வியாழன், 28 ஏப்ரல், 2016

எங்கள் பேட்டையில் தேர்தல்

படம் இணையத்திலிருந்து - நான் போட்டியில் இல்லை உங்களுக்கு அடிமை என்று படுத்திருப்பவர் சொல்கிறார்!!!

எங்கள் பேட்டையில் ஆட்சி மாறப் போகிறது. அடுத்த தலவன்/தலைவி யார் என்று தேர்தலுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றது.

குறுநில மன்னனைப் போல் பல சிறு சிறு பேட்டைகளைத் தனது ஆட்சியில் வைத்துக் கொண்டு பெரிய பேட்டையின் தலைவனாக ஆண்டு வந்த தனியொருவன், மனித வில்லனால் அடித்து வீழ்த்தப்பட்டு இறந்த பின் மற்றொரு இளவல் ஆட்சியைக் கைப்பற்றியதாக எழுதியிருந்தேன்.

பின்னர்தான், இளவல் அல்ல இளவரசி என்பது தெரிய வந்தது.  எங்கள் பேட்டையின் அடுத்த தலைவி ஆயிற்றே. அவளையும் கவனிக்க வேண்டுமே என்று அவளுக்கு ரொட்டித் துண்டுகள், பிஸ்கோத்துகள் என்று கப்பம் கட்டிவருகின்றேன்.

ஆனால், ஒரு வயதே நிரம்பியிருக்கும் இந்த இளவரசி லேசுப்பட்டவள் அல்ல. நானும் கண்ணழகியும் செல்லும் போது, கண்ணழகி தனக்குப் போட்டியாக வந்துவிடுவாளோ என்று நினைத்திருப்பாள் போலும், தன்னை வீரம் மிக்கவளாகக் காட்டிக் கொள்ள, கண்ணழகியை வம்புக்கிழுத்துக் கொண்டிருந்தவள் ஒரு நாள் உறுமிக் கொண்டு நேரில் மோதியவள் பின்னால் சென்றுச் சிறியதாய்க் கடித்தும் விட்டாள்.

கண்ணழகியின் வீரம், தன் மானம் என்னாவது? விடுவாளா? என் பிடியிலிருந்துக் கழன்று, உறுமிக் கொண்டு அவளை விரட்டி அடிபணிய வைத்ததிலிருந்து இப்போது அந்தக் குட்டி இளவரசி எங்களைப் பார்த்ததும், வெகு தூரம் சென்று மறைந்திருந்து எங்களைக் கண்காணிக்கின்றாள்.

கண்ணழகியிடம் அடங்கிவிட்டாலும், தனது பேட்டையை விரிவுபடுத்தும் வேலையில் இருக்கின்றாள். பல அல்லக்கைகளைத் தன் கைக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றாள். தற்போது 4 பேட்டைத் தெருக்கள் அவள் கைவசம். எங்கள் பேட்டை இளவரசி மூக்கழகி எனலாம். அத்தனை அழகு! கம்பீரம்! நான் ஒழுங்காகக் கப்பம் கட்டுவதால் இப்போது என்னுடன் கூட்டணி அமைத்துவிட்டாள்.

அதுவல்ல பிரச்சனை. இப்போது எங்கள் பேட்டைக்குப் பெண் ஒருத்தி தலைவி ஆனதால், தனியொருவனின் கீழ் அடங்கியிருந்த அடுத்த பேட்டைக்காரார்கள் இப்போது வீறு கொண்டெழுந்து, எங்கள் பேட்டையின் தலைவியுடன் மல்லுக்கு நிற்கின்றனர்.

காரணம் வேறு ஒன்றுமில்லை. அந்தப் பேட்டையின் தலைவி, தனியொருவன் இருந்த வரையில் அடங்கி இருந்தவள் இப்போது எங்கள் தனியொருத்தி வந்துவிட்டதால் போட்டி. இரு பெண்கள் ஒரே பேட்டைக்குத் தலைவிகளாக இருக்க முடியுமா? அப்புறம் வரலாறு என்னாவது?

பெரிய பேட்டை பிரிந்து நிற்கின்றது. நானும் கண்ணழகியும் கடக்கும் போது அந்தப் பேட்டையின் தலைவியான இளவரசியும், அவளது அல்லக்கைகள் 3 இளவல்களும், 5 பெரியவர்களுமாய் 9 பேர் எங்களைக் கண்டதும் கத்திக் கொண்டு, பாய்ந்து ஓடி வருவதைப் பார்க்க வேண்டும். அழகோ அழகு!

கண்ணழகி விடுவாளா? அவளும் உறும, நான் அவர்களுடன் ஒரு சமரசம் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் கப்பம் கட்ட ஆரம்பித்தேன். 

இந்தப் பேட்டையினர் சற்று வீராப்பு உள்ளவர்கள் போலும். என்னிடம் சமரசத்திற்கு இன்னும் அதிகம் எதிர்பார்த்தனர்.  அவர்களை அடக்க என்ன வழி என்று யோசித்து, பெரிய கப்பம் கட்டினேன். வந்தது வினை.

தங்களுக்குள் அந்தக் கப்பத்தைப் பங்கு பிரிப்பதில் சண்டை வந்து இப்போது அந்தப் பேட்டையின் கட்சியில் சிறு பிளவு. பிளவுபட்ட அந்த அல்லக்கைகள் தனியாக ஒரு கட்சி அமைத்திருப்பதாகத் தெரிகிறது.  பிரிந்தவர் எங்கள் பேட்டைத் தலைவி மூக்காயியுடன் கூட்டணியா இல்லை அடுத்த பேட்டையுடனா, இல்லை தனியாகவா என்று இன்னும் தீர்மானமாகவில்லை.

எங்கள் பேட்டையிலும் இந்தக் கப்பம் பங்கில், பிரிவினை இல்லை என்றாலும் சிறு சலசலப்புத் தோன்றியுள்ளது. 

இத்தனை நாட்கள் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அடங்கி ஒடுங்கி இருந்தவர்கள், சமீபத்திய மழை வெள்ளத்திற்குப் பிறகு பக்கத்துப் பேட்டை, அருகிலுள்ள பேட்டைகளில் இருந்து வந்த புதியவர்களுடன் நட்புறவும் வைத்துக் கொள்ள, அல்லக்கைகளும் பெருகி,  இப்போது தனிக் கட்சி, தனிப் பேட்டை என்று மொத்தம் 5 ஆகப் பிரிந்து நிற்கின்றார்கள்.

நான் எத்தனைப் பேட்டைகளுக்குக் கப்பம் கட்ட முடியும்? எல்லாம் அந்தத் தனியொருவன் அடிபட்டு இறந்ததால் வந்தது. 3 பேட்டைகளுடன் சமரசம். அதில் இரு பேட்டைகளில் ஒரு பேட்டைக் கட்சி எங்கள் பேட்டைத் தலைவி மூக்கழகியுடன் இணைந்து விட்டார்கள்.

மற்றொரு கட்சி பக்கத்துப் பேட்டையின் போட்டி இளவரசியுடன் கூட்டணி. இணையாத பேட்டைக் கட்சி, இப்போது பிளவு பட்டு நிற்கும் பக்கத்துப் பேட்டை இரு கட்சிகள், எங்கள் பேட்டை மூக்கழகிக் கட்சி. ஆக மொத்தம் இப்போது 4 பேட்டைக் கட்சிகளுக்குள் போட்டி.

என்ன? நம்ம தமிழ்நாட்டுத் தேர்தல் மாதிரி ஒரே குழப்பமாக இருக்கிறதா? நம் தேர்தல் கட்சிகள் காமெடிக் கூத்துகளை அரங்கேற்றுவது போல் எங்கள் பேட்டையிலும் காமெடிக் கூத்துகள் அரங்கேறும்.

பாருங்கள்! இவர்களுக்குள் வயதானவர்கள் ஒதுங்கி நின்று இளவல்களுக்கு வழி வகுத்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். ஹும் நம்ம தலைவர்களும் இருக்கிறார்கள், தள்ளாத வயதிலும் ஆட்சியைப் பிடிக்கக் காத்திருக்கிறார்கள்.

நேற்று பேட்டையில் தேர்தல் நடக்கத் தொடங்கியது. அப்போது பார்த்து “மக”ராசியின் கட்சி 5 நிமிடத்திற்குச் சரவெடி வெடிக்க, கொட்டடித்துக் கொண்டு வண்டிகள் கிளம்ப, அதைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்தில் கட்டுமரத்தவரின் கட்சியும் வெடி வெடித்துக் கொடி பிடித்துத் தங்கள் வண்டிகளைக் கிளப்ப, எல்லா நாலுகால் தலைவர், தலைவிகளும், அல்லக்கைகளும் நொடியில் காணாமல் போயினர்.

Image result for street dogs fight
படம் - இணையத்திலிருந்து - குழப்பத்தில் இருக்கிறார்கள்

பாவம் அடுத்த தேர்தல் நாளுக்குக் காத்திருக்கிறார்கள். நானும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் எங்கள் பேட்டையின் தலைவனோ, தலைவியோ அவரை வரவேற்கவும் எல்லா பேட்டைகளும் ஒன்றாகிடவும்! அதுவரை என் கப்பம் தொடரும்!!

----கீதா

(இணையமும் இன்னும் சரியாகவில்லை. நாளை முதல் உறவினர் வருகை, திருமண விழாக்கள், பயணம், என்பதால் மே மாதம் 12 ஆம் தேதிக்குப் பிறகுதான் வலைப்பக்கம் வர இயலும். முடிந்தால் இடையில் ஒரு நாள்.....சந்திப்போம் மீண்டும்!)
15 கருத்துகள்:

 1. ஹா ஹா :)))) காட்சிகளை நேரில் பார்ப்பது போலவே இருந்தது. எழுத்துக்களில் நகைச்சுவை சாதாரணமாகவே வருகிறது.

  இங்கும் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் இருந்து வருவதே சலிப்பாக உள்ளது. இதில் காலம்காலமாக ....... ரொம்பவே பொறுமை வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அவர்கள் ஆட்சியாவது பெட்டராக இருக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 3. உறவினர் வருகை மற்றும் பயணத்தால் கோடை விடுமுறை மகிழ்வாய் செல்லட்டும்

  பதிலளிநீக்கு
 4. உறவினர் வருகை, திருமண விழாக்கள், பயணம், 

  சிறப்பாய் நடை பெறட்டும்....
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. #இவர்களுக்குள் வயதானவர்கள் ஒதுங்கி நின்று இளவல்களுக்கு வழி வகுத்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள்#
  நாய்க்குத் தெரிந்தது கூட ,மனிதனுக்கு ? :)

  பதிலளிநீக்கு
 6. எல்லாம் சரி அரசியல்வாதிகளை எப்படி ? பைரவருடன் ஒப்பிடலாம் அவர்களுக்கு அவமானம் இல்லையா ? அவைகள் நன்றியுள்வை ஞாபகம் இருக்கட்டும்.

  ஆனால் முடிவில் குறிப்பு கொடுக்கின்றீர்கள் பாருங்கள் மாதத்திற்கு ஒருமுறை ஸூப்பருங்கோகோகோகோகோகோகோோகோ
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 7. படங்களை பார்த்தவுடனே புரிந்து கொள்ளலாம் உங்கள் பேட்டையில் தேர்தல் னு..

  பதிலளிநீக்கு
 8. ஹா... ஹா.... ரசித்துப் படித்தேன் கீதா மேடம்.

  நம்மதான் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் தோற்றுப் போகிறோம்.
  அவர்களாவது நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 9. எங்கள் பேட்டையில் ஆட்சி மாறப் போகிறது. அடுத்த தலவன்/தலைவி யார் என்று தேர்தலுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றது.
  முடிவு
  காலம் பதில் சொல்லும்

  தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
  http://tebooks.friendhood.net/t1-topic

  பதிலளிநீக்கு
 10. தெரிந்து செய்தீர்களே தெரியாமல் செய்தீர்களோ ...
  அனிமல் பார்ம் நினைவில் வந்தது
  அப்புறம்
  இது தானே இப்போதைய நடப்பு..

  பதிலளிநீக்கு
 11. யம்மா...எத்தனை குறும்பு உங்களிடம்?
  நானும் தேர்தல்ன்னு சொன்ன உடனே பரபரன்னு படிக்க ஆரம்பிச்சா...கண்ணழகி,மூக்காயி ந்னு வண்டிய ஓட்டி மிகச்சரியா சொல்லவேண்டியதை சொல்லிட்டீங்க..
  அப்படி ஒரு ரசனையான எழுத்து...ரொம்ப நாளைக்கு பிறகு ஆஹா பதிவு (எனக்கு)

  தேர்தல் முடிந்த பிறகு நீங்கதான் சொல்லனும்...அழகியா..கட்டுமரமான்னு?

  பதிலளிநீக்கு
 12. இரு பெண்கள் ஒரே பேட்டைக்குத் தலைவிகளாக இருக்க முடியுமா? ஒன்று போதாதா?

  பதிலளிநீக்கு
 13. நல்லா இருந்தது. தேர்தல் அமைதியான முறையில் நடக்கட்டும் இணையம் சரியாகி விரைவில் பதிவுலகுக்கு வர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு