புதன், 26 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 5 - நிறைவுப்பகுதி

 ஒரு பிரியமான கதை - ஸ்ரீமதி ரவி

ஸ்ரீமதி ரவி என்ற புனைபெயரில் எழுதும் திரு பி டி ரவிச்சந்திரன் அவர்கள் சிறந்த புகைப்படக் கலைஞர். விகடனில் இவரது முதல் கதை வெளிவந்ததும், ஆசிரியர் பாலசுப்ரமணியன், கதை நன்றாக இருக்கிறது என்று இவரைத் தொடர்ந்து விகடனில் எழுதச் சொன்னாராம். நிறைய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.

கதை - கனகா, அமெரிக்காவில் இருக்கும் தன் ஒரே மகன் சேஷாத்ரியிடம் 20 நாளைக்கு என்று செல்கிறாள். விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்கையில் அமெரிக்காவைப் பார்த்து மகிழ்கிறாள். மகன் காரில், அம்மாவுக்குப் பிடித்த பாடல்களைப் போடுகிறான். அப்படியே ஃப்ளாஷ்பேக்கில் கதை விரிகிறது.

அப்பா ராமானுஜத்திற்குச் சமையல் வேலை. அம்மா கனகா வீட்டிலிருந்தபடியே சின்ன சின்ன விசேஷங்களுக்குச் சமையல் செய்து தருகிறாள். இருவரும் நல்ல தம்பதியர். ஒரு பெரிய கல்யாணத்தில் சமையலுக்குச் சென்றிருந்த ராமானுஜம், அங்கு ஏற்படும் எதிர்பாரா விபத்தில் காயம் ஏற்பட்டு இறந்துவிட, அம்மா தனியாளாகச் சமையல் வேலைகளில் ஈடுபட்டு, மகனைப் படிக்க வைக்க அவனும் புத்திசாலியாகப் படித்து நல்ல வேலையில் சேர்கிறான்.  அலுவலகத்தின் அருகில் ஒரு நல்ல ஃப்ளாட் எடுத்து அங்கு குடியேறுகிறார்கள்.

அவனுடன் படித்த பெண் ஷீலா அவனை விரும்பிட, சேஷாத்ரி தன் விருப்பம் எதுவும் சொல்லாமல் கடத்துகிறான். அப்பெண் நேரே வீட்டிற்கு வந்து கனகாவிடம் சொல்ல, அவள் பெரிய இடம் என்று தெரிய, முதலில் கனகா தயங்குகிறாள். தங்கள் பின்புலத்தைச் சொல்கிறாள் ஷீலாவிடம். அவள், அதைப்பற்றிக் கவலைப்படவில்லை என்கிறாள். கனகா மகனிடம் பேசுகிறாள். அவன் மௌனம் காத்திட, ஒரு நல்ல நாளில் பதிவுக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதே அபார்ட்மென்டில் அவர்கள் இருவரும் வேறு ஒரு ஃப்ளாட்டில் குடிபுகுகிறார்கள். கனகா தனியாக இருக்கிறாள்.

இங்கு கேள்விகள் எழுகின்றன. பெண் பணக்கார இடம் என்று கதையில் சொல்லப்படுகிறது ஆனால் வேறு எந்த விவரமும் இல்லை. பெண்ணின் பெற்றோர்? அவர்களின் சம்மதம். ஏன் பதிவுத்திருமணம்? ஓரிரு வரிகளேனும் சொல்லியிருக்கலாமோ? 

சில நாட்களில் அலுவலகம் அவர்களை அமெரிக்காவிற்கு அனுப்புகிறது. கனகா தனிமையில். முதலில் தினமும் கூப்பிடுகிறான் பின்னர் அழைப்புகள் அரிதாகின்றன போன்ற வழக்கமான வரிகள்.

சரி இப்ப ஃப்ளாஷ்பேக் விட்டு அமெரிக்காவுக்குப் போவோம். வீட்டை அடைந்ததும், மருமகள் ஷீலா ஹை ஆண்டிஎன்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிடுகிறாள்.

அம்மா கனகாவை அவளுக்குப் பிடித்த கோவிலுக்கு அழைத்துச் செல்கிறான் மகன்.  மருமகள் ஷீலா வீடு வர தாமதமாகும் என்று குறிப்பு அனுப்புகிறாள். கனகா மகனிடம் ஒருவிஷயம் கேட்கத் துடிக்கிறாள். மகன் பேச்சை மாற்றி மாற்றி, கோவில் எல்லாம் பார்த்ததும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்ததும், அவள் கேட்க முயல, மகனும் 'நீ என்ன கேட்கப் போகிறாய்னு தெரியும்மா' என்று தங்களுக்குள் ஒரு இடைவெளி இருப்பதாகவும், முன்பு போல் ஷீலா இல்லை, பிரிந்துவிடலாமா என்றும் தோன்று்வதாகச் சொல்லி கண்கலங்குகிறான். கனகா அவனை அன்புடன் கடிந்து கொண்டு அப்படிச் செய்யக் கூடாது என்று தேற்றுகிறாள்.

தாமதமாகத்தான் வருவேன் என்று சொல்லிச் சென்றிருந்த ஷீலா வீட்டிற்கு வருகிறாள். ஷீலா என்ன சொல்கிறாள்? கனகா ஊர் திரும்புகிறாளா இல்லை அங்கு தங்குகிறாளா? முடிவு என்ன?

இந்த இடத்திலும், ஒருசில  கேள்விகள் எழுகின்றன. மேலேயும் சொன்ன இடத்திலும் இந்த இடத்திலும், வெளிப்படையாகச் சொல்லாமல் மறைவில் வரிகள் இருப்பதை ஊகித்துக் கொண்டாலும், மறைமுகமாகவேனும் ஒரிரு வரிகளைச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. இத்தனைச் சொற்களுக்குள் கதை இருக்க வேண்டும் என்பதால் கத்தரியில் போய்விட்டனவோ?

கதாபாத்திரங்கள் முக்கியமாக ஷீலாவின் கதாபாத்திரத்தை இன்னும் சற்று மெருகேற்றியிருக்கலாம் என்று தோன்றியது.

ஆசிரியருக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

நாடகம் - அகிலன் கண்ணன்

அகிலன் கண்ணான் அவர்களின் பெயரிலிருந்தே யார் என்பதை ஓரளவு ஊகித்துவிடலாம் இல்லையா? ஆமாம் புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்களின் மகனேதான் கண்ணன் அவர்கள். எனவே பின்புலம் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

கதை - நாடகத் துறையில் முன்னோடியாக விளங்கும், அனுபவம் உள்ள சங்கருக்குத் தில்லியிலிருந்து ஃபோன் வருகிறது. தமிழகத்தில் நாடகத்துறையில் திறமைசாலியான சங்கருக்குப் பரிசுகிடைக்க பரிந்துரைக்கப்பட்டதாக. முன்னோடியான சங்கர், தகவலைச் சொல்லும் விஜயன் எல்லாரும் தற்போது சிறப்பாகச் செய்வதாகச் சொல்லி, தன்னைத் தேர்ந்தெடுப்பதை மறுக்கிறார்.  

விஜயன், சங்கர்தான் முன்னோடி, தகுதியானவர் என்று சொல்லி அவரைப் பற்றிய ஒரு குறிப்பையும் எழுதி வைத்துக் கொண்டு மேலும் சில தகவல்களை எல்லாம் கொடுக்கச் சொல்கிறார்.

சங்கருக்குத் தன் குறிப்பைத் தானே எழுதிக் கொடுக்க வேண்டுமா? அது சிறப்பானதா என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு விஜயன், இப்போது நாடகம், கலை இலக்கியம் எல்லாம் மக்களுக்குத் தொலை தூர நட்சத்திரமாகி வருவதையும், பத்ம விருதுக்கே கூட அவங்கவங்கதான் விண்ணப்பிக்கும் அவல நிலையையும் சொல்கிறார்.

விஜயன், சங்கரை கன்வின்ஸ் செய்கிறார். வீட்டிற்கு வரும் சங்கர் தன் மனைவியிடம் இதைப் பகிர்ந்து கொள்கிறார். வீட்டிற்கு இருவர், தில்லியிலிருந்து வருவாங்க, குறிப்புகள் அவர்கள் கேட்கும் தகவலளை எல்லாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனைவியிடம் சொல்கிறார்.

அந்த இருவர் மறுநாள் வருகிறார்கள். அவர்கள் சொல்வதென்ன? அவர்கள் நடந்து கொள்ளும் விதம், கடைசியில் சங்கர் என்ன சொல்கிறார்? இதுதான் கதை.

வந்த இருவருக்கும் சங்கருக்குமான உரையாடல்கள் பகுதிதான் கதையின் கரு மற்றும் முக்கிய அம்சம். அப்பகுதி அருமை. யதார்த்தம். ஆனால் சுடும்.

கதாசிரியர் அகிலன் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! குறிப்பாக விருதுகள் வழங்குதலில் உள்ள உண்மைகளைச் சுட்டிக் காட்டியதற்கு.

குள்ளம் - அழகியசிங்கர்

 

அழகியசிங்கர் அவர்களைப் பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். இலக்கிய வட்டத்தில் பிரபலம். எனக்கும் இணையத்தில் அவரது நவீன விருட்சத்தின் மூலம் பரிச்சயம். இங்கே விவேக் டயலாக்!


குள்ளம் கதை - குள்ளமாக இருக்கும் கஸ்தூரிக்குத் தன் உயரம் (5அடி) குறித்து தாழ்வுமனப்பான்மை. பெண் பார்க்க வரும் ராகவன் 6 அடி உயரம். இவள் 5 அடி உயரம் என்பதால் வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனால் அவனுக்கு இவளுடைய அழகு பிடித்துப் போக, உயரம் பெரிதாகப் படவில்லை. திருமணம் நடக்கிறது.

உயரமாக இருக்கும் கணவனுடன் வெளியே செல்வதில் தயக்கம். ராகவனுக்கு உண்மையான காரணம் தெரியாமல் கோபப்படுகிறான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகக் காரணம் புரிந்து கொண்டு அவளிடம் தனியாகப் பேசி உளவியல் மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போகலாமா என்று யோசிக்கிறான்.

அவன் அவளுடன் பேசி உயரம் பெரிய விஷயமில்லை, நீ அழகு என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறான் ஆனால் அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அவன் விட்டுவிடுகிறான். அவள் அப்பாவிடம் சொல்கிறான். அவள் அப்பாவும் சொல்கிறார் அவளுக்குச் சின்ன வயதிலிருந்தே இருக்கு என்றும் கண்டுகொள்ளாமல் இருந்தால் சரியாகிவிடும் என்று சொல்கிறார்.

கஸ்தூரி தன் அம்மாவிடமும், அம்மா குள்ளமாக இருப்பதைச் சொல்லி எப்படி உயரமான அப்பாவுடன் வெளியில் செல்ல குறையாக இல்லையா என்று கேட்கிறாள். முதலில் இருந்ததென்றும் பின்னர் சரியாகிவிட்டதாகவும், அம்மா சொல்கிறாள். தன்னை ஏன் குள்ளமாகப் பிரசவித்தாள் என்று சண்டை போடுகிறாள். கஸ்தூரிக்குக் குழந்தை பிறந்துவிட்டால் சரியாகிவிடும் என்கிறாள் அம்மா.

கஸ்தூரியும் கருத்தரித்து குழந்தையும் பெறுகிறாள். பெண் குழந்தை. தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறாள்.

அவள் மருத்துவரிடம் என்ன கேட்கிறாள்? மருத்துவர் சொல்லும் பதில் அவளைத் திருப்திப்படுத்தியதா?

கதை அப்படியே முடிகிறது. முடிவு என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எழுத்தாளர் அழகியசிங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

 

 கிருஷ்ணன் எனும் சாரதி - ஹெச் என் ஹரிஹரன்


கதாசிரியரின் எழுத்துப் பணி 1981ல் தொடங்கியதோடு முதல் கதை 1982 ல், ஆனந்தவிகடன் மாணவர் பக்கத்தின் கீழ் வெளிவந்ததாம். 1981 பூபாளம் எனும் கையெழுத்துப் பிரதியின் நிர்வாக ஆசிரியராக இருந்து 1985 ல் அது அச்சுப்பிரதியாகவும் வந்ததாம். அதன் பின் வெகுகாலத்திற்கு நின்றிருந்த பூபாளம் இப்போது 2021ல் இருந்து இரு மாதத்திற்கு ஒருமுறை என்று வெளிவந்து கொண்டிருக்கிறதாம்.

கதை - கதைசொல்லிதான் இக்கதைக்கு சாரதி. கதைசொல்லி, வட இந்தியாவில் பல வருடங்கள் பணிபுரிந்துவிட்டு சென்னையில் வந்து குடியேறுகிறார். தினமும் பழையபடி வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நினைப்பதில் தினமும் பிள்ளையாரைப் பார்த்துவிட்டு வர வேண்டியதும் அடக்கம்.

பிள்ளையார் கோவில் மணி ஒலிக்க, நடை போடுகிறார் கோவிலை நோக்கி. பரிச்சய முகங்கள் தென்பட்டாலும் டக்கென்று யாரென்று யோசனைகள். இங்குதானே இனிமெதுவாகப் பழகிக் கொள்ளலாம் என்று கடந்து செல்கிறார்.

முன்பு ஓலைக் குடிசையில் இந்த பிள்ளையார் தற்போது கொஞ்சம் இடம் மாறி சிறிய விமானங்களுடன் வண்ணப் பூச்சுகளோடு பரிவார சன்னதிகளுடன் மின்னுகிறார்.

அதன் பின்னான, கதைசொல்லியின் உணர்வுகளும் எண்ண அலைகளும் சுமந்து வரும் வரிகள் ரசனையானவை. என் மனதில் அவ்வப்போது தோன்றும் வரிகள் என்பதாலோ என்னவோ ஒன்றி வாசித்தேன்.

தரிசித்துவிட்டு வெளியில் வரும் போதுதான் தேங்காய் உடைக்கவில்லையே என்பது நினைவுக்கு வர அப்பணத்தை அர்ச்சகரின் தட்டில் போட்டதும் நினைவுக்கு வர வேறு பணம் எடுத்துக் கொண்டு வரவில்லை என்பதும் தெரிகிறது.

அவரைப் பார்த்த பூக்காரம்மா அவர் மனதைப் படித்தது போன்று சொல்லிட, அவரும் ஆமோதிக்க, “பரவால்ல வாங்கி விடல போடுங்க நாளைக்கு வரப்ப காசு கொடுங்கஎன்று சொன்னதும்,

நான் யாருன்னே உனக்குத் தெரியாதேமாஎன்று சொல்லி முடிக்கும் முன்,

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உங்களைப் பாக்குறேன். பாப்பாவோட நெதம் கோயிலுக்கு வருவீங்கஅடுத்த தெருதானே….நாந்தான் பொன்னி

அவளை உற்று நோக்கிய போதுதான் அவள் மேசையில் இருக்கும் நீலவண்ணம் பூசிய குழலூதும் கிருஷ்ணன் பொம்மை கண்ணில் படுகிறது,

பண்டு, அவர் பெண், அப்பொம்மையை தரச் சொல்லி அடம் பிடித்து அழுததும், பின்னர் அவர் வேறு ஒரு கடையில் அதை வாங்கிக் கொடுத்து அவள் அழுகையை நிறுத்தியதும் நினைவுக்கு வந்தது, அவளுடன் பேசிவிட்டு வீட்டிற்குச் செல்கிறார்.

மறுநாள் அவளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டதும், ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

மறுநாள் பணத்தைக் கொடுக்கிறார். அப்போது அப்பொம்மையின் கால் உடைந்திருக்க அதற்கு ஒரு கட்டையை முட்டுக் கொடுத்து வைத்திருப்பது தெரிகிறது.

உடைந்த பொம்மையை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்வார்களே என்று பேச்சைத் தொடங்குகிறார்.

அவள் அது ராசியான பொம்மை என்று சொல்கிறாள். பையன் பிறந்தது, அவனுக்கும் கிருஷ்ணன் என்ற பெயர் வைத்தது பற்றிச் சொல்கிறாள்.

அடுத்து ஆசிரியர் சொல்வதும் அதற்கு அவள் சொல்லும் பதிலும் என்னைக் கவர்ந்த வரிகள். இதுதான்.

சாமி பொம்மை உடைஞ்சு போச்சுன்னா அதுக்கு சக்தி போயிருமா சார்? நான் அப்படி நினக்கலை” (கீதாவின் மனசு பேசுது இங்கு!!!!!!)

அதன் பின் அவள் சொல்வது அவளுடைய நம்பிக்கை சார்ந்த மிகவும் உணர்வுபூர்வமான வரிகள். கதையின் ஹைலைட்!

கதையின் தலைப்பை பொருத்திக் கொண்டுவருகிறார் ஆசிரியர்!!!

கதாசிரியர் ஹெச் என் ஹரிஹரன் அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!


கீரோபதேசம் - உஷாதீபன்


உஷாதீபன் அவர்கள் பிரபலமான எழுத்தாளர் என்பதால் அறிமுகம் தேவையில்லை என்று நினைத்துக் கதைக்குச் செல்கிறேன்.

கதாபாத்திரம் சந்திரன் நடைப்பயிற்சி யோகா என்று தங்கள் யோகா மாஸ்டரைப் பற்றிச் சொல்வதிலும், விடியற்காலையில் நடைப்பயிற்சி, யோகா வகுப்பிற்குச் செல்லும் போது நாய்களின் விரட்டலைச் பற்றிச் சொல்வதிலும் கதை நகரத் தொடங்குகிறது. நாய்களின் விரட்டலில் தப்ப வேண்டுமென்றால் விடிந்தபிறகு போகலாமா என்று யோசிக்கிறான். யோகா மாஸ்டர் ரூட்டை மாத்துங்க என்கிறார்.

டப்பென்று காட்சி கீழே வரும் உரையாடல்களுக்கு மாறுகிறது. இந்த ட்ரான்சிஷன் பகுதி எதையோ மிஸ் செய்கிறது போல் தோன்றியது எனக்கு.

கீரை வாங்கலியா ஆள் வர்றாப்புல…! என்று தன் மனைவியிடம் கேட்கிறான் சந்திரன்.

வேணுமா? - சந்தேகத்தோடு திருப்பிக் கேட்கிறாள் அவள்.

என்ன இப்டிக் கேட்கிறே? உன்னோட ரெகுலர் கஸ்டமராச்சே? கரெக்டா வாசல்ல வந்து நிப்பாரே?

அது அப்போ….நாம சென்னைக்கு மாறிப் போனது அவருக்குத் தெரியுமாக்கும்??”

:நாம இங்கிருந்து போன பிறகு கீரைங்கிறதே இல்லாமப் போச்சு…இத்தனைக்கும் கடை கடையா சீரழியுது கீரை அங்கே….நீதான் வாங்க மாட்டேங்கிறே” என்று சந்திரன் சொல்கிறான்

(உரையாடல்கள் கொஞ்சம் குழப்பம். நான் புரிந்து கொண்டது இதுதான் சென்னைக்கு மாறிப் போனவர்கள் மீண்டும் முந்தைய ஊருக்கே வந்திருக்கிறார்கள் என்பதாக. இந்தக் குழப்பம் கடைசியில் வரும் உரையாடல்களில் புரியும்.)

சந்திரன் சொன்னதும், மனைவி அங்கு கிடைக்கும் கீரையைப் பற்றி பெரிய 'பத்தி'யாகக் குறைகள் புராணமே சொல்கிறாள். அப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவள் கீரைச் சத்தம் கேட்டுச்சு ஆனா ஆளைக் காணலையே போய்விட்டாரா என்று.

அப்போது காலையில் தான் நடைப்பயிற்சி செய்யும் போது கீரைக்காரர் அவ்வழியாக மார்கெட் போவதைப் பார்த்ததாகச் சொல்கிறான் சந்திரன்.

கீரைக்காரர் வீட்டு வாசலில் வருகிறார். அப்போது சந்திரனும், வசந்தியும் பேசும் உரையாடல்களில் அவர்கள் இந்த இடத்திற்கு இரண்டு மாசத்திற்கு ஒரு முறை வருவதாகத் தெரிகிறது.

அதோடு வசந்தி கீரை விற்பவரைப் பற்றியும் அன்று அவள் கீரை வாங்குவதில் சந்திரனுக்கு எழும் கேள்விகளும் வசந்தியின் பதிலுமாகக் கதை முடிகிறது.

ஆசிரியர் உஷாதீபன் அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

வேண்டுதல் - மணிகண்டன்

தற்போது அமெரிக்காவில் வசிக்கும் எழுத்தாளர். 16 வயதில் எழுத்தார்வம் வந்திட எழுதத் தொடங்கியவர். பணியில் சேர்ந்தபிறகு இடைவெளி ஏற்பட்டது. அதன் பின் 2017ல் “புத்தகம் மூடிய மயிலிறகு’ என்ற முதல் சிறுகதை உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று 100 சிறுகதைகள் என்று தொகுப்பில் இடம் பெற்றது. குவிகம் குறும்புதினம் இதழில் இவரது குறும்புதினம் ‘முதல் பயணம்’ வெளியாகியது. அதன் மூலம் எனக்கு இவர் எழுத்தில் பரிச்சயம்.

இக்கதை, பணக்கார நாடு என்று பொதுவாக எண்ணப்படும் அமெரிக்காவிலும் வீடற்றவர் படும் அவதி பற்றிய கதை. அமெரிக்காவின் மறுபக்கத்தை, உண்மையைச் சொல்லும் கதை என்பதோடு அப்படி வீடற்ற குடும்பங்களில் ஒன்றில் அம்மா, மகள் இருவரின் பார்வையில் இக்கதையை எழுதியிருக்கிறார்.

சம்பவம் நடக்கும் இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். அரசு ஒதுக்கி இருக்கும் காலி இடங்களில் கூடாரம் அமைத்துத் தங்குபவர்களில் கதையில் வரும் அம்மாவும் மகளு.ம் அடக்கம் அப்படிக் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். ஆனால் ஒரே இடத்தில் பல நாட்கள் தங்க முடியாது. அடிக்கடி இடம் மாறச் சொல்வார்கள். அப்படித் தங்கிய ஒரு குளிர் நாளில், மகள் எமியின் பார்வையில் கதை விரியத் தொடங்குகிறது.

நம்மூரில் ஆங்காங்கே குடிசை போட்டுத் தங்கும் குடும்பங்களைப் போன்ற நிலைதான். அம்மாவின் வருமானம் அன்றாடத் தேவைகளுக்கே பத்தாமல் போகிறது. பல நாட்கள் உணவு இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

எமிக்குப் பள்ளியில் மதிய உணவு கிடைத்துவிடும் என்பதால் பள்ளி விடுமுறை அவளுக்கு வருத்தம் அளிக்கிறது. ஏன் விடுமுறை வருகிறது என்று நினைக்கிறாள்.

அப்படி ஒரு காலி இடத்தில் தங்கியிருந்த போது மீண்டும் அறிவிப்பு இடம் மாற வேண்டும் என்று. “இங்கு கூடாரம் அமைத்து 7 நாட்கள்தான் ஆகிறது அதற்குள் வேறு இடம் மாற வேண்டும் என்பது எத்தனை சிரமம்” என்று அம்மா கெஞ்சுகிறாள். அரசுப் பணியாளர்கள் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார்கள்,

எமிக்கு அதிர்ச்சியாகிறது. 30 ஆயிரம் பவுண்ட் குப்பைகளை அகற்றிய ஒரு இடத்திற்கு மாறச் சொல்கிறார்கள். ஒரு நாள் தாமதமானாலும் 260$ அபராதம் கட்ட வேண்டும். முந்தைய முறை அப்படிக் கட்ட வேண்டியதானது. அந்த ஒரு தினம் ஷெல்டரில் தங்கியிருந்தாலே ஆளுக்கு 30 டாலர்தான் ஆகியிருக்கும் என்று எண்ணுகிறாள் எமி.

அவர்களின் வாழ்க்கையை உண்மையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் கதாசிரியர் மணிகண்டன்.

தற்போது மீண்டும் கூடாரத்தைப் பிரிக்க வேண்டும் என்றால் பள்ளிக்குச் செல்ல  முடியாது. உணவு கிடைக்காது. இப்போது அவர்கள் சொல்லியிருக்கும் அந்த இடம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கிறது. பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. என்றாலும் கூடவே நிறைய கூடாரவாசிகள் இருப்பார்கள் என்பதால் அச்சம் விலகுகிறது. அந்த இடத்திற்குச் செல்கிறார்கள்.

அங்கிருந்த வண்டியில் இருக்கும் காவலரிடம் “ஹோம்லெஸ்” அடையாள அட்டையைக் காட்டி அம்மா கேட்டிட. “இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அநேகமாக நாளை கிடைக்கலாம்” என்று சொல்லிட அதிர்ச்சி. பழைய இடத்தில் மதியத்திற்குள் காலி செய்ய வேண்டும். அதைப் பற்றி எல்லாம் காவலருக்கு என்ன கவலை?

மீண்டும் பழைய இடத்திற்கு வருகிறாள் அம்மா. கூடாரத்தைக் காலி செய்து கொண்டிருக்கும் எமியிடம் சொல்கிறாள், “இன்று ஷெல்டரில்தான் தங்க வேண்டும்” என்று.

ஷெல்டர் கிடைத்ததா? அம்மா, மகளிடம் என்ன சொல்கிறாள்? மகள் எமிக்கு மகிழ்ச்சியா? என்ன பிரார்த்தனை செய்கிறாள்?

அமெரிக்க வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பதிவு செய்த கதாசிரியர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்,  பாராட்டுகள்!

இன்றே இப்படம் கடைசி - அறிவுச் செல்வன்

அறிவுச் செல்வன் அவர்களின் தாய்மாமன் மரபுக் கவிஞர். தாத்தா தீவிர வாசகர். ஆசிரியருக்கும் 8 வயதிலேயே நூலக அறிமுகம் . இவைதான அவரை எழுத்தாளராக்கியது என்று சொல்கிறார். பத்திரிகைகளில் அதிகம் எழுதியதில்லையாம். ஆனால் இருபது நூல்கள் வெளியிட்டுள்ளார்.

கதை, இன்றே இப்படம் கடைசி - எழுத்தாளர் சுஜாதா சொல்லியதுண்டு, கதையின் தலைப்பு கதைக்குள் இருப்பதைச் சொல்லக் கூடாது என்று. அந்த பாணியிலான தலைப்பு.

இப்போது 50, 60 வயதுக்கு மேலாக இருப்பவர்கள் எல்லோரது நினைவிலும் பசுமையாக இருக்கும் ஒன்று, சிறுவயதில் புதுப்படத்திற்கான அறிவிப்பு வரும் விதமும், பிட் நோட்டீஸும், படத்தின் கடைசி தினம் “இன்றே இப்படம் கடைசி” என்று பிட் நோட்டீஸ் பறக்க விடுவதும், மாட்டு வண்டி இல்லையென்றால் தள்ளு வண்டி போல உருட்டிக் கொண்டு சத்தத்துடன் அறிவித்துக் கொண்டே வருவதுமான நிகழ்வுகள்.

அந்த நிகழ்வுகளில் தொடங்குகிறது. 5 ஆம் வகுப்பு படிக்கும் லோகநாதன் அந்த பிட் நோட்டீஸ்களில் கொஞ்சம் கைப்பற்றி எதிர்கால ஹீரோ கனவுடன் வீட்டிற்கு வருகிறான். கதைசொல்லி இவற்றை எல்லாம் விவரிக்கிறார்.

இது ஃப்ளாஷ்பேக். அடுத்து தற்போதைய நிகழ்விற்கு வருகிறது கதை.

ஃப்ளாஷ்பேக்கும் தற்போதைய நிகழ்வுமாக மாறி மாறி நகர்கிறது கதை.

தற்போது அப்பா சிவப்பிரகாசம் மிகப் பெரிய கவலையில் இருக்கிறார். விவசாயக் குடும்பம். “எப்போதுமே கடன் கேட்டுப் பிறரிடம் கைநீட்டுவதில்லை” என்கிற இவரது உறுதிப்பாட்டின் உச்சந்தலையில், பெற்றமகன் அண்மையில் அடிக்கடி கொள்ளி வைத்துக் கொண்டிருக்கிறான். “பெரிய வீட்டுக்காரர்” என்ற இவரது கௌரவத்தைத் தனக்குப் பின் மகன் காப்பாற்றுவானா என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது. இதை எல்லாம் பார்க்க தன் மனைவி இல்லை, “நல்ல வேளை புண்ணியவதி மகன் படுத்தும் கொடுமைகளைப் பாக்காம போய்ச் சேர்ந்துட்டா” என்று நினைத்துக் கொள்கிறார்.

மகனால் வைக்கப்படும் செலவுகள். கடன் கொடுத்தே பழகிய தலைமுறைகள். இப்போது கடன் வாங்கும் நிலை என்றாகியதை நினைத்துச் சங்கடப்படுகிறார். ஏற்கனவே மூன்று முறை வாங்கியது வேறு சங்கடப்படுத்துகிறது. இப்போது கடன் வாங்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்கிறார்.

ஃப்ளாஷ்பேக்…

சிறுவயதில் தான் பார்க்க விரும்பும் படத்தின் “இன்றே இப்படம் கடைசி” என்ற அறிவிப்பு வந்ததும் அப்பாவிடம் சொல்வதும் அவர் ஞாயிறு அன்று போகலாம் என்று சொல்லிட, அந்த ஞாயிறு எப்படா வரும், அதுவரை படம் ஓடுமா என்ற பயத்துடன் ஏக்கத்துடன் பிரார்த்திக்கும் சிறுவன் லோகநாதன்.

அடுத்து தற்போதைய நிகழ்வு.

மறுபடியும் உள்ளூர்க்காரர்களிம் போய் நிற்க சிவப்பிரகாசத்திற்கு என்னவோ போலிருக்கிறது. தன் தம்பியை அணுகுகிறார், தன் பேரன் காதுகுத்திற்குப் பணம் கேட்டு. தம்பி அவமானப்படுத்துவதோடு, கடன் பணம் கொடுக்க அண்ணனின் வீட்டுப் பத்திரம், ப்ரோநோட்டு என்றெல்லாம் பேசிட நொறுங்கிப் போகிறார் சிவப்பிரகாசம்.

அவர் மனதில் பளிச்சென்று ஒரு ஐடியா. அவர் எடுக்கும் முடிவு என்ன?

மிக அழகாகக் கதையை எழுதியிருக்கும் கதாசிரியர் அறிவுச்செல்வன் அவர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! 

**********  xxxxxxxxxx  *********  xxxxxxxxxx *********** xxxxxxxxx ********** xxxxxx

ஹப்பா! ஒருவழியாக 35 கதைகளையும் என் பார்வையில் சொல்லி முடித்துவிட்டேன்! இப்போது கதைகளைப் பற்றிய பொதுனான பார்வை.

கதைகளில் சில என்னை மிகமிகக் கவர்ந்தன. கருவும் எழுத்து நடையும்.  அழகாகப் பிசிறில்லாமல்  கத்தரி போட்டு உணர்வுகளோடு அருமையாக எழுதப்பட்டிருந்தன. சில கதைகள் நன்றாக எழுதப்பட்டிருந்தாலும், இத்தனைச் சொற்கள், நேர்மறை முடிவு என்பதற்கு உட்பட்டு எழுதப்பட்டவையாகத் தோன்றியது. சில கதைகளில் ஓரிரு பத்திகளை, “Sermon” போன்றில்லாமல் இயல்பாகச் சொல்லியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

முதல் பரிசு இரண்டாம் பரிசு என்று இரு புத்தகங்களாக வெளிவந்ததில், சில கதைகள் இடம் மாறியிருக்க வேண்டுமோ என்பது என் தனிப்பட்டக் கருத்து.

பரிசு பெற்ற எல்லோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!


புத்தகங்களுக்கு, திரு இராயசெல்லப்பா சாரை அணுகலாம்.

இதுவரை பொறுமையாக வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. 

------ கீதா


26 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வழக்கம் போல போட்டியில் பங்கு பெற்ற இறுதி ஏழு கதை களுக்கும் நல்ல அலசல். முதல் கதை நன்றாக செல்கிறது. பிணக்கு கொள்ளும் கணவன் மனைவி இருவரும் அவருடைய அம்மாவால் இறுதியில் சேர்த்து வைக்கப்படுகின்றனரா ? என்பதை அறிய ஆவல் ஏற்படுகிறது. அதற்கு இந்த புத்தகங்கள் வாங்க வேண்டுமென ஆவல் பிறக்கிறது. வாங்கப் பார்க்கிறேன். நல்லதோர் கதை விமர்சனங்களுக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளை வாசித்தால்தான் நான் சொல்லியிருப்பது ம் வாசிப்பவர்களின் பார்வையில் படுவதும் வேறுபடலாம்.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    நன்கு விபரமாக கதைகளைப்பற்றியும், அதை எழுதிய ஆசிரியர்களைப் பற்றியும், கதைகள் சம்பந்தப்பட்ட தங்களின் எண்ணங்களைப் பற்றியும் அழகாக விவரித்துள்ளீர்கள். ஒவ்வொரு கதையின் முடிவுகளையும் ஓரளவு ஊகிக்க முடிகிறது. ஆனால், கதை எழுதியவர்களின் கற்பனைகள் வேறு விதமான முடிவுகளை சந்தித்திருக்கும். ஆக புத்தகங்களை வாங்கி படித்தால்தான் இந்த சந்தேகங்கள் விலகும். நீங்களும் கதைகளை அழகாக விமர்சித்து வாங்கும் ஆவலை தூண்டி விட்டு விட்டீர்கள். உங்கள் திறமையான விமர்சனங்களுக்கும், கதைகளை சிறப்பாக எழுதிக் யிருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா கதையின் முடிவுகளை ஊகித்துவிடலாம்.

      கதை எழுதியவர்களின் கற்பனைகள் ஒருவிதம் என்றால் வாசிப்பவர்களின் கற்பனைகளும், பார்வையும் வேறுபடலாம்.

      திறமையான விமர்சனங்கள் என்று சொல்வதற்கில்லை, கமலாக்கா. இன்னும் மெருகேற்றி எழுதியிருக்கலாம், என்று என்னை நானே மதிப்பிட்டுக் கொண்டேன் வெளியிட்ட பிறகு.

      ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டும் எல்லோருமே நல்லா எழுதியிருக்காங்க. குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் எழுதுவது என்பது திறமை. எனக்குக் கைவராத ஒன்று.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  3. உண்மையில் பெரிய பணி கீதா. அழகாக சொல்லி இருக்கிறீர்கள். 35 கதைகளையும் அழகாக அலசி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். இது ஒரு பயிற்சி போலதான் செய்தேன். இன்னும் எப்படி எழுதலாம்னும் யோசனைகள் வந்தன. இன்னும் கொஞ்சம் நல்லா எழுதலாம்னும் தோன்றியது, ஸ்ரீராம்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. ஸ்ரீமதி ரவி என்கிற ரவிதான் க்ளிக் ரவி என்றால் அவர் கேஜிஜியின் நண்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா!

      அவர் க்ளிக் ரவி என்றுதான் அவரைப் பற்றிய குறிப்புகளில் இருக்கிறது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. ஏன் பதிவுத்திருமணம்? ஓரிரு வரிகளேனும் சொல்லியிருக்கலாமோ? //

    திருமணம் பதிவு செய்யப்பட்டால் தான் வெளிநாடு செல்ல முடியும்.
    அமெரிக்கா போனவுடன் அவள் வாழ்க்கை முறை மாறி இருக்கும் அதனால் கருத்து வேறுபாடு வந்து இருக்கும். கணவனின் ஏழ்மை நிலையை குத்தி காட்டி கொண்டு இருந்து இருப்பார் ஷீலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா பதிவுத்திருமணம் செய்தால்தான் செல்ல முடியும். ஆனால், அதுவல்ல கேள்விகள், பணக்காரப் பெண்...பெற்றோர் பற்றி எதுவும் இல்லை...

      அவள் வாழ்க்கை முறை மாறி இருக்கும் அதனால் கருத்து வேறுபாடு வந்து இருக்கும். கணவனின் ஏழ்மை நிலையை குத்தி காட்டி கொண்டு இருந்து இருப்பார் ஷீலா.//

      கதையில் அது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மறைமுகமாக நாம் ஊகித்துக்க் கொள்ள வேண்டியதுதான். அதிலுமே எனக்கு சில கேள்விகள் எழுந்தனதான்...

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. //வந்த இருவருக்கும் சங்கருக்குமான உரையாடல்கள் பகுதிதான் கதையின் கரு மற்றும் முக்கிய அம்சம். அப்பகுதி அருமை. யதார்த்தம். ஆனால் சுடும்.//

    நடைமுறையை சொல்லி இருப்பார்கள். உண்மை சுடும் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நடைமுறையைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அதுதான் நடக்கவும் செய்கிறது. நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  7. //அது அப்போ….நாம சென்னைக்கு மாறிப் போனது அவருக்குத் தெரியுமாக்கும்??”//

    //கீரைக்காரர் அவ்வழியாக மார்கெட் போவதைப் பார்த்ததாகச் சொல்கிறான் சந்திரன்.//

    சென்னைக்கு அந்த ஊர் கீரைக்காரர் வந்து விட்டாரா! ஆச்சரியம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் சென்னைக்குப் போனாலும் கதையில் சொல்லப்படும் இடத்திற்கு வந்து இருந்துசெல்வதாகக் கதையில் பின்னால் தெரிகிறது. எனக்கும் சில குழப்பங்கள் இருந்தது கதையில். கீரைக்காரர் சென்னைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இது பழைய இடத்தில் அதே கீரைக்காரர். எல்லாம் கதையை மீண்டும் மீண்டும் வாசித்துப் புரிந்து கொண்டதுதான்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. /ஷெல்டர் கிடைத்ததா? அம்மா, மகளிடம் என்ன சொல்கிறாள்? மகள் எமிக்கு மகிழ்ச்சியா? என்ன பிரார்த்தனை செய்கிறாள்?//

    எமிக்கு பள்ளியில் உணவு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சியோ!

    வீடு இல்லாதவர்கள் நிலை மோசம் தான். பணி இடங்கள் மாறும், அப்போ தங்கும் இடங்களும் மாறும் தான் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமிக்குப் பள்ளியில் உணவு கிடைப்பதால் மகிழ்ச்சிதான். ஆனால் முடிவில் அவள் பிரார்த்தனை வேறு.

      ஆமாம் இங்கும் அப்படித்தானே கோமதிக்கா...இல்லையா.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. அவர் மனதில் பளிச்சென்று ஒரு ஐடியா. அவர் எடுக்கும் முடிவு என்ன?

    சிறுவன் லோகநாதன் தான் சிவபிரகாசத்தின் தம்பியோ ? அப்போது படம் பார்க்க உதவி இருப்பார் சிவப்பிரகாசம் என்று நினைக்கிறேன் தம்பியிடம் பழைய கதையை நினைவு படுத்தி பணம் வாங்கி விடலாம் என்ற நினைப்புதான் மனதில் பளிச்சென்று வந்த ஐடியாவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைக்கா லோகநாதன், சிவபிரகாசத்தின் மகன் என்றுதான் தோன்றுகிறது. அவனுக்குத்தான் படம் பார்க்கும் ஆர்வம்.

      கதை வேறு மாதிரி போகும் கோமதிக்கா.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. கதை விமர்சனம் அருமை. படிக்க ஆவலை ஏற்படுத்தியது உண்மை கீதா, வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தங்களது விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.

    நூலை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது

    ஆசிரியர்களுக்கு எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. ​திறனாய்வுகள் நன்றாக உள்ளன. அடுத்த வாரம் எ பி 'நான் படிச்ச கதை' சனி பதிவு நீங்கள் எழுதுங்களேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊக்கம் கொடுக்கும் கருத்துக்கு முதலில் நன்றி சொல்லிவிடுகிறேன். எழுதும் ஆர்வம் உள்ளது ஜெ கே அண்ணா. கொஞ்சம் டைம் வேண்டும்.

      இப்ப ஒரு சில பணிகள் இருக்கின்றன அதை முடிக்க வேண்டும். அடுத்து, சுட்டி கொடுப்பது போன்றான கதைகளை வாசிக்க வேண்டும்.

      இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது ஜஸ்ட் விற்பனையில் இருக்கும் புத்தகங்களுக்கான விமர்சனம் போன்று.

      நான் படிச்ச கதைக்கும் கிட்டத்தட்ட இது போன்று என்றாலும் பொதுவெளியில் இருப்பவை என்பதால் கொஞ்சம் ஸ்லைட்டாக மாற்றி சுட்டியும் கொடுத்துவிடலாம்.


      அண்ணா நீங்க நான் படிச்ச கதையில் நல்ல நினைவுத்திறனுடன் சில கதைகளை அழகாக ஒப்பிட்டும் கூடச் சொல்வீங்க. ஒரே கருவில் எழுதப்பட்ட கதைகளை...

      எழுத நினைத்துள்ளேன். ஆனால் இந்த வாரம் எழுதுவதுசிரமம்.

      நன்றி ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
  13. ​திறனாய்வுகள் நன்றாக உள்ளன. அடுத்த வாரம் எ பி 'நான் படிச்ச கதை' சனி பதிவு நீங்கள் எழுதுங்களேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பதிவுகள் எழுதுவதற்கு பெண்டிங்க் இருக்கின்றனவே!! அதுவும் படங்கள் எல்லாம் இருக்கே. போடணுமே! அதையும் எழுத வேண்டுமே, அண்ணா....ஹாஹாஹா....

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு