கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும்
போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ்,
நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்,
யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஜடாயுபுரம் - 2
ஜடாயுபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில், அதற்கு முன்னதாகவே இடப்புறம், நாங்கள் இருந்த போது சின்னதாகக் களையற்று அடையாளமே இல்லாமல் எப்போதும் மூடியிருந்த மடம், இப்போது இப்படி கிருஷ்ண சைதன்யமடம் என்ற பெயரில். நான் அங்கிருந்த போது அறிந்திராத ஒரு தகவலை அறிந்தேன், ராஜியின் தளத்தில்!
வெகு சிறுவயதில் இராமாயணம் கேட்டு, அப்ப
இங்கு தான் ஜடாயு இருந்ததா என்று கேட்டதற்கு, பெரிதாக எந்தப் புராணக் கதையும் சொல்லப்படவில்லை.
ஜடாயுவின் இறக்கைகள் இராவணனால் வெட்டப்பட்ட போது இங்கு வீழ்ந்தது அதனால் ஜடாயுபுரம்
என்று சொல்லப்பட்டது என்று பள்ளிக்குச் செல்லும் வயதில் அறிந்தேன். அதனால், கோயிலின் இறைவன் பெயர் ஜடாயுபுரீஸ்வரர்.
மற்றபடி பெரிய கதைகள் எதுவும் கேட்டதில்லை. அப்படி இருந்திருந்தால், பள்ளித் தலைமையாசிரியராக இருந்த என் மாமா எங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லியிருந்திருப்பார். நான் இருந்தவரை அங்கு இல்லாதவை, கேள்விப்படாதவை எல்லாம் இப்ப பார்க்கும் போதும் கேட்கும் போதும் வியப்பாக இருக்கிறது.
2013ல் காணாமல் போன கனவுகள் ராஜியும், 2018ல் அனுவும் எங்கள் ஊருக்குச் சென்று வந்து திருவாழ்மார்பர் கோயில் மற்றும் ஜடாயுபுரம் கோயில் பற்றிய பதிவு போட்டிருக்கிறார்கள். ஜடாயுபுரம் பற்றிய விஷயங்களை வாசித்த போது ஊரில் இருந்தவரை யாரும் சொல்லிக் கேட்காதவை இப்ப எப்படி இப்படிக் கதைகள் என்று வியப்பு எனக்கு. அங்கு சென்றிருந்த போது அவங்களுக்குச் சொல்லப்பட்டதை அவங்க எழுதியிருக்காங்க.
அனுவும் சொல்லியிருந்தார், ராஜியின் பதிவைச் சொல்லி. ஜடாயுபுரம் பற்றி ராஜியின் பதிவில்.
//ஜடாயுவிற்கு மோட்சம் கிடைத்ததாகவும், இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னன்னா இராமபிரான் ஜடாயுவிற்கு மோட்ஷம் வேண்டி பிரதிஷ்டை செய்து வழி பட்ட இடம் இது என்பதால், இங்கு, பித்ரு கர்மம் செய்ய அனுகூலமான ஸ்தலமாம். இது, ராமேஸ்வரத்திற்கு இணையாக பித்ரு கர்மம் செய்யும் சக்தியுடைய ஸ்தலம் என்றும் கோவில் குருக்கள் கூறினார்.//
//இராமர் இங்கிருக்கும் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இராமலிங்கசுவாமி என்றும்//
ஒரு வேளை நம்ம சின்ன வயசுல நம்ம வீட்டில் இதெல்லாம் சொல்லலையோ என்ற கேள்வியும் எழுந்தாலும், அதெப்படி அப்போது சொல்லப்படாதவை இப்போது என்ற கேள்வியும்.
இதில் எனக்கு விளங்காதது என்னவென்றால்,
இதே கதைகளுடன் இதே ஜடாயுபுரம், இதே ஜடாயுபுரீஸ்வரரோடு வேறு இரு ஊர்கள்.
ஜாடாயுபுரம் (தற்போது கழுவத்தூர்) என்பது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்குள்ள சிவபெருமான் ஜடாயுபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எங்கள் ஊர் ஜடாயுபுரத்திற்குச் சொல்லப்படும் அதே கதை இந்த ஊருக்கும்.
மற்றொரு ஊரில் -
ஜடாயுபுரீஸ்வரர் கோவில் திருமலைராயன்பட்டினம் தேவார வைப்பு தலம், இந்த பழமையான தேவார வைப்புத்தலம், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. எங்கள் ஊர் ஜடாயுபுரத்திற்குச் சொல்லப்படும் அதே கதை இந்த ஊருக்கும்.
ஊருக்குப் போயிருந்த போது பல மாற்றங்கள். நான் கண்களாலும் மனதாலும் ரசித்தவற்றை, உணர்வுகளோடு கலந்தவற்றை மட்டும் படங்களோடு சொல்லிப் போகிறேன். கூடவே நாங்கள் இருந்த போது அறியாதவற்றை இப்போது தெரிந்து கொண்டதையும் சொல்கிறேன்.
மண்டபத்தின் இடப்புறம் பழையாறு பாருங்க. வெள்ளம்
வந்து கொஞ்சம் குறைந்த நிலையில். தண்ணீர் குறைவாக ஓடும் போது இறங்கும்படியாக இருக்கும் . சற்றுத் தள்ளி மணற்பாங்கும் இருக்கும். மிகவும் சுத்தமாக இருக்கும்.
இந்த மண்டபமும் இந்த ஆறும், நான் எழுதி முடிக்காத கதையில் இடம் பெற்றிருக்கின்றன. அப்படி என் உணர்வுகளோடு, நினைவுகளில் புதைந்து கிடக்கும் இடங்கள். ஊரில் இருந்த போது மண்டபத்தில் எங்கள் துணிகள் எல்லாம் வைத்துவிட்டு இந்தப் படித்துறையில் குளிப்போம். இங்கு ஆண்கள் குளித்தால் (பெரும்பாலும்), நாங்கள் இன்னும் சற்றுத் தள்ளிச் சென்று மணற்பாங்கான இடத்தில் பாறைகளின் மீது துணிகளை வைத்துவிட்டு அத்தனை ஆழமில்லாத ஆற்றில் பாறைகளின் நடுவில் படுத்துக் கொண்டும், நீச்சல் அடித்துக் கொண்டும் குளித்துவிட்டு வருவோம்.
தண்ணீர் பளிங்கு போன்று இருக்கும். அடியில் மணற்பகுதியும் பாறைகளும் தெளிவாகத் தெரியும் அந்த அளவு தண்ணீர் சுத்தமாக இருக்கும். இதெல்லாம் கோடைவிடுமுறை நாட்களில் கிடைத்த அனுபவங்கள். ஜடாயுபுரம் போய் குளிச்சுட்டு வரலாமா என்றாலே நாங்கள் குஷியாகிவிடுவோம்.
வருடந்தோறும் கனு அன்றும், ஆடிப்பெருக்கு அன்றும்
அதே மணற்பாங்கு இடத்தில்தான் ஊரே கூடி அவரவர் கொண்டு வந்த கலந்த சாதத்தை ஒருவருக்கொருவர்
பகிர்ந்து கொண்டு, தண்ணீரில் விளையாடிக் கொண்டு, தினப்படியான கஷ்டங்களை சிறிது நேரம் மறந்து, சிரித்துப் பேசிக் கொண்டாடிய இடங்கள்.
இப்போது அந்த மணற்பாங்கான இடத்துக்குப் போக
முடியுமா என்று பார்த்தேன். வழி இல்லை. வெள்ளம் ஆற்றின் கரையை அடைத்துக் கொண்டு ஓடிக்
கொண்டிருந்தது. எனவே படங்கள் எடுக்க முடியவில்லை. (அனுவின் தளத்தில் அப்பகுதியின் படம் இருக்கிறது ஆனால் மணற்பாங்கான இடம் இல்லாமல் ஆற்று நீருடன்) மற்றும் ஆண்கள் குளித்துக் கொண்டிருந்ததால் புகைப்படம் அந்த இடத்தைச் சரியாக எடுக்க முடியவில்லை.
இந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு ஆற்றைப் பார்த்துக் கொண்டு சுகமான காற்றை அனுபவித்துக் கொண்டு கனவில் மிதந்த காலங்கள்...அல்லது அந்த மணற்பாங்கான நிலப்பரப்பில் அமர்ந்து கொண்டு...
மேலே அந்த மண்டபம் இருக்கிறது இல்லையா? அதன் அருகில் இருக்கும் அரசமர மேடையில் முன்பு நாகர்கள் ஒரு சில இருந்தாலும் தற்போது நிறைய வரிசையாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். முன்னர் அரசமரம் மட்டும் தான். இப்போது வேப்பமரமும் அதனிடையில் வளர்ந்திருப்பதை தனி விசேஷம் என்று சொல்லியிருக்கிறார்கள். நானும் சென்றிருந்த போது அறிந்தேன்! அங்கிருந்த போது அறியாதது!
அங்கு முன்பு சாதாரணமாக இருந்த பிள்ளையாருக்கு இப்போது தனி கோயில். நான் 2021ல் சென்றிருந்த போதும் எடுத்திருந்தேன். எல்லாம் காணொளியில் காணலாம். அதற்கு இப்போது ஒரு கதையும் இருக்கிறது தெரிந்தது அனுவின் பதிவில் அதாவது கேரள அரச குடும்பத்தினர் வழிபட்ட பிள்ளையார் என்று. ஊரிலேயே பிறந்து வளர்ந்த எங்களுக்குத் தெரியாதவை!!!!
மண்டபம், அரசமரம் கடந்து பிள்ளையாருக்குத் தற்போது எழுப்பட்ட கோயிலைக் கடந்து சுற்றி வரும் போது இடப்பக்கம் இத்தோட்டம். (காணொளியில் நன்றாகக் காணலாம்)
எங்கள் ஊர் முழுவதற்கும் ஒரு வாட்சப் குழு. அதில் என் உறவுகள் எல்லோரும் இருக்கிறார்கள். என்னைத் தவிர. வாட்சப்பில் ஊரைப் பற்றிய புராணக் கதைகள் நிறைய வருகின்றனவாம். அவர்களும் சொன்னார்கள். குழுவில் ஒரு பெரியவர் இப்படி எழுதுகிறாராம். அங்கு பிறந்து வளர்ந்த எங்களுக்கு வியப்பாக இருக்கிறது என்று பேசிக் கொண்டோம்.
இரண்டு விஷயங்கள் புரிந்தன. ஒன்று - இப்படித்தான் ஒவ்வொரு ஊர் பற்றியும், காலங்கள் மாறும் போது செவி வழி, வாய்வழிக் கதைகள் பிறக்கின்றன(வோ?), அந்தந்தக் காலத்திற்கேற்ப, சுற்றுலாத்துறை வளர்வதாலும் ஆன்மீகப்பயணங்கள் என்று விரிவடைவதாலும் புதியதாய் கதைகளும், ஜோஸ்யர்கள் பரிகாரம் என்று சொல்லும் புதிய பூசை வழிபாடுகளும் உருவாகின்றன(வோ?), வரலாறுகள் மாறுகின்றன(வோ?).
இரண்டு - எப்படியோ இப்படி அப்படி நம்ம ஊரும் (பின்னர் வரும்) ஊர்ப்பகுதியும் பிரபலமாகியிருக்கின்றன! யுட்யூபிலும் பேசப்பட்டிருக்கிறது, பல புதிய விவரங்களுடன்! வெளிச்சத்தில் இருக்கிறது. நெட்டில் திருப்பதிசாரம், ஜடாயுபுரம் என்று தேடினால் நம்ம ஊர்ப்பகுதி ஜடாயுபுரமும் வரும் அளவில்!!!
அடுத்த பதிவில் அருகிலுள்ள வேறு ஒரு பகுதியைக் காட்டுகிறேன்...அதற்கு முன் கீழுள்ள காணொளியை முடிந்தால் பாருங்கள். 9 நிமிடங்கள்......வினாடிகள்.
போகும் வழி, பறவைகள் (படங்கள் முதல் பதிவில் பார்த்திருப்பீங்க...இங்கு காணொளியாக (நெல்லை அடுத்த முறை போனால் இவ்வழி போய் பார்த்துவிட்டு வரலாமே என்று!) மற்றும் ஜடாயுபிரீஸ்வரர் கோயிலின் வெளிப்புறம், ஆறு, மண்டபம், குளம் என்று காட்சிகள்.
https://www.youtube.com/watch?v=q84cPbcHqM8
-----கீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக