ஞாயிறு, 16 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 2

 

மஞ்ச கலருல ஒரு புடவை - கமலா முரளி


கமலா முரளி, ஆசிரியையாகப் பணியாற்றி விருது பெற்றவர் என்பதோடு இவரது கதைகள் அச்சு இதழ்களில் வந்திருக்கின்றன கூடவே கதைகளுக்கும் பல பரிசுகள் பெற்றவர்.

மஞ்ச கலருல ஒரு புடவை. தலைப்பைப் பார்த்ததும் கதை இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று சில ஊகங்கள் எழுந்தன. என் ஊகங்களில் ஒன்று கதையின் அடிப்படைக் கரு, பொருந்தியது. வழக்கமான கரு, கதை. ஆனால் அழகாக எழுதப்பட்ட கதை.

சீர்காழி அருகே சிறிய கிராமத்தில் குடிசை வாழ் ராஜுவிற்கு அவன் அம்மா மட்டுமே. அம்மா, வீடுகளிலும், அருகில் இருக்கும் கோவிலிலும் உழைப்பதால், விசேஷ நாட்களில் கிடைக்கும் பிரசாத சாப்பாடு அவர்களுக்குப் பெரிய விருந்து. கிராமத்துக் கோவிலில் தர்மகர்த்தாவிற்கு ராஜுவும் அவ்வப்போது உதவுபவன்.

சென்னையிலிருக்கும் ஆடிட்டர் தேவனுக்கு அக்கோவில் குடும்பக் கோவில். ராஜுவை கோயில் தர்மகர்த்தா அறிமுகப்படுத்திட, ஆடிட்டர் சில கேள்விகள் கேட்க, ராஜுவின் பதில்கள் அவரை ஆச்சரியப்படுத்திவிட ராஜுவின் எதிர்காலத்தின் விளக்கு ஏற்றப்படுகிறது.

ராஜு ஆடிட்டரின் அலுவலகத்தில் தங்கிக் கொண்டு, அங்கு பணியாற்றிக் கொண்டே கணக்காளர் பரீட்சைக்கும் படிக்கிறான். தன் வருமானத்தில் அம்மாவிற்கு சில நூல் புடவைகளையும் வாங்கி வைத்திருக்கிறான், தலைப்பு!

ஏழையின் வாழ்க்கையில் விளையாட விதிக்கு ரொம்பப் பிடிக்கும். தத்துவமாகச் சொல்வதென்றால் மனிதனின் மனதைப் பக்குவப்படுத்தும் பரீட்சை! தொடர் மழை வெள்ளம், சென்னையில் மட்டுமல்ல சீர்காழி கிராமங்களிலும். வெள்ளத்தில் கிராமத்து வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு மிதக்கின்றன. செய்தியில் தெரிகிறது. அதன் பின் மின்சாரம் தடை, தொடர்புகள் இல்லை. போக்குவரத்தும் இல்லை. ராஜு கலவரமடைகிறான். போக்குவரத்து மெதுவாகத் தொடங்கியதும், அவன், ஆடிட்டர் பாஸ் அவனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்புகிறார்.

ராஜு நூல்புடவைகளுடன் கிளம்புகிறான். தன் அம்மாவை சந்தித்தானா? இல்லை தேடுகிறானா? என்ன ஆனாள்? வாசகர்களின் ஊகத்திற்கு வாய்ப்பு கொடுக்கும் முடிவு. எனக்குப் பிடித்த முடிவு. நெடுங்ககதைக் களத்துக்கான தலைப்பு + கரு.

எழுத்தாளர் கமலா ரவி அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!


 காட்சிப் பிழை - கல்பனா சன்யாசி


ஆசிரியர் எழுதிய சூப்பர்மார்க்கெட் கதையை  நான் ‘குவிகம் குறும்புதினம் நவம்பர் 24’ ல் - செல்லப்பா சாரின் தயவில் எனக்கு வந்து கொண்டிருப்பதில் - வாசித்திருக்கிறேன்.  வித்தியாசமான கதைக்களம். யதார்த்தம். நன்றாக எழுதியிருந்தார். அந்த இதழில் வந்திருந்த கதைகளில் இக்கதை நன்றாக இருந்தது என்றாலும் முடிவு கொஞ்சம் வேறாக இருந்திருக்கலாம்.

சரி இப்போது போட்டியில் பரிசு வென்ற  கதையைப் பற்றி. காட்சிப்பிழை - தலைப்பே கொஞ்சம் சொல்லிவிடுகிறது. நம் மனம் சிலவற்றை ஒரு கணக்குப் போடும் ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கும்.

இக்கதையிலும் அம்மாவும் மகனும் மட்டுமே. இருவரும் ஒருவருக்கொருவர் உலகமாக, உயிராக (இங்கு உங்களுக்கு புகழ்பெற்ற குழந்தைகளின்!! பெயர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) வாழ்ந்து வரும் வேளையில் அம்மா மகனுக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் மகன் தன் காதலை வெளிப்படுத்துகிறான். ஆனால் அம்மா சம்மதித்தால் மட்டுமே நடக்கும் என்றும் சொல்கிறான்.

வழக்கமாக, அம்மாக்களுக்கு எழும் insecured உணர்வுகள். அம்மா, காதலுக்கு எதிரானவள் இல்லை என்றாலும் அவள் அப்பெண்ணை நேரில் பார்த்ததும், அப்பெண்ணின் தோற்றம், நடவடிக்கைகள் பிடிக்காமல் போகிறது. அம்மா காரணங்களை அடுக்குகிறாள். மகன் அதை எடுத்துச் சொல்கிறான். “நியாயமான ஒரு காரணம் சொல்லு நானே நிராகரித்துவிடுகிறேன்” என்று மகன் உறுதியாக இருக்கிறான். அப்பெண்ணின் குணம் பற்றி அறிய அம்மா என்னவெல்லாம் செய்கிறாள், இப்படியுமா ‘சீ’ என்று தோன்ற வைக்கும் ஒரு சோதனையையும் அம்மா செய்கிறாள். ஆனால் கடைசியில் எதனால் பிடித்துப் போகிறது? அந்த ட்விஸ்ட் என்ன? காட்சிப்பிழை!

ட்விஸ்டை ஊகித்துவிடலாம். அம்மாவின் செய்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. இப்படியுமா என்று எண்ண வைக்கிறது. எழுதிய விதம் நன்று.

ஆசிரியர் கல்பனா சன்யாசிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.


மூன்றாம் தளம், 301 ஆம் வீடு - எம் சங்கர்


நல்ல கதை, முடிவு எனக்குப் பிடித்திருந்ததால். இதற்கு முந்தைய கதை போல, இதிலும் மகனின் பெங்காலி தோழி, தோழியா அல்லது காதலியா? காதலியாக இருந்தால், அந்த பெங்காலிப் பெண் சரிப்படாது என்று அறிய வேண்டி ஒரு குடியிருப்பில் தன் தோழியோடு குடியிருக்கும் பெண்ணின் வீட்டிற்குத் தன் கணவனை அனுப்புகிறாள் அம்மா. காரணம் அமெரிக்காவில் இருக்கும் மகன் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகப் பேச்சுவாக்கில் தன் கசினிடம் சொல்ல அது இவர்களின் காதுக்கு எட்டுவதால்.

தங்கள் மகனிடம் நேரடியாகக் கேட்க வேண்டியதை எதற்குப் பெண்ணை அணுகுகிறார்கள்?? கேள்விக்குறி. பெற்றோருக்கும் மகனுக்கும் சற்று இடைவெளி இருக்கிறதோ என்று.

“அங்கிள் நீங்க நல்லா பெங்காலி பேசுவீங்களாமே, அர்ஜுன் சொல்லியிருக்கிறான்”

“ஓ இதெல்லாம் கூட அர்ஜுன் சொல்லியிருக்கிறானா?”

மேலே சொன்ன வரியை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஆனால்……

பெண் மிகவும் தெளிவாக இருக்கிறாள். அவர் எந்தெந்த விஷயங்கள் ஒத்துப் போகாது என்று அடுக்குகிறார்.

“ஸோ, அங்கிள் என்னன்ன விஷயங்களில் ஒத்துப் போகணும்?” - பெண்ணின் கேள்வி.

கூடவே அவரது ஒவ்வொரு கேள்விக்கும் மிக அவள் தெளிவாகக் கொடுக்கும் பதிலும், இந்தக் கேள்வியும் கூடவே பெண், அவரைக் கேட்கும் கேள்விகளும்…... கதையை ஆசிரியர் கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்தது. அடுத்த தலைமுறையினரில் பலர் (நல்ல குடும்பத்தில் வரும் குழந்தைகள்) தங்கள் வாழ்க்கையில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை நான் அடிக்கடி நினைப்பதற்கு +1 இக்கதை.

அப்பெண் அவரைத் திரும்பக் கேட்கும் கேள்விகள் என்ன? கடைசியாக அவள் சொல்லும் அந்த வரிகள் நச்! அதை நான் இங்கு சொல்லிவிட்டால்….அப்புறம்?

ஸோ……ஆசிரியர் எம் சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!


சிங்கிள் பேரன்ட் - சாரதா ஸ்ரீநிவாசன்


ஆசிரியர் எங்கள் ஊர்ப்பக்கம் (திருநெல்வேலி). கதைகள் எழுதுகிறார். தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார். 

பெண்ணிற்கு வரன் தேடித்தேடி கடைசியில் அமையும் பையன் அமெரிக்காவில் இருக்கிறான். பெண்ணும் அமெரிக்காவில். இப்பையன் வீட்டினர் கொஞ்சம் பழமை. பையன் சரி என்று சொல்லி திருமணம் உறுதிப்பட்டபின்னும் அம்மாவிற்குக் கவலை. காரணம், பெண் கொஞ்சம் எடக்கு மடக்கானவள். ஆனால், உண்மையில் அப்படி அல்ல என்பதைச் சொல்லும் அப்பெண்ணைப் புரிந்து கொண்ட அப்பெண்ணின் கணவன். அவள் அம்மாவிற்கும் புரிய வைக்கிறான். அப்பெண் அப்படி எடுத்தெறிந்து எடக்குமடக்காகச் செய்வதற்குக் காரணம் என்ன? அதுதான் கதை.

அருமையான கரு. உளவியல் சார்ந்த ஒன்று. எனக்குப் பிடித்த ஒன்று. அடுத்து வருவதை நான் இதைச் சொல்லத் தகுதியானவளா என்று தெரியவில்லை ஏனென்றால் பல பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள், புத்தகங்கள் வெளியிடுபவர்கள். யோசித்துதான் இதைச் சொல்கிறேன். கதையில், இப்படியான உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்ளும் ஒரு மாப்பிள்ளை அமைவது அபூர்வம் என்றாலும் கண்டிப்பாக யதார்த்தத்தில் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. அபூர்வம் அவ்வளவே - மாப்பிள்ளை பேசும் பகுதியைக் கொஞ்சம் மெருகேற்றி, ஒரேயடியாகப் பேசுவது போன்று இல்லாமல், உரையாடலாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.

ஆசிரியர் சாரதா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!


காலம் என்ற நீட்சியுடன் - கே எஸ். சுதாகர்


இலங்கைத் தமிழர். எனவே கதையும் இலங்கைத் தமிழில். கதையின் முக்கிய கதாபாத்திரம் நம்மிடம் கதைக்கிறார். ஊரில் தன்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த நண்பரின் தங்கையின் திருமணத்திற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து கனடாவிற்கு வரும் அளவு நட்பு. அங்கு தன் பள்ளி ஆசிரியரையும் பார்க்கிறார். நண்பரிடம் அந்த ஆசிரியர்தானா என்றும் உறுதி செய்து கொள்கிறார். கதைசொல்லிக்குத் தயக்கம். அந்த ஆசிரியரிடம் பள்ளிக்காலத்தில் இவர்களுக்கு ஒரு மனக்கசப்பு. மறப்பதும் மன்னிப்பதும் மனிதகுணம் என்று நண்பர் மறைமுகமாகச் சொல்லி, சாப்பிட்டு முடித்ததும் ஆசிரியருடனும் கதைக்கச் சொல்கிறார்.

மறப்பதும் மன்னிப்பதும் மனிதகுணம் என்றால் குற்றத்தை யார் சுமப்பது? என்ற வரியை ஆசிரியர் கதைசொல்லியின் வழியாகச் சொல்கிறார். யோசிக்க வைக்கும் வரி.

இந்த வரியிலிருந்து கதைசொல்லி பள்ளிக்காலத்தின் நிகழ்வில் பயணித்துத் தற்போதைய தருணத்தில் முடிக்கிறார்.

பள்ளிக்காலத்தில், ஊரில் (இலங்கையின் வடகிழக்குத்  தமிழ்மக்கள் பகுதி) பள்ளி மற்றும் ஆசிரியருடனான அனுபவங்களை விவரிப்பது சுவாரசியமாக உள்ளது. இலங்கைத் தமிழ் புரியுமென்றால் ஒன்றிவிடலாம். ஊரைப் பற்றியும் பள்ளி எப்படி இருந்திருக்கிறது என்பதும் எளிமையான கிராமம், மிகவும் எளிமையான மக்கள் என்பதும் கண் முன்னே விரிகிறது.

அந்த நிகழ்வு என்ன? எதனால் கசப்பு? என்று விரிந்து தற்போது திருமண நிகழ்வில் ஆசிரியருடன் கதைப்பதில் முடிகிறது. ஆசிரியர் உணர்கிறாரா?  தற்போது ஆசிரியருடன் கதைக்கும் போது வரும் வரிகள்…ஒரு சின்ன ட்விஸ்டுடன் முடியும் அந்த முடிவு….சூப்பர். காலத்தின் நீட்சி நம் மனதிலும் படிகிறது.

கதை ஆசிரியர் கே எஸ் சுதாகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!


முதல் மருத்துவர் - ஜெ பாஸ்கரன்


கதாசிரியர் ஒரு மருத்துவர். நிறைய கதைகள் எழுதுகிறார். பிரசுரமாகிறன.  மருத்துவர் என்பதால் அதை ஒட்டிய கதை.

வயதான தம்பதியர். மனைவிக்குக் கை நடுக்கம் தொடங்குகிறது. முதலில், சங்கர் எனும் பிரபல மருத்துவர், கைராசிக்காரர் என்று அறிந்து அவரை அணுகுகிறார்கள். பார்க்கின்ஸன் தொடக்கம் என்று தெரிகிறது.

மருத்துவர் சங்கருக்கு மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருப்பது பிடிக்காது. தன்னிடம் வருபவர்களிடமும் கூட, முந்தைய மருத்துவரின் அறிவுரை சரியாக இருந்தால் அவரிடமே அனுப்பிவிடுவார். மருத்துவரை நம்பவேண்டும் என்று சொல்லும் மருத்துவர் சங்கர் நோயாளிகள் மருத்துவரை மாற்றுவது, இரண்டாவது மூன்றாவது கருத்து கேட்பது போன்றவற்றில் கோபம் கொள்பவர். அனாவசிய பரிசோதனைகள் மருந்துகள் பரிந்துரைக்கமாட்டார்.

“ஒரே மருத்துவரைப் பாருங்கள் குடும்ப மருத்துவரைப் பாருங்கள் அப்போதுதான் தொடர்து சிகிச்சைகள் சரியாக இருக்கும் என்பதான அறிவுரைகள், என்பவை எல்லாம் இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் சொல்கிறார் மருத்துவ கதாசிரியர். இவை மருத்துவரான ஆசிரியர் கதையினூடே சொல்லிவிடலாம் என்று சொல்லியிருக்கிறாரொ என்று எண்ண வைத்தது. இவற்றைக் கொஞ்சம் உரையாடல்களில் சொல்லியிருக்கலாமோ…அப்போது இவை தனிப்பட்டுத் தெரியாமல் இருந்திருக்கும் என்றும் தோன்றியது.

வயதான தம்பதியருக்கு இடையில் சங்கரைப் பார்க்க முடியவில்லை அவர் ஊரில் இல்லாததால். எனவே பலரும் சொல்லும் ஒவ்வொரு மருத்துவரையும் பார்க்கிறார்கள், பல மாற்று மருத்துவங்களையும் பார்க்கிறார்கள் இடையில் கொரோனா காலத்தில் சிகிச்சை கிடைப்பது கடினமாக இருந்திட, தற்போது பார்க்கின்ஸன் கொஞ்சம் தீவிர நிலையை அடைந்திட தற்போதைய மருத்துவர், மருத்துவர் சங்கரைப் பார்க்கச் சொல்ல, இவர்களுக்குப் பயம் வருகிறது. அவர் வீட்டிற்கு வந்து பார்ப்பார? கோபக்காரரான சங்கரை இடைவெளி விட்டு பார்க்கச் சொல்கிறோமே என்று.

மருத்துவர் சங்கர் வருகிறாரா? என்ன ஆகிறது?

மருத்துவ ஆசிரியர் ஜெ பாஸ்கரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!


ஊடாடும் பெருநிழல் - பென்னேசன்


இலக்கியத் தரமான ஈர்க்கும் தலைப்பு. கதாசிரியர் பென்னேசன் தில்லியில் அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1984 ஆம் ஆண்டு நடந்த அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை இரு சீக்கியர்கள் சுட்ட போது நடந்த கலவரத்தில் கதாசிரியர் ஒரு சீக்கியக் குடும்பத்திற்கு அடைக்கலம் தருகிறார். அதில் இரு சிறுவர்கள். பின்னர் அவர்கள் முகாமுக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆசிரியரும் அவர்களை மறந்துவிடுகிறார். இப்போது ஓய்வு பெற்று கிருஷ்ணகிரியில் வசிக்கும் போது திடீரென்று ஒரு சீக்கிய இளைஞன் வந்து இவர் பெயரைச் சொல்லி  தில்லியில் சுல்தான்புரியில் குடியிருந்தவர் இவர்தானே என்று கேட்கிறான். வீட்டிலுள்ளவர்களுக்குப் பயம் ஏற்படுகிறது. அவன் தன்னை லக்கிசிங்க் கலவரம் நிகழ்ந்த போது ஆசிரியர் அடைக்கலம் கொடுத்த குடும்பத்தில் இருந்த இரு சிறுவர்களில் 3 வயதாக இருந்தவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். தான் நேரில் கண்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

அந்த இளைஞன் கடைசியில் இவரிடம், இவர் பதில் சொல்ல  முடியாத ஒரு கேள்வி கேட்கிறான் அது என்ன? அந்த இளைஞன் யார்? தொக்கி நிற்கும் கேள்வி!

கதாசிரியர் பொன்னேசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

அடுத்த செட் 7 கதைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


 -----கீதா

 

10 கருத்துகள்:

  1. கதையின் விவரிப்பு வழக்கம் போல சிறப்பாக இருக்கிறது ‌

    பதிலளிநீக்கு
  2. நல்லா எழுதியிருக்கீங்க.

    ஒருவேளை சிறந்த நூறு சிறுகதைகள்னா என்னவாகியிருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.

      அவற்றில் என்னைக் கவர்ந்தவற்றை மட்டும் எழுதியிருப்பேனாக இருந்திருக்கலம. பார்க்கப் போனால் என்னிடம் எஸ் ரா வின் நூறு கதைகள் தொகுப்பு இருக்கிறது. அதிலிருந்து நான் படிச்ச கதைக்கு எழுதும் அபிப்ராயம் உண்டு. நேரம் ஒதுக்க வேண்டும். இது கைதில் இருப்பதால் எழுதினேன். அவ்வளவுதான்.

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஒவ்வொரு கதைகளையும் நீங்கள் அலசிய விதம் நன்றாக உள்ளது. நூலைப்பற்றி நல்ல ஒரு விமர்சனங்கள் கதைகளை படிக்கத் தூண்டியது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தேர்வாகிய கதைகளை சிறப்பான முறையில் அலசிய உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. படித்தததோடு நின்று விடாமல் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள்.  உளவியல் கதைகளில் கருத்து சொல்ல உங்களுக்கு முழு தகுதி உண்டு.  நீங்கள் எழுதிய கதைகளே அப்படியானவைதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி ஸ்ரீராம்.

      கதையை எழுதியிருப்பவர்கள் எல்லோருமே விற்பன்னர்கள் ஸ்ரீராம் நீங்கள் உட்பட. வாசிப்பும், எழுத்தும் என்று.
      வித்தியாசம் நீங்க எந்தக் கதைத்தொகுப்பும் ஏன் கவிதைத் தொகுப்பும் போடவில்லை ஆனால் எல்லோரும் போட்டிருக்கிறார்கள். அச்சில் எழுதியிருக்கிறார்கள். அதனால் ஒரு தயக்கம்.

      நான் இப்போதுதானே வாசிக்கிறேன் எழுதுகிறேன். அதனாலும் ஒருதயக்கமெ எழும்.!!!!

      நன்றி நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. கதைகளை பற்றிய விமரிசனம் நன்று என்றாலும் முடிவு தெரியாததால் ஏதோ அரைகுறையாகத் தெரிகிறது.
    கதை மாந்தர்களின் கேரக்டர் அலசலையும் கொஞ்சம் சேர்த்திருந்தீர்களானால் ஒவ்வொரு ஆசிரியரின் பாத்திரப்படைப்பு பற்றியும் அறிய முடிந்திருக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா முடிவையும், கதை மாந்தர்களின் கேரக்டர் அலசலையும் இங்கு சொல்ல விரும்பவில்லை. காரணம், புத்தகம் விற்பனையில் இருக்கிறது. எனவே இது ஜஸ்ட் ஒரு சின்ன விமர்சனம். அவ்வளவே.

      நான் படிச்ச கதை என்றால் நன்றாகவே அலசலாம். அவை பொதுவெளியில் இலவசமாக இருந்தால் நாம் அலசலாம். நிறைய எழுதலாம்.

      இது அப்படி இல்லாததால் நான் அதைச் சொல்லவில்லை அண்ணா,

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு