வியாழன், 6 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 1

2013 லிருந்து செல்லப்பா தமிழ் டயரி மற்றும் இமயத்தலைவன் என்று இரு தளங்களில், (முன்னதில் அன்றாட நிகழ்வுகளையும், பின்னதில் இலக்கியமானவைகளையும்) எழுதி வரும் பதிவர், எழுத்தாளர் திரு இராயசெல்லப்பா அவர்களை நாம் எல்லோரும் அறிவோம். Subtle Humour என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நுட்பமான நகைச்சுவை எழுத்தும் பேச்சும் இவருக்கு வசப்பட்ட கலை.

செல்லப்பா ஸாரின் அன்புத் தாயார் ஸ்வர்ணாம்பாள் அவர்களுக்கும், செல்லப்பா சார் அவர்களுக்கும் இடையே புத்தகங்களும் வாசிப்பும் ஏற்படுத்திய மெல்லிய நுட்பமான அந்தப் பாசப் பிணைப்பு, அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 2024 ஆம் ஆண்டு அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி நடத்த உத்வேகம் கொடுத்திருக்கிறது.  

ஊடகங்களில் பெயர் பெற்ற பிரபல எழுத்தாளர்களும், நம் பதிவர் நண்பர்களும் போட்டியில் பங்கெடுத்ததனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று வழங்கப்பட்டது. அதில் நம் பதிவர் நட்புகள் ஜீவி சார், எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், பரிவை சே குமார், திரு ஹரணி அவர்களும் பரிசு பெற்றிருப்பது மகிழ்வான விஷயம்.

இதை நம்ம நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் எங்கள் ப்ளாக் தளத்தில் பகிர்ந்ததோடு நிகழ்வைப் பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தார். நீங்களும் வாசித்திருப்பீர்கள். வாசிக்காதவர்கள் இந்தச் சுட்டிகளுக்குச்  சுட்டி 1 - சுட்டி 2  சென்று வாசிக்கலாம்.

போட்டியில் வென்ற கதைகளை இராய செல்லப்பா சார் அவர்கள் அச்சுப்பிரதிகளாகவும் கொண்டு வந்திருக்கிறார் என்பது வென்றவர்களுக்கு அதுவும் முதன் முறை வென்றவர்களுக்குத் தங்கள் எழுத்தை அச்சில் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மொத்தம் 35 கதைகள். இரு புத்தகங்களாக வெளியிட்டுருக்கிறார், செல்லப்பா சார்.

எல்லாக் கதைகளுமே நல்ல கதைகள்தான் அதானால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. 

புத்தகங்களை வாங்கி வாசிக்க நினைப்பவர்கள் செல்லப்பா சாரை - +91 96001 41807 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

வெற்றி பெற்ற 35 கதைகளை, நான் 7 x 5 ஆகப் பிரித்து இங்கு தருகிறேன். இப்பதிவில் 7 கதைகள். 

வாசித்தவற்றை நான் குறித்துக் கொண்டதன் அடிப்படையில் இங்கு வரிசையில் தருகிறேன் அல்லாமல் மதிப்பீட்டின் அடிபடையில் அல்ல, என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இனி என் பார்வையில் கதைகள்...

அறம் செய்ய விரும்பு - சாந்தி சந்திரசேகரன்

குடும்ப உறுப்பினர் அந்தஸ்துடனும் பாசப்பிணைப்புடனும் இருக்கும் "பட்டு". கர்ப்பிணியாய் இருக்கும் பட்டுவிற்கு வலி எடுத்ததும், தன் மகளுக்குப் பிரசவம் பார்ப்பது போன்ற பரவசத்துடன் பார்க்கும் ரத்தினம்மாளுக்குத் திருமணமான புதிதில் கிடைத்த முதல் பந்தம் இந்தப் பட்டுதான். கணவன் மறைந்த பிறகு ரத்தினம்மாளுக்கு மகளும், மகனும் இந்தப் பட்டுவும்தான். மகள் படித்துவருகிறாள். மகன் தறுதலையாகக் குடித்துத் திரிகிறான்.

திடீரென்று பட்டு காணாமல் போகிறாள். குடும்பமே கலவரட்டுப் போகிறது. பட்டு யார்? பட்டுவிற்கு என்ன ஆகிறது, எப்படிக் காணாமல் போகிறாள்? காரணம் என்ன என்பதை, கதாசிரியர் சாந்தி சந்திரசேகரனின் உணர்வுபூர்வமான வரிகளோடு ஒன்றி அனுபவிக்க முடியும். கதையின் கருவும் எழுதப்பட்ட விதமும் மிக அருமை. ஆனால்.....

கதையில் இறுதியில் மட்டும் ஏதோ புகுத்தப்பட்டது போன்ற உணர்வு தோன்றியது. ரத்தினம்மாளின் மகன் தன் நண்பனுக்கு அறிவுரை சொல்வதாக அமைந்துள்ளதைத் தவிர்த்திருக்கலாம்.

முதலில் முடிவு வேறொன்று எழுதியிருந்ததாகவும், போட்டிக்கு அனுப்பிய பிறகு முடிவு மட்டும் மாற்றித் தந்தால் நல்லது என்று சொல்லப்பட்டதாகவும் அதனால் மாற்றிக் கொடுத்ததாகவும் அறிய நேர்ந்தது. முதல் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்று என் மண்டை குடைகிறது! அறிய ஆவல்.

அழகான கதை கொடுத்த சாந்தி சந்திரசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!


விடுதலையின் தூரம் - சு ரகுநாத்

மிக அருமையான கதை என்பதோடு எழுதப்பட்ட விதமும் அருமை. 'கொட்டாச்சி' என அழைக்கப்படும், கதை சொல்லியின் சித்தப்பா ஒரு நாள் காணாமல் போகிறார். அவர் வந்துவிடுவார் என்று குடும்ப உறுப்பினர்கள் நினைக்க, கதை சொல்லி தன் சித்தப்பாவைத் தேடுகிறார். சித்தப்பா எப்படிப்பட்டவர்? மற்ற குடும்ப உறுப்பினர்களின் மனநிலை என்ன?

கதை சொல்லி தன் சித்தப்பாவை ஏன் தேடுகிறார். கண்டுபிடித்தாரா? முடிவுக்கு முன்னான பத்திகளை வாசிக்கும் போது கதாசிரியர் கதையை எப்படி முடிக்கப் போகிறார்? இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே... என்று என் மனதில் தோன்றிய அதே முடிவுதான் கதை சொல்லியின் மன ஓட்டத்தின்  முடிவும்!! சித்தப்பாவின் மீதான அன்பும் கருணையும் வெளிப்படும் வரி! நியாயமான முடிவு! வாவ்! சபாஷ் என்று சொல்லிக் கொண்டேன். என்னை அல்ல கதாசிரியரை, அந்த முடிவை! அது என்ன முடிவு?

மிக அழகான ஒரு கதையைத் தந்த திரு சு ரகுநாத் அவர்களுக்கு  மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!

 

வழித்துணை - இந்திரநீலன் சுரேஷ்

எழுத்து ஊடகத்தில் உங்களில் பலருக்கும் பரிச்சயமானவர். 

"அப்பா, கோகிலாம்மா வீட்டுத் தோட்டம் மாதிரி நாம கட்டப் போற இடத்திலயும் நிறைய தென்னை மரம் வைக்கணும்"

அப்பாவிற்கு அதை எப்படிப் பராமரிப்பது என்றிருக்க அம்மாவோ "ஏங்க பணம் சேர்த்துதானே வீடு கட்டப் போறோம் இப்பவே தென்னங்கன்னு வச்சுவிடுங்களேன், கொழந்தை ஆசைப்படுது"

அப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கி நட்டு வளர்த்த தென்னை மரங்களோடு, வீட்டோடு, தன் குடும்பமே உறவாடிய உணர்வு ரீதியான பாசத்தின் நினைவுகளை அப்பாவாகிய சிவராமன் தன் சிறு வயது முதலான நினைவுகளை முகம் தெரியாத உருவத்தோடு பேசுகிறார். அதுதானே கேட்டுக் கொண்டிருக்கும்!

"எப்பெல்லாம் விருட்சத்துக்குத் தண்ணி ஊத்தறோமோ அப்பெல்லாம் நம்ம பாவக்கணக்கு குறையும்டா ராசா" என்பாள் அப்பத்தா.

பாவக்கணக்கிற்கு எல்லாம் அப்பாற்பட்ட அந்தப் பாசம். சிவராமனுக்குக் கண்ணில் நீர்த்துளிகள். ஏன்? அந்த நீர்த்துளிகளில் தென்னை மரத்தின் தேங்காய்களின் நீரும் உழைப்பும், உறவுகளும் நினைவுகளும் கலந்திருந்ததாலும் இருக்கலாம். சிவராமனின் மகன் எடுக்கும் முடிவு? வாசிக்கும் நமக்கும் சிவராமனுக்கு ஏற்படும்  உணர்வு ஏற்படுகிறது. கதை எப்படி  முடிகிறது? 

கதையை இப்படித்தான் செல்லும் என்று எளிதாக ஊகிக்க முடிகிறது என்றாலும் அழகான கதை.

எழுத்தாளர் திரு இ்ந்திரநீலன் சுரேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!

 

மார்ட்டின் வாத்யார் - எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்

நம்ம நண்பர் ஸ்ரீராம்!

கதைசொல்லியின் எண்ணங்களில் நகரும் கதை. மார்ட்டின் வாத்யாரின் மரணத்திற்குச் சென்ற போது அங்கு வரும் நண்பர்களைப் பற்றிச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது கதை. கதைசொல்லியின் மனதில் மார்ட்டின் வாத்யார் மீதிருந்த மரியாதையும், அன்பும், உணர்வுகளாய் விரிகின்றன. இலை மறை காயாய், நுட்பமான பந்தம். அருமையாகச் சொல்லிச் செல்கிறார், நம்ம எழுத்தாளர்.

//இளங்கோ, ஸாருக்கு தத்துப் பிள்ளை மாதிரி.//

இந்த வரியில் கதை சொல்லியின் ஒரு ஏக்கம் வெளிப்படுகிறது. கதை சொல்லியின் பள்ளிப் பருவத்தில் அப்போது தெரியவில்லை மார்ட்டின் வாத்யாருக்குத் தன் மீதும் அன்பு அக்கறை இருந்திருக்கிறது என்பது. பயமும், தான் நன்றாகப் படிக்கவில்லை என்ற தாழ்வுமனப்பான்மையும் காரணங்கள்.

என்றாலும் கதைசொல்லிக்கு வாத்யார் ஓரு ஹீரோ! பள்ளிப் படிப்பு முடிந்து வெளியில் வந்த பிறகும் மார்ட்டின் வாத்யாருடனான தொடர்பு அவரை அவ்வப்போது சைக்கிளில் வீட்டிற்குக் கொண்டு விடுவதில் தொடர்கிறது. கதை சொல்லியின் வாழ்க்கை உயர உதவுகிறார், வாத்யார். நிஜமாகவே ஹீரோதான்! இப்படி நம்மோடு தனிப்பட்ட உறவாக இருந்த ஆசிரியர்கள்! 

மார்ட்டின் வாத்யாரின் உதவியோடு உருவாகும் சைக்கிள் கடையின் பெயரும் மார்ட்டின் சைக்கிள் மார்ட்! அது சரி கதை சொல்லி என்றே சொல்கிறேனே கதை சொல்லிக்குப் பெயர் இல்லையா? உண்டு. அது வெளிப்படும் இடம் 'நல்ல உத்தி!' என்று சொல்ல வைக்கும். அதில் ஒரு விஷயமும் உண்டு! வாசிக்கும் போதுதான் புலப்படும்.

மார்ட்டின் வாத்யார் கிளம்புகிறார்! சரி இனி அவ்வளவுதான்... நினைவுகளில்தான் அவரோடான பந்தம் என்று கதைசொல்லி நினைக்கும் தருவாயில், இல்லை அது முடியவில்லை தொடர்கிறது என்று சொல்லும் வகையிலான முடிவு எதிர்பாராத ஒன்று! மனதைத் தொடும் முடிவு. எப்படி அந்த மானசீகமான பந்தம் தொடரப் போகிறது?

கதை, நம்மையும் நம் ஆசிரியரோடான நினைவுகளுக்கு இட்டுச் செல்லும்.

எழுத்து நடை, மற்றும் தேவையில்லாத வார்த்தைகளுக்குக் கத்தரி போட்டு எழுதிய விதம்!!!!!

வாழ்த்துகள்! பாராட்டுகள்! ஸ்ரீராம்.


இரப்பன் - பரிவை சே குமார்

நாம் எல்லோரும் அறிந்த நம் நட்புதான். பரிவை சே குமார்.

குமாரின் கதை என்று சொல்லிவிடலாம்! அக்மார்க்! கதாபாத்திரம் மதியழகன், மதுரை பஸ் ஸ்டாண்டில் தன்னிடம் கையேந்தும் ஒரு முதியவரை முதலில் புறக்கணிக்கிறான். இப்படியானவர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள் என்ற பொதுவான எண்ணத்தில்.

ஆனால், அவரின் பேச்சும் தோற்றமும் அவன் மனதுள் சிறு சலனத்தை ஏற்படுத்துகிறது. சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறான். அவருடைய சில செய்கைகளால் அவனது தந்தையை நினைவூட்டுகிறார் அந்த முதியவர். அவர் தன் நிலையைச் சொல்கிறார். பேரனுக்கும் தனக்குமான அன்பையும் சொல்கிறார்.

எல்லா வீடுகளிலும் நடப்பதுதான் என்று அவர் மனதிற்கு ஆறுதல் சொல்லி, 'வீட்டில் உள்ளவர்கள் தேடுவார்கள், வீட்டுக்குப் போங்க' என்று கையில் காசும் கொடுத்து பஸ்ஸில் ஏற்றிவிடுகிறான். அப்போது அவன் மொபைலில் ஒரு மெசேஜ் வருகிறது. அது என்ன? அதிலிருந்து வாசிக்கும் நமக்குத் தெரிவது என்ன?

குமாரின் எழுத்து நடை இயல்பான ஒன்று. நம்மிடம் நம் அருகில் உள்ளவர் கதை சொல்வது போன்று பயணிக்கும். இரப்பனும் அப்படியே நம்முள் வந்து செல்கிறார்!

வாழ்த்துகள்! பாராட்டுகள்! குமார்.


மகாராணி அவனை ஆள்கிறாள் - ஜீவி

மீண்டும் நம் எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளர்.

கதை சொல்லியின் வார்த்தைகளில் கதை நகர்கிறது. ஓட்டலில் காஃபி குடிக்கச் செல்லும் கதாபாத்திரம் ஓட்டலில் இருக்கும் அறிவுப்புகளைப் பார்த்து 'பணிவே இல்லாத அதிகாரப் பதப்பிரயோகங்கள்' என்று தனக்குள் நினைக்கும் போதே கதாபாத்திரத்தைப் பற்றி நமக்குப் புரியத் தொடங்குகிறது.

எதிரில் வந்தமர்பவர் கதர்சட்டைக்காரர். தன்னைப் போன்றே காஃபி ஆர்டர் செய்ததும் அவருடன் ஒரு அன்யோன்யம் ஏற்படுகிறது. அவருக்கு வந்த காஃபியோ அவர் கேட்டிருந்த ஸ்ட்ராங்க் காஃபிக்கு நேரெதிராக வருகிறது. கதை சொல்லிக்கு, அவர் சர்வரை அழைத்துக் கேட்காதது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்குள் உரையாடல் தொடங்குகிறது. ஏன் கேட்கவில்லை என்பதற்கான, கதர்சட்டைக்காரரின் வரிகள் யதார்த்தம்.

பில்லிற்கான பணம் கட்டிவிட்டு வெளியில் வரும் போது எதிர்ப்படுபவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தவதிலிருந்துதான், எதிரில் இருந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி சண்முகசுந்தரம் என்று கதைசொல்லி அறிகிறார். ஓட்டலில், அவர் தன் அதிகாரத்தை உபயோகித்து மீண்டும் தான் விரும்பிய காஃபியை வாங்கவில்லையே என்று கதை சொல்லி நினைக்கும் போது சாதாரண குமாஸ்தாவான நம்ம கதை சொல்லிக்கு அவரது அலுவலக அதிகார தோரணைகள் நினைவுக்கு வந்து  மனதிற்குள்ளேயே புலம்ப வைக்கின்றன.

அதன் பின்னான வரிகள் தான் கதையின் ஜீவன்!

ஒரு குழந்தை வளர்க்கப்படுவதின் பின்னணியின் பாதிப்பு அது பின்னால் வளர்ந்து தனிமனிதனாகும் போது எப்படி வெளிப்படுகிறது, எப்படியான மனிதனாய் அப்பின்னணி உருவாக்குகிறது என்ற அழகான மனரீதியான விஷயத்தின் வெளிப்பாட்டை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகக் கதைசொல்லியின் மனதின் மூலம் சொல்கிறது கதை. அதை வாசிக்கும் போதுதான் உணர முடியும், தலைப்பின் பொருள் எப்படி இயைந்து போகிறது என்று.

வாழ்த்துகள்! பாராட்டுகள்! ஜீவி அண்ணா!


பின்னணி நட்சத்திரம் - பத்மினி பட்டாபிராமன்

பல பரிசுகள் வென்ற பெரிய எழுத்தாளர். எழுத்து மற்றும் தொலைக்காட்சி ஊடக அனுபவங்கள்  உள்ளவர் என்பது கதையில் பளிச்சென்று தெரிகிறது. கதையின் கதாபாத்திரமான யசோதாவின் பேட்டி வழியே கதை பயணிக்கிறது. யசோதாவின் திருமணத்திற்கு முன்னான வாழ்க்கை, திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை, எப்படி டப்பிங்க் ஆர்ட்டிஸ்டாக உருவானார் என்பதெல்லாம்  பேட்டியின் இடை இடையே முந்தை நினைவுகள், தற்போதையது என்று மாறி மாறி வருகிறது. கதையின் முடிவு நன்று என்றாலும் ஊகித்துவிடலாம்.

கதை முடிந்த பின்னும் ஓரிரு பத்திகள் இல்லாமல் இருந்திருந்தால் நச் என்று இருந்திருக்கும். அவை தேவையில்லாமல் புகுத்தப்பட்டது போன்ற எண்ணம் தோன்றுகிறது. ஏனென்றால், கதை அதற்கும் முன்னே முடிந்துவிடுகிறது என் பார்வையில்.

இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக எழுதியிருந்திருக்கலாமோ என்று தோன்றியது. ஒரு பெரிய எழுத்தாளரின் கதையை ஒன்றுமே இல்லாத நான் இப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒரு வேளை அவரைப் பற்றி வாசித்ததனால் எழுந்த எதிர்பார்ப்பாக இருக்கலாம்....

வாழ்த்துகள்! பாராட்டுகள்! பத்மினி பட்டாபிராமன் அவர்களுக்கு.

சரி, அடுத்த ஏழு கதைகளைப் பற்றிய என் பார்வை இன்னும்  3, 4 நாட்களில் வருமென்று நினைக்கிறேன்!  

தொடரும்...


...கீதா

6 கருத்துகள்:

  1. அழகிய முயற்சி கீதா.  அநேகமாக 35 கதைகளையும் படித்து முடித்த முதல் ஆள் நீங்களாக இருப்பீர்கள்.  நானே இன்னும் கூட  சில கதைகள்தான் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகள் கொடுத்த எல்லோருக்கும் நன்றி. நாளை காலை எல்லோருக்கும் பதில் தருகிறேன். இப்ப கொஞ்சம் வேலைப்பளு.

      கீதா

      நீக்கு
  2. அழகாக விமர்சித்திருக்கிறீர்கள்.  நறுக்கு தெறித்தாற்போல, அல்லது பட்டு கத்தரித்தாற்போல என்பார்கள்.  அப்படி சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். 

    பதிலளிநீக்கு
  4. எல்லா கதைகளையும் படித்தவர்கள் உங்கள் விமர்சனத்தை நன்றாக அனுபவித்து புரிந்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களது எண்ணவோட்டங்களை அழகாக தந்துள்ளீர்கள். சகோதரர் செல்லப்பா சார் அவர்களுக்கும் அவர் தாயுக்குமான பாச பிணைப்பை விவரித்த விதத்தை ரசித்தேன்.

    இந்த மாதிரி தாயின் நினைவாக அவர் சிறுகதைகள் போட்டியை உருவாக்கி, அதற்கு வந்த கதைகளை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் பரிசுகளை அளித்தது நாமெல்லோருமே மிகவும் பெருமைபட வேண்டிய விஷயம். அவர் அவரின் அன்புத் தாயை கௌரவபடுத்திய செயலும் கூட. அவருக்கு முதலில் என் பணிவான வாழ்த்துகள்.

    நீங்கள் போட்டியில் பரிசு பெற்ற கதைகளைப் பிரித்து ஒவ்வொன்றையும், உங்கள் பார்வையில் அலசியதும் சிறப்பாக உள்ளது.

    முதல் கதையில் "பட்டு" எனப்படுவது அவர்கள் வீட்டில் வளரும் "கோமாதா" என ஊகிக்கிறேன்.மற்ற எல்லா கதைகளையும் நன்றாக அலசியுள்ளீர்கள். உங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.

    சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் எழுதிய கதையை நம் எ. பியில் படித்து ரசித்திருக்கிறேன்.. அதனால் அக்கதை சட்டென மனதுக்குள் தடையின்றி விரிந்து மலர்ந்தது. பரிசுகளைப் பெற்ற நம் எ. பி நட்பின் சகோதரர்களுக்கும், மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    தங்களது பார்வையில், அடுத்த 7 கதைகளுக்கான அலசல்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு