கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
=======================================================================
கடந்த ஆண்டு 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியாவை உலுக்கிய பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேர் மற்றும் காயமடைந்த 20 பேர்களை நினைக்கையில் இப்போதும் நம் மனம் படும் வலியை விவரிக்க முடியாது. இறை உணர்வில்லாத மதம் பிடித்த மனிதர்கள் மனிதகுலத்துக்கு எப்போதும் ஆபத்துதான். ஆனால் அந்நிகழ்வு எங்களுக்கு அத்துடன் வேறு விதமான ஒரு சிரமத்தையும் ஏற்படுத்தியது. 30-4-25 முதல் 10-05-2025 வரை கஷ்மீர் பயணத்திற்கு நாங்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்து காத்திருந்த வேளையில்தான், 22-04-2025 இத்துயரம் நிகழ்ந்தது. ஓரிரு நாட்களில் கஷ்மீர் பயணம் கானல் நீர்தான் என்பதை உணர்ந்து, தில்லி-ஜம்முதாவி பயணச் சீட்டை ரத்து செய்து, வேறு ஒரு பயண ஏற்பாட்டாளர் வழியாக அந்த கஷ்மீர் பயணத்தை மணாலிக்கு மாற்றினோம். அடுத்த ஆண்டு இறையருள் இருந்தால் போவோம் என்று மனதை தேற்றிக் கொண்டோம். (voice 1)
30-04-25 புதன் அன்று மாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு நிலம்பூரிலிருந்து ஷோரணூர் ரயில் நிலையத்தை அடைந்தோம். இரவு 9 மணிக்கு அங்கிருந்து நிஜாமுதீன் வரை போகும் ரயிலில் எம்2 கம்பார்ட்மென்டில் ஏறினோம். கொங்கன் வழியாகப் போகும் ரயில் அது. 02-05-25 வெள்ளிக் கிழமை மதியம் 12.30க்கு தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தை அடைந்தோம்.
எங்களை Dhakka Inn ஹோட்டலுக்குக் கூட்டிச்
செல்ல 14 இருக்கைகள் உள்ள வண்டி காத்திருந்தது.
நாங்கள் 10 பேரும் 3 அறைகளில் சற்று இளைப்பாறிய பின் குளித்து தயாராகி, சரோஜினி நகர் மார்க்கெட் சென்று ஷாப்பிங் நடத்தினோம்.
அதன் பின் இந்தியா கேட்டில் சிறிது நேரம் செலவிட்ட பின், இரவு உணவுக்குப் பின் தில்லி
RPIS பேருந்து முனையத்தை அடைந்தோம்.
நான், மனைவி, அருண், விநாயக், அபிராமி, மனைவியின்
தங்கை பிந்து, அவர் மகன் விவேக், எங்களுடன் மனைவியின் கல்லூரித் தோழிகளான லீலா, சிசிலி
மற்றும் ரமணி. Vacation Express Volvo பேருந்தில் 5 முதல் 14 வரையான இருக்கைகளில் அமர்ந்தோம்.
போர்த்திக் கொள்ள ஒரு Blanket மற்றும் ஒரு தண்ணீர் bottle கிடைத்தன. சிறிது நேரத்தில்
அயர்ந்து தூங்கிவிட்டோம். (voice 4)
கண்விழித்த போது, சிறிய போக்குவரத்துத் தடை
ஏற்பட்ட காரணத்தால் ஒரு ஹோட்டல் அருகே வண்டி நின்றிருந்தது. பலரும் இறாங்கி காஃபி குடிக்கப் போக நாங்களும் இறங்கினோம்.
இமயமலைத் தொடரைக் காணவே பிரமிப்பாக இருந்தது. இரண்டு மலைகளுக்கிடையே தவழும் நதி. அதை
ஒட்டிச் செல்லும் சாலை. நூற்றுக் கணக்கிலிருந்து பல வாகனங்கள். (voice 5)
அதற்குப் பிறகு, மணாலியில் அழகான மால் ரோடில் நடந்தோம். வித்தியாசமான மணாலி உணவுகளைச் சுவைத்தோம். (voice 9)
பின், தங்கியிருந்த இடத்தை அடைந்து இரவு உணவுக்குப்
பின் மறுநாள் காணவிருக்கும் Atal Tunnel அதன் வழி பயணித்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மற்றும் பனி மூடிய மலைகளைப் பற்றிய கனவுடன்
தூங்கினோம். (voice 10)
04-05-25 - ஞாயிற்றுக் கிழமை காலை வண்டி வந்ததும், ஏறி Over Coat, Shoe, Socks மற்றும் Gloves வாடகைக்கு எடுத்தோம். ஒரு நபருக்கு ரூ 400 ஆனது.
லாஹவுல்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கை மணாலியுடன் இணைக்கும் மிகப் பிரபலமான, 3,978மீ / கடல்மட்டத்திலிருந்து 13,051 அடி உயரத்தில் இருக்கும் ரோத்தாங் கணவாய் வழியானது பனிக்காலத்தில் பனியால் மூடப்படும் என்பதால் அதன் கீழே Atal Tunnel தோராயமாக 3000-3100 மீட்டர் / 9,840 – 10,171 அடி உயரத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப் பாதை வழியாகச் சென்றால் ரோத்தாங் கணவாய் பார்க்க இயலாது.
9.02 கிமீ நீளமுள்ள இரு வழி சாலையுடனான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை பயணத்தைப் பற்றி என்ன சொல்ல? அதை அனுபவித்து மகிழத்தான் வேண்டும். மணாலியிலிருந்து லாஹவுல்-ஸ்பிட்டி வரையுள்ள தூரத்தில் 46 கிமீ குறைக்க உதவும் 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள உலகின் நீண்ட சுரங்கப்பாதை அக்டோபர் 2020 தான் நிறுவப்பட்டது.
இந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் ஸ்பிட்டி (Pity Valley) பள்ளத்தாக்கு சென்றோம். திரும்பும் போது Atal சுரங்கப்பாதைக்குள் நுழையும் முன் அங்கே இறங்க முடிவு செய்தோம். (voice 12).
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, இந்தியாவிற்கும் திபெத்திற்கும்
நடுவே உள்ளதால் Midland என்று சொல்லப்படுகிறது.
போகும் வழியெல்லாம் பிரமிப்பூட்டும்
காட்சிகள். திரப்படங்களில் மட்டுமே கண்ட காட்சிகள் எங்கள் கண் முன். நம்பவே முடியவில்லை. வண்டியிலிருந்து இறங்கி ஸ்பிட்டி பள்ளத்தாக்கில்
3 மணி நேரம் செலவிட்டோம். வயதை மறந்து குழந்தைகளாய் மாறினோம். பனிக்கட்டியை அள்ளியும்
எறிந்தும் அதில் புரண்டும். மே மாதம் என்பதால் பனி உருகத் தொடங்கியிருந்தது.
கண்ணில் படும் காட்சிகளெல்லாம் பிரமிப்பூடுபவை.
இந்தியாவின் தென் கோடியிலுள்ள நாங்கள் இமயமலைக்குச் செல்வது என்றாலே ஒரு கனவுலகில் செல்வது போல்தான். 6 மணிக்கு ஹோட்டலை
அடைந்து உணவு உண்டு மறுநாள் செல்லும் இடமான கஸோல் கனவுகளுடன் தூங்கினோம். (voice
16)
நிறைய காணொளிகள் எடுத்தேன். பதிவில் இல்லாத படங்கள் மற்றும் காணொளிள் எல்லாம் தொகுத்து என் குரலுடன் இரு பகுதிகளாகச் செய்ததில் முதல் பகுதியை இங்கு கொடுத்திருக்கிறேன். அதில் காட்சிகளைப் பார்க்கலாம். முடிந்தால் பாருங்கள். இரண்டாம் பகுதி கஸோல் பற்றி அடுத்து வரும்.
https://www.youtube.com/watch?v=YcTxJKcBQ8k
அடுத்த 2 ஆம் பகுதியில் சந்திப்போம்...
------துளசிதரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக