தேக்குமரம் – தாவர அறிவியல் பெயர் – டெக்டோனா க்ராண்டிஸ் (Tectona grandis L.f. ) – வெர்பனெசிய (Verbanaceae) குடும்பத்தைச் சார்ந்தது.
உலகிலேயே, வெப்பமண்டலக் காடுகளில், இயற்கையாகவே வளரும், மகுடம் சூட்டும் பெருமைக்குரிய
மரங்களின் இனவகையில், தேக்கு மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.
நம் நாட்டிலும், மையன்மார்,
தாய்லாந்து, லாவோஸ், போன்ற நாடுகளிலும் இயற்கையாகவே காணப்படுகின்றன. நம் நாட்டில் முக்கியமாகக்
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மத்யப்ரதேசம், மஹாராஷ்ட்ரா, ஆந்திரப்ரதேசம் (ஆந்திராவிலா?
தெலுங்கானாவிலா?) குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தரப்ரதேசத்தின் சில
பகுதிகளில் (இதுவும் தெரியவில்லை பிரிக்கப்பட்டுள்ளதால்) ஒரிசா போன்ற மாநிலங்களில்
இயற்கையாகவும் அந்தமான் மற்றும் சில வட இந்திய மாநிலங்களில் நட்டும் வளர்க்கப்படுகின்றது.
தேக்கு மரத் தோட்ட வரலாற்றில், பல மைல்கல் அளவிலான விரிவாக்கங்கள், வளர்ச்சித்திட்டங்கள்
கேரளத்தில்தான் எடுக்கப்பட்டது. 1840 களில், உலகிலேயே முதல் தேக்குமரத் தோட்டம் கேரளாவில்,
மலப்புரம் மாவட்டத்தில், நிலம்பூரில் தான் வளர்க்கப்பட்டது. இயற்கையாக வளரும்
காடுகளில் அழியத் தொடங்கிய வேளையில், இப்படி உருவானத் தோட்டம்தான், நிரந்தரமாக,
நிலையாகத் தேக்குமரங்கள் வளர்வதற்கு உதவியிருக்கின்றது. நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகின் பல
பாகங்களிலும் தேவையை ஈடுகட்டுவதற்கும், வளர்ப்பதற்கும் வழி வகுத்திருக்கின்றது.
1995, மே மாதம், கேரள வன
ஆராய்சிக் கல்வியகம், கேரள வனத்துறையுடன் இணைந்து தேக்குமரத்திற்கான
அருங்காட்சியகம் ஒன்றை, நிலம்பூரில் வடிவமைத்தது. நிலம்பூரில் தான் 160
வருடங்களுக்கு முன்னர் தேக்குமரத் தோட்டத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்பித்தன. இந்த
அருங்காட்சியகம் தான் உலகிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இந்த அருங்காட்சியகம் தேக்குமரத்தின் வரலாறு,
பயிரிடும் முறை, அதைப் பாதுகாக்கும் முறை, அதன் உபயோகங்கள், சமுதாயத்தில் அதன்
பொருளாதரத்தில் பங்கு போன்ற பல தகவல்களைத் தருகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நூலகமும் இருக்கின்றது.
சமீபத்தில் நான் நண்பர் துளசியின் வீட்டிற்குச் சென்றிருந்த போது (அவ்வப்போது
சென்று வருவதுண்டு) இந்தத் தேக்குமர அருங்காட்சியகத்திற்குச் சென்றோம்.
வாங்க வாங்க எங்களைப் பார்க்க
முகப்பில், 55 வருட பழைமையான முதிர்ந்த தேக்குமரத்தின் வேர்கள் நம்மை
வரவேற்கும் வகையில் மிக அழகாக வைக்கப்பட்டிருக்கின்றது. மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டத்
தேக்குமரக் கதவுகளின் வழியாக உள்ளே நுழையும் போது, மிகப் பழைய, இயற்கையாக வளரக்கூடிய “கன்னிமாரா”
எனும் தேக்குமரத்தின் ஓவியம் நம்மை வரவேற்கின்றது. இந்த வகை, பரம்பிக்குளம் வன சரணாலயத்தின் கேரளத்துப்
பகுதியில் உள்ள தேக்குமரத் தோட்டத்தைச் சேர்ந்தது
தரை தளம், முதல் தளம் என்று இரு தளங்களிலும் பல காட்சிப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
தேக்கில் செய்யப்பட்டப் பாரம்பரிய தானியம் சேமிக்க வைக்கும் பெட்டி
வரவேற்பரையில் வைக்கப்பட்டிருப்பது எல்லோர் கண்ணையும் கவர்கின்றது. நான் எடுத்த
புகைப்படம் ஷெரிக்கும் வந்நில்லா. அதனால், இங்கு தரவில்லை.
மலயட்டூர் - என் அடி பாகம் பாருங்க எம்புட்டுக் குண்டுல!
அப்படியே நடந்து செல்லும்
போது, மலயட்டூர் வனப்பிரிவினில் வளரும், நிஜமான மிகப் பெரிய தேக்குமரத்தின் அடிபாகம்
வைக்கப்பட்டிருக்கின்றது.
மற்றுமொரு, மிகப்பெரிய தேக்குமரமான “கொனோலிஸ் ப்ளாட்” ன்(Conolly’s Plot) ஓவியம் உள்ளது.
கன்னிமாரா தேக்கின் படமும், உரு-கப்பல்
தேக்குமரத்தில் செய்யப்பட்டச் சிறிய வடிவிலான பாய்மரக்
கப்பல் “உரு”(Uru) "மாதிரி" ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. கன்னிமாரா தேக்குமரத்தின் ஓவியத்தின் புகைப்படம்
இங்கு தந்துள்ளேன்.
116 வயதான 4 மரக்கட்டைகள்-ம் வயசாச்சுப்பா
நிலம்பூர் வனப் பிரிவில் உள்ள “Kanakuthu” வன பீட்டில் இருந்து எடுக்கப்பட்ட, 116 வருட வயதான
தேக்குமரக் கட்டைகள் 4, 1860 களில் தேக்குமர வளர்ப்பு முறைகள் பற்றி, சுவரில் வரையப்பட்ட சித்திரங்களின்
பின்னணியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
தகவல்கள் அறிந்து கொள்ள தொடுதிரை வைக்கப்பட்டுள்ளது. அதில் தேக்குமர வரலாறு முதல் தேக்குமரத்தைப் பற்றியத் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
Teak poles of different sizes and qualities obtained during thinning of teak plantation
எம்புட்டு அழகா இருக்கோம்ல
தேக்குமரங்கள் முதலில் மிகவும் நெருக்கமாக, 2 மீட்டர் இடைவெளியில்
வளர்க்கப்படுகின்றன. பின்னர் வளர்ந்து
வரும் சமயம், அவை நெருக்கமாக வளர நேரிடுவதால், இடையில் இடைவெளி விடுவதற்காக,
தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்கள் அகற்றப்படும்.
இதற்குப் பெயர் “Thinning”.
இப்படி, தின்னிங்க்
செய்யப்படுவதால், வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு தரத்திலும் விளைகின்றது.
கேரளத்தில், 50, 60 வருட சுழற்சி முறை பருவத்தில், 5,10,15,20,30,40,
மற்றும் 50வது வருடங்களில், “தின்னிங்க்” செய்யப்படுகின்றது. தேக்குமரத்தின் அடிப்பகுதியிலிருந்து 3
மீட்டருக்கு மேலாக, உள்ள அடிமரப் பட்டையின் சுற்றளவு, நீளம், தரம் இவற்றின்
அடிப்படையில் “போல்ஸ் (Poles)” வகைப்படுத்தப்படுகின்றது.
கோட்டயத்திலுள்ள, நகரம்பாறா வனப்பகுதியிலிருந்துக் கொண்டுவரப்பட்ட, 490 வருட வயதான
தேக்குமரத்தின் பெரிய மரத்தண்டின் அடிப்பகுதி-அடிக்கட்டை பார்வையாளர்களைக் கவரும்
வகையில் உள்ளது.
முதல் தளத்தில், தேக்குமரத்தின் விஞ்ஞான பூர்வமானத் தகவல்கள் தரும்
வகையிலானப் படங்கள், பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
விதையிலிருந்து, பூக்கும் பருவம், மீண்டும்
துளிர்க்கும் பருவம் வரையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. விதைகளின் தரம், நன்றாக
வளர்வதற்குத் தேவையானத் தகவல்கள், திசுக் கல்சர், முதலான தகவல்கள் அடங்கியப் படங்கள்
வைக்கப்பட்டுள்ளன.
மரத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளால் ஏற்படும் மாற்றங்களை, சில மாதிரிகளும்,
புகைப்படங்களும் வைத்துக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.
300 வகைக்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள், பிற பூச்சி வகையினங்கள்
காட்சியகப்படுத்தப்படுள்ளன. தேக்குமரத்தினோடுத் தொடர்புள்ள தாவர வகைகள், விலங்குகள் போன்றவை, அதை அடுத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவத்திலும், அதாவது பூக்கும்,
காய்க்கும், இலைகள் உதிரும் பருவங்களில், காலங்களில், ஏற்படும் தேக்கு மரங்களின்
உணர்வுகளை படங்களின் மூலம் காட்சிப்படுத்தி உள்ளனர்.
வாங்க வந்து உக்காந்து ஊஞ்சல் ஆடுங்க
தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பாரம்பரிய
வீட்டுச் சாமான்கள், அறுவடைக்காக உபயோகிக்கும் கருவிகள், முதலானவை
வைக்கப்பட்டுள்ளன. இப்படிப் தேக்கு
மரத்தினைப் பற்றிய பல தகவல்களும், படங்களாகவும், பொருட்களாகவும்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தினுள், வடிவமைக்கப்பட்ட குளம், சிறிய ஓடை, செயற்கை அருவியிலிருந்து ஆரம்பித்து செல்லும் நடைபாதை, கண்ணைக் கவரும் தோட்டங்களின் வழியாகச்
செல்கின்றது.
அதன் வழி நடந்தால், கேரளாவில் காணப்படும் அரிய வகை மருத்துவ குணமுள்ள
செடிகள், பல வகையான மலர்கள், மரங்கள், செடிகள், கொடிகள், கள்ளி சப்பாத்திச்
செடிவகைகள், நீரில் வளரும் செடிகள், பெரணிச் செடிவகைகள், மிகவும் கண்ணைக்கவரும்
வகையிலான ஆர்க்கிட்ஸ் வகைப் பூக்கள், செடிகள், வண்ணத்துப் பூச்சித் தோட்டம் என்று
பார்த்துக் கொண்டே 800 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய பூங்காவைச்
சுற்றி வரலாம். இந்த இயற்கைப் பூங்காவில்,
58 வகை பறவை இனங்கள், கேரளத்தைச் சேர்ந்தவையும், வெளியிலிருந்து வருவனவையும் என்று
பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்ல, 136
மர வகைகள் இங்கு உண்டு. பல அழிந்து வரும் மர இனங்கள் இங்கு காணப்படுகின்றன.
காலு வேதனிக்குனுண்டோ? டயர்டாயோ? சிறிய உணவகம் இருக்கின்றது. சாயாவோ?
காபியோ? அங்கு கிடைக்கின்றது.
மிக நல்ல ஒரு அனுபவம்! பல தகவல்கள் கிட்டி. நீங்களும் போய்க்
காணாம். விலாசம் வேண்டே?! இந்தா இவிட உண்டு. திங்களாயிச்சா அவதியானு கேட்டோ. ஓ! சாரி!
கேரள மண்ணில் காட்சியகத்தைச் சுத்தி வந்ததில் மலையாளம் தொற்றிக் கொண்டுவிட்டது. அம்மொழியும் தெரியும் என்பதால்.
KERALA FOREST RESEARCH INSTITUTE
SUB CENTRE
CHANDAKUNNU, NILAMBUR
www,kfri.org
TIMING : 10.00 am to 5.00pm
( Monday Holiday )
கீதா
