புதன், 13 ஜூலை, 2022

அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 1

 

மலேசியா - கோலாலம்பூர் நகரம்

நீண்ட நாட்களாகப் பிள்ளைகள் ஒரு வெளிநாட்டு சுற்றுலா பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார்கள்மூத்த மகன் ரஷ்யா ஆர்க்எங்கல்ஸில் மருத்துவம் படிப்பதால் அவன் அங்கிருந்து வரும் முன் நானும், மனைவியும், மகன் விநாயக் மற்றும் மகள் அபிராமியுடன் அங்கு போய் மகனுடன் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஆர்க்ஏங்கல்ஸ் சுற்றிப் பார்த்து திரும்ப முடிவு செய்திருந்தோம். எதிர்பாராமல் ரஷ்யா உக்ரெய்ன் போர். அந்த முயற்சியைக் கைவிட்டோம்.

அருண், கடந்த ஜூன் 18 அன்று கோழிக்கோடு கரிப்பூரில் வந்து இறங்குவான் என்று முடிவானது. பிள்ளைகளை இனியும் அமைதிப்படுத்த முடியாது எனும் நிலை. அவர்களுக்கும், எனக்கும் அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாது. யோசித்ததில், கடைசியாக ஸ்கைஹின்ட் Skyhind எனும் Travels and Tours Companyன் ஒரு சுற்றுலா Package ஏற்றதாய் தோன்றியதுஆளுக்கு ரூ 37,500. 3 இரவுகள், 4 பகல்கள் அடங்கும் சுற்றுலா. மலேசியா மட்டும். ரஜீஷ் என்பவருடன் பேசினேன்

இணையத்திலிருந்து - நன்றி கூகுள்

முன்பணம் கொடுத்துப் பதிவும் செய்தேன். 29-06-22 இரவு 11.30க்குக் கொச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானத்தில். திரும்புவது 03-07-22 அதே விமானத்தில் அங்கிருந்து இரவு 9.30க்குக் கிளம்பி இங்கு இரவு 11 மணிக்கு வரும்.

இரு நாடுகளுக்கும் 2.30 மணிநேரம் வித்தியாசம். போகும் போது 4 மணி நேரப் பயணத்துடன் அதைக் கூட்ட வேண்டும். திரும்பும் போது குறைக்க வேண்டும்.

அப்படிப் போகும் போது இரவு 11.30க்குப் புறப்படும் நாங்கள் காலை 6.20க்கு  அங்கு சென்று சேர்வோம். அங்கிருந்து திரும்பும் போது இரவு 9.30 ற்கு விமானமேறி இங்கு இரவு 11 மணிக்கு வந்து சேர்வோம்.

கோவிட் சான்றிதழ், PAN கார்ட் எல்லாம் விசாவுக்காகத் தேவைப்பட்டது. கூடவே மலேசியா அரசின் Mysejahtera ல் பதிவு செய்து பயண அட்டையும் எல்லோருக்கும் கிடைத்தது.

இரு நாட்களுக்குப் பின் மொத்தப் பணமும் ஸ்கைஹிண்டுக்கு அனுப்பப்பட்டது. அடுத்து என் வகுப்புகளும், விநாயக், அபிராமியின் வகுப்புகளும் அதிகம் வீணாகாமல் போய் வர ஆலோசனை செய்யத் தொடங்கினேன்.

நான் 29-06-22 வகுப்பு முடித்துக் கிளம்பலாம். அபிராமி கண்ணூரிலிருந்து மதியம் ரயில் ஏறி, திருச்சூரில் இறங்கும் நேரம் நாங்கள் அங்கு சென்று அழைத்துப் போகலாம். விநாயக் திருவனந்தபுரத்திலிருந்து மதியம் வருவது சிரமம் ஆதலால் 28-09-22 இரவே நிலம்பூர் ரயில் ஏறி 29-09-22 காலை வீடு வர முடிவு செய்தேன். நாங்கள் பயணம் முடிந்து வரும் இரவே விநாயக் மீண்டும் திருவனந்தபுரம் போக குருவாயூர் சென்னை ரயிலில் ஆலுவாவிலிருந்து ஏற பயணச் சீட்டு பதிவு செய்தேன். கொஞ்சம் தூங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லலாம். 5.15ற்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இறங்கலாம்.

ஆனால் இரவு 12.42 க்கு ஆலுவா ரயில் நிலையம் சென்றடைய வேண்டும். கவலைப்படத் தேவையில்லை. திரும்பும் அன்று இரவு 11 மணிக்கு விமான நிலையம் வந்து விடுவோமே. 2 மணி நேரம் 40 நிமிடங்கள் இருக்கிறதே என்ற சமாதானம். இதை எதற்குச் சொல்கிறேன் என்பது கடைசிப் பதிவில் தெரியும்.

வீட்டிலிருந்து கொச்சி விமானநிலையம் வரை காரில் சென்று அங்கு நான்கு நாட்கள் பார்க் செய்ய முடிவு செய்தேன். நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ஆகும். இப்படி ஓரளவு எல்லாம் முடிவாகியது. 29-06-22 க்காகக் காத்திருந்தோம்.

29-06-22 அதிகாலை விநாயக் வீடு வந்து சேர்ந்துவிட்டான். எல்லாப் பொருட்களும் பெட்டி பைகளில் வைத்துத் தயாராகி விட்டன. இரவுச் சாப்பாட்டிற்குப் பொதிகளும் தயார். நான் வகுப்புகள் முடித்து 1 மணிக்கு வீட்டை அடைந்து சரியாக 2 மணிக்குக் கிளம்பினோம்.

வழக்கம் போல் வண்டூர் சிவனருள் பெற்றுப் பயணமானோம். மகளும் ரயிலேறி திருச்சூர் வந்து இறங்க, நான் காரை சாலை ஓரம் நிறுத்தி வேகமாகச் சென்று, அபிராமியை ஒரு ஆட்டோவில் அழைத்து வந்து காரில் ஏறும் போது ஒரு காவலர் வண்டியை எடுக்கக் கை காட்ட, உடனே கிளம்பினோம்.

எதிர்பார்த்ததை விட சாலையில் அதிகமாக வாகனங்கள். அங்கமாலியை அடையும் போதே இரவு 8 மணி. சுற்றுலாக் குழு (25 பேர் கொண்ட குழு) வாட்சப் குழுமத்தில் புகைப்படங்கள் வரத் தொடங்கியது. அப்போது வரை சாப்பிட்டிருக்கவில்லை.

வசதியான ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பிரித்து அவசர அவசரமாகச் சாப்பிட்டோம். நேரம் 8.30 மணி. மீண்டும் பறந்தோம். விமான நிலையத்தில் புறப்பாடு குறி காட்டும் வழியில் போய், தூண் எண் 8 நோக்கிச் சென்றோம். அங்குதான், எங்களுடன் வரும் திரு ராஜீஷ், குழுவினருடன் காத்திருப்பதாய்ச் சொன்னார்.

கொச்சி விமான நிலையம்

அவரைக் கண்டு எல்லோரையும் அவரிடம் ஏற்பித்து விட்டு, காரை நிறுத்தும் இடத்தில் நிறுத்தச் சென்றேன். நான்கு நாட்களுடன் சில மணி நேரங்கள் அதிகமாவதால் 5 நாட்கள் என்றார், கட்டணம் வாங்கியவர். சரி என்று பணம் அடைத்து ரசீதைப் பெற்றுக் கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு, வேகமாகக் குழு இருக்கும் இடத்தை அடைந்தேன்.

எல்லோரும் போர்டிங்க் பாஸ் வரிசையில் நின்று வாங்கினோம். கோவிட் சான்றிதழ் காண்பிக்க வேண்டியிருந்தது. அடுத்து பாதுகாப்புச் சோதனை. பெல்ட், கைக்கடிகாரம், சில்லறைகள் என்று எல்லாம் காட்டி, அந்த இட்த்திலிருந்து தப்பித்து சிறிது நேரம் காத்திருந்த பின்ஏர் ஏசியாவிமானத்தில் ஏறினோம்.

இரு புறமும் மூன்று இருக்கைகள். 23, ஏபிசிடிஇ என்று எங்களுக்கான இருக்கைகள். அடுத்த நான்கு மணி நேரம் ஆகாயத்தில். சோர்வில், பல சிந்தனைகளுக்கு இடையே எப்போதோ மயங்கிவிட்டேன். அறிவிப்பும், சலசலப்பும் எழுப்ப, ஜன்னல் வழியே கீழே பார்க்க மலேசியா அதிகாலை இருளில் மிளிர்ந்தது.

குழு நபர் ஒருவர் எடுத்த படம்

கோலாலம்பூர் கோபுரத்திலிருந்து - கோலாலம்பூர் நகரம் - பறவைப் பார்வை

கொஞ்சம் கொஞ்சமாகச் சாலைகளும், அதில் பாயும் வாகனங்களும் தெளிவானது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் விமானம் இறங்க, நாங்களும் இறங்கினோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் கைப்பை. அருணுக்கு மட்டும் ஒரு 20கி பெட்டி.

மலேசியா விமான நிலையம்

அங்குள்ள குளியலறைகளில் களைப்பு போக கொஞ்சம் எங்களை Refresh செய்து கொண்டோம். ராஜீஷ் என்பவர்தான் எங்களோடு எப்போதும் இருக்கும் பயண வழிகாட்டி என்றாலும், மலேசியாவில் எங்களுக்கான வழிகாட்டியான நிர்மலா என்பவரும், எங்களை அழைத்துச் செல்ல இருந்த பேருந்து ஓட்டுநர் சந்தோஷும் அவர்களது நிறுவனரும் எங்களை வரவேற்றார்கள். 40 இருக்கை உள்ள பேருந்து எங்களைச் சுமந்து நகர்ந்தது. முடிந்தால் இந்தக் காணொளியைப் பாருங்கள். 

மலேசிய விமான நிலையத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற போது எடுத்த காணொளி. என் குரலுடன். யுட்யூப் சுட்டியும் இதோ

பேருந்தில் என் மனதில் எழுந்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டே மலேசியாவையும் சுற்றிப் பார்ப்போம். என்னுடன் வாருங்கள். நாம் பேசிக் கொண்டே பயணிப்போம்.



என் பதிவுகளை, படங்களை கீதாவுக்கு இப்படி அனுப்பிட அவர் மற்றவற்றைக் கவனித்துக் கொள்கிறார். மற்றவர்களின் பதிவிற்கும் இப்படி அல்லது தமிழை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிவிடுவது வழக்கம். இப்படித்தான் எங்கள் வலைப்பூ இது வரை இயங்கிக் கொண்டிருக்கிறது.

---துளசிதரன்




22 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தொடக்கம் காணொளி கண்டேன்.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி. தொடர்ந்து வாருங்கள்

      துளசிதரன்

      நீக்கு
  2. எனக்கும் கீதா அவர்கள் உதவி செய்கிறார். நான் எங்கள் பிளாகில் வரவேண்டிய பதிவுகளை microsoft word கோப்புகளாக அவருக்கு அனுப்புவதை அவர் html கோப்பாக மாற்றி ஸ்ரீ ராமிற்கு அனுப்பிவிடுவார். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சொல்லியிருக்கிறார்.

      மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் சார்

      துளசிதரன்

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  4. பயணத் தொடக்கம் அருமை. தொடர்கிறேன். நான் ஒரு முறை மலேசியா சென்று வந்துள்ளேன். பயண நினைவுகள் மனதில் வலம் வருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் மலேசிய ஒரு முறை சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்துவாருங்கள்

      மிக்க நன்றி நண்பர் கரந்தையார்

      துளசிதரன்

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அழகாக இருக்கிறது. இருளில் ஒரு ஜோதியாக தெரியும் விமான படம் பார்க்க மிக நன்றாக உள்ளது.

    திட்டமிட்ட பயண விபரங்கள் குறித்து அருமையாக எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்துப் படிக்கும் போது உங்களுடன் பயணம் மேற்கொள்ளும் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்கிறது. காணொளியும் பார்க்கிறேன். தங்கள் எழுத்துக்கள் தெளிவாகவும், அழகாகவும் உள்ளது. மலேஷியா பயணத்தில் நானும் தொடர்ந்து வருகிறேன்.

    பயண பகிர்வினுக்கு மிக்க நன்றி. தங்களின் பதிவை தயார்படுத்தி தரும் சகோதரி கீதா ரெங்கன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்டமிட்ட பயண விபரங்கள் குறித்து அருமையாக எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்துப் படிக்கும் போது உங்களுடன் பயணம் மேற்கொள்ளும் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்கிறது.//

      மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      தொடர்ந்து வாருங்கள். மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  6. சுவாரஸ்யமான பயணம் தொடக்கம்.  எல்லோருக்குமே ஒரு மாறுதல் இப்படி சென்று வருவது நல்லதுதான்.  உற்சாகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு. ஆமாம் நல்ல ஒரு மாறுதலாகத்தான் இருந்தது.வும் உற்சாகமாகவும் இருந்தது.

      துளசிதரன்

      நீக்கு
  7. மலேசியாவைப் பார்க்கவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை. உங்கள் கண்களின் மூலம் அதை இப்போது நிறைவேற்றிக்கொள்ளலாம் அல்லவா? ஆட்சேபனை இல்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆசையும் நிறைவேறும் செல்லப்பா சார். பதிவிற்குத் தொடர்ந்து வாருங்கள் சார். மகிழ்ச்சி. மலேசியா என்றால் சென்றது அதன் தலைநகர் கோலாலம்பூர் மட்டுமே.

      மிக்க நன்றி இராய செல்லப்பா சார் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  8. மலேசியா பயண கட்டுரை அருமை.
    காணொளி, மற்றும் படங்கள் நன்றாக இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு. ரசித்தமைக்கும் கருத்திற்கும் நன்றி.

      துளசிதரன்

      நீக்கு
  9. இயந்திரமாகக் கழியும் நாட்களுக்கு மத்தியில் இந்த மாதிரி பயணங்களும் அவை சார்ந்த அனுபவங்களும் தான் அவ்வப்போது புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
    ஆனால் கோலாலம்பூரை சுற்றிப்பார்க்க மட்டுமே நிறைய நாட்கள் தேவைப்படும். இந்த நான்கு நாட்கள் நிச்சயம் போதுமானதாய் இருந்திருக்காது.
    புகைப்படங்கள், காணொளி எல்லாமே அழகு!
    நான் கோலாலம்பூர், பினாங்கு என்று சில முறைகள் மலேஷியா சென்று வந்திருக்கிறேன். ஆனாலும் பார்த்து ரசிக்க வேண்டிய அழகான இடங்கள் உள் மாகாணங்களில் தான் இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். போதுமானது இல்லைதான். உள் மாகாணங்களில் இருக்கும் இயற்கை எழிலை காண வாய்ப்பு கிடைப்பவர்கள் வாயிலாகத்தான் அறிய முடியும். உங்கள் அனுபவங்கள் எழுதியிருக்கிறீர்களா? இல்லை என்றால் பகிர்ந்து கொண்டால் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

      மிக்க நன்றி சகோதரி மனோ சுவாமிநாதன்

      துளசிதரன்

      நீக்கு
  10. மலேசிய பயணம் ஆரம்பமே அமர்களமாக செல்கிறது. தொடர்ந்து தங்களின் பயண அனுபவங்களை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்... நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா உங்கள் கருத்திற்கு. தொடர்ந்து வாருங்கள்.

      துளசிதரன்

      நீக்கு
  11. தொடக்கம் அருமை. கடைசியில் திட்டமிட்டபடி உங்கள் மகன் திருவனந்தபுரம் சென்றிருக்க முடியலையோ? கடைசிப் பதிவை இன்னமும் போடவில்லை என நினைக்கிறேன். ஆரம்பமே நன்றாக இருக்கிறது. தொடர்ந்த பதிவுகளையும் கடைசியில் இருந்து படித்தேன். :))))) ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து கொண்டு அனைவரும் கூடிச் சுற்றுலாவுக்குச் சென்றிருப்பது நிஜமாகவே அரிய செயல் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனுக்கு ரயிலில் ஏற முடிந்ததா இல்லையா என்று நாளை பதிவில் தெரிந்துவிடும். இடையில் வலைத்தளத்திற்கு விடுமுறை கொடுக்க வேண்டியிருந்ததால் பதிவு படங்கள் போட முடியவில்லை. எல்லாமே கீதாவின் வீட்டிலிருந்துதானே வெளியிடப்படுகிறது இக்கருத்து உட்பட. அதன் பின் 4 வது பதிவும் தாமதித்தற்குக் காரணம் என்னென்ன போட வேண்டும் என்று கலந்துரையாடி, என் குரல் பதிவு செய்து காணொளியில் இணைத்து என்று பலவற்றால் தாமதமாகிவிட்டது.

      //ஆரம்பமே நன்றாக இருக்கிறது. தொடர்ந்த பதிவுகளையும் கடைசியில் இருந்து படித்தேன். :))))) ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து கொண்டு அனைவரும் கூடிச் சுற்றுலாவுக்குச் சென்றிருப்பது நிஜமாகவே அரிய செயல் தான்.//

      ஆமாம் எல்லோரதே நேரம் விடுமுறை அனுசரித்து திட்டமிட வேண்டியதாக இருந்தது இறை அருளால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

      மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் எல்லாப் பதிவுகளையும் தொடர்ந்து வாசித்துக் கருத்தும் கொடுத்ததற்கும் ரசித்ததற்கும்.

      உங்கள் கணினியில் பிரச்சனைகள் பதிவின் மூலம் தெரிந்ததே. இப்போது சரியாகியிருக்கும் என்று நினைக்கிறேன்

      துளசிதரன்

      நீக்கு