புதன், 19 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 3

 

சலூன் - ச சுரேஷ்

 

அமெரிக்காவில் வசித்துவரும் கதாசிரியரைப் பற்றி பிரமிப்பான குறிப்புகள். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி வந்தவர், சமீபகாலமாகத் தமிழில் எழுதி வருகிறார். கட்டுரைகள் நாவல்கள் கதைகள் என்று.

பொதுவாகக் கதை இலக்கணம் என்று சொல்லப்படும் தொடக்கம் முடிச்சு அதை அவிழ்த்தல், சஸ்பென்ஸ், என்று எதுவும் இல்லாமல் இயல்பான உரையாடல்களுடன் ஒரு கதாபத்திரம் - பெற்றோர் யார் என்று தெரியாத, குடும்பம் என்பதே இல்லாத, சலூன் நடத்தும் ஒண்டிக்கட்டை சிவா - பற்றிச் சொல்லும் கதை.

“அப்புறம் இன்னிக்கி என்ன புதுசா நடஞ்சுச்சு சலூன்ல? யாருக்கெல்லாம் ஃப்ரீயா புத்திமதி சொன்னே?”……

இப்படிக் கேட்கப்படும் கதாபாத்திரம் - இதுதான் சிவா!

சலூனுக்கு வரும் எப்படிப்பட்ட வாடிக்கையாளர்களோடும் சிவா உரையாடுவதும், அவர்கள் சிவாவை நட்புடன் அணுகுவதுமே சிவாவின் குணாதிசயங்களைச் சொல்லிவிடும். வாடிக்கையாளர்கள் பலரும் அவனிடம் ஐடியாக்கள், அறிவுரைகள் கேட்கிறார்கள். தங்கள் பிரச்சனைகளைச் சொல்லிக் கேட்பவற்றிற்குச் சிவா சொல்பவை, அவன் அனுபவங்களினால் புடம் போடப்பட்டு வந்தவன் என்பதைச் சொல்லும்.

“இல்லடா, உன்னால மத்தவங்ககிட்ட இருக்கற குறையைத்தான் பாக்க முடியுது. அவங்ககிட்ட இருக்கற நிறையையும் பாரு. உன்னோட வேலை மட்டுமில்ல உன்னோட வாழ்க்கையே நல்லா அமையும்” - தன் உதவியாளர் பையனிடம் சொல்வது உதாரணம்.

அவனிடம் ஒரு மனோதத்துவ மருத்துவர் வருகிறார். தன்னிடம் வந்த ஒரு தம்பதியரின் பிரச்சனையைச் சொல்லி, “நீ இதை எப்படி சால்வ் செய்வாய்” என்றிட,

அவன் ஒரு பதிலை சொல்கிறான்.

“நீ எல்லா ப்ராபளத்துக்கும் இப்படி ரொம்ப சிம்பிளா பதில் உன்னால மட்டும்தான் சொல்ல முடியும். இந்தப் பதிலை கேக்க அவங்க எனக்கு எவ்வளவு ஃபீஸ் தராங்க தெரியுமா?”

இந்த வரியினுள் ஆழமான பொருள் மறைந்திருக்கிறது.

திருமணம் செய்ய விருப்பம் இல்லாத சிவாவுக்குப் பெண்களே ஆகாதென்றில்லை. தேவியிடம் அவ்வப்போது செல்பவன் தான். அவளோடு பேசுவதும் அன்பும் உறவும் அவனுக்கு திருப்தி தரும் ஒன்று.

மருத்துவருக்குச் சொன்ன பதிலோடு அன்று சலூனிலிருந்து தேவியிடம் போகிறான். அப்போது தேவி கேட்பதுதான் மேலே உள்ள அந்தச்  சிவப்பு வரி.

அதோடு, சிவா மருத்துவர் கேட்டதைப் பற்றிச் சொன்னதும், தேவி கேட்கிறாள்

“கண்ணாலமே ஆவாத உன்னாண்ட கேக்க வேண்டிய கேள்விதான். என்ன பதில் சொன்ன?”

மருத்துவருக்குச் சொன்ன பதிலைச் சொல்லிக் கொண்டே…… அவளிடம்…..

சிவா சொல்லும் பதில் என்ன? அதற்கும் கதைக்குமான அர்த்தம் என்ன?

கதை என்று சொல்வதை விட, சிவா எனும் ஒரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பு.

ஆசிரியர் ச சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

 

சுரண்டல்கள் - நா பா மீரா


நா பா அவர்களின் மகள் எழுதியிருக்கும் கதை.

பிறந்த வீட்டிலும் கஷ்டப்பட்ட, இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டுக் கஷ்டப்பட்டு, இடையில் கணவனும் போய்விட பெற்ற பிள்ளைகளில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு மகனை வளர்த்து ஆளாக்கி, அவன் திருமணமும் செய்து கொண்டபின், முதியோர் ஆசிரமத்தில் விடப்படும் தாயின் வழக்கமான கதை.

இல்லம் அமைந்திருக்கும் பகுதி இயற்கை சூழ் பகுதி என்பதால் அப்பகுதியில் குறும்படம் எடுக்க வரும் குரு எனும் இளைஞன் உடல் நலக்குறைவால் தங்க வேறு இடம் இல்லாததால் இல்லத்தில் அவனைத் தங்க வைத்து கவனித்துக் கொள்கிறார்கள்.

அப்படிப் பரிச்சயம் ஏற்பட்ட பின், அவனுக்கு அந்த இல்லத்தோரிடம் ஒரு பரிவு ஏற்பட, தன் குறும்படம் முடிந்த பின்னும், இல்லத்துப் பாட்டிகளை வைத்து யுட்யூப் சானலில் ஒரு சமையல் ஷோ செய்ய விரும்புகிறான். இல்லத்து நிர்வாகி பாட்டிகளிடம் முடிவை விட்டுவிட பாட்டிகள் கலந்தாலோசித்து ஷோ வுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறார்கள். அவர்களுக்கும் ஒரு வருமானத்திற்கு வழி.

மகன் தன் தாயை அழைத்துச் செல்ல வருகிறான். தாய் என்ன முடிவெடுக்கிறாள்? அவள் சொல்லும் காரணம் என்ன? அதை எப்படிச் சொல்கிறாள்? சுரண்டல்கள் என்பதை முடிவில் எப்படிப் பொருத்திச் சொல்கிறார்?

கதை நன்று. ஆசிரியர் நா பா மீரா அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

 

சக்ரியதா - எஸ்.எல்.நாணு


கதாசிரியர் நிறைய கதைகள் எழுதுபவர், காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் நாடக்க் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்த அனுபவம் பெற்ரவர். குறும்படங்கள் இயக்குபவர். இவரது படைப்புகள் ஆச்சரியம். சினிமாவில் வசன்், தொலைக்காட்சித் தொடர்கள், எழுத்து என்று பிஸி.

இவருடைய “கூரியர்” கதையை குவிகம் மாத இதழில் வாசித்திருக்கிறேன். கூரியர் என்பதற்கான பொருளை அவரது கோணத்தில் சிந்தித்து எழுதிய விதம் ரொம்ப நன்றாக இருந்தது. 

சரி போட்டிக் கதைக்கு வருகிறேன். சக்ரியதா - இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?  புரியவில்லை முதலில். இந்த ஒரு சமஸ்க்ருத வார்த்தையை வைத்து உளவியல் பிரச்சனையை அணுகி பின்னியிருந்த வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதை. அதற்கே ஆசிரியரைப் பாராட்ட வேண்டும். கதை சொல்லியின் நடையில் பயணிக்கும் கதை.

கதை சொல்லியின் அண்ணாவின் மனைவி இறந்ததும், அண்ணாவின் மனநிலையில் ஏற்படும் மாற்றம். "Hypochondriac" தனக்கு உடல் உபாதைகள் இருப்பது போன்ற ஒரு மனப்பிரமை.

கதை சொல்லி தன் அண்ணாவை தினமும் பார்த்துவிடுவது வழக்கம். அவரது மனைவியும் அக்கறை எடுத்துக் கொள்வது என்று பாசமான குடும்பம். அண்ணாவின் பக்கத்துவீட்டிற்கு ஒரு இளைஞன் குடிவருகிறான்.

கதைசொல்லிக்கு வேலை விஷயமாக நாக்பூர் செல்லும் வேலை. அந்த இளைஞனிடம் சொல்லிவிட்டுப் போகிறார். திரும்பி வந்து பார்த்தால் ஆ்ச்சரியம்.

“சக்ரியதா” என்று சொல்கிறான் அந்த இளைஞன்.

எப்படி இந்தப் பிரச்சனை தீர்கிறது என்பது கதையில். வயதாகும் போது துணை இல்லை என்றால் எப்படிக் கையாளலாம் என்று கதையில் சொல்லப்படுவது, தற்போது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் கதையை நன்றாக எழுதியிருக்கிறார்.

சரி “சக்ரியதா”ன்னா என்ன அர்த்தம்? செயல்நிலைப்படுத்துதல். கதை சொல்லியும் “சுக்ரியா” (நன்றி) என்று சொல்லி கதையை முடிக்கிறார்.

கடைசியில் வரும் இளைஞனின் தீர்வு சொல்லும் பகுதியை மட்டும் கொஞ்சம் தட்டிக் கொட்டியிருக்கலாமோ என்று தோன்றியது. மற்றபடி எனக்குக் கதை ரொம்பப் பிடித்திருந்தது. உளவியல் கதை என்பதால் மட்டுமல்ல. வித்தியாசமாக ஒரு வார்த்தையைச் சுற்றிப் பின்னி எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இவரது மற்ற கதைகளையும் வாசிக்கும் ஆர்வம் எழுகிறது.

கதாசிரியர் எஸ் எல் தாணு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!


நீதிக்கு தண்டனை - நித்யா என்


கதாசிரியர் நித்யா, பெண்கள் பத்திரிகைகள்/அச்சு இதழ்களில் எழுதுகிறார். போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறார்.

நீதிக்கு தண்டனை - வளர்மதி பள்ளிக்கு வரவில்லை என்று அவள் தமிழ் ஆசிரியை வளர்மதியின் தோழியுடன் வளர்மதியைக் காணச் செல்லலாம் என்று செல்ல, வளர்மதியின் குடும்பம் முன்பிருந்த பகுதியிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு வீடு மாறியிருப்பதால் அவளது தற்போதைய வீட்டைக் கஷ்டப்பட்டுத் தேடிக் கொண்டு செல்கிறார்.

ஏன் வீடு மாறினார்கள், வளர்மதி ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரியவருகிறது. வளர்மதியின் அக்கா ஓடிப் போனதால்.

ஆசிரியை, அதற்கும் இவள் பள்ளிக்கு வராததற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார். வாசகர்களால் எளிதில் ஊகித்துவிட முடிகின்ற வழக்கமான காரணம்தான்.

ஆசிரியை அறிவுரை பரிந்துரைகள் சொல்கிறார். வளர்மதியின் அப்பா கண்டிப்பாக மனம் மாறமாட்டார் பிடிவாதம் என்று வளர்மதியின் அம்மா சொல்கிறாள். பத்தாவதுவ் அரை படித்தால்தானே ஏதாவது வேலைக்குக் கூடப் போக முடியும் என்று சொல்லும் ஆசிரியை, பெரிய மேடத்துடன் வளர்மதியின் அப்பாவை வந்து சந்திப்பதாகச் சொல்லிச் செல்கிறார். 

அதன் பின் என்ன ஆகிறது? அப்பா மனம் மாறுகிறாரா? வளர்மதி பள்ளிக்கு மீண்டும் செல்வாளா?

கதாசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்!

(இப்படியான ஒரு குடும்பத்தை, என் வீட்டைத் தொட்டடுத்து நேரில் பார்த்திருக்கிறேன். அதை அடிப்படையாக வைத்து, ஒரு கதை எழுதியிருந்தேன். மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. மின் நிலாவில் என்று நினைவு.)

 

ரேணுப்பாட்டியும் பாக்குவெட்டியும் - புலியூர் அனந்து


புலியூர் அனந்து உங்களில் சிலருக்குப் பரிச்சயப்பட்ட பெயராக இருக்கலாம்.

இக்கதை ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. ஒரு பொருள் தொலைந்து போனால் அது கிடைக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் ஒரு இரும்புப் பொருளை அதாவது இவர்கள் வீட்டில் பாக்குவெட்டி, போட்டால் தேடியது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, ரேணுப் பாட்டிக்கு.

மருமகள் ஆஃபீஸ் ஃபைலைத் தேடுகிறாள். வழக்கம் போல ரேணுப்பாட்டி என்ன செய்வார் என்று மருமகளுக்குத் தெரியும். வீட்டிலுள்ள இரும்புப் பொருளான பாக்குவெட்டியை தண்ணீரில் போடுவார்.

அப்படிக் கதை தொடங்குகிறது. கூடவே மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்கும் பேரன் தொடர்பு படுத்திச் சொல்வது போல் கதாசிரியர் கொண்டு செல்கிறார். பாட்டியின் ‘பிராக்டிகல்’ அணுகுமுறைதான், காரணகாரியம் என்று ஒரு பிலாஸபி. அதைப் பாட்டி எப்படிப் புரிந்து கொள்கிறாள் கேள் என்று அம்மாவிடம் சொல்வதாக….”தேடிய பொருள் கிடைக்காது. காத்துக் கொண்டிருக்கும் பஸ் வராது என்றுதானே அலுத்துக் கொள்வோம். கிடைக்கவில்லை. அதனால் தேடுகிறோம் கிடைத்தபின்னும் யாராவது தேடுவார்களா?

இப்படி தொடர்புப்படுத்திவிட்டு, ரேணுப்பாட்டியின் ஃப்ளாஷ்பேக், பாக்குவெட்டிக்கான ஃப்ளாஷ் பேக் கதை என்று பயணித்துவிட்டு, நம்பிக்கைகள் பற்றி லா சா ரா சொன்னதையும் சொல்கிறார்.  

சரி கடைசியில் மருமகள் தேடிய ஃபைல் கிடைத்ததா?

ஆசிரியர் புலியூர் அனந்து அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள்!


முடிவு - கிரிஜா ராகவன்


எழுத்து ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் இவற்றில் மிகவும் பிரபலம். எனவே உங்களில் பலருக்கும் தெரியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.

முடிவு - கதையை வாசிக்கத் தொடங்கும் போதே முடிவை நாமும் ஊகிக்க முடிகிறது.

தனக்கு வயதாகிவிட்டது என்று ஒரு நாளும் ஒப்புக் கொள்ளாத, தனக்கு உடம்பு சரியில்லை என்று காட்டிக் கொள்ள விரும்பாத அப்பா, இனி அவர் பிழைக்கமாட்டார் என்று சொல்லப்பட்டு வென்டிலேட்டரில் ஸ்வாசித்துக் கொண்டிருக்கிறார். வென்டிலேட்டரை எடுத்துவிட்டால் அதிகபட்சம் 8 மணிநேரம், எனவே முடிவு குடும்பம் எடுக்கும் முடிவு என்று டாக்டர் சொல்லிவிடுகிறார்.

அப்பாவைப் பார்த்துவர அம்மா விரும்புகிறாள். மகனும் மருமகளும் பக்கபலமாக ஆதரவாக இருக்கும் அன்பான குடும்பம்.

இதுநாள் வரை அப்பாவை கேட்காமல் ஒரு அடி கூட எடுத்து வைக்காத அம்மா எடுக்க வேண்டிய மிகப் பெரிய முடிவு. இதுவரையான இனிமையான வருடங்களை அம்மா நினைத்துப் பார்க்கிறார்.

அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அம்மா என்ன முடிவு எடுக்கிறாள்? எப்படி எடுக்கிறாள்? அதுதான் கதை.

மிக அழகாக எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் கிரிஜா ராகவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்!


சந்திரா - ந சிவநேசன்


பள்ளி ஆசிரியர். ஓவியர். எழுத்தாளர் கூடவே விவசாயமும் என்ற பன்முகங்கள் கொண்ட இளைஞர்.

கதையை மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார்.

ரூபாவின் சிறுவயதிலிருந்தே அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சந்திரா. ரூபாவை தன் மகளாகவே நினைத்து அன்பு செலுத்தும் பெண்மணி. அந்த மகளின் மகளுக்குப் புனித நீராட்டுவிழா சென்னையில். சேலத்திலிருக்கும் இவரையும் அழைக்கிறார்கள். அங்கு செல்லும் சந்திராவின் செயல்பாடுகள், அவரின் அன்பு அவருடைய கள்ளமற்ற பேச்சு, ஆனால் சுற்றத்தார்கள் என்ன நினைக்கிறார்கள், ரூபாவின் உணர்வுகள் இதுதான் கதை.

இந்த இடத்தில் கதாசிரியர் சொல்லும் அந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல.

“பணக்கார வர்கத்துக்கும் ஒரு ஏழைக்கும் இடையே யுகம் யுகமாய்க் கடைப்பிடித்து வரும் இடைவெளியை, இந்தச் சந்திரா, எங்கே தன் கள்ளம் கபடமற்ற அன்பால் நிரப்பி விடுவாளோ என்ற பயம் எல்லோருக்குமே இருந்தது”

இக்கதையும் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றியது என்றாலும் உணர்வுபூர்வமான ஒன்று.

ரூபாவிற்கும் சந்திரா மீது ஏற்பட்ட அன்பிற்கு என்ன காரணம்? அது கதையில் ......

கதையைப் படிப்படியாக வாசித்து வரும் போது முடிவை ஊகிக்க முடிகிறது என்றாலும் ஆசிரியர் அந்த முடிவைச் சொல்லிய விதம் அந்த வரி அருமை. உணர்வு பூர்வமான ஒன்று.

சந்திரா நம் மனதில் தங்கிவிடுகிறாள்!

கதாசிரியர், இளைஞர் ந சிவநேசன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்! பாராட்டுகள்!

 

அடுத்த செட் 7 தொடரும்…


--------கீதா


(இடையில் வேறு பதிவு ஒன்று போடலாம் என்று நினைத்தேன். ஆனால் படங்கள் தொகுக்க வேண்டும்...எழுத வேண்டும். கதையும் எழுத வேண்டும் என்று நினைத்து நிற்கின்றது. இதற்கு இடைவெளி விட்டுவிட்டால் அப்புறம் இது அப்படியே நின்றுவிடுமே என்று இதைத் தொடர்ந்து போட்டுவிடலாம் என்று போடுகிறேன். இன்னும் இரண்டு செட் தான் இருக்கின்றன. உங்களுக்குப் போரடிக்கலாம்.... கொஞ்சம் பொறுத்துக்கோங்க!!!!!)

 

9 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய தங்களின் விமர்சனத்தில், வந்த ஏழு கதைகளும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு கதைகளையும் அலசி நீங்கள் திறம்பட செய்தளித்த விமர்சனங்கள் கதையை அதன் முடிவை ஓரளவு ஊகிக்க வைக்கிறது. போட்டியில் வெற்றி பெற்ற கதாசியர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    தங்களின் இந்த தொடர் பதிவு எனக்கு போரடிக்கவில்லை. மாறாக விதவிதமாக ஒவ்வொரு கதைகளையும் முழுதாக படித்த திருப்தி வந்தது. அனைவருமே நன்றாக எழுதியுள்ளனர். அனைவருக்கும், அவர்கள் எழுதிய கதைகளை உங்கள் அருமையான எழுத்தின் பாணியில், நன்றாக விமர்சிக்கும் உங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். தொடரட்டும் உங்களின் இக்கலைப்பணி. நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கமலாக்கா...சில கதைகளை ஓரளவு ஊகித்து விடலாம், இங்கு சொல்வதை வைத்தே. சிலர் எழுதிய விதம் மிக நன்றாக இருக்கின்றன.

      எனக்கு அந்தத் திறமை எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனாலும் ஓர் ஆர்வத்தில் எழுதுகிறேன், அக்கா.

      நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு
  2. ​மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று விமரிசனம் எழுதிவிட்டீர்கள். ஹூம். காண்பது எப்போது என்பதே மனதில் உதிக்கும் கேள்வி. ஆக பதிவு முழுமை பெறாதது போல் ஒரு உணர்வு
    .
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா எனக்கும் எப்பவும் இந்த வரிதான் நினைவுக்கு வரும் விமர்சனம் எழுதும் போது. மீதியை வெள்ளித்திரையில் காண்க என்ற வரி.

      அண்ணா மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் இது 'நான் படிச்ச கதை' க்கு எழுதுவது போல அல்லவே. நூல் விமர்சனம் அதுவும் விற்பனையில் இருக்கும் புத்தகங்கள் என்பதால்.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா எனக்கும் எப்பவும் இந்த வரிதான் நினைவுக்கு வரும் விமர்சனம் எழுதும் போது. மீதியை வெள்ளித்திரையில் காண்க என்ற வரி.

      அண்ணா மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் இது 'நான் படிச்ச கதை' க்கு எழுதுவது போல அல்லவே. நூல் விமர்சனம் அதுவும் விற்பனையில் இருக்கும் புத்தகங்கள் என்பதால்.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  3. புத்தகங்கள் விற்க வேண்டும் என்றால் இப்படி ஆர்வத்தைத் தூண்டினால்தான் உண்டு.  இப்படி படித்து எத்தனை பேர் புத்தகம் வாங்க செல்லப்பா சாருக்கு ஆர்டர் போகிறது என்று பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....ஸ்ரீராம், நீங்க சொல்றது சரிதான். ஆனால் ஆர்டர் செல்லப்பா சாருக்குப் போகுமா என்று தெரியவில்லை. சம்சயம்தான்!!!!!

      ஆனால் அந்த எதிர்பார்ப்பு கம்மிதான் நான் போடுவது, எனக்கு ஒரு பயிற்சிக்காக, புத்தகம், கதையைப் பற்றி எப்படியெல்லாம் எழுதலாம் என்ற ஒரு பயிற்சி.

      நீங்க கூட ஒருமுறை சொன்ன நினைவு, புத்தக விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர் ஒருவர் - பெயர் மறந்து போச்சு - எழுதியிருந்ததாக. பகிர்கிறேன் என்றும் சொன்னீங்க.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. // நீங்க கூட ஒருமுறை சொன்ன நினைவு, புத்தக விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர் ஒருவர் - பெயர் மறந்து போச்சு - எழுதியிருந்ததாக. பகிர்கிறேன் என்றும் சொன்னீங்க. //

    அச்சச்சோ...   அப்படியா சொன்னேன்?  யாரென்று நினைவில்லையே....  எடுத்து வைத்திருக்கிறேனா என்றும் தெரியவில்லை, நினைவில்லையே....  எனக்கே ஆர்வம் வருகிறது!  எப்படி மறந்தேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னதை நானும் இன்னும் எந்த சமயத்தில் நாம பேசினோம்னு கொஞ்சம் recollect பண்ணிவிட்டு உங்ககிட்ட பேசறப்ப சொல்றேன் அப்ப உங்களுக்கு நினைவு வருதான்னு பாருங்க, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு