீரான், பாவண்ணன், பிரபஞ்சன், பூமணி, மேலாண்மை பொன்னுச்சாமி, செ. யோகநாதன், சி.ஆர்.ரவீந்திரன், ராஜம் கிருஷ்ணன், ஜெயமோகன்) படைப்புகள் “சமீபத்திய தமிழ்ச் சிறு கதைகள்” என்று தொகுப்பட்ட இத் தொகுப்பை நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. அனைத்துமே அருமை. நவீன சிறுகதையின் செழுமையை எடுத்துக் காட்டும் விதத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்கனவே “புதிய தமிழ்ச் சிறுகதைகள்” – அசோகமித்திரன் தொகுத்தது – என்ற தொகுப்பை வெளியிட்டிருக்கிறது என்பதையும் இப்புத்தகத்தின் முன்னுரையிலிருந்து அறிய முடிகிறது.

கல்யாண்ஜியின்/வண்ணதாசனின் கவிதைகள் புத்தகத்தை இனிதான் வாசிக்க வேண்டும். வெங்கட்ஜிக்கு எனது நன்றிகள் பல! இரு முத்தான புத்தக அன்பளிப்புடன் என்னைச் சந்தித்தமைக்கு!

----கீதா

55 கருத்துகள்:

  1. சந்திப்பு மகிழ்ச்சியான விசயமே வாழ்த்துகள்.

    நானும்கூட பல நேரங்களில் நினைப்பதுண்டு உலகம் சுற்றுபவருக்கு ஒரு வலைப்பூ ஆரமபித்து கொடுத்தால் அந்த அனுபவங்கள், செல்ஃபி விசயங்களை மக்களுக்கு சொல்லலாம்.

    இது அடுத்து வரும் பிரதமருக்கு உதவியாக இருக்கும்.

    த.ம.பிறகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு!! ஹஹஹ் தொடங்கிக் கொடுங்க!! நாமளும் நாலு நாடு பார்த்தா மாதிரி இருக்கும்...

      நீக்கு
  2. வேலை முடிச்சுட்டு, இரவு 10 மணிக்கு உங்களைச் சந்தித்துவிட்டு, வீட்டுக்குப்போய், மறு'நாள் வேலையைத் தொடரணும். இது சுலபமல்ல. இங்க ரமதான் மாதத்துல இரவு உணவு (கBப்Gகா) 10 மணி பார்டிக்கு எனக்கு அழைப்பு வரும். போனால், 12 மணிக்குத்தான் திரும்பமுடியும். நானோ, 9 மணிக்கு 'லைட் ஆஃப்' ஆள். அதனால் எந்த பார்டிக்கும் போகமாட்டேன். உண்மையாகவே வெங்கட் அவர்களின் சின்சியாரிட்டியையும் ஆர்வத்தையும் பாராட்டறேன். 'Maintaining friends' என்பது ஒரு கலை (அது இங்கே இலை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை! அவருக்குக் கஷ்டமான ஒன்றுதான் அதனால் எனக்குத் தயக்கமும் இருந்தது. எனக்குச் செல்ல அவகாசம் இருந்திருந்தால் நானே அவரது அலுவலகத்திற்கு அருகிலோ அல்லது அவருக்குச் சௌகரியமாக இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்திருப்பேன். இம்முறை அது முடியாமல் போனது. வெங்கட் ரொம்பவே சின்சியர் மனிதர். யார் தில்லி சென்றாலும் சந்தித்துவிடுவார்.

      நானும் முன்பெல்லாம் 9, 9.30 ஆனால் போதும் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் தூங்கிவிடுவேன். என் கஸின் எல்லோரும் சொல்லுவது கீதாவுக்கு 10 மணி என்பது மிட்னைட் என்று. அது போல காலை 4.30-5க்குள் எழுந்துவிடுவேன். இப்போதும் அதே நேரத்திற்கு எழுந்துவிடுவேன். ஆனால் இரவு தாமதமாகிவிடுகிறது படுக்க. மகன் படித்து வேலை செய்யப் போனதிலிருந்து சற்று மாறிவிட்டது.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் கருத்திற்கு

      நீக்கு
  3. உங்களுடைய 'பரிசும்' apt for வெங்கட். அந்த யோசனைக்கும் பாராட்டுகள். த. ம போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பரிசு?!!?!! நான் என்ன கொடுத்தேன்?

      ஆமாம் இனி யாருக்கும் புத்தகம் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மிக்க நன்றி நெல்லை.

      நீக்கு
    2. புளியோதரை மிக்ஸ்தான். இதை அங்க படிச்சேனே!

      நீக்கு
    3. ஓ! புளிக்காய்ச்சலா!! ஆம்! என் தங்கைக்கும் எடுத்துக் கொண்டு போனேன் அப்படியே வெங்கட்ஜி க்கும். அவர் தனியாக இருப்பதால் அதுவும் பணிச்சுமை என்பதால் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்றுதான்... மாங்காய் தொக்கு, கத்தரிக்காய் (வழுதலைங்காய்/பச்சையாக நீட்ட கத்தரிக்காய்) தொக்கும் எடுத்துச் சென்றேன் தங்கைக்கு அப்படியே ஜி க்கும்...

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்...

      நீக்கு
  4. அருமையான சந்திப்பில் சிறப்பான பரிசுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி நல்ல பரிசுகள். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  5. வழுதுணம்காய் தொக்கு செய்யும் முறையை ஒரு தனி பதிவாகப் போடுங்களேன். எங்களுக்கும் உதவியாக இருக்கும். ஆமாம் கூடல் மாணிக்கம் வழுதுணங்காய் நெய்வேத்திய மருந்து என்பது இது தானோ?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜேகே! முதன் முறை விசிட்டிற்கு மிக்க நன்றி.

      ஆம் வழுதுணங்காய்..வழுதலைங்காய்... நான் பொதுவாக அப்படியே ஒரு குத்துமதிப்பாகச் செய்வதால் குறிப்புகள் தருவதற்குப் பயம். ஹஹஹ் குறிப்புகள் நான் செய்யும் போது அளவெடுத்துதான் தர முடியும் அப்படி அளந்து செய்தால் ஸ்ரீராமிடம் கொடுத்துவிடுகிறேன்...திங்க வில் அவர் போட்டு விடுவார்...

      மிக்க நன்றி ஜேகே!

      நீக்கு
  6. அன்பு நண்பர்களின் இனிய சந்திப்பு அழகிய பதிவானது..

    மனம் கனிந்த நண்பர்களின் சந்திப்பில் கண் ஓரத்தினில் நீர் கசிகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  7. சந்திந்ததை சிந்தித்தே அழகாக பதிவாக்கி இருக்கின்றீர்கள் கீதா? வெங்கட் ஜீ அவர்கல் பதிவில் உங்களை சந்தித்தது குறித்து படித்திருக்கின்றேன். எங்கே சென்றாலும் எழுத்துக்கள் நமக்கென ஒரு உறவை தந்து கொண்டே இருக்கின்றது அல்லவா? தொடரட்டும் சந்திப்புக்கள். உங்கள் பரிசும் வெங்கட் ஜீ அவர்களின் புத்தகப்பரிசும் அவரவர் தேவையை கருத்தில் கொண்டு சிந்தித்து சந்தித்த போதினில் பகிர்ந்ததனால் அதுவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஷா வாங்க!! ஆமாம் எங்கே போனாலும் அங்கு நம் பதிவர் இருக்கிறார் என்றால் அறிந்தால் பெரும்பாலும் சந்தித்துவிடுவேன். எழுத்துகள் குறிப்பாக வலையுலகம் நல்ல நண்பர்களையும் உறவுகளையும் தந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

      மிக்க நன்றி நிஷா கருத்திற்கு

      நீக்கு
  8. உங்களின் இருவரின் சந்திப்பு குறித்து வாசிக்கும்போது நெஞ்சில் மகிழ்வூறியது, பின் நேரம் ஆனாலும் உங்களை சந்தித்து உரையாடி, ஒத்தாசை புரிந்த, திரு வெங்கட் உங்களுக்களித்த பரிசுகளை நினைக்கும்போது உள்ளத்தில் உவகை ஊறியது, நீங்கள் அவர்க்களித்த பரிசுகளை நினைக்கும்போது நாக்கில் எச்சில் ஊறியது.

    மொத்தத்தில்,வாசிக்கும்போது கண்களும் ஊறியது.

    அருமையான சந்திப்பை அழகுடன் பகிர்ந்தமை பாராட்டிற்குரியது.

    வாழ்த்துக்கள் இரு பதிவர்களுக்கும்.

    பொழுதன்னைக்கும் யோசித்தும் வழுதுணங்காய் பற்றிய எந்த யோகமும் புலப்படவில்லை.
    ஆமாம் வழுதுணங்காய் என்றால் என்ன எப்படி இருக்கும்?

    பி.கு: உண்மையை சொல்லுங்கள், குடும்ப நிகழ்ச்சிக்குத்தான் தலை நகர் சென்றீரா...?? அல்லது..... ஊறுகாய் சமாச்சாரங்களின் வியாபார... விரிவாக்கம் அல்லது மார்க்கெட்டிங் சம்பந்தமாகா....

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோ!! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      //பொழுதன்னைக்கும் யோசித்தும் வழுதுணங்காய் பற்றிய எந்த யோகமும் புலப்படவில்லை.ஆமாம் வழுதுணங்காய் என்றால் என்ன எப்படி இருக்கும்?// நீளமாக, இளம் பச்சைக் கலரில் விரைகள் அவ்வளவாக இல்லாத கத்தரிக்காய் இனம்....கேரளத்தில் வழுதுணங்காய்....வழுதலைங்காய் என்று சொல்லப்படுவது..தமிழ்நாட்டிலும் நிறைய கிடைக்கிறதே. பச்சை நீளக் கத்தரிக்காய்.

      பி.கு: ஹஹஹஹ் எனக்கு வியாபாரம் செய்யவே தெரியாதே கோ! சுட்டுப் போட்டாலும் பிஸினஸ் பேசத்தெரியாத ரகம் நான். குடும்ப நிகழ்வுக்குத்தான்...

      மிக்க நன்றி கோ!

      நீக்கு
  9. நல்ல பகிர்வு. யாரேனும் புத்தகங்கள் கொடுத்தால் புதுப் புடைவை கிடைத்தது போன்றதொரு மகிழ்ச்சி ஏற்படும். :) நீங்களும் நல்ல உபயோகமான பரிசே கொடுத்திருக்கிறீர்கள். இனிய சந்திப்பு. வெங்கட் எழுதி இருந்ததையும் படிச்சேன். எனக்கும் நட்பைத் தக்க வைத்துக் கொள்வதில் சங்கடங்கள் உண்டு. பல்வேறு விதமான தளைகள். அதோடு நான் தொடர்பு கொள்ளும் நேரம் அவங்களுக்கு உகந்ததா எனத் தெரியாது! இப்படியே போயிடும். அந்த விதத்தில் நீங்கள் உறவுகளை நன்றாகத்தக்க வைத்துக் கொள்கிறீர்கள். நானும் தூக்கம் வருதோ இல்லையோ, 9-00 மணிக்குப் படுக்கப் போயிடுவேன். குழந்தைகள் கூப்பிடுவது கூட அதற்கு முன்னால் தான் கூப்பிடுவார்கள். பத்து மணி என்பது இரண்டு ஜாமம் ஆகி இருக்கும்(தூங்கி விட்டால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதாக்கா....புத்தம்க தந்தால் புதுப்புடவை கிடைத்தது போன்ற மகிழ்ச்சி யெஸ் யெஸ்...

      இப்போதெல்லாம் தான் படுக்க நேரமாகிவிடுகிறது. மகன் அமெரிக்காவில் இருப்பதால் அவன் க்ளினிக்கில் இருந்தாலும் இடையில் கிடைக்கும் சைக்கிள் காப்பில் மெசேஜ் அனுப்புவான். அவனது இரவு என்றால் அவன் மிகவும் தாமதமாக வருவதால் ..அவனது இரவு 10, 11 என்று சில சமயம் 1 மணியும் ஆகிவிடுவதால் பேச முடிவதில்லை..சனி ஞாயிறும் செல்கிறான். அதனால் இப்படி நம் இரவில், அவன் காலையில் இடையில் எனது மெசேஜஸ் பார்த்தால் ஒற்றை வார்த்தையில் பதில் வரும்...அதற்காகக் காத்திருந்து படுக்கச் செல்வதால் இப்போதெல்லாம் தாமதமாகிவிடுகிறது....

      மிக்க நன்றி கீதாக்கா...

      நீக்கு
  10. முன்பெல்லாம் ஒரு ஊர், நாடு எனில்
    அந்த ஊரின் சிறப்புப்பற்றிய ஞாபகம்தான் வரும்
    இப்போது முதலில் வருவது அவ்வூரில் இருக்கும்
    நம் பதிவர்கள் ஞாபகமே

    அந்த வகையில் டில்லி என்றால் வெங்கட்ஜிதான்
    என குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதில்லை
    சந்திப்புப் பற்றிய பகிர்வு மிக்க மகிழ்வளிக்கிறது
    நாங்கள் சந்தித்ததைப் போலவே

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ரமணி சகோ! எந்த ஊருக்குச் சென்றாலும் பதிவர் அங்கு யாரேனும் அதுவும் அறிந்தவர் உளரோ என்ற நினைவே வருகிறது. தில்லியில் நான் அறிந்து வெங்கட்ஜி மட்டுமே...அதனால்தான்...இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  11. வெங்கட்டை சந்தித்தது பற்றிய பதிவை இந்த வருடத்திலேயே எழுதி விட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

    இனிமையான சந்திப்புக்கு, ஏற்பாட்டின் உதவும் உள்ளத்துக்கும் வாழ்த்துகள்!

    சமீப கால சிறுகதை எழுத்தாளர்களா? பெரும்பாலும் பழைய பெருச்... ஸாரி... பெரும் எழுத்தாளர்கள்தான்!

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெங்கட்டை சந்தித்தது பற்றிய பதிவை இந்த வருடத்திலேயே எழுதி விட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!//

      ஹஹஹஹஹ் சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். ஆனால் உண்மை அதுதான். எழுதுவதற்கான ஒரு நல்ல மன நிலை இல்லை...சுணக்கம்...முன்பு பகுதிக்கு மேல் எழுதி வைத்திருந்ததால் கதைகள் அனுப்ப முடிந்தது. இப்போது புதிதாக முடியவில்லை. முயற்சி செய்கிறேன்...

      //சமீப கால சிறுகதை எழுத்தாளர்களா? பெரும்பாலும் பழைய பெருச்... ஸாரி... பெரும் எழுத்தாளர்கள்தான்// உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அட சமீபகால எழுத்தாளர்கள் என்று புத்தகத்தின் உள்ளே யாருடைய கதைகள் என்று பார்த்ததுமே எனக்கும் அப்படித்தான் தோன்றியது...நீங்கள் பெருச்.....நான் நினைத்தது...கொட்டை போட்டு மரம் காய்த்து கனிந்து கொட்டை போடுபவர்கள் நிறைய பேர் உள்ளனரே என்று நினைத்தேன்...ஆனால், அதைப் பதிவில் குறிப்பிடவில்லை. எனக்கோ இலக்கியம் தெரியாது....வம்பு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  12. இரு இனிய பதிவர்கள் சந்தித்துக்கொண்டது பற்றிய பதிவு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோ அக்கா கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. அவர் வாசிப்புக்கு ருசியாய் ,நீங்கள் வாய்க்கு ருசியாய் பரிமாறிக் கொண்டதை அறிய மகிழ்ச்சி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்ஹ் வாய்க்குக் கொடுத்ததுடன் வாசிப்புக்கும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது இனி அப்படித்தான் என்றும் நினைத்திருக்கிறேன் பார்ப்போம்...மிக்க நன்றி பகவான் ஜி கருத்திற்கு

      நீக்கு
  14. சந்திப்புகள் என்றுமே இனிமையானவை
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ சந்திப்புகள் என்றுமே இனிமையானவைதான்...மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  15. அருமையான சந்திப்பு. பகிர்ந்த விதம் அதனினும் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  16. வெங்கட்டின் பதிவிலேயே இந்த சந்திப்பு பற்றி எழுதி இருந்தார் நான் சந்திக்க விரும்பும் பதிவர்களி வெங்கட் ஒருவர் ஆனால் நான் டெல்லி போய் சந்திப்பது என்பது கனவுதான் போல. அவருக்கு பெங்களூர்வரவாய்ப்பு இருந்தால் சந்திக்கலாம் அல்லது ஏதாவது வலைபதிவர் மாநாடுகளில் அப்படி என்ற ஒன்று நடந்தால் இருவரும்போனால் சந்திக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திப்பீர்கள் சார். மிக்க பன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  17. பதிவர்களை ஸந்திப்பதென்பது எவ்வளவு ஸந்தோஷமாந விஷயம். உங்கள் இருவரின் கட்டுரையும் படித்தேன். மனதிற்கு எவ்வளவு நிம்மதி கிடைத்திருக்கும். அதே எண்ணம் பிரயாணத்தின் கூடவே வந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் காமாட்சி அம்மா மிகவும் சந்தோஷமான தருணம் தான்...மிக்க நன்றி...அம்மா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  18. வெங்கட்ஜி விருந்தோம்பல் உண்மையில் பெரிய விஷயம்...
    நெடும்பயணங்கள் நட்புக்களால் இன்மையாவது உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கஸ்தூரி..அவரது விருந்தோம்பல் பெரிதுதான்...மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  19. அருமையான சந்திப்பு .புத்தகம் பற்றிய விமர்சனத்தையும் எதிர்பார்க்கின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் மிக்க நன்றி கருத்திற்கு... விமர்சனம்?ம்ம்ம்ம் பார்க்கிறேன்...

      நீக்கு
  20. மகிழ்வான தருணங்கள்....

    அருமை கீதாக்கா...

    பதிலளிநீக்கு
  21. தொடர்வண்டிப் பயணத்தில் நூல் படிப்பது என்பது வாழ்வின் இனிமையான தறுவாய்களில் ஒன்று. வெங்கட்ஜியின் அன்பளிப்பு உண்மையில் நல்ல உதவி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ இபுஞா நான் பொதுவாகத் தொடர்வண்டிப் பயணத்தில் நூல் படிப்பதில்லை. ஜன்னல் அருகிலான இருக்கையைத்தான் ட்பேர்வு செய்வேன் வேடிக்கை பார்த்து ரசித்துப் கொண்டு....புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் பயணிப்பேன். இம்முறை குளிர்சாதன்ப் பெட்டி. ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க முடியவில்லை அழுக்காக இருந்ததால். கதவு அருகிலும் நிற்கக் கூடாது என்று டிடி ஆர் மற்றும் சேவகர்கள் சொல்லியதால் அங்கும் நின்று வேடிக்கை பார்த்து புகைப்படம் எடுக்க முடியவில்லை. எனவே புத்தகம்....இந்த அனுபவமும் நன்றாகத்தான் இருந்தது....என்றாலும் எழுந்து எழுந்து நடந்து சென்று கதவு திறந்திருந்தால் வேடிக்கை பார்த்துவிட்டு..என்று பயணம்...அமைந்தது...அவரது அம்பளிப்பு மிகச் சிறந்த அன்பளிப்பு

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  22. பதில்கள்
    1. ஹஹஹ வாங்க கௌதம் அண்ணா உ சு வெ இல்லை இ சு வெ... ஹஹஹ ஆனால் கூடிய சீக்கிரம் உ சு வெ ஆக வாழ்த்துவோம்...

      நீக்கு
  23. அடடா.... சந்திப்பு பற்றி நீங்கள் எழுதி இருக்கும் இப்பதிவினை எப்படித் தவற விட்டேன்.... தற்போது உங்கள் சுட்டி மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. தாமதமான வருகைக்கும் வருந்துகிறேன்....

    பெரும்பாலும் எனக்குத் தெரிந்த பதிவர்கள் யார் தில்லிக்கு வந்தாலும் சந்திக்க முயல்வது வழக்கம். இரவு பத்தரை மணிக்கு தான் இரயில் என்றால் வீட்டிலிருந்து வெகு அருகில் தான் இரயில் நிலையம் என்பதால் கவலையில்லை. போலவே நான் இரவு தூங்குவதற்கு எப்படியும் 11 மணி ஆகிவிடும்... அதனால் அந்த நேரம் வருவதில் சிரமமில்லை.

    உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கொடுத்த பரிசும் உபயோகமானது தான் கீதா ஜி! பதிவில் சந்திப்பு பற்றி கருத்துரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் ஜி எதுக்கு வருத்தம் எல்லாம்...இதெல்லாம் சர்வ சகஜம்...எங்களுக்கும் நடப்பதுதான் ஜி...

      எனக்கும் உங்களைச்ச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....நான் கொடுத்ததும் தங்களுக்குப் பயனுள்ளது என்பதிலும் மிக்க மகிழச்சி.....

      மிக்க நன்றி ஜி...

      நீக்கு
  24. மிக்க நன்றி சகோ நாகேந்திர பாரதி

    பதிலளிநீக்கு
  25. புத்தக அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. அருமையான சந்திப்பு. உயரத்தை போலவே பண்பில்
    உயர்ந்த மனிதர் வெங்கட்.

    நானும் உங்களை போல்தான் இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலை 4 மணிக்கு விழித்துக் கொள்பவள்.

    உடனுக்கு உடன் உங்கள் பதிவுகள் தெரிந்து விடும் டேஸ்போர்டில் இப்போது ஏன் தெரியவில்லை என்று தெரியவில்லை.

    வெங்கட் உங்களை சந்தித்த பதிவு படித்தேன்.

    பதிலளிநீக்கு