சனி, 22 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 4



தையலின் தடம் - முகிலன் அப்பர்

அப்பர் - தந்தையின் பெயர். எனவே முகிலன் அப்பர். பெயரே அழகாக இருக்கிறது! பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர். வயது 22. பொறியியல் பட்டதாரி என்றாலும் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாகத் தற்போது இளங்கலை (தமிழ்) இரண்டாமாண்டு படித்து வருகிறார். பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர்.

கதை - பிரசவ வேதனையோடு, மருத்துவமனைகளிலும் பெண்கள் படும் கஷ்டங்களைக் கேட்ட அனுபவங்கள் மற்றும் அவரது அத்தையும் தன் அனுபவத்தைச் சொல்லி அழுதவுடன் அதைப் பதிவு செய்ய நினைத்து இக்கதையை எழுதியுள்ளார்.

பிரசவ வலி எடுத்ததும் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், ஆசிரியை தாமரை. அண்ணனும் அப்பாவும் பிரசவத்திற்கான மூட்டை முடிச்சுகளுடன், உடன் செல்கிறார்கள். அண்ணி வந்து கொண்டிருக்கிறாள். வலியில் சோர்வாக இருக்கிறாள் தாமரை.

மருத்துவமனைக்குள் பிரசவ வார்டு பகுதி எங்கிருக்கு என்று அறிந்து கொண்டு செல்கிறார்கள். தாமரைக்கு மருத்துவமனைக் குரல்களும் காட்சிகளும் பயமுறுத்துகின்றன. எமலோகத்திற்குள் நுழைவது போன்று இருக்கிறது. தலைப்பிரசவம்.

அண்ணன் மருத்துவரோடு வருகிறார். செக்கப் எல்லாம் செய்து பிரசவம் கொஞ்சம் கடினம், சிசேரியன் செய்ய வேண்டும், “என்ன சொல்றீங்க” என்று கேட்கிறார் மருத்துவர். என்ன மறுத்துச் சொல்லமுடியும்? கையெழுத்து இத்யாதிகள் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தாமரைக்கு, தற்போதெல்லாம் சிசேரியன் என்று சொல்லி மருத்துவமனைகளில் செய்யப்படும் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

மருத்துவர் அவளை அழைத்துச் சென்று ஒரு மேசையில் உட்காரச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.

அதன் பின் தான் தொடங்குகிறது செவிலியரின் ஆட்டம். “உன்னை யாரு இங்க உட்காரச் சொன்னது? சிசேரியன்னு நீயா சொல்லிடுவியா? டாக்டரு சொல்லணும்.” “டாக்டர்தாங்க சொன்னாரு” என்று சொன்னாலும் அந்தச் செவிலியர் விடுவதாய் இல்லை. அவளைப் பாடாய்படுத்துகிறார்கள். அலைக்கழிக்கிறார்கள். இடையில் பாத்ரூமில் ஒரு பெண்ணிற்குக் குழந்தை வெளியில் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள்.

தாமரையின் வலி மிகுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் செவிலியரின் கெட்ட வார்த்தைகளும் அலைக்கழிப்பும், வேறொரு மருத்துவரின் அசட்டையும் அவளை அறைந்து கொண்டே இருக்கின்றன. கடைசியில் மருத்துவர் எப்போது வந்தார்? அவர் கேட்டது என்ன? எப்படி அலைக்கழிக்கப்படுகிறாள்? குழந்தை எப்போது பிறந்தது? சிசேரியனா? சுகப்பிரசவமா? (அது சரி, சிசேரியன் இல்லைனாலும் வலியெடுத்துப் பிறப்பதுதானே? ஏன் சுகப்பிரசவம் என்று சொல்கிறார்கள்?).

இதற்கான விடையை நீங்கள் தலைப்பை வைத்தே எளிதாக ஊகித்துவிடலாம்!

யதார்த்தக் காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து தோலுரித்துக் காட்டியிருக்கும் இளைஞர் முகிலன் அப்பருக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

மாலி - எஸ் ராமசுப்ரமணியன்

கதாசிரியர் தபால் தந்தி அலுவலகத்தில் வேலை செய்து ரிட்டையர் ஆனவர் என்பதைத் தாண்டி அவரது எழுத்துப் பணி வியக்க வைக்கிறது! நிறைய எழுதியிருக்கிறார்.

கதை - மிகவும் இயல்பான உரையாடல்களுடன், கதைசொல்லியின் வழியாக மாலி எனும் மகாலிங்கத்தோடு பயணிக்கும் கதை. கதை சொல்லி ஒரு வக்கீல் பெண்மணி. திடீரென்று ஒரு நாள் காலை அவர் வீட்டின் அழைப்பு ஒலிக்கிறது. யார் இந்த வேளையில் என்று அவர் திறந்தால் அங்கு அப்பாவி மாலி!

ஃப்ளாஷ் பேக் விரிகிறது. முன்பு குடியிருந்த சிந்தாதரிப்பேட்டையில் இவர்கள் வாடகைக்கு இருந்த போது எதிரில் இருந்த மாலியின் குடும்பம் பழக்கமானது. மாலி முதல் பையன். இரு தம்பிகள். மாலிக்குப் படிப்பு வரவில்லை. அப்பாவித்தனம்.

மாலிக்குக் கல்யாணம் ஆனால் வரும் பெண்ணால் மாற்றம் ஏற்படலாமே என்று கதைசொல்லி வினவிட, அம்மா சொல்லும் யதார்த்த காரணம், “நல்ல வேலையில் இருப்பவங்களுக்கே கல்யாணம் ஆவது சிரமம், மாலிக்கு எப்படி ஆகும்?” உரையாடல்கள் சென்னை பாஷையில்.

கதை சொல்லி, வீடு மாறியபின் மறந்து போய்விட, தொடர்பு இல்லை என்றாலும் மாலியை இடையில் சந்திக்க நேர்ந்திட மாலியின் இரு தம்பிகளுக்கும் நல்ல வேலை. கல்யாணம் ஆகிவிடுகிறது என்பதை அறிகிறார். அவன் பிரச்சனைகள் புரிகிறது. கதை சொல்லியானவர் மாலிக்குப் பல இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்து உதவுகிறார். ஆனால் அவன் வேலையில் நிற்கவில்லை. காரணம் என்ன? என்பதெல்லாம் அவன் தற்போது வீட்டிற்கு வந்த போது தெரிகிறது. மாலி அப்பாவியா? இளிச்சவாயனா?

மாலியின் கதாபாத்திரம் அழகான படைப்பு. சிறுகதை, போட்டிக்கு என்பதால் குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் என்பதாலோ என்னவோ, மாலி துரித நடை போட்டது போன்றிருந்தது! என்றாலும் மிக அழகாக எழுதியிருக்கிறார் கதாசிரியர்! 

வளையோசை - ரேவதி பாலு

எழுத்தாளர் ரேவதி பாலு, குவிகம் மாத இதழின் மூலம் அவரது எழுத்தின் மூலம் பரிச்சயம். அவரது தந்தை ரஸவாதி எழுத்தாளர் என்பதால் சிறியவயதிலேயே எழுத்துப் பின்புலம். நிறைய எழுதி வருகிறார். புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

கதை வளையோசை, வித்தியாசமான கதைக்களம் கொண்ட கரு. பெசன்ட்நகர்-வடபழனி பேருந்தான 5 E ல் தினமும் அடையாறிலிருந்து பயணிக்கும் கல்பனாவின் அனுபவம். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் பெசன்ட்நகரில் அந்தப் பேருந்தில் மீன் கூடைகளுடன் ஏறும் பெண்மணிகளின் கூட்டம் ஏறியதென்றால், பின் இருக்கைகள் முழுவதும் அவர்களுக்குப் பட்டா போட்டது போன்று சம்மணமிட்டு மடியில் அல்லது காலின் அடியில் கூடைகளை வைத்துக் கொண்டு உட்கார்வதும். சண்டை போடுவது போன்றான பெருங்குரலும், கூடவே மீன் வாடையும் கொஞ்சம் தர்மசங்கடம் ஏற்படுத்தும் பேருந்து.

அப்பெண்களின் அருகில் இடம் கிடைத்தாலும் மீன் வாடையை சகிக்க முடியாமல் போனால் அப்பெண்மணிகள் கிண்டலும் கூச்சலும் சிரிப்பும் பயணிகளை அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கச் செய்துவிடும் அனுபவங்கள்.

அடையாறில் ஏறும் கல்பனாவிற்கும், வண்ணாந்துறையில் ஏறும் அவள் தோழியான கர்ப்பிணியாக இருக்கும் லதாவுக்குமே கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லாததால், கேகேநகரில் இருக்கும் அலுவலகத்தில் காலை 10 மணிக்குக்குள் இருக்க வேண்டும் என்பதால் அப்பேருந்தில் அலுவலகத்திற்காகப் பயணம்.

அபெண்களில் ஒருவர் கல்பனாவை முறைப்பதும் உண்டு. அப்பெண்மணிகள் அடிக்கும் கூத்தென்ன? அப்பெண்களை கல்பனா எப்படிச் சமாளிக்கிறாள்? நட்பாக்கிக் கொள்கிறாள், என்பதைச் சொல்லி, வளையோசையை எப்படிப் பொருத்திக் கொண்டுவந்து முடிக்கிறார் என்பதே கதை.

இப்படியான மீன் விற்கும் சமூகத்தினரைப் பற்றி ஆசிரியர் சொன்ன விதம், அவர்களும் மனிதர்கள் என்பதைச் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது.

ஆசிரியர் ரேவதி பாலு அவர்களுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்!

நீங்காது பூ மாது - லதா சுப்ரமணியன்

கதாசிரியர் லதா சுப்ரமணியன் அவர்கள், பிரதிலிபி தளத்தில் எழுதி வருகிறார். இவரது மூன்று கதைகளை புஸ்தகா தளம் நூலாக வெளியிட்டுள்ளது. போட்டியில் பரிசு பெறுவது இதுதான் முதல் தடவையாம்.

கதை - நீங்காது பூ மாது. தலைப்பு எனக்குப் புரியவில்லை. வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த காதல் கல்யாணம். அஷ்வின், லாவண்யா. தொடக்கத்தில் கதையில் உரையாடல்களை வைத்து உறவுகள் டக்கென்று புரியவில்லை, யார் பையனின் சைட், யார் பெண்ணின் சைட் என்று. மீண்டும் வாசித்தேன்.

அஷ்வினின் நெருங்கிய உறவினருக்குத் (அத்தை? உறவு புரியவில்லை) தன் மகளுக்கு அஷ்வினைத் தரவில்லையே என்ற குறையில் கேட்க அஷ்வினின் தாயார் சொல்கிறார், பையன் வெளிநாட்டில், கைநிறைய சம்பாதிக்கிறான். கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பையன் தங்களை நட்டாற்றில் விட்டுவிடுவானோ என்பதால் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதாக. அங்கேயே தெரிகிறது, 

ஆனால் மருமகள் லாவண்யா வீட்டுக்கு வந்ததும் தகராறு தொடங்குகிறது. பெண்ணின் அம்மாவிடம் குற்றம் சொல்கிறாள். பெண்ணிற்குச் சமையல் தெரியவில்லை என்று. குழந்தை பிறந்ததும், லாவண்யா சற்று குண்டாகிறாள், அழகு கொஞ்சம் குறைவதாக அஷ்வின் நினைக்கிறான். அவள் இங்கு, அவன் வெளிநாட்டிலுமாக வாழ்க்கை. மாமியாரிடம் அவதிப்படுகிறாள். இரு குழந்தைகள் பிறப்பு, இரண்டுமே சிசேரியன். உடல் குண்டாக ஆனாலும் வீட்டில் காலையிலிருந்து இரவு வரை வேலை. ஓய்வு இல்லை. மாமியாரின் வார்த்தைகள், மன உளைச்சல் என்று வாழ்க்கை.

பெண் லாவண்யா தன் கணவன் அஸ்வினிடம் பேசும் ஒரு பகுதி மட்டும் தான் கதையில் எனக்குப் பிடித்திருந்தது.

பையன் அஷ்வின் சொல்கிறான், “நான் அடுத்த முறை ஊருக்கு வரும் போது நீ 10 கிலோ எடை குறையவில்லை என்றால் உன் அம்மா வீட்டிற்குப் போய்விடு”

“நான் குண்டாக இருப்பதால் ஆரோக்யமாக இல்லை என்று நீ நினைத்தால், நீ ஒல்லியாக ஆரோக்யமாக இருக்கிறாய் உனக்கு சாவே வராது என்று டாக்டரிடம் சர்டிஃபிகேட் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காட்டு பார்க்கலாம். இனி ஒரு முறை என்னிடம் இப்படிப் பேசும் வேலை வைத்துக் கொள்ளாதே” என்று கோபமாகப் பேசுகிறாள்

கடைசியில் அஷ்வின் தன் மனைவி லாவண்யா குண்டானாலும் அதைய் இயல்பாக எடுத்துக் கொண்டு புரிந்து கொள்கிறானா?

மற்றபடி கதையைப் பற்றி வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

ஆசிரியருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்!

கரையேற்றம் - வசந்தா கோவிந்தராஜன்

கதாசிரியர் 2020 லிருந்துதான் எழுதுகிறார் என்றாலும் குறைந்த இடைவெளியில் நிறைய எழுதியிருக்கிறார். முதல் கதை ‘வலி’ மத்யமரில் வந்தது. புஸ்தகாவிலும் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. குவிகத்தில் குறும்புதினம் இதழில் இவர் எழுத்தின் மூலம் எனக்குப் பரிச்சயம்.

கரையேற்றம் - கதையின் தலைப்பே கொஞ்சம் புரிய வைக்கிறதோ? அடிகளே வாழ்க்கையாகிப் போன மங்களம் மாமி, காசியில், மடத்தில் பிதுர் காரியத்துக்குச் சமையல் செய்து வருபவர். தினமும் கங்கையோடு மானசீகமாகப் பேசுவது வழக்கம். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கங்கை என்று 24 வருடங்கள் வாழ்க்கையை ஓட்டியவர். அந்த மடத்தில் சகோதரர் போன்று பாதுகாப்பாக இருந்த மாமாவும் போன பின் மனம் சோர்ந்து இருளடைகிறது.

“இத்தனை பித்ருக்களைக் கரையேற்ற என் கையால் சாதம் வடித்துக் கொடுக்கறேனே, நான் போனால் என்னை யார் கரையேற்றுவார்கள்” என்ற கவலை மாமிக்கு.

சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தை இலவசமாக, 8 வருடங்களாக நடத்தும் தம்பதியர், இல்லத்தில் இத்தனை வருடங்களில் இறந்த 24 பேருக்குக் கரையேற்றம் செய்ய இந்த மடத்திற்கு வருகிறார்கள்.

அந்த தம்பதியரில் வனஜாவும், இந்த மங்களம் மாமியும் அக்கா தங்கை என்று அழைத்துக் கொள்ளும் அளவு சினேகமாகிவிடுகிறார்கள். வனஜா தம்பதியருக்குக் குழந்தை இல்லை. தாங்கள் இல்லம் தொடங்கிய கதையைச் சொல்ல ஃப்ளாஷ்பேக்கில் கதை நகர்ந்து யதார்த்தத்திற்குத் திரும்புகிறது. வனஜா தம்பதியர் 24 பேருக்கும் கரையேற்றம் செய்து வைத்துக் கிளம்ப இருக்கிறார்கள்

மங்களம் மாமிக்குக் கிடைக்கும் முடிவு என்ன? கதையின் முடிவு நன்றாக இருக்கிறது.

கதாசிரியர் வசந்தா ராஜகோபாலன் அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

தங்கரதம் - ஹரணி

எழுத்தாளர், பதிவர். ஹரணி எனும் புனைபெயரில் எழுதும் டாக்டர் அன்பழகன் (பேராசிரியர்) அவர்களை பதிவர்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இவரது முதல் ‘நாவல்’ பேருந்து.

கதாசிரியர் வசிக்கும் பகுதியில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். மகன், மருமகளால் துரத்தப்படும் பெற்றோர், தெருவின் நடுவில் அமர்ந்து கதறிய சம்பவத்தில் பிறந்து ஓடுகிறது இந்த “தங்கரதம்.”

தியாகராஜனும் அவரது மனைவி காமாட்சியும் மகன் மற்றும் மருமகளால் துரத்தப்பட்டு அவர்களின் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காமாட்சி இறந்திட ஸ்தம்பித்துப் போகிறார் தியாகராஜன். அவர் காலையில் கண் விழிப்பதே மனைவி காஃபியோடு வந்து எழுப்பும் போதுதான். ஃப்ளாஷ்பேக் விரிகிறது.

காமாட்சிக்கு ஆஞ்சியோ, ஸ்டன்ட் என்று போக, அரசு பொது மருத்துவமனையில்தான் எல்லாமும் நடந்தன. ஒரு மாதத்திற்குக் கவனமாக இருக்க வேண்டும். அந்த ஒரு மாதம் கூட மகன் வீட்டில் இருக்க முடியவில்லை துரத்தப்படுகிறார்கள். அதுவும் ஒரு மழை நாளில். மகனிடம் ஒரு மாதம் மட்டும் என்று கெஞ்சினாலும் மசியவில்லை.

“எங்காச்சும் போங்க, முடியலேன்னா சாவுங்க, நிம்மதியா இருப்போம்….”

தெருவினர் பேசிப் பார்க்கிறார்கள், “பெத்தவங்க வயிறு எரிஞ்சா நல்லா இருக்க மாட்டீங்கப்பா…வேண்டாம். உங்கம்மா ஆப்பரேஷன் பண்ணவங்க…பாவத்த மூட்டைக் கட்டிக்காதீங்க…”

“பரவால்ல என்ன பாவம் வந்தாலும் சரி…பெத்தவங்க கடமை..அதுக்கெல்லாம் எதுவும் எதிர்பாக்க முடியாது..நானும் என் மனைவியும் நிம்மதியா வாழணும்..எங்காவது போகச் சொல்லுங்க…பென்ஷன் வருதுல்ல…அவங்க வாழ்ந்துட்டாங்க, நாங்க வாழனும்ல….”

பெற்றோர் உழைப்பில் கட்டிய வீட்டில் மகன். பெற்றோர் நடுத்தெருவில். தெரிந்தவர் ஒருவர் உதவிட ஒரு ஓட்டு வீட்டில் வாடகைக்குக் குடியேறுகிறார்கள். பிள்ளையே இல்லை என்ற முடிவுக்கு வந்து அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

காமாட்சி என்ன சொல்கிறாள்? எப்படி தங்கரதம் வருகிறது. எப்படிப் பயன்படுகிறது, இறுதியில் என்ன? இதுதான் கதை.

உணர்வுபூர்வமான கதை. வித்தியாசமான கரு.

ஹரணி அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

சந்தித்த வேளை - முத்துச்செல்வன்

வயது 51. திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து வருபவர். அவ்வப்போது அடுத்திருக்கும் ஆலைகளில் பணியாற்றுவதுண்டு என்றாலும் பேனாவே அவருக்குச் சோறு போடுகிறதாம். அவரது கதைகள் விகடன் மட்டுமில்லாமல் கல்கி, கணையாழி, பேசும் புதிய சக்தி, தினமல வாரமலர் ஆகிய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. 'நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது' என்று கேட்டால், “நான் எழுதிய எல்லாமே சிறப்பான கதைகள்தான்” வாவ்! என்று சொல்ல வைத்தது இந்த வரி. என்ன ஒரு தன்னம்பிக்கை என்று!

இக்கதையும் சிறப்பான கதைதான். என்னை மிகவும் கவர்ந்தது. அவர் பணிபுரிந்த இடங்களில் நடந்த நிகழ்வுகளால் பின்னப்பட்ட கதை. கயல்விழிதான் ஹீரோயின் கதாபாத்திரம். கயல்விழி வேலைக்கு வந்த புதிதில் அவள் அறைத்தோழி பத்மா, “ஏய் டீசண்டா ஒருத்தன் இருக்கான். நாலு நாள் ஷிஃப்ட்ல சம்பாதிக்கறதை ஒரு மணி நேரத்துல சம்பாதிச்சிடலாம்” என்பது முதலில் புரியாமல் பின்னர் புரியும் போது கயல்விழிக்குக் கோபம் எரிச்சல் வந்து பத்மாவுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறாள்.

வீவிங் செக்ஷனிலிருந்து ஒருவன் வந்து இவளிடம், இவள் தன் ஊருக்குப் போவதைத் தெரிந்து கொண்டு வந்து கேட்டதும் ஆச்சரியம் வருகிறது இவனுக்கு எப்படித் தெரியும் என்று. என்றாலும் தான் போவதாகச் சொல்கிறாள். விசேஷத்துக்கு வாங்க என்றும் அழைப்பு விடுக்கிறாள்.

அது பத்மாவுக்குத் தெரிந்திட அவள், “என்னவோ அன்னிக்கு அப்படிப்பட்ட பெண் நானில்லைனு சிலுப்பினே நேத்து அவனை வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கியாமே” கயல்விழிக்கு அதிர்ச்சியாகிறது. தன்னிடம் முந்தைய தினம் வம்பு செய்த அதே ஆள் தான், அவன் அறிவழகன், மணமானவன் என்றும் தெரிகிறது. பல பெண்களை வீழ்த்துபவன்.

கதையில், பெண்கள் விடுதியிலும், ஆண்கள் விடுதியிலும் நடக்கும் சராசரி அறிவுக்கும் கீழான உரையாடல்கள், விஷயங்கள் எவ்வளவு நடக்கின்றன என்பதை அப்படியே விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

கயல்விழி ஊருக்குச் செல்கிறாள். இரண்டாம் நாள் அந்த அறிவழகனும் அவள் ஊருக்குச் செல்கிறான். என்ன நடக்கிறது? கயல்விழி எப்படிச் சமாளிக்கிறாள்?

கதையில், சராசரி சிந்தனையுடைய பெண்களும் ஆண்களும் பேசுவதான உரையாடல்கள் நமக்குச் சே என்று தோன்றலாம். ஆனால் யதார்த்த உரையாடல்கள்.

வீர வசனம் பேசாமல் அமைதியாக, இயல்பாக இருந்தே ஒரு பெண்ணால் கடந்துவர முடியும் என்று சொல்லியிருக்கும் அந்த முடிவும் வசனமும் அருமை. என்னைக் கவர்ந்த கதைகளில் இதுவும் ஒன்று.

முத்துச்செல்வன் ஆசிரியருக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்!

அடுத்த பகுதி நிறைவுப்பகுதி - கடைசி செட் 7 கதைகள். 


------கீதா

22 கருத்துகள்:

  1. KILLERGEE Devakottai commented on "அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 3"
    8 hours ago
    தங்களது விமர்சனம் குட்டி, குட்டி கதைகளாக சிறப்பாக இருக்கிறது.

    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி உங்கள் கருத்தை வெளியிட்டும் வெளியாகாமல் இருந்தது எனவே காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டிருக்கிறேன்.

      கருத்திற்கு நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. முதல் கதை -  ஆம்,  தலைப்பு முன்மொழிகிறது.  நீங்கள் சொல்லி இருப்பது போல நானும் எழுத்தாளரின் பெயரை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது கதை கதாசிரியர் என் சின்ன மாமனாருடன் பணிபுரிந்தவர்.  இவர் பெயரைப் பார்த்ததுமே அவரைக் கேட்டு தெளிந்து கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்து கொண்டேன், ஸ்ரீராம்...பாருங்க எப்படி எல்லாம் உலகம் சிறியது, தொடர்புகள் என்று தெரியவருகிறது இல்லையா?

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. படித்துக் கொண்டே வரும்போது திடீரென சத்யா படத்தில் SPB - லதா மங்கேஷ்கர் பாடும் பாடலின் ஆரம்ப இசை மனதில் ஓடியது.  முதலில் புரியவில்லை.  அப்புறம் பார்த்தால் ரேவதி பாலு அவர்களின் கதைத்தலைப்பை தாண்டி வந்திருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....ஹைஃபைவ் ஸ்ரீராம்...வளையோசை....மீக்கும் கதையின் தலைப்பு கதையை வாசிக்கப் பார்த்தப்ப வந்தது. இங்கு அதைப் பற்றி எழுதும் போதும் மீண்டும் வந்தது!

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  5. இந்த மாதிரி பாதிப் பாதியாய் கதை சொல்லி நிறுத்தி விமர்சனங்கள் படிப்பதில் ஒரு ஆதாயம் என்ன தெரியுமா? நமக்கு புதிய கருக்கள், ஐடியாகள் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்ஸூ....டிட்டோ...

      எனக்கும் நிறைய கிடைக்கின்றன ஆனால்....எழுதணுமே.....எழுத நினைக்கும் போது புதுசு புதுசா வேலைகள் முளைக்கின்றன.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. அனைத்து கதைகளும் சொல்லும் விஷயங்கள் அருமை.
    அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    1.முதல் கதையின் தலைப்பு அருமை. தையலின் தையல் அவள் படும் பாடு. கருணையும் அன்பு நிறைந்தவர்கள் செவிலியர்கள் என்று சொல்வார்கள், ஆனால் சிலர் இப்படி நடந்து கொள்வது என்ன சொல்வது!

    2.மாலி அப்பாவியா? இளிச்சவாயனா?//

    அமைதியா எந்த வம்பு தும்பிலும் மாட்டிக் கொள்ளா விரும்பாத அப்பாவி மனிதரை இளிச்சவாயன் என்று சொல்கிறார்களோ?

    3.வளையோசை - ரேவதி பாலு அவர்கள் கதையை படித்தவுடன் மாயவரம் நினைவு வந்து விட்டது. பூம்புகார் , மாயவரம் போகும் பஸ்ஸில் இப்படி மீன் விற்க்கும் பெண்மணிகள் சித்தர்காட்டு சந்தைக்கு மாயவரம் வருவார்கள் மீன் கூடையோடு.
    மீன் விற்க வரும் பெண்மணிகள் கல்பனாவுக்கு பிரசவ உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா, எல்லாமே நல்லாதான் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயம்...

      ஆமாம் முதல் கதை தலைப்பும் எழுதியவரின் பெயரும் கவர்ச்சி.

      அமைதியா எந்த வம்பு தும்பிலும் மாட்டிக் கொள்ளா விரும்பாத அப்பாவி மனிதரை இளிச்சவாயன் என்று சொல்கிறார்களோ?//

      அதை விட அந்தக் கதாபாத்திரத்திற்குச் சாமர்த்தியம் இல்லை என்பதோடு சமூகத்தின் பார்வையில் புத்தி மட்டு என்று. கடைசி முடிவு நல்லாருந்தது கதையில்...

      வளையோசை உங்களுக்கும் உங்களின் பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது மகிழ்ச்சி. இல்லைக்கா...பிரசவ உதவி இல்லை அப்படிக் கொண்டுவரவில்லை. ஆனால் கதையின் தொடர்ச்சியாக இப்படி எனக்குள்ளும் விரிந்தது. அட கதையில் எனக்குக் கரு கிடைத்திருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் எழுத நேரம் ஒதுக்க வேண்டும்.

      நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  7. 4. நீங்காது பூ மாது தலைப்பு பெருமாளின் இதயத்தில் நீங்காது இருக்கும் பூமகளை(பூதேவியை) சொல்கிறது என்று நினைக்கிறேன்.

    அந்த பெண் மகபேற்றாலும் கணவனை பிரிந்த ஏக்கத்திலும் குண்டாக இருக்கிறாள் போலும்.

    மாமியாரின் வார்த்தைகள், மன உளைச்சல் என்று வாழ்க்கை//.
    மாமியார் வார்த்தைகள் தரும் மன உளைச்சலும் ஒரு காரணம் உடல் பருமனுக்கு.

    //பையன் அஷ்வின் சொல்கிறான், “நான் அடுத்த முறை ஊருக்கு வரும் போது நீ 10 கிலோ எடை குறையவில்லை என்றால் உன் அம்மா வீட்டிற்குப் போய்விடு”

    “நான் குண்டாக இருப்பதால் ஆரோக்யமாக இல்லை என்று நீ நினைத்தால், நீ ஒல்லியாக ஆரோக்யமாக இருக்கிறாய் உனக்கு சாவே வராது என்று டாக்டரிடம் சர்டிஃபிகேட் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காட்டு பார்க்கலாம். இனி ஒரு முறை என்னிடம் இப்படிப் பேசும் வேலை வைத்துக் கொள்ளாதே” என்று கோபமாகப் பேசுகிறாள்//

    இப்படி பெண்களும் சில நேரம் பேசுவது நல்லதுதான்.
    "இறுக பற்று" சினிமா நினைவுக்கு வந்தது .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்காது பூ மாது தலைப்பு பெருமாளின் இதயத்தில் நீங்காது இருக்கும் பூமகளை(பூதேவியை) சொல்கிறது என்று நினைக்கிறேன்.//

      ஓ இப்படி அர்த்தம் கொள்ளலாம் இல்லையா? அழகா இருக்கே
      கதையில் இதையும் பொருத்திப் பார்க்கலாம். அக்கா சூப்பர்!!!

      இப்படி பெண்களும் சில நேரம் பேசுவது நல்லதுதான்.//

      ஆமாம் பாவம் இல்லையா சும்மா காதலித்து மணந்தது உடல் அழகுக்காகவா? இல்லையா? அப்புறம் இதெல்லாம் யோசிக்காமதான் காதலிப்பாங்களா இல்லையா? பெண் சொன்ன டயலாக் ரசித்தேன்

      //"இறுக பற்று" சினிமா நினைவுக்கு வந்தது .//

      ஓ இறுகப்பற்று சினிமா கொஞ்சம் இப்படியா? படம் பார்க்கவில்லை . ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்கதான். பார்க்கிறேன் நெட்டில் கிடைக்குதான்னு

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. கரையேற்றம் -
    மங்களம் மாமிக்கு நல்ல கரையேற்றம் கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    //காமாட்சி என்ன சொல்கிறாள்? எப்படி தங்கரதம் வருகிறது. எப்படிப் பயன்படுகிறது, இறுதியில் என்ன? //

    காமாட்சி இறந்து விட்டார், தியாகராஜர் திகைத்து நிற்கிறார் என்று சொல்லி விட்டு இறுதியில் காமாட்சி என்ன சொல்கிறாள் எப்படி தங்கரதம் வருகிறது எப்படி இறுதியில் பயன்படுகிறது என்று படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் முடிவு நன்றாக இருந்தது.

      //காமாட்சி இறந்து விட்டார், தியாகராஜர் திகைத்து நிற்கிறார் என்று சொல்லி விட்டு இறுதியில் காமாட்சி என்ன சொல்கிறாள் எப்படி தங்கரதம் வருகிறது எப்படி இறுதியில் பயன்படுகிறது என்று படிக்க ஆவல்.//

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  9. சந்தித்த வேளை

    கதை களம் வேலை பார்க்கும் பெண்களுக்கு சில இடங்ககளில் ஏற்படும் தொந்தரவுகளை துணிவுடன் எப்படி கடந்து வருகிறார் என்பதை சொல்கிறது.
    துணிவும் , நேர்மையும் தேவை பெண்களுக்கு என்று சொல்கிறது.

    கதை விமர்சனம் அருமை. படிக்க தூண்டும் விமர்சனம்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதே கரு தான் அதிலும் இப்படியும் கையாளலாம் என்று அழகான இயல்பான முடிவு.

      கதை விமர்சனம் அருமை. படிக்க தூண்டும் விமர்சனம்.
      தொடர்கிறேன்.//

      நன்றி கோமதிக்கா.

      இன்று அடுத்த கடைசி 7 கதைகளையும் எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் எழுதவில்லை. கொஞ்சம் மனம் சுணங்குகிறது.

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பரிசு பெற்ற அடுத்த 7 கதைகளையும், அதை எழுதிய ஆசிரியர்களையும் விமர்சித்து நல்லவிதமாக பதிவை தந்துள்ளீர்கள். கதைகளை அலசிய விதம் நன்றாக உள்ளது. ஓரளவுக்கு முடிவை யூகிக்கும் வண்ணம் விமசர்னம் தந்திருக்கிறீர்கள். எல்லா கதைகளுமே நன்றாக உள்ளது. சில கதாசிரியர்களை தாங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதற்கும் பாராட்டுக்கள். இதில் நிறைய கதைகளை தாங்களும் வேறு மாதிரியாக யோசித்து எழுத நிறைய கருக்கள் கிடைக்கும். அதன்படி பல கதைகளை தாங்கள் எழுதி நாங்கள் படிக்க காத்திருக்கிறோம்.

    என் பதிவுக்கு தாங்கள் மறுபடி வந்து பல கருத்துக்களை தந்தமைக்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி. நான் இரு தினங்களாக வலைத்தளம் வர இயலவில்லை. என்னென்னவோ வேலைகள், அயர்வு என வந்து விட்டது. அதனால் இப்பதிவுக்கும் தாமதம். பொறுத்துக் கொள்ள வேண்டும் சகோதரி.

    மற்றொரு கதை அலசல் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரளவுக்கு முடிவை யூகிக்கும் வண்ணம் விமசர்னம் தந்திருக்கிறீர்கள்.//

      அக்கா உங்களைப் போன்றோரால் எளிதில் யூகித்துவிட முடியும்.

      அக்கா நம்ம பதிவர்களைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் பழக்கமில்லை. எல்லாம் அவர்களின் எழுத்தின் மூலம். அதுவும் அந்த எழுத்தை வாசிக்க உதவும் செல்லப்பா சார்தான் காரணம்.

      கருக்கள் கிடைக்குதுதான் ஆனால் எழுத வேண்டுமே....

      நன்றி கமலாக்கா முதல் நாள் உங்களுக்குச் சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியலை அதான் அப்புறம் வந்து கொடுத்துவிட்டு வந்தேன்

      நான் இரு தினங்களாக வலைத்தளம் வர இயலவில்லை. என்னென்னவோ வேலைகள், அயர்வு என வந்து விட்டது. அதனால் இப்பதிவுக்கும் தாமதம். பொறுத்துக் கொள்ள வேண்டும் சகோதரி.//

      பரவால்லைக்கா...அதனால என்ன? வீட்டுக்கு வீடு வாசப்படி! புரிந்து கொள்ள முடியும் கமலாக்கா

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    இதற்கு (இந்த பதிவுக்கு) நேற்று ஒரு கருத்து தந்திருந்தேனே.. காணவில்லையே...? வந்ததா? வரவில்லையா என தெரியவில்லையே சகோதரி. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா, நான் தளத்திற்குள் இப்பதான் வந்தேன். நேற்று எல்லாம் தளத்திற்குள் அதாவது எங்க தளத்துக்குள்ள வரவில்லையா அதனால உங்க கருத்து வந்ததைப் பார்க்க முடியலை. இப்ப. உங்கள் கருத்து பார்த்து வெளியிட்டுவிட்டேன்...

      கீதா

      நீக்கு