நம் சகோ மதுரைத் தமிழன் இந்த மருந்தைக் குறித்த ஒரு நல்ல அறிமுகப் பதிவு போட்டிருந்தார். நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லும் நிலைக்கு
உள்ளான நம் நாட்டிற்குத் தேவையான ஒன்றுதான், நமது மத்திய அரசின் CSIR சமீபத்தில் வெளியிட்ட BGR 34 எனும் நீரிழிவு நோய்க்கான/ஆண்டி டயபட்டிக்
ஆயுர்வேத மருந்து. நல்ல மருந்தாகவே இருந்தாலும் அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.
இந்த மருந்தைப் பற்றி
அறிந்ததும் என் மகன் கேட்ட கேள்விகள். இதனை மனிதர்களிடம் உபயோகித்துப் பார்த்தார்களா? எத்தனை பேரின் சுகர் லெவல் குறைந்தது. ஆய்வு நடத்தப்பட்டதா?
எந்த ஒரு மருத்துவம் பற்றிய ஆய்வும் பல நிபுணர்களின் விவாதங்களுக்கு
உட்படுத்தப்பட்டப் பிறகே, அதுவும் வெளிப்படையாக அந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு
அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண்டும். இதைப் பற்றிய ஆய்வுப்
பேப்பர்கள், விவாதப் பேப்பர்கள் இருக்கிறதா? என்றும் கேட்டான்.
நல்ல கேள்வி. நான்
கூகுளில் தேடியவரை நம்பள்கி, மதுரைத் தமிழனின் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மட்டுமே
கிடைத்தது. தகவல்கள் இருந்தனவே அல்லாமல், ஆய்வுப் பற்றிய விரிவான குறிப்புகள்
எதுவும் இல்லை. ஒரு வேளை என் அறிவுக்கு எட்டவில்லையோ என்றும் தெரியவில்லை.
நம்பள்கி அவர்கள்
கொடுத்த லிங்கில் நான் அறிந்தவை, இந்த மருந்து ஒரு குளிகை ரூ 5 என்றாலும், 2
காலையிலும், 2 மாலையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ 20 செலவாகும் இது மட்டும் எடுத்துக் கொண்டால்.
அலோபதி மருந்துடன் எடுத்துக் கொண்டால் இன்னும் ரூ 500 கூடலாம். அப்படிப்
பார்க்கும் போது இந்த மருந்து விலை குறைவு என்று சொல்வதற்கில்லை.
பக்க விளைவுகள்
இருக்காது என்று சொல்லுகின்றார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், அலோபதியிலும்
பக்க விளைவுகள் என்று பெருவாரியாகச் சொல்லுவதற்கில்லை. மெட்ஃபார்மின் வகைகள் ஒரு
சிறிய வயிறு உப்பலை ஏற்படுத்துகிறது என்று பொதுவாகவே சொல்லப்படுகிறது. எனக்கும்
உண்டு.
முதலில் நாம் அறிய
வேண்டியது என்னவென்றால், குளுக்கோஸ் டாலரன்ஸ் GTT. ஒரு சில நீரிழிவு நோய்
மருத்துவமனைகள், மருத்துவர்கள் மட்டுமே இந்தச் சோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இதைக்
கண்டறிந்தால் சர்க்கரையை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கிறதா, எவ்வளவு,
நாம் நீரிழிவு நோய்க்காரரா, நாம் நீரிழிவு நோய் வரும் வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறோமா
என்பது தெரிந்துவிடும்.
ஆனால் பல மருத்துவர்கள், மருத்துவமனைகள்
வெறும் வயிற்றிலும், சாப்பாட்டிற்குப் பிறகு 1 ½ , 2 மணி நேரத்திற்குப் பிறகான பரிசோதனையைச்
செய்யச் சொல்லுகின்றனர். இந்தச் சோதனை தற்காலிகமானதே. இதை வைத்து ஒருவரை நீரிழிவு நோய்க்காரார்
என்று தீர்மானிக்க முடியாது. ஆனால், வரும் வாய்ப்பு உள்ளதா என்று ஓரளவு யூகிக்கலாம்.
நீரிழிவு நோய்க்காரார்கள் இந்தப் பரிசோதனையை நன்றாக டபாய்க்க வழி உண்டு. டபாய்க்கவும்
செய்கிறார்கள். இது தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதாகும்.
அடுத்து 3 மாத சர்க்கரை அளவு. இதையும் ஒரு சிலர்தான் பரிந்துரைக்கிறார்கள். இதுவும்
முக்கியமான பரிசோதனை. நாம் மூன்று மாதங்களில் செய்த திருட்டுத்தனங்கள் தெரிந்துவிடும்.
ஆனால், இதையும் டபாய்க்கலாம் அதற்கான சூத்திரங்கள் இங்கு பொதுவெளியில் பேச முடியாது.
அது நல்லதல்ல. இதுவும் தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.
ஒவ்வொருவருக்கும் இன்சுலின் சுரப்பும், மெட்டபாலிசமும் வேறுபடும். ஒரு சிலருக்கு என்னதான் இன்சுலினே எடுத்துக் கொண்டாலும், குறைந்து கூடி என்று வேரி ஆகும். இன்சுலின் டிப்பெண்டன்ட் ஆகாமல் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கே கூட ஒருவர் மூன்று வேளை, ஒரு சிலர் இரு வேளை, ஒரு சிலர் ஒரு வேளை என்று சாப்பாட்டுடன், சாப்பிட்ட பிறகு, சாப்பிடும் முன், 1/2 மணி நேரம் முன், பின் என்று எத்தனையோ இருக்கிறது.
ஒவ்வொருவரது வாழ்க்கை முறையும் கூட இதில் உட்படும். பலரும் எனர்ஜி பர்ன் செய்ய எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் வெறும் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல்,
இல்லை உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், “நான் சர்க்கரை நோயாளி”
என்றும் "எனக்குச் சர்க்கரை குறையவே மாட்டேன் என்கிறது” என்றும் பெருமையாகச்
சொல்பவர்களையும் பார்க்க நேரிடுகிறது.
இப்படி இருக்க இந்த மருந்து எல்லோருக்கும்
பொதுவாக, ஒரே அளவாக எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படி எடுத்துக் கொண்டாலும், அதை நாம்
அலோபதியுடன் எடுத்துக் கொள்ளும் போது இதன் பலனை எப்படி அறிய முடியும்.?
நம்பள்கி கொடுத்த லிங்கில் பலரும்
இதை அலோபதியுடனே எடுத்துக் கொள்வதாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். 3, 4 மாதம் எடுத்தும்
பலன் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் ஆயுர்வேத மருந்துகள்
அலோபதி போன்று உடனடி நிவாரணம் தராது. ஒரு சில காலம் கழித்தே அதன் பலன் அறிய முடியும்.
இந்த மருந்தைத் தனியாக எடுத்துக் கொண்டு பலன் அறிய வேண்டும். அதுவும் முழுமையான பலனைக்
குறைந்த காலத்தில் அறிய முடியாது. அந்தச் சுட்டியில் 1000 பேருக்குப் பரிசோதனை செய்து
பலன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆயிரம் பேரில் எத்தனை பேர் இன்சுலின் டிப்பெண்டன்ட்?
இதைப் பற்றிய தகவல்கள் இல்லை. பொதுவாக “நீரிழிவு நோயாளிகள்” என்று சொல்லிவிட முடியாது.
சிலர் பார்டரில் இருந்தால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மட்டுமே பரிந்துரைக்கப்படும்.
மட்டுமல்ல 1000 என்பது மிகவும்
குறைவு. நீரிழிவு நோயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும் பொது மேற்கொண்ட பரிசோதனைகளை,
முடிவுகளை விவரமாக வெளியிட வேண்டும்.
இங்கு ஒரு சிறு உதாரணம். நான்
சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக நான் நீரிழிவு நோயாளி. மாத்திரை மட்டுமே. 10 வருடங்களுக்கு
முன் என் இடது கண்ணில் ஒரு மிகச் சிறிய புள்ளி போன்ற இடத்தில் மட்டும் சிறிது நிழல்
போல மறைக்கும். பரிசோதனையில் தெரிந்தது டயபட்டிக் ரெட்டினோபதி என்று. ரெட்டினாவைப் பாதிக்கவில்லை. பார்வையில் கோளாறு
இல்லை.
எப்படி இது? என் எல்லா சர்க்கரை
அளவும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள்தானே இருக்கிறது? என்று மருத்துவரிடம் வினவிய போது
அவர் சொன்னது இதுதான். நாம் என்ன 24 மணி நேரமுமா சர்க்கரை
அளவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்? எப்போது அது ஏறுகிறது என்று நமக்குத் தெரிய
வாய்ப்பில்லை. நாம் இடையிடையில் விருந்துச் சாப்பாடும், இனிப்புகளும் சாப்பிடுவது இல்லையா?
அப்படி ஏதேனும் ஒரு சமயத்தில் கண்ணைப் பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. (இப்போது
மேலை நாடுகளில் நம் உடம்புடன் பொருத்தப்படும் கைக்கடிகாரம் போன்று சர்க்கரை மானிட்டர் வித விதமாக இருக்கிறது. அமெரிக்காவில்
உள்ள என் கசின் வாங்கித் தரட்டுமா என்றான்? அதை அணிந்து கொண்டு டென்ஷனுடன் அட போடா என்றுவிட்டேன்)
3 வருடங்களுக்கு முன்
எனக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்ட ரத்தத்தில் எனது சர்க்கரை மூன்று மாத ஆவரேஜ் "நான் டயபடிக் ரேஞ்சில்" இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும், எனது சர்க்கரை அளவு மருந்து இல்லாமலேயே அப்படித்தான் இருந்தது. இந்தப்
பரிசோதனைகள் தற்காலிகமானவையே. எனக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் இல்லை என்பது
ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதே. நானும் கள்ளத்தனங்கள் செய்வதுண்டு. ஆனால், அதற்கு
ஏற்றபடி அன்றைய உணவு முறை உடற்பயிற்சி எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டுவிடுவேன்.
நான் என் அனுபவத்திலிருந்து அறிந்தது
என்னவென்றால், இது என்னையே நான் பல முறை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுச் சொல்வது.
என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும்,
மனதை அமைதியாக வைத்துக் கொண்டு உணவிலிருந்து, உடற் பயிற்சி வரை, ஸிஸ்டமாட்டிக்காக இருந்தால், குறித்துக் கொள்ளுங்கள் மிக மிக
ஒழுங்கு முறையுடன் கள்ளத்தனங்கள் இல்லாமல், (ஒரு சிலர் நன்றாக வளைத்துக் கட்டி இனிப்பு,
ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்)
இருந்தால் சர்க்கரை அளவை நன்றாகப் பராமரிக்க முடியும்.
நீரிழிவு
நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே. கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், பிற நோய்கள் வராமல்
பார்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு அனுபவியுங்கள்!
------கீதா
படங்கள் இணையத்திலிருந்து. (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)
படங்கள் இணையத்திலிருந்து. (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)