திங்கள், 20 ஏப்ரல், 2026

சில்லு சில்லாய் - 25 - Wallowing - சேறு நல்லதா? - மாடி மேல மாடி கட்டி...

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். 

****************************************

சில்லு - 1 - Wallowing

Wallowing என்ற சொல்லுக்குத் தமிழில் மூழ்கிக் கிடத்தல் என்று பொருள் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதான். இதை இரண்டு வகைச் சூழல்களில் பயன்படுத்தலாம்.

ஒரு சோகமான விஷயத்திலோ அல்லது சம்பவத்திலோ அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்யாமல் தொடர்ந்து உழன்று கொண்டிருத்தல்; தன்னைத்தானே பரிதாபமாக நினைத்து வருந்திக் கொண்டே இருப்பது; குற்ற உணர்விலேயே இருத்தல்; இவற்றைச் சொல்ல இச்சொல்லைப் பயன்படுத்துவதுண்டு.

நேரடி அர்த்தம் - வேனல் காலத்தில் சில விலங்குகள் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சேற்றில் அல்லது நீரில் புரண்டு புரண்டு வேனலை எதிர்கொள்ளும். உதாரணமாக யானைகள், காண்டாமிருகங்கள், எருமைகள், பன்றிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம், இதற்கு Wallowing In Mud - சேற்றில் அல்லது நீரில் மூழ்கிக் கிடத்தல் என்று சொல்லப்படும். (இதுவும் உங்களுக்குத் தெரிந்ததுதான்)

ஊரில், கோடை விடுமுறையில் நாங்க குளிக்கப் போனா ஆறானாலும் சரி, குளமானாலும் சரி தண்ணீரிலேயே கிடப்போம். காரணம் கிடைக்கும் வாய்ப்பே அப்படி. வீட்டிலிருந்து யாராவது வந்து, "எருமை மாடுகள்....குளிச்சோமா, வந்தோமான்னு இல்லாம எருமை மாடு மாதிரி தண்ணிய கலக்கி தண்ணிலயே ஊறிக் கிடக்கறத பாரு" என்று பெருங்குரலில் ஏச்சு விழும்.

"ச்சே நாம எருமைங்களாவே இருந்திருக்கலாம் பாரு அதுங்க என்ன சொகமா ஊறிட்டுருக்கு பாரு இந்த வெயிலுக்கு" இது எங்களுக்குள் ரகசியமாக....

அங்கேயே நின்று எங்களைக் கிளப்பிக் கூட்டிக் கொண்டு போவார்கள். அதன் பின் கொஞ்ச நாள் விதிமுறைகள் அனுசரிக்கப்படும். மீண்டும் கிணற்றில் தண்ணீர் இறங்கிவிட்டால் வேறு வழியில்லை. குளத்தங்கரையோ, ஆற்றங்கரையோ! சரி மேட்டருக்கு வரேன்..

உண்மையாக, எருமைகள் சுகத்திற்காக நீரில் கிடப்பதல்ல. அப்படிக் கிடப்பது எருமைகளுக்கு உயிர் வாழத் தேவையான ஒன்று. வெப்பத்தை உறிஞ்சும் அடர் நிறத் தோலையும், மிகக் குறைவான வியர்வைச் சுரப்பிகளையும் கொண்டிருப்பதால் கோடையில் வியர்த்து வெப்பத்தைத் தணிக்க முடியாததால், அவை தங்கள் உடல் வெப்ப நிலையைச் சீராக்கவும் தோலைப் பாதுகாக்கவும், தங்கள் ஆரோக்கியத்தைப் பேணவும் நீரிலோ சேற்றிலோ புரளுகின்றன.

பன்றிகள், காண்டாமிருகங்களும் அப்படித்தான். அவற்றின் தோலமைப்பும் அதேதான்.

யானைகளுக்கும் இதே காரணம் தான் என்றாலும் யானைகளுக்கோ இந்தச் சேற்றில் புரண்டு விளையாடுவது மிகவும் பிடித்தமான விஷயம்.  

யானைகளுக்கும் வேர்வைச் சுரப்பிகள் கிடையாது; ஆனால் அவற்றின் உடலமைப்பின் காரணமாக உடலில் அதிக வெப்பம் உருவாகிறது. எனவே, சேற்றில் புரள்வதன் மூலமாகவோ அல்லது தங்கள் காதுகளை ஆட்டுவதன் மூலமாகவோ வெப்பத்தை வெளியேற்றுவது அவற்றிற்கு மிகவும் அவசியமானது.

பாவம் விலங்குகள்! வியற்வைச் சுரப்பிகள் இருக்கும் நமக்கே அடிக்கும் வெயிலுக்கு தண்ணீரில் மூழ்கிக் கிடக்கலாம் போன்று தோன்றுகிறது. இப்ப நம்மை எருமை மாடுன்னு திட்ட யாருமில்லை பாருங்க!!!

சரி....முடியாத காரியம். இப்ப இந்த ஆனைகள் கும்மாளம் அடிப்பதைப் பார்த்து ரசியுங்க!


https://www.youtube.com/watch?v=iYIHGtX_F2Y   இவை மேல்நாட்டில் வளர்க்கப்படும் பன்றிகள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------

சில்லு - 2 - சேறு நல்லதா?

உங்களில் எத்தனை பேர் சின்ன வயசுல சேத்துல புரண்டு சண்டை போட்டிருக்கீங்க!!! (சண்டை போட்டதில்லை. ஆனால் புரண்டிருக்கிறேன்.) வீட்டுல அடி வாங்கிருக்கீங்க? (வாங்கிருக்கிறேன்) அல்லது கறை நல்லதுன்னு விளம்பரம் போல உங்க அம்மா உங்களைத் தட்டிக் கொடுத்ததுண்டா? துவைச்சு எடுக்கறேன்னு உங்களைத் துவைத்ததுண்டா!!?

சில்லு 1 ல் விலங்குகள் சேற்றில் புரள்வது பற்றிப் பேசினோம் இல்லையா, மனிதர்களுக்கும் சேற்றில் புரள்வது நல்லதாம்! குறிப்பிட்ட வகையான சிகிச்சைக்கான சேறுகள் (Dead Sea சேறு, எரிமலைச் சாம்பல் அல்லது Fango mud therapy - ஃபாங்கோ போன்றவை) மனிதர்களுக்கு, குறிப்பாக சரும ஆரோக்கியத்திற்கும் வலி நிவாரணத்திற்கும் மிகவும் நன்மை பயக்குமாம்; கூடவே வெந்நீர் சேற்றுக் குளியல்கள் அவற்றின் Anti inflammatory - அழற்சி எதிர்ப்பு/வீக்கத் தடுப்பு, பண்புகளால் மூட்டுவலி மற்றும் தசை வலியைப் போக்க உதவுகின்றனவாம்.

உலகெங்கிலும் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும், சேற்றில் விளையாடச் செய்தல்; சுற்றுச்சூழல் மீதான அக்கறையை வளர்த்தல்; இவற்றின் மூலம் இயற்கையுடன் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச சேறு தினம் ஆண்டுதோறும் ஜூன் 29 அன்று கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 29 அன்று கொண்டாடப்படும் சர்வதேச சேறு தினம், 2009-ஆம் ஆண்டு பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான உலக மன்றத்தில், சர்வதேச சேறு தினத்திற்கான எண்ணம் உருவானது. சேறு மற்றும் சகதியில் விளையாடுவது ஓர் இயற்கையான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கான தடைகளைத் தாண்டுவது குறித்த ஓர் உரையாடலில் இருந்து இந்தக் கருத்து உருவாகியிருக்கிறது.

குழந்தைகளுக்கான இயற்கைச் செயல்பாட்டுக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான, மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Gillian McAuliffe - கில்லியன் மெக்காலிஃப் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த Bishnu Bhatta - பிஷ்ணு பட்டா குழந்தைகள் சேற்றில் விளையாடும்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தனர். குழந்தைகளை இயற்கையுடன் இணைக்கவும், உலகளாவிய சமூகத்தை ஊக்குவிக்கவும், Sensory Skills (புலன் உணர்வு) செறிந்த இந்த விளையாட்டு அனுபவங்களை ஊக்குவிக்கவும் இவர்கள் இருவராலும் தொடங்கப்பட்டது.

இதன் பின்னணியில் ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு உண்டு. Gillian McAuliffe, ஆஸ்திரேலியாவில் Perth - பெர்த்தில் உள்ள Bold Park Community School ல் கற்பித்தல் மற்றும் கற்றல் துறையின் இயக்குநர். Perth நகர் ஒரு மணல் சமவெளியில் அமைந்திருப்பதால் அங்கு சேறு குறைவாக இருந்ததையும், மேலும் சேற்றில் விளையாடுவதை அந்நாட்டுக் கலாச்சாரம் அனுமதிக்கவில்லை என்பதையும்  Gillian McAuliffe யோசித்துப் பார்த்திருக்கிறார்.

மறுபுறம், நேபாளத்தில் நிறைய சேறு இருக்கிறது, ஆனால் பல அனாதைக் குழந்தைகளிடம் தங்கள் ஆடைகளை அழுக்காக்கிக் கொள்ளும் அளவுக்குப் போதுமான ஆடைகளோ அல்லது அவற்றைத் துவைக்க சோப்போ இல்லை என்பதை Bishnu Bhatta சொல்லிட Gillian McAuliffe அறிந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியதும், அவர், நேபாளத்தில் உள்ள குழந்தைகளால் சேற்றில் விளையாட முடியவில்லை என்பதைச் சொன்னதும்.  அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியக் குழந்தைகள், உதவி செய்ய முடிவு செய்திருக்கின்றனர்.

Panchkhal in Nepal’s Kavre district buzzed with excitement for the 16th International Mud Day, organized by PSD-Nepal and Bold Park Community School from Australia.

நேபாளத்தில் உள்ள குழந்தைகளும் இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும் வகையில், அவர்களுக்கு ஆடைகள் வாங்குவதற்காக, மூன்றே வாரங்களில் 1,000 ஆஸ்திரேலிய டாலர்களைத் திரட்டினர். அதை Bishnu Bhatta விற்கு அனுப்பி வைத்திட, அப்படி, இதன் தொடக்க நிகழ்வாக, நேபாள அனாதை இல்லம் ஒன்றில் உள்ள குழந்தைகள் பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாகச் சேற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கூடவே நல்ல உணவும்.

அதன் பின், இந்த தினத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள அப்பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் குடும்பங்களோடு நேபாளத்திற்கு வந்து இந்த ஆதரவற்றக் குழந்தைகளோடு விளையாடி மகிழத் தொடங்கியிருந்திருக்கின்றனர். மேலும், ஆஸ்திரேலிய குடும்பங்களின் உதவியால் இந்த ஆதரவற்றோர் இல்லங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு The World Forum Community, இப்படி இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதை பிற நாடுகளிலும் செயல்படுத்த  முயல்வதாகத் தெரிகிறது.

சேற்றில் புரண்டு விளையாடுவது மகிழ்ச்சியைத் தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறதாம். Motorical Senses புலன்/இயக்கத் திறன்களையும் வலுப்படுத்துகிறது என்பதையும் வலியுறுத்தி அத்தகைய விளையாட்டுகளையும், செயல்களையும் ஊக்குவிக்கிறது. (என் மகனை மண்ணில், தண்ணீரில் நன்றாக விளையாடவிட்டதுண்டு. இந்த Motorical செயல்பாடுகள் Cognitive processing ற்கு உதவும் என்பதால்)

இதற்காக வெளிநாடுகளில், குறிப்பாக ஆஸ்திரேலியா, நேபாளம் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுத்த இடங்களில் குழி அமைத்து அதில் நல்ல தரமான மண், நீர் சேர்த்து சேற்றினை உருவாக்குகிறார்கள்.  இது தவிர....

"நெல் தினம்" கொண்டாட்டம் 

நேபாளத்தில், பருவமழை காலத்தில் "நெல் தினம்" என்பது இந்த சேறு தினம் போன்று பாரம்பரிய நிகழ்வாம். அந்நாளில், விவசாயிகள் நெல் நடவு செய்து சேற்றில் விளையாடுவார்களாம். (காமாட்சி அம்மா நினைவுக்கு வந்தார்கள் அவர்கள் இருந்த நாடாயிற்றே.)

நம்ம ஊர்களிலும் விவசாயிகள் சேற்றில் இறங்கித்தானே நெல் நடவு செய்கிறார்கள் வயல்களில்! சேறு தினம் என்றில்லாமல், பருவகாலம் முழுவதுமே இல்லையா? இது கிட்டத்தட்ட சர்வதேச சேறு தினம் சொல்லும் உணர்வுடன் ஒத்துப்போகிறது இல்லையா!

ஆஹா நாமும் வயல்களில் சேற்றில் இறங்கியதுண்டே ஊரில் இருந்தப்ப என்று நினைத்துக் கொண்டேன்!

வடக்கு  கோவாவின் மார்செல் நகரில், இந்து மாதமான ஆஷாடத்தில் அதாவது ஆடி மாதத்தில் (ஜூன்/ஜூலை) நடைபெறும் ஒரு பாரம்பரியமான, உற்சாகமான மண் / சேறு திருவிழாவாம். பக்தர்கள் சேற்றில் விளையாடியும், சேற்றை வீசி எறிந்தும், நடனமாடியும், பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்றும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை மீட்டெடுப்பது போன்று இவர்கள் கொண்டாடி மகிழ்வார்களாம்.

இந்தியாவில் சில பள்ளிகளிலும் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் குழந்தைகளை களிமண்ணில் பல பொம்மைகள், உருவங்கள் செய்யச் சொல்லுதல், மண்/களிமண் பானைகளில், தட்டுகளில் ஓவியம் வரையச் செய்தல் போன்று. இப்படி, இங்கு பெங்களூரில் சில பள்ளிகளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

சில்லு - 3 - மாடி மேல மாடி கட்டி ...

சில மாதங்களுக்கு முன், குளிர்காலத்தில், துளசி குடும்பம் இங்கு வந்த போது Cubbon Park - கப்பன் பூங்கா சென்றிருந்தோம். மலர் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. (இதன் படங்கள் எல்லாம் பின்னர் வரும்) நான் கேமரா கண்கள் வழி பார்த்துக் கொண்டே கீழே படத்தில் உள்ள யானையை படம் பிடித்ததும் படத்தில் (கீழே முதல் படம்) இடப்புறம்  மிக உயரமான கட்டிடமும் அதன் உச்சியில் இருந்த கட்டிடமும் வித்தியாசமாக இருந்தது என்னைக் கவர்ந்தது. வீடா ஹோட்டலா என்று சந்தேகத்துடன் ஆச்சரியத்துடன், பார்த்ததை உடனே, யானையின் பக்கவாட்டில் நேராக என் ஓட்டை கேமராவில் கிட்டப் பார்வைக்குக் கொண்டு வந்து ஒரு க்ளிக்! (இரண்டாவது படம்)

முதல் படத்தில் யானையின் இடப்புறம், இரண்டாவது படத்தில் பின் பக்கம் பெரிய கட்டிடம் தெரிகிறதா? உச்சியில் ஒரு வீடு? நாங்கள் சென்ற நேரம் மழையும் பனியுமான நாள் என்பதால் சரியாகத் தெரியாது என்று நினைக்கிறேன். கீழே இணையத்திலிருந்து படம்

பின்னர் எடுத்த படத்தை இணையத்தில் போட்டுப் பார்த்த போதுதான் தெரிந்தது அதன் சரித்திரப் பின்னணி!!

பெங்களூருவின் யுபி சிட்டி (UB City) பகுதியில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் (Kingfisher Towers) என்ற 34 மாடி கட்டிடத்தின் உச்சியில் தொழிலதிபர் விஜய் மல்லையா கட்டியிருக்கும் ஒரு பிரம்மாண்டமான பென்ட்ஹவுஸ் (Penthouse) என்று தெரியவந்தது. இது "ஸ்கை மேன்ஷன்" (Sky Mansion) அல்லது "வானத்தில் உள்ள மாளிகை" என்று அழைக்கப்படுகிறது.

இந்த வீட்டில் அமைந்துள்ள சில அம்சங்கள் - 40,000 சதுர அடி பரப்பளவில், 34 மற்றும் 35-வது மாடிகளில் இந்த வீடு அமைந்துள்ளது. பெங்களூரின் அடையாளச் சின்னமாகவும்!

இந்த மாளிகையில் பிரத்தியேக ஹெலிபேட், எல்லையற்ற நீச்சல் குளம் (Infinity pool) அதாவது நீரின் விளிம்பு எங்கு முடிகிறது என்றே தெரியாத அளவுக்கு ஒரு மாயையை (Visual Illusion) உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன நீச்சல் குளமாம்! 'மறைந்து போகும் விளிம்பு குளம்' (Vanishing Edge Pool) என்றும் அழைக்கப்படுகிறதாம். பசுமையான தோட்டங்கள் மற்றும் 360 டிகிரி கோணத்தில் பெங்களூரு நகரத்தை பார்க்கும் வசதியும் இருக்கிறதாம். அமெரிக்க வெள்ளை மாளிகையைப் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மல்லையாவின் பூர்வீக இல்லம் (Brewery House) இருந்த 4.5 ஏக்கர் நிலத்தில் இந்த கிங்ஃபிஷர் டவர்ஸ் கட்டப்பட்டுள்ளது.

ஆனா, பாவம்! அவர் லண்டனில் இருப்பதால் அவரது கனவு இல்லமான இதில் இத்தனை வசதிகளையும் அனுபவிக்கவே முடியாமல் இந்த பிரம்மாண்டமான வீடு இன்னும் காலியாகவே உள்ளதாம்!

படம் இணையத்திலிருந்து


-------கீதா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக