வெள்ளி, 20 மே, 2016

தேர்தல் நாள் - உரிமை, அனுபவம் - நோட்டா-1

தேர்தல் அன்று, இந்திய, தமிழ்நாட்டுக் குடிமகள் என்ற எனது உரிமையை, கடமையை ஆற்றிவிட்டு, பங்களூருக்குப் பயணம் செய்தேன். நான் ரயிலில்தான் பதிவு செய்வேன். இம்முறை பதிவு செய்ய கால அவகாசம் இல்லை, ரயிலில் இடமும் இல்லை என்பதால் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் இணையத்தில் பதிவு செய்திருந்தேன். காலை 9.45ற்குப் பேருந்து.


கோயம்பேடு பேருந்து நிலையம் வாயிலில் இருந்த இந்த அழைப்பிதழ் ஈர்த்தது. கிளிக்கிவிட்டுப் பேருந்து நிற்கும் 2 வது நடைமேடைக்குச் சென்றேன். அங்கு பங்களூர் செல்லும் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.  எந்தப் பேருந்து நான் செல்வதற்கானப் பேருந்து என்பதை என் பதிவுச் சீட்டில் கொடுக்கப்பட்டிருந்த பேருந்தின் எண்ணைப் பார்த்தால் எதுவும் பொருந்தவில்லை. (இது தட எண் அல்ல) 

எந்தப் பேருந்து 9.45 ற்கானது என்று கேட்டால், பணியாளர்கள் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. கூடுதலாக அன்று தேர்தல் என்பதால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் குறைவு, அதனால் தாமதம் ஏற்படும் என்றும் சொன்னார்கள்.

அவர்களும் ஓட்டுப் போட வேண்டும்தான். சரி, தேர்தல் நாள் ஏற்கனவே குறிக்கப்பட்டதுதானே? திட்டமிட்டு இணையத்தில் அதைக் குறிப்பிட்டிருக்கலாமே? அல்லது நடை மேடையிலாவது ஒரு அறிவிப்பு வைத்திருக்கலாம்தானே?

அப்போது புறப்படத் தயாராக இருந்த வண்டியில் அது 9.45 வண்டி என்று சொன்னதால் நான் அதில் ஏறி பதிவு செய்த எனது இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் வந்த நடத்துனர் என்னை இறங்கச் சொல்லி அடுத்த வண்டியில் வரச் சொன்னார். ஏன் என்று கேட்டால் விளக்கம் இல்லை. அடுத்த வண்டி எப்போது என்று கேட்டால் ஒருவர் 11 மணிக்கு என்றார்.  மற்றொருவர் அதெல்லாம் தெரியாது என்றார்.

எனக்குக் குழப்பம். நான் பதிவு செய்திருப்பதைச் சொன்னாலும் அவர் இறங்கச் சொன்னார். ஒரு வேளை 9.45ற்கு முன் புறப்பட வேண்டிய வண்டி, தேர்தலானதால் தாமதமாகப் புறப்படுவதால், நான் பயணம் செய்ய வேண்டிய வண்டி இது இல்லாததால் என்னை இறங்கச் சொல்லுகின்றாரோ என்று நினைத்து இறங்கினேன்.

இறங்கியதும் அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டால் அவர்கள், அடுத்த வண்டி என்றால் அது 11 மணிக்கு. 5 வது நடைமேடைக்குச் சென்று அங்குள்ள அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் இந்தப் பதிவுச் சீட்டில் ஒரு கையொப்பம் வாங்கி வர வேண்டும் என்றார்கள்.

எதற்கு நான் கையொப்பம் வாங்க வேண்டும்? அப்படி என்றால் இதுதானே நான் செல்ல வேண்டிய வண்டி? எதற்கு நான் 11 மணி வண்டியில் பயணம் செய்ய வேண்டும்? நான் தான் பதிவுச் சீட்டு வைத்திருக்கின்றேனே என்றால் அது அப்படித்தான் போய் வாங்கிட்டு வாங்க என்றார்கள். எனக்குக் குழப்பம். சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று, நேரமும் குறைவாக இருந்ததால் 5 வது நடைமேடை நோக்கி முதுகுப் பையுடன் ஓடினேன். நான் அந்த அலுவலகம் சென்று நடந்தவற்றை விளக்க, அங்கிருந்த அலுவலகரோ “ஏன் அவர்கள் உங்களை இறக்கினார்கள்?” என்று கேட்டாரே பார்க்கலாம்!  இருங்க நான் பேசுகின்றேன் என்றார்.  யாரிடம் பேசினார் என்று தெரியவில்லை.

உடனே எனது சீட்டில் ஏதோ எழுதி, கையெழுத்து இட்டு, இணையத்தில் எனது பதிவைச் சரிபார்த்து அந்தப் பதிவையே ஒரு சின்ன தாளில் அச்சேடுத்து என்னிடம் கொடுத்து அந்த வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள் என்றார். எனக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. விளக்கம் கேட்டால் அந்த அலுவலகருக்குக் கோபம் வந்தது.

வேறு வழியின்றி, 5 நிமிடங்களே இருந்ததால் அந்தப் பேருந்தில் ஏற மீண்டும் ஓட்டம் 2 வது நடைமேடைக்கு. அப்போது ஒவ்வொரு நடை மேடையாகக் கடக்கும் போது எதிரில் ஒரு நடத்துனர் வந்து, நீங்க தானே அந்தப் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டவர்? அந்தப் பேருந்து கிளம்பிச் சென்றுவிட்டது எனவும், நான் அப்படியே நின்றுவிட்டேன்.

அதெப்படி? அது 9.45 பேருந்துதானே என்றேன். அவரும், ஆமாம், ஆனால் அதெல்லாம் நீங்கள் அந்த அலுவலகத்தில் சென்று முறையிடுங்கள் வாருங்கள் என்னுடன் என்றார். மீண்டும் அலுவலகம் சென்றேன்.  இந்த முறை நான் எனது பொறுமையைக் கொஞ்சம் கைவிட்டேன். அந்த அதிகாரியிடம், சற்று உரத்தக் குரலில்,

இங்கு என்ன நடக்கிறது? அந்தப் பேருந்திலிருந்து ஏன் நான் இறக்கிவிடப்பட்டேன்? எதற்காக இந்தக் கையொப்பம்? பேருந்து புறப்பட்டுவிட்டது என்று சொல்லுகிறாரே? ஆனால் நான் பயணம் செய்ய வேண்டியது இந்தப் பேருந்து. அடுத்த பேருந்து 11 மணிக்கு என்றால் எனது திட்டமிட்டப் பயணம் தாமதமாவதற்கு உங்கள் பதில் என்ன? எனக்கு இப்போது விளக்கம் நீங்கள் தரவேண்டும். இல்லை என்றால் நான் எனது புகாரைக் பதிவு செய்வேன் என்ற்ன்.

பதிலில்லை.... எந்த விளக்கமும் இல்லை. மாறாக, “அப்படித் தள்ளி நில்லும்மா...சும்மா கத்திப் பிரச்சனை பண்ணாம...”. பெண் என்ற நினைப்பு போலும் அவர்களுக்கு. அவர்கள் முகத்தில் கடுகடுப்பு. எந்த பதிலும் இல்லாததால், மீண்டும் அவரிடம் எனக்கு என்ன பதில்? நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது அங்கிருந்த அலுவலகர்கள் எரிந்து விழுந்தார்கள் சற்று அசிங்கமாக. என் சுயமரியாதை கொஞ்சம் தலைதூக்கியது. தட்டி அடக்கினேன்.....பொறுமை பொறுமை என்று.

20 நிமிடங்களின் காத்திருப்பிற்குப் பிறகு, அந்த நடத்துனர் என்னை அடுத்த பேருந்தில் ஏற்றிவிடுவார் என்று சொல்லி அனுப்பினார் அந்த அலுவலகர். அந்த நடத்துனரிடம் நான் விளக்கம் கேட்டேன் பதிலில்லை. மாறாக அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் வீழ்த்தியது. “நீங்க ஏன் அரசு பஸ்ல பதிவு செஞ்சீங்க? ட்ராவல்சில பதிவு செஞ்சுருக்கணும். 5, 51/2 மணி நேரத்தில் கொண்டுவிட்டுருவான்.”

எதுக்குங்க? அரசு பேருந்து விடும் போது நான் தனியாரில் பதிவு செய்யணும்? என்று மட்டும் கேட்டேன்.  வேறு எதுவும் பேசவில்லை. என்னை அடுத்த பேருந்தில், அந்த ஓட்டுநரிடமும், நடத்துனரிடமும் “இவங்க அவசரமாகப் போகணுமாம். இதுல ஏத்திக்கங்க” என்று சொல்லி ஏற்றிவிட்டார்.  எப்படி இருக்கு கதை பாருங்கள். நான் பதிவு செய்திருந்தது 9 ஆம் எண் ஜன்னல் இருக்கை. என் பதிவு இருக்கை கிடைக்கவில்லை. பேருந்தில் இறுதி இருக்கைகளுக்கு முன் இருந்த ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வேறு வழி? 10.30 க்கு வண்டி புறப்பட்டது.

பங்களூரிலிருந்து 17 ஆம் தேதி இரவு 10.1 ற்கு சென்னை நோக்கிப் பயணம். அன்று தேர்தல் நாள் இல்லை. ஆனால் பேருந்து புறப்பட்ட நேரம் 10.45. சென்னை சென்னை என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள் அரசின் பேருந்திற்கும் கூட! இதுதான் நம் அரசுப் பேருந்துகளின் அவல நிலை. ஜன்னல்கள் பல திறக்க முடியாத நிலை. அல்ட்ரா டீலக்ஸ் வண்டி!

அரசு மக்களுக்காகப் பேருந்துகள் பல விடும் போது சாதாரணக் குடிமகன் எதற்காகத் தனியாருக்கு அதிகமாகப் பணம் கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும்? அரசு பேருந்துகளை நல்ல முறையில் பராமரித்து, பயணிகளுக்கான நல்ல வசதிகளுடன் விடலாமே. அப்புறம் எதற்கு அரசு சேவை? எல்லாமே தனியார் மயமாக்கலாமே. அப்படி ஆகிவருவதால்தானே கல்வியிலிருந்து, மருத்துவம் வரை இப்போது ஊழல் பெருகி சாதாரண மக்கள் இங்கு வாழ முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த எண்ண அலைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தேன்.

நம் உரிமையை, கடமையை நிலைநாட்டும் நாளன்று,  ஒரு சாதரண இந்திய, தமிழ்க் குடிமகளாகிய நான் எனது அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டியிருந்ததை நினைத்து எழுந்த எனது எண்ண அலைகளை

இந்தப் பதிவு நீண்டு வருவதால் அடுத்த பதிவில் தொடர்கின்றேன்.

------கீதா






51 கருத்துகள்:

  1. ஊழல் பெருகி சாதாரண மக்கள் இங்கு வாழ முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது.இதுதான் உண்மை ...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வலிப்போக்கன் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

      நீக்கு
  2. சகோதரி, உங்கள் பதிவு மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழர்களும் ஊடகங்களும் தங்கள் சுயமரியாதையை அரசியல்வாதிகளிடமும், அதிகார வர்க்கத்திடமும் அடகுவைத்து விட்டதால்தான், இங்கு இவர்களின் ஆட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்து, அடுத்த தலைமுறையினர் பொறுப்பேற்கும் போது, மாற்று வரும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி உயிர்நேயம் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும். உண்மைதான் நீங்கள் சொல்லுவது. நம்புவோம் அடுத்த தலைமுறையினர் வரும் போதாவது நல்ல ஆட்சி, நல்ல காலம் அமையும் என்று...

      நீக்கு
    2. உயிர்நேயம் நீங்கள் நாகர்கோவில்காரரா? அட எங்க ஊரு!! உங்கள் வலைப்பக்கம் போய்ப் பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன். வலைப்பக்கத்திற்குப் புதிது போலும். பதிவுகள் எதுவும் இல்லையே.

      நாகர்கோவிலில் எந்த ஊர் உங்களுக்கு? எந்தப் பள்ளி. கல்லூரியில் படித்தீர்கள்? எந்த வருடம்? சொல்ல முடியுமா? தயவாய்?

      நன்றி.

      நீக்கு
  3. மேடம்! கோயம்பேடு மட்டுமல்ல எல்லா இடத்திலும் அரசு பஸ்களில், முன்பதிவில் இதே பிரச்சினைதான். 9.45 வண்டியில் உங்களுக்கான இடத்தை இன்னொருவருக்கு கொடுத்து இருப்பர்கள்; உங்களை அலுவலகத்திற்கு அனுப்புவது போல போக்கு காட்டி விட்டு, பஸ்ஸை எடுத்து விட்டார்கள். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவுடன் புறப்படத் தயாராக இருக்கும் பஸ்ஸில் சீட் இருக்கா என்று கேட்டுக் கொண்டு, பயணம் செய்வதுதான் புத்திசாலித்தனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இப்படியெல்லாம் கூட நடக்கிறதா இளங்கோ ஐயா? இங்கு கருத்துகள் வாசிக்கும் போதுதான் ஒவ்வொருவரின் அனுபவமும் தெரியவருகின்றது மட்டுமல்ல அரசுப் பேருந்துகளின் நிலைமையையும், சேவையையும்....

      ஆமாம் ஐயா நீங்கள் இறுதியில் சொன்ன வரிகள் தான் அன்று 99% மக்கள் செய்தது. நானும் அந்தப் புத்திசாலித்தனத்தைக் கற்றுக் கொண்டேன்.

      மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  4. உங்கள் அனுபவம் வேதனையானது தான். எழுத்து பூர்வமாய் அவர்களின் தலைமையகத்திற்கு எழுதுங்கள். சில மாதங்களுக்கு முன் விமானத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்தேன். தாமதமாய் வந்த ஒரு பிரால நடிகைக்கு இடம் அளித்து, என்னை பின்னே வேறொரு இருக்கைக்கு செல்ல முடியுமா எனக் கேட்டாள் விமானப் பணிப்பெண்.வயதானவர்கள்,உடல் ஊனமுற்றோர் யாராவது வந்தால் இடம் மாறுகிறேன்'என்று சொன்னேன்.பிறகு என் பக்கம் திரும்பவே இல்லை.

    உங்கள் சீட்டு ஏதேனும் vip வந்ததால் உங்களுக்கு மறுக்கப் பட்டிருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மோகன் ஜி. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி. விஐபி யாரும் வந்ததாகவும் தெரியவில்லை ஜி. அது சாதாரண??!!! அல்ட்ரா டீலக்ஸ்???!!!! பேருந்துதான்.

      எங்கள் வீட்டில் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. ஏனென்றால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்ற எண்ணத்தினால்...

      மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  5. கொடுமையான நிலை. அரசுத்துறை நிறுவனங்களுக்கு பொறுப்பு எதிலுமே கம்மிதான் போலும். தனியாருடன் என்ன ஒப்பந்தமோ... மதுரை சென்று வந்த என் மூத்த சகோதரர் தனியார் பேருந்தில் 550 ரூபாய்க்கு பதிலாக 1,200 ரூபாய் கொடுத்து சென்று வந்தார். வரும்போதும் அதே நிலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யம்மாடியோவ்! பாருங்கள் ஸ்ரீராம்...எனது பங்களூர் பயணத்தில் நான் அங்கிருந்து அரசுப் பேருந்தில் ஏறுவதற்கு நின்ற போது அங்கு இருந்த பங்களூர் அரசு வண்டிகளைக் கண்டதும் முதலில் ஏதோ தனியார் பேருந்து என்று நினைத்துவிட்டேன் அப்புறம் அடடா நாம் நிற்பதே, சாந்திநகர் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்தில் எப்படித் தனியார் பேருந்துகளாக இருக்க முடியும் என்று பார்த்தால் அனைத்தும் அரசுப் பேருந்துகள். அங்கு பேருந்து வசதி மிகவும் அருமையாக உள்ளது. கெம்பகௌடா உள்ளூர் பேருந்து நிலையத்திலும் கூட மிக மிக நன்றாக உள்ளது. ஆங்கிலத்திலும் எழுத்துகள் உள்ளன. பேருந்து எண்கள் தடங்கள், அது நிற்கும் நடை மேடை என்று எல்லா விவரங்களும், நேரம் முதற் கொண்டு. இவ்வளவு ஏன் நான் இங்கிருந்தே இணையத்தில் அங்கு உள்ளூரில் நான் செல்ல வேண்டிய இடம், அதற்கான பேருந்துகள் என்ன, எண், அவை செல்லும் வழி, நிறுத்தங்கள் முதற்கொண்டுக் குறித்துச் சென்றுவிட்டேன்.

      கேரளம் கூட இப்போது மிகவும் நன்றாக உள்ளது. முன்பு போல் இல்லை. சரியான நேரத்திற்குக் கிளம்பி, சரியான நேரத்திற்குக் கொண்டு விடுகின்றார்கள்.

      நான் எங்கு சென்றாலும் முதலில் ரயில் அப்புறம், ரயில் இல்லை என்றால் அரசுப் பேருந்துகளில்தான் பயணம்.

      இந்த இரு மாநிலங்களிலும் மக்கள் அரசுப் பேருந்தைத்தான் அதுவும் கேரளத்தில் கூடுதல் மக்கள் நாடுகின்றனர். அங்கு பேருந்தை எடுக்கவில்லை என்றால் மக்கல் உடன் குரல் எழுப்ப ஆரம்பித்துவிடுவர்.

      நம் தமிழ்நாடு மோசமாகி வருகின்றது அதற்குக் காரணம் நாமும்தான். நாம் குரல் எழுப்புவதில்லையே...

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. குறைந்தபட்சம் மனிதர்களையாவது மதிக்க வேண்டாமோ இவர்கள்.. ஆத்திரம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இருந்தால் நம் நாடு ஏன் இப்படி இருக்கப் போகின்றது ஸ்ரீராம்...எனக்கும் அன்று ஆத்திரம் வந்தது... அடக்கிக் கொண்டேன்.

      நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  7. இந்த அழைப்பிதழை நான் முன்னரே பார்த்துவிட்டேன். தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விடுவதால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கல் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..ஆமாம் தனியாருக்குத் தாரை...

      நீக்கு
  8. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இதே அவஸ்தைதான்! கரூர் செல்ல பலமுறை முன்பதிவு செய்து அவஸ்தை பட்டு இருக்கிறேன்! கடைசி பேருந்தில்தான் சீட் இருக்கு என்று மாற்றிவிடுவார்கள். பொறுப்பில்லாத ஊழியர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ சுரேஷ்! உங்களுக்கும் அதே அனுபவம்தானா...இங்கு பலருக்கும் அதே அனுபவம் என்றே தோன்றுகின்றது பின்னூட்டங்களைப் பார்க்கும் போது....

      மிக்க நன்றி சுரேஷ்./...

      நீக்கு
  9. அந்த ஊழியர்கள் யார் . நம்மைப் போன்றவர்கள்தானேஉங்கள் இடத்தை அதிக விலைக்கு வேறு யாருக்காவது கொடுத்திருப்பார்கள். எங்கும் எதிலும் பொறுப்பின்மை இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு. விலைக்குப் போனதா என்று தெரியவில்லை சார்...

      நீக்கு
  10. நல்ல வேளை நான் இதுவரை முன்பதிவு செய்து
    எந்த ஊருக்கும் போனதில்லை...
    அதனால் இந்த பிரச்சனை குறித்து தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அஜய் வருகைக்கும் கருத்திற்கும். உங்களைப் போல்தான் இனி நானும் செய்ய வேண்டும் போல....

      நீக்கு
  11. நிர்வாக சீர்கேடுதான் இதற்கு காரணமாய் இருக்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பகவான் ஜி. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  12. தங்களின் அனுபவம் வேதனையானது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  13. இது போன்ற சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துபவை. முடிந்தால் நுகர்வோர் நீதி மன்றத்திற்கு செல்லுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியாதே. எனக்கும் எண்ணம் இருந்தது....

      மிக்க நன்றி முரளிதரன் கருத்திற்கு

      நீக்கு
  14. அச்சோ அரசு பேருந்துகள் அசுரர் பேருந்துகளா இருக்கும் போலிருக்கே :( சக மனிதரை மதிக்கதெரியாதோர் மாக்களே ..அந்த அழைப்பிதழ் சூப்பர்ப் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சலின். இங்கு பலரது அனுபவங்களை அறிந்த போதுதான் உண்மையாகவே அசுரர் பேருந்துகள் என்பது தெரியவருகின்றது.

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  15. அரசுப் பணி என்றாலே
    அதிகாரப் பதவி என்கிற மமதை
    சரி செய்யப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. நமக்கே இந்த நிலைமை என்றால் படிக்காதவர்களுக்கும் புதிதாக ஒரு ஊருக்கு செல்பவருக்கும் என்ன நிலைமையாகுமோ .... நிச்சயம் கண்டிக்க தண்டிக்க பட வேண்டும் http://ethilumpudhumai.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீ. படிக்காதவர்கள் ரொமபவே கஷ்டப்படுகிறார்கள்தான். அன்று பார்க்க முடிந்தது.

      நீக்கு
  17. நீங்கள் ஏன் கன்ஸ்யூமர் கோர்ட்டில் இதறக்காக வழக்கு தொடரக் கூடாது....பதிவுகள் எழுதுவதோட நிற்க்காமல் இது போல நாம் பாதிக்கப்படும் போடு வழக்குகளை தொடரலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழா நீங்கள் சொல்லுவது எனது மனதிலும் தோன்றியதுதான். இப்போதும் உள்ளது. ஆனால் வீட்டில் அனுமதியில்லை.

      என்னைப் போன்று பலரும் இருப்பதால்தான் நம் நாட்டில் எந்தப் போராட்டத்தினாலும் மாற்றங்களைக் கொண்டுவர முடியவில்லை...அடுத்த பகுதியில் எழுதியிருக்கின்றேன்...

      மிக்க நன்றி கருத்திற்கு...

      நீக்கு
  18. அருமையான தகவல்
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  19. அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் இப்படித்தான் இயங்குகின்றன. அதிலும் தமிழ்நாடுதான் மிக மோசம். கர்நாடகா நீண்ட தூர பயன்களுக்காக வால்வோ, ஸ்கேனியர் போன்ற அதிநவீன சொகுசுப் பேருந்துகளை விடுகிறார்கள். அதில் பயணிகளை உபசரிப்பதும், அவர்களின் குறைகள் உடனே நிவர்த்தி செய்யப்படுவதும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பேருந்தும் மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடும் கர்நாடகமும் பேருந்துகள் விஷயத்தில் ஒரே மாதிரிதான் இருந்தது. இன்று அவர்கள் எட்ட முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களும் அரசுப் பேருந்துகள் அதுவும் நீண்ட தொலைவு பேருந்துகளை ரதம் போல் மாற்றிவிட்டார்கள். இங்கெல்லாம் தனியார் பெருந்துகளைவிட அரசுப் பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் விரும்புகிறார்கள். சொல்லப்போனால் கே.எஸ்.ஆர்.டி.சி. கட்டணம் தனியார் ஆம்னி பஸ் கட்டனங்களைவிட கூடுதல். ஆனாலும் அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.
    இந்த அனுபவத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் எதிர்காலத்தில் இன்னும் பாமர மக்கள் அனுபவிக்க வேண்டியது வரும் காரணம் நடந்து முடிந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி அல்ல பணத்துக்காக மக்கள் குத்திய முத்திரை இதற்கு மன்னர் ஆட்சியே தேவலாம்.. தொடர்கிறேன்....
    நான் இன்னும் எழுத வேண்டியது இருக்கின்றது பதிவாக... குட்பை.
    த.ம. 7

    பதிலளிநீக்கு
  21. ஒரு சாதரண இந்திய, தமிழ்க் குடிமகளாகிய நான் எனது அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டியிருந்ததை நினைத்து எழுந்த எனது எண்ண அலைகளை...//
    ஒரு பஸ் பயணத்திலா இத்தனை சிக்கல் ??

    சிக்கல் சிங்கரவேலா !!
    சிரித்தது போதும்.
    சீறி எழுந்து வா.
    உன் வேலை எடுத்து வா.
    அதர்மங்களை
    வதம் செய்.

    என்னது ?
    நீருமா நோட்டாவில் ஓட்டைப் போடுகிறீர் !!

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  22. தமிழகத்தில் பேருந்துகள் மகா மோசமாகிக் கொண்டு வருகிறது. அரசுப் பேருந்து - ஊழியர்களும் பயணிகளை ஏதோ கிள்ளுக் கீரைகள் போலவே நடத்துகிறார்கள். “நான் இப்படித்தான் இருப்பேன்... உனக்குப் பிடிக்கலைன்னா வேற வண்டிக்குப் போ!” என்று சொல்லும் பணியாளர்களைத் தான் பார்க்க முடிகிறது. நாம் குரல் கொடுத்தால் கூட, நம்முடன் சேர்ந்து குரல் கொடுக்க ஒருவருமே முன் வருவதில்லை என்பதும் வேதனை தரும் விஷ[ய]ம்......

    பதிலளிநீக்கு
  23. நமக்கெல்லாம் கோபம் வரலாமா? அதற்காகத்தானே இலவசங்களை அள்ளி இறைக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் தருகிறார்கள்.
    வெறுத்துப்போய் நோட்டாவுக்கு ஓட்டு போட்டால் கடமையிலிருந்து தவறிவிட்டதாக கூச்சலிடுகிறார்கள்.
    நெஞ்சு பொறுக்குதிலையே

    பதிலளிநீக்கு
  24. சகோ துளசி & கீதா,

    உரிய பதில் சொல்லாமல், அலைக்கழித்து, இடையில் ட்ராவல்ஸில் பதிவு செய்யச்சொல்லி அறிவுரை வேறு. படிக்கும்போதே எரிச்சலா இருக்கே !

    எங்க ஊர் டவுன்பஸ்ஸில் ஓட்டுனர் இருக்கை கயிறால் கட்டப்பட்டு, என்ஜின் பகுதி எல்லாம் பிய்ந்துபோய், பார்க்கவே பாவமாய் இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு மட்டும் குறைவில்லை. எப்படி இருந்தாலும் ஏறத்தானே போகிறார்கள் என்ற நினைப்பு.

    பதிலளிநீக்கு
  25. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கு

    பதிலளிநீக்கு
  26. //என் சுயமரியாதை கொஞ்சம் தலைதூக்கியது. தட்டி அடக்கினேன்.....பொறுமை பொறுமை என்று// - நீங்கள் தட்டி அடக்கியிருக்க வேண்டியது அவர்களை! ஒன்று சொல்லவா சகோ? 'பணியிலிருக்கும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுக்கவோ தாக்கவோ கூடாது' என்கிற அந்த ஒரு சட்டம் மட்டும் இல்லாவிட்டால் இவையெல்லாம் ஒவ்வொரு நாளும் உதை வாங்கும். போகிற வருகிறவனெல்லாம் போட்டு மிதிப்பான். ஒரு நாயும் அரசு வேலை வேண்டித் தவமிருக்காது. (நான் காவல்துறையில் பணியாற்றும் மோப்ப நாய்களைச் சொன்னேன்).

    பதிலளிநீக்கு
  27. அலட்சிய மனோபாவம் தான் காரணம் சகோ

    பதிலளிநீக்கு
  28. ஹூம், கொடுமை, வேதனை! இப்போதெல்லாம் பேருந்துப் பயணங்களையே தவிர்ப்பதால் நிலைமை புரிவதில்லை. என்றாலும் தமிழ்நாட்டில் அலட்சியம் தான். ஆனால் கர்நாடகாவில் இப்படி இல்லை. செந்தில்குமார் சொல்லி இருப்பது நூற்றுக்கு நூறு சரி.

    பதிலளிநீக்கு
  29. //அதிலும் தமிழ்நாடுதான் மிக மோசம். கர்நாடகா நீண்ட தூர பயன்களுக்காக வால்வோ, ஸ்கேனியர் போன்ற அதிநவீன சொகுசுப் பேருந்துகளை விடுகிறார்கள். அதில் பயணிகளை உபசரிப்பதும், அவர்களின் குறைகள் உடனே நிவர்த்தி செய்யப்படுவதும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பேருந்தும் மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது//

    இது முழுக்க முழுக்க உண்மை. நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். அதோடு திருச்சியிலிருந்து பெண்களூர் செல்கையில் நடுவழியில் கழிவறை செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட நடத்துநரிடம் சொன்னோம். அவரும் தக்க இடம் பார்த்து நிறுத்தி அனைவரையும் போய்விட்டு வரச் சொன்னார். நாங்கள் சென்று வரக் கொஞ்சம் தாமதம் ஆனாலும் பொறுத்துக் கொண்டு எங்களை ஒரு வார்த்தை கடியாமல் வண்டியைக் கிளப்பலாமா என்று மட்டும் கேட்டுக் கொண்டு கிளம்பினார்.

    பதிலளிநீக்கு
  30. எதேச்சயாக இந்தப் பதிவுக்கு வந்தேன். அரசு நிறுவனங்கள் லாபகரமாகச் செயல்படும் கம்பெனிகளைப்போன்று நடத்தப்படவேண்டும். அதே சமயம், மக்களுக்குப் பயன் தருபவையாகவும் இருக்கவேண்டும்.

    அரசு புதுப் பேருந்துகள் வாங்க லஞ்சம், ஆட்களைப் பணியமர்த்த லஞ்சம், பணியாட்கள் கட்சி சார்ந்து செயல்படுவது, பராமரிப்பு என்ற கான்செப்ட் இல்லாமை. இப்படி இருந்தால் எப்படி உருப்படும்? நான் தமிழகப் பேருந்தில் செல்லவேண்டும் என்ற் நினைத்து திருப்பதி பிரயாணத்தின்போது சென்றால், நம்ம பேருந்துகள் அடிக்கடி பிரேக்டவுன் போன்ற பிராப்ளத்தில் சிக்கிக்கொள்கின்றன.

    இதுவும் உயர்'நீதிமன்றக் கண்காணிப்பில் நடந்தால்தான் சரியாகவரும். இல்லாட்டா, அரசுப் பேருந்து நடத்த அவுட்சோர்ஸ் பண்ணவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு