ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

"வளரும் கவிதை" தளத்தில் தவழும் தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ் - 2

இணைய  எழுத்தாளர் என்ன சொல்கிறார்?–

http://valarumkavithai.blogspot.com/2016/03/2.html

(2) “தில்லைஅகத்து” - துளசி-கீதா 

 (4)  இணையத்தமிழ் வலைப்பக்கங்கள் தமிழ்ச்சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றனவா?

சமீபத்தில் யுனெஸ்கோ, அழிந்து வரும் மொழிகள் என 25 மொழிகளைப் பட்டியலிட்டு அதில் தமிழ் 8 வது இடம் என்று சொல்லியிருப்பதைப் பார்த்த போதும், நகரங்களில், சிறு நகரங்களில் கூட இரண்டாவது மொழிப்பாடமாக இந்தியையோ, சமஸ்க்ருதத்தையோ எடுத்துப் படிக்கும் மாணவ மாணவிகளைப் பார்க்கும் போதும், தமிழ் மொழி அழிந்தால் தமிழ்ச்சமூகமும் அழிந்துவிடாதோ? யுனெஸ்கோவின் புள்ளியியல் பலித்துவிடுமோ? என்ற அச்சம் ஒரு பக்கம் எழுந்தாலும்...

ஒரு சமூகத்தின் வளர்ச்சியே அதன் மொழியைச் சார்ந்ததுதான். எனவே, தமிழ்ச்சமூக வளர்ச்சி என்பது தமிழ் மொழியைச் சார்ந்தது இல்லையா. அப்படிப் பார்த்தால், இணையத்தமிழ் வலைப்பக்கங்கள் வழியாக, தமிழ் மொழி வளர்கின்றது என்றே நாங்கள் நினைக்கின்றோம்.  மொழி வளர்வதைக் காணும் போது, தமிழ்ச்சமூகமும் வளர்ந்து வருவதாகவே நாங்கள் எண்ணுகின்றோம்.

எங்களையே நீங்கள் எடுத்துக் கொண்டால், நாங்கள் பல வருடங்களுக்குப் பிறகுத் தமிழில் எழுத ஆரம்பித்த போது, பல தமிழ்ச் சொற்களை மறந்திருக்கின்றோமே என்று வருந்தினோம்.  இணையத்தில் பல தமிழ் அறிஞர்களின் பதிவுகளை வாசிக்க வாசிக்கப் பல தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொண்டோம் என்றால் அது மிகையல்ல.  மட்டுமல்ல புதிய புதிய தமிழ் சொற்களையும் கற்று வருகின்றோம்.

இப்போது பொது வெளியில் கூட முன்பு போல அல்லாமல் தமிழில் வார்த்தைகளைக் காண முடிகின்றது. அடுமனை, இனிப்பகம், கணினி, வங்கி, அலுவலக மேலாளர் போன்ற வார்த்தைகளைக் காண முடிகின்றது.

இப்போது, தமிழில் வட மொழிச் சொற்களைக் கூடக் கலக்காமல் தமிழ்ச் சொற்களை உபயோகிக்க வேண்டும் என்றும் அதற்கானச் சொல் அட்டவணை கூட ஒரு சில வலைத்தளங்களில் (நாங்கள் சமீபத்தில் கண்ட்து யாழ்பாவாணன் அவர்களின் தளத்தில்) காண நேர்கின்றது. பலரும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுதியும் வருகின்றனர். எத்தனை வலைத்தளங்கள் தமிழில் இயங்குகின்றன.

புதிய இளைஞர்களும் தமிழில் எழுதி வருகின்றார்கள். உதாரணத்திற்கு, கே ஆர் எஸ் கல்லூரி மாணவியரை இங்குக் குறிப்பிடலாம்.  நம் வலைப்பதிவர்களின் குழந்தைகளும் தளங்கள் ஆரம்பித்து எழுதுகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் போது நம்பிக்கைத் துளிர்க்கின்றதுதான். இன்னும் பலரும் எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா. தமிழ் அழிகின்றது என்ற கூக்குரல்கள் எழுகின்றனதான்.  ஆனால், தமிழும் அழியாது, தமிழ்ச்சமூகமும் அழியாது. அழியக் கூடாது. அதைக் கட்டிக்காக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கின்றது என்பதையும், யுனெஸ்கோவின் ஆய்வைப் பொய்யாக்கிட வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே இணையத் தமிழ் பலரையும் அடைய, இன்னும் பலரும் நல்ல ஆக்கப்பூர்வமானப் படைப்புகளைப் படைத்திட வேண்டும் என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றோம்.

(5)   குறும்படங்கள் எடுத்த அனுபவங்கள் உங்களுக்கு உண்டு, மாற்றுத்திரைப்பட இயக்கமாக இதை மாற்ற உங்கள் ஆலோசனை என்ன?

பலரும் குறும்படங்கள் எடுப்பதே,  திரைப்பட உலகில் நுழைவதற்கான ஒரு அடையாள அட்டையாகப் பயன்படுத்தத்தான். எங்களுக்கு அப்படிப்பட்டக் கனவுகள் எதுவும் இல்லை. செயல்திட்டமும் இல்லை. ஆனால், குறும்படங்கள் எடுப்பதை நிச்சயமாக ஒரு நல்ல மாற்றுத் திரைப்பட இயக்கமாகக் கொள்ளலாம். பெரிய திரைப்படங்கள் 2 ½ மணி நேரத்தில் சொல்ல முடியாதச் செய்திகளைக் கூட மிகவும் அழகியலோடு ஒரு சில நிமிடங்களில் பல விளம்பரங்களே சொல்லிச் செல்லும் போது, குறும்படங்கள் நிச்சயமாக இந்தச் சமூகத்திற்குப் பல நல்ல செய்திகளை அழகியலோடும், அக்கறையோடும், தர முடியும்.

பொருளாதார ரீதியாக திரைப்படத் தளத்தில் நுழைய முடியாதோர் பல இளைஞர்கள் குறும்படங்கள் எடுத்துத் தங்கள் கலை ஆர்வத்தைத் தணித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். குறும்பட இயக்குநர்கள் ஒரு இயக்கமாகச் செயல்பட்டால், ஒன்று சேர்ந்து, திரையரங்குகளில் பல குறும்படங்களைத் திரையிடலாம். திரைப்பட விழா நடப்பதில்லையா அது போல...நல்ல குறும்படங்களை அதன் நேரத்தைக் கணக்கிட்டு, வரிசைப்படுத்தி, ஒரு பெரிய திரைப்படம் வெளியிடும் நேரத்தில்-உதாரணமாக 2 ½ மணி நேரத்தில் – எத்தனைப் படங்கள் வெளியிட முடியுமோ அத்தனைப் படங்களை வெளியிடலாம். பெரிய திரைப்படத்திற்கு வசூலிப்பது போல வசூலிக்கலாம்.  அதனால், குறும்பட இயக்குநர்களுக்கும் வருமானம் கிடைக்கும் இல்லையா. பெரிய திரைப்படங்களை இயக்கிக் கைகளைச் சுட்டுக் கொள்வதற்குப் பதில் இது நல்ல இயக்கம்தானே என்று தோன்றியதுண்டு.

பெரியப் படங்களைப் போல தினமும் முடியாதுதான். வாரத்தில் ஏதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, சிறிய திரையரங்குகளும் மனது வைத்தால் இதனைச் செயல்படுத்தலாம். பல நல்ல குறும்படங்கள் வெளிவர வாய்ப்புண்டு. சமூகத்திற்கு இதன் மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். இது எங்கள் மனதில் அடிக்கடி தோன்றும் ஒன்று. ஆனால், எவ்வளவு தூரம் இதைச் செயலாக்கப்படுத்த முடியும் என்று தெரியவில்லை ஏனென்றால் பெரிய திட்டம் இது. நிறையப் பேசலாம். கனவு காண்பது, சொல்வது என்பது எளிது ஆனால் நடைமுறைப்படுத்தல் என்பதில்தான் இருக்கிறது சிக்கல்.

இதனை வாசிப்போர் திரைப்படம், குறும்படம் எடுப்போராயின் யோசிக்கலாம், கருத்துகள் சொல்லலாம்.

 (6)  குப்பைகளும், ஆபாசங்களும் மிகுந்திருக்கும் இன்றைய இணையத் தமிழ்ச்சூழலில் இளைஞர்களின் பயன்பாடு எப்படி இருக்கிறது?

குப்பைகளும், ஆபாசங்களும் நிறையவே மலிந்திருக்கின்றன. இதைத் தடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது, வளர்ந்தும் வருகின்றது. தடை கொண்டுவந்தால், அந்தத் தடையை உடைக்க ஒரு தொழிநுட்பத்தைக் கண்டுப்பிடிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். நேர்மறை இருந்தால் எதிர்மறையும் இருப்பது போல்..  தவறான வழியில் பயன்படுத்தும் இளைஞர்கள் இருந்தாலும். இளைஞர்கள் மட்டுமல்ல, நடுத்தர வயதினரும் ஏன் வயதானவர்களிலும் இதைத் தவறாகப் பயன்படுத்துவோர் உள்ளனர். எனவே, இளைய சமூதாயத்தை மட்டும் குற்றப்படுத்த முடியாது. 

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது பல இளைஞர்கள் உதவிட இந்த இணையம் தான் உதவியது. எங்கேனும் ஒரு விபத்து என்றால், இரத்தம் தேவைப்பட்டால், சமூக வலைத்தளங்களில் பதிந்துவிட்டால் போதும் உடனடியாக உதவிகள் பெறலாம். ஏழை மாணவ, மாணவியரின் கல்வி தொடர்வதற்குக் கூட இணையம் உதவுகிறது. ஏழைகளுக்கு அறுவைச் சிகிச்சையா? இணையத்தில் பதிந்தால் போதும் உடன் உதவிகள் குவிகின்றன.

கல்வித்துறைக்கு இணையம் மிகவும் உபயோகமாகத்தான் இருக்கின்றது. மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதவும், செயல் திட்டங்கள் செய்யவும் இணையம் உதவுகின்றது என்றால் மிகையல்ல. எதிலுமே நன்மையும் உண்டு, தீமையும் உண்டுதானே. எனவே, அன்னப்பறவை பாலைத் தண்ணீரிலிருந்து பிரிக்கும் என்று சொல்வது போல, இளைஞர்கள் தரம் பிரித்து அணுகினால் நன்மைகளே. இன்னும் எதிர்காலத்தில் நிச்சயமாக இணையம் நல்ல வழியில் செல்லும் இளைஞர்கள் நல்ல வழியில் அதை நடத்திச் சென்றால். அந்த நம்பிக்கை உள்ளது என்றாலும்...

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் (பெண்களும் அடக்கம்) முகம் காட்டாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வளர்த்துக் காதல் கொலைகள் கூட நடக்கின்றன. மதத்தின் பெயரில் தங்கள் மதத்திற்கு ஆதரவாகவும், பிற மதங்களின் மீது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதும், சாதிகளின் பெயரில் ஆதரவும், சாடல்களும் நடப்பதும், ஏன் சமீபத்திய உடுமலைப்பேட்டைக் கௌரவ கொலையைக் கூட ஆதரித்துக் குரல்கள் எழுந்ததைப் பார்த்த போதும், கேட்ட போதும் மனம் மிகவும் வேதனையுற்றது. இணையம் நம் நம்பிக்கையைப் பொய்யாக்கிவிடுமோ என்ற அச்சம். எனவே நாணயத்தின் இருபக்கம் போலத்தான் இணையமும் இளைஞர்கள் கைகளில் சிக்கி இருக்கின்றது. இது இணையம் இளைஞர்களைப் பார்த்து, “நான் நல்லவர்களுக்கு நல்லவன். கெட்டவர்களுக்குக் கெட்டவன்” என்று சொல்லுவது போல் இருக்கிறது.

(7)  தமிழ்மணத் தரவரிசையில் முன்னணியில் உள்ளீர்கள். விரைந்த உங்கள் வளர்ச்சி ரகசியம் என்ன?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்மணத் தரம் எல்லாம் பார்ப்பதில்லை. வலையுலகில் பல பெரிய எழுத்தாளர்கள், தமிழ்ச்சான்றோர்கள் இருக்க நாங்கள் இந்தத் தரத்திற்கு வந்திருக்கின்றோம் என்றாலே உங்களுக்குத் தெரியவில்லையா ஐயா/அண்ணா, தமிழ்மணம் எப்படி இயங்குகிறது என்று. அதில் பதிவுகளின் தரம் எல்லாம் யாரும் பார்ப்பதில்லை. கணினி, நம் தளங்களின் பார்வையாளர்கள், வாசிப்போரைக் கணக்கிட்டு ஏதோ ஒரு எண்ணைக் கொடுக்கின்றது அவ்வளவே. தமிழ்மணம் தரத்திற்கும், பதிவின் தரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே தமிழ்மணத்தை நாங்கள் திரட்டியாக, பலரும் பார்வையிட உதவுவதாகத்தான் எண்ணுகின்றோமே அல்லாமல் தரத்தைப் பற்றி எண்ணியது இல்லை. அதனால்தான் நாங்கள் எங்கள் தளத்தில் அதை இணைக்கவும் இல்லை.

(8)  தமிழ் வலைத்திரட்டிகளால் பயனுண்டா? வலைப்பக்க எழுத்தால் வருமானத்திற்கு வழி உண்டா?

தமிழ் வலைத்திரட்டிகளால் நிச்சயமாகப் பயனுண்டு. எங்கள் பதிவுகளுக்கானப் பார்வையாளர்களும், பின்னூட்டங்களும் தமிழ்மணம் திரட்டியில் இணைத்த பிறகுதான் அதிகமாகத் தொடங்கியது. இங்கு நாங்கள் நன்றியை நம் பதிவர் பகவான் ஜி அவர்களுக்குச் சொல்லிக் கொள்கின்றோம். அவர்தான் எங்கள் பதிவிற்கு முதல் வருகையாளர். வந்து தமிழ்மணத்தில் இணைக்கவும் சொல்லி வலைச்சித்தர் டிடி அவர்களையும் தொடர்பு கொள்ளச் சொன்னார். இணைத்துக் கொடுத்த டிடி அவர்களுக்கும் நன்றியை இங்குச் சொல்லிக் கொள்கின்றோம். இப்போது பல திரட்டிகள் வேலை செய்யவில்லை என்பது வருத்தமே.

வருமானத்திற்கு வழி செய்யலாம். நல்லதுதான்.  ஆனால் கூகுள் தேவதையின் பார்வை தமிழ்வலைப்பக்கம் விழ வேண்டுமே!

(9)  உங்கள் குடும்பம், பிறதுறை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்



துளசி : என் மனைவி உஷா குமாரி ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிகிறார். மூன்று குழந்தைகள்.  மூத்த மகனின் பெயர் அருண் தில்லைஅகத்து. 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ளான். இரண்டாவது மகன் சரவண விநாயக் தில்லைஅகத்து. 10 வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ளான்.  மூன்றாவது மகள். பெயர் அபிராமி தில்லைஅகத்து.  இந்த வருடம் 9 ஆம் வகுப்பு முடித்திருக்கிறாள்.

எனது ஆசிரியப் பணியில் பல நிகழ்வுகள் நடந்ததுண்டு. அந்நிகழ்வுகளை நான் அவ்வப்போது எங்கள் வலைத்தளத்தில் பதிவதுண்டு. நான் ஆசிரியராய் இருப்பதில் மிகவும் மகிழ்வடைகிறேன். மாணவ மாணவிகளும் எனது குழந்தைகளைப் போலத்தான். அவர்கள் எல்லோரும் எத்தனை வருடங்கள் ஆனாலும் என்னொடு தொடர்பில் இருப்பதும், அன்பு காட்டுவதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நினைவுகளாகும். 

குறிப்பாக ஒரு நிகழ்வை இங்கு சொல்லலாம். சென்ற வருடம், நான் +2 பொதுத்தேர்வு ஆய்வாளராக வேறு ஒரு பள்ளிக்குச் சென்றிருந்த போது, அன்று தேர்விற்கு வர வேண்டிய ஒரு பெண் வரவில்லை. அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை பதட்டப்பட்டார்.  நான் அவர்களைச் சமாதானப்படுத்தி, ½ மணி நேரம் கொடுக்கப்படும் இல்லையா அதுவரை பார்ப்போம் என்று சொன்னேன்.  ஆனால், அதன் பின்னும் அப்பெண் வரவில்லை. ஆசிரியை ஒருவர் அவரது வீட்டிற்கு அழைத்துக் கேட்டார். அப்பெண்ணின் தந்தை அவளைப் பள்ளியில் விட்டுவிட்டுச் சென்றதாகச் சொன்னார்.  பதட்டம் கூடியது. பின்னர் அவளது தோழியைக் கேட்ட போது, அவள் பள்ளிவாசலில் இறங்கிவிட்டுத் தோழியிடம் பின்னால் வருவதாகச் சொல்லித் தோழியைப் பள்ளிக்குள் செல்லச் சொல்லியிருக்கிறாள். என்ன செய்ய என்று யோசித்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் சொல்ல பின்னர் தெரிந்தது, அவள் காதலன் என்று சொல்லப்பட்ட ஒரு பையனுடன் சென்றுவிட்டதாக. அந்தப் பெற்றோரை நினைத்தும், அப்பெண்ணை நினைத்தும் ஒரு பக்கம் கோபமும், மறுபக்கம் வருத்தமும் மேலிட்டது. குழந்தைகளை நண்பர்களாகப் பாவித்து, குறிப்பாகப் பருவ வயதுப் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகளைப் பெற்றோர் மிகவும் அன்புடனும், கருத்துடனும், நண்பர்களைப் போல பழகி வளர்க்க வேண்டும் என்பதை ஒரு ஆசிரியனாக இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். 

கீதா : கணவர் பொறியியல் துறையில் பேராசிரியர். ஒரே மகன், இரு பெண்கள்.  மகன் கால்நடை மருத்துவர்.  பெண் குழந்தைகள், 7 வயது நிறைவடைந்த, நாலுகால் செல்லங்கள்  கண்ணழகி, ப்ரௌனி.  இவர்களும் எங்கள் குடும்பத்து நபர்கள் என்பதால் இவர்களையும் சொல்கின்றேன்.

(10)     புதிதாக வலைப்பக்கம் தொடங்குவோர்க்கு உங்கள் வழிகாட்டு உரை என்ன?

ஐயா/அண்ணா, எங்களிடம் இந்தக் கேள்வியா!!? நாங்கள் வலையுலகில் அடி எடுத்து வைத்து 2 ½ வருடங்களும், 3 மாதங்களுமே நிறைவடைந்துள்ளது. நாங்களே தவழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். நாங்கள் என்ன அனுபவ உரை, வழிகாட்டு உரை சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ம்ம்ம் நாங்கள் எழுத நினைத்தக் காலத்தில் எழுத இயலவில்லை. எங்களைப் போல பலரும் எழுத நினைத்து எழுத இயலாமல் போயிருக்கலாம். எல்லோராலும் பத்திரிகைகளுக்கு எழுதிட முடியாது.  நாங்களும் அனுப்பி அது வெளிவராமல், மீண்டும் திரும்பப் பெற்ற அனுபவங்களும், காலங்களும் உண்டு எங்கள் இருவருக்குமே.

அப்படியிருக்க, இன்று வலைப்பூவில் நமது எண்ணங்களை, கதைகளை, கட்டுரைகளைப் பதிந்து, சிறிய வட்டம் என்றில்லாமல், இந்த உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களைப் பார்வையிட வைக்கும் அளவிற்கு வலைத்தளம் உதவுகிறது.  அதுவும் எந்தவிதச் செலவும் செய்யாமல். வலைத்தளங்களில் பல பெரிய எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். வலைத்தளத்தில் எழுதிப் பெரிய எழுத்தாளர்கள் ஆனவர்களும் இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. நமக்கு நாமே ராஜா. நம் இதழ். எனவே எழுதுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் நல்ல ஆக்கப்பூர்வமானப் படைப்புகளைப் படைக்கலாம். பலரைச் சென்றடையும். அரியதொரு வாய்ப்பு. எழுத்தார்வம், வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருமே இந்த அரிய வாய்ப்பை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்தித் தமிழ் மொழியும், தமிழ்சமூகமும் வளர ஆவன செய்யலாம். எனவே, இளைஞர்களே வாருங்கள் என வரவேற்கின்றோம். 

எங்களுக்கு இந்த வாய்ப்பினை அளித்த திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல.

17 கருத்துகள்:

  1. அருமையான பேட்டி. அங்கும் அவரின் வலைத்தளத்திலும் படித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  2. அவரது வலைத்தளத்தில் முழுமையாகப் படித்து ரசித்தேன். தங்கள் இருவரின் பணி சிறக்கட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நிறைவாக மகிழ்வாக இருக்கின்றது.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  4. பத்தாவது கேள்வியின் பதில் அருமையான பதில்
    நாங்களே தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்று....
    இளைஞர்களுக்கு வரவேற்பு அருமை....
    சகோ வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்...

    பதிலளிநீக்கு
  5. தங்களைப்பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்த திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு தங்களுக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  6. ஆக்கப்பூர்வமான கேள்விகளையும், எதார்த்தமான தொலைநோக்கு பதில்களையும் கொண்ட இன்றைய இணைய இழுத்தாளர்களுக்கும், வருங்கால எழுத்தாளர்களுக்கும் பயனுள்ள பேட்டி.

    உங்கள் உங்கள் தமிழ்ப்பணி சிறப்புடன் தொடரட்டும். இணையத் தமிழ் நிச்சயம் செழித்து வளரும்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  7. சிறந்த கேள்விகளும், அழகிய பதில்களும் அருமை வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  8. உங்களின் நன்றியில் நானுமா,நன்றி :)

    பதிலளிநீக்கு
  9. கடினமான 15 மதிப்பெண் கேள்விகளுக்கும் விவரமாக பதில் அளித்துள்ளீர்கள். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. இரண்டு பகுதிகளையும் இன்று தான் படிக்க முடிந்தது. கடந்த சில நாட்களாகவே வலைப்பக்கம் வர இயலாத சூழல். நடுவே ஒரு பயணமும்! :)

    மிகச் சிறப்பான பதில்களை அளித்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். வலையுலகில் தங்கள் பணி தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவே பயணம் குலு மணாலி!!! இல்லையா...சூப்பர் நீங்கள் சுட்ட அழகான படங்களுடன் கட்டுரை விரைவில் எதிர்பார்க்கின்றோம். நான் போனதுண்டு ஜி. மிக மிக அருமையான இடம். சில சாகச விளையாட்டுகளும் செய்ததுண்டு. படங்கல் எல்லாம் எங்கு இருக்கின்றன என்று தெரியாததால் பயணக் குறிப்பு எழுத முடியவில்லை..9 வருடங்களுக்கு முன்...

      மிக்க நன்றி வெங்கட் ஜி கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  11. அருமையான பதில்கள். நல் ஆசிரியர் அல்லவா?
    கீதாவின் பதில்களும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நிறைய அறிந்து கொள்ள முடிந்தது
    வாழ்த்துகள்
    நன்றி
    தம 6

    பதிலளிநீக்கு
  13. நிறைவான கருத்துக்கள் பலதை அறியக்கூடிய பேட்டி அங்கும் வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. அருமை
    தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு