திங்கள், 27 ஏப்ரல், 2026

அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 1

 ஜடாயுபுரம் - 1

அழகே! அழகே! பாரதமே அழகு! வடகோடி மட்டுமா அழகு? தென் கோடியும் அழகு! 
பின்னணியில் மலைகளும், வயல்களும், தோப்புகளும், வாய்க்காலும், ஆறும், சுற்றிலும் நீருமாகப் பின்னிப் பிணைந்து இருக்கும் திருவண்பரிசாரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே ஊரின் மீதான பிடிப்பை விட ஊரைச் சுற்றிப் பொதிந்து கிடக்கும் இயற்கையின் மீது லயிப்பும், காதலும், நேசமும், இயற்கையோடு வாழும் ஆசையும், யதார்த்தத்தில் நடக்கவில்லை என்றாலும், என் மனதுள் ஊறிப் போன ஒன்று. 

இப்போது ஊருக்குச் சென்றால் கூட ஊரை விட, ஆற்றங்கரைப் பகுதியும் ஊரைச் சுற்றியிருக்கும் பசுமையும், தண்ணீரும், மலைகளும் பரவசத்தைத் தரும் அளவிற்கு என்னோடு கலந்தவை. இங்கு மட்டுமில்லை, இமயமலைப் பகுதிக்குச் சென்ற போதும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்குச் சென்ற போதும் ஏற்பட்டதுண்டு. ஏற்படும் ஒன்று. மொத்தத்தில் இயற்கை. நம்ம வெங்கட்ஜி போடும் பதிவுகளையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் கேமராவா மொபைலா? எல்லாவற்றையும் அள்ளிப் போட்டுக் கொள்ள! 

4 1/2 வருடங்களுக்கு முன் போன போது என் ஓட்டைக்கேமராவில் முடிந்தவரை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தேன். அவற்றில் ஒவ்வொன்றாக இப்போது உங்களுக்குக் காட்டுகிறேன். நீங்கள் ரசிப்பீர்கள் என்பதோடு உங்களுக்குச் சிறு பொறாமை கூட வரலாம்! நான் எப்பேர்ப்பட்ட பகுதியில் வளர்ந்திருக்கிறேன் என்று.

ஊருக்குச் சென்றிருந்த போது சுற்றிலும் பல மாற்றங்கள். அவற்றைப் படங்களோடு சொல்கிறேன்.

எங்கள் ஊருக்குள் செல்வதற்கு முன், சுற்றிலும், நடக்கும் தூரத்தில் உள்ளவற்றைப் படங்களோடு காட்டிவிட்டுக் கடைசியாக ஊருக்குள் சென்று பார்ப்போம். ஒகே?!

கிராமத்திலிருந்து ஜடாயுபுரம் போகும் வழி. என்னோடு நடந்து வாங்க பேசிக் கொண்டே போவோம். இந்வளைவு நாங்கள் இருந்த போது கிடையாது அதன் பின்னும் அம்மா இருந்தவரை போய் வந்து கொண்டிருந்தேனே. அப்பவும் இல்லை அதன் பின்னர் கட்டியிருக்கிறார்கள். நுழைந்ததும் இடப்பக்கம் ஒரு வீடு தெரிகிறதா? அப்போது அது சின்னதாக மாடி எதுவும் இல்லாமல் இருந்தது

எங்கள் எல்லோரது திருமணத்திற்குப் பின்னர் கூட்டுக் குடும்பத்திலிருந்து, அம்மாவும் அப்பாவும் இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்துவிட்டார்கள்என் மகன் இந்த வீட்டில்தான் பிறந்தான். இப்போது அது மாடிவீடு! அதற்கு முன்புவரை எல்லோரும் சேர்ந்து இருந்த பாட்டி வீடு, மாமா வீடு எல்லாம் கிராமத்திற்குள் இப்பக்கம் வர வேண்டும். வளைவுக்குள் நுழையும் முன் நீல வண்ணக் கதவுடன் இருப்பதுதான்நாங்கள் இருந்த போது பஜனைமடம். இப்போது நம்மாழ்வார் சன்னதி. நம்மாழ்வாரின் அம்மா உடையநங்கை வாழ்ந்த நினைவாக.

பாருங்க எங்க ஊர் நிலையை. நாங்கள் இருந்த போது இந்த இடங்களில் எல்லாம் இப்படிக் குப்பைகளைப் பார்க்கவே முடியாது. மாறாக வைக்கோல் போர் மற்றும் எரு குவித்து வைத்திருப்பாங்க. இப்ப பாருங்க எங்க ஊரும் இப்படிக் குப்பைக் கூளமாகிவிட்டது. அறிவிப்பு வைத்தும் இப்படி....

போகும் வழி.....கிராமத்திலிறுந்து 10 நிமிடத்திற்குள் போய்விடலாம்.
பாத்தீங்களா? எதிரில் தெரியும் மலைத்தொடர் திருவனந்தபுரம் செல்லும் வழி பார்வதிபுரத்தில் இருக்கும் மலை  

வெள்ளம் வந்த போது இதே பகுதியை வீடியோ எடுத்துப் போட்டிருந்தேன் வெள்ளம் வண்டிந்ததும் மீண்டும் ஜடாயுபுரம் வந்து எடுத்தவை. வயலை ஒட்டி நீரோடை
ஜடாயுபுர ஜடாயுபுரீஸ்வரர் கோயிலை நெருங்குகிறோம்...
தென்னந்தோப்புக்கு அப்பக்கம் ஜடாயுபுரீஸ்வரர் மறைவாக!

இந்த இடத்தில் வலப்புறம் திரும்பி நடந்தால்....சரி அதை அடுத்த பதிவில் பார்ப்போமா!

இப்ப மீண்டும் அழகே அழகுன்னு பாடிக் கொண்டே காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போவோம்...

அங்கு மலை தெரிகிறது இல்லையா? அது தாடகை மலை. அழகியபாண்டிபுரம் கிராமப்பகுதியில். (எபி கே ஜி எஸ் தெரிசனங்கோப்பு பகுதிக்குச் சென்றிருந்தாரே அப்போது இப்பகுதிக்குச் சென்றிருந்தார் படங்கள் போட்டிருந்தார். இதே தாடகை மலைப் படமும். ராமாயணகாலத்தோடு தொடர்புடைய தலபுராணம் உடைய பகுதி என்று சொல்லப்படும். இந்த மலையைப் பார்த்து வைச்சுக்கோங்க.....ஜடாயுபுரம்  பற்றிச் சொல்லி முடித்த பிறகு அடுத்த பகுதி வரும் அதில் மீண்டும் இந்த மலைவரும்!

கொக்குகளும் அன்றில் பறவைகளும்

மேலே உள்ள படம் எடுத்த பகுதியிலிருந்து ஒரு 360 டிகிரி காணொளி. சிறிய காணொளிதான்.......கால்வாசி கடந்ததும் கிராமத்தின் வெளிப்பகுதியும், நான் நடந்து வந்த பாதையும், காணொளி முடியும் முன் மேலே கொக்குகள் பறப்பதும், கீழே வருவதும், தென்னைமரங்களுக்கிடையில் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலும் தெரியும்....

எவ்வளவு அழகான ரம்மியமான இயற்கையுடன் வளர்ந்திருக்கிறேன் இல்லையா! இன்னும் அழகே அழகு வரும்! அடுத்த பதிவில் பார்ப்போமா...


---------கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக