திங்கள், 4 மே, 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - பாம்புத்தாரா / Anhinga - Darter Bird

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

அலகில் மீன் இருப்பது தெரிகிறதா? தூக்கிப் போட்டுப் பிடிக்கத் தயாராகி இருக்க அப்போது வீடியோ  எடுக்காமல் விட்ட  காரணம் இப்பறவையை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்ததால் அதன் இயல்புகள் தெரியவில்லை. 

பேரினம் - Anhinga. ஆங்கிலத்தில் Darter டார்ட்டெர். மிகவும் நீண்ட மெல்லிய கழுத்துடையதால் இதற்குச் சில இடங்களில் நெடுங்கழுத்தன், நெடுங்கிளாத்தி என்ற பெயர்களும் உண்டு. வழுவாங்கி, நெய்காக்கை என்ற பெயர்களும் இருப்பதாகத் தெரிகிறது. 

நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமான இப்பறவை நீருக்குள் தன் உடலை வைத்துக்கொண்டு, நீருக்கு வெளியே மெல்லிய நீண்ட கழுத்தை மட்டும் நீட்டிக் கொண்டு நீந்துவது பாம்பு போன்று இருப்பதால் பாம்புத்தாரா என்று (Snake Bird) அழைக்கப்படுகிறது. 

பெங்களூருவின் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் இந்தப் பறவையை பரவலாகக் காணலாம். 1990-களுக்கு முன்பு பெங்களூரில் இவை அரிதாகவே காணப்பட்டன, ஆனால் ஏரிகளில் மீன் வளர்ப்பு அதிகரித்த பிறகு இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 Preening - இறகுகளைக் கோதுதல். எப்படிக் கழுத்தை வளைத்து வைச்சிருக்கு பாருங்க. 

பிரதான உணவு - மீன்கள். கூடவே சின்ன பூச்சிகள், தவளைகள் என்றிருந்தாலும் 90% மீன்கள்.

மீன் உண்ணும் பறவைகளில் மற்ற பறவைகள் மீன் பிடிப்பதற்கும் பாம்புத்தாரா மீன் பிடிப்பதற்கும் வித்தியாசமாக இருப்பதை நான் நேரில் கண்டு வியந்து ரசித்துப் பார்த்திருக்கிறேன்,  இப்போதும் பார்க்கிறேன். (காணொளிகள் கீழே) இதன் முக்கிய பண்புகள் அல்லது செயல்பாடுகளாக நான் கவனித்ததையும், அதை வைத்து தேடி அறிந்து கொண்டவற்றையும் இப்பதிவில் சொல்கிறேன். 

மீன் கொத்திப் பறவை, மரத்திலோ அல்லது கரையிலோ இருந்து இரையைக் கண்டதும் பறந்து சென்று மீனைக் கவ்வும். கொக்கு, நாரைகள் போன்ற நீர்ப்பறவைகள் தண்ணீர் குறைவாக இருக்கும் கரையில் அல்லது தாழைகள், புற்கள் அல்லது நீரில் மிதக்கும் தாவரங்கள் மீதிருந்து மீன்களைப் பிடிப்பதைப் பார்க்கலாம். .

மற்ற மீனுண்ணிப் பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடியோ உதாரணத்திற்கு கருடன் கழுகு நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்கள் பூச்சிகள், தவளைகள் இவற்றைக் கொத்திப் பிடிப்பதையும் பார்க்கலாம். படம் எடுக்க முனைந்தேன் என் கேமராவில் சரியாக வரவில்லை.

கிட்டத்தட்ட நீர்க்காகம் - Cormorant (இதைப் பற்றியும் பின்னர் வரும்) போன்றே, பாம்புத்தாராவும் நீரில் மூழ்கி மீன்களை வேட்டையாடினாலும் இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பது தெரிந்தது. .

ஆனால் பாம்புத்தாராவின் இரை வேட்டை கொஞ்சம் வித்தியாசமானது. மர்மமான நீச்சல். பாம்புத்தாரா ஒரு "Subsurface Swimmer".  இது தண்ணீருக்கு அடியில் நீண்ட தூரம் நீந்திச் செல்லும் திறன் கொண்டது என்று தெரிந்தது. ஒரு இடத்தில் மூழ்கினால், அது 20-30 அடி தள்ளி வேறு திசையில் கூட வெளிப்படும்.  அது எங்கே வரும் என்று கணிப்பது கொஞ்சம் கடினம். 

அதனாலேயே இவற்றைப் படம் அல்லது வீடியோக்கள் எடுப்பது ரொம்ப சிரமம். மூழ்கினால் எங்கே வெளியே வரும் மீனோடு வருமா என்று காத்திருந்து எடுக்க வேண்டும். தொடர்ந்து கவனித்ததில் ஒன்று புரிந்தது. தண்ணீருக்கு அடியில் செல்லும்போது, சில நேரங்களில் (எல்லா நேரங்களிலும் அல்ல) சிறிய காற்றுக் குமிழிகள் அது செல்லும் திசையைக் காட்டுவதைக் கவனித்தேன்.  எனவே கொஞ்சம் உஷாராக இருந்து காத்திருந்து கவனித்து அப்படித்தான் இக்காணொளியை எடுத்தேன்.

ஒரு தேர்ந்த நிழற்படக் கலைஞருக்கே கடினமான காரியமாம். எனக்கு எங்கே!!!? அதுவும் சாதாரண கேமரா / மொபைலில் ஜூம் (Zoom) செய்யும்போது மங்கலாகத்தான் வரும்.

https://www.youtube.com/watch?v=NLVAqTyqMHc

மீனைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பதைக் காணலாம். அடுத்து சற்று பெரிய மீன் கிடைத்ததும் முழுங்க முடியாமல் விட்டுவிடுகிறது. ஆனால் மீண்டும் மூழ்கி.....அதுதான் அந்தப் பறவையின் பிடிவாதம்! மீனை விட்டாலும், குத்துப் பட்டிருப்பதால் அது ஆழத்திற்குச் செல்வதற்குள் மீண்டும் அதைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்டையாடும் குணம் (Hunting Instinct) 

மற்ற பறவைகள், நீர்க்காகம் உட்பட மீனை அலகால் கவ்விப் பிடிக்கும். ஆனால், பாம்புத்தாரா நீந்திக் கொண்டே மீன்கள் இருப்பது தெரிந்ததும் டபெக்கென்று தண்ணீருக்குள் மூழ்கிவிடும். மீன் கிடைத்ததும் மீன்களைத் துரத்திச் சென்று, தன் கூர்மையான அலகால் மீனின் உடலில் ஈட்டியால் குத்துவது போல ஓங்கி குத்திப் பிடிக்கும் (Spearing). அதற்காகவே அதன் கழுத்து எலும்புகள் ஒரு 'Spring' போல செயல்படும் வகையில் அமைந்துள்ளன.

கழுத்தை மட்டும் நீருக்கு வெளியே நீட்டி, குத்திய மீனை வெளியே கொண்டு வந்தவுடன், குத்திய அலகிலிருந்து மீனை விடுவிக்க வேண்டுமே இல்லைனா எப்படி விழுங்குவது? அதற்காக தலையை வேகமாக உதறி, மீனை காற்றில் தூக்கிப் போட்டு, அதன் தலைப்பகுதி முதலில் வாய்க்குள் செல்லும்படி லாவகமாகப் பிடித்து முழுசாக விழுங்கும். மீனைப் பிடித்தவுடன் அது மேலே வரும்போது, சில நொடிகளில் அதைத் தூக்கிப் போட்டு விழுங்கிவிடும். அந்த சில நொடிகளுக்குள் நாம் கேமராவை 'ஃபோகஸ்' (Focus) செய்து படம் எடுப்பது மிகப்பெரிய சவால். அதனால் காணொளி எடுத்தேன் அதுவுமே சற்று தூரத்தில் என்பதால் ஓரளவுதான் எடுக்க முடிந்தது.

மீனின் செதில்கள் அல்லது முட்கள் தொண்டையில் சிக்காமல் இருக்கவே இந்த "தலைப்பகுதி முதலில்" என்ற உத்தியைப் பயன்படுத்துகின்றன என்பதை, நான் ஏரியில் பார்த்ததை, படங்களைப் போட்டு, நான் ய்ட்யூபில் போட்ட சுட்டியைக் கொடுத்து ஜெமினியிடம் உரையாடி அறிந்தேன்.

மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்காது மிதந்து நீந்தும். அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணெய் சுரப்பிகள் உள்ளதால் எண்ணைப்பசை இருக்கும். எனவே இறக்கைகளில் தண்ணீர் ஒட்டாது. தவிர, சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும்.

ஆனால் பாம்புத் தாராவின் இறக்கைகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது,  எண்ணெய் பசை இல்லாததால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும். அவற்றின் அடர்த்தியான எலும்புகள், ஈரமான சிறகுகள் மற்றும் நீரின் அடியில் நீந்தும் தன்மை ஆகியவை அவற்றை முழுமையாக மூழ்கி நீருக்கடியில் உள்ள இரையை வேட்டையாட உதவுகின்றன.

நீரில் நீந்தி இறையை உண்ட பின், சூரிய ஒளி படும்படி இறக்கைகளை விரித்து உலர்த்திக் கொண்டு...

நனைந்த இறகுகளுடன் பாம்புத்தாராக்களால் நீண்ட தூரம் பறக்க முடியாது. நீரின் மேற்பரப்பில் சிறிது தூரம் "ஓடும்போது" வேகமாக இறக்கைகளை சிறகடிக்கும். அப்படி நீரில் நீந்தி இரை உண்டபின் நீர்க்காகங்களைப் போலவே, பாம்புத்தாராக்களும் சூரிய ஒளியில் குளித்து சூரியனின் வெப்பத்தைப் பெற, சூரியனுக்கு எதிர் திசையில் திரும்பி, இறக்கைகளை அரைவட்ட வடிவில் விரித்தபடி, பெரும்பாலும் ஒரு பாறை அல்லது கிளையில் அமர்ந்து ஈரமான இறக்கைகளை விரித்து உலர்த்திக் கொள்ளும். இதைப் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

சூரியனை நோக்கி இறக்கைகளை விரித்து உலர்த்தும் நிலையில்

இப்படித் இறக்கைகளை விரித்து உலர்த்தும் நிலையில் உள்ள ஒரு பாம்புத்தாரா, ஒரு ஆண் வான்கோழியைப் போல இருப்பதால், பேச்சுவழக்கில் 'நீர் வான்கோழி' அல்லது 'சதுப்பு நில வான்கோழி' என்றும் குறிப்பிடப்படுகிறதாம்.

இனப்பெருக்க காலத்தில், ஆண் பறவைகள் துணைகளைக் கவர்வதற்காக இறக்கைகளை விரித்து விரித்து அடிப்பது wing flapping செய்யுமாம்.

இனப் பெருக்கக் காலத்தில் ஆண் பறவை குச்சிகள் சுள்ளிகளைக் கொண்டு வர, பெண்ணும் கூடச் சேர்ந்து கொண்டு நீர் நிலைகள் அருகேயுள்ள, மரக் கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் தங்கள் இனத்தோடும் மற்ற நீர்வாழ் பறவைகளான நாரை, நீர்க்காகங்கள், மற்றும் கொக்குகளுடன் இணைந்து கூட்டமாக (Colonies) கூடு கட்டுகின்றன. இதுவும் ஒரு பாதுகாப்புதான்.

இதன் பருவ காலம் அக்டோபரிலிருந்து - ஃபெப்ருவரி வரை. இதை இங்கு பெங்களூரில் காணலாம். அதாவது வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கி முடிந்த பின் இவற்றிற்கு உகந்த காலம். என்றாலும் இங்கு பெங்களூரில் நான் கவனித்த வரையில், இங்குள்ள பருவ நிலையைப் பொருத்து, கோடைகாலத்தின் முடிவிலும் இங்கு பார்க்கலாம்.  

ஏகபத்னி பறவை! அதாவது, ஒரு குறிப்பிட்ட இனப்பெருக்க காலத்தில் (Breeding season), ஒரு ஆண் பறவை ஒரு பெண் பறவையுடன் மட்டுமே இணைந்து வாழும். அந்தப் பருவம் முழுவதும் கூடுகட்டுவது, முட்டைகளை அடைகாப்பது மற்றும் குஞ்சுகளை வளர்ப்பது என அனைத்தையும் இந்த ஜோடி இணைந்தே செய்யும். அடுத்த சீசனில், சில சமயம் அதே இணையுடன் சேருமாம் இல்லை வேறு இணையைத் தேடுமாம்.

பாம்புத்தாராக்கள் பொதுவாக "Philopatric" பண்பு கொண்டவை. அதாவது, அவை ஒரு முறை பாதுகாப்பான மற்றும் உணவு அதிகம் கிடைக்கக்கூடிய ஓர் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் அதே இடத்திற்கோ அல்லது அதே மரத்திற்கோ திரும்பி வர அதிக வாய்ப்புள்ளது. BTM (மடிவாலா) ஏரியின் நடுவில் உள்ள தீவுகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அங்குள்ள மரங்களில் ஆண்டுதோறும் இந்தப் பறவைகள் கூடுகட்டுவதைக் காணலாமாம். இந்த முறையும் நிறைய நீந்திக் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. 

ஒரு முறைக்கு 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் நீல கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.  ஆணும் பெண்ணும் மாறி மாறி சுமார் 25 முதல் 30 நாட்கள் வரை முட்டைகளை அடைகாக்கும்.  குஞ்சுகள் பிறந்த பிறகு, இரண்டும் இணைந்து அவற்றுக்கு உணவளிக்கும். சுமார் 6 முதல் 7 வாரங்களில் குஞ்சுகள் பறக்கத் தொடங்கும். 


-----கீதா

32 கருத்துகள்:

  1. முதல் படம் ரொம்ப க்ளியராக இல்லை.  போலவே காணொளியும்.  நீந்தும் அந்த பறவை விரைந்து செல்வது தெரிகிறது!  ஆமாம் நீண்ட கழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அது கிராப் செய்து போட்டதால் ஆகிடுச்சோ? வேறு படம் அதாவது க்ராப் செய்யாமல் இருக்கிறது அதையும் சேர்க்கிறேன், ஸ்ரீராம்

      காணொளியில் அதன் கழுத்து மட்டுமே தெரியும். எடுப்பது சிரமம், கொஞ்சம் தூரத்தில் எனவே கேமராவை ஜூம் செய்து எடுத்தது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. இரண்டாவது படத்தில்  அந்தப் பறவைக்கு கழுத்தே இல்லாதது போல தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அதான் அது கழுத்தை வளைத்து அலகால் இறகுகளைக் கோதுகிறது இல்லேனா ஓய்வு எடுக்கிறது1 அதான் கழுத்தே தெரியலை. நானும் காத்திருந்து காத்திருந்து கண்கள் புத்ததுதான் மிச்சம், ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  3. பறவைகள் உணவுக்காக மீன் பிடிக்கும் விவரங்கள் சுவாரஸ்யம்தான்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமாக சுவாசரஸியமாக இருக்கும் ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  4. இரண்டாவது காணொளி பார்த்து ரசித்தேன்.  கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல மீனைப் பிடிக்கிறது அந்தப் பறவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். ஹப்பா ரெண்டாவதேனும் தெரிந்ததே.

      முதல் காணொளியில் கடைசியில் பறவை கல்லில் ஏறி அமர்ந்து சாப்பிடுவதும் தெரியலையோ?

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. அவைகளுக்குதான் எவ்வளவு அறிவு..  முட்கள் தொண்டையில் சிக்காமல் இருக்க என்னென்ன செய்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஸ்ரீராம், நான் ரொம்ப வியந்து பார்ப்பதுண்டு. இப்ப கூட நடைப்பயிற்சிக்கு ஏரிப்பக்கம் போனால், பாம்புத்தாரா கண்ணில் படுகிறதா என்று பார்ப்பேன். அது மட்டுமல்ல மத்த பறவைகளையும் பார்ப்பதுண்டு.

      ஆமாம் கொஞ்சம் தூரத்தில் என்பதால் கூர்ந்து பார்த்தப்ப மீனின் வால் பகுதி மேல்பக்கம் தெரிந்தது ...ஏன் இபப்டித் தூக்கிப் போட்டுப் பிடித்து உண்கிறது என்பதை வீட்டிற்கு வந்து நெட்டில் ஜெமினியோடு உரையாடியய் போது தெரிந்தது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. பறவைகள் மீதான உங்கள் சுவாரஸ்யம் அறிந்தததே..   சுவாரஸ்யமாய் தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. தகவல்கள் அனைத்தும் நன்று. படங்கள் மற்றும் காணொளிகள் ok. பறவைகள் படம் எடுப்பது கடினமான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி.

      பறவைகள் படம் எடுப்பது கடினம் என்றாலும் என் கேமராவும் சாதாரண கேமரா.

      கீதா

      நீக்கு
  8. பாம்புதாரா பறவையும் அதன் விவரங்களும் அருமை கீதா.

    முதல் காணொளியில் தலை தூக்கி கொண்டு நீந்துவது அழகு.
    அடுத்த காணொளியில் மீனை பிடித்து திட்டில் ஏறி மீனைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது அழகு.

    //மீனைப் பிடித்தவுடன் அது மேலே வரும்போது, சில நொடிகளில் அதைத் தூக்கிப் போட்டு விழுங்கிவிடும்.//

    10 மீனை சாப்பிட்டுவிட்டது என்று ஒருவர் சொல்வது கேட்டது.
    காணொளியில் மாலை நேர சூரியனா? சூரியனும் அதன் பிரிதிபலிப்பு நீரில் அழகாய் இருக்கிறது.

    பாம்புத்தாராக்களின் பண்புகளை சொன்னது அருமை.

    கடைசி காணொளியும் நன்றாக இருக்கிறது. காற்ரின் ஒலி கேட்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா உங்களுக்கு அந்தக் காணொளியில் அவங்க பேசுவது கேட்டது இல்லையா? அவங்க ரொம்ப நேரமா அங்க இருந்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தாங்க. நான் எடுக்கும் போது அவங்க பேசிட்டு இருந்தவங்க நிறுத்திட்டாங்க. பாம்புத்தாராவுக்கு என்றே ஒரு fan club இருப்பது தெரிகிறது. பொதுவாகவே இந்த ஏரியில் பலரும் படங்கள் காணொளிகள் எடுப்பதைப் பார்க்கிறேன் குறிப்பாக என்னைப் போன்ற இளையவர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா...

      அதுவும் பாம்புத்தாரா வந்துவிட்டால் பலரும் அலைபேசியோடு இருப்பதைப் பார்க்கலாம். அல்லது அதை வேடிக்கை பார்ப்பதைப் பார்க்கலாம். அப்படி ஒரு ஜோடி பேசியதுதான் அது. முங்கி முங்கி மீனைப் பிடிப்பதை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில்...கடைசியில் அது முங்கியதும் ரொம்ப நேரம் ஆளைக் காணலை. அப்ப அவங்க பேசுவதும் கேட்கும் பாருங்க.

      ஆமாம் அக்கா காணொளியில் சூரியன் உதிக்கும் தருணத்தில் எடுத்தவை....ஒவ்வொரு பகுதியிலும்...ஒவ்வொரு நாள் அது வரும் போது எடுத்தவற்றைக் கோர்த்துக் கொடுத்திருக்கிறேன் அக்கா.

      மிக்க நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
    2. காணொளிகளைக் கூர்ந்து பார்த்ததற்கும் மிக்க நன்றி கோமதிக்கா. உங்களுக்கும் பறவைகள் ரொம்பப் பிடிக்குமே

      கீதா

      நீக்கு
  9. படங்கள், காணொளிகள் மற்றும் விரிவான தகவல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக பாம்புத் தாராவுக்கு எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் நீருக்கு அடியில் மூழ்கி வேட்டையாட முடிவது, நனைத்த இறக்கைகளுடன் வேகமாகப் பறக்க முடியாதது போன்ற தகவல்கள் சுவாரஸ்யம். இவை எந்த ஏரியில் எடுத்த படங்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமலக்ஷ்மி மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

      அகலமான வீடியோ 16:9 முதல் வீடியோ அகரா ஏரியில் எடுத்தது.

      இரண்டாவது ஷார்ட்ஸ் ஆக 9:16 மடிவாலா/பிடிஎம் ஏரியில் எடுத்தது.

      கீதா

      நீக்கு
  10. பெயரில்லா7 மே, 2026 அன்று 8:03 AM

    அழகான படங்கள். நான் சின்ன வயதில் ஆற்றில் குளிக்கும் பொழுது இந்தப் பறவை தலையை மட்டும் நீட்டியபடி நீந்திய பொழுது அதை தண்ணீர் பாம்பு என்று நினைத்து ஏமாந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா இல்லையா?

      நன்றி பானுக்கா. ஆமாம் தண்ணிப் பாம்பு கழுத்தை தூக்கி நீந்துவது போலவே இருக்கும் தூரத்தில் இருந்து பார்க்க

      கீதா

      நீக்கு
  11. காணொளிகளும் படங்களும் அருமை.

    மீனை தூக்கித் தூக்கி கழுத்துக்குள் போட்டுச் சாப்பிடுவது நல்லா வந்திருக்கு.

    அனைத்துப் படங்களும் அருமை, முதல் படத்தைத் தவிர.

    முதல் படத்தைப் பார்த்தால் எனக்கு குட்டி யானையை வேறு கோணத்தில் படம் எடுத்ததுபோலத்தான் தெரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      நிஜமாகவே அது தூக்கிப் போட்டுப் பிடிப்பதை நேரில் பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கும். இங்கு மக்கள் நடைப்பயிற்சிக்கு வரும் இளைஞர்கள் அதை வேடிக்கைப் பார்ப்பதுண்டு.

      //முதல் படத்தைப் பார்த்தால் எனக்கு குட்டி யானையை வேறு கோணத்தில் படம் எடுத்ததுபோலத்தான் தெரியுது.//

      ஹாஹாஹாஹா....அது கூகுளில் தேடிவதற்காக க்ராப் செய்தது அதை இங்கு போட்டுவிட்டேன்!

      கீதா

      நீக்கு
  12. நீங்களா பாம்புத்தாரா, நீர்த்தாரா என்றெல்லாம் பெயர் வைக்கிறீங்களா?

    எல்லாம் நயனதாரா பெயர் மஹிமையா?

    பதிலளிநீக்கு
  13. //ஏகபத்னி பறவை! // இதுக்கு அர்த்தம் தெரிஞ்சுதான் எழுதியிருக்கீங்களா?

    சீசனுக்கு சீசன் (அதாவது முட்டை போட வைத்துவிட்டு) ஆளை மாற்றிக்கொள்ளும் பறவை ஏகபத்னியா இல்லை ஏகப்பட்ட பத்னி பறவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ஹூக்கும் அர்த்தம் தெரியாமல் இல்லை...சும்மா ஒரு கலாய்ப்பு ஜாலிக்குஅவ்வளவுதான். அதான் கூடவே ஒன்னு எழுதியிருக்கிறேனே ஒவ்வொரு சீசனுக்கும் ஒன்று!!!

      கீதா

      நீக்கு
  14. கூடு கட்டுவது.... பறவைகள் இதற்காக என்ன என்ன மெனெக்கிடுகின்றன என்று பார்த்தால் தெரியும்.

    இங்கு கழுகு, காகம், கிடைக்கும் சுள்ளிகளை அலகால் எடுத்துக்கொண்டு பறந்து தங்கள் கூடுகளைக் கட்டுவதைக் கவனிக்கிறேன். அதிலும் கழுகு, பெரிய பெரிய சுள்ளிகளை எடுத்துச் செல்லும்.

    வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி இவங்களுக்குத்தான் ஏற்பட்டதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளுக்கு இது மிகப் பெரிய சவால். ஆமாம் கழுகு கொஞ்சம் பெரிய சுள்ளிகளை எடுத்துச் செல்லும். நான் அதைப் படம் பிடிக்க முயன்றேன் நம்ம கேமரால சிக்கலை அத்தனை பவ்ர் கிடையாதே கேமராவுக்கு! வீடியோவும் எடுக்க முடியவில்லை

      வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழி இவங்களுக்குத்தான் ஏற்பட்டதோ?//

      ஹாஹாஹா....வீட்டைக் கட்டிப்பார் ஓகே இதுங்களுக்கு அதுங்களுக்கு கல்யாணச் செலவா என்ன?!!!!!!!!! வீடு கட்டி முட்டை போட்டு குஞ்சு பொரிப்பதுதான் சவால். ஒரு தாய், தகப்பன் குஞ்சுகளை எப்படி தண்ணீரில் வாக்கிங் கூட்டிப் போகும் அழகே அழகு அது வீடியோ எடுத்திருக்கிறேன்.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. வீடு அழகா கட்டி, டான்ஸ் ஆடினாத்தான் பெண் பறவை எட்டிப் பார்க்கும். அதாவது திருமணம் செய்துகொள்ள, வீட்டைக் கட்டிப்பார் என்பது போல.

      தன் குழந்தைகளை பறவைகள் பார்த்துக்கொள்ளும் விதமே அழகு. அதிலும் வாத்து கோழி தன் குஞ்சுகளைப் பார்த்துக்கொள்வது.

      நீக்கு
    3. அது சில பறவைகளுக்கு உண்டு குயில் கூவும், சில பறவைகள் நடனம் ஆடும். இப்பறவை இறைக்கைகளிய விரித்து விரித்து அடித்துக் கொள்ளும்.

      ஆமாம் அவை பார்த்துக் கொள்ளும் அழகே அழகு...உணவைத் தண்ணீரில் தேடித் தேடிக் கொண்டு வந்து கொடுக்கும் அதையும் எடுத்திருக்கிறேன்.., நெல்லை

      கீதா

      நீக்கு
    4. ஆனால் அது மிகப் பெரிய சவால். குஞ்சுகளைப் பாதுகாப்பது

      கீதா

      நீக்கு